5 உமை கயிலை நீங்கு படலம்

  1. உமை கயிலை நீங்கும் படலம்

கமல மூர்த்தியுங் கண்ணனுங் காண்கிலா
அமல மேனியை அன்பினர் காணுற
நிமல மாகிய நீள்கயி லாயமேல்
விமல நாயகன் வீற்றிருந் தானரோ. 1

கமல மூத்தியும் கண்ணனும் காண்கிலா அமல மேனியை – பிரம விஷ்ணுக்களாலுந் தேடிக் காண்டற்கரியதாகிய அமலமான தமது அருட்டிய மேனியை, அன்பினர் காணுற – அன்பிலையுடைய அடியார்கள் தரிசித்து உய்யும்பொருட்டு, விமல் நாயகன் – அநாதி மலமுத்தரான சிவபெருமான், நீள் நிமலமாகிய கயிலாயமேல் – நீண்ட பரிசுத்தமாகிய திருக்கைலாச மலையின்கண்ணே, வீற்றிருந்தான் – அநுக்கிரக முகமான எழுந்தருளியிருந்தார்.
கமல மூர்த்தி – தாமரைமலரில் இருக்குங் கடவுள், சிவபெருமான் விமல நாயகன்; அவர் திருமேனி அமலமேனி; அவருறைவிடம் நிமலமாகிய கைலாயம். அ, ந், வி இன்மைப்பொருள் குறித்தவை. காலத்தா லழிவின்மையின் நீல் கயிலாயம் என்றார். [118]

வீற்றி ருந்தவன் மெல்லடி கைதொழூஉப்
போற்றி யுன்றன் பொருவரு மெய்மையைச்
சாற்று வாயெனச் சங்கரி வேண்டலும்
ஆற்ற அன்புசெய் தாங்கருள் செய்குவான். 2

வீற்றிருந்தவன் மெல்லடி – திருக்கைலாசத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீகண்ட பரமேசுவரனுடைய மென்மையாகிய திருவடிகளை, சங்கரி கைதொழூஉப் போற்றி – உமையம்மையர் கைகூப்பி வணங்கித் துதித்து, உன் தன் பொருவு அரு மெய்ம்மையைச் சாற்றுவாய் என வேண்டலும் – தேவரீரின் ஒப்பற்ற உண்மைத் தன்மையைத் திருவாய்மலர்தருளல் வேண்டுமென்று பிரார்த்திக்க, ஆற்ற அன்பு செய்து – அவ்வம்மையார் மீது மிக்க அன்பு செய்து, ஆங்கு அருள் செய்குவான் – அப்பொழுது திருவாய்மலந்தருளுவாராயினார்.
சங்கரி – சுகஞ் செய்பவள், ஆங்கு அவ்விடமுமாம். [118]

உருவொடு குணஞ்செயல் ஒன்றும் இன்றியே
நிருமல மாய்ச்சிவன் நிறைந்து நின்றதும்
பரவிய வுயிர்த்தொகைப் பந்தம் நீக்குவான்
ஒருதனிச் சத்தியால் உன்னல் உற்றதும். 3

உருவொடு குணம் செயல் ஒன்றும் இன்றி – உருவம் குணம் செயல் என்னும் இவற்றில் ஒன்றும் இல்லாமல், நிருமலமாய் – சுத்தமாய், சிவன் நிறைந்து நின்றதும் – சச்சிதானந்த சொரூப சிவம் எங்கும் நிறைந்து நின்ற தன்னியல்பும், பரவிய உயிர்த்தொகைப் பந்தம் நீக்குவான் – பரந்த உயிர்க் கூட்டத்தின் பந்தத்தை நீக்கும்பொருட்டு, ஒரு தனிச் சத்தியால் – ஒப்பில்லாத ஏக சத்தி மூலமாக, உன்னல் உற்றதும் – சங்கற்பம் உளதாயதும்.
ஒன்றும் இன்றி என்றதனால் உருவத்துக் கினமான அருவுரு, உரு ஆகிய நிலைகளும், செயலுக்கினமான அறிவு இச்சைகளுங் கொள்க, குணம் – முக்குணம் உயர்ப்பரப்புக்கு எல்லையின்மையின், பரவிய உயிர்தொகை என்றார், ஒது தனி என்ற விசேடணம் உன்னலாகிய சங்கற்பத்துக்கு முந்திய சத்தியின் விகாரமற்ற சொரூப நிலையை ஞாபகஞ் செய்வதாம்.

நிறைந்து நின்றதும் என்றதனாற் சொரூப நிலையும், உன்னர் உற்றதும் என்றதனாற் சிவம் சத்தி என்கின்ற தடத்த நிலையுங் குறிப்பிட்டவாறு [3,119]

ஐந்தியற் சத்திகள் ஆயி னோர்தமைத்
தந்ததும் அருவுருத் தாங்கி அவ்வழிச்
சிந்தனை அருச்சனை செய்தி யாவரும்
உய்ந்திடச் சதாசிவ வுருவைந் துற்றதும். 4

ஐந்து இயல் சத்திகள் ஆயினோர் தமைத் தந்ததும் – ஐந்து வகையான இயல்பினையுடைய பஞ்ச சத்திகளை உதவியும், அவ்வழி – அப்பஞ்ச சத்திகளின் வழியாய், அரு உருத் தாங்கி – அருவுருவத்தைத் பொருந்தி, சதாசிவ உரு ஐந்து – சதாசிவ உருவம் என்று சொல்லப்படுகின்ற பஞ்ச சாதாக்கிய வடிவம், சிந்தனை அருச்சனை செய்து யாவரும் உய்ந்திட – தியானமும் பூசனையுஞ் செய்து அனைவரும் உய்யும்பொருட்டு, உற்றதும் – உளதாயதும்.
பஞ்சசத்திகள் பராசக்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி. இவற்றினம்சமாய் முறையே சிவசதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியும், மூர்த்தி சதாக்கியம், கர்த்திரு சதாக்கியம், கன்ம சதாக்கியம் என்று சதாக்கியம் ஐந்து வகையாம்.
கன்ம சதாக்கியம் நாதமயமாகிய இலிங்கமும் பிந்துமயமாகிய பீடமுங் கூடியதாய்ப் பஞ்ச கிருத்தியத்தை யுடையதாயிருக்கும் கன்ம சதாக்கியர் இலிங்கமும் பீடாமுமாயிருப்பினும், ஐந்து திருமுகமும் பத்துத் திருங்கரங்களுமுடையவராய்த் தியான ரூபராயிருப்பர். [120]

இருபதின் மேலும்ஐந் தீசன் கேவல
உருவம தாகியே உறைந்த பெற்றியும்
விரவிய குடிலையின் விளைவு செய்துபின்
அருள்புரி மூர்த்திக ளாய பேதமும். 5

இருபதின் மேலும் ஐந்து ஈசன் கேவல உருவம் ஆகி – இருபத்தைந்து மகேசுர மூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற கேவல வடிவம் உளதாய், உறைந்த பெற்றியும் – அமைந்த இயல்பும், விரவிய குடிலையின் விளைவு செய்து, வியாபகமான சுத்தமாயையில் விளைதல் உளதாகச் செய்து, பின் – அதன் மேலும், அருள் புரி மூர்த்தியின் ஆய பேதமும் – திருவருள் புரிகின்ற அதிட்டான வாயில்கள் எனப்படும் மூர்த்திகள் ஆகிய பேத நிலையும்.

குடிலையின் விளைவை, நிருமலமாய்ச் சிவன் நிறைந்து நின்றதாகிய சுவரூபநிலை தவிர்ந்த தடத்தங்களுக்குக் கொள்க. பஞ்ச சத்திகள் பராசத்தியைச் சுவரூமமெனக் கோடலுண்டு.

மகேசுர வடிவம் சந்திரசேகரர் தொடக்கம் இலிங்கோற்பவர் இறுதியாக இருபத்தைந்தாம். அருள்புரி மூர்த்திகள் அநந்தேசுரர் ஸ்ரீகண்டர் முதலாய அதிட்டான பேதங்களாம்.
செய்து ஆய என்க. [5, 120]

முந்திய மாயைகள் மூல மாகவே
அந்தமில் தத்துவம் ஆறொ டாறுமுன்
வந்திட அளித்தது மரபின் ஐந்தொழில்
சிந்தைகொள் கருணையான் நடாத்துஞ் செய்கையும். 6

முந்திய மாயைகள் மூலமாக – ஆதியாய மாயைகளை மூலமாகக்கொண்டு, அந்தம் இல் தத்துவம் ஆறோடு ஆறும் – முடிவற்ற தத்துவங்கள் முப்பத்தாறும், முன் வந்திட அளித்ததும் – அம்மாயைகளிலே தோன்ற உதவியதும், மரபின் ஐந்தொழில் சிந்தைகொள் கருளையால் நடாத்தும் செய்கையும் – முறையான பஞ்ச கிருத்தியங்களைத் திருவுளத்திற் பொருத்திய கருணையாகிய திருவருளால் நடத்துகின்ற தன்மையும்.
மாயைகள் சுத்தமாயை அசுத்தமாயை பிரகிருதிமாயை. மூலம் முதற் காரணம். தத்துவங்கள் எல்லைகாண்பரியவாதலின் அந்தமில் என்றார் [6, 121]

விதித்திடு மூவகை வியனு யிர்த்தொகை
கதித்திடு தத்துவக் கணங்கள் அங்குளார்
உதித்திடு முறைமையின் ஒடுங்கச் செய்துதான்
மதித்தொரு தன்மையாய் மன்னி நிற்பதும். 7

விதித்திடு – சிருட்டி செய்யப்பட்ட, மூவகை வியன் உயிர்த்தொகை – மூன்று வகையான பெரிய உயிர்க்கூட்டங்களும், கதித்திடு – ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்து கதிக்கின்ற, தத்துவக் கணங்கள் – தத்துவக் கூட்டங்களாகி, அங்குளார் – அங்கே வசிக்கும் தத்துவ சாசிகளும், உதித்திடு முறைமையின் – சிருட்டிக்கிரமம் இருந்தவாறே, ஒடுங்கச் செய்து – ஒடுங்கும்படி செய்து, தான் ஒரு தன்மையாய் மதித்து மன்னி நிற்பதும் – தாம் ஏக வஸ்துவாய்க் கருதப்பட்டு விகாரமின்றி நிலைத்து நிற்பதும்.
மூவகை உயிர்த்தொகை – விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகல்ர், என்கின்ற மூவகை உயிர்க்கூட்டம்.
கதித்திடுதல் தாத்விகங்களாய்க் கதித்திடுதலுமாம்.
தான் மதித்தொரு தன்மையாய் மன்னி நிற்பது, உருவொடு குணஞ்செயலொன்று மின்றி நிருமலமாய்ச் சிவன் நிறைந்து, நிற்பதாம் என்க. [7, 121]

ஆனதன் னியற்கைகள் அனைத்துங் கண்ணுதல்
வானவன் ஆகம மறையின் வாய்மையான்
மேனிகழ் தொகைவகை விரிய தாகவே
தானருள் புரிந்தனன் தலைவி கேட்கவே. 8

ஆன – இவ்வாறான, தன் இயற்கைகள் அனைத்தும் – தமது சுவரூபம் தடத்தமாகிய இயற்கைகள் அனைத்தையும், கண்ணுதல் வானவன் தான் – நெற்றிக்கண்ணையுடைய ஸ்ரீகண்ட பரமேசுரராகிய தாம், தலைவி கேட்க – உலக மாதாவாகிய உமையம்மையார் கேட்க, ஆகம் மறையின் வாய்மையால் – ஆகமத்திற் சென்று முற்றுகின்ற வேத சத்திய வாக்க்குகளால், மேல் நிகழ் – மேன்மையுடைதாய் நிகழ்கின்ற, தொகை வகை விரி அது ஆக – தொகை வகை விரி என்னும் அம்முறை அமைய, அருள் புரிந்தனன் – திருவாய் மலர்ந்தருளினார்.

நின்றதும் உற்றதும் உற்றதும் பேதமும் செய்கையும் நிற்பதும் ஆன என்க. சுவரூபம் இருந்தபடி இருக்கத் தடத்தம் அவாறமையும் ஆதலின் அதுவும் இயற்கை எனப்பட்டது. [8, 121]

சுந்தரி இவ்வகை உணர்ந்து தோமிலா
எந்தைநிற் குருவிலை என்றி பின்னுற
ஐந்தொடு பலவுரு அடைந்த தென்னெனக்
கந்தனை அருளுவான் கழறல் மேயினான். 9

சுந்தரி – உமையம்மையார், இவ்வகை – சுவரூபமும் தடத்தமுமாகிய சிவ பரம்பொருளின் இயல்புகளாகிய இவ்வகைகளை, உணர்ந்து – அறிந்து, தோம் இலா எந்தை – குற்றமில்லாத எம்பெருமானே, நிற்கு உருவு இலை என்றி – தேவரீருக்கு உருவம் முதலிய ஒன்றும் இல்லை என்று அருளிச்செய்தீர்; பின் உற – ப்ன்பு அதற்கு மாறாக, ஐந்தொடு பல உரு அடைந்தது என் என – பஞ்ச சாதாக்கியத்தோடு வேறு பல வடிவங்களையும் பொருந்தியது என்னை என்று வினவ், கந்தனை அருளுவான் கழறன் மேயினான் – கந்தக்கடவுளைத் தந்தருளுபவராகிய சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளுவாராயினார். [9, 122]

உருவிலை நமக்கென ஒன்று நம்வயின்
அருளுரு அவையெலாம் என்ன அன்னதோர்
பொருளென உன்னியே புவனம் ஈன்றவள்
பெருமகிழ் வெய்தியிப் பெற்றி கூறினாள். 10

நமக்கு என உருவு இலை – நமக்கு என்று ஓர் உருவம் இல்லை; அவை எலாம் நம் வயின் ஒன்றும் அருள் உரு என்ன – மேற் குறிப்பிட்ட வடிவங்கள் எல்லாம் நம்மிடத்து நம்மோ டபின்னமாய் ஒருமைப்பட்டிருக்குஞ் சத்தி காரியமாகிய அருள் வடிவங்களாம் என்று அருளிச்செய்ய, அன்னது ஓர் பொருள் என உன்னி – அவ்வாறு கூறியருளியதைத் தமக்கு வாய்ப்பானதொரு பொருளாகக் கருதி, பெரு மகிழ்வு எய்தி – அதனாற் பெரு மகிழ்ச்சியுற்று, புவனம் ஈன்றவள் இப்பெற்றி கூறினாள் – உலகங்களை ஈன்றருளிய உமையம்மையார் இத்தன்மையைக் கூறியருளினார். [10, 122]

அந்நிலை வடிவெலாம் அருளின் ஆதலால்
உன்னருள் யானென உரைப்ப துண்மையே
என்னுரு வாம்அவை என்று பாங்கமர்
கன்னிகை வியந்தனள் கழறும் வேலையே. 11

அவ்வடிவு நிலை எலாம் – மேலே குறிப்பிட்ட உருவ நிலைகள் அனைத்தும், அருளின் ஆதலால் – அருட்சத்தியினால் உண்டாதலினாலும், உன் அருள் யான் என உரைப்பது உணமி ஆதலால் – தேவரீன் அருட்சக்தி யானே என்று சொல்வது சத்தியம் ஆதலினாலும், அவை என் உரு ஆம் – அவ்வடிவங்கள் அனைத்தும் என் வடிவமேயாம்; என்று பாங்கு அமர் கன்னிகை வியந்தனள் – என்று கூறி வாமபாகத்தில் வீற்றிருக்கும் உமையம்மையார் தம்மைத் தாமே வியந்தருளினார்; கழறும் வேலை – அவ்வாறு வியந்தருளும்போது.
ஆதலால், உண்மை என்பதனோடுங் கூட்டப்பட்டது. [11,122]

கயந்தன தீருரி கவின்று பொற்புறப்
புயந்தனில் அணிந்தருள் புனிதன் நங்கைநீ
நயந்தரு நின்புகழ் நாடி நம்முனம்
வியந்தனை உனையென விளம்பி மேலுமே. 12

கயம் தனது ஈர் உரி – யானையினது உரித்தோலானது, கவின்று பொற்பு உற – விளங்கி அழகு மிக, புயம்தனில் அணிந்து அருள் புனிதன் – திருப்புயத்தில் அணிந்தருளிய பரிசுத்தராகிய சிவபெருமான், நங்கை நீ – உமையே நீ, நயம் தரு நின் புகழ் நாடி – ஆன்மாக்களுக்கு நன்மையைச் செய்கின்ற உன் புகழை நீ விரும்பி, நம் முனம் உனை வியந்தனை – நம் முன்னிலையில் உன்னை நீயே வியந்துகொண்டாய்; என விளம்பி – என்று திருவாய்மலர்ந்துதருளி, மேலும் – பின்னரும்.
மேலும் புகலவேண்டுமோ காண்கெனா நீங்கினான் என வருஞ்செய்யுளோடியைத்து முடிக்க.[12,123]

இருளுறு முயிர்தொறு மிருந்து மற்றவை
தெருளுற வியற்றுது மதனைத் தீர்துமேன்
மருளுறு சடமதாய் மாயு மேனைய
பொருளுறு நிலைமையைப் புகல வேண்டுமோ. 13

இருள் உறும் உயிர்தொறும் இருந்து – இருளாகிய ஆணவ மலத்திற் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள் தோறும் ஒன்றாயக் கலந்திருந்து, அவை தெருள் உறவு – அவ்வுயிர்களின் இருணீங்கி ஞான உறுதலை, இயற்றுதும் – நிகழ்த்துவோம்; அதனைத் தீர்துமேல் – கலந்திருந்துகொண்டே அந் நிகழ்த்துகையை நீங்குவோமானால், மருள் உறும் சடம் ஆய் மாயும் – மயக்கம் பொருந்திய சடப்பொருளாய் அவ்வுயிர்கள் அழிந்துபடும்; ஏனை பொருள் உறும் நிலைமையை புகல வேண்டுமோ – சித்துப்பொருளின் நிலைமை அவ்வாறானால் ஏனைய சடப்பொருள்கல் அடையுந் தன்மையைச் சொல்லவும் வேண்டுமோ.
சிவம் உயிர்தொறும் இருந்தபடி இருக்க தெருளுறவு நிகழும் என்க. தெருளுறவுக்குத் தாமே கருத்தாவாதலின் இயற்றுதும் என்றருளினார். தெருள் உற இயற்றதும் எனப் பிரித்துரைப்பினும் அமையும். [13,123]

உன்னிடை தனினும்யா முறுத லில்வழி
நின்னுயி ருணர்வுறா நினக்குக் காட்டுது
மன்னது காண்கெனா வயனை யாதிய
மன்னுயிர் இயற்றிடும் வண்ணம் நீங்கினான். 14

உன்னிடை தனினும் – உமையே எம்மோடு அபின்னமாயிருக்கும் உன்நிடத்திலேதானும், யாம் உறுதல் இவ்வழி – யாம் தெருள் உற வியற்றுதலைப் பொருந்தாதவழி, நின் உயிர் உணர்வு உறா(து) – உன்னுடைய ஆன்மாவும் உணர்ச்சி கைகூடாது; அன்னத் நினக்குக் காட்டுதும் காண்க எனா – அவ்வியல்பை உனக்குக் காட்டுவோம் காண்பாயாக என்று கூறியருளி, அயன் ஆதிய மன்னுயிர் இயற்றிடும் வண்ணம் நீங்கினான் – பிரமா முதலிய நிலைபெற்ற உயிர்களை இயக்குவிக்குந் தன்மையை நீங்கிச் சும்மாவிருந்தருளினார்.

உயிர்கள்தோறும் இருத்தலை நீங்காதே உயிர்கள்தோறும் இயற்றிடும் வண்ணம் நீங்கினான் என்க. நினைக்குக் காட்டுதும் என்றதனால் இயற்றிடும் வண்ணம் நீங்கியதை உமை தவிர்ந்த உயிர்களுக்குக் கொள்க, உறாது ஈறுகெட்டு நின்றது. காண்க ‘அ’ கெட்டது. ஐ சாரியை. [14,124]

தேவர்கள் நாயகன் செயலி லாமையால்
ஆவிகள் யாவையுஞ் சடம தாகியே
ஓவிய மேயென உணர்வின் றுற்றன
பூவுல கேமுதற் புவனம் யாவினும். 15

தேவர்கள் நாயகன் செயல் இலாமையால் – தேவர்கள் நாயகரான சிவபெருமான் தெருளுற இயக்கும் செயல் இன்றிச் சும்மா இருந்தமையால், பூவுலகு முதற் புவனம் யாவினும் ஆவிகள் யாவையும் – பூவுலகம் முதலிய புவனங்கள் அனைத்திலுமுள்ள உயிர்க அனைத்தும், சடம் ஆகி – சடங்களாய், ஓவியம் என உணர்வு இன்று உற்றன – பாவைகளைப்போல அறிவின்றிக் கிடந்தன.
ஓவியம் சித்திரம் எனினுமாம். [15,124]

ஆட்டுவித் திடுபவன் அதுசெ யாவழிக்
கூட்டுடைப் பாவைகள் குலைந்து வீழ்ந்தென
நாட்டிய பரனருள் நடாத்தல் இன்மையால்
ஈட்டுபல் லுயிர்த்தொகை எனைத்து மாய்ந்தவே. 16

ஆட்டுவித்திடுபவன் – நூலை ஆட்டுதல்மூலம் பாவைகளை ஆடவைப்பவன், அது செயாவழி – அவ்வாட்டுதற்றொழிலைச் செய்யாதபோது, கூட்டுடைப்பாவைகள் – கூட்டுதலையுடைய பாவைகள், குலைந்து வீழ்ந்தென – கூட்டுதல் இல்லாதபோது நிலைகுலைந்து வீழ்ந்தாற்போல, நாட்டிய பரன் – யாவற்றையும் நிலைக்கச் செய்த பரம்பொருளாகிய சிவபெருமான், அருள் நடாத்தல் இன்மையால் – தமது திருவருளை நடாத்தல் செய்யாது சும்மா இருந்தமையால் , ஈட்டு பல் உயிர்த்தொகை எனைத்தும் – வினைகளை ஈட்டுகின்ற பலவாகிய உயிர்க்கூட்டம் எலலம், மாய்ந்த – உணர்வின்றி மாய்ந்து போயின.

நூலசைவினாற் பாவை இயங்குவதுபோல திருவருள் அனைவினால் உலகம் இயங்கும் என்க. அருளசைவுக்கு கருத்தா இறைவன். [16, 124]

இந்தவா றுயிர்த்தொகை யாவும் ஒல்லையில்
நந்தியே சடமதாய் நணிய வெல்லையில்
சிந்தைசெய் தினையது தெருமந் தஞ்சியே
சுந்தரி அரனடி தொழுது சொல்லுவாள். 17

இருந்தவாறு – இவ்வண்ணம் , உயிர்த்தொகை யாவும் ஒல்லையில் நந்தி – உயிர்க்கூட்டம் முழுவதும் விரைவில் உணர்வு கெட்டு, சடமதாய் நணிய எல்லையில் – சடமாய்ப்போன சமயத்தில், சுந்தரி இனையது சிந்தை செய்து – உமையம்மையார் இவ்வாறாய தன்மையைச் சிந்தித்து, தெருமந்து அஞ்சி – கலங்கிப் பயந்து, அரன் அடி தொழுது சொல்லுவாள் – சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கிக் கூறுவார் [17-125]

அறிகில னெந்தைநீ யனைத்து மாகியே
செறிவது முழுதுயிர்த் திறன்இ யற்றியே
யுறுவதை யென்பொருட் டொருவி நின்றனை
இறுதியி னவையெலா மிருளின் மூழ்கவே. 18

எந்தை நீ அனித்தும் ஆகி செறிவது முழுது அறிகிலன் – எம்பெருமானே தேவரீர் எல்லாமாய்க் கலந்திருப்பதன் பயன் முழுவதையும் யான் அறிய வல்லேன் அல்லேன், உயிர்த்திறன் இயற்றி உறுவதை – உயிர்வகைகளினிடத்திலே தெருளுறவு ஆகிய ஞானத்தை நிகழச் செய்து தேவரீ ரிருப்பதை, என்பொருட்டு ஒருவி – இப்பொழுது எனக்கு உணர்த்தும்பொருட்டு நீங்கி, அவை எலாம் இறுதியின் இருளின் மூழ்க நின்றனை – அவ்வுயிர்கள் அனைத்தும் இறுதிக் காலதிற்போல இருளின் மூழ்குமாறு நின்றருளினீர்.

அனைத்துமாகிச் செறிவதன் பயன்களுல் ஒன்று, உயிர்த்திறங்கள் பால் தெருளுறவு இயற்றல் என்க. [18-125]

ஓரிறை யாகுமீ துனக்கு யிர்க்கெலாம்
பேருகம் அளப்பில பெயரும் என்பிழை
சீரிய வுளங்கொளல் தேற்றம் பெற்றெழீஇ
ஆருயிர் மல்குமா றருளு வாயெனா. 19

ஈது – தேவரீ ஒருவி நின்றருளிய இச் செயல் நிகழ்ச்சிக் காலம், உனக்கு ஓர் இறையாகும் – தேவரீருக்கு ஓரிறைப்பொழுது ஆகும், உயிர்க்கு எலாம் அளப்பில் பேருகம் பெயரும் – உயிர்வர்க்கங்களுக்கெல்லாம் அநேக உகங்கள் கழியுங் காலமாகும்; என பிழை சீரிய உளம் கொளல் – என்னால் நிகழ்ந்த இப்பிழையைச் சிறப்புப் பொருந்திய திருவுளத்திற் கொள்ளாதொழிக; ஆர் உயிர் தேற்றம் பெற்று எழீஇ மல்குமாறு – அரிய உயிர்கள் தெளிவு பெற்று எழுந்து விருத்தியுறுமாறு, அருளுவாய் எனா – அருள் புரிவீராக என்று.
எனாப் பரவினாள் பணிந்து நிற்றலும் என வருஞ் செய்யுளின் முடிபுகாண்க [19,126]

பன்முறை பரவினள் பணிந்து நிற்றலும்
அன்மலி கூந்தலுக் கருளி யாவிகள்
தொன்மையில் வினைப்பயன் துய்ப்ப நல்குவான்
நின்மலன் நினைந்தனன் கருணை நீர்மையால். 20

பன்முறை பரவினள் பணிந்து நிற்றலும் – பலமுறை துதித்து வணங்கி நிற்க, அல் மலி கூத்தலுக்கு அருளி – கருமை மிக்க கூந்தலினையுடைய உமையம்மையாருக்கு அருள்செய்து, ஆவிகள் தொன்மையில் வினைப்பயன் துய்ப்ப நல்குவான் – உயிர்கள் முன்போல வினைப்பயன்களை நுகர்தற்கு அருளும்படி, கருணை நீர்மையால் நின்மலன் நினைந்தனன் – இயல்பாகிய கருணையினால் நின்மலரான சிவபெருமான் இதிவுளம்கொண்டருளினார். [20,126]

திருத்தகு தனதருள் சேர்ந்த பல்வகை
உருத்திரர் தமக்குமுன் னுணர்வு செய்துழி
நிருத்தனை அவ்வழி நினைவுற் றிச்செயல்
கருத்திடை யாதெனக் கருதி நாடினார். 21

முன் – முதற்கண், தனது திருத்தகு அருள் சேர்ந்த – தமது செவ்விய திருவருளை அடைந்த, பல்வகை உருத்திரர் தமக்கு – பலவகை உருத்திரர்களுக்கு, உணர்வு செய்துழி – உணர்வு உதிக்கும்படி செய்தருளியபோது, அவ்வழி – அது வாயிலாக, நிருத்தனை நினைவு உற்று – நள்ளிருளில் நட்டம் பயில்பவராகிய சிவபெருமானை அவ்வுருத்திரர்கள் நினைவு கூர்ந்து, இச் செயல் யாது என – இந்நிகழ்ச்சி யாதோ என்று, கருத்திடைக் கருதி நாடினார் – தம் மனத்தின்கட் சிந்தித்து ஆராய்ந்தார்கள்.
சாரூபம் பெற்றவர் ஆதலின் அருள் சேர்ந்த என்றார், பல்வகை யுருத்திரல் பதினோருருத்திரர். ஐந்து மாறுமாம் மெய்வகை யுருத்திரர் எனப் பின் வருதல் காண்க. பக்குவம் மிக்காராதலின் முதற்கண் உருத்திரர் தமக்கு உணர்வு நல்கப்பட்டது.

நாடிய எல்லையில் நான்மு கத்தன்மால்
தேடிய அண்ணல்தன் செய்கை யீதெனக்
கூடிய ஓதியாற் குறித்து முன்னுற
வீடிய உயிர்த்தொகை எழுப்ப வெஃகியே. 22

நாடிய எல்லையில் – இச் செயல் யாது என்று ஆராய்ந்த சமயத்தில், ஈது – இச்செயல், நான்முகத்தன் மால் தேடிய அண்ணல் தன் செய்கை என – பிரமாவுந் திருமாலுந் தேடிய சிவபெருமானுடைய செயலேயாம் என்று, கூடிய ஓதியால் குறித்து – கைகூடிய ஞானத்தினால் அறிந்து, வீடிய உயிர்த்தொகை – உணர்வு மாய்ந்து சடமாய்ப்போன உயிர்க்கூட்டம், முன் உற எழுப்ப வெஃகி – முன்னிலைமையை உறும்பொருட்டு எழுப்ப விரும்பி. [22-127]

கண்ணுதல் எந்தைதன் கழல்கள் அர்ச்சனை
பண்ணுதல் உன்னியப் பகவன் தொல்சுடர்
விண்ணிடை இன்மையின் வேலை காண்கிலா
மண்ணிடை அருச்சுன வட்டத் தெய்தினார். 23

கண்ணுதல் எந்தைதன் கழல்கள் அர்ச்சனை பண்ணுதல் உன்னி – கண்ணுதலாகிய எம்பெருமானின் பாதங்களை அருச்சனை செய்வதைக் கருத்துட்கொண்டு, அப்பகவன் தொல் சுடர் விண் இடை இன்மையின் – அப்பகவானின் பழைமையாகிய சுடர்கள் ஆகாயத்தில் இயக்கம் இன்மையால், வேலை காண்கிலா மண்ணிடை – காலந் தெரியாமல் இருக்கின்ற பூமியின்கண்ணே, அருச்சுன வட்டத்து எய்தினார் – திருவிடை மருதூரை அடைந்தார்கள்.

உயிர்த்தொகை எழுப்ப வெஃகி அர்ச்சனை பண்ணுதல் உன்னினர் என்க. சுடர், சந்திர சூரியர். அனியாயும் விழியாயும் மூர்த்தமாயும் அமைதலின் பகவன் றொல்சுடர் என்றார். இன்மையின் காண்கிலா என்க.

அருச்சுனம் – மருதமரம், அருச்சுனப் பெயரால் வழங்கும் மூன்று தலங்களுள் இத்தலம் இடைக்கண்ணது. அதனால் மத்தியார்ச்சுனம் எனப்படும். வட்டம் – எல்லை, இங்கே எல்லைப்படுத்தப்படுவதாகிய ஊர். ‘தில்லை வட்டம்’ எனத் தேவாரத்தில் வருதல் காண்க.

இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு என்பது திருவாசகம். வானிடத்தவரும் மண்மேல் வந்தரன்றனை யர்ச்சிப்பர்’ என்பது சித்தியார். உருத்திரர் தம் பதத்தினீங்கி, அர்ச்சனைபண்ணுதல் உன்னி மண்ணிடை எய்தினாரென்க. [23-127]

எங்க ணும் கனையிருள் இறப்ப வீசலிற்
கங்குலே போன்றதிக் காலை கண்ணுதற்
புங்கவற் கேற்றிடு பூசை செய்துமென்
றங்கவர் யாவரும் ஆய்தல் மேயினார். 24

எண்ணும் கனை இருள் இறப்ப வீசலின் – எவ்விடத்திலும் செறிந்து இருள்மிக்குப் பரவுவதால், கங்குலே போன்றது – அக்காலம் இராக்காலம் போன்றிருந்தது; இக்காலை – இப்படிப்பட்ட காலத்தில், கண்ணுதற் புங்கவற்கு – கண்ணுதலாகிய சிவபெருமானுக்கு, ஏற்றிடும் பூசை செய்தும் என்று – ஏற்ற பூசையைக் செய்யக்கடவேம் என்று, அங்கு அவர் யாவரும் ஆய்தன் மேயினார் – அவ்விடத்தில் அவ்வுருத்திரர் யாவரும் பூசைக் கிரமத்தைச் சிந்திப்பாராயினார்.[24-127]

முண்டக மலர்கெழு முக்கண் மேலையோன்
கொண்டதோர் ஐம்பெருங் கோலத் தேவரும்
எண்டகு மூவகை இயல்பு ளாங்கவர்
மண்டல விதியினால் வடிவ தாக்கியே. 25

எண் தகும் மூவகை இயல்புள் – எண்ணப்படும் அரு அருவுரு உரு என்கின்ற மூவகைத் தடத்த இயல்புகளே, முண்டக மலர் கெழு முக்கண் மேலையோன் – தாமரை மலர்போல் விளங்குகின்ற மூன்று கண்களையுடைய சிவபெருமான், கொண்டௌ ஓர் ஐம் பெருங் கோலத்து வரும் வடிவது – அமைந்தருளிய பஞ்ச சாதாக்கியத்துட் பொருந்திய அருவுருவத் திருமேனியை, ஆங்கு அவர் மண்டல விதியினால் ஆக்கி – அவ்விடத்தில் அவ்வுருத்திரர் மண்டலவிதிப் பிரகாரம் தாபனஞ் செய்து.

மூவகை யியல்புள் ஐம்பெருங் கோலத்து வரும் வடிவம் அருவுருவம் என்க. அது பகுதிப்பொருள் விகுதி. குண்டம் மண்டலம் வேதிகை என்ற மூன்றனுள் மண்டலம் என்க. இம் மண்டலத்தை ஏகாதச மண்டலம் என்றலுமாம், ஏகாதசம் பதினொன்று.[25-128]

எண்ணிரு திறத்தவாய் இயன்ற நற்பொருள்
உண்ணிகழ் அளியொடும் உய்த்து வேதனுங்
கண்ணனும் வழிபடு கங்குற் பூசையைப்
பண்ணுதல் முயன்றனர் பரிவின் மேலையோர். 26

பரிவின் மேலையோர் – அன்பின் மிக்க்கோரான அவ்வுருத்திரர், உள் நிகழ் அளியொடு – உள்ளத்துள் எழுகின்ற அன்போடு, எண்ணிரு திறத்தவாய் இயன்ற நன்பொருளும் உய்த்து – பதினாறு வகையாய்ப் பொருந்திய நல்ல உபசாரப் பொருள்களையும் அமைத்துக்கொண்டு, வேதனம் கண்ணனும் வழிபடு கங்குற் பூசையை – பிரமாவுந் திருமாலுஞ் செய்து வழிபட்ட சிவராத்திரிப் பூசையை, பண்ணுதல் முயன்றனர் – செய்ய முயன்றார்கள்.

எண்ணிரு பொருள் சோடசோபசாரப் பொருள். ஓடும் என்புழி உம்மை பொருள் என்பதனோடு கூட்டப்பட்டது. வழிபடுபூசை வினைத்தொகை. அப்பூசை சிவராத்திரிப்பூசை. [26-128]

ஆறிரு நாலுடன் அஞ்செ ழுத்தையுங்
கூறினர் எண்ணினர் கோதில் கண்டிகை
நீறொடு புனைந்திறை நிலைமை யுட்கொளா
வேறுள முறையெலாம் விதியிற் செய்துபின். 27

நீறோடு கோதில் கண்டிகை புனைந்து – விபூதியையுங் குற்றமற்ற உருத்திராக்கத்தையுந் தரித்து, இறை நிலைமை உள்கொளா – சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனையையும் அவர் இயல்புகளையும் தியானஞ்செய்து, ஆறிரு நால்டன் அஞ்செழுத்தையும் எண்ணினர் கூறினர் – சோடச கலாப்பிராசாத மந்திரத்தையும் பஞ்சாக்கிரக மந்திரத்தையும் சிந்தித்துச் செபித்து, வேறு உள முறை எல்லாம் – வேறு செய்யற்பாலவாயுள்ள முறை அனைத்தையும், விதியிற் செய்து பின் – விதிப்படி செய்து பின்னர்.

உடன் எண்ணுமைப் பொருட்டு. சோடம் பதினாறு. பிரசாத மந்திரம் பிரணவ பீச்சங்களுடன் கூடிப் பதினாறு மாத்திரைகள் ஒலிக்குஞ் சூக்கும பஞ்சாக்கரம் என்பர். கூறினர் எண்ணினர் எச்சமுற்று. கோதின்மை நீற்றுக்குமாம். இறையும் நிலைமையு மென்க. மேல் ஐம்பெருங் கோலத்து வடிவு என்றதனால் அருவுருவத் திருமேனியாகிய சதாசிவ வடிவைத் தியானித்தன் ரென்க. வேறுள முறை யென்றது பூதசுத்தி அந்திரியாஅகம் முதலியவற்றை, பின் என்றதனால் முன்னிகழ்ந்தது அகப்பூசை; இனி நிகழ்வது புறப்பூசை என்க. [27-129]

வான்குலாம் வில்லுவம் மருமென் பாசடை
தேன்குலா மரையிதழ் செய்ய சாதிவீ
கான்குலாம் வலம்புரி கடவுள் தொல்பெயர்
நான்கியா மத்தினும் நவின்று சாத்தியே. 28

வான்குலாம் வில்லுவ மருமென் பாசடை – பெருமை பொருந்திய மணமும் மென்மையும் வாய்ந்த பசிய வில்வப்பத்திரம், தேன் குலாம் மரைஇதழ் – தேன் பொருந்திய தாமரைமலரிதழ், செய்ய சாதி வீ – செம்மை பொருந்திய சாதிப் புஷ்பம், கான் குலாம் வலப்புரி – வாசனை பொருந்திய நந்தியாவர்த்தம் ஆகிய இவைகளால், நான்கு யாமத்திலும் – முறையெ நான்கு யாமங்களிலும், கடவுள் தொல் பெயர் நவின்று சாத்தி – பழைமையாகிய சிவநாம மந்திரங்களைச் சொல்லி அருச்சித்து.

சிவநிசிப் பூசைக்குச் சிறந்ததாய்ப் பெருமை படைத்தது வில்லவம். வில்லுவ அடை என்று கூட்டுக. சாதி, சிறு சண்பகம், சாதி மல்லிகை என்பாரு முளர். [28-129]

ஏயவான் பயறுபால் எள்நல் ஓதனந்
தூயநல் லுணவிவை தொகுத்துக் கண்ணுதல்
நாயகன் முன்னுற நான்கியா மத்தும்
நேயமொ டம்முறை நிவேதித் தேத்தியே. 29

வான் ஏய நல் – உயர்ச்சி பொருந்திய நல்ல, பயறு பால் எள் ஓதனம் – முற்கான்னம் பாலன்னம் திலான்னம், தூய நல் உணவு – சுத்தான்னம், இவை தொகுத்து – ஆகிய இவைகளை அமைத்து, அம்முறை – அந்த முறையானே, நான்கு யாமத்தும் – நான்கு யாமங்களிலும், கண்ணுதல் நாயகன் முன்னுற நேயமொடு நிவேதித்து ஏத்தி – கண்ணுதலாகிய சிவபெருமானது முன்னிலையில் அன்போடு நிவேதனஞ் செய்து துதித்து.

முற்கம் பச்சைப்பயறு, பால் ஓதனம் பாயசான்னமுமாம். [29-130]

பின்னரும் இயற்றிடு பெற்றி யாவையுந்
தொன்னிலை விதிகளில் தோமு றாவகை
உன்னினர் புரிந்துழி யுவந்து ருத்திரர்
முன்னுற வந்தனன் முக்கண் மூர்த்தியே. 30

பின்னரும் – மேலும், இயற்றிடு பெற்றி யாவையும் – செயற்பாலனவாய செய்கைகள் யாவற்றையும், தொல் நிலை விதிகளில் தோம் உறா வகை – பழைமையாகிய நிலைபெற்ற விதிகளினின்றும் வழு வாராத பிரகாரம், உன்னினர் புரிந்துழி – சிந்தித்துச் செய்த சமயத்தில், முக்கண்மூர்த்தி உவந்து – மூன்று கண்களையுடைய சிவபெருமான் தமக்குள் அவர்கள் செய்த பூசைக்கு மகிழ்ந்து, உருத்திரம் முன்னுற வந்தனன் – அவ்வுருத்திரர்களுக்கு முன்னே தோன்றியருளினார். [30 130]

அவ்விடை மருதினில் ஐந்தும் ஆறுமாம்
மெய்வகை உருத்திரர் வேண்டி யாங்கருள்
செய்வதொர் கண்ணுதல் தேவன் தொன்மைபோல்
எவ்வகை உயிரையும் இயற்ற வுன்னலும். 31

அ இடை மருதினில் – அந்தத் திருவிடை மருதூரில், மெய்வகை ஐந்தும் ஆறும் ஆம் உருத்திரர் – சிவபெருமானுடைய வடிவத்தைக் கொண்ட வகையினரான பதினோரு ருத்திரர்களும், வேண்டியாங்கு – விரும்பியவாறு, அருள் செய்வது ஓர் கண்ணுதல் தேவன் – அருள் செய்வதை மேற்கொண்டருளியவராகிய சிவபெருமான், எவ்வகை உயிரையும் – இயக்கமற்றுக் கிடந்த எவ்வகைப்பட்ட உயிர்களையும், இயற்ற – அவ்வுயிர்கள் இயக்கம் உற, உன்னலும் – திருவுளங் கொண்டருளுதலும்,

உருத்திரர் வேண்டியது , முன்னுற வீடிய உயிர்த்தொகை எழுப்ப வெஃகி என முன்னுரைக்கப்பட்டது. [31,130]
எழுந்தனர் மாலயன் இந்தி ராதியர்
எழுந்தனர் எழுந்தனர் யாரும் வானவர்
எழுந்தனர் முனிவரர் ஏனை யோர்களும்
எழுந்தன உயிர்த்தொகை இருளும் நீங்கிற்றால். 32

வானவர் யாரும் எழுந்தனர் – தேவர்கள் அனைவரும் எழுந்தார்கள்; முனிவரர் எழுந்தனர் – முனி சிரேட்டர்கள் எழுந்தார்கள்; ஏனையோர்களும் எழுந்தனர் – மற்றைய முனிவர்கள் சித்தர்கள் கிம்புருடர் என்றித்திறத்தார் யாவரும் எழுந்தார்கள்; உயிர்த்தொகை எழுந்தன; இருளும் நீங்கிற்று – வேலை காண்கிலா இருளும் நீங்கியது.

உன்னலும் யாவரும் எழுந்தனர்; யாவும் எழுந்தன என்க. [32,131]

அல்லிடை உறங்கினர் அறிவு சேர்ந்துழி
மெல்லென அயர்ந்தகண் விழித்தெ ழுந்தபோல்
எல்லையில் உயிர்த்தொகை யாவும் அவ்வழி
ஒல்லையில் எழுந்தன உலகில் எங்கணும். 33

அல்லிடை உறங்கினர் – இரவில் உறங்கியவர்கள்; அறிவு சேர்ந்துழி – அறிவு வந்து கூடியபோது, அயர்ந்த கண் மெல்ல்லென விழித்து எழுந்தபோல் – அயர்ச்சி யெய்திய கண்ணை மெல்லென்று விழித்து எழுந்தவாறு போல, அவ்வழி உலகில் எங்களும் ஒல்லையில் எழுந்தன – அப்பொழுது உலகில் எவ்விடங்களிலும் விரைவில் எழுச்சியுற்றெழுந்தன.
அயர்ந்த கண் – மூடிய கண். [33,131]

ஓங்கலுங் கரிகளும் உலப்பில் நாகமுந்
தாங்கின தரணிபா தலத்திற் கூர்மமாம்
ஆங்கது போற்றிய தண்டந் தன்னிடைத்
தீங்கதிர் மதியுடுப் பிறவுஞ் சென்றவே. 34

ஓங்கலும் கரிகளும் உலப்பு இல் நாகமும் – அட்ட குல மலைகள் அட்ட யானைகள் கெடுதலில்லாத அட்டமா நாகங்கள் ஆகிய அனைத்தும், தரணி தாங்கின – பூமியை முன் சுமந்தவாறே சுமந்தன; பாதலத்தில் ஆங்கு கூர்மமாம் அது போற்றியது – பாதலமாகிய அவ்விடத்தில் ஆதி கூர்மமாகிய அது முன்போலப் பூமியைத் தாங்கியது; அண்டம் தன்னிடை – ஆகாயத்தின் கண்ணே, தீம் கதிர் மதி உடு பிறவும் சென்ற – இனிய சூரியன் சந்திரன் நட்சத்திரம் என்பன்வும் பிறவுஞ் சஞ்சாரஞ் செய்தன.

இருளில் மூழ்கியோர்க் கினிமை செய்தலின் தீங்கதிர் மதி உடு என்றார். [34,131]

அன்னதொர் திறமெலாம் அமலன் ஆணையால்
தொன்னிலை அமைந்தவத் தொடர்பு நோக்கியே
இந்நெறி யாவையும் ஈசன் செய்கையே
பின்னிலை என்றனர் பிரம னாதியோர். 35

அன்னதொர் திறம் எலாம் – ஒப்பிலாத அத்தகைய செயலனைத்தும், அமலன் ஆணையால் – சிவபெருமானின் ஆஞ்ஞையால், தொல் நிலை அமைந்த – முன் அமைந்திருந்தவாறு அமைந்தன; அத் தொடர்பு – முன்போலமைந்த அவ்வியல்பை, பிரமன் ஆதியோர் நோக்கி – பிரமா முதலியவர்கள் பார்த்து, இந்நெறி யாவையும் – இவ்வாறமைந்த செயலனைத்தும், ஈசன் செய்கையே பின் இலை என்றனர் – சிவபெருமானுடைய செய்கையேயாம் வேறு இல்லை என்றார்கள். [35,132]

மற்றிவை நிகழும் வேலை மன்னுயிர்க் குணர்ச்சி நல்கி
உற்றனன் எந்தை என்றே உருத்திரர் உணர்ந்து தம்முன்
பற்றலர் எயில் மூன் றட்ட பண்ணவன் வரநேர் சென்று
பொற்றிரு வடியில் வீழ்ந்து போற்றலும் அமலன் சொல்வான். 36

இவை நிகழும் வேலை – இந் நிகழ்ச்சிகள் நிகழும்போது, மன் உயிர்க்கு உணர்ச்சி எந்தை உற்று நல்கினன் என்று – நிலைபெற்ற உயிர்களுக்கு இழந்த உணர்ச்சியை எம்பெருமான் எழுந்தருளி நல்கினா ரென்று, உருத்திரர் உணர்ந்து – அவ்வுருத்திரர்கள் அறிந்து, பற்றலர் எயில் மூன்று அட்ட பண்ணவன் தம்முன் வர – பகைவர்களின் மூன்று மதில்களையும் அழித்த சிவபெருமான் தமக்கு முன்னிலையில் எழுந்தருளிவர, நேர் சென்று – தாம் எதிர் சென்று, பொன் திருவடியில் வீழ்ந்து போற்றலும் – அப்பெருமானின் அழகிய திருவடிகளில் விழுந்து வணங்குதலும், அமலன் சொல்வான் – சிவபெருமான் கூறியருளுவார்.

உற்று நல்கினன் என இயைக்க. [36,132]

ஈண்டெமை அருச்சித் திட்ட இயல்பினால் உயிர்கட் கெல்லாம்
மாண்டதொல் லுணர்ச்சி நல்கி எழுப்பினம் மற்று நீவிர்
வேண்டின யாவுங் கேண்மின் விரைந்தென அமலன் தன்கண்
பூண்டதொ ரன்பு மிக்கோர் இனையன புகலல் உற்றார். 37

நீவிர் – நீவிர், ஈண்டு – இத்திருவிடை மருதூர் என்னுந் தலத்தில், எமை அருச்சித்திட்ட வியல்பினால் – எமக்கு அருச்சனை செய்த காரணத்தால், உயிர் கட்கு எல்லாம் மாண்ட தொல் உணர்ச்சி நல்கி எழுப்பினம் – உயிர்களனைத்துக்கும் மாய்ந்துபோன பழைய உணர்ச்சியை அருளி எழுப்பினோம்; மற்று வேண்டின யாவும் விரைந்து கேண்மி என – இதனோடமையாமல் வேறு விரும்புவன யாவற்றையும் விரைந்து கேளுங்கள் என்று அருளிச்செய்ய, அமலன் தண்கண் பூண்டது ஓர் அன்பின் மிக்கோர் – சிவபெருமானிடத்துப் பிணிப்பதாகிய ஒப்பில்லாத அன்பால் மிக்கோரான அவ்வுருத்திரர், இனைய புகலல் உற்றார்- இவற்றை உரைபார் ஆயினார்.

விடிய உயிர்த்தொகை எழுப்பி வெஃகி அர்ச்சனை செய்தாராதலின், உணர்ச்சி நல்கி எழுப்பியருளினாரென்க. [37,132]

நிற்றலும் அல்லில் எம்போல் நின்னடி எனைய ரேனும்
பற்றுடன் அருச்சித் தோர்க்குப் பழிதவிர் மாசுத் திங்கள்
உற்றிரு கதிரு மொன்றும் ஒண்பகல் முதனாட் கங்குல்
பெற்றிடு சிறப்பு நல்க வேண்டுமால் பெரும என்றார். 38

நிற்றலும் அல்லில் – நாள்தோறும் இராக்காலத்தில், எம்போல் எனையரேனும் பற்றுடன் நின் அடி அருச்சித்தோர்க்கு – எம்மைப்போல எப்படிப் பட்டவரேனும் அன்போடு தேவரீரது திருவடியை அருச்சனை செய்தவருக்கு, பழி தவிர் மாகத் திங்கள் – குற்றமற்ற மாசி மாதத்தில், இரு கதிரும் உற்று ஒன்றும் ஒண்பகல் – சந்திர சூரியர்கள் ஒன்றுசேருகின்ற சிறந்த அமாவசித் தினத்துக்கு, முதல்நாள் கங்குல் – முதனாளாகிய சதுர்த்தசியின் இரவாகிய மகாசிவராத்திர்ப் பூசையில், பெற்றிடு சிறப்பு – பெறுகின்ற சிறப்பை, பெருமநல்க வேண்டும் என்றார் – பெருமானே கொடுத்தருளல் வேண்டும் என்று வேண்டினார்கள்.

நித்தலும் நிற்றலும் என் நின்றது,, கங்குல் ஆகுபெயர், சிறப்பு – பலன் [38,133]

நீவிர்செய் பூசை தன்னை நெடிதுநாம் மகிழ்ந்த வாற்றால்
ஆவிகள் அனைத்தும் உய்ந்த அருவினை அகன்று நும்போல்
பூவினில் என்றும் பூசை புரிந்தவர்க் கெல்லாம் முத்தி
மேவர அளித்தும் என்றே வியனருள் புரிந்து போந்தான். 39

நீவிர் செய் பூசை தன்னை – நீவிர்கள் செய்த பூசையை, நாம் நெடிது மகிழ்ந்தவாற்றால் – யாம் பெரிதும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டமையால், ஆவிகள் அனைத்தும் உய்ந்த – உயிர்களெல்லாம் உய்ந்தன; அருவினை அகன்று – நீக்குதற்கரிய வினைகள் நீங்கி, பூவினில் நும்போல் என்றும் பூசை புரிந்தவர்க்கு எல்லாம் – பூமியில் நும்மைப்போல எக்காலத்தும் நம்மைப் பூசித்தவர்களுக்கெல்லாம், முத்தி மேவர அளித்தும் என்று – மோட்சத்தை அடையுமாறு அருள்வோம் என்று, வியன் அருள் புரிந்து போந்தான் – மிக்க அருளைச் செய்து எழுந்தருளினார்.

அருவினை பாவச்செயல், பூசை இராப்பூசை [39,133]

எம்பெருந் தலைவன் ஏக வுருத்திரர் யாரும் ஈண்டித்
தம்பதங் குறுகி முன்போற் சார்ந்தனர் அனைய காலை
அம்புய னாதி வானோர் அனைவருங் கயிலை புக்கு
நம்பனை வணக்கஞ் செய்து தொழுதிவை நவிலல் உற்றார். 40

எம் பெருந் தலைவன் ஏக – எமது பெரிய தலைவராகிய சிவபெருமான் எழுந்தருள, உருத்திரர் யாரும் ஈண்டி – உருத்திரர் யாவரும் ஒருங்கு திரண்டு, தம் பதம் குறுகி முன் போல் சார்ந்தனர் – தம்முடைய பதத்தை அடைந்து முன்போல் இருந்தார்கள்; அனைய காலை – அச்சமயத்தில், அம்புயன் ஆத் வானோர் அனைவரும் கயிலை புக்கு – பிரமா முதலிய தேவரனைவருந் திருக்கைலையை அடைந்து, நம்பனைத் தொழுது வணக்கஞ் செய்து இவை நலிலல் உற்றார் – சிவபெருமானைத் தொழுது வணங்கி இவற்றை உரைப்பாராயினர். [40,134]

மன்னுயிர்க் குயிராய் உற்ற வள்ளல்கேள் யாங்கள் எல்லாம்
உன்னருள் உறாத நீரால் உணர்வொரீஇச் சடம தாகிப்
பன்னெடுங் காலம் வாளா கிடந்தனம் பவமூழ் குற்றேம்
அன்னது தனக்குத் தீர்வொன் றருளென அண்ணல் சொல்வான். 41

மன் உயிர்க்கு உயிராய் உற்ற வள்ளல் கேள் – நிலைபெற்ற உயிருக்குயிரான அருள் வள்ளலே கேட்டருள்வீராக; யாங்கள் எல்லாம் உன் அருள் உறாத நீரால் – நாமெல்லாம் தேவரீரின் அருளைப் பெறாமையால், உணர்வு ஓரீஇ – அறிவிழந்து, சடம் ஆகி – சடப்பொருளாய், பல் நெடும் காலம் வாளாகிடந்தனம் – பல நெடுங்காலம் சும்மா கிடத்தோம்; பவம் மூழ்குற்றேம் – அதனால் பாவத்தில் மூழ்கினோம்; அன்னது தனக்குத் தீர்வு ஒன்று அருள் என – அதற்கு ஒரு கழுவாயினை அருளிச்செய்வீராக என்று பிரார்த்திக்க, அண்ணல் சொல்வான் – சிவபெருமான் திருவாய்மலந்தருளுவார்.
விலக்கியன் செய்தல்போல விதித்தன செய்யாமையும் பாவமாம். அதனால் பவம் மூழ்குற்றேம் என்ற தென்க. [41,134]

மங்கியே உணர்வு சிந்தி மறைமுறை புரியா நீரால்
உங்கள்பால் வருவ வெல்லாம் உமையிடத் தாகு மன்றே
இங்குநீர் இன்று பற்றி இயற்றுநுங் கடன்கள் என்னப்
பங்கயா சனனுந் தேவர் யாவரும் பணிந்து போனார். 42

உணர்வு சிந்தி மங்கி – அறிவு சிதறுற்று மழுங்கி, மறை முறை புரியா நீரால் – வேதாநுட்டானங்களைச் செய்யாமையால், உங்கள்பால் வருவ எல்லாம் – உங்களிடத்து வரக்கடவ பாவம் முழுவதும், உமை இடத்து ஆகும் – உமாதேவியாரிடத்துச் சேரும்; இங்கு நீர் – இவ்விடத்திலுள்ள நீவீர், இன்று பற்றி – இன்று தொடங்கி, நும் கடன்கள் இயற்றும் என்ன – உங்கள் நித்திய கடன்களைச் செய்யுங்கள் என்று திருவாய்மலர்ந்தருள, பங்கயாசனனும் தேவர் யாவரும் பணிந்து போனார் – பிரமாவும் எல்லாத் தேவரும் சிவபெருமானை வணங்கி முன்போலத் தத்தங் கடன்களைச் செய்யும்பொருட்டுச் சென்றார்கள்.

உயிர்கள் விதித்தன செய்யாமை அவ்வுயிர்களின் முனைப்பால் லாகாமையின் அவ்வுயிர்கள்பால் வருவ உமையின்பாலாயின. அன்று ஏ அசைநிலை. [42,134]

வேறு

வாலி தாமயன் முதலினோர் வணங்கினர் ஏக
ஏல வார்குழல் உமையவள் பிரான்கழல் இறைஞ்சி
மேலை நாளுயிர்த் தொகையினுக் கெய்திய வினையென்
பால்வ ரும்பரி சென்கொலோ பணித்தருள் என்ன. 43

வாலியாம் அயன் முதலினோர் வணங்கினர் ஏக – தூயதாகிய அறிவைப் பெற்ற பிரமா முதலியவர்கள் வணங்கிச் செல்ல, ஏல வார்குழல் உமையவள் பிரான் கழல் இறைஞ்சி – மயிர்ச்சந் தணிந்த நீண்ட கூந்தலினையுடைய உமையம்மையார் சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, மேலை நாள் உயிர்த் தொகையினுக்கு எய்திய வினை – முன்னாளில் உயிர்க்கூட்டங்களுக்கு உண்டாகிய பாவம், என்பால் வரும் பரிசு என் – என்னிடம் வரும் காரணம் என்னை, பணித்தருள் என்ன – திருவாய்மலர்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க. [43,135]

முன்பு நீயுனை வியந்தனை அத்துணை முனிந்து
நின்பொ ருட்டினால் உயிர்கள்தம் முணர்ச்சியை நீக்கிப்
பின்பு ணர்த்தினம் ஆதலின் அன்னவை பெற்ற
மன்பெ ரும்பவம் யாவையும் நின்னிடை வருமால். 44

முன்பு நீ உனை வியந்தனை – எம் முன்னிலையைல் உமையே நீ வியந்துரைத்தாய்; நின்பொருட்டு அத்துணை முனிந்து – நீ உன்னியல்பை உணரும் பொருட்டு அப்பொழுது யாம் உன்னைக் கோபித்து, உயிர்கள் தம் உணர்ச்சியை நீக்கி – உயிர்களின் உணர்ச்சியை நீக்கி – உயிர்களின் உணர்ச்சியை நீங்கச்செய்து, பின் உணர்த்தினம் – பின்னர் அவ்வுணர்ச்சியை வருவித்தோம்; ஆதலின் – இவ்வாறு உணர்ச்சி இடையீடுபட்டதனால், அவைபெற்ற மன் பெரும் பவம் யாவையும் – அவ்வுயிர்கள் அடைந்த மிக்க பெரும்பாவம் முழுவதும், நின்னிடை வரும் – உன்னிடம் வந்து சேரும்; முறையது ஆகும் – அவ்வாறு வந்து சேருவது நீதியேயாம்.
உணர்ச்சி இடையீடுபட்டதனால் விதித்தன் செய்யாமையால் பவம் உளதாயிற்றென்க.

முறையதாம் என்பது, அடுத்த பாட்டின் தொடக்கம். இரங்காமல் இருக்கமாட்டாமையாகிய திருவருளைத் தன்பாற் கொண்ட அருட்சத்திக்கே, விளையாட்டாகவேனும் முனைப்புளதாயவழித் தண்டனை உளதாமேல், வேகங் கெடாத மன்னுயிர்களின் முனைப்பின் பயன் யாதா மென்க. விளையாட்டாவது ஆன்மாக்களுக்குச் சிவத்தின் இயல்பு இருந்தபடியை உணர்த்து முகமாய தொரு ஆடல் என்க.

ஆன்மா திருவருளோடொத்துச் செல்லாதே முளைப்புளதாயவழித்தன்வினைக்குத் தானே பாத்திரமாவரைத், திருவருளாகிய சத்தி சிவத்தோடொத்துப்போகாதே முனைத்தவழி அதந் நிலையே இவ்வாறாமெனக் சத்தியில் வைத்துப் பேசியவாறாம். [44,135]

முறைய தாகுமால் பின்னுமொன் றுண்டுயிர் முற்றும்
பெறுவ தாமுனக் கல்லது பெரும்பவம் அவற்றால்
பொறைபு ரிந்திடற் கெளியவோ போற்றுநீ யென்றான்
சிறுவி திக்கருள் பரிசினை முடிவுறச் செய்வான். 45

முறையே ஆகும் பின்னும் ஒன்று உண்டு – உயிர்களின் பவம் நின்னிடை வருதல் நீதியாதலுமே யல்லாமல் மற்றொரு காரணமும் உண்டு; உயிர் முற்றும் பெறுவது ஆம் உனக்கு அல்லது – உயிர் முழுவதையும் ஈன்றருளுதலைக் கொள்ளுந் தாயாகிய உனக்கே யல்லாமால், அவற்றால் பொறை புரிந்திடற்கு – உன் குழந்தைகளாகிய அவ்வுயிர்கள் சுமத்தற்கு, பெரும் பவம் எளிவோ – அவை செய்த பெரிய பாவங்கள் எளியவாமோ; நீ போற்று – தாயாகிய நீயே சுமப்பாயாக; என்றான் – என்று திருவாய்மலர்ந்தருளினார்; சிறுவிதிக்கு அருள் பரிசினை முடிவுறச் செய்வான் – தக்கனுக்குத் தாம் முன் கொடுத்த வரத்தை இனி முற்றுவிப்பாராகிய சிவபெருமான்.

செய்வான் என்றான் என்க. செய்வான் வானீற்று வினையெச்சமுமாம். பெயராயவழிக் கருத்துடையடைகொளியாம். இதனை ஒரு வியாஜமாகக் கொண்டு பரிசினை முடிவுறச் செய்யத் திருவுளங்கொள்வா ராயினா ரென்க. பரிசு ஈண்டு வரம். பாதியன பராபரை யான்பெறு மாதராக என்று முன்பெற்றா வரமென்க.

குழந்தைக்கு பால் சுரக்கு மன்னை அதற்கு நோய் வாராமே மருந்து தருவதொரு முறையில் நீ போற்று என்றிருளினா ரென்க. [45,136]

நாதன் அவ்வுரை இயம்பலும் உளம்நடு நடுங்கிப்
பேதை யேன்செயும் பிழைதணித் தென்வயிற் பெருகும்
ஏத மாற்றவோர் பரிசினை உணர்த்துதி என்னாப்
பாத பங்கயந் தொழுதலும் இனையன பகர்வான். 46

நாதன் – சர்வலோகைக நாயகராகிய சிவபெருமான், அவ்வுயிர் இயம்பலும் – அவ்வார்த்தைகளைக் கூறியருள, உளம் நடுநடுங்கி – உமாதேவியார் மனம் நடுநடுங்கி, பேதையேன் செயும் பிழை தணித்து – பேதையாகிய யான் செய்யும் பிழையைப் பொறுத்து, என் வயின் பெருகும் ஏதம் மாற்ற ஓர் பரிசினை உணர்த்துதி என்னா – என்னிடம் வந்து பெருகுகின்ற பாவத்தை நீக்குதற்கு ஓர் உய்பாயத்தை உணர்த்தியருள்வீராக என்று, பாத பங்கயம் தொழுதலும் – திருவடிக்கமலங்களை வணங்குதலும், இனையன பகர்வான் – இவைகளைச் சிவபெருமான் கூரியருளூவாராயினர். [48,136]

ஆல மேபுரை நிறத்ததாய் அமிழ்தினுஞ் சுவைத்தாய்
ஞால மார்தர வொழுகிய காளிந்தி நதிபோய்
மூல மெய்யெழுத் தன்னதோர் முதுவலம் புரியின்
கோல மாகிநோற் றிருத்தியால் உலகருள் குறிப்பால். 47

ஆலம் புரை நிறத்ததாய் – நஞ்சை ஒத்த நிறத்தினையுடையதாய், அமிழ்தினும் சுவைத்தாய் – அமிர்தினும் இனிதாய், ஞாலம் ஆர்தர ஒழுகிய – பூமியில் உள்ளவர் நுகரும்படி பெருகுதலைச் செய்த, காளிந்தி நதி போய் – காளிந்தி நதியை அடைந்து, மூலம் மெய் எழுத்து அன்னது ஓர் முது வலம் புரியின் கோலமாகி – வேத மூலமான மெய்மையான பிரணவத்தை ஓத்ததாகிய ஒரு முதிய வலம்புரிச் சங்கின் வடிவமாகி, உலகு அருள் குறிப்பால் நோற்று இருத்தி – உலகத்தை இரட்சிக்குங் குறிப்போடு அந்நதியிலே தவஞ் செய்துகொண்டு இருப்பாயாக. [47,137]

அந்ந திக்குள்நீ பற்பகல் இருந்துழி அயன்சேய்
என்ன நின்றிடு தக்கனென் பவன்அவண் எய்தி
உன்னை நேர்ந்துசென் றெடுத்தலுங் குழவியின் உருவாய்
மன்னி யாங்கவன் பன்னிபாற் சிறுமியாய் வளர்தி. 48

அந்த நதிக்குள் நீ பற்பகல் இருந்துழி – அத்தக் காளிந்த நதியிற் பல காலம் நீ தவஞ்செய்துகொண்டிருக்கும்போது, அயன் சேய் என்ன நின்றிடு தக்கன் என்பவன் – பிரமாவின் புதல்வன் என்றிருக்கின்ற தக்கனானவன், அவண் எய்தி – அங்கு அடைந்து, உன்னை நேர்ந்து சென்று – உன்னை அணுகி வந்து, எடுத்தலும் – கையில் எடுக்க, குழவியின் உருவாய் மன்னி – குழந்தையின் வடிவமாய்ப் பொருந்தி, ஆங்கு அவன் பன்னி பால் – அவன் மனைவியாகிய வேதவல்லியிடத்து, சிறுமியாய் வளர்தி – சிறு பெண்குழந்தையாய் வளர்வாயாக. [48,137]

ஐந்தி யாண்டெனும் அளவைநிற் ககன்றுழி அதற்பின்
புந்தி ஆர்வமோ டெமைநினைந் தருந்தவம் புரிதி
வந்தி யாமது காணுறா மணஞ்செய்து மறையால்
இந்த மால்வரை யிடைஉனைத் தருதுமென் றிசைத்தான். 49

ஐந்து யாண்டு எனும் அளவை நிற்க அகன்றுழி – ஐந்து பிராயம் என்னுங் காலம் உனக்கு நீங்கியவுடன், அதன்பின் புந்தி ஆர்வமோடு எமை நினைந்து அருந்தவம் புரிதி – அதன்பின்பு மனவிருப்பத்தோடு எம்மை நினைந்து அரிய தவஞ் செய்வாயாக; யாம் அது வந்து காணுறா – யாம் அத்தவத்தை வந்து கண்டு, மறையால் மணஞ்செய்து – மறைவிதிப்படி திருமணஞ்செய்து, இந்த மால்வரையிடை உனைத் தருதும் – இந்தப் பெரிய திருக்கைலாச மலைக்கு உன்னை அழைத்து வருவோம்; என்று இசைத்தான் – என்று திருவாய் மலர்ந்தருளினார்.
மறை, கரத்தல் அகிய களவுமாம். [40,137]

இசைத்த வாசகம் உணர்தலும் இறையுரத் தழுந்தத்
தசைத்த பூண்முலை உமையவள் அன்னவன் சரணின்
மிசைத்தன் வார்குழல் தைவர வணங்கியே விடைபெற்
றசைத்த சிந்தையள் நீங்கினள் உலகுநோற் றதனால். 50

இசைத்த வாசகம் உணர்தலும் – சிவபெருமான் அருளிச்செய்த வார்த்தைகளைக் கேட்டவுடன், இறை உரத்து அழுந்தத் தசைத்த பூண் முலை உமையவள் – அச் சிவபெருமானுடைய திருமார்பில் அழுந்தும்படி பூண்களை அணிந்த முலைகளையுடைய உமையம்மையார், அன்னவன் சரணின்மிசை தன் வார்குழல் தைவர வணங்கி – அப்பெருமானுடைய திருவடிகளிமீது தமது நீண்ட கூந்தல் பொருந்தும்படி வணங்கி, விடை பெற்று – விடைபெற்றுக்கொண்டு, அசைத்த சிந்தையள் உலகு நோற்றதனால் நீங்கினள் – பெருமானைப் பிரிதலால் அசைவு கொண்ட மனத்தை யுடையவராய் உலகஞ் செய்த தவத்தாற் கைலையை நீங்கினார்.

பேதித்து நம்மை வளர்த்தெடுக்க்ம் பெய்வளையாகிய மாதாவின் தவம் உலகு உய்யுந் தவமாகையால் , உலகு நோற்றதனால் என்றார். [50,138]

ஆதி தேவனை ஒருவியே புடவியில் அணுகி
ஓத வேலையை மாறுகொள் காளிந்தி யுழிப்போய்
வேத மூலநேர் வால்வளை உருக்கொடு விளங்கி
ஏத மில்லதோர் பதுமபீ டத்தின்மேல் இருந்தாள். 51

ஆதி தேவனை ஒருவி புடவியல் அணுகி – உமாதேவியார் முதல்வராகிய சிவபெருமானைப் பிரிந்து பூமியை அடைந்து, ஓத வேலையை மாறு கொள் காளிந்தி யுழிப்போய் – அலைகளை யுடைய சமுத்திரத்தோடு மாறுபடுகின்ற காளிந்தி நதிப்பாற் சென்று, வேத மூலம் நேர் வால் வளை உருக்கொடு விளங்கி – வேத மூலமான பிரணவத்தை ஒத்த வெள்ளிய சங்கின் உருவத்தைக் கொண்டு விளங்கி, ஏதம் இல்லது ஓர் பதுமபீடத்தின்மேல் இருந்தாள் – குற்றமில்லாதாகிய ஒரு தாமரைமலர்ப் பீடத்தின்மீது எழுந்தருளி, இருந்தாள் எச்சமுற்று.

தெளித ருஞ்சிவ மந்திரஞ் சிந்தனை செய்தே
அளவில் பற்பகல் அன்னைநோற் றிருந்தனள் அவட்கண்
டுளம கிழ்ந்தெடுத் தேகுவான் ஓங்குகா ளிந்தி
நளிகொள் சிந்துவில் தக்கன்உற் றனஇனி நவில்வாம். 52

தெளி தரும் சிவமந்திரம் சிந்தனை செய்து – ஞானத்தைத் தருகின்ற சிவமூலமந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டு, அளவுஇல் பல்பகல் அன்னை நோற்றிருந்தனள் – அளவில்லாத பலகாலம் உலகமாதாவாகிய தேவி தவஞ் செய்து கொண்டிருந்தார்; அவட் கண்டு – அவ்வாறு தவஞ் செய்ய்துகொண்டிருந்த தேவியைக் கண்டு, உளம் மகிழ்ந்து – மனம் மகிழ்ந்து, எடுத்து ஏகுவான் – எடுத்துச் சொல்லும்பொருட்டு, ஓங்கு காளிந்தி நளி கொள் சிந்துவில் – உயர்ந்த காளிந்தியாகிய குளிர்ச்சிபொருந்திய ஆற்றின்பால், தக்கன் உற்றன இனி நவில்வாம் – தக்கனிடம் நிகழ்ந்தவற்றை இனிக் கூறுவாம்.

இப்படலத்தில் உயிர்கள் உணர்ச்சி யிழந்து இருளில் மூழ்கியிருந்த காலத்தை, மாகா சங்காரத்தின் பின் உயிர்கள் இளைப்பாறுவதாகிய காலத்தோடும், இருளில் உருத்திரர்கள் உய்யும்பொருட்ட்ப் பூடனைபுரிந்த காலத்தை மகா சிவராத்திரி காலத்தோடும் ஒப்பிட்டுச் சிந்திக்கும் முகத்தால், ஆணவ் இருளில் முழுகி விடிவாம் அளவும் விளக்கனைய மாயையால் அறிவுசிறிது விளங்குஞ் சகலராகிய நாம், நாடோறு மெய்தும் இராப்பொழுதின் நான்கு யாமங்களையும் எவ்வாறு சிவசிந்தனையிற் பயன்செய்வதென நினைவு கூறுவோமாக.

உமை கயிலை நீங்கும் படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 242

(எண் = செய்யுளின் எண்)
*1-1. கமல மூர்த்தி – பிரமதேவன்.
*1-2. அமலம் – பரிசுத்தம்.
*2-1. சங்கரி – அம்பிகை.
*2-2. ஆற்ற – மிகுந்த.
*3-1. பரவிய – விரிந்துகிடக்கும்.
*3-2. தனிச்சத்தி – ஏகசத்தி; பராசத்தி.
*4-1. ஐந்தியல் சத்திகள் – பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி என ஐவகை சத்திகள்.
*4-2. சதாசிவ உரு ஐந்து – ஐந்து திருமுகங்களைக் கொண்ட சதாசிவமூர்த்தி.
*5-1. இருபதின் மேலும் ஐந்து ஈசன் – சகல வடிவுகொண்ட இருபத்தைந்து மகேசுவர வடிவங்கள்.
*5-2. குடிலை – ஒரு சத்தி.
*6. தத்துவம் ஆறொடு ஆறு – முப்பத்தாறு தத்துவங்கள்.
*7. மூவகை வியன் உயிர்த்தொகை – விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்கள்.
*9. ஐந்து – பஞ்ச சாதக்கிய வடிவு.
*11. அந்நிலை வடிவு எலாம் – அச்சதாசிவாதி வடிவமனைத்தும்.
*12-1. இருள் – மலவிருள்.
*12-2. சடம் – உடல்.
*15. ஆவிகள் – உயிர்கள்.
*16. நந்துதல் – கெடுதல்.
*19. ஓர் இறை – ஒரு இமைப்பொழுது.
*20. அன்மலி, அன் – சாரியை.
*21-1. திருத்தகு – அழகிய.
*21-2. பல்வகை உருத்திரர் – பதினோரு உருத்திரர்கள்.
*23-1. அருச்சுன வட்டம் – திருவிடைமருதூர்.
*23-2. அருச்சுனம் – மருதமரம்.
*25. ஐம்பெருங்கோலம் – பஞ்ச மூர்த்திகள்.
*26. எண் இரு பதினாறு.
*27-1. ஆறு இரு நாலுடன் அஞ்செழுத்து – சோடசகலா பிரசாத மந்திரம்; இது பிரணவ பீசங்களுடன் கூடி பதினாறு மாத்திரைகளுடன் ஒலிக்கும் சூக்கும பஞ்சாக்கரம் என்பர்.
*27-2. கண்டிகை – உருதிராட்சம்.
*27-3. வேறுளமுறை – பூதசுத்தி, அந்தரியாகம் முதலியன.
*28-1. வீ – பூ; இங்கு மல்லிகை.
*28-2. வலம்புரி – நந்தியாவட்டம்.
*29. ஓதனம் – சோறு.
*31-1. மருதினில் – திருவிடைமருதூரில்.
*31-2. ஐந்தும் ஆறுமாம் உருத்திரர் – ஏகாதச ருத்திரர்.
*33. அல் – இரவு.
*34-1. நாகம் – பாம்பு.
*34-2. கூர்மம் – ஆதி கூர்மம் (கூர்மம் = ஆமை).
*36. பற்றலர் எயில் மூன்று – திரிபுரம்.

*38. மாகத்திங்கள் … முதனாட்கங்குள் – மகா சிவராத்திரி.
*41. மன்னுயிர் – நிலைபெற்ற உயிர்.
*42. மறைமுறை – வேத முறைப்படி (கன்மாதிகளை).
*43-1. வாலிதாம் – வெண்ணிறமான.
*43-2. ஏலம் – மயிர்ச்சாந்து.
*45. பரிசினை – வரத்தினை.
*47-1. ஆலமேபுரை – விடம்போலும் (கரிய).
*47-2. காளிந்தி நதி – யமுனா நதி.
*47-3. மூலமெய் எழுத்து – பிரணவம்.
*47-4. வலம்புரி – வலம்புரிச் சங்கு.
*48. பன்னி – மனைவி; இங்கு வேதவல்லி.
*49. தருதும் – அழைத்து வருகின்றோம்.
*51-1. புடவி – உலகம்.
*51-2. ஓதம் – அலை.
*51-3. வேதமூலம் நேர் – பிரணவத்தை ஒத்த.
*51-4. வால்வளை – வெள்ளிய சங்கு.
*52-1. நளி – குளிர்ச்சி.
*52. சிந்து – ஆறு; இங்கு யமுனா நதி

6.காளிந்திப் படலம்

நீளுங் தகைசேர் நிலமா மகடன்
கோளுந் தியபூங் குழல்வார்ந் தெனலாய்
நாளுந் தியவீ நணுகிக் கரிதாங்
காளிந் தியெனுங் கடிமா நதியே

காளிந்தி எனும் கடி மா நதி – காளிந்தி என்னும் புதுமை பொருந்திய பெரிய நதி, நாள் உந்திய வீ நணுகி – அன்றலர்ந்த பூக்கள் பொருந்தி, நீளும் தகை சேர் நில மாமகள் தன் – நீளுகின்ற தகுதியினையுடைய பூமிதேவியின், கோள் உந்திய – குற்றம் நீங்கிய, பூங் குழல் வார்ந்து எனலாய் – பூவையணிந்த கூந்தல் வார்ந்து என்று கூறத்தக்கதாய், கரிது ஆம் – கருநிற முடைத்தாய் விளங்கும்.

வார்ந்தது வார்ந்து என நின்றது, வார்தல் நீண்டடொழுகுதல், கோள் உந்திய – குணம் மிக்க என்றுரைப்பினும் அமையும். காளிந்தி கருநிறத்தது; பூக்களோடு கூடியது. அதனால் பூங்குழல் வார்ந் தெனலாய் என்றார். [1,140]

முத்துங் கதிரும் முழுமா மணியுந்
தொத்துந் தியசெந் துகிரும் மகிலு
நத்தும் பிறவுந் நனிநல் குவபோல்
ஒத்துந் துவதவ் வொலிநீர் நதியே. 2

முத்தும் – முத்துக்களும், கதிரும் முழு மா மணியும் – ஒளி செய்யும் முழுத்த சிறந்த இரத்தினங்களும், தொத்து உந்திய துகிரும் – சொத்துக்களாய் விரிந்து சிவந்த பவளங்களும், அகிலும் – அகில்களும், நத்தும் பிறவும் – சங்குகளும் பிற பொருள்களும், நனி நல்குவ போல் – அந்நதியாற் பெரிதும் வழங்கப்படுவனபோலாக, ஒத்து உந்துவது – மன்மொத்துத் தன்னிடத்திலிருந்து அவைகளை வீசுவலைஅ செய்வது, அ ஒலி நீர் நதி – ஒலித்தலைச் செய்கின்ற அந்த நீர் நிறைந்த காளிந்தி நதி

செயப்படுபொருளைச் செய்வதுபோலச் செப்பும் வழக்குப்பற்றி நல்குவ என்றார். இனி நல்குவ என்பதைச் தொழிற் பெயரெனக் கொண்டு, முத்து முதலியவ்வைகளை நல்குதலைப்போல என்றுரைப்பினுமாம். [2,140]

எண்மே னிமிரும் மிருநீர் பெருகி
விண்மே லுலவா விரிகின் றதொரீஇ
மண்மே லொலியா மலிகார் தழுவிக்
கொண்மூ வரவொத் துளதக் குடிஞை. …… 3

எண்மேல் நிமிரும் – அளவிடுதல் அரிதாகின்ற, இருநீர் பெருகி – மிக்க நீர் பெருகி, விண்மேல் உலவா விரிகின்றது ஒரிஇ – ஆகாயத்தில் உலாவி விரிகின்றதை நீங்கி, ஒலியா – ஒலித்து, மலி கார் தழுவி – மிக்க காரைத் தழுவி, ஒத்துளது – அந்தக் காளிந்தி நதி நிகர்த்தது.

பெருகுதல் ஒருவுதல் ஒலித்தல் தழுவல் இரண்டுக்கும் பொருத்தமாதல் காண்க, கொண்மூவுக்குக் கார் கார்காலம் ; நதிக்கு கருமை [3,141]

மீனார் விழிமங் கையர்விண் ணுறைவோர்
வானார் செலவின் வருநீள் இடையில்
கானா மெனவுங் கடலா மெனவுந்
தானா குவதத் தடமா நதியே. …… 4

நீர் இடையிற் கானாம் எனவும் – நீண்ட இடத்தினையுடைய காட்டைப் போலவும், கடலாம் எனவும் – கடலைப்போலவும், தான் ஆகுவது அத் தட மா நதி – தான் தோன்றுவதாகிய அந்த விசாலமான காளிந்தி நதி, விண் உறைவோர் மீனார் விழி மங்கையர் வானோர் செலவின் வரும் – விண்ணில் உறைவோராகிய மீன்போலுங் கணகளையுடைய தேவ மகளிர்கள் வானத்தின்கட் செல்லுகின்ற செல்லுகையை ஒப்பச் செல்லாநிற்கும்.

வானர மகளிரின் வான் செலவு காண்டற் கரிதால்போல ஆழ்ந்த நீரினை யுடைத்தாகிய இக் காளிந்தியின் செலவுங் காண்டற் கரியதுபோலும். நதியைப் பெண்மைப்படுத்தும் மரபு பற்றி அதன் செலவு மங்கையர் செலல்வோடு ஒப்பிடப்பட்டது. கருநிற மிகுதியாற் கானா மெனவும், அதனோடு ஒலி மிகுதியாற் கடலாமெனவும் ஆக்வது காளிந்தி என்க. [4,141]

பாரின் புடையே படரந் நதியை
நேரும் படியோர் நெடுநீ ருளதோ
காருந் தெளியாக் கடலீ தெனவே
யாரும் பெருமைத் தஃதா யிடவே. …… 5

காருந் தெளியா – மேகமும் பேதந் தெரியாமல், ஈது கடலே என் ஆகும் பெருமைத்து அஃது – இது கடலேயாமென்று படிந்து நீர் பருகும் பெருமையுடையது அந்தக் காளிந்தி நதி; பாரின் புடைபடர் அந்நதியை நேரும்படி – பூமியின்கட் செல்லுகின்ற அந்த நதியை ஒக்கும்படி, ஆய்இட – ஆராய்ந்து சொல்ல, ஓர் நெடுநீர் உளதோ – ஒரு சமுத்திரம் உளதாமோ.

தெளியா ஈறுகெட்டு நின்றது. தெளியா ஆரும் என்க [5,142]

துப்பா யினதாய்த் துவரத் தகைசே
ரப்பா யுவரற் றழிவில் பொருளின்
வைப்பா யருளால் வருமவ் வொலியற்
கொப்பா குவதோ வுவரா ழியதே. …… 6

துப்பு ஆயினதாய் – துப்பார்க்குத் துப்பாயதாய், துவரத் தகைசேர் அப்புஆய் – அதனாலே முற்றுந் தகுதி வாய்ந்த நீனினையுடையதாய், உவர் அற்று – உவர்த்தன்மையின்றி, அழிவு இல் பொருளின் வைப்பாய் – அழிவற்ற பொருளுக்கு இருப்பிடமாய், அருளால் வரும் அ ஒலியற்கு – இறைவனருளால் வாராநின்ற அந்த நதிக்கு, உவர் ஆழி ஒப்பு ஆகுவதோ – உவர்க்கடல் ஒப்பாகுமா.
துப்பு – உணவு, அழிவில் பொருள் ஈண்டுத் திருவருட் சத்தியாகிய உமை. ஒலியல் – யாறு.

பாலோங் கியவிற் பணிலம் படர்வாள்
நீலோங் கியஅம் பொடுநே மியெலாம்
மேலோங் கியதன் மையின்மெய்த் துயில்கூர்
மாலோன் றனையொத் ததுமற் றதுவே. …… 7

பால் ஓங்கிய வில் பணிலம் – வெண்மை மிகுந்த ஒளியினையுடைய சங்கு, படர் நீல் வாள் ஓங்கிய அம்பு – பரக்கின்ற நீல் ஒளிமிக்க நீர், நேமி – சக்கர வாகப்புள், எலாம் – ஆகிய இவையெல்லாம், மேல் ஓங்கிய தன்மையின் – தன்பால் விளங்கிய தன்மையினால், மெய்த்துயில் கூர் மாலோன் தனை – மெய்மையாகிய அறிதுயில் பயில்கின்ற திருமாலை, அது ஒத்தது – அக் காளிந்தி நதி ஒத்தது.

நதியின் பாலோங்கிய தன்மையிலே ( பால் – பாற்சமுத்திரம், வில், பணிலம் – சங்கு, பகைவர்க்குப் படர் விளைக்கும் வாள், நீல் நஞ்சூட்டிய அம்பு, நேமி – சக்கரம் ஆகிய ) மாலோன் மேல் ஓங்கிய தன்மை அமைதலின், அது மாலோனை ஒத்தது என்க. [7,141]

மீன்பட் டமையால் விரியுந் தொழுதிக்
கான்பட் டிடவுங் கழுநீ ருறலால்
தேன்பட் டிடவுந் திரைபட் டிடவும்
வான்பட் டிடுமோ சைமலிந் ததுவே. …… 8

மீன் பட்டமையால் – மீன்கள் உணமையால், விரியும் தொழுதிக் காந் பட்டிடவும்- விரிகின்ற காடுபோன்ற பறவைக் கூட்டத்தின் ஒலி செறிதலாலுன், கழுநீர் உறலால் – கழுநீர்கள் இருத்தலால், தேன் பட்டிடவும் – வண்டுகள் வீழ்ந்தொலித்தலானும், திரை பட்டிடவும் – திரைகள் எழுந் தொலித்தலானும், வான் பட்டிடும் ஓசை மலிந்து – வானத்தை அளாவும் ஒலி மிக்கது அந்நதி.

எழுவாய் வருவிக்கப்பட்டது. தொழுதி பறவைக்கூட்டத் தொலி, பறவைக் கூட்டமுமாம், பறவைகள் மிக்குச் செறிதலின் காடுபோன்றிருந்தன. [8,143]

ஊன்பெற் றலகில் உயிர்பெற் றகிலம்
வான்பெற் றவள்வால் வளையா யுறவெங்
கோன்பெற் றிடுமக் கொடிமெய் யுருவந்
தான்பெற் றதையொத் ததுமா நதியே. …… 9

ஊன் பெற்று – ஊனாகிய உடல்களை ஈன்று, அலகில் உயிர்பெற்று – அவ்வுடல்களோடு கூட்டும் முறையில் அளவில்லாத உயிர்களை ஈன்று, அகிலம் வான் பெற்றவள் – அவ்வளவோடு அமையாமல் விண்ணையும் மண்ணையும் ஈன்றவளாகிய தேவி, வால் வளையாய் உற – வெள்ளிய சங்கின் வடிவமாய் எழுந்தருள், மாநதி – அதற்கு ஏற்றவாற்றால் அந்தப் பெருமை பொருந்திய நதி, எங்கோன் பெற்றிடும் அக் கொடி மெய் உருவம் – எம்பெருமான் மணந்து கொள்ளும் அந்தக் கொடிபோன்ற தேவியினுடைய திருமேனியின் நிறத்தை, தான் பெற்றதை ஒத்தது – தான் பெற்றிருந்ததை ஒத்தது. [9,143]

வேறு

நஞ்செனக் கொலைசெய் கூர்ங்கண் நங்கையர் குடையக் கூந்தல்
விஞ்சிய நானச் சேறும் விரைகெழு சாந்தும் ஆர்ந்து
தஞ்செனக் கொண்ட நீலத் தன்மை குன்றாது மேலோர்
அஞ்சனப் போர்வை போர்த்தால் அன்னதால் அனைய நீத்தம். …… 10

நஞ்சு எனக் கொலை செய் கூர்ங்கண் நங்கையர் குடைய – விடம்போலக் கொலை செய்கின்ற கூரிய கண்களையுடைய பெண்கல் நீராடுதல் செய்ய, கூந்தல் விஞ்சிய நானச் சேறும் – கூந்தலின் மிக்கிருந்த கஸ்தூரிக் குழம்பும், விரை கெழு சாந்தும் – வாசனை பொருந்திய சந்தனமும், ஆர்ந்து – பொருந்தப் பெற்று, தஞ்சு எனக் கொண்ட நீலத் தன்மை குற்றாது – பற்றுக்கோடாகத் தன்னை பற்றியிருந்த நீலநிறத் தன்மை குறையாது, அனைய நீத்தம் – அந்தக் காளிந்தி நதி யிருப்பது, மேலோர் அஞ்சனப் போர்வை போர்த்தாலன்னது – வளர்த்தான் மிக்கோர் நீலவர்ணப் போர்வையைப் போர்த்தியிருந்ததால் அவ்வாறு போர்த்தியிருப்பதை ஒப்பதாம் .

சேறும் சாந்தும் ஆர்தல் மேலோர்க்கும் பொருந்தும்.

இவ்வுல கத்தோர் உள்ளத் தெய்திய இருளும் அன்னார்
வெவ்வினை இருளுந் தன்பால் வீழ்த்தியே விளங்கி ஏக
அவ்விருள் அனைத்துந் தான்பெற் றணைந்தென அங்கங் காராய்ச்
செவ்விதின் ஒழுகிற் றம்மா சீர்திகழ் யமுனை யாறே. …… 11

இவ்வுலகத்தோர் உள்ளத்து எய்திய இருளும் – இவ்வுலகத்திலுள்ளவர்கள் தமது உள்ளத்திற் பொருந்திய அகவிருளையும், அன்னார் வெவ்வினை இருளும் – அவர்கள் தங்களுடைய கொடிய தீவினை இருளையும், தன்பால் வீழ்த்தி விளங்கி ஏக – தன்னிடத்து முழுகுதலால் இட்டுப் பரிசுத்தமாகிய விளக்கம் அடைந்து செல்ல, அவ்விருள் அனைத்தும் தான் பெற்று அணைந்து என – அவர்கள் இட்டுச் சென்ற அவ்விருள் முழுவதையும் தான் பெற்று இருந்தாற்போல, அங்கம் காராய் – மேனி கருநிறமுடையதாய், செவ்விதின் ஒழுகிற்று – செப்பமுற ஒழுகுதல் செய்தது, சீர் திகழ் யமுனை யாறு – சிறப்புப் பொருந்திய காளிந்தி நதி.
காளிந்துக்கு மற்றொரு பெயர் யமுனை. [11, 108]

எத்திறத் தோரும் அஞ்ச எழுந்துமால் வரையிற் சார்ந்து
மெய்த்தலை பலவும் நீடி விரிகதிர் மணிகள் கான்றிட்
டொத்திடு கால்கண் மேவி ஒலிகெழு செலவிற் றாகி
மைத்துறு புனற்கா ளிந்தி வாசுகி நிகர்த்த தன்றே. …… 12

மால் வரையிற் சார்ந்து – களிந்தம் என்னும் பெரிய மலையின்கட் பொருந்தியிருந்து, எத்திறத்தோரும் அஞ்ச எழுந்து – எத்தகையோரும் அஞ்சும்படி பிரவாகித்து, மெய்த் தலை பலவும் நீடி – மெய்மையாகிய கிளைகள் பலவும் நீண்டு, விரி கதிர் மணிகள் கான்றிட்டு – விரிகின்ற கதிரினையுடைய இரத்தினங்களை வீசி, ஒத்திடு கால்கள் மேவி – இயைந்த வாய்க்காலகள் தோறும் சென்று, ஒலி கெழு செலவிற்று ஆகி – ஒலி பொருந்திய செலவினை யுடைய தாய், மைத்து உறு புனல் காளிந்தி – கருமைத்தான நீர்மிக்க காளிந்தி நதி, வாசுகி நிகர்த்தது – வாசுகி என்னும் அரவத்தை ஒத்தது.

வாசுகி, அஞ்சு எழுந்து, பெரிய மந்திர மலையைச் சார்ந்து, மெய்க்கட்பல தலை நீடி, மணிகள் கான்று, உணவாயியைந்த வாயுக்களை மிசைத்து, ஒலிகெழு செலவிற்றாய் நதிக்குவமமாதல் காண்க. வாசுகி அட்ட நாகங்களுள் ஒன்று. இனம் பற்றி அதன்பால் ஆதிசேஷனின் தன்மைகளும் பேசப்பட்டன. [12, 145]

நிலமகள் உரோம வல்லி நிலையென நகிலின் நாப்பண்
இலகிய மணித்தார் என்ன இருங்கடற் கேள்வன் வெஃகுங்
குலமகள் என்ன நீலக் கோலவா ரமுத மென்ன
உலவிய யமுனை எம்மால் உரைக்கலாந் தகைமைத் தாமோ. …… 13

நிலமகள் உரோம வல்லி நிலை என – பூமிதேவியின் உந்தியிற் பொருந்திய உரோம ரேகையைப் போலவும், நகிலின் நாப்பண் இலகிய மணித்தார் என்ன – அவளுடைய தனங்களுக்கு இடையே விளங்கிய நீலமணி மாலையைப் போலவும், இரும் கடற் கேள்வன் வெஃகும் குலமகல் என்ன – பெருமை பொருந்திய கடலாகிய நாயகன் விரும்புகின்ற குலமகளைப்போலவும், நீல்லக் கோல் ஆர் அமுதம் என்ன – நீலநிறமும் பொருந்திய தொரு அரிய அமிர்தத்தைப் போலவும், உலவிய யமுனை – ஒழுகிய காளிந்தி, எம்மால் உரைக்கலாம் தகைமைத்து ஆமோ – எமால் இத்தகைத்து என்று எடுத்துச் சொல்லும் இயல்பினை யுடையதாகுமோ? ஆகாதென்றவாறு.
குலமகள் கங்கையுமாம் . [13,145]

இன்னபல் வகைத்தாய் நீடும் இரும்புனல் யமுனை யின்கண்
மன்னிய நெறிசேர் மாசி மகப்புன லாட வேண்டி
அந்நிலத் தவர்கள் யாரும் அடைந்தனர் உலக மெல்லாந்
தன்னிகர் இன்றி யாளுந் தக்கன்இத் தன்மை தேர்ந்தான். …… 14

இன்ன பல் வகைத்தாய் நீடும் இரும் புனல் யமுனையின்கள் – இன்னோரன்ன பலவகைச் சிறப்பினையுடையதாய் அதனால் மிக்கு விளங்கும் பெரிய நீரினையுடைய காளிந்தி நதியின்கண், மன்னிய நெறி சேர் மாசிப் மகப் புனல் ஆடவேண்டி – நிலைபெற்ற நன்னெறியிற் சேர்க்கின்ற மாசி மகத் தீர்த்தம் ஆடுதலை விரும்பி, அந் நிலத்தவர்கள் யாரும் அடைந்தனர் – அந்த காளிந்தியையடுத்த சேஷத்திரங்களில் உள்ளவர்கள் எல்லாஞ் சென்றார்கள்; இத்தன்மை – இந் நிகழ்ச்சியை, உலகம் எலாம் தன் நிகர் இன்றி ஆளும் தக்கன் தேர்ந்தான் – உலகம் முழுவதையுந் தனக் கொப்பாரின்றி அரசு புரிந்த தக்கப் பிரசாபதி அறிந்தான்.
யமுனையின்கண் ஆடல் வேண்டி என்க. [14, 145]

மெய்ப்பயன் எய்து கின்ற வினைப்படும் ஊழின் பாலால்
அப்பெரு நதியில் அஞ்ஞான் றாடலை வெஃகித் தக்கன்
மைப்படுங் கூர்ங்கண் வேத வல்லியை மகளி ரோடும்
ஒப்பில்பல் சனத்தி னோடும் ஒல்லைமுன் செல்ல உய்த்தான். …… 15

மெய்ப் பயன் எய்துகின்ற வினைப்படும் ஊழின் பாலால் – உண்மைப் பயன் கைகூடுகின்ற நல்வினைப்பாற்பட்ட ஊழின் பகுதியினால், அஞ்ஞான்று அப் பெரு நதியில் ஆடலை தக்கன் வெஃகி – அப்புண்ணிய காலத்திலே அந்தப் பெரிய புண்ணிய நதியிலே நீராடுதலைத் தக்கன் தானும் விரும்பி, மைப்படும் கூர்ங்கண் வேதவல்லியை – மை தீட்டிய கூரிய கண்களையுடைய வேதவல்லியாகிய தன் மனைவியை, மகளிரோடும் – தோழியர் முதலிய பெண்களோடும், ஒப்பில் பல சனத்தினோடும் – ஒப்பில்லாத பல சனங்களோடும், ஒல்லை முன் செல்ல உய்த்தன் – விரைவாக முன்னே செல்லுமாறு அனுப்பினான். [15, 145]

மாற்றமர் செம்பொற் கோயில் வயப்புலித் தவிசின் மீதாய்
வீற்றிருந் தருடல் நீங்கி விரிஞ்சனு முனிவர் யாரும்
ஏற்றதோர் ஆசி கூற இமையவர் கணமா யுள்ளோர்
போற்றிட யமுனை யென்னும் புனலியா றதன்கட் போனான். …… 16

மாற்று அமர் செம்பொன் கோயில் – மாற்றமைந்த செம்பொன்னாலான மாளிகையில், வயப் புலித் தவிசின் மீதாய் வீற்றிருந் தருளல் நீங்கி – சிங்காசனத்தின்மீது வீற்றிருந்தருளுதலை நீங்கி, விரிஞ்சனும் முனிவர் யாரும் ஏற்றது ஓர் ஆசி கூற – பிரமாவும் முனிவர் யாவரும் இயைந்துஞ் சிறந்ததுமான ஆசி மொழி கூற, இமையவர் கணமாய் உள்ளோர் போற்றிட – தேவர்கணமா யுள்ளவர்கள் துதிக்க, யமுனை என்னும் புனல் யாறு அதன்கண் போனான் – யமுனை என்று பெயர் சொல்லப்படும் நீரினையுடைய ஆறாகிய அக் காளிந்தி நதியினிடத்துச் சென்றான்
வயப்புலி – சிங்கம் [16,146]

போனதொர் தக்கன் என்போன் புரைதவிர் புனற்கா ளிந்தித்
தூநதி யிடைபோய் மூழ்கித் துண்ணென வரலும் ஓர்பால்
தேனிமிர் கமல மொன்றிற் சிவனிடத் திருந்த தெய்வ
வானிமிர் பணிலம் வைக மற்றவன் அதுகண் ணுற்றான். …… 17

போனது ஓர் தக்கன் என்போன் – போதலைச் செய்த ஒரு தனித் தக்கன் என்பான், புரைதவ்ரி புனல் காளிந்தித் தூ நதியிடை போய் மூழ்கி – குற்றம் நீங்கிய நீரினையுடைய காளிந்தியாகிய பரிசுத்த நதியின்கட் சென்று முழுகி, துண்ணென வரலும் – விரைந்து திரும்பி வருதலும், ஓர் பால் – ஒரு பக்கத்தே, தேன் நிமிர் கமலம் ஒன்றில் – தேன் ததும்புகின்ற தாமைரைப் புஷ்பம் ஒன்றின் மீது, சிவன் இடத்திருந்து தெய்வ வால் நிமிர் பணிலம் வைக – சிவபெருமானுடைய வாம பாகத்தில் இருந்த தெய்வத்தன்மை பொருந்திய வெண்ணிறம் மிக்க வலம்புரிச் சங்கம் எழுந்தருளியிருப்ப, அவன் அது கண்ணுற்றான் – அத்தக்கன் அதனைக் கண்டான்.
போனது காலங் காட்டுந் தொழிற்பெயர், புரை தவிர்க்கும் புனலுமாம், தெய்வப் பணிலம், வலம்புரிச் சங்கு, பணிலமே தேவியே யாதலின் சிவனிடத்திருந்த பணிலம் எனப்பட்டது. [17,146]

வேறு

கண்ணுறுவான் நனிமகிழ்ந்தே கையினையுய்த்
தெடுத்திடுங்காற் காமர் பெற்ற
பெண்ணுருவத் தொரு குழவி யாதலும்விம்
மிதப்பட்டுப் பிறைதாழ் வேணி
அண்ணலருள் புரிவரத்தாற் கவுரியே
நம்புதல்வி யானாள் என்னா
உண்ணிகழ்பே ருணர்ச்சியினாற் காணுற்றுத்
தேவர்குழாம் ஒருவிப் போனான். …… 18

கண்ணுறுவான் நனி மகிழ்ந்து – காண்போனான தக்கன் மிக மகிழ்ந்து, கையினை உய்த்து – கையை நீட்டி, எடுத்திடுங்கால் – எடுக்கும்பொழுது, காமர் பெற்ற பெண் உருவத்து ஒரு குழமி ஆதலும் – பெண் உருவமான உரு குழந்தையாய் அச் சங்கந் தோன்றுதலும், விம்மிதப்பட்டு – ஆச்சரியம் உற்று, பிறை தாழ் வேணி அண்ணல் அருள்புரி வரத்தினால், கவுரியே நம் புதல்வி ஆனாள் என்னா – கெளரியாகிய உமையே நமது மகளாயினாள் என்று, உள் நிகழ் பேறுணர்ச்சியினால் காணுற்று – உள்ளத்தினுள்ளே நிகழ்ந்த பேருணர்வாகிய ஞானத்தினாற் கண்டு, தேவர் குழாம் ஒருவிப் போனான் – தேவர்கள் கூட்டத்தை நீங்கிச் சென்றான். [18,147]

அந்நதியின் பால்முன்னர் அவன்பணியாற்
சசிமுதலாம் அணங்கி னோர்கள்
துன்னினராய் வாழ்த்தெடுப்பத் துவன்றுபெருங்
கிளைஞரொடுந் தூநீ ராடி
மன்னுமகன் கரைஅணுகி மறையிசைகேட்
டமர்வேத வல்லி யென்னும்
பன்னிதனை யெய்தியவள் கரத்தளித்தான்
உலகீன்ற பாவை தன்னை. …… 19

அந் ததியின்பால் – அக் காளிந்தி நதியின்கண், முன்னர் அவன் பணியால் – முன்னர்த் தக்கனது ஏவலின்படி, சசி முதலாம் அணங்கினோர்கல் துன்னினராய் வாழ்த்தெடுப்ப – இந்திராணி முதலிய தேவ மாதர்கள் நெருங்கி நின்று வாழ்த்தொலி செய்ய, துவன்று பெருங் கிளைஞ்ரோடும் தூநீர் ஆடி – செறிகின்ற பெரிய சுற்றத்தாரோடும் பரிசுத்தமாகிய தீர்த்தமாடி, மன்னும் அகன் கரை அணுகி – நிலைபெற்ற அகன்ற கரையை அடைந்து, மறை இசை கேட்டு – வேதாத்தியயனத்தைக் கேட்டுக்கொண்டு, அமர் வேதவல்லி எனும் பன்னிதனை எய்தி – அமர்கின்ற வேதவல்லி என்னும் மனைவியை அடைந்து, அவள் கரத்து உலகு ஈன்ற பாவை தன்னை அளித்தான் – அவளுடைய கரங்களில் உலகங்களை ஈன்ற உலம மாதாவாகிய பெண் குழந்தையைக் கொடுத்தான். [19,147]

ஏந்துதனிக் குழவியினைத் தழீஇக்கொண்டு
மகிழ்ந்துகுயத் திழிபா லார்த்திக்
காந்தண்மலர் புரைசெங்கைச் சூர்மகளிர்
போற்றிசைப்பக் கடிதின் ஏகி
வாய்ந்ததன திருக்கையிடைப் புக்கனளால்
தக்கன் அங்கண் வானோ ரோடும்
போந்துமணிக் கோயில்புக்குத் தொன்முறைபோல்
அரசியற்கை புரிந்தி ருந்தான். …… 20

ஏந்து தனிக் குழவியினை – தக்கனாற் கொடுக்கப்பெற்றுக் கரங்களில் ஏந்திய ஒப்பற்ற குழந்தையை, தழீஇக்கொண்டு மகிழ்ந்து – மார்போடணைத்துக் கொண்டு மகிழ்ந்து, குயத்து இழி பால் ஆர்த்தி – தனங்களினின்றும் உருக்கத்தாற் சுரந்தொழும் பாலை ஊட்டி, காந்தள் மலர் புரை செங்கைச் சூர் மகளிர் போற்றிசைப்ப – காந்தள்மலர் போன்ற சிவந்த கைகளையுடைய சூரரமகளிர்கள் துதிசெய்ய, கடிதின் ஏகி – விரைந்து சென்று, வாய்ந்த தனது இருகையிடைப் புக்கனள் – வளம் நிறைந்த தனது மாளிகையை அடைந்தாள்; தக்கன் அங்கண் வானோரோடும் போந்து – தக்கன் அவ்விடத்திற் கூடியிருந்த தேவர்களோடுஞ் சென்று, மணிக்கோயில் புக்கு – அழகிய மாளிகையை அடைந்து, தொன் முறைபோல் அரசியற்கை புரிந்து இருந்தான் – முன்போலத் தனது அரசியல் முறையை நடாத்திக்கொண்டிருந்தான் .

காளிந்திப் படலம் முற்றிற்று [148]
ஆகத் திருவிருத்தம் 262

(எண் = செய்யுளின் எண்)
*1-1. நாள் உந்திய வீ – பகற்காலத்தில் மலர்ந்த நீலம் முதலிய பூக்கள்.
*2-1. துகிர் – பவளம்.
*2-2. நத்து – சங்கு.
*3-1. எண் – அளவற்றதாய்.
*3-2. கொண்மூ – மேகம்.
*3-3. குடிஞை – காளிந்தி நதி.
*6-1. துப்பு – தூய்மை.
*6-2. துவர – முற்றிலும்.
*7-1. பணிலம் – வலம்புரிச்சங்கு.
*7-2. அம்பு – நீர்.
*7-3. நேமி – சக்கரவாகப் பறவை.
*14 . மாசிமகப்புனல் ஆடல் – மாசி மாத மக நாளன்று யமுனையில் நீராடல்.
*16. விரிஞ்சன் – பிரமன்.
*17. வான் இமிர் – வெண்ணிறம் பொருந்திய.
*18. கவுரி – அம்பிகை.
*19. சசி – இந்திராணி.
*20-1. குயத்து இழிபால் – முலைப்பால்.
*20-2. சூர்மகளிர் – சூரரமகளிர்
7.உமை தவம்புரி படலம்
கொண்டுதன தில்லில் குறுகியபின் வேதவல்லி
மண்டுபெருங் காதலொடு மகண்மையாவ ளர்த்தனளால்
அண்டமள வில்லனவும் அலகிலா உயிர்த்தொகையும்
பண்டுதன துந்தியினால் படைத்தருளும் பராபரையை. …… 1

அளவு இல்லன அண்டமும் அலகு இலா உயிர்த்தொகையும் – அளவில்லாத அண்டங்களையும் எண்ணில்லாத உயிர்க் கூட்டங்களையும், பண்டு – சிருட்டி காலத்தில், தனது உந்தியினாற் படைத்தருளும் பாராபரையை – தமது திருவயிற்றினின்றும் படைத்தருளிய பராபரையாகிய உமாதேவியாரை, வேதவல்லி கொண்டு தனது இல்லிற் குறுகியபின் – வேதவல்லி தன் கணவனிடம் பெற்றுக்கொண்டு தன் மாளிகையை அடைந்த பிறகு, மண்டு பெருங் காதலொடு – அதிகரிக்கின்ற மிக்க பேரன்போடு, மகண்மையா வளர்த்தனன் – தன் புதல்வியாகிய வளர்த்தாள். [1-149]

வளருமதிக் குழவியென மாநிலமேல் தவழ்தலொடுந்
தளருநடை பயில்கின்ற தாறுமுடன் தப்பியபின்
முளையெயிறுள் ளெழுபோத முளைத்ததெனத் தோன்றுதலும்
அளவிலுயிர் முழுதீன்றாள் ஐந்தாண்டு நிரம்பினளால். …… 2

அளவு இல் முழுது உயிர் ஈன்றாள் – எண்ணற்ற உயிர் முழுவதையும் ஈன்றருளிய உமாதேவியார், வளரு மதிக்குழவி என – வளருகின்ற பிறைச் சந்திரன் போன்று வளர்ந்து, மா நிலமேல் தவழ்தலொடும் – பெரிய பூமியின் மீது தவழும் பருவமும், தளரு நடை பயில்கின்ற தாறும் – தளர்நடையில் பயில்கின்ற வருகைப் பருவமும், உடன் தப்பிய பின் – ஒருங்கு கழிந்த பிறகு, உள் எழு போதம் முளைத்தது என் – உள்ளத்தினுள்ளே எழுகின்ற ஞான போதம் முளை கொண்டதுபோல, முளை எயிரு தோன்றுதலும் – நாணன் முளை போன்ற பல் முளைகொள்ள, ஆண்டும் ஐந்து நிரம்பினள் – வயசும் ஐச்து நிரம்பியவர் ஆயினார். [2,149]

ஆறான ஆண்டெல்லை அணைதலும்அம் பிகைதனக்கோர்
கூறான பிரான்றன்னைக் கோடன்முறை குணித்தனளாய்
மாறாது நோற்பலென மனங்கொண்டி யாய்தனக்கும்
பேறான தக்கனெனும் பெருந்தவற்கும் இஃதுரைத்தாள். …… 3

ஆறான ஆண்டு எல்லை அணைதலும் – ஆறாவது வயசு வருதலும், அம்பிகை தனக்கு ஓர் கூறான பிரான் தன்னைக் கோடன் முறை குணித்தனளாய் – உமையம்மையார் தமது ஒரு கூறான சிவபெருமான் தம்மை மணஞ் செய்துகொள்ளும் முறையை எண்ணியவராய், மாறாது நோற்பல் என மனங் கொண்டு – தவறாது தவஞ் செய்வேன் என்று திருவுளங்கொண்டு, யாய் தனக்கும் – மாதாவாகிய வேதவல்லிக்கும், பேறு ஆன தக்கன் எனும் பெருந் தவற்கும் – தவப்பேறு சித்தித்த தந்தையாகிய தக்கன் என்னும் பெரிய தவத்தோனுக்கும், இஃது உரைத்தாள் – தாம் மேற்கொண்ட இச்செயலை உரைத்தருளினார். [3,150]

கூறுவதொன் றுமக்குண்டால் குரவீர்காள் இதுகேண்மின்
ஆறுபுனை செஞ்சடிலத் தண்ணலுக்கே உரித்தாகும்
பேறுடையேன் அவன்வதுவை பெறுவதற்கு நோற்பலியான்
வேறொருசார் கடிமாடம் விதித்தென்னை விடுத்திரென. …… 4

குரவீர்காள் – அன்னையுந் தந்தையுமாகிய இரு முது குரவீர்காள், உமக்குக் கூறுவது ஒன்று உண்டு – யான் உங்களுக்குக் கூறுவதொன் றுளது, இது கேண்மின் – இதனைக் கேளுங்கள், ஆறு புனை செஞ் சடிலத்து அண்ணலுக்கு உரித்து ஆகும் பேறு உடையேன் – கங்கையைத் தரித்த செம்மையாகிய சடையினையுடைய சிவபெருமானுக்குச் சத்தியாகும் பேற்றை யுடையேன் ஆகையினாலே, அவன் வதுவை பெறுவதற்கு யான் நோற்பன் – அச் சிவபெருமான் என்னை மணத்தலாகிய வரத்தை யான் பெறுவதற்குத் தவஞ் செய்வேன், வேறு ஒரு சார் கடி மாடம் விதித்து – வேறொரு பக்கத்தில் காவல் பொருந்தியதொரு தவமாடத்தை அமைத்து, என்னை விடுத்திர் என – அதில் என்னைத் தவஞ்செய்ய விடுக்குதிர் என்று கூறியருள. [4,150]

நன்றென்று மகிழ்சிறந்து நல்லாயுந் தந்தையுமாய்ப்
பொன்துஞ்சு தமதிருக்கைப் பொருவில்நகர்ப் புறத்தொருசார்
அன்றங்கொர் கடிமாடம் அணிசிறக்கப் புனைவித்துச்
சென்றங்கண் தவமியற்றச் சேயிழையை விடுக்கின்றார். …… 5

நல் ஆயும் தந்தையும் – நல்ல தாயும் தந்தையும் ஆய் ஒன்று சேர்ந்து, நன்று என்று மகிழ் சிறந்து – நல்லது என்று மகிழ்ச்சி மிக்கு, பொன் துஞ்சு தமது இருக்கைப் பொருவில் நகர்ப் புறத்து ஒரு சார் – இலக்குமி வசிக்கின்ற தமது இருப்பிடமாகிய ஒப்பில்லாத கோயிலின் அயலிலே ஒரு பக்கத்தில், அன்று அங்கு ஓர் கடி மாடம் அணி சிறக்கப் புனைவித்து – அப்பொழுது அங்கே ஒரு காவல் பொருந்திய தவச்சாலையை அழகு சிறப்பச் செய்வித்து, அங்கள் சென்று தவம் இயற்ற – அச் சாலையிற் சென்று தவஞ் செய்தற்கு, சேயிழையை விடுக்கின்றார் – செம்மையாகிய ஆபரணம் அணிந்த உமாதேவியாரை விடுக்கின்றவர்கள் .
விடுக்கின்றார் ஏகுவித்தார் என அடுத்த செய்யுளில் முடிக்க. [5,150]

முச்சகமுந் தருகின்ற முதல்விதனைத் தம்மகளென்
றிச்சைகொடு நனிபோற்றி இருவரும்நா ரொடுநோக்கி
உச்சியினைப் பன்முறைமோந் துயிர்த்தம்மோ உன்னுளத்தின்
நச்சியநோன் பியற்றுகென நாரியரோ டேகுவித்தார். …… 6

முச்சகமுந் தருகின்ற முதல்விதனை – மூன்றுலகங்களையும் ஈன்றருளுகின்ற முதல்வியாகிஅய் உமாதேவியாரை, தம் மகள் என்று இச்சை கொடு நனி போற்றி – தம்மகள் என்று விருப்பத்தோடு பெரிதும் வாழ்த்தி, இருவரும் நாரொடு நோக்கி – பெற்றோரிருவரும் அன்பால் நோக்கி – பன்முறை உச்சி மோந்து உயிர்த்து – பலமுறை உச்சி மோந்து நெட்ட்டுயிர்த்து, அம்மோ – அம்மையே, உன் உளத்தில் நச்சிய நோன்பு இயற்றுக என – உன் மனத்தில் விரும்பிய தவத்தைச் செய்குதி என்று, நாரியரோடு ஏகுவித்தார் – சேடியர்களாகிய பெண்களோடு அனுப்பினார்கள். [6, 151]

மாதவர்பால் விடைபெற்று வல்விரைவுற் றேகுதலும்
வேதவல்லி அதுகாணா மெய்க்கணவன் தனைநோக்கிப்
பேதையிவள் சிவனையுணர் பெற்றிமைஎன் மொழிகென்ன
ஈதனையள் நிலைமையென யாவுமெடுத் தியம்புகின்றான். …… 7

மாது அவர்பால் விடைபெற்று – உமாதேவியார் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, வல் விரைவுற்று ஏகுதலும் – பெரிதும் விரைவுபட்டுத் தவச்சாலைக்குச் செல்லுதலும், அது வேதவிலி காணா – அச்செயலை வேதவல்லி கண்டு, மெய்க் கணவன் தனை நோக்கி – மெய்ம்மையினையுடைய கணவனாகிய தக்கனை நோக்கி, பேதை இவள் – சிறுமியாகிய இவ்ள், சிவனை உணர் பெற்றிமை என் மொழிக என்ன – சிவபெருமானை அறிந்த தன்மை என்னை உரைக்குக என்று வினவ, அனையள் நிலைமை ஈது என் – அவளுடைய நிலைமை இதுவாகும் என்று, யாவும் எடுத்து இயம்புகின்றான் – சம்பவம் முழுவதையும் தக்கம் தன் மனைவிக்குச் சொல்லுகின்றான்.
பேதை பருவங் குறித்ததாயினும் ஈண்டுச் சிறுமி என்னும் பொருட்டு [7,151]

பொங்குபுனல் தடத்திடையான் புரிகின்ற தவங்காணூஉச்
சங்கரன்அங் கெய்திடலுந் தாழ்வில்வரம் பலகொண்டுன்
பங்கினள்என் மகளாகப் பண்ணவநீ என்மருகாய்
மங்கலநல் வதுவையுற மறையவனாய் வருகென்றேன். …… 8

பொங்கு புனல் தடத்திடை யான் புரிகின்ற தவம் காணூஉ சங்கரம் அங்கு எய்திடலும் – பொங்குகின்ற நீரினையுடைய மானதவாவியின்கண் யான் செய்கின்ற தவத்தைக் கண்டு சுகஞ் செய்பவராகிய சிவபெருமான் அங்கே எழுந்தருளுதலும், தாழ்வில் வரம் ப்ல கொண்டு – குறைவில்லாத பல வரங்களைப் பெற்றுக்கொண்டு (இறுதியில்), உன் புதல்வியாகிய, பண்ணவ நீ என் மருகாய் மறையவனாய் – தேவரீர் என் மருகராய் மறையவராய், மங்கல் நல் வதுவை உற – மங்களகரமான நல்ல திருமணத்தைச் செய்ய, வருக என்றேன் – வந்தருள்க என்று கேட்டுக்கொண்டேன். [8,152]

அற்றாக நின்பாலென் றருள்செய்தான் அம்முறையே
கற்றாவின் ஏறுயர்த்த கண்ணுதலோன் முழுதுலகும்
பெற்றாளை யமுனையென்னும் பெருநதியில் உய்ப்பநம்பால்
உற்றாள்மற் றெஞ்ஞான்றும் உணர்வினொடு வைகினளால். …… 9

நின்பால் அற்று ஆக என்று அருள் செய்தான் உன்னிடம் அவ்வாறாகுக என்று வரந்தந் தருளினார்; அம் முறையே – அவ் வரத்தின் வண்ணமே, கற்றாவின் எறு உயர்த்த கண்ணுதலோன் – ஆனேறாகிய கொடியை உயர்த்தியருளிய சிவபெருமான், முழுதுலகும் பெற்றாளை யமுனை எனும் பெருநதியில் உய்ப்ப – எல்லா உலகங்களையும் பெற்றருளிய தேவியைக் காளிந்தி நதிக்கண் அனுப்ப, நம்பால் உற்றாள் – தேவி நம்மிடம் நம் மகளாய் வந்து, எஞ்ஞான்றும் உணர்வினொடு வைகினள் – வந்தகாலந் தொட்டு எக்காலத்திலும் முன்னை உணர்வோடு இருந்தாள்.
கற்றா, ஆன் என்னும் பொருட்டு [9,152]

மாதவமோர் சிலவைகல் பயின்றுமதிக் கோடுபுனை
ஆதிதனக் கன்பினளாய் அருந்துணைவி யாகின்றாள்
பேதையென நினையற்க பெருமாட்டி தனையென்னக்
காதலிவிம் மிதமெய்திக் கரையிலா மகிழ்சிறந்தாள். …… 10

ஓர் சில வைகல் மாதவம் பயின்று – ஒரு சிலதினம் தவஞ் செய்து, மதிக் கோடு புனை ஆதி தனக்கு அன்பினளாய் – இள்ம்பிறையை அணிந்த ஆதியாகிய சிவபெருமானுக்கு அன்புடையவளாய், அரும் துணைவி ஆகின்றாள் – அரிய சத்தியாகப் போகின்றாள்; பெருமாட்டி தனை பேதை நினையற்க – இவ்வாறான எம்பெருமாட்டியை பேதையாகிய சிறுமெயென்று கருதற்க; என்ன – என்று தக்கன் கூற, காதலி விம்மிதம் எய்தி கரை இலா மகிழ்சிறந்தாள் – காதலாகிய வேதவல்லி ஆச்சரியமுற்று அளவில்லாத மகிழ்ச்சியிற் சிறந்தாள். [10,152]

இந்நிலைசேர் முதுகுரவர் ஏவலினால் சிலதியராங்
கன்னியர்கள் சூழ்போதக் கடிமாடம் போந்துமையாள்
சென்னிநதி புனைந்தபிரான் திருநாமம் உள்ளுறுத்தி
நன்னியமந் தலைநின்று நாளுநனி நோற்கின்றாள். …… 11

இந்நிலைசேர் முது குரவர் ஏவலினால் – இத்தன்மையரான அன்னை தந்தையாரின் கட்டளையினால், சிலதியராம் கன்னியர்கள் சூழ போத – சேடியர் ஆகிய கன்னியர்கள் சூழ்ந்துவர, கடிமாடம் போந்து – காவலினையுடைய தவமாடத்தை அடைந்து, உமையாள் – உமாதேவியார், சென்னி நதி புனைந்த பிரான் திருநாமம் உள்ளுறுத்தி – சிரசிற் கங்கையைத் தரித்த சிவபெருமானுடைய திருநாமமாகிய ஸ்ரீ பஞ்சாட்சரத்தை மனசிற் பதித்து, நல் நியமம் தலைநின்று – நல்லமதியத்திலே தலைப்பட்டு நின்று, நாளும் நோற்கின்றாள் – நடோறும் பெரிதுந் தவம் புரிகின்றார். [11,153]

வேறு

ஈண்டுறு மடவார் சூழ இம்முறை இருத்த லோடும்
ஆண்டுபன் னிரண்டு சென்ற அம்பிகைக் கனைய காலை
வேண்டிய வேண்டி யாங்கு விரதருக் குதவும் வண்மை
பூண்டிடு பரமன் அன்னாள் புரிந்திடு தவத்தைக் கண்டான். …… 12

ஈண்டுறு மடவார் சூழ – நெருங்கிய மாதர்கள் சூழ, இம்முறை இருத்த லோடும் – இவ்வாறு தவஞ் செய்துகொண்டிருக்க, அம்பிகைக்கு ஆண்டு பன்னிரெண்டு சென்ற – உமாதேவியாருக்கு வயசு பன்னிரெண்டு முற்றியது; அனைய காலை – அப்பொழுது, விரதருக்கு வேண்டிய வேண்டியாங்கு உதவும் வண்மை பூண்டிடும் பரமன் – தவவிரதம் பூண்டோருக்கு விரும்பியவைகளை விரும்பியவாறே வழங்கும் வள்ளன்மையைத் தமக்கு இயல்பான குணமாகப் பூண்டருளிய சிவபெருமான், அன்னாள் புரிந்திடும் தவத்தைக் கண்டான் – அவ்வுமாதேவியார் மேற்கொண்ட தவத்தைத் திருவுளங் கொண்டருளினார் [12,153]

கண்டு மற்றவளை ஆளக் கருதியே கயிலை யென்னும்
விண்டினை இகந்து முந்நூல் வியன்கிழி தருப்பை யார்த்த
தண்டுகைக் கொண்டு வேதத் தலைநெறி ஒழுக்கம் பூண்ட
முண்டவே தியனில் தோன்றி முக்கண்எம் பெருமான் வந்தான். …… 13

கண்டு – உமாதேவியாரின் தவத்தை திருவுளங்கொண்டு, அவளை ஆளக் கருதி – அவ் வுமாதேவியாரை ஆட்கொண்டருளக் கருதி, கயிலை என்னும் விண்டினை இகந்து – கயிலாயம் என்னும் மலையை நீங்கி, முந்நூல் வியன்கிழி தருப்பை ஆர்த்த தண்டு கைக்கொண்டு – முப்புரிநூல் சிறந்த கோவணம் தருப்பை என்னும் இவைகளைக் கட்டிய ஒரு தண்டத்தைக் கையிற் பிடித்து, வேதத தலைநெறி ஒழுக்கம் பூண்ட – வேதத்திற் சொல்லப்பட்ட முதல் நிலையான பிரமசரிய ஒழுக்கம் பூண்ட, மூண்ட வேதியனின் தோன்றி – திரிபுண்டரம் அணிந்த பிராமணைனைப்போல வேடங்கிண்டு, முக்கன் எம்பெருமான் வந்தான் – மூன்று கண்களையுடைய சிவபெருமான் எழுந்தருளீனார் [13,154]

தொக்குலாஞ் சூலத் தண்ணல் தொல்புவி உய்ய வேதச்
செக்கர்நூ புரத்தாள் பின்னுஞ் சேப்புற மண்மேற் போந்து
தக்கமா புரத்தின் நண்ணிச் சங்கரி யென்னுந் தொல்பேர்
மைக்கணாள் நோற்குந் தெய்வ மல்லல்மா ளிகையிற் புக்கான். …… 14

தொக்கு உலாம் சூலத்து அண்னல் – எங்கும் வியாபித்து விளங்குகின்ற சூலத்தினையுடைய சிவபெருமான், தொல்புவி உய்ய – தொன்மையாகிய பூமி உய்யும்பொருட்டு, வேத நூபுரச் செக்கர் தாள் – வேதமாகிய சிலம்பணிந்த சிவந்த திருவடிகள், பின்னும் சேப்புற மண்மேற் போந்து – மேலும் சிவக்கும் படி மண்ணில் நடந்து, தக்க மா புரத்தின் நண்ணி – தக்கபுரியை அடைந்து, சங்கரி என்னும் தொல்பேர் – சுகஞ் செய்தலால் சங்கரி என்கின்ற பழைமையான பெயர் படைத்த, மைக்கணாள் நோற்கும் – மை தீட்டிய கண்கலையுடைய உமாதேவியார் தவஞ் செய்யும், தெய்வ மல்லல் மாணிகையில் புக்கான் – தெய்வீகமான பெருமை பொருந்திய மாளிகையின்கட் சென்றருளினார். [14 ,154]

அன்னைநோற் கின்ற கோட்டத் தணுகியே அளப்பில் மாதர்
முன்னுறு காவல் போற்றும் முதற்பெருங் கடையிற் சாரக்
கன்னியர் எவரும் வந்து கழலிணை பணித லோடும்
என்னிலை தலைவிக் கம்ம இயம்புகென் றிசைத்து நின்றான். …… 15

அன்னை நோற்கின்ற கோட்டத்து அணுகி – மாதாவாகிய உமாதேவியார் தவஞ்செய்கின்ற தவச்சாலையை அடைந்து, அளப்பு இல் மாதர் முன் உறு காவல் போற்றும் – அளவிலாத பெண்கள் முற்பட்டுக் காவலைச் செய்கின்ற, மூத்த பெருந் கடையிற் சார – பெரிய முதற் கடைவாசலிற் செல்ல, கன்னியர் எவரும் வந்து கழல் இணை பணிதலோரும் – பெண்கள் அனைவரும் வந்து தமது திருவடிகளை வணங்க, என் நிலை தலைவிக்கு இயம்புக என்று இசைத்து நின்றான் – எமது வருகையை உமது தலைவிக்கு உரைப்பீராக என்று திருவாய்மலர்ந்தருளி நின்றார். [15,154]

நிற்றலுங் கடைகாக் கின்ற நேரிழை மகளிர் சில்லோர்
பொற்றொடி உமைபால் எய்திப் பொன்னடி வணங்கி ஈண்டோர்
நற்றவ மறையோன் நின்பால் நண்ணுவான் விடுத்தான் என்ன
மற்றவன் தன்னை முன்கூய் வல்லைநீர் தம்மின் என்றாள். …… 16

நிற்றலும் – அவ்வந்தணர் வாசலில் நிற்க, கடை காக்கின்ற நேர் இழை மகளிர் சில்லோர் – வாசலைக் காக்கின்ற இயைந்த ஆபரணத்தை அணிந்த பெண்கள் சிலர், பொற்றொடி உமைபால் எய்தி – பொன்னாலய வளையலையணிந்த உமாதேவியாரிடம் சென்று, பொன் அடி வணங்கி – அழகிய திருவடிகளை வணங்கி, ஈண்டு ஓர் நல் தவம் மறையோன் – இவ்விடத்தில் ஒரு நல்ல தவத்தையுடைய அந்தணர், நின்பால் நண்ணுவான் – இவ்விடத்திலே ஒரு நல்ல தவத்தையுடைய அந்தணர், நின்பால் நண்ணுவான் – தேவியாகிய நும்மை அடையும்பொருட்டு, விடுத்தான் என்ன – எம்மை நும்பால் அனுப்பினார் என்று கூற, அவன் தன்னை வல்லை கூயி – அவ்வந்தணரை விரைந்தழைத்து, நீர் முன் தம்மின் என்றாள் – நீவிர் என்முன் கொண்டுவாருங்கள் என்று பணித்தார். [18,155]

தம்மினீர் என்ற லோடுந் தாழ்ந்தனர் விடைபெற் றேகி
அம்மினேர் கின்ற நாப்பண் அரிவையர் கடைமுன் னேகி
வம்மினோ அடிகள் எம்மோய் வரவருள் புரிந்தாள் என்னச்
செம்மலும் விரைவிற் சென்று தேவிதன் னிருக்கை சேர்ந்தான். …… 17

தம்மில் நீர் என்றலோடும் – நீவிர் அழைத்து வாருங்கள் என்று கூறியவுடன், தாழ்ந்தனர் விடை பெற்று ஏகி -வணங்கி விடைபெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டகன்று, அம் மின் நேர்கின்ற நாப்பண் அரிவையர் கடை முன் ஏகி – அழகிய மின்னலை ஒத்த இடையினையுடைய அப் பெண்கள் தலைவாய் தலிற் சென்று, அடிகள் வம்மின் – அடிகாள் வருக, எம்மோய் வர அருள் புரிந்தாள் என்ன – எம்மன்னை அங்கே அடிகள் எழுந்தருளத் திருவுளம் செய்த்தாள் என்று விண்ணப்பிக்க, செம்மலும் விரைவிற் சென்று – இறைவராகிய அந்தணரும் விரைந்து சென்று, தேவி தன் இருக்கை சேர்ந்தான் – இறைவி தவஞ்செய்யுந் தவச்சாலையை அடைந்தார்.[17,155]

தேவர்கள் தேவன் அங்கோர் சீர்கெழு மறையோன் போலாய்
மேவிய காலை அம்மை விரைந்தெதிர் ஏகி மற்றென்
காவலர் தம்பால் அன்பர் இவரெனக் கருதி அன்னான்
பூவடி வணங்கி வேண்டும் பூசனை புரிந்து நின்றாள். …… 18

தேவர்கள் தேவன் அங்கு ஓர் சீர்கெழு மறையோர் போலாய் மேவிய காலை – தேவதேவரான சிவபெருமான் அவ்விடத்தில் அருட்செல்வம் பொருந்திய ஒரு பிராமணரைப் போன்ற வடிவத்தை உடையவராய் அடைந்தபோது, அம்மை விரைந்து எதிர் ஏகி – உமாதேவியார் விரைவாக எதிரே சென்று, இவர் என் காவலர் தம்பால் அன்பர் எனக் கருதி – இப்பிராமணர் எமது நாயகரான சிவபெருமான் மீது அன்புடையார் என்று கருதி, அன்னான் பூ அடி வணங்கி வேண்டும் பூசனை புரிந்து நின்றாள் – அவருடைய மலர் போன்ற பாதங்களை வணங்கிச் செய்யவேண்டுவதாகிய பூசனையைச் செய்து நின்றார். [18,155]

நேயமொ டருச்சித் தேத்தி நின்றவள் தன்னை நீல
ஞாயிறு நிகர்த்த மேனி நகைமதி முகத்தாய் ஈண்டியாம்
ஏயின தொன்றை வெஃகி விரைந்தருள் புரிதி என்னின்
ஆயது புகல்வம் என்ன அம்மையிங் கிதனைச் சொல்வாள். …… 19

நேயமொடு அருச்சித்து ஏத்தி நின்றவள் தன்னை – அன்போடு பூசித்து வணங்கி நின்ற தேவியை, நீல ஞாயிறு நிகர்த்த மேனி நகை மதி முகத்தாய் – நீல நிறமானதொரு ஞாயிற்றினை ஒத்த திருமேனியையும் ஒளி செய்கின்ற சந்திரனை யொத்த முகத்தையு முடைய பெண்ணே, யாம் ஈண்டு மேயினது ஒன்றை வெஃகி – யாம் இவ்விடத்துக்கு வந்தது ஒன்றைப் பெற விரும்பியேயாம்; விரைந்து அருள் புரிதி என்னின் – விரைந்து யாம் விரும்பியதை அநுக்கிரகஞ் செய்வாயாயின், ஆயது புகல்வம் என்னை – அதனைச் சொல்லுவோம் என்று கூற, அம்மை இங்கு இதனைச் சொல்லுவாள் – உமா தேவியார் இதனைச் சொல்லுவார். [19,156]

எனக்கிசை கின்ற தொன்றை இசைத்தியே என்னின் இன்னே
நினக்கது கூடும் இங்ஙன் நினைத்ததென் மொழிதி என்ன
உனைக்கடி மணத்தின் எய்த உற்றனன் அதுவே நீஎன்
தனக்கருள் புரியு மாறு தடுத்தெதிர் மொழியல் என்றான். …… 20

எனக்கு இசைகின்றது ஒன்றை இசைத்தியே என்னின் – என்னால் உதவக் கூடியதொன்றைக் கூறுவிராயின், இன்னே நினக்கு அது கூடும் – இப்பொழுதே உமக்கு அது கைகூடும்; இங்கன் நினைத்தது என் மொழிதி என்ன – இவ்விடத்துப் பெற்றுக்கொள்ள எண்ணியது என்னை உரைப்பீராக என்று வினவ, உனைக் கடிமணத்தின எய்த உற்றனன் – உன்னைத் திருமணஞ் செய்துகொள்ள வந்தோம்; அதுவே நீ என் தனக்கு அருள் புரியுமாறு – அதுவே நீ எமக்கு அநுக்கிரகஞ் செய்ய வேண்டுவது; தடுத்து எதிர் மொழியல் என்றான் – இதனைத் தடுத்து எதிர்வார்த்தை ஆடாதே என்றார். [20,156]

வேறு

அத்தன் ஈதுரைத் தலோடும் அம்மை அங்கை யாற்செவி
பொத்தி வெய்தெனக் கனன்று புந்தி நொந்து யிர்த்துநீ
இத்தி றம்புகன்ற தென்னை என்னை யாளு கின்றதோர்
நித்தன் வந்துவதுவை செய்ய நீள்த வஞ்செய் தேனியான். …… 21

அத்தன் ஈது உரைத்தலோடும் – சிவபெருமானாகிய பிராமணா இவ்வாறு கூறுதலும், அம்மை அங்கையாற் செவி பொத்தி – உமாதேவியார் அகங்கைகளாற் செவிகளைப் பொத்தி, வெய்து எனக் கனன்று – வெம்மை யுடைத்தாகக் கோபித்து, புந்தி நொந்து – மனம் நொந்து, உயிர்த்து – பெருமூச்சு விட்டு, என்னை ஆளுகின்றது ஓர் நித்தன் வந்து வதுமை செய்ய – என்னை ஆளுகின்றது ஒப்பற்ற நித்தராகிய சிவபெருமான் எழுந்தருளிவந்து திருமணஞ் செய்யும்பொருட்டு, யான் நீள் தவம் செய்தேன் – யான் மிக்க தவத்தினைச் செய்தேன் அங்ஙனமாக, நீ இந்திறம் புகன்றது என்னை – நீர் இவ்வாறு கூறியதென்னை?
என்னலொடும் என வருஞ் செய்யுளில் முடிக்க. [21,157]

என்ன லோடும் இனையன் என்றி யாருமென்றும் இறையுமே
முன்னொ ணாதுநின்ற ஆதி முதல்வன் நின்னை வதுவையால்
மன்னு கின்றதரிது போலும் மாத வங்கள் ஆற்றியே
கன்னி நீவருந்தல் என்று கழற மாது புகலுவாள். …… 22

என்னலொடும் – உமாதேவியார் இவ்வாறு கூறுதலும், யாரும் என்றும் இனையன் என்று இறையும் முன் ஓணாது நின்ற ஆதி முதல்வன் – யாவரும் எக்காலத்தும் இத்தன்மையர் என்று சிறிதும் நினைக்க முடியாமல் நின்ற முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான், நின்னை வதுவையால் மன்னுகின்றது அரிது போலும் – உன்னைத் திருமணமுறாஇயால் மேவுவது அரிதுபோலும்; கன்னி நீ மாதவங்கள் ஆற்றி வருந்தல் என்று கழற கன்னிகையே நீ பெரிய தவங்களைச் செய்து வருந்தாதே என்று இடித்துரைக்க, மாது புகலுவாள் – உமாதேவியார் கூறுவார்.
போலும் ஒப்பில் போலி [22, 157]

பரம னேவிரும்பி வந்து பாரின் மாம ணஞ்செய
அரிய மாதவங்கள் செய்வல் அன்ன தற்கு முன்னவன்
வருகி லாதுதவிர்வன் என்னின் வலிதின் ஆவிநீப் பன்யான்
சரதம் ஈது பித்தனோ சழக்கு ரைத்தி ருத்திநீ. …… 23

பரமனே பாரில் விரும்பி வந்து மாமணம் செய அரிய மாதவங்கள் செய்வல் – சிவபெருமானே இந்தப் பூமியில் விரும்பி எழுந்தருளித் திருமணம் செய்யும்பொடுட்டு அரிய பெரிய தவங்களைச் செய்வேன், அன்னதற்கு முன்னவன் வருகிலாது தவிர்வன் என்ன்னின் – அத்தவத்திற்கு முதல்வராகிய சிவபெருமான் வாராதொழிவாராயின், யான் வலிதின் ஆவி நீப்பன் – யான் வலிந்து உயிரை நீத்துவிடுவேன்; ஈது சரதம் – இது சத்தியர்ம்; நீ பித்தனோ – நீர் பித்துப்பிடித்தவரோ, சழக்கு உரைத்து இருத்தி – பொய் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்
சழக்கு – நீதிக்கு மாறானது [22, 157]

போதி போதிஎன் றுதானொர் புடையின் ஏக உவகையாய்
மாது நின்தன் அன்பு முள்ள வன்மை தானும் நன்றெனா
ஆதி தேவன்ஏ னையோர்கள் அறிவு றாத வகையவள்
காதல் நீடு தனதுதொல் கவின்கொள் மேனி காட்டினான். …… 24

போதி போதி என்று தான் ஓர் புடையின் ஏக – இவ்விடத்தினின்றும் அகன்று போக என்று சொல்லிக்கொண்டு தாம் வேறொரு பக்கத்தே செல்ல, உவகையாய் – மகிழ்வுடையவராய், மாது நின் தன் அன்பும் உள்ளவன்மை தானும் நன்று எனா – பெண்ணே உன்னுடைய அன்பும் மன வுறுதியும் நன்று என்று கூறி, ஆதி தேவன் ஏனையோர் அறிவுறா வகை – ஆதியாகிய சிவபெருமான் பிறர் அறியாவண்னம், அவள் காதல் நீடு தனது தொல் கவின்கொள் மேனி காட்டினான் – அவ்வுமாதேவியாரது காதலை மிகுவிக்கின்ற தமது தொன்மையாகிய அழகினையுடைய திருமேனையைக் காட்டியருளினார். [24,158]

ஆதி தன்தொல் உருவுகாட்ட அமலை கண்டு மெய்பனித்
தேதி லாரெ னாநினைந் திகழ்ந்த னன்எ னாவவன்
பாத பங்க யங்களிற் பணிந்து போற்றி செய்தியான்
பேதை யேனு ணர்ந்திலேன் பிரான்ம றைந்து வந்ததே. …… 25

ஆதிதன் தொல் உருவு காட்ட – சிவபெருமான் தமது தொன்மையாகிய திருமேனியைக் காட்ட, அமலி கண்டு – நின்மலையாகிய உமாதேவியார் தரிசித்து, மெய் பனித்து – சரீரம் நடுங்கி, ஏதிலார் எனா நினைந்து இகழ்ந்தனன் எனா – அயலவரென்று தேவரீரை இகழ்ந்தேனே என்று, அவன் பாதபங்கயங்களில் பணிந்து வணங்கித் துதித்து, யான் பேதையேன் – யான் அறிவிலாதவள், பிரான் மறைந்து வந்தது உணர்ந்திலேன் – தேவரீர் மறைந்து வந்ததை அறியேன்.

உன்ன ருட்கண் எய்துமேல் உணர்ச்சி யெய்தி நிற்பன்யான்
பின்னொர் பெற்றி இல்லையாற் பிழைத்த துண்டு தணிதிநீ
என்னு நற்றவத் திதன்னை இனிதின் எந்தை கண்ணுறீஇ
நின்னி யற்கைநன் றுநன்று நீது ளங்கல் என்றனன். …… 26

உன் அருட்கண் எய்துமேல் – தேவரீருடைய கிருமா நோக்கம் கிடைக்குமானால், யான் உணர்ச்சி எய்தி நிற்பன் – நான் ஆறிவைப் பொருந்தியிருப்பேன்; பின் – கிருபாநோக்கம் கிடையாதவழி, ஓர் பெற்றி இல்லை – எனக்கென்றொரு சுதந்திரமாகிய தன்மை இல்லை; பிழைத்தது உண்டு – என்னிலைமையை யானறியாது தேவரீருக்குப் பிழை செய்ததுண்டு; நீ தணிதி – தேவரீர் கோபஞ் செய்யாது பொறுத்தருள்க; என்னும் நல் தவத்தி தன்னை – என்றிங்கணம் குறையிரந்து பிரார்த்திக்கின்ற நல்ல தவத்தையுடைய உமாதேவியாரை, எந்தை இனிது கண்ணுறிஈ – எம்பெருமான் இனிது கிருபா நோக்கஞ் செய்து, நின் இயற்கை நன்று – உமையே உன் இயற்க்கை நல்லல்து! நல்லது!, நீ துளங்கள் என்றனன் – நீ அஞ்சற்க என்று அபயம் அளித்தருளினார்.

உன்னிடை தனினும்யாம் உறுதி இல்வழி
நின்னுயிர் உணர்வுறா நினக்குக் காட்டுது
மன்னது காண்கெனா’ க் காட்டியவழிக் கண்டாராதலின் தமக்கென ‘ஓர் பெற்றி’ இன்மையை உணர்ந்து,முன் தம்மைத்தாம் வியந்தமைக்கு நாணிப், பிழைத துண்டு என்றார்ன்க . [26-159]

என்ற நாத னைப்பினும் இறைஞ்சி யெம்பி ராட்டிபால்
நின்ற மாதரைத் தனாது நேத்தி ரத்தின் நோக்கலாள்
ஒன்றும் உன்னல் செய்திலாள் உலப்பில் எந்தை தொல்புகழ்
நன்று போற்றெடுத் துநிற்ப நாட்டம் நீரு குத்தரோ. …… 27

எம்பிராட்டி – எம்பெருமாட்டியாகிய உமாதேவியார், என்ற நாதனைபினும் இறைஞ்சி – என்றருளிச் செய்த சிவபெருமானைப் பின்னரும் வணங்கி, பால் நின்ற மாதரை தனாது நேத்திரத்தில் நோக்கலாள் – பக்கத்தே நின்ற பெண்களைத் தமது கண்களால் நோக்காதவராய், ஒன்றும் உன்னல் செய்திலாள் – மற்றொன்றை நிலையாதவராய், எந்தை உலப்பு இல் தொல் புகழ்நன்று போற்றெடுத்து – எம்பெருமானுடைய அளவற்ற தொன்கையாகிய புகழ்களை எடுத்து நன்கு துதித்து, நாட்டம் நீர் உகுத்து நிற்ப – கண்ணீர் சொரிந்துகொண்டு நிற்ப.

கண்டு பாங்க ராயமாதர் கன்னி எம்மை நோக்கலாள்
மண்டு காதல் அந்தணாளன் மாயம் வல்ல னேகொலோ
பண்டு நேர்ந்துளா ரையுற்ற பான்மை போலும் மேலியாம்
உண்டு தேரு மாறதென் றுளத்தில் ஐயம் எய்தினார். …… 28

பாங்க ராய மாதர் கண்டு – பக்கத்தில் நின்ற தோழியர் கூட்டத்தினர் இச் செயலைக் கண்டு, கன்னி எம்மை நோக்கலாள் – நமது கன்னிகையானவர் நம்மைப் பார்க்கின்றாரில்லை; மண்டு காத அந்தணாளன் மாயம் வல்லன் கொல் – மிக்க காதலினையுடைய இவ்வந்தணர் மாயத்தில் வல்லவர் போலும்; பண்டு நேர்ந்துளாரை உற்ற பான்மை போலும் – இவர்கள் நிலைமை முன்னே எதிர்ப்பட்டார் இருவர் ஒருவரை ஒருவர் சந்தித்த தன்மையை ஒக்கும்; மேல் யாம் தேருமாறு உண்டு – மேல யாம் ஆராயதற்பாலது உளது; என்று உளத்தில் ஐயம் எய்தினார் – என்றிவ்வாறு தம் மனத்தில் ஐயங் கொண்டார்கள். [28,159]

சிலதி யர்க்குள் விரைவிரைந்து சிலவர் சென்று தக்கனென
றுலகு ரைக்கும் ஒருவன்வைகும் உறையுள் நண்ணி உன்மகள்
நிலைமை ஈது கேளெனா நிகழ்ந்த யாவும் முறையினால்
வலிது கூற மற்றவன் மனத்தி லோர்தல் உற்றனன். …… 29

சிலதியர்க்குள் சிலவர் விரைந்து சென்று – தோழியருட் சிலர் விரைந்து சென்று, தக்கன் என்று உலகு உரைக்கும் ஒருவன் வைகும் உறையுள் நண்ணி – தக்கன் என்று உலகினர் கூறுகின்ற ஒரு தனி முதல்வன் வீற்றிருக்கின்ற இருப்பிடத்தை அடைந்து, உன் மகள் நிலைமை ஈது – உன்னுடைய புதல்வியின் நிலை இது, கேள் – எனா – அதனைக் கேட்பாயாக என்று, நிகழ்ந்த யாவும் முறையினால் வலிது கூற – அங்கே நிகழ்ந்தன அனைத்தையும் முறையாக வலிந்து சொல்ல, அவன் மனதில் ஓர்தல் உற்றனன் – அத்தக்கன் மனத்தால் நடந்தவைகளை அறிவான் ஆயினான் .
அவன் கேளாமலே கூறினமையின் வலிது கூற என்றார். [29,160]

போத நீடு புந்தியால் புலப்ப டத்தெ ரிந்துழி
ஆதி யந்த மின்றிநின்ற அண்ணல் வந்த தாகலும்
ஏதி லாம கிழ்ச்சிபெற் றெழுந்து துள்ளி யான்பெறு
மாதை அங்கவற் களிப்பன் வதுவை ஆற்றி என்றனன். …… 30

போதி நீடு புந்தியால் தெரிந்துழி – ஞானம் மிகுந்த புத்தியினால் ஆராய்ந்துபோது, புலப்பட – நடந்தவை அனைத்தும் புலம் ஆக, ஆதி அந்தம் இன்றி நின்ற அண்ணல் வந்தது ஆகலும் – ஆதியும் அந்தமும் இல்லாமல் நின்ற இறைவனன்றோ அங்கு எழுந்தருளியது தோன்றுதலும், ஏது இலா மகிழ்ச்சி பெற்று – ஒப்பில்லாத மகிழ்ச்சி அடைந்து, எழுந்து துள்ளி – இருக்கை விட்டெழுந்து கூத்தாடி, யான் பெறும் மாதை – யான் பெற்ற புதல்வியை, அங்கு அவற்கு வதுமை ஆற்றி அளிப்பன் என்றனன் – அச் சிவபெருமானுக்குத் திருமணஞ் செய்து கொடுப்பேன் என்று கூறினான்

உமை தவம்புரி படலம் முற்றிற்று
ஆகத் திருவருத்தம் – 292
தட்சகாண்டம்