13 ததீசி யுத்தரப் படலம்

    13. ததீசி யுத்தரப் படலம்

    இந்த வண்ணமத் ததீசிமா முனிவரன் இயம்பக்
    கந்த மாமலர்க் கடவுள்சேய் நகைசெய்து கானிற்
    சிந்து மென்பொடு சிரத்தொகை அணியுமோ தேவர்
    வெந்த சாம்பரும் பூசுமோ பரனெனும் மேலோன். …… 1

       இந்த வணணம் அத்ததீசி மா முனிவரன் இயம்ப – இவ்வண்ணம் அந்தத் ததீசி மாகாமுனிவர் கூறியருள, கந்த மா மலர்க் கடவுள் சேய் நகை செய்து-வாசனை பொருந்திய சிறந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமதேவரின் புதல்வனான தக்கன் சிரித்து, பரன் எனும் மேலொம் – பரம்பொருள் என்று கூறும் மேலோராகிய கடவுள், கானில் சிந்தும் என்பொடு சிரத்தொகை அணியுமோ – சுடுகாட்டிற் சிதறுண்டு கிடக்கும் எலும்புகளையுந் தலைமாலைகளையும் அணிவாரா; தேவர் வெந்த சாம்பரும் பூசுமோ – தேவர்கள் வெந்ததனாலுண்டான சாம்பலையும் பூசுவாரோ. 

    பரம்பொருளாயின் இங்ஙனஞ் செய்யாரே என்றாம் என்க. மேலும் இவ்வாறு கொள்க. [ப 1/137]

    கழிந்த தீயுடல் ஏந்தியே திரியுமோ கானில்
    இழிந்த கேசமுந் தரிக்குமோ ஏனத்தின் எயிறு
    மொழிந்த கூருமத் தோடுமேற் கொள்ளுமோ உலகம்
    அழிந்தி டும்படி உயிர்களை முடிக்குமோ அமலன். …… 2

    அமலன் – அநாதி மலமுத்தரான கடவுள், தீ – தீந்த, கழிந்த உடல் ஏந்தி திரியுமோ – கழியுடன் முழு வெலும்பாகிய கங்காளத்தை ஏந்தித் திரிவாரோ; கானில் – மயானத்தில், இழிந்த – தலையினிழிந்த, கேசமும் தரிக்குமோ – மயிரையுந் தரிப்பாரா; ஏனத்தின் எயிரும் – பன்றியின் கொம்பையும், ஒழிந்த கூருமத்து ஓடும் – இறந்துபட்ட ஆமையின் ஓட்டையும், மேற்கொள்ளுமோ – அணிவாரோ; உலகம் அழிந்திடும்படி – உலகம் அழியும்படி, உயிர்களை முடிக்குமோ – உயிர்களைச் சங்கரிப்பாரா.
    ஒழந்த என்பதற்குத் தவிர்ந்த என்றுரைப்பினுமாம். [ப 1/137]

    புலியின் ஈருரி உடுக்குமோ தந்தியின் புன்றோல்
    வலிய தன்புயம் போர்க்குமோ செந்தழல் மழுமான்
    இலைகொள் முத்தலை வேற்படை ஏந்துமோ எங்கும்
    பலியு மேற்குமோ நிருத்தமுஞ் செய்யுமோ பகவன். …… 3

    பகவன் – அறுகுணங்களையுடயவராகிய கடவுள், புலியின் ஈர் உரி உடுக்குமோ – புலியினது உரித்த தோலை உடுப்பாரா; தந்தியின் புன் தோல் வலிய தன் புயம் போர்க்குமோ – யானையினது புன்மையாகிஅய் தோலை வலிய தமது புயத்தின்மீது போர்ப்பாரா; செந்தழல் மழு மான் இலைகொள் முத்தலை வேற்படை ஏந்துமோ – செந்நிறம் பொருந்திய அக்கினியையும் மழுவையும்மானையும் இலைவடிவமான மூன்று தலைகளையுடைய சூலப்படையையும் ஏந்துவாரா; எங்கும் பலியும் ஏற்குமோ – எவ்விடத்திலும் பிச்சையும் ஏற்பாரா; நிருத்தமும் செய்யுமோ – கூத்தும் ஆடுவாரா.

    வேல் அயுதப் பொது. வேற்படை, படை என்னும்பொருட்டு [ப1/137]

    மிக்க சாரதர் படையெனத் திரியுமோ விடமே
    கக்கும் வெம்பணி பூணுமோ வெண்டலை கலமாச்
    செக்கர் மாமுடி தரிக்குமோ அம்பரந் திசையா
    நக்க னாகுமோ வேற்றுருக் கொள்ளுமோ நாதன். …… 4

    நாதன் – முதல்வராகிய கடவுள், மிக்க சாரதர் படை எனத் திரியுமோ- மிக்க பூதர்களைத் தமக்குச் சேனைகள் என்று கொண்டுத் திரிவாரோ; விடமே கக்கும் வெம்பணி பூணுமோ – விடத்தையே கக்குகின்ற கொடிய பாம்புகளைப் பூண்பாரோ; வெண்டலை கலமாச் செக்கர் மாமுடி தரிக்குமோ – வெண்டலையை ஆபரணமாகச் நெந்நிறம்பொருந்திய பெரிய முடியின்மீது தரிப்பாரா; திசை அம்பரமா நக்கன் ஆகுமோ – திக்குக்கள் வஸ்திரமாக நிருவாணி யாவாரோ; வேற்றுருக் கொள்ளுமோ – பலவேறு உருவங்களைக் கொள்ளுவாரா [ப 2/137]

    விடையும் ஏறுமோ ஆலமுங் கொள்ளுமோ வீந்தோர்
    சுடலை தன்னினும் ஆடுமோ ஒருத்தியைச் சுமந்தோர்
    மடம கட்கிடங் கொடுக்குமோ மகவையும் பெறுமோ
    கடிய தோர்குணம் படைக்குமோ பரமெனுங் கடவுள். …… 5

    பரம் என்னும் கடவுள் – பரம்பொருள் என்று சொல்லப்படுங் கடவுள், விடையும் ஏறுமோ – இடபத்திலும் ஏறுவாரா; ஆலமும் கொள்ளுமோ – நஞ்சையும் உண்பாரா; வீந்தோர் சுடலை தன்னினும் ஆடுமோ – இறந்தோரின் இடமாகிய சுடலையிம் ஆடுவாரா; ஒருத்தியைச் சுமந்து – ஒரு பெண்ணைத் தலையிற் சுமந்துகொண்டு, ஓர் மடகட்கு இடம் கொடுக்குமோ – மற்றொரு மடப்பம் பொருந்திய பெண்ணுக்கு இடங் கொடுபாரா; மகவையும் பெறுமோ – பிள்ளையையும் பெறுவாரா; கடியது ஓர் குணம் படைக்குமோ – குணங்களுக்குட் கடியதொரு குணமாகிய தாமத குணத்தையும் பொருந்துவாரா.
    இடம் – இடப்பாகம், இங்கே வேறு பொருள் தொனிக்கக் கூறப்பட்டது. [ப 2/137]

    ஆதலால் உங்கள் ஈசனோர் குணமிலன் அவனுக்
    கீத லின்றியாம் புரிகின்ற மகத்தவி எனலும்
    நாத னைக்கொலோ பழிக்குவன் இவனென நகையாக்
    கோதின் மாதவ முனிவரன் அழலெனக் கொதித்தான். …… 6

    ஆதலால் – இவ்வாற்றால், உங்கள் ஈசன் – நும்மனோர் வழிபடுங் கடவுள், ஓர் குணம் இலன் – சிறிதும் நற்குணம் இலாதவர்; அவனுக்கு யாம் புரிகின்ற மகத்து அவி ஈதல் இன்று – இப்படிப்பட்ட சிவனுக்கு யாஞ் செய்கின்ற யாகத்தில் அவிப்பாகங் கொடுத்தல் இல்லையாம்; எனலும் – என்றிவ்வாறு தக்கன் கூறுதலும், இவன் தாதனைக்கொலோ பழிக்குவன் என நகையா – இப் பதகன் பரம்பொருளாகிய சிவபெருமானையோ பழிப்பான் என்று சிரித்து, கோதில் மா தவ முனிவரன் – குற்றமற்ற மகா தவ சிரேட்டரான தசீசி முனிவர், அழல் எனக் கொதித்தான் – அக்கினிபோலக் கொதித்தார். [ப 3/137]

    தீர்த்தன் உண்மையை உணர்கிலன் இவனொடு சிறிதும்
    வார்த்தை கூறுதல் தகாதுமால் அயன்முதல் வானோர்
    ஆர்த்தசங் கத்தில் இகழ்ந்தவற் கெதிர்மொழி யறைய
    ஈர்த்த தென்னுளம் உணர்த்துவன் சிலவென இசைந்தான். …… 7

    தீர்த்தன் உண்மையை உணர்கிலன் – பரிசுத்தரான சிவபெருமானுடைய உண்மையை அறிய வல்லனல்லன்; இவனொடு சிறிதும் வார்த்தை கூறுதல் தகாது – இப்படிப்பட்டவனுக்கு சற்றேனும் வார்த்தையாடுதல் தகுதியன்று; ஆயினும், மால் அயன் முதல் வானோர் ஆர்த்த சங்கத்தில் இகழ்ந்தவற்கு – விஷ்ணு பிரமா முதலிய தேவர்கள் குழுமிய சபையில் எம்பெருமானை இகழ்ந்த இவனுக்கு, எதிர் மொழி அறைய என் உளம் ஈர்த்தது – மாறுத்தரம் வழங்கி என் மனம் என்னை இழுத்தது; ஆகையாயினாலே, சில உனர்த்துவன் என – சில சமாதனங்களை உணரச் செய்வேன் என்று , இசைந்தான் – தம்மைத் தாமே உடம்பாடு செய்தருளினார்.

    இந்த வாறிசைந் தெம்பெரு மான்றனக் கிவண்நீ
    நிந்தை போற்சில கூறினை நிமலனுக் கவைதாம்
    வந்த வண்ணமோர் சிறுவதும் உணர்ந்திலை மருண்டாய்
    புந்தி யில்லதோர் கயவநீ கேளெனப் புகல்வான். …… 8

    இந்தவாறு இசைந்து – இவ்வாறு தம்மை ஒருப்பாடு செய்துகொண்டு, எம்பெருமான் தனக்கு நிந்தைபோல் இவண் நீ சில கூறினை – எம்பெருமானுக்கு இழிவு போல இவ்விடத்தில் நீ சிலவற்றைக் கூறினாய்; நிமலனுக்கு அவைதாம் வந்தவண்ணம் ஓர் சிறுவதும் உணர்ந்திலை – மலரகிதரான கடவுளுக்கு அவைகள் வந்த இயல்பை ஒரு சிறிதும் அறிந்திலை; மருண்டாய் மயங்கினாய்; புந்தி இல்லது ஓர் கயவ நீ கேள் – புத்தியில்லாததொரு கயவனே நீ கேட்பாயாக; என புகல்வான் – என்று கூறியருளுவார். [ப 4/137]

    நிலவு கின்றதன் னருளுருக் கொண்டிடு நிமலன்
    தலைமை பெற்றிடு புங்கவர் தம்மைமுன் தந்தே
    உலகம் யாவையும் அளித்தருள் செய்திட உதவி
    அலகி லாவுயிர் யாவையும் அயன்கண்நின் றளிப்பான். …… 9

    நிலவுகின்ற தன் அருள் உருக் கொண்டிடு நிமலன் – விளங்குகின்ற தமது அருள்வடிவத்தைக் கொள்ளுகின்ற சிவபெருமான், முன் – சிருட்டியாரம்பத்தில், தலைமை பெற்றிடு புங்கவர் தம்மை தந்து – முதன்மை பொருந்திய பிரம விட்டுணுக்களைப் படைத்து, உலகம் யாவையும் அளித்து அருள் செய்திட உதவி – உலகம் முழுவதையும் படைத்துக் காக்கும்பொருட்டு உத்தியோகங்களை அவர்களுக்கு அநுக்கிரகஞ் செய்து, அயன்கண் நின்று – அவர்களுட் பிரமாவை அதிட்டித்து நின்று, அலகிலா உயிர் யாவையும் அளிப்பான் – எண்ணில்லாத உயிர்கள் யாவையும் படைத்தருளுவர்.
    அருளுருக் கொண்டிடு நிமலன் என்பதனால், அருள் வாயிலாகவே படைப்பாதித் தொழில்களை இயற்றியருளுவா ரென்பது பெற்றாம்.
    [ப 4/137]

    மாய வன்கண்நின் றவையெலாம் போற்றிமற் றவைக்குத்
    தூய துப்புர வருத்தியே மேல்வினை தொலைச்சி
    ஆய வற்றிலோர் பற்பல வீடுற அருளி
    மேய ஆருயிர் உலகெலாம் பின்னரே வீட்டும். …… 10

    மாயவன்கண் நின்று – விஷ்ணுவை அதிட்டித்து நின்று, அவை எலாம் போற்றி – படைக்கப்பட்ட அவ்வுயிர்க ளனைத்தையுங் காத்து, அவைக்கு தூய துப்புரவு அருத்தி – அவ்வுயிர்களுக்குத் தூய்மையான போகங்களை ஊட்டி, மேல் வினை தொலைச்சி – ஆகாமிய வினையை ஒழித்து, ஆயவற்றில் ஓர் பற்பல வீடு உற அருளி – அவ்வுயிர்களில் ஒரு பகுதியவாய பல உயிர்களுக்கு வீடு பேற்றைக் கொடுத்து, மேய ஆருயிர் – வீடு பெறாது எஞ்சியிருந்த அரிய உயிர்களையும், உலகு எலாம் – உலகமனைத்தையும், பின்னர் வீட்டும் – பின்னர் சங்கரித்தருளுவர்.
    துப்புரவுகளைத் துய்க்குங்கா லீட்டும் வினை மேல்வினை; அஃது ஆகாமியம். [ப4/137]

    அன்ன வேலையில் அவையெலாம் அழித்தபின் னளிப்போர்
    என்ன நின்றவர் தம்மையும் ஒடுக்குறும் இதற்பின்
    முன்ன ருள்ளதோர் ஏகமாய் உறையும்எம் மூர்த்தி
    பின்னும் இம்முறை புரிந்திடும் என்றும்இப் பெற்றி. …… 11

    அன்ன வேலையில் – அந்தச் சங்காரகாலத்தில், அவை எலாம் அழித்த பின் – அவை அனைத்தையும் அழித்த பின்பு, அளிப்போர் என்ன நின்றவர் தம்மையும் ஒடுக்குறும் – படைத்தல் காத்தல் செய்வோர் என்று சொல்லப்பட்டு நின்றோரானா பிரவ விட்டுணுக்களையும் ஒடுக்கியருளுவர்; இதன் பின் – இவ்வாறாய சங்காரத்தின் பின்பு, எம் மூர்த்தி முன்னர் உள்ளது ஓர் ஏகமாய் உறையும் – எமது கடவுள் முன்னரே உளதாயதொரு ஏக வஸ்துவாயிருப்பர்; பின்னும் – மீட்டும், இம்முறை என்றும் இப் பெற்றி புரிந்திடும் – இவ்வாறே எஞ்ஞான்றும் இப் பஞ்சகிருத்திய இயல்பைச் செய்தருளுவர். [ப 5/137]

    பரமன் இவ்வகை அடுந்தொறும் அடுந்தொறும் பலவாம்
    பிரம னாதியோர் என்பினைத் தரிக்குமப் பெரியோர்
    சிரமெலாந் தொடுத்த ணியலா அணிந்திடுஞ் சிகைதன்
    உரமு லாவுமுந் நூலென வேயணிந் துறையும். …… 12

    பரமன் இவ்வகை அடும்தொறும் அடும்தொறும் – கடவுள் இவ்வாறு சங்கரிக்குந்தோறும் சங்கரிக்குந்தோறும், பலவாம் பிரமன் ஆதியோர் என்பினைத் தரிக்கும் – அநேகர் ஆகிய பிரமர்கள் முதலியோரின் எலும்புகளைத் தரித்தருளுவர்; அப் பெரியோர் சிரம் எலாம் தொடுத்து அணியலா ஆணிந்திடும் – அந்த மேலோராகிய தேவர்களுடைய தலைகளையெல்லாந் தொடுத்து மாலையாக அணிந்தருளுவர்; சிகை தன் உரம் உலாவு முந்நூல் என அணிந்து உறையும் – அவர்களுடைய சிகைகளை மார்பிற் பொருந்திய பூணூலாக அணிந்து எழுந்தருளுவர்.

    என்பாதிகளை எம்பெருமான் தரிப்பதற்கு அவர் தவம் இருந்தவாறு பற்றி அவரை அப்பெரியோர் என்றார். அணியல் – மாலை, சிகை – மயிர்முடி. முந்நூலென என்பதற்கு முந்தூலையொப்ப என உரைப்பினும் அமையும்.
    [ப 5/137]

    அல்ல தங்கவர் தங்களை முத்தலை அயிலால்
    மெல்ல வேயெடுத் தேந்திடும் அவர்தமை விழியால்
    தொல்லை நாளின் நீறாக்கியும் புனைந்திடுந் தூயோன்
    மல்லல் மாதவம் அனையவர் இயற்றிய வகையால். …… 13

    அல்லது – இவ்வாறு செய்வதன்றி, தூயோர் – தூயோராகிய சிவபெருமான், தொல்லை நாளில் – அந்தச் சங்காரகாலத்தில், அங்கு அவர் தங்களை – அந்தப் பிரமாதி தேவர்களை, முத்தலை அயிலான் மெல்லவே எடுத்து ஏந்திடும் – முத்தலைச் சூலதினால் மெல்லென எடுத்து ஏந்துதலுஞ் செய்தருளுவர்; அவர்தமை விழியால் நீறாக்கியும் புனைந்திடும் – அவர்களை நெற்றிக் கண்ணக்கினியினால் நீறு செய்து பூசுதலுஞ் செய்தருளுவர்; மல்லல் மா தவம் அனையவர் இயற்றிய வகையால் – இவ்வாறு செய்தல் சிறந்த பெரிய தவத்தை அவர்கள் செய்த இயல்பினாலாம் என்க. [ப 6/137]

    ஆத லால்தனை வியப்பதற் கன்றவை அணிதல்
    ஈத லாதொரு திறமுள தியாவரும் எவர்க்கும்
    நாத னேயிவன் என்றுதன் பாங்கரே நண்ணித்
    தீதெ லாமொரீஇ முத்திபெற் றுய்ந்திடுஞ் செயலே. …… 14
    ஆதலால் அவை அணிதல் தனை வியப்பதற்கு அன்று – ஆகையினாலே என்பு முதலியவற்றை அணிவது தம்மை வியந்துகொள்ளுவதற்கு அன்று; ஈது அலாது ஒரு திறம் உளது – இஃதன்றி இவ்வாறு செய்தற்கு மற்றொரு காரணம் உளது; யாவரும் எவர்க்கும் நாதன் இவனே என்று – எல்லோரும் எவர்க்கும் பரமபதி இவரே என்று அறிந்து, தன் பாங்கர் நண்ணி – தமது பக்கலை அணுகி, தீது எலாம் ஒரீஇ – தீமைகளை யெல்லாம் நீங்கி, முத்தி பெற்று உய்ந்திடும் செயலே – வீடு பெற்று உய்தி கூடுதற்குபகாரமான அருட் செயலேயாம்.
    ஒருதிறம் உய்ந்திடும் செயலேயாம் என்க. [ப 6/137]

    என்பு நீறொடு கழியுடல் சிகைமுடி எனைத்தும்
    முன்ப ணிந்திடும் இயல்பினை முழுதுயிர்த் தொகைக்கும்
    அன்பு செய்திடுஞ் செயலிது வாமென அறிநீ
    பின்பு முள்ளதுங் கேண்மதி அகந்தையாற் பெரியோய். …… 15

    என்பு நீறொடு கழியுடல் சிகைமுடி எனைத்தும் – எலும்பு நீறு கங்காளம் சிகை தலை ஆகிய எல்லாவற்றையும், முன்பு அணிந்திடும் இயல்பினை – முன்னாளிற் சிவபெருமான் அணிந்த இயல்பை, இது முழுது உயிர்த் தொகைக்கு அன்பு செய்திடும் செயல் ஆம் என – இவியல்பு எல்லா ஆன்மாக்களுக்கும் அநுக்கிரகஞ் செய்யுஞ் செயலாமென்று, அகந்தையாற் பெரியோய் நீ அறி – அகந்தையால் மிக்க தக்கனே நீ அறியக்கடவாய்; பின்பும் உள்ளதும் கேள் – மேலும் நீ வினவியுள்ளதனையும் விளக்குவோம் கேட்பாயாக.
    மேல் வினவியது ஏனதெயிறு பற்றியது. அதற்கு முந்திய வினாக்களுக்கு விளக்கம் அருளப்பட்டது. [ப 6/137]

    விண்ணு ளோர்க்கெலாம் அல்லலே வைகலும் விளைத்து
    நண்ணும் ஆடகக் கண்ணினன் முன்னமோர் நாளில்
    மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத்
    துண்ணெ னப்பிலம் புக்கனன் உயிரெலாந் துளங்க. …… 16

    முன்னம் ஓர் நாளில் – முன்னொருகாலத்திலே, விண்ணுளோர்க்கு எலாம் வைகலும் அல்லல் விளைத்து நண்ணும் ஆடகக் கண்ணினன் – தேவர்களுக்கெல்லாம் நாள்தோறுந் துன்பத்தினைச் செய்துகொண்டிருந்த இரணியாக்கன் என்பவன், மண்ணகம் தனை வெளவி – பூமியைக் கவர்ந்து, வயிற்றிடை வைத்து – வயிற்றினுள் அடக்கிக்கொண்டு, உயிர் எலாம் துளங்க – உயிர்களனைத்தும் நடுங்கும்படி, துண்ணெனப் பிலம் புக்கனன் – விரைவாகப் பாதாள உலகிற் புகுந்தான்.
    இவன் இரணியன் தமையன். [ப 7/137]

    கண்டு வானவர் யாவரும் அஞ்சினர் கரிய
    கொண்டல்நன் மேனியம் பண்ணவன் கோகன தத்தோன்
    துண்ட மாகிய விடத்திலோர் ஏனமாய்த் தோன்றி
    அண்ட மீதுபோய் வடவரை எனவளர்ந் தார்த்தான். …… 17

    வானவர் யாவரும் கண்டு அஞ்சினர் – தேவர்களெலாம் இரணியாக்கன் செயலைக் கண்டு அஞ்சினார்கள்; கரிய கொண்டல் மேனி அம் பண்ணவன் -அப்பொழுது கரிய மேகம்போன்ற திருமேனியையுடைய மாகவிஷ்ணு, கோகனத்தோன் துண்டமாகிய இடத்தில் – தாமரை யாசனரான பிரமாவின் நாசியின்கண்ணே, ஓர் ஏனமாய் தோன்றி – ஓர் பன்றியாய் உதித்து, அண்டம் மீது போய் – அண்ட முகட்டிற் சென்று, வட வரை என வளர்ந்து – மேருமலையை ஒப்ப வளர்ந்து, ஆர்த்தான் – உங்காரஞ் செய்தார்.
    அண்டம் ஆகாயமுமாம். [ப 7/137]

    ஓரி மைக்குமுன் பாதலந் தன்னில்மால் உற்றுக்
    கூரெ யிற்றினாற் பாய்ந்துபொற் கண்ணனைக் கொன்று
    பாரி னைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
    வீர முற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும். …… 18

    மால் – பன்றி வடிவெடுத்து திருமால், ஓர் இமைக்கு முன் பாதலம் தன்னில் உற்றுப் பாய்ந்து – ஓர் இமைப்பொழுதிற் பாதலத்திற் சென்று பாய்ந்து, கூர் எயிற்றினால் பொன்கண்ணனைக் கொன்று – கூரிய தந்தங்களினாலே இரணியாக்கனைக் கொன்று, பாரினைக் கொடு மீண்டு – பூமியை ஒரு தந்தத்திலே தாங்கிக்கொண்டு திரும்பிவந்து, முன் போலவே பதித்து – பூமியை முன் இருந்தபடி இருக்கச்செய்து, வீரம் உற்றனன் – அதனாற் கர்வங்கொண்டு, தன்னை மிகவும் மதித்தனன் – தம்மைத் தாமே பெரிதும் மதித்தனர்.
    மிகவும் மதித்தல் பரமென்று மதித்தல். [ப 8/137]

    மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
    ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
    வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
    ஆல மார்களத் தண்ணல்கண் டெய்தினான் அங்கண். …… 19

    மாலும் அப்பகல் அகந்தையாய் – திருமாலும் அத்தினம் அகந்தையுடராய், உணர்வு இன்றி – அறிவில்லாமல், மருப்பால் ஞாலம் யாவையும் அழிதர இடந்து – கொம்புகளாற் பூமி முழுவதையும் அழியுமாறு பிளந்து, அவை நனி சூழ் வேலை தன்னையும் உடைத்தனன் – பிளந்தவைகளைப் பெருகிச்சூழ்கின்ற சமுத்திரத்தையும் நிலைகுலைத்தார்; அன்னதோர் வேலை – அவ்வாறாயதொரு சமயத்தில், ஆலம் ஆர் களத்து அணணல் கண்டு அங்கண் எய்தினான் – விடம் பொருந்திய கண்டத்தினையுடைய சிவபெருமான் கண்டு அவ்விடத்திற்குச் சென்றருளினார். [ப 8/137]

    கண்டு கண்ணுதல் அவன்மருப் பொன்றினைக் கரத்தால்
    கொண்டு வல்லையிற் பறித்தலும் உணர்வுமுன் குறுக
    விண்டு மற்றதும் பறிப்பன்இங் கிவனென வெருவிப்
    பண்டு போலநின் றேத்தலும் போயினன் பரமன். …… 20

    கண்ணுதல் கண்டு – சிவபெருமான் திருமாலின் செயலைக் கண்டு, அவன் மருப்பு ஒன்றினைக் கரத்தால் கொண்டு – திருமாலாகிய பன்றியின் கொம்பில் ஒன்றைத் தமது திருக்கரத்தாற் பிடித்து, வல்லையில் பறித்தலும் – விரைவிற் பறித்தபொழுது, முன் உணர்வு குறுக – முன்னை உணர்வு உதிக்க, விண்டு இங்கு இவன் மற்றதும் பறிப்பன் என வெருவி – திருமால் இவ்விடத்தில் இனிச் சிவபெருமான் மற்றைக் கொம்பையும் பறித்துவிடுவார் என்று அஞ்சி, பண்டு போல நின்று ஏத்தலும் – முன்னையுருவங் கொண்டு நின்று துதிக்க, பரமன் போயினன் – சிவபெருமான் மறைந்தருளினார். [ப 8/137]

    அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
    இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
    ஒன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
    நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும். …… 21

    அன்று கொண்டது ஓர் மருப்பினை – அன்று பறித்ததொரு பன்றிக்கொம்பை, சின்னமா அணிந்தான் – அடையாளமாக அணிந்தார்; இன்றும் அங்கு அவன் மார்பிடைப் பிறை என இலங்கும் – இன்றைக்கும் அங்கே அவருடைய திருமார்பில் அது பிறைபோல விளங்கும்; இது ஒன்று கேட்டனை – இந்த ஒரு வரலாற்றை நீ கேட்டாய்; நின்றதும் உரைப்பாம் – இனிக் கூறுதற்கு அடுத்துநின்ற கூருமத்தோடு மேற்கொண்ட வரலாற்றையுஞ் சொல்லுவேம்; நன்று தேர்ந்து உணர் – நன்றாக ஆராய்ந்து அறி; இத்திறம் மறைகளும் நவிலும் – இந்தச் செயலை வேதங்களும் எடுத்துச் சொல்லும் [ப 9/137]

    அடலின் மேதகு தேவரும் அவுணரும் அந்நாட்
    கடல்க டைந்திடும் எல்லையின் மந்தரங் கவிழ
    நெடிய மாலது நிறுவியே பொருக்கென நீத்தந்
    தடவி உள்ளணைந் தாமையாய் வெரிநிடைத் தரித்தான். …… 22

    அடலின் மேதகு தேவரும் அவுணரும் – வலியான் மிக்க தேவர்களும் அவுணர்களும், அந்நாள் கடல் கடைந்திடும் எல்லையில் – அக்காலத்திலே பாற்கடலைக் கடைந்தபொழுது, மந்தரம் கவிழ – மத்தாகிய மந்தர மலை கவிழ, நெடிய மால் ஆமையாய் பொருக்கென நீத்தம் தடவி உள் அணைந்து – திருநெடுமால் ஆமையாய் விரைவாக நீரில் முழுகி உட்சென்று, அது நிறுவி வெரிந் இடை தரித்தான் – அம் மந்திரமலையை நிறுத்தி முதுகின்மீது தாங்கினார் [ப 9/137]

    தரித்த வேலைஅவ் வேலையை மதித்திடத் தன்கண்
    அருத்தி மிக்குறும் அமிர்தினைத் தருதலும் அதனைத்
    தெரித்து மற்றிது நமதென நமதெனச் செப்பி
    மருத்தின் நன்மையால் அமரரும் அவுணரும் மலைந்தார். …… 23

    தரித்த வேலை – தாங்கியபோது, அவ்வேலையை மதித்திட – அக் கடலைக் கடைய, தன்கண் அருத்தி மிக்குறும் அமிர்தினைக் தருதலும் – தன்னிடத்தினின்றும் மிக்க விருப்பத்தைக் கொடுக்கும் அமிர்தத்தைத் தருதலும், அதனைத் தெரிவித்து – அதனைக் கண்டு, இது நமது என நமது எனச் செப்பி – இது நமது என்று நமது என்று சொல்லி, அமரரும் அவுணரும் மலைந்தார் – தேவர்களும் அசுரர்களும் போர் செய்தார்கள்.
    மருந்து மருதென் றாயிற்று [ப 9/137]

    மலைந்த போரினை நீக்கலன் மாயன்இவ் வரையை
    அலைந்த வேலையின் நிறுவியே வெரிநிடை ஆற்றி
    உலைந்தி டாவகை காத்துமா லெனப்பெரி துன்னக்
    கலந்த தால்அவன் உளத்தினில் அகந்தையங் கடலே. …… 24

    மாயன் மலைந்த போரினை நீக்கலன் – திருமால் இருபகுதியாரும் புரிந்த போரினை விலக்கினாரல்லர்; இ வரையை அலைந்த வேலையில் நிறுவி வெரிந் இடை ஆற்றி – இம் மந்தர மலையை அலைதல் பொருந்திய சமுத்திரத்தில் நிறுத்தி முதுகிற் சுமந்து, உலைந்திடா வகை காத்தும் எனப் பெரிது உன்ன – உலைவுபடாதவகை காத்தோம் என்று பெரிதும் நினைக்க, அவன் உளத்தில் அகந்தையங் கடல் கலந்தது – அவருடைய உள்ளத்தில் அகந்தையாகிய கடல் உண்டானது. [ப 10/137]

    அகந்தை எய்தியே யாவையுந் தேற்றலான் அலைபோய்த்
    திகந்த முற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
    சகந்த னக்கழி வெய்தலும் தனதருட் டன்மை
    இகந்த னன்கொலாம் கண்ணனென் றுன்னினன் எங்கோன். …… 25

    அகந்தை எய்தி – அகங்காரங்கொண்டு, யாவையும் தேற்றலான் – எவற்றையும் உணராதவராய்,அலை போய்த் திகந்தும் உற்றிட – அலைகள் சென்று திக்கினந்தத்தையடைய, வேலைகள் உழக்கினன் திரீய – கடல்களைக் கலகினவராய் திரிய, சகம் தனக்கு அழிது எய்தலும் – அதனால் உலகத்துக்கு அழிவு உண்டாதலும், தனது அருள் தன்மை – தனது காவற் றொழிலை, கண்ணன் இகந்தனன்கொல் ஆம் என்று – திருமால் நீங்கினான் போலும் என்று, எம்கோன் உன்னினன் – எப்பெருமான் திருவுளங்கொண்டருளினார். [ப 10/137]

    அற்றை நாளவண் வல்லையில் ஏகியே அரிதன்
    முற்ற லாமையின் உருவினை நோக்கியே முனிந்து
    கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தாற்
    பற்றி யாங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான். …… 26

    அற்றை நாள் – அந்தாளில், கற்றை வார் சடைக் கண்ணுதல் – தொகுதியான நீண்ட சடையினையுடைய சிவபெருமான், அவண் வல்லையில் ஏகி – அவ்விடத்துக்கு விரைந்து சென்று, அரிதன் முற்றல் ஆமையின் உருவினை நோக்கி முனிந்து – மகா விஷ்ணு எடுத்த முதிர்ந்த ஆமையின் வடிவத்தை நோக்கிக் கோபித்து, கரத்தால் யாப்புறப் பற்றி – திருக்கரத்தால் இறுகப்பற்றி, ஆங்கு அவன் அகந்தையும் வன்மையும் பறித்தான் – அந்த விஷ்ணுவின் செருக்கையும் வலியையும் ஒருங்கு பறித்தருளினார். [ப 10/137]

    நினைந்து தொல்லுருக் கொண்டனன் புகழ்தலும் நிலவைப்
    புனைந்த செஞ்சடை நின்மலன் அவுணரைப் போக்கி
    இனைந்த தேவருக் கமிர்தினை ஈகென ஏக
    வனைந்த மேனிமான் மாயையால் அவுணரை மாய்த்தான். …… 27

    நினைந்து தண்டனையாற் பழைய நினைவு வரப்பெற்று, தொல் உருக்கொண்டனன் புகழ்தலும் – முன்னை உருவத்தை எடுத்துக்கொண்டு துதி செய்தலும், நிலவைப் புனைந்த செம்சடை நின்மலன் – சந்திரனையணிந்த சிவந்த சடையினையுடைய சிவபெருமான், அவுணரைப் போக்கி – அசுரர்களை விலக்கி, இனைந்த தேவருக்கு – அசுரரால் வருத்திய தேவர்களுக்கு, அமிர்தினை ஈய என ஏக – அமிர்தத்தைக் கொடுப்பாயாக என்று கூறிச் சென்றருள, மால் – திருமால் வனைந்த மேனி மாயையால் – அலங்கரிக்கப்பட்ட மோகினி வடிவ மாயையினால், அவுணரை மாய்த்தான் – அசுரரை அழித்தார்.
    போக்கல் , அழித்தலுமாம். [ப 11/137]

    மாய்த்து வானவர்க் கமுதினை நல்கினன் வையங்
    காத்த கண்ணனென் றுரைப்பரால் அவனுறு கமடம்
    மீத்த யங்கிய காப்பினை வாங்கியே விமலன்
    சாத்தி னான்முனம் அணிந்திடு மருப்புடன் சார. …… 28

    வையகம் காத்த கண்ணன் – பூமியைக் காத்த திருமால், மாய்த்து – அசுரரை அழித்து, வானவர்க்கு அமுதினை நல்கினன் என்று உரைப்பர் – தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்தார் என்று கூறுவார்கள்; அவன் உறு கமடம் மீ தயங்கிய காப்பினை – அந்த திருமால் எடுத்து ஆமை வடிவத்தின் மீது பொருந்திய காப்பாகிய ஓட்டினை, விமலன் வாங்கி – சிவபெருமான் பறித்து, முனம் அணிந்திடும் மருப்புடன் சாரச் சாத்தினான் – முன்னம் முரித்தணிந்த பன்றிக்கொம்புடன் ஒருசேரச் சாத்தியருளினார். [ப 11/137]

    வாரி சூழ்புவி அகழ்தரு கேழலின் மருப்பும்
    மூரி யாமையின் ஓடுமேற் கொண்டது மொழிந்தாம்
    தாரு காவனத் தெம்பிரான் பலிக்குறு தகவுஞ்
    சேர வேயவண் நிகழ்ந்தவுங் கூறுதுந் தெளிநீ. …… 29

    வாரி சூழ் புவி அகழ்தரு கேழிலின் மருப்பும் – கடல் சூழ்ந பூமியை அகழ்ந்த பன்றியின் கொம்பும், மூரி யாமையின் ஓடும் – வலிய ஆமையின் ஓடும், மேற்கொண்டது மொழிந்தாம் – அணிந்த வரலாற்றைச் சொன்னோம்; தாருகா வனத்து எம்பிரான் பலிக்கு உறு தகவும் – இனித் தாருகா வனத்திலே எம்பெருமான் பலிக்குச் சென்ற தகுதிப்பாட்டினையும், அவண் சேர – அவ்விடத்துக்குச் சிவபெருமான் சென்றருள, நிகழ்ந்தவும் – நிகழ்ந்தவைகளையும், கூறுதும் நீ தெளி – கூறுகின்றேம் நீ அறியக்கடவாய்.
    பலி – பிக்ஷை.
    ஏனைய் வினாக்களுக்கு விளக்கஞ் செய்யும் முகமாகத் தாருகாவனத்துக் கதை எடுத்துக்கொள்ளப்பட்டது. [ப 12/137]

    வேறு
    முன்பு தாருக வனத்தின் முனிவரர் யாரும் ஈசற்
    கன்பி லராகி வேள்வி அளப்பில புரிந்து தாமே
    இன்புறு முத்தி தன்னை எய்துவான் உன்னி அங்கம்
    துன்புற வாளா நோற்றுத் துணிவினால் ஒழுக லுற்றார். …… 30

    முன்பு – முன்னொருகாலத்திலே, தாருக வனத்தின் முனிவரர் யாரும்- தாருக வனத்திலிருந்த முனிவரர்கள் யாவரும், ஈசற்கு அன்பு இலர் ஆகி – சிவபெருமானிடத்திலே அன்பில்லாதவராய், அளப்பு இல் வேள்வி புரிந்து – அளவற்ற யாகங்களைச் செய்து, தாமே இன்புறு முத்திதன்னை எய்துவான் உன்னி – இரு கடவுளின்றித் தாமே இன்பத்தை விளைவிக்கும் முத்தியை எய்தக் கருதி, அங்கம் துன்புற வாளா நோற்று – உடம்பு வருந்த வீணே தவஞ்செய்து, துணிவினால் ஒழுகல் உற்றார் – தங்கொள்கையில் துணிவுடையோராய் ஒழுகுவா ராயினார்.
    “அரன்றன் பாத மறந்துசெ யறங்க ளெல்லாம் வீண்செய்யல்” என்பது சித்தியார். [ப 12/137]

    ஒழுகிய வேலை தன்னில் உயிர்க்குயி ராகி உற்றோன்
    பழுதினை அகற்றித் தன்னோர் பாங்கரில் உமையாள் மேவ
    விழுமிய கயிலை நாப்பண் வீற்றிருந் தருள்வோன் அங்கண்
    இழுதையர் புரியும் நீர்மை யாவையும் உணர்ந்தான் அன்றே. …… 31

    ஒழுகிய வேலை தன்னில் – முனிவர்கள் இவ்வாறு ஒழுகிவருங் காலத்தில், உயிர்க்கு உயிராகி உற்றோன் – உயிர்க்குயிரா யிருக்குஞ் சிவபெருமான், தன் ஓர் பாங்கரில் – தமது ஒரு பாகத்தில், பழுதினை அகற்றி உமையாள் மேவ – ஆன்மாக்களின் குற்றத்தை நீக்கி உமாதேவியார்மேவ, விழுமிய கயிலைநாப்பண் வீற்றிருந் தருள்வோன் – உயர்ந்த திருக்கைலாயத்தின் நடுவண் வீற்றிருந்தருளுபவர், அங்கண் – அத் தாருக வனத்தில், இழுதையர் புரியும் நீர்மை யாவையும் உணர்ந்தான் – அறிவிலிகளாகிய முனிவர்கள் செய்யுஞ் செயலனைத்தியுஞ் திருவுளங்கொண்டருளினார்.
    உற்றோனாகிய அருள்வோன் உணர்ந்தா னென்க. [ப 12/137]

    முன்னவன் இதனை நாடி முழுதுணர் முகுந்தன் தன்னை
    உன்னினன் அன்ன பான்மை ஒய்யென உணர்ந்து மாலோன்
    என்னையும் முதல்வன் தன்பால் எய்துவான் பணித்தான் என்னாப்
    பன்னக அமளி நீத்துப் பணியினாற் கயிலை உற்றான். …… 32

    முன்னவன் இதனை நாடி – முதல்வராகிய சிவபெருமான் ஆடலொன்றைச் செய்ய எண்ணி, முழுது உணர் முகுந்தன் தன்னை உன்னினன் – தம்மருளால் முழுதுணர்வெய்திய திருமாலை நினைந்தருளினார்; மாலோன் அன்ன பான்மை ஓய்யென உணர்ந்து – திருமால் அத்தன்மையை விரைவாக உணர்ந்து, என்னையும் – ஒன்றுக்கும் பற்றாத என்னையும், முதல்வன் தன்பால் எய்துவான் பணித்தான் என்னா – முதல்வராகிய சிவபெருமான் தம்மிடத்து வரும்படி பணித்தருளினார் என்றுட்கொண்டு, பன்னக அமளி நீத்து – சர்ப்பசயனத்தை விட்டெழுந்து, பணியில் கயிலை உற்றான் – சிவாஞ்ஞையினாலே திருக்கைலையை அடைந்தார்.
    இது என்றது பின்வரும் ஆடலை. [ப 13/137]

    உற்றனன் நகர்முன் எய்தி உணர்த்திய நந்தி உய்ப்பப்
    பற்றலர் புரமூன் றட்ட பரனடி பணிந்து முன்போய்
    நிற்றலுங் குறிப்பால் அங்கண் நினைத்தன உணர்த்தி மாயன்
    பொற்றடஞ் செங்கை பற்றிப் புனிதன்ஆண் டெழுந்து போந்தான். …… 33

    உற்றனன் நகர் முன் எய்தி – திருக்கைலையை அடைந்த திருமால் செம்பொற்றிருக்கோயில் வாயிலை அடைந்து, உணர்த்தி அந்நந்தி உய்ப்ப – தமது வருகையைச் சிவபெருமானுக்கு விண்ணப்பித்து அந்த நந்திதேவர் தம்மை உட்புகவிட, முன் போய் – திருமுன்பு சென்று, பற்றலர் புரம் மூன்று அட்ட பரன் அடி பணிந்து நிற்றலும் – பகைவரின் முப்புரங்களை அழித்த சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி நிற்க, அங்கண் நினைத்தன குறிப்பால் உணர்த்தி – அங்கே திருவுளத்திற் கொண்டவற்றைத் திருமாலுக்குக் குறிப்பாலுணர்த்தி, மாயன் பொன் தடம் செம்மை பற்றி – அத்திருமாலின் அழகிய வளப்பம் பொருந்திய சிவந்த கையைப் பற்றிக்கொண்டு, புனிதன் ஆண்டு எழுந்து போந்தான் – புனிதராகிய சிவபெருமான் அவ்விடத்தினின்றும் எழுந்து சென்றருளினார். [ப 13/137]

    கயிலையங் கிரியை நீங்கிக் கண்ணனை நோக்கித் தொன்னாள்
    இயலுறு நினது பெண்மை எய்துதி இவண்நீ யென்னப்
    புயலுறழ் மேனி மாயோன் பொருக்கென அளப்பில் காமர்
    மயலுறு பான்மை அங்கோர் மடந்தையாய் மருங்கு வந்தான். …… 34

    கயிலையங் கிரியை நீங்கி – அழகிய கைலைமலையை விட்டு நீங்கி, கண்ணனை நோக்கி – திருமாலைப் பார்த்து, இவண் நீ தொல்நாள் இயல் உறு நினது பெண்மை எய்துதி என்ன – இவ்விடத்தில் நீ பழையகாலத்திற் கொண்ட உனது மோகினியாகிய பெண்வடிவத்தை அடையக்கடவாய் என்று கூறியருள, புயல் உறழ் மேனி மாயோன் – மேகத்தை யொத்த திருமேனியையுடைய திருமால், அளப்பில் காமர் மயல் உறு பான்மை – அளவற்ற மன்மதர்கள் மயங்கத்தக்க பான்மை பொருந்த, அங்கு ஓர் மடந்தையாய் மருங்கு பொருக்கென வந்தான் – அங்கு ஒரு பெண்ணாகிச் சிவபெருமானது பக்கத்தில் விரைந்து வந்தார்.
    காமன் மயக்குவோ னன்றிப் பிறர் அழகு கண்டு மயங்காதவர். அப்படிப்பட்ட காமர்கள் மயங்கத்தகக் பேரழகு படைத்த பெண்வடிவு கொண்டார் திருமால்.
    [ப 13/137]

    வந்திடு கின்ற காலை மாயைசேர் பொருண்மை முற்றுந்
    தந்திடும்*1 உமையுங் காணில் தளர்ந்து வீழ்பான்மை தானும்
    அந்தமில் யாணர் மேல்கொண் டாயிடைப் பெயர்ந்தான் முக்கண்
    எந்தைதன் வடிவின் நீர்மை யார்விரித் துரைக்கற் பாலார். …… 35

    வந்திடுகின்ற காலை – திருமால் பெண்வடிவு கொண்டு பக்கத்தில் வந்த சமயத்தில், மாயைசேர் பொருண்மை முற்றும் தந்திடும் உமையும் காணில் தளர்ந்து வீழ் பான்மை – மாயையில் உண்டாகும் பொருள் முழுவதையுந் தந்தருளுகின்ற மாயையின் முதல்வியாகிய உமாதேவியாருங் கண்டால் மனந்தளர்ந்து விழத்தக்க தன்மையாக, தானும் – தாமும், அந்தம் இல் யாணர் மேல் கொண்டு – எல்லைகாணமுடியாத அழகை மேற்கொண்டு, ஆயிடைப் பெயர்ந்தான் – அவ்விடத்திற் சென்றருளினார்; முக்கண் எந்தை தன் வடிவின் நீர்மை விரித்து உரைக்கற்பாலார் யார் – மூன்று கண்களையுடைய எம்மெருமானது வடிவத்தின் இயல்பை விருத்துரைக்கத் தக்கார் யாவர்.
    யாணர், புணர்ந்தாற் புணருந்தொறும் புதிதாம் அழகு. [ப 14/137]

    முன்பன துருவை எல்லாம் முகனுறு விழியால் மாந்தித்
    துன்புறு மால்மீக் கொள்ளத் துண்ணென அரியுஞ் சோர்ந்தும்
    அன்புடை அருளால் வந்தான் மற்றவன் தனக்கு மாலோன்
    என்பதோர் பெயரும் அஞ்ஞான் றெய்திய போலும் அன்றே. …… 36

    முன்பனது உருவை எல்லாம் – முதல்வராகிய சிவபெருமானுடைய உருவத்தின் அழகு முழுவதையும், முகன் உறு விழிபால் மாந்தி – முகத்திற் பொருந்திய விழிகளால் உண்டு, துன்பு உறு மால் மீக்கொள்ள – துன்பம் மிகுகின்ற மயக்கம் மீதூர, அரியும் துண்ணென சோர்ந்தும் – திருமாலும் துண்ணென்று சோர்ந்தாராயினும், அன்புடை அருளால் வந்தான் – அன்போடு கூடிய திருவருளினாலே ஒருவாறு உடன்வருவாராயினார்; மாலோன் என்பது ஓர் பெயரும் அஞ்ஞான்று அவன் தனக்கு எய்திய போலும் – மாலோன் என்பதுதொரு பெயரும் அந்நாளிலேதான் அவருக்கு உண்டானது போலும்.
    மயங்கினா ராதலின் மாலோன் ஆயினர். உரு ஆகுபெயர். எய்தியது என்பது ஈறுகெட்டு நின்றது. [ப 14/137]

    நராரியின் உரிவை நீத்து நக்கனே யாகி முக்கட்
    பராபரன் சூலத் தோடு பலிக்கலன் அங்கை கொண்டு
    முராரிதன் பாங்கர் செல்ல முனிவருக் கிருக்கை யாகத்
    தராதல மதிக்க நின்ற தாருகா வனத்திற் புக்கான். …… 37

    முக்கண் பராபரன் – மூன்று கண்களையுடைய பராபரர் ஆகிய சிவபெருமான், நர அரியின் உரிவை நீத்து – நரசிங்கத்தின் தோலுடையை நீக்கி, நக்கனே ஆகி – நிருவாணியாய், சூலத்தோடு பலிக்கலன் அங்கை கொண்டு – சூலத்தையும் பிக்ஷாபாத்திரத்தையும் அங்கையி லேந்தி, முராரி தன் பாங்கர் செல்ல – மோகினியாகிய திருமால் பக்கத்தில் வர, முனிவருக்கு இருக்கையாக – முனிவர்களுக்கு இருப்பிடமாக, தாராதலம் மதிக்க நின்ற தாருகாவனத்தில் புக்கான் – உலகம் மதிக்குமாறு நின்ற தாருகா வனத்திற் சென்றருளினார். [ப 15/137]

    புக்கனன் மாலை நோக்கிப் போந்துநீ நமைஎண் ணாது
    தொக்குறு முனிவர் வைகுஞ் சூழல்கள் தோறும் நண்ணி
    மிக்கமால் பூட்டி அன்னோர் விரதங்கள் மாற்றி நந்தம்
    பக்கநீ வருதி என்னப் பகர்ந்தனன் விடுத்துச் சென்றான். …… 38

    புக்கன் – தாருகா வனத்துட் சென்று, மாலை நோக்கி – திருமாலைப் பார்த்து, நீ போந்து – நீ இவ்விடத்தினின்றும் நீங்கி, நமை எண்ணாது தொக்குஉறு முனிவர் வைகும் சூழல்கள் தோறும் நண்ணி – நம்மைப் பதி என்று எண்ணாமற் குழுமி மிகுதியாக முனிவர்கள் வசிக்கின்ற இடங்கள்தோறுஞ் சென்று, மிக்க மால் பூட்டி – மிக்க மோகத்தை உண்டாக்கி, அன்னோர் விரதங்கள் மாற்றி – அவர்கள் மேற்கொண்ட விரதங்களை நிலைகுலைத்து, நம் தம் பக்கம் நீ வருதி என்னப் பகர்ந்தனன் – நமது பக்கம் நீ வரக்கடவாய் என்று கூறியருளி, விடுத்துச் சென்றான் – திருமாலை விடுத்துத் தாம் அபாற் சென்றருளினார். [ப 15/137]

    விடுத்தலும் முராரி ஏகி வேள்வியுந் தவமுந் தாமே
    கொடுத்திடு முத்தி யென்னுங் கொள்கைசேர் முனிவர் யாரும்
    அடுத்திடும் அவைக்கண் எய்தி அளவையில் அநங்கர் வல்லே
    தொடுத்திடு சரங்க ளேபோல் துணைவிழி பரப்பி நின்றான். …… 39

    விடுத்தலும் – சிவபெருமான் விடுக்க, முராரி ஏகி – மோகின் வடிவங்கொண்ட திருமால் சென்று, வேள்வியும் தவமும் தாமே முத்தி கொடுத்திடும் – வேள்வியும் தவமுமாகிய இரண்டும் மற்றொருவரின்றித் தாமே முத்தியை நல்கும்; என்னும் கொள்கை சேர் – என்கின்ற கொள்கையினை மேற்கொண்ட, முனிவர் யாரும் அடுத்திடும் அமைக்கண் எய்தி – முனிவர் யாவருங் குழுமியிருக்கின்ற அவையை யடைந்து, அளவை இல் அநங்கர் வல்லே தொடுத்திடும் சரங்களே போல் – அநேக மன்மதர்கள் விரைந்து ஒருங்கு தொடுக்கும் சரங்களே போல் – அநேக மன்மதர்கள் விரைந்து ஒருங்கு தொடுக்கும் சரங்களே போல் – அநேக மன்மதர்கள் விரைந்து ஒருங்கு தொடுக்கும் பாணங்களைபோல, துணை விழி பரப்பி நின்றான் – இரண்டாகிய கண்ணம்புகளைப் பரப்பி நின்றார்.

    கொள்கை பட்டாசாரியன் கொள்கை.இவன் சைமினி செய்த பூர்வ மீமாஞ்சைக்குப் பாடியஞ் செய்தோன். இப்பாடியம், வியாசர் செய்த உத்தர மீமாஞ்சையாகிய பிரம சூத்திர பாடியம் போன்று, தன்கோள் நிறுவுவது. பாடியம் , நூல்செய்த ‘அருந்தவனாஞ் சைமினி’ யின் கருத்தாகா தென்க. [ப 15/137]

    கண்டனர் முனிவர் அம்மா கதுமெனக் காம வேட்கை
    கொண்டனர் விரத நோன்மை குலைந்தனர் மகத்தின் செய்கை
    விண்டனர் மதனீர் பாய மெலிந்தனர் வெதும்பி வேழம்
    உண்டிடு கனியாம் என்ன உணர்வுபோய் உருகா நின்றார். …… 40

    முனிவர் கண்டனர் – முனிவர்கள் திருமாலாகிய மோகியைக் கண்டு, கதும் என காம வேட்கை கொண்டனர் – கண்ட அந்தக் கணமே காம இச்சை எய்தி, விரத நோன்மை குலைந்தனர் – விரதமாகிய தவ ஒழுக்கம் நிலைகுலைந்து, மகத்தின் செய்கை விண்டனர் – யாக கர்மங்களை விடுத்து, மதம் நீர் பாய மெலிந்தனர் வெதும்பி – சுக்கிலம் வெளிப்பட மெலிந்து வெதும்பி, வேழம் உண்டிடு கனியாம் என்ன – வேழமுண்ட விழாங்கனிபோல, உணர்வு போய் – உள்ளீடாகிய உணர்வு நீங்கி, உருகாநின்றார் – மனமுருகி நின்றொழிந்தார்கள்.

    வேழம் என்பது ஒரு நோய். அந்நோய் பிடித்த விளாங்கனி உள்ளீடின்றியிருக்கும். [ப 16/137]

    ஆலமார் கண்டத் தெந்தை அருளினால் மாயோன் கொண்ட
    கோலமார் வடிவ மெல்லாங் குறிப்புடன் நோக்கி நோக்கிச்
    சீலமாம் அனைத்தும் வீட்டிச் செழுஞ்சுடர் மலர்ச்சி கண்ட
    ஓலமார் விட்டி லென்ன ஒல்லென வந்து சூழ்ந்தார். …… 41

    ஆலம் ஆர் கண்டத்து எந்தை அருளினால் – நஞ்சு பொருந்திய கண்டத்தினையுடைய சிவபெருமானது கிருபையினால், மாயோன் கொண்ட கோலம் ஆர் வடிவம் எல்லாம் – திருமால் கொண்ட அழகு நிறைந்த மோகினி வடிவம் முழுவதையும், குறிப்புடன் நோக்கி நோக்கி – காதற் குறிப்போடு பார்த்துப் பார்த்து, சீலம் ஆம் அனைத்தும் வீட்டி – தமது ஒழுக்கம் முவைவதையும் அழித்து, செழும் சுடர் மலர்ச்சி கண்ட ஓலம் ஆர் விட்டில் என்ன – செழுமையாகிய தீபத்தின் ஒளிச்சுடம் விளக்கத்தைக் கண்ட ஒலித்தலைச் செய்கின்ற விட்டிற்பறவைபோல, ஒல்லென வந்து சூழ்ந்தார் – விரைந்து வந்து சூழ்ந்தார்கள். [ப 16/137]

    பார்கொலோ விசும்பு கொல்லோ பங்கயன் பதியோ காமன்
    ஊர்கொலோ முகுந்தன் வைகும் உலகமோ உறையுள் அன்றேல்
    நீர்கொலோ அமரர்க் காக நிருதரைத் தொலைத்தீர் உம்மை
    ஆர்கொலோ உணரு கிற்பார் அடியருக் கருளு மென்றார். …… 42

    உறையுள் – நீர் இருக்குமிடம், பார்கொலோ – மண்ணுலகமோ, விசும்பு கொல்லோ – விண்ணுலகமோ, பங்கயன் பதியோ – பிரமதேவருடைய சந்திய உலகமோ, காமன் ஊர்கொலோ – மன்மதனுடைய உலகமோ, முகுந்தன் வைகும் உலகமோ – விஷ்ணு உறையும் வைகுந்த உலகமோ, அன்றேல் – இவ்வுலகங்களில் ஒன்று அன்று ஆயின், உம்மை யார்கொல் உணருகிற்பார் – நும்மை எவ்விடத்தீர் என்று யாவர்தம் அறிய வல்லவர்; அமரர்க்கு ஆக நிருதரைத் தொலைத்தீர் – தேவர்கள் பொருட்டு மோகிநி வடிவங்கொண்டு அவுணரைத் தொலைத்தவர், நீர்கொலே – நீர்தாமா; அடியருக்கு அருளும் என்றார் – அடியேங்களுக்கு உமது வரலாற்றைச் சற்றே உணர்த்தியருளும் என்று இரந்தார்கள். [ப 17/137]

    என்றிவை பலவும் பன்னி இடருழந் தெரியிற் பட்ட
    மென்றளிர் அலங்க லென்ன வெதும்பியே விரகத் தீயால்
    பொன்றினர் போன்று நின்றார் பொருவரு முனிவர் பொன்னார்
    கொன்றையஞ் சடையோன் செய்த செயலினைக் கூறல் உற்றேன். …… 43

    என்று இவை பலவும் பன்னி – என்றிவ்வாறு பலவற்றையுங் கூறி, இடர் உழந்து – வருந்தி, எரியில் பட்ட மென் தளிர் அலங்கல் என்ன – அக்கினியிற் பட்ட மிருதுவான தளிர்களாலான மாலைபோல, விரகத் தியால் வெதும்பி – காமாக்கினியால் வெதும்பி, பொன்றினர் போன்று – இறந்தாரை ஒத்து, பொருவரு முனிவர் நின்றார் – அந்த ஒப்பில்லாத தாருக வன முனிவர்கள் நின்றொழிந்தார்கள்; பொன்னார் கொன்றை அம் சடையோன் செய்த செயலினை – இனிப் பொன்மயமான கொன்றைமலரை அணிந்த அழகிய சடையையுடைய சிவபெருமான் செய்த செயலை, கூறில் உற்றேன் – கூறுவேன்.
    கண்ணனை விடுத்துத் தானோர் கலனொடு சூலம் ஏந்தி
    எண்ணரும் முனிவர் வைகும் இருக்கையின் மறுகு சென்று
    பண்ணிசை மறைகள் பாடி ஐயமேற் படர்வார் போன்றான்
    உண்ணிகழ் உணர்வாய் என்றும் உயிரினுக் குயிராய் நின்றான். …… 44

    கண்ணனை விடுத்து – திருமாலை விட்டு நீங்கி, உள் நிகழ் உணர்வாய் – உள்ளே நிகழுகின்ற அறிவாயும், உயிருனுக்கு உயிராய் – உயிர்க்குயி ராகியும், என்றும் நின்றான் -என்றும் எங்கும் நின்றருள்பவராகிய சிவபெருமான், தான் ஓர் கலனொடு சூலம் ஏந்தி – தாம் ஒரு பிக்ஷா பாத்திரத்தையுஞ் சூலத்தையும் ஏந்திக்கொண்டு, எண் அரும் முனிவர் வைகும் இருக்கையின் மறுகு சென்று – எண்ணில்லாத முனிவர்கள் வசிக்கும் இருப்பிடத்து வீதியிற் சென்று, பண் இசை மறைகள் பாடி – பண் அமைந்த இசையோடு வேத கானஞ் செய்து, ஐயமேற் படர்வார் போன்றான் – பிக்ஷையை மேற்கொண்டு செல்லுபவரைப் போன்று சென்றார்.
    திருமாலை முனிவர்களிடம் விடுத்து எனினுமாம். [ப 17/137]

    பாட்டியல் இசையை அங்கண் முனிவர்தம் பன்னி மார்கள்
    கேட்டலும் எவர்கொல் அம்மா கிடைத்தனர் அவரைக் காண்பான்
    வேட்டன விழிகள் இன்னே விரைவினில் சேறும் என்னா
    ஈட்டமொ டெழுந்து வீதி எய்தியங் கிறைவற் கண்டார். …… 45

    இயல் பாட்டு இசையை – நிகழாநின்ற வேதகானத்தை, அங்கண் முனிவர் தம் பன்னிமார்கள் கேட்டலும் – அவ்விடத்து முனிவர்களுடைய மனைவியர்கள் கேட்டபோது, கிடைத்தனர் எவர்கொல் – இங்கே வந்தவர் யாவர்; அவரை இன்னே காண்பான் விழிகள் வேட்டன – அவரை இப்பொழுதே காணும்படி எமது கண்கள் வேட்கையுற்றன; விரைவினில் சேறும் என்னா – விரைவாகச் செல்லுவோம் என்று, ஈட்டமொடு எழுந்து – கூட்டத்துடன் எழுந்து, வீதி எய்தி – வீதியை அடைந்து, அங்கு இறைவன் கண்டார் – அங்கே பிக்ஷாடனராகிய இறைவரைத் தரிசித்தார்கள். [ப 18/137]

    கண்ணுறு மாதர் யாருங் காமன்ஐங் கணையின் மூழ்கி
    உண்ணிகழ் உணர்வு மாழ்க உயிர்பதை பதைத்துச் சோர
    அண்ணல்தன் காத லென்னும் ஆழ்திரைப் பட்டார் அன்னார்
    பண்ணிய செய்கை தன்னில் சிறிதியான் பகர்தல் உற்றேன். …… 46

    கண் உறு மாதர் யாரும் – பிக்ஷாடனரைக் கண்ணுற்ற முவிவர் பத்தினிமாரனைவரும், காமன் ஐங்கணையில் மூழ்கி – மன்மதன் பொழிகின்ற பஞ்சபாணங்களாகிய மழையில் முழுகி, உள்நிகழ் உணர்வு மாழ்க – உள்ளே நிகழும் உணர்ச்சி கெட, உயிர் பதைபதைத்துச் சோர – உயிர் துடிதுடித்துச் சோர, அண்ணல் தன் காதல் என்னும் ஆழ் திரைப் பட்டார் – இறைவன்பால் எழுந்து இறைகாதல் என்று சொல்லப்ப்டுகின்ற ஆழ்ந்த திரை பொருந்திய கடலில் ஆழந்தார்கள்; அன்னார் – அவ்வியல்பினராகிய அப்பெண்கள், பண்ணிய செய்கை தன்னில் – அந்நிலையிற் செய்த செயல்களுள், சிறிது யான் பகர்தலுற்றேண் – ஒரு சிலவற்றை ஒரு சிறிது யான் கூறுவேன். [ப 18/137]

    வேறு
    காய மேல்அணி கண்டிலம் இத்தவர்
    தூய பாடலைத் துண்ணெனக் கேட்டலும்
    மேய காமத்தின் வீழ்ந்தனம்*2 ஆகையால்
    மாய மேஇவ் வடிவம்என் பார்சிலர். …… 47

    இத் தவர் காயம் மேல் அணி கண்டிலம் – இத் தபோதனரது திருமேனி மீது ஆடை ஆபரணமாகிய அணி ஒன்றனையுங் காணோம்; தூய பாடலைக் கேட்டலும் – தூய்மையான பாடலைக் கேட்ட அளவில், துண்ணென மேய காமத்தில் வீழ்ந்தனம் – விரைந்து கவிந்த காம சமுத்திரத்தில் ஆழ்ந்தோம்; ஆகையால் இவ்வடிவம் மாயமே – ஆகையினாலே இந்த வடிவம் மாயமேயாம்; என்பார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள்.
    பிக்ஷாடனமூர்த்த நக்கராய்த் தோன்றலின், அணி கண்டிலம் என்றார். அவ்வடிவம் மயக்குதலின் மாயம் எனப்பட்டது. [19/137]

    ஐயர் செய்கை அறிந்தனம் இவ்விடைப்
    பைய வந்து பலிதனைக் கேட்பது
    மெய்ய தன்றிது மெல்லிய லார்தமை
    மையல் செய்திட வந்ததென் பார்சிலர். …… 48

    ஐயர் செய்கை அறிந்தனம் – பூசிக்கத்தக்கோராகிய இவருடைய செய்கையை யாம் அறிந்துகொண்டோம்; இவ்விடைப் பைய வந்து பலிதனைக் கேட்பது – இவ்விடத்துக்கு மெல்ல வந்து பிக்ஷை கேட்பது, மெய்யது அன்று – உண்மையன்று; இது மெல்லியலார் தமை மையல் செய்திட வந்தது – இச் செயல் மென்மையாகிய இயல்பினையுடைய பெண்களை மயக்கஞ் செய்ய எடுத்ததொரு செயலாம்; என்பார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள். [ப 19/137].

    நன்று நன்றிந்த நற்றவர்க் காந்துகில்
    ஒன்று நல்கி உணவளித் தோவிலா
    மன்ற லின்புற மங்கையர் ஏவரும்
    இன்று கொல்என் றிரங்குகின் றார்சிலர். …… 49

    நன்று நன்று – நல்லது! நல்லது! ; இந்த நல் தவர்க்கு ஆம் துகில் ஒன்று நல்லி – இந்த நல்ல தவத்தருக்கு ஏற்றதொரு வஸ்திரத்தைக் கொடுத்து, உணவு அளித்து – உணவு கொடுத்து, ஓவிலா மன்றில் இன்புற – இடையீடு படாத திருமண இன்பத்தை அநுபவிக்க, மங்கையர் ஏவரும் இன்றுகொல் – உரியோராய பெண்டிர் எவரொருவரும் இந்த உலகத்தில் இல்லைப்போலும்; என்று இரங்குகின்றார் சிலர் – என்று கூறிப் பிக்ஷை கேட்கும் அந்த நக்கர் பால் இரக்கங்கொள்கின்றார்கள் சில பெண்கள்.
    இவரை பெறும் பாக்கியமற்ற பெண்டிரும் உளரே, நன்று! நன்று! என்றவாறு. [ப 19/137]

    மாறி லாஇவ் வனத்திடை வந்தனன்
    வேறொ ரூரிடை மேவிலன் போலுமால்
    தேறில் யாமுனஞ் செய்திடு செய்தவப்
    பேறி தாமெனப் பேசுகின் றார்சிலர். …… 50

    வேறு ஓர் ஊரிடை மேவிலன் – வேறு ஓர் ஊரின்கட் செல்ல விரும்பினாரல்லர்; மாறு இலா இவ் வனத்திடை வந்தனன் – ஒப்பில்லாத இந்தத் தவவனத்தின்கண்ணே குறிக்கொண்டு வந்தருளினார்; தேறில் – ஆராய்ந்து தெளியுமிடத்து, இது – இவர் இங்கு வந்தருளிய இது, யாம் முனம் செய்திடு செய்தவப் பேறு ஆம் – யாம் முன்னஞ் செய்துவைத்த தவத்தின் பேறேயாம்; எனப் பேசுகின்றார் சிலர் – என்று கூறுகின்றார்கள் சில பெண்கள்.
    போலும் ஆல் அசை, செய்தவம் தவம் என்னும் பொருட்டு. [ப 20/137]

    ஈண்டு வந்த இருந்தவன் யாரையும்
    வேண்ட லன்இது மெய்மை அவன்பதம்
    பூண்டு காதலிற் போற்றுநர் போலமெய்
    தீண்டு தும்மெனச் செப்புகின் றார்சிலர். …… 51

    ஈண்டு வந்த இரும் தவன் – இங்கே போந்து பெரிய தவத்தினையுடைய இவர், யாரையும் வேண்டலன் – எவரையும் விரும்புவாரல்லர்; இது மெய்மை – இது சத்தியம்; அவன் பதம் பூண்டு – ஆகையினாலே அவருடைய பாதங்களைத் தலைக்கணியாக அணிந்து, காதலிற் போற்றுநர் போல – அன்போடு வணங்குவாரை ஒப்ப, மெய் தீண்டுதும் என – அவரது திருமேனியைத் தீண்டுவோம் என்று, செப்புகின்றார் சிலர் – கூறுகின்றார்கள் சில பெண்கள்.
    வணக்கவாயிலாக மெய்யைப் பரிசிப்ப என உபாயங் கூறினாராம். [ப 20/137]

    பூணி லங்கிய பொற்றொடி சங்கினம்
    மாணு றுந்துகில் மற்றிவை சோர்தலுங்
    காணு கின்றனர் கைநெரித் தஞ்சியே
    நாணி வீதி நடுவிருந் தார்சிலர். …… 52

    பூண் – ஆபரணங்களும், இலங்கிய பொன் தொடி – பிரகாசிக்கின்ற பொன் வளையல்களும், சங்கினம் – சங்கு வளையல்களும், மாண் உறும் துகில் – அழகு மிக்க ஆடைகளும், இவை சோர்தலும் – ஆகிய இவை நழுவுதலும், காணுகின்றனர் – அதனைக் காண, நாணி வெட்கங்கொண்டு, கை நெரித்து அஞ்சி – கையை நெரித்துக்கொண்டு அஞ்சி, வீதி நடு இருந்தார் சிலர் – வீதியின் நடுவண் இருந்தார்கள் சில பெண்கள்.
    காணுகின்றனர் முற்றெச்சம். காணுதலால் நாணி என்க. தாமறியாதே சோர, அதனைக் காண நாணம் உளதாயிற் றென்க. [ப 20/137]

    ஏமம் பாயமெய் எங்கணுங் காமவேள்
    தூமம் பாயவை சூழ்ந்துயிர் வாட்டிட
    வாமம் பாய்புனல் போல்மயிர்க் கால்தொறுங்
    காமம் பாயக்க லுழுகின் றார்சிலர். …… 53

    ஏமம் பாய – மயக்கம் பரவ, மெய் எங்கணும் – உடம்பினெவ்விடத்திலும், காமவேள் தூம் அன்பு ஆயவை சூழ்ந்து உயிர் வாட்டிட – மன்மதன் தூவும் அம்புகள் மொய்த்து உயிரை வாட்ட, வாமம் பாய் புனர் போல – தனங்களிலிருந்து பாய்கின்ற பாலாகிய நீரைப்போல, மயிர்கால் தொறும் – மயிர்க்கால்கள்தோறும், காமம் பாய – காமநீரொழுக, கலுழுகின்றார் சிலர் – அழுகின்றார்கள் சில பெண்கள். [ப 21/137]

    பாசம் நீங்கிப் பரபதம் ஈதென
    ஆசை யோடுகண் டன்புசெய் வாரென
    வாசம் நீங்கி வளையுகுத் தையர்தங்
    கோசம் நோக்கினர் கும்பிடு வார்சிலர். …… 54

    பாசம் நீங்கி – பாசமாகிய மலம் நீங்கப்பெற்று, பர பதம் ஈடு எனக் கண்டு – அடையக்கடவதாகிய பரம பதம் இஃதென்று கண்டு, ஆசையோடு அன்பு செய்வார் என – அப் பரம பதத்தின்மீது ஆசைச்யோடு பத்தி செய்பவர்கள்போல, வாசம் நீங்கி – வஸ்திரத்தை இழந்து, வளை உகுத்து – வளையலுங் கழன்று, ஐயர் தம் கோசம் நோக்கினர் – அந்த நக்கரின் அந்தரங்ஸ்தானத்தைக் கண்டு, கும்பிடுவார் சிலர் – கும்பிடுவார்கள் சில பெண்கள்.
    தம்நிலைக் கேற்றவாறே இறை தரிசனங் கிடைக்கின்ற தென்கின்ற உண்மை சிந்திக்கற்பாலது. போகவிருப்பினர் இறையை அவ்வகையிற் கண்டனர். [ப 21/137]

    இளையி னோடுறும் எந்தைதன் வேட்கையால்
    களையி னோடு கதுமெனச் சென்றுபால்
    அளையி னோடுறும் ஓதனம் அங்கைவீழ்
    வளையி னோடு வழங்குகின் றார்சிலர். …… 55

    இளையினோடு உறும் எந்தைதன் வேட்கையால் – இளமைச் செவ்வியோடு வருகின்ற எம்பெருமான்மீது கொண்ட வேட்கையினால், களையினோடு கதுமெனச் சென்று – விரக தாபத்துடன் விரைந்து சென்று, பால் அளையினோடு உறும் ஓதனம் – பாலும் தயிரும் மிக்குக் கலந்த அன்னத்தை, அம் கை வீழ் வளையினோடு – அழகிய கையினின்றுங் கழன்று வீழ்ந்த வளையலோடு சேர்த்து, வழங்குகின்றார் சிலர் – பிக்ஷாடனருக்குப் பிக்ஷையிடுகின்றார்கள் சில பெண்கள்.
    இளை – இளமை, விரகத்தாலெய்திய மெலிவை உணத்தியவாறாம். [ப 21/137]

    பாவை மார்முன் பலிக்குறுந் தன்மையால்
    நீவி இன்றிஇந் நெற்றியங் கண்ணுதல்
    மேவும் நந்துகில் வீழ்கினும் வீழுக
    ஏவ மோஎமக் கென்றுரைப் பார்சிலர். …… 56

    இந்நெற்றி அம் கண்ணுதல் – இந்த அழகிய நெற்றிக்கண்ணரான நக்கர், பாவைமார் முன் – பெண்களெதிரே, நீவி இன்றிப் பலிக்கு உறும் தன்மையால் – ஆடையின்றிப் பிக்ஷைக்கு வருகின்ற தன்மையினால், மேவு எமக்கு – பிக்ஷையிட விரும்பிச் செல்கின்ற எமக்கு, நம் துகில் வீழ்கினும் வீழுக – நமது ஆடை நழுவி வீழினும் வீழுக; ஏவமோ – ஈண்டைக்கு இது குற்றமாமோ; என்று உரைபார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள்.
    ஆடையின்றி வருவார்முன் அவ்வாறு சேறலே பொருத்த மென்றார் என்க. இதனானே, இவ்வாறு கூறும் நிலையினரான அவர்க்கு நிமலன் காட்சியும் அவர் நிலைக்கு ஏற்றவாறு அமையுமென்பது உய்த்துணரற்பாலதாம். [ப 22/137]

    போய நாணம் புகுந்தது மால்உளந்
    தீயு மால்நிறை சிந்திய தாருயிர்
    வீயும் மெய்யும் விளிந்திடும் எம்முயிர்
    ஈயும் எங்களுக் கென்றுரைப் பார்சிலர். …… 57

    நாணம் போய – நாணம் நீங்கியது; மால் புகுந்தது – மயக்கம் புகுந்தது; உளம் தீயும் – உள்ளம் தீகின்றது; நிறை சிந்தியது – கற்பு அழிந்தது; ஆருயிர் வீயும் – அரிய உயிர் கெடும்; மெய்யும் விளிந்திடும் – உடலும் அழியும்; எங்களுக்கு எம் உயிர் ஈயும் – ஏழையேங்களுக்கு எங்கள் உயிரைத் தந்தருளும்; என்று உரைப்பார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள்.
    போயது ஈறு கெட்டது. [ 22/137].

    தண்டு லங்கொல் தவத்தர் இரப்பெனக்
    கொண்டு சென்று குறுகினர் காமமாம்
    மண்டு தீச்சுட வண்பொடி ஆதலும்
    அண்டர் நாயகன் போலணிந் தார்சிலர். …… 58

    தவத்தர் இரப்பு தண்டுலம்கொல் என – இத்தபோதனர் இரப்பது அரிசி போலும் என்று, கொண்டு சென்று குறுகினர் – அதனை எடுத்துக்கொண்டு அவர் அருகிற் சென்றவர்கள், மண்டு காமம் ஆம் தீச் சுட – சுவாலிக்கின்ற காமாக்கினி தகிக்க, வண் பொடி ஆதலும் – அவ்வரி ஆழகிய நீறாய்ப் போதலும், அண்டர் நாயகன் போல் – தேவ நாயகராகிய சிவபெருமானைப் போல, அணிந்தார் சிலர் – அவ்வரிசிப் பொடியாகிய நீற்றைத் தாம் பூசிக்கொண்டார்கள் சில பெண்கள். [ப 22/137]

    வடிவி னால்எமை மாலுறுத் தாளுமென்
    றடியில் வீழினும் ஆரருள் செய்கிலர்
    கடிது போவது போலுங் கருத்திவர்க்
    கிடுகி லீர்ஐயம் என்றுரைப் பார்சிலர். …… 59

    ஆளும் என்று அடியில் வீழினும் ஆர் அருள் செய்கிலர் – எம்மை ஆண்டருளும் என்று பாதத்தில் வீழ்ந்து பிரார்த்தித்தாலும் அருமையாகிய தமது அருளைச் செய்கின்றாரில்லை; இவர்க்குக் கருத்து – இவருக்குக் கருத்தாவது, வடிவினால் எமை மால் உறுத்து – தமது வடிவத்தினால் எம்மை மயக்கும் உறும்படி செய்துவிட்டு, கடிது போவது போலும் – விரைந்து இவ்விடத்தை விட்டு அகன்று போவது போலும்; இடுகிலீர் ஐயம் – ஆகையினாலே இவருக்கு பிக்ஷை இடாதீர்கள் ; என்று உரைப்பார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள்.
    மாலுறுத்துவிட்டு வீழினிம் அருள் செய்கிலர் என இருந்தவாறு வைத்துரைப்பினுமாம். [ப 23/137]

    ஆர மற்றனர் ஆரமும் வீழமெய்
    ஈர மற்றனர் ஈரம் அதன்படை
    தீர மற்றனர் தீரவு மேகலா
    பாரம் அற்றனர் பாரமற் றார்சிலர். …… 60

    சிலர் – சில பெண்கள், ஆரம் அற்றனர் – முகத்துவடம் அற்றார்கள்; ஆரமும் வீழ மெய் ஈரம் அற்றனர் – சந்தனப்பூச்சும் உதிரும்படி மெய்க்கட் பசப்பு அற்றார்கள்; மதன் படை ஈர தீரவும் திரம் அற்றனர் – மன்மத பாணம் துளைக்க முற்றிலும் வலி கெட்டார்கள்; மேகலா பாரம் அற்றனர் – அரையிலணிந்த மேகலாபரணமாகிய பாரமும் அற்றார்கள்; பாரம் அற்றார் – இவ்வாற்றால் எல்லாப் பாரத்தையும் நீத்த ராயினார்.
    பாரமற்றார் சிலர் எடுத்துக்கொண்டு, பொறுமை யிழந்த்தாராகிய சிலர் என உரைப்பினுமாம். பசப்பு – ஈரத்தன்மை. [ப 23/137]

    சூலம் உண்டு சுடர்விழி மேல்நிமிர்
    பாலம் உண்டு படர்சடை யுண்டுசெங்
    கோல முண்டு குறைமதி உண்டிவர்
    ஆல முண்டவர் ஆகுமென் பார்சிலர். …… 61

    சூலம் உண்டு – இவரிடஞ் சூலம் உளது; பாலம் மேல் நிமிர் சுடர் விழி உண்டு – நெற்றியின்மீது விளங்குகின்ற அக்கினிக்கண் உளது; படல் சடை உண்டு – படர்ந்த சடை உளது; செம் கோலம் உண்டு – செந்நிற வடிவம் உளது; குறை மதி உண்டு – இளம் பிறை உளது; இவர் ஆலம் உண்டவர் ஆகும் – ஆதலினாலே இவர் நஞ்சையுண்ட சிவபெருமானேயாவர்; என்பார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள். [ப 23/137]

    எந்தை யார்தம் இருங்குறி யின்கணே
    சிந்து கின்ற திவலையொன் றல்லவோ
    உந்தி மேல்வந் துலகனைத் துந்தரும்
    அந்த நான்முகன் ஆனதென் பார்சிலர். …… 62

    எந்தையார் தம் – எம்பெருமானுடைய, இரும் குறியின்கண் சிந்துகின்ற திவலை ஒன்று அல்லவோ – பெருமை பொருந்திய குறியினிடத்து நின்று சிந்துகின்றதொரு அருட்டுளியன்றோ, உந்தி மேல் வந்து – திருமாலின் உந்திக் கமலத்திற் பொருந்தி, உலகனைத்தும் தரும் அந்த நான்முகன் ஆனது – உலகம் அனைத்தையும் படைக்கின்ற அந்த நான்முகக் கடவுள் ஆகியது; என்பார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள். [ப 24/137]

    சங்கும் ஆழியுந் தாங்குதல் இன்றியே
    பொங்கு காமரம் பொன்னந் துகிலொரீஇத்
    துங்க மாதவர் துண்ணென மால்கொள
    அங்கண் மேவும் அரியையொத் தார்சிலர். …… 63

    சங்கும் ஆழியும் தாங்குதல் இன்றி – சங்கையும் ஆழியையும் தரித்தல் செய்யாமல், பொங்கு காமரம் பொன் அம் துகில் ஒரீஇ – பொலிகின்ற காமரத்தையும் பொன்னாடையையும் விடுத்து, துங்க மாதவர் துண்ணென மால்கொள் – உயர்ச்சி பொருந்திய பெரிய தவத்தார்கள் துண்ணென்ற் மயக்கங்கொள்ள, அங்கண் மேவும் – அவ்விடத்துக்குச் செல்லும், அரியை ஒத்தார் சிலர் – மோகினியாகிய திருமாலை ஒத்த மோகினிகளாயினர் சில பெண்கள்.

    காமரம் – கான்மரம்; அஃது ஆலமரம். அது திருமாலின் உறைவிடங்களுள் ஒன்று.
    சங்கு வளையலையும், ஆழியாகிய மோதிரத்தையும், காமரமாகிய தருக்கள் நிறைந்த சோலையி னிருப்பிடத்தையும், உயர்ந்த அழகிய ஆடையையும் விடுத்து, தங் கணவராகிய துங்க மாதவர் காண்பரேல் நாணித் துண்ணென்று மயங்குமாறு, மோகினியை ஒத்த மோகினிகளாயின ரென்க. அந்த மோகினியால் வருந்தும் மாதவர்களின் நிலை இந்த மோகினிகளைக் கண்டவழி இனி என்னாம் என்க. [ப 24/137]

    கட்டு செஞ்சடைக் கண்ணியின் உள்ளகப்
    பட்ட மான்எனப் பார்த்தகண் வாங்கலர்
    சட்டு வந்தனில் தாங்கிய ஓதனம்
    இட்டு வெள்ளிடை ஏமரு வார்சிலர். …… 64

    கட்டு செம் சடை கண்ணியின் உள் அகப்பட்ட மான் என – கட்டப்பட்ட செஞ்சடையாகிய கண்ணியினுள்ளே அகப்பட்ட மானைப்போல, பார்த்த கண் வாங்கலர் – பார்த்த கண்ணை வாங்காதவராய், சட்டுவந்தனில் தாங்கிய ஓதனம் – அகப்பையிலே ஏந்திக் கொணர்ந்த அன்னத்தை, வெள்ளிடை இட்டு – வெற்றிடத்திலிட்டு, ஏமருவார் சிலர் – கலங்குவார்கள் சில பெண்கள்.
    கண்ணி – வலை; புள் முதலியன் படுக்குங் கயிறுமாம். பிக்ஷா பாத்திரத்தி லிடுதுமென்று வெற்றிடத்தில் லிட்டார்கள் ளென்க. [ 24/137]

    கிளியின் மேற்செலுங் கேழ்கிளர் ஓதிமம்
    களிம யக்குறு காளகண் டத்திறை
    வெளியின் மேனியும் மெய்ப்படு கோலமுந்
    தெளிகி லாது தெருமரு வார்சிலர். …… 65

    கிளியின் மேற் செலும் – திலோத்தமையாகிய கிளியின்மீது ஆசை மிகுதியினாலே தொடர்ந்து செல்லும், கேழ்கிளர் ஓதிமம் – நிறம் விளங்குகின்ற பிரமாவாகிய அன்னமும், களி மயக்கு உறு காள கண்டத்து இறை – மோகவெறு உறுதற் கேதுவான பேரழகைக் கொண்ட காளகண்டரான பிக்ஷாடனரது, வெளியின் மேனியும் – உருவெளித்தோற்றத்தையும், மெய் படு கோலமும் – மெய்மையான தோற்றத்தையும், தெளிகிலாது – வேற்றுமை தெரியமாட்டாது, தெருமருவார் சிலர் – புத்தி தடுமாறுவார்கள் சில பெண்கள்.

    இறைவனின் பேரழகு ஆடவர் பெண்மையை அவாவும் இயல்பினதாதலின், அழகைப் படைக்கும் அயனும் அவ்வழகு கண்டு களிமயக்குறும் என்க.
    
    அழகுகளின் கூட்டரவாகத் திலோத்தமையைச் சிருட்டி செய்து, சிருட்டி செய்த தானே மயங்கித் திசைமுகனாயது கதை.
    
    இனிக் கிளிப்பரிமேற் செல்லும் ஓதிமம் போல்வளான இரதியும் களிமயக்குறும் இறை என உரைப்பாருமுளர். [ப 25/137]

    அளியின் அட்ட அடிசில்கொண் டாயிடைக்
    களிம யக்கங் கருத்துற ஏகியே
    ஒளியி னுக்கொ ளியாகி உள்ளாருரு
    வெளியி னுக்கு விரைந்தளிப் பார்சிலர். …… 66

    அளியின் அட்ட அடிசில் கொண்டு – அன்போடு சமைத்த அன்னம் முதலிய உணவுவகையை எடுத்துக்கொண்டு, ஆயிடை – அவ்விடத்துக்கு, களி மயக்கம் கருத்துற ஏகி – மோக வெறி கருத்தைக் கொள்ளைகொள்ளச் சென்று, ஒளியினுக்கு ஒளியாகி உள்ளார் – ஒளிக்கும் ஒளியாயிருப்பவராகி சிவபெருமானது, உரு வெளியினுக்கு – உருவெளித்தோற்றத்திற்கு, விரைந்து அளிப்பார் சிலர் – விரைந்து கொடுப்பார்கள் சில பெண்கள். [ப 25/137]

    அண்ணல் மேனிகண் டார்வமுற் றாடைபோய்ப்
    பெண்ணின் நீர்மைப் பெருங்குறி மூடியும்
    கண்ணை மூடியுங் கைக்கடங் காமையால்
    விண்ணை மூடினர் போல்வெள் கினார்சிலர். …… 67

    அண்ணல் மேனி கண்டு – சிவபெருமானுடைய திருமேனியைத் தரிசித்து, ஆர்வம் உற்று – ஆசை கொண்டு, ஆடை போய் – ஆடை நழுவி, பெண்ணின் நீர்மைப் பெருங்குறி முடியும் – பெண்மையின் இயல்பாகிய பெரிய குறியைக் கையால் மூடியும், கைக்கு அடங்காமையால் கண்ணை மூடியும் – கையால் மூடுதற்கு அடங்காமையினாலே கண்களை மூடியும், விண்ணை மூடினர் போல் -ஆகாயத்தை மறைக்க எண்ணி மறைத்தவர்களைப்போல, வெள்கினார் சிலர் – வெட்கமுற்றார்கள் சில பெண்கள். [ப 26/137]

    விருந்த ராயிவண் மேவினிர் விண்ணவர்
    மருந்து போல்வதொர் வண்பதம் உண்டவை
    அருந்தி யேநல் லருள்புரிந் தோரிறை
    இருந்து போமென் றிசைத்திடு வார்சிலர். …… 68

    விருந்தராய் இவண் மேவினர் – விருந்தினராய் இவ்விடத்துக்கு எழுந்தருளினீர்; விண்ணவர் மருந்து போல்வது ஓர் வண்பதம் உண்டு – தேவாமிர்தம் போலும் ஒப்பற்ற வளவிய உணவு வகை இங்கே உண்டு; அவை அருந்தி – அவற்றை உண்டு, நல்லருள் புரிந்து – எமக்கு நன்மையாகிய அருளைச் செய்து, ஓர் இறை இருந்து போம் – ஓரிறைப்பொழுது காலந் தாழ்த்துச் சென்றருளும்; என்று இசைத்திடுவார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள். [ப 26/137]

    கையி லேந்து கலனொடு சூலமும்
    வையும் நம்மனை வந்திடும் பாலொடு
    நெய்யும் உண்டியும் நிற்றலும் உண்டியாம்
    உய்ய நீரிங் குறையுமென் பார்சிலர். …… 69

    கையில் ஏந்து கலனொடு – கையி லேந்திய கபாலமாகிய பிக்ஷா பாத்திரத்தையும், சூலமும் – சூலத்தையும், வையும் – ஓரிடத்தில் வையும்; நம் மனை வந்திடும் – நமது மனைக்கு வருதலைச் செய்யும்; பாலொடு நெய்யும் உண்டியும் நிற்றலும் உண்டு – பாலுங் நெய்யுங் கலந்த உணவினை தினந்தோறும் உண்டு, யாம் உய்ய – யாம் உய்யும்படி, நீர் இங்கு உறையும் – நீவிர் இங்கே உறைந்தருளும்; என்பார் சிலர் – என்றுரைப்பார்கள் சில பெண்கள். [ப 26/137]

    பார்க்குமா தர்க்கும் பல்குழு ஆடவர்
    ஆர்க்கும் மையல் அளிக்கும் வடிவுளீர்
    சீர்க்கும் ஓடொன்று செங்கைகொண் டெங்கணும்
    ஏற்கு மோவிதென் என்றுரைப் பார்சிலர். …… 70

    பார்க்கும் மாதர்க்கும் பல்குழு ஆடவர் ஆர்க்கும் – நும்மைப் பார்க்கும் பெண்கள் எவருக்கும் பல திறத்தினரான ஆடவர் எவருக்கும், மையல் அளிக்கும் வடிவு உளீர் – மோகத்தைக் கொடுக்கும் வடிவத்தையுடையீர்; சீக்கும் ஓடு ஒன்று செங்கை கொண்டு – சீர்த்தலால் வந்த கபால ஓடு ஒன்றைச் சிவந்த கையில் ஏந்திக்கொண்டு, எங்கணும் ஏற்கும் இது ஓ என் – எவ்விடத்தும் பிக்ஷை ஏற்கின்ற இது ஓகோ என்னை; என்று உரைபார் சிலர் – என்று ஏற்ப திகழ்ச்சி என்ற குறிப்பிற் கூறுவார்கள் சில பெண்கள்.
    சீர்த்தல் – கோபித்தல், சீர்த்ததால் வந்தனனைச் சீர்க்கும் ஓடு என்றார். சிறப்புச் செய்யும் என உரைப்பாரு முளர்.
    நுமது வடிவத்துக்குஞ் செயலுக்கும் பொருத்தம் இன்றே என்றவாறு. [ப 27/137]

    இன்றுமைக் கண்டி யாங்களும் ஆடைபோய்
    ஒன்று காதலுற் றோய்ந்தனம் இங்கிது
    நன்று கூடுதிர் நங்களை நீரென
    நின்று கூறி நெடிதுயிர்த் தார்சிலர். …… 71

    இன்று உமைக் கண்டு – இன்று நக்கராகிய உம்மைக் கண்டு, யாங்களும் ஆடை போய் – நாங்களும் ஆடை நழுவி, ஒன்று காதல் உற்று ஓய்ந்தனம் – ஒருமை செய்யும் காதல் வயப்பட்டு ஓய்ந்துபோனோம்; இங்கு இது நன்று – இவ்விடத்தில் இது நல்ல சமயம்; நங்களை நீர் கூடுதிர் என நின்று கூறி – ஏழையேங்களை நீர் சேருவீராக என்று எதிர்நின்று கூறி, நெடித்து உயிர்த்தார் சிலர் – நெடிதாகிய பெருமூச்சு விட்டார்கள் சில பெண்கள். [ப 27/137]

    நந்தும் இவ்வனம் நண்ணிய மாதவர்
    இந்த வேலையில் ஏகலர் யாவதுஞ்
    சிந்தை கொள்ளலிர் சேக்கையுண் டோரிறை
    வந்து போமென வாய்மலர்ந் தார்சிலர். …… 72

    நந்தும் இவ்வண்ணம் நண்ணிய மாதவர் – தவம் வளருகின்ற இந்த வனத்திற் பொருந்திய பெரிய தவத்தர்களான முனிவர்கள், இந்த வேலையில் ஏகலர் – இச்சமயத்தில் இங்கே வாரார்; யாவரும் சிந்தை கொள்ளலிர் – யாதொன்றினையும் உள்ளத்திற் கொள்ளற்க; சேக்கை உண்டு – சயனம் உண்டு; ஓரிறை வந்து போம் – ஓரிறைப் பொழுது வந்து தங்கிச் சென்மின்; என வாய் மலர்ந்தார் சிலர் – என்று கூறினார்கள் சில பெண்கள். [ப 27/137]

    எம்மை ஆரிட மாதரென் றெண்ணியோ
    வெம்மை பேசினும் மேவுகி லீர்பவம்
    உம்மை மேவுங் கொலோஒழிந் தார்கள்போல்
    அம்ம வந்தெமை ஆளுமென் பார்சிலர். …… 73

    எம்மை ஆரிட மாதர் என்று எண்ணியோ – எங்களை இருபடித்தினிகள் என்று கருதியோ, வெம்மை பேசினும் மேவுகிலீர் – விரக தாபத்தை எடுத்துரைப்பினும் அணைகின்றிலீர்; பவம் – பாவமானது, ஒழிந்தார்கள் போல் – ஏனையோரிடத்துப்போல , உம்மை மேவுங் கொலோ – கடவுளாகிய உம்மையும் அணுகுமோஅணுகாதே; எமை ஆளும் – ஆகையினாலே எம்மை அணைத்தருளும்; என்பார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள். [ப 28/137]

    ஆடை தாரும் அதன்றெனில் கொண்டதோர்
    வேடை தீரும் விளம்பு கிலீரெனில்
    கூட வாருங் குறிப்புமக் கென்னெனப்
    பாடு சேர்ந்து பகர்ந்திடு வார்சிலர். …… 74

    ஆடை தாரும் – நழுவிய நமதாடையைத் தந்தருளும்; அது அன்று எனில் – அதனைத் தாரா தொழியின், கொண்டது ஓர் வேடை தீரும் – எம்மை விழுங்கியதாகிய ஒப்பற்ற எமது விரகதாபத்தைத் தீர்த்தருளும்; விளம் புகிலீர் எனின் – ஒன்றும் உரையீராயின், கூட வாரும் – கூடுதற்கு வந்தருளும்; உமக்குக் குறிப்பு என் என – உமது எண்ணந்தான் யாதோ என்று, பாடு சேர்ந்து – பக்கத்தே சென்று, பகர்ந்திடுவார் சிலர் – இரகசியம் பேசுவார்கள் சில பெண்கள். [28/137]

    ஒல்லு கின்ற துமக்கிவ் வடிவினால்
    செல்லு கின்ற தெரிவையர் யாரையுங்
    கொல்லு கின்றது வோபலி கொள்வதோ
    சொல்லு மென்று தொடர்ந்திடு வார்சிலர். …… 75

    உமது இவ்வடிவினால் ஒல்லுகின்றது – உமக்கு இவ்வழகிய வடிவத்தினாற் செய்ய இயலுகின்றதாவது, செல்லுகின்ற தெரிவையர் யாரையும் கொல்லுகின்றதுவோ – இவ்வீதியிற் செல்லுகின்ற பெண்கள் யாவரையும் வதைக்கின்றதோ; பலி கொள்வதோ – பிக்ஷை ஏற்பதோ; சொல்லும் என்று – தொடர்ந்தார்கள் சில பெண்கள் [ப 28/137]

    போற்றி இங்கெமைப் புல்லும்என் றாலுமால்
    ஆற்றி இன்பத் தணைகிலிர் யாவருஞ்
    சாற்று கின்றனர் சங்கரர் என்றுமை
    ஏற்ற தோவதற் கென்றுரைப் பார்சிலர். …… 76

    எமைப் போற்றி இங்கு புல்லும் என்றாலும் – எம்மைப் பாதுகாத்து இங்கே தழுவுதிர் என்று பிரார்த்தித்தாலும், மால் ஆற்றி – எமது மோகத்தைத் தணித்து, இன்பத்து அணைகிலிர் – இன்பத்தோடு அணைகின்றிலீர்; உமை சங்கரன் என்று யாவரும் சாற்றுகின்றனர் – இவ்வியல்பினராகிய நும்மைச் சங்கரர் என்று யாவருங் கூறுகின்றனர்; அதற்கு ஏற்றதோ – அவ்வாறு கூறுதற்கு நுஞ் செயல் ஏற்றதாகுமோ; என்று உரைப்பார் சிலர் – என்று கூறுவார்கள் சில பெண்கள்.
    சங்கரன் – சுகஞ்செய்பவன். [ப 29/137]

    அணங்கின் நல்லவர் அண்ணல்தன் கோசமேல்
    நுணங்கு மாலொடு நோக்கி அதற்குமுன்
    வணங்கு மாறென மற்றவர் நாணுபு
    கணங்க ளோடு கவிழ்ந்துசென் றார்சிலர். …… 77

    அணங்கின் நல்லவர் சிலர் – அழகிற் சிறந்த பெண்கள் சிலர், அண்ணல் தன் கோசம் மேல் நுணங்கு மாலோடு நோக்கி – சிவபெருமானுடைய திருக்குறியின்மீது தளர்கின்ற மயக்கத்தோடு நோக்கி, அதற்கு முன் வணங்குமாறு என – அதற்கு முன்னே வணங்குந் தன்மைபோல, அவர் நாணுபு கவிழ்ந்து – அவர்கள் நாணித் த்லைகுனிந்து, கணங்களோடு சென்றார் – மகளிர் கூட்டத்தோடு சென்றார்கள். [ப 29/137]

    வேறு
    இன்னவர் பலருஞ் சூழா ஈண்டுபு கலையுஞ் சங்குந்
    துன்னிய கலனும் நாணுந் துறப்பருங் கற்புஞ் சிந்தி
    மன்னுயிர் ஒன்றுந் தாங்கி மால்கொடு தொடர எங்கோன்
    பொன்னடிக் கமலஞ் சேப்பப் புனிதமா மறுகிற் போனான். …… 78

    இன்னவர் பலரும் சூழா ஈண்டுபு – இவ்வியல்பினராகிய முனிவர் பன்னியர்கள் பலருஞ் சூழ்ந்து நெருங்கி, கலையும் – வஸ்திரத்தையும், சங்கும் – சங்கு வளையல்களையும், துன்னிய கலனும் – செறிந்த ஆபரணங்களையும், நாணும் – நாணத்தையும், துறப்பரும் கற்பும் – துறத்தற்கரிய கற்பினையும், சிந்து – சிந்தித்தல் செய்து, மன் உயிர் ஒன்றும் தாங்கி – நிலைபெற்ற உயிர் ஒன்றனையுமே தாங்கி, மால் கொடு தொடர – விரகமயக்கத்தோடு பின்றொடர, எம் கோன் – எமது இறைவராகிய பி‌க்ஷாடனர், பொன் அடிக் கமலம் சேப்ப – தமது அழகிய திருவடி கமலங்கள் நோவ, புனித மா மறுகில் போனான் – புனிதமாகிய பெரிய வீதியிற் சென்றருளினார். [ப 29/137]

    சில்லிடை வீணை நாதஞ் செய்திடும் அஃதே அன்றிச்
    சில்லிடை மறைகள் பாடுஞ் சில்லிடைச் சிவநூல் ஓதுஞ்
    சில்லிடைத் தன்மெய் காட்டுஞ் சில்லிடை ஐயங் கேட்குஞ்
    சில்லிடை அன்பர் போல்தன் சீர்த்தியைப் புகழ்ந்து செல்லும். …… 79

    சில்லிடை வீணை நாதம் செய்திடும் – சிலவிடங்களில் வீணாகனஞ் செய்வார்கள்; அஃது அன்றி – அவ்வாறன்றி, சில்லிடை மறைகள் பாடும் – சில விடங்களில் வேதகானஞ் செய்வார்; சில்லிடை சிவ நூல் ஓதும் – சில இடங்களில் சைவ நூலாகிய ஆகமங்களை உபதேசிப்பார்; சில்லிடை தன் மெய் காட்டும் – சிலவிடங்களில் தமது சுவரூபத்தைக் காட்டுவார்; சில்லிடை ஐயம் கேட்கும் – சில இடங்களிற் பிக்ஷை கேட்பார் சில்லிடை அன்பர் போல – சில இடங்களில் அன்பர்களாகிய அடியார்களைப் போல, தன் சீர்த்தியைப் புகழ்ந்து செல்லும் – தமது கீர்த்தியைப் புகழ்ந்துரைத்துக்கொண்டு செல்லுவார். [ப 30/137]

    தேமலர்க் கமலை அன்ன தெரிவையர் தொழுங்கால் ஈசன்
    மாமலர்த் தாள்மேல் இட்ட மலர்களும் அன்னார் சிந்துந்
    தூமலர்த் தொடையுஞ் சங்குந் துலங்குபொற் கலனுங் காமன்
    பூமலர்த் தொடையும் ஈண்டப் பொலிந்ததப் புனித வீதி. …… 80

    தேமலர் கமலை அன்ன தெரிவையர் – தேன் பொருந்திய    தாமரைமலரிலிருக்குந் திருமகளை ஒத்த பெண்கள், தொழுங்கால் – பிக்ஷாடன மூர்த்தியை வணங்கும்போது, ஈசன் மா மலர் தாள் மேல் இட்ட மலர்களும் – அம்மூர்த்தியின் பெருமை பொருந்திய மலரடிகளிலிட்ட புஷ்பங்களும், அன்னார் சிந்தும் தூ மலர் தொடையும் – அவர்கள் சிந்துகின்ற பரிசுத்தமாகிய மலர்மாலைகளும், சங்கும் – சங்கு வளையல்களும், துலங்கு பொன் கலனும் – விளங்குகின்ற பொன்னாபரணங்களும், காமன் பூ மலர் தொடையும் – மன்மதன் செலுத்துகின்ற பொலிவாகிய புஷ்பபாணங்களும், ஈண்ட – ஆகிய இவைகள் செறிதலால், அப்புனித வீதி பொலிந்து – அந்தப் புனிதமாகிய வீதி பொலிவுற்றது. [ப 30/137]

    ஊனுலாம் உயிர்கட் கெல்லாம் உணர்வுடன் உயிராய் நின்றோன்
    வானுலாம் பலிக்கு வந்த வடிவினை நினைக்கின் மாயோன்
    தானுமா லாகி இன்னுந் தளர்வுறும் என்றால் அம்மா
    ஏனையோர் செய்கை தன்னை இனைத்தென இயம்ப லாமோ. …… 81

    ஊன் உலாம் உயிர்கட்கு எல்லாம் – உடம்பினுள்ளே சஞ்சரிக்கின்ற உயிர்களுக்கெல்லாம், உணர்வுடன் உயிராய் நின்றோன் – உணர்வாயும் உயிர்க்குயிராயும் நின்ற இறைவரது, வான் உலாம் பலிக்கு வந்த வடிவினை நினைக்கின் – பெருமை பொருந்திய பிக்ஷாடன வடிவத்தை நினைத்தாலும், மாயோன் தானும் – (மாயத்துக்குறைவிடமான) திருமால்தானும் , மாலாகி – மயக்கத்தை யுடையவராய், இன்னும் தளர்வுறும் என்றால் – இன்னுந் தளர்ச்சியடைவார் என்றால், ஏனையோர் செய்கை தன்னை இனைத்தென இயம்பலாமோ – பிறர் செயலை இவ்வியல்பிற்று என்று கூறல் கூடுமோ.
    இன்னும் என்பது மோகினி வடிவம் நீங்கியதன்மேலும் என்னும் பொருட்டு. [ப 30/137]

    செந்திரு வனைய மேனிச் சீறடிக் கருங்கட் செவ்வாய்ப்
    பைந்தொடி மகளிர் கற்பாம் பரவைகள் மதிக்கும் எண்ணில்
    மந்தரம் போன்றான் எங்கோன் மற்றவர்க் கெல்லாம் வெவ்வே
    றிந்திர ஞால மென்ன எல்லையில் உருக்கொண் டெய்தி. …… 82

    செந்திரு அனைய மேனி – செம்மையாகிய திருமகளை யொத்த மேனியையும், சீறடி கருங்கண் செவ்வாய் – சிற்றடையையுங் கரிய கண்களையுஞ் சிவந்த வாயையும் உடைய, பைந்தொடி மகளிர் அவர்க்கெலாம் – பசிய வளையலையணிந்த மகளிர்களாகிய அவர்களுக்கெல்லாம், இந்திர ஞாலம் என்ன – இந்தர சாலம் என்று சொல்லும்படி, வெவ்வேறு எல்லையில் உருக்கொண்டு எய்தி – வேறு வேறு அளவற்ற உருவத்தைக் கொண்டு நடந்து, கற்பாம் பரவைகள் மதிக்கும் எண்ணில் மந்தரம் போன்றான் எங்கோன் – கற்பென்று சொல்லுங் கடல்களைக் கடைகின்ற அளவிறந்த மந்திர மலைகளை ஒத்தார் எமதிறைவராகிய பிக்ஷாடன மூர்த்தி. [ப 31/137]

    நீண்டஅந் நிகமம் புக்க நிமலன்மேல் ஆர்வம் வைத்துக்
    காண்டகு மாதர் யாருங் கருவுறு நிலையராகி
    மாண்டகு வயாவும் மற்றோர் வருத்தமும் இன்றி யாங்கே
    ஆண்டகை மகார்க ளாக வாறெண்ணா யிரரைப் பெற்றார். …… 83

    நீண்ட அந்நிகமம் புக்க நிமலன்மேல் – நீண்ட அந்த வீதியிற் சென்ற சிவபெருமான்மீது, ஆர்வம் வைத்து – மோகங்கொண்டு, காண தகு மாதர்யாரும் – அழகு பொருந்திய அப்பெண்கள் அனைவரும், கரு உறு நிலையராகி – கருப்பவதிகளாகி, மாண் தகு வயாவும் மற்றோர் வருத்தமும் இன்றி – மாட்சிமை பொருந்திய வாயாவும் வேறு யாதொரு வருத்தமும் இல்லாமல், ஆங்கே – அவ்விடத்தே, ஆண் தகை மகார்களாக – ஆண் தகைமையினையுடைய புத்திரர்களாக, ஆறெண்ணாயிரரைப் பெற்றார் – நாற்பத்தெண்ணாயிரவர்களைப் பெற்றார்கள்.
    வாயா – கருப்பவேதனை, கருப்ப காலத்து நுகர்பொருளில் உண்டாம் வேட்கை. [ப 31/137]

    எந்தைபால் விழைவு செய்தாங் கிமைப்பினின் மடவார் ஈன்ற
    மைந்தர்கள் யாரும் ஐயன் மலரடி முன்னர்த் தாழ்ந்து
    புந்திகொள் அன்பின் நின்று போற்றிட அனையன் நீவிர்
    நந்தமை உன்னி ஈண்டு நற்றவத் திருத்திர் என்றான். …… 84

    எந்தைபால் விழைவு செய்து – எம்பெருமானிடத்து ஆசை வைத்து, ஆங்கு இமைப்பினில் – அவ்விடத்தே கணப்பொழுதினில், மடவார் ஈன்ற மைந்தர்கள் யாரும் – அப்பெண்கள் பெற்ற புதல்வர்கள் அனைவரும், ஐயன் மலர் அடி முன்னர் தாழ்ந்து – பரமபிதாவின் மலரடிகளின் எதிரில் வணங்கி, புந்தி கொள் அன்பின் நின்று போற்றிட – மனத்துக் கொண்ட அன்போடு நின்று துதிக்க, அனையன் – பரமபிதா, நீவிர் நம் தமை உன்னி ஈண்டு நல்தவத்து இருத்திர் என்றான் – நீவிர்கள் எம்மை நினைந்து இவ்விடத்தில் நல்ல தவத்தைச் செய்துகொண்டு இருங்கள் என்று பணித்தருளினார். [ப 32/137]

    நெட்டிருஞ் சடில மீது நிலவினை முடித்த அண்ணல்
    கட்டுரை செய்தல் கேளாக் கைதொழூஉ விடைபெற் றேகி
    உட்டெளி வெய்தி நோற்றாங் கொருசிறை இருந்தார் நாற்பான்
    எட்டுள பத்து நூற்றின் எண்டொகை முனிவர் யாரும். …… 85

    நாற்பால் எட்டுள பத்து நூற்றின் எண் தொகை முனிவர் யாரும் – நாற்பத்தெண்ணாயிரவர் என்று எண்ணப்படுகின்ற குழுவினரான அம் முனிவர்கள் அனைவரும், நெடு இரும் சடிலம் மீது – பெரிய சடையின்மீது, நிலவினை முடித்த – சந்திரனை அணிந்த, அண்ணல் கட்டுரை செய்தல் கேளா – சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளியதைக் கேட்டு, கை தொழூஉ விடைபெற்று ஏகி – கைகூப்பி வணங்கி விடை பெற்றுக்கொண்டு சென்று, உள் தெளிவு எய்தி – மனத் தெளிவு அடைந்து, ஆங்கு ஒர் சிறை நோற்று இருந்தார் – அவ்வனத்தின்கண்ணே ஒரு சாரிலே தவஞ்செய்துகொண்டிருந்தார்கள். [ப 32/137]

    சேயென வந்தோர் நோற்பச் சென்றுழித் தெரிவை மாராம்
    மாயிரும் பரவை நீத்தம் மால்கொடு தொடர்ந்து செல்லப்
    போயினன் என்ப மன்னோ புரியிகந் தரிமுன் ஈந்த
    ஆயிரங் கமலங் கொண்டோர் ஆழியை அளிக்க வல்லோன். …… 86

    புரி இகந்து – வைகுந்த உலகை விட்டு பூமிக்கு வந்து, அரி முன் ஈந்த ஆயிரம் கமலம் கொண்டு – விஷ்ணுமூர்த்தி முன்னொரு காலத்து அருச்சித்த ஆயிரந் தாமரை மலர்களை ஏற்றுக்கொண்டு, ஓர் ஆழியை அளிக்கவல்லோன் – ஒரு சக்கரப்படையைக் கொடுக்க வல்லவராகிய சிவபெருமான், சேய் என வந்தார் நோற்பச் சென்றுழி – பிள்ளைகள் என்று சொல்லும்படி உதித்தவர்களாகிய முனிவர்கள் தவஞ்செய்யச் சென்றபோது, தெரிவைமாராம் மா இரும் பரவை நீத்தம் மால்கொடு தொடர்ந்து செல்ல – பெண்களாகிய மிகப் பெரிய சமுத்திர வெள்ளம் மயலை மேற்கொண்டு பின் தொடர்ந்து செல்ல, போயினன் – வீதியிற் சென்றருளினார்.

    புரியிகந்து போயினன் எனினுமாம். என்ப மன்னோ அசைநிலை. பூமி என்றது திருவீழிமிழலை என்னுந் தலத்தை, ஒன்று கொடுத்து ஆயிரம் வாங்கவல்ல இம் மூர்த்தி சக்கரப் பிரதர் என்க. [ப 32/137]

    போதலும் அதனை நோக்கிப் பொற்றொடி யாகி நின்ற
    சீதரன் அமலன் தன்பாற் சேறலுந் தொடர்ந்து பின்னர்
    மாதவர் யாரும் போந்தார் மற்றதன் இயல்பு நோக்கி
    ஏதமில் கங்கை பாலாம் யமுனையைக் கடுத்த தன்றே. …… 87

    போதலும் – இருடி பத்தினிகள் பின்றொடரப் பிக்ஷாடனர் செல்லாநிற்க, அதனை நோக்கி – அத்தருணத்தை குறிக்கொண்டு, பொந்தொடியாகி நின்ற சீதரன் அமலன் தன் பால் சேறலும் – மோகினியாகிய பெண்வடிவங்கொண்டு நின்ற திருமால் சிவபெருமானிடத்து வாராநிற்க, பின்னர் மாதவர் யாரும் தொடர்ந்து போந்தார் – மோகினியாகிய மாலுக்குப் பின்னே பெரிய தவத்தர்களாகிய முனிவர்க ளனைவருந் தொடர்ந்து சென்றார்கள்; அதன் இயல்பு – அந்தச் சந்திப்பின் இயல்பு, நோக்கின் – உற்றுநோக்குமிடத்து, ஏதம் இல் கங்கைபால் ஆம் யமுனையைக் கடுத்தது – குற்றமில்லாத கங்கைக்கட் கலக்கும் யமுனை நதியின் சந்திப்பினியல்பை ஒத்தது. [ப 33/137]

    மெல்லியல் வடிவ மாகி மேயினோன் தன்பால் வீழ்ந்து
    செல்லுறு முனிவர் ஆற்றத் தீவினை புரிந்த நீரால்
    அல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அவர்க்கெலாந் தனதாய் உள்ள
    தொல்லுரு மறைத்து வேறோர் வடிவொடு தோன்றி நின்றான். …… 88

    மெல்லியல் வடிவம் ஆகி மேயினோன் தன்பால் வீழ்ந்து – மோகினியாகிய பெண்வடிவங் கொண்டு வந்தோரான திருமால்மீது விருப்பங்கொண்டு, செல்லுறு முனிவர் – பின் தொடர்ந்து செல்லுகின்ற முனிவர்கள், ஆற்றத் தீவினை புரிந்த நீரால் – பெரிதுந் தீவினையைச் செய்த தன்மையினால், அல் உறழ் மிடற்றுப் புத்தேள் – இருளை ஒத்த கண்டத்தையுடைய சிவபெருமான், அவர்க்கு எல்லாம் தனதாய் உள்ள தொரு உரு மறைத்து – அம் முனிவரனைவர்க்கும் தமது தொன்மையாகிய திருவுருவை மறைத்து, வேறு ஒர் வடிவொடு தோன்றி நின்றான் – வேறோர் வடிவொடு தோன்றி நின்றார்.
    கடவுளின் தோற்றம் அவரின் மலபரிபாகத்துக்குத் தக்கவாறு தோன்றும் என்க. [ப 33/137]

    மடந்தை யாய்வந்த மாலோன் மணிமிடற் றிறைவன் தன்பால்
    அடைந்திட முனிவர் தத்தம் அரிவையர் தம்மை நோக்கித்
    தொடர்ந்தனர் இவரும் நம்போல் தோற்றனர் கலையும் நாணுங்
    கடந்தனர் இவனைக் கண்டு காதலித் தார்கொல் என்றார். …… 89

    மடந்தையாய் வந்த மாலோன் – பெண்ணாகி வந்த திருமால், மணிமிடற்று இறைவன் தன்பால் அடைந்திட – நீலகண்டரான சிவபெருமானது பக்கத்தை அடைய, முனிவர் – முனிவர்கள், தத்தம் அரிவையர் தம்மை நோக்கி – தங்கள் தங்கள் மனைவியரை அங்கே கண்டு, இவரும் நம்போல் தொடர்ந்தனர் – இவர்களும் எங்களைப்போலப் பின் தொடர்ந்து வந்தார்கள், கலையும் நாணும் தோற்றனர் – உடுத்த வஸ்திரத்தையும் நாணத்தையும் தோற்றார்கள்; கடந்தனர் – நெறி கடந்தார்கள்; இவனைக் கண்டு காதலித்தார்கள் கொல் என்றார் – இந்த ஆடவனைக் கண்டு காமுற்றார்கள் போலும் என்றார்கள்.

    தாம் மோகினியைத் தொடர்ந்தவாறு போல, அவர்களும் இறைவரைத்  தொடர்ந்தா ராதலின், ‘நம்போல் தொடர்ந்தனர்’ என்றார். [ப 34/137]

    மோனமா நெறியின் நோற்கும் முனிவரர் முகுந்தன் தன்பால்
    ஆனமால் சிறிது நீங்கி அருங்குலப் பன்னி மார்கள்
    ஈனமா நிலையை நோக்கி இன்னலுற் றிரங்கி ஏங்கி
    மானமேல் கொண்டு வீடா மன்னுயி ரோடு நின்றார். …… 90

    மோனம் ஆம் நெறியில் நோற்கும் முனிவரர் – மெளனமாகிய நெற்றியிலே தவஞ்செய்கின்ற முனிவரர்கள், முகுந்தன் தன்பால் ஆன மால் சிறிது நீங்கி – திருமாலினிடத் துண்டான மயக்கம் சிறிது நீங்கி, அரும் குலப் பன்னிமார்கள் ஈனம் ஆம் நிலையை நோக்கி – அரிய குல பத்தினிகளின் இழிவாகிய நிலையைப் பார்த்து, இன்னலுற்று – வருந்தி, இரங்கி ஏங்கி – இரக்கங்கொண்டு ஏங்கி, மானம் மேல் கொண்டு – அபிமானம் அதிகரிக்கப்பெற்று, வீடா மன்னுயிரோடு நின்றார் – நீங்காத நிலைபெற்ற உயிரைப் பற்றிக்கொண்டு ஒருவாறு நின்றார்கள்.
    ஈனமாம் நிலை, உயிர் வீடற்குரியதா மென்க. [ப 34/137]

    பொன்னுலாம் அல்கு லாள்இப் பொற்றொடி ஒருத்தி எம்பால்
    மன்னிய தவத்தைச் சிந்தி மால்செய்தாள் ஒருவன் வந்து
    பன்னிமார் கற்பை வீட்டிப் படுத்தினன் மோகம் அந்தோ
    என்னமா யங்கொ லீதென் றெண்ணினர் யாரும் ஈண்டி. …… 91

    பொன் உலாம் அல்குலாள் இப்பொற்றொடி ஒருத்தி – பொன்னணி பொருந்திய அல்குலாளான இந்தப் பெண்ணொருத்தி, எம்பால் மன்னி – மன்னி எம்மிடம் வந்து, தவத்தைச் சிந்தி மால் செய்தாள் – தவத்தைக் குலைத்து மயக்கஞ் செய்தாள்; ஒருவன் வந்து – இவன் ஒருவன் வந்து, பன்னிமார் கற்பை வீட்டி – நமது பத்தினிகளின் கற்பைச் சிதைத்து, மோகம் படுத்தினன் – அவர்களை மோகவலையுள் அகப்படுத்தினான்; அந்தோ – ஐயகோ!, ஈது என்ன மாயம் கொல் என்று – இஃதென்ன மாயமோ என்று, யாரும் ஈண்டி எண்ணினர் – முனிவர்கள் யாவரும் ஒருங்கு கூடி ஆலோசித்தார்கள். [ப 34/137]

    எண்ணிய முனிவர் தேறி இயம்புவார் கயிலை வைகுங்
    கண்ணுத லாகும் இன்னோர் கற்பினை உடைத்தான் யாமுன்
    பண்ணிய தவத்தை வீட்டப் பைந்தொடி யாகி வந்தோன்
    மண்ணுல கனைத்தும் உண்ட மாயவன் போலும் அன்றே. …… 92

    எண்ணிய முனிவர் தேறி இயம்புவார் – ஆலோசனை செய்த முனிவர் தெளிவுறச் சொல்லுவார்; இன்னோர் கற்பினை உடைத்தான் – இந்தப் பெண்களின் திண்ணிய கற்பாகிய பாறையை உடைத்தவன், கயிலை வைகும் கண்ணுத லாகும் – திருக்கைலையிலிருக்குஞ் சிவபெருமானேயாம்; யாம் முன் பண்ணிய தவத்தை வீட்ட – யாம் முன்னர்ச் செய்த தவத்தை அழிக்கும் பொருட்டு, பைந்தொடியாகி வந்தோன் – பசிய தொடியினை யணிந்த மோகினியாகி வந்தவன், மண்ணுலகு அனைத்தும் உண்ட மாயவன் போலும் – மண்ணுலகம் முழுவதையும் உண்ட திருமாலே போலும். [ப 35/137]

    நந்தவந் தன்னை வீட்ட நாரணன் தானே நம்பால்
    வந்தனன் அன்றால் ஈசன் பணியினால் மாயை செய்தான்
    இந்திரை கேள்வன் செய்த தென்கொலோ எமது நோன்பு
    சிந்தினும் நன்றால் இன்னுந் தீர்வுநேர்ந் தியற்று கின்றோம். …… 93

    நம் தவம் தன்னை வீட்ட – நமது தவத்தை அழிக்கும்பொருட்டு, நாரணன் தானே நம்பால் வந்தனன் அன்று – திருமால் தாமே முனைந்து நம்மிடம் வந்தாரென்று கொள்வது பொருத்தமன்று; ஈசன் பணியினால் மாயை செய்தான் – சிவபெருமானுடைய கட்டளையினால் மாயஞ் செய்தாராவர்; இந்திரை கேள்வன் செய்தது என் – இலக்குமி நாயகரான திருமால் தாம் செய்ததுதா னென்னை; எமது நோன்பு சிந்தினும் நன்று – எமது தவம் திருமாலால் நிலைகுலைக்கப்பட்டாலும் நன்றேயாம்; தீர்வு நேர்ந்து – நேர்ந்த குற்றத்துக்கு கழுவாய் செய்து, இன்னும் இயற்றுகின்றோம் ஆல் – மேலும் தவம் செய்வோம் ஆகையினாலே.

    எவன் என்பது என் என்றாய் இன்மை குறித்து நின்றது. செய்ததொன்றுமில்லை என்றவாறு. இயற்றுவோம் என்பது, துணிவு பற்றி நிகழ்காலத்தாற் கூறப்பட்டது. [ப 36/137]

    அங்கையிற் கபால்ஒன் றேந்தி ஐயம்ஏற் றிடுவான் போலச்
    சங்கரன் வந்து மற்றித் தாருகா வனத்தின் மேவு
    மங்கையர் கற்புச் சிந்தும் வசையுரைக் கொழிவு முண்டோ
    செங்கதிர் மதியஞ் செல்லுந் திசையெலாம் பரவும் அன்றே. …… 94

    அங்கையில் கபாலொன்று ஏந்தி – அழகிய கையிற் கபாலமொன்றனை ஏந்தி, ஐயம் ஏற்றிடுவான் போலச் சங்கரன் வந்து – பிக்ஷை ஏற்பவன்போலச் சங்கரனாகிய சிவன் வந்து, இத்தாருகா வனத்தில் மேவும் – இத் தாருகா வனத்தில் வாழுகின்ற, மங்கையர் கற்புச் சிந்தும் வசையுரைக்கு – பெண்களின் கற்பை அழிக்கும் வசைமொழிக்கு, ஒழிவும் உண்டோ – தீர்வும் உளதாகுமோ; செம் கதிர் மதியம் செல்லும் திசை எலாம் – செஞ்ஞாயிறும் வெண்டிங்களுஞ் சஞ்சரிக்குந் திக்குகளெங்கும், பரவும் அன்றே – இவ் வசைமொழி பரவுமன்றோ. [ப 36/137]

    தானொரு வேடங் கொண்டுந் தண்டுள வலங்கற் சென்னி
    வானவன் தன்னை விட்டு மற்றிவை அனைத்துஞ் செய்தோன்
    கானுறு கடுக்கை வேய்ந்த கண்ணு தலேகொல் என்றே
    மானவெங் கனலுஞ் சீற்ற வன்னியுங் கிளர நின்றார். …… 95

    தான் ஒரு வேடம் கொண்டும் – தானே ஒரு பிக்ஷாடன வடிவத்தை எடுத்தும், தண் துளவு அலங்கள் சென்னி வானவன் தன்னை விட்டும் – தன்ணிய துளவ மாலையை அணிந்த சிரசினையுடைய திருமாலை வேற்று வடிவத்தோடு இங்கே விடுத்தும், இவை அனைத்தும் செய்தோன் – இக்காரியங்கள் அனைத்தையுஞ் செய்தவன், கான் உறு கடுக்கை வேய்ந்த கண்ணுதலே என்று – வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்த சிவனேயாவன் என்று துணிந்து, மான வேம் கனலும் – மானமாகிய கொடிய அக்கினியும், சீற்ற வன்னியும் – கோபமாகிய அக்கினியும், கிளர நின்றார் – ஒருங்கு சேர்ந்து சுவாலிக்க நின்றார்கள். [ப 36/137]

    நின்றிடு முனிவர் யாரும் நெருப்பெழ விழித்துச் செம்பொற்
    குன்றுறழ் முலையி னார்தங் குழுவினைக் கூவி யார்பின்
    சென்றிடு கின்றீர் கற்பின் செய்கைய திகந்தீர் இங்ஙன்
    பொன்றுதல் அழகி தன்றேல் போமின்நும் புரியின் என்றார். …… 96

    நின்றிடு முனிவர் யாரும் – அவ்வாறு நின்ற முனிவர்களெல்லாம், நெருப்பு எழ விழித்து – அழல் எழ நோக்கி, செம் பொன் குன்று உறழ் முலையினார் தம் குழுவினைக் கூவி – செம்மையாகிய பொன் மலைபோன்ற தனங்களையுடைய பெண்கள் கூட்டத்தை அழைத்து, யார்பின் சென்றிடுகின்றீர் – நீவிர் யாருக்குப் பின்னே போகின்றீர்கள்; கற்பின் செய்கையது இகந்தீர் – கற்பினாற் செய்யக்கடவதனைச் செய்யாதொழிந்தீர்; இங்ஙன் பொன்றுதல் அழகிது – நீவிர் இவ்விடத்தில் இக்கணமே இறந்துபடுதல் நன்றாம்; அன்றேல் – அது கூடாதானால், நும் புரியின் போமின் என்றார் – நும்மிருப்பிடத்துக்குப் போங்கள் என்று கடிந்து கூறினார்கள். [ப 36/137]

    இத்திற மாதர் கேளா ஈங்கிவர் தம்மைக் கண்டோர்
    முத்தராய் உறுவ தன்றி முடிவரோ முனிவர் தாமும்
    பித்தர்கொல் என்றே அன்னான் பிறங்குரு வினையுட் கொண்டு
    நித்தன தருளால் மீண்டு நீணகர் இருக்கை புக்கார். …… 97

    இத்திறம் மாதர் கேளா – இம் முனிவர்களின் போக்கை அவர்கள் மொழியால் அப்பெண்கள் கேட்டறிந்து, ஈங்கு இவர் தம்மைக் கண்டோர் – இவ்விடத்தில் இப் பிக்ஷாடனரைத் தரிசித்தவர்கள், முத்தராய் உறுவது அன்றி – சீவன்முத்தர்களா யிருப்பதன்றி, முடிவரோ – வீணே இறந்துபடுவார்களா; முனிவர் தாமும் பித்தர் கொல் என்று – இந்த முனிவர்கூடப் பித்தராயினரோ என்றிரங்கி, அன்னான் பிறங்கு உருவினை உட்கொண்டு – அந்தப் பிக்ஷாடனரின் பிரகாசிக்கின்ற திருவுருவத்தை உள்ளே தியானித்துக்கொண்டு, நித்தனது அருளால் மீண்டும் – நித்தியராகிய அப்பெருமானின் திருவருளினாலே அவ்விடத்தினின்றுந் திரும்பி, நீள் நகர் இருக்கை புக்கார் – நீண்ட தமது நகரிலுள்ள இருப்பிடங்களை அடைந்தார்கள். [ப 37/137]

    நீணகர் புகுந்த பின்னர் நேரிழை மகடூஉ வாகித்
    தாணுவின் அயலின் நின்ற தண்டுள வலங்கற் புத்தேள்
    ஆணுவின் உருவு கொண்டான் அருளினால் அனைய தன்மை
    காணிய விரிஞ்ச னாதிக் கடவுளர் யாரும் வந்தார். …… 98

    நீள் நகர் புகுந்த பின்னர் – பெண்கள் நீண்ட தமது நகரத்தை அடைந்த பின்பு, நேரிழை மகடூஉ ஆகி – நுண்ணிய ஆபரணங்களை யணிந்த பெண்வடிவமாகி, தாணுவின் அயலில் நின்ற – அசைவற்றவராகிய சிவபெருமானுக்குப் பக்கத்தில் நின்ற, தண் துளவு அலங்கல் புத்தேள் – தண்ணிய துளவமாலையை அணிந்த திருமால், அருளினால் ஆண் உருவு கொண்டான் – சிவபெருமானது திருவருளினாலே தமது ஆண்வடிவத்தைக் கொண்டார்; அனைய தன்மை காணிய – அங்கு நிகழ்ந்த அவ்வாறாய தன்மையைக் காணும்பொருட்டு, விரிஞ்சன் ஆதிக் கடவுளார் யாரும் வந்தார் – பிரமதேவர் முதலிய தேவர்கள் அனைவரும் வந்தார்கள்.
    உ, இன் சாரியை. [ப 37/137]

    கடவுளர் யாரும் வந்த காலையில் அங்கண் நின்ற
    முடிவறு முதல்வன் தன்னை முனிவொடு நோக்கி ஈண்டுக்
    கொடியதோர் வேள்வி ஆற்றிக் கொல்லுதும் இவனை என்னா
    மடமைகொள் முனிவர் சூழ்ந்து மற்றொர்தீ மகத்தைச் செய்தார். …… 99

    கடவுளர் யாரும் வந்த காலையில் – தேவர்கள் யாவரும் வந்த சமயத்தில், அங்கண் நின்ற -அவ்விடத்தில் அவர்கள் தரிசிக்கும்படி நின்றருளிய, முடிவறு முதல்வன் தன்னை முனிவொடு நோக்கி – அந்தமில்லாத அநாதியாகிய சிவ பெருமானைக் கோபத்தோடு பார்த்து, ஈண்டு கொடியது ஓர் வேள்வி ஆற்றி – இவ்விடத்திற் கொடியதொரு அபிசாரக யாகத்தைச் செய்து, இவனைக் கொல்லுதலும் என்னா – இந்தச் சிவனைக் கொல்லுவோம் என்று, மடமைகொள் முனிவர் சூழ்ந்து – அறியாமையை மேற்கொண்ட முனிவர்கள் ஆலோசித்து, ஓர் தீ மகத்தைச் செய்தார் – கொடியதொரு யாகத்தைச் செய்தார்கள்.
    அபிசாரகம் – கொல்லச் செய்வது; அபிசாரம் எனவும் வழங்கும். [ப 37/137]

    எள்ளுதற் குரிய வேள்வி எரியதன் இடையே யாரும்
    உள்ளுதற் கரிய தோற்றத் துருமிடிக் குரல பேழ்வாய்த்
    தள்ளுதற் கரிய சீற்றத் தழல்விழித் தறுகட் செங்கால்
    வள்ளுகிர்ப் புலியொன் றம்மா வல்லையின் எழுந்த தன்றே. …… 100

    எள்ளுதற் குரிய வேள்வி எரி அதனிடை – இகழுதற்குரிய அந்த யாகாக்கினியிடத்து, யாரும் உள்ளுதற்கரிய தோற்றம் – எவரும் நினைத்தற்கரிய உருவத்தையும், உரும் இடிக் குரல பேழ்வாய் – இடியின் இடிக்கின்ற குரலினையுடைய பிளந்த வாயினையும், தள்ளுதற் கரிய சீற்றம் – விலக்குதற்கரிய கோபத்தையும், தழல் விழி – அக்கினி காலுங் கண்களையும், தறுகண் – தறுகண்மையையும், செங்கால் – சிவந்த காலையும், வள் உகிர் – கூரிய நகத்தையுடைய, புலி ஒன்று வல்லையின் எழுந்தது – ஒரு புலி விரைந்தெழுந்தது.
    தோற்றம்+அத்து = தோற்றத்து, அத்து, சாரியை. வேள்வி எள்ளுதற்கரியதாயினும் ஈண்டுச் சிவாபராதத்தாதலின் எள்ளுதற் குரியதாயிற்று. [ப 38/137]

    எழுதரு புலியை நோக்கி ஈசனை முடித்தி என்றே
    தொழுதனர் விடுப்ப ஆங்கே துண்ணென வருத லோடும்
    அழல்விழிப் பரமன் நேர்போய் அங்கையால் உரித்து மற்றவ்
    வுழுவையந் தோலை முன்னம் உடுத்தனன் தானையொப்ப. …… 101

    எழு தரு புலியை நோக்கி – யாகாக்கினியி லெழுந்த புலியைப் பார்த்து, ஈசனை முடித்தி என்று தொழுதனர் விடுப்ப – நீ சிவனைக் கொல்வாயாக என்று வணங்கி விடுப்ப, ஆங்கு துண்ணென வருதலோடும் – சிவபெருமான் நிற்கின்ற அவ்விடத்துக்கு அப்புலி விரைந்து வர, அழல் விழிப் பரமன் நேர் போய் – அக்கினிக் கண்ணரான சிவபெருமான் எதிரே சென்று, அம் கையால் உரித்து – அப் புலியை அழகிய திருக்கையால் உரித்து, அவ்வுழுவை அம் தோலை – அப் புலியின் அழகிய தோலை, தானை ஒப்ப முன்னம் உடுத்தினன் – வஸ்திரமாக முதற்கண் உடுத்தருளினார்.
    முனிவர்கள் முனைப்பு முதற்கண் இங்ஙனமாயிற்று. [ப 38/137]

    இங்கிது போய பின்றை இறுதிசெய் கணிச்சி ஒன்று
    செங்கன லிடையில் தோன்றித் தீயவர் விடுப்ப ஏகிச்
    சங்கரன் தனது முன்னஞ் சார்தலும் அதனைப் பற்றி
    அங்கையில் ஏந்தி நீநம் அடுபடை யாதி என்றான். …… 102

    இங்கு இது போய பின்றை – இங்கு இப்புலி இவ்வாறு ஒழிந்தபிறகு, இறுதி செய் கணிச்சி ஒன்று – இறுதியைச் செய்யும் மழு ஒன்று, செம் கனலிடையில் தோன்றி – சிவந்த யாகாக்கினியின்கண்ணே தோன்றி, தீயவர் விடுப்ப ஏகி – தீயோராகிய முனிவர்கள் விடுப்பச் சென்று, சங்கரன் தனது முன்னம் சார்தலும் – சங்கரனாகிய சிவபெருமா னெதிரே வருதலும், அதனைப் பற்றி அங்கையில் ஏந்தி – அந்த மழுவைப் பிடித்துத் திருக்கையிலேந்தி, நீ நம் அடு படை ஆதி என்றான் – நீ நம்முடைய அடுந்தொழிற்குரிய படையாவாய் என்று பணித்தருளினார். [ப 39/137]

    பின்னுற ஒருமான் அங்கட் பிறந்தது முனிவர் எல்லாம்
    அன்னதை அரன்பால் உய்ப்ப அந்தரத் தெழுந்து பாய்ந்து
    தன்னெடுங் குரலால் வல்லே சராசரம் வீட்டிச் செல்ல
    முன்னவன் உயிர்கள் அற்றால் முடிவுறா தருட்கண் வைத்தான். …… 103

    பின்னுற ஒரு மான் அங்கள் பிறந்தது – பின்னர் ஒரு மான் அந்த யாக குண்டலத்திலே தோன்றியது; முனிவர் யாவரும் அன்னதை அரன்பால் உய்ப்ப – அந்த மானைச் சிவபெருமானிடம் விடுப்ப, அந்தரத்து எழுந்து பாய்ந்து – அது ஆகாயத்தில் எழுந்து பாய்ந்து, தன் நெடும் குரலால் வல்லே சராசரம் வீட்டிச் செல்ல – தனது நெடிய குரலினால் விரைந்து சராசரங்களை அழித்துச் செல்ல, முன்னவன் – சிவபெருமான், அற்றால் – அத் தன்மைத்தாகிய மானால், உயிர்கள் முடிவுறாது – உயிர்கள் இறந்துபடாமல், அருட்கண் வைத்தான் – கிருபாநோக்கஞ் செய்தருளினார். [ப 39/137]

    மற்றதன் பின்றை எந்தை மான்பிணை அதனை நோக்கித்
    தெற்றென விளித்து நந்தஞ் செவியினுக் கணித்தாய் மேவி
    நிற்றலுங் கூவு கென்றே நீடருள் செய்து வாமப்
    பொற்றடங் கையிற் பற்றிப் பொருக்கென ஏந்தி நின்றான். …… 104

    அதன் பின்றை – கிருபாநோக்கஞ் செய்தருளிய பிறகு, எந்தை – எம்பெருமான், மான் பிணை அதனை நோக்கி – அந்த மான்மறியைப் பார்த்து, தெற்றென விளித்து – விரைந்தழைத்து, நம் தம் செவியினுக்கு அணித்தாய் மேவி – நமது செவிக்கு அணிமைக்கண்ணதாய் நின்று, நிற்றலும் கூவுக என்று நீடு அருள் செய்து – நித்தலுங் கூவுக என்று நீண்ட அருள் புரிந்து, வாமம் பொன் தடம் கையிற் பற்றி – அழகிய இடத்திருக்கரத்தாற் பிடித்து, பொருக்கென ஏந்தி நின்றான் – விரைவாக ஏந்திநின்றருளினார். [ப 39/137]

    ஏந்திய பின்னர் வேள்வி எரியழற் கிடையே எண்ணில்
    பாந்தளங் கெழுந்து தீயோர் பணியினாற் சீற்றத் தோடும்
    போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பாற்
    சேர்ந்திடு பணிக ளோடுஞ் செவ்விதிற் புனைந்தான் எங்கோன். …… 105

    ஏந்திய பின்னர் – மான்மறியை ஏந்திய பிறகு, வேள்வி எரி அழற்கு இடை – எரிகின்ற வேள்வித்தீயினிடத்து, எண்ணில் பாந்தள் அங்கு எழுந்து – அளவற்ற பாம்புகள் அங்கே தோன்றி, தீயோர் பணியினால் – கொடிய அம் முனிவர்களின் கட்டளையால், சீற்றத்தோடும் போந்தன – கோபத்தோடுஞ் சென்றன; அவற்றை – அந்தப் பாம்புகளை, மாயோன் புள்ளினுக்கு அஞ்சி – திருமாலின் கருடப் பறவைக்குப் பயந்து, தன்பால் சேர்ந்திடும் பணிகளோடும் – முன்னமே தன்னிடம் சரண்புகுந்த பாம்புகளோடும் ஒன்றுசேர, எங்கோன் செவ்விதின் புனைந்தான் – எம்பெருமான் செப்பமாக அணிந்தருளினார். [ப 40/137]

    பணியெலாம் பணிய தாகிப் பரனிடைத் திகழப் பின்னர்
    அணிகெழு கனலின் நாப்பண் அசனிகள் எழுந்தா லென்னக்
    கணிதமில் பூத வெள்ளங் கதுமென எழலும் நீவிர்
    மணிகிளர் மிடற்றோன் வன்மை மாற்றுதிர் என்றே உய்த்தார். …… 106

    பணி எலாம் பணிது ஆகிப் பரனிடைத் திகழ – பாம்புகளனைத்தும் ஆபரணமாய்ச் சிவபெருமானிடத்து விளங்க, பின்னர் – அதன் பின்பு, அணிகெழு கனலின் நாப்பண் – மந்திராதிகளால் அழகு கெழுமிய அக்கினியின் நடுவே, அசனிகள் எழுந்தால் என்ன – இடிகள் தோன்றினாற் போல, கணிதமில் பூத வெள்ளம் கதுமென எழலும் – அளவற்ற பூதவெள்ளம் விரைந்து தோன்ற, நீவிர் – நீங்கள், மணிகிளர் மிடற்றோன் வன்மை – நீலமணிபோல விளங்குகின்ற கண்டத்தையுடைய சிவபெருமானுடைய வன்மையை, மாற்றுதிர் என்று உய்த்தார் – நீக்குங்கள் என்று விடுத்தார்கள். [ப 40/137]

    ஆரிடர் ஏவல் போற்றி அண்டமுந் துளங்க ஆர்த்துச்
    சாரதர் வருத லோடுஞ் சங்கரன் அவரை நோக்கி
    நீரெமை அகன்றி டாது நிற்றலுந் தானை யாகிச்
    சேருதி ரென்றான் உற்றோர் தீவினை தீர்க்க வல்லான். …… 107

    ஆரிடல் ஏவல் போற்றி – முனிவர்களின் கட்டளையைப் பேணி, அண்டமும் துளங்க ஆர்த்து – அண்டமும் நடுங்க ஆரவாரஞ் செய்து, சாரதர் வருதலோடும் – பூதர்கள் தம்மேல் வர, உற்றோர் தீவினை தீர்க்க வல்லான் சங்கரன் அவரை நோக்கி – தம்மை யடைந்தாரது தீவினையை நீக்க வல்லாராகிய சங்கரர் அப் பூதர்களைப் பார்த்து, நீர் எமை அகன்றிடாது – நீவிர் எம்மை விட்டு விலகாமல், நிற்றலும் தானையாகிச் சேருதிர் என்றான் – எப்பொழுதும் எமது சேனையாகி இருத்திர் என்று பணித்தருளினார். [ப 40/137]

    ஆற்றல் சேர்பூதர் யாரும் ஆதியீ துரைப்ப அன்னான்
    போற்றியே தானை யாகிப் புடையுற நிற்ற லோடுஞ்
    சீற்றமா முனிவர் வேள்வித் தீயில்வெண் டலைதான் ஒன்று
    தோற்றியே உலகம் யாவுந் தொலையநக் கெழுந்த தன்றே. …… 108

    ஆற்றல் சேர் பூதர் யாரும் – வலியமைந்த பூதர்கள் யாவரும், ஆதி ஈது உரைப்ப – ஆதியாகிய பெருமான் இவ்வாறு பணிப்ப, அன்னாற் போற்றி – அப் பெருமானைத் துதித்து, தானையாகிப் புடையுற நிற்றலோடும் – சேனையாகி அவருக்குப் பக்கத்தே பொருந்தி நிற்க, சீற்ற மா முனிவர் வேள்வித்தீயில் வெண்தலை தான் ஒன்று தோன்றி – சீற்றத்தாற் பெரிய முனிவர்களின் யாகத் தீயில் வெண்டலை ஒன்று தோன்றி, உலகம் யாவும் தொலைய நக்கு எழுந்தது – உலகம் முழுவதும் அழியுமாறு சிரித்துக்கொண்டெழுந்தது. [ப 41/137]

    நக்கெழு சிரத்தை அன்னோர் நாதன்மேல் விடுத்த லோடும்
    அக்கணம் அணுக வற்றால் அகிலம திறவா வண்ணம்
    முக்கணன் அருள்செய் தந்த முண்டமுண் டகக்கை பற்றிச்
    செக்கரஞ் சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதி யென்றான். …… 109

    நக்கு எழு சிரத்தை – சிரித்தெழுந்த வெண்டலையை, அன்னோர் நாதன் மேல் விடுத்தலோடும் – அம்முனிவர்கள் சிவபெருமான்மேல் விடுக்க, அக்கணம் அணுக – அந்தக் கணமே அவ்வெண்டலை சிவபெருமானை அணுக, அற்றால் அகிலமது இறவாவண்ணம் – அவ் வெண்டலையால் உலகம் அழியாத பிரகாரம், முக்கணன் அருள் செய்து – சிவபெருமான் அருள்புரிந்து, அந்த முண்டம் முண்டகக் கை பற்றி – அந்த வெண்டலையைத் தாமரை மலர்போன்ற திருக்கரத்தாற் பற்றி, செக்கர் அம் சடை மேல் கொண்டு – செவ்வானம் போன்ற அழகிய சடையில் தரித்து, உன் செயலினைப் புரிதி என்றான் – உன் செயலைச் செய்குதி என்று அருளிச்செய்தார். [ப 41/137]

    அறுகுறை முடிமேற் கொண்ட அமலனை நோக்கி நோக்கி
    மறுகிய முனிவர் தத்தம் வாய்மை மந்திரங் களேவி
    இறுதி செய்திடுதி ரென்ன இனையவை துடியொன் றாகிச்
    செறிதரு புவனம் யாவுஞ் செவிடுற ஒலித்த தன்றே. …… 110

    அதி குறை முடிமேல் கொண்ட அமலனை நோக்கி நோக்கி – அற்ற உடற் குறையாகிய வெண்டலையை முடிமீது கொண்ட சிவபெருமானைப் பார்த்துப் பார்த்து, மறுகிய முனிவர் – கலங்கிய முனிவர்கள், தத்தம் வாய்மை மந்திரங்கள் ஏவி – தங்கள் தங்களுக்குப் பலிதமாகிய மந்திரங்களை ஏவி, இறுதி செய்திடுதிர் என்ன – அழியுங்கள் என்று அபிமந்திரிக்க, இனையவை துடி ஒன்று ஆகி – இம்மந்திரங்கள் ஓர் உடுக்கையாகி, செறிதரு புவனம் யாவும் செவிடு உற ஒலித்தது – செறிந்த புவனங்கள் முழுவதுஞ் செவிடுபடும்படி ஒலித்தது. [ப 41/137]

    பொருவருந் துடியின் ஓதை பொம்மெனக் கேட்ட லோடுந்
    தரணியின் வானி னுள்ள சராசரம் யாவும் ஈசன்
    அருளினால் வீடிற் றில்லை அசனியின் ஆர்ப்புக் கேட்ட
    உரகர் தங்குலங்க ளென்ன ஓய்யென மயங்கிற் றன்றே. …… 111

    பொரு அரும் துடியின் ஓதை மொம்மெனக் கேட்டலோடும் – ஒப்பற்ற உடுக்கையின் ஒலி விரைந்து கேட்டவுடன், தரணியின் வானின் உள்ள சராசரம் யாவும் – மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள சராசரங்கள் அனைத்தும், ஈசன் அருளினால் வீடிற்றில்லை – சிவபெருமானுடைய திருவருளினாலே இறந்ததில்லை யாயினும், அசனியின் ஆர்ப்புக் கேட்ட உரகர் தம் குலங்கள் என்ன – இடியேற்றி னோசை கேட்ட சர்ப்பங்களின் கூட்டம்போல, ஒய்யென மயங்கிற்று – விரைந்து மயக்கங்கொண்டன.
    தொகுதியொருமைபற்றி மயங்கிற்று என்றார். [ப 42/137]

    அத்துடி ஆர்த்துச் செவ்வே அமலன்முன் அணுக மற்றைக்
    கைத்தலம் அதனிற் பற்றிக் கறங்குதி கன்னத் தென்று
    வித்தக மரபில் யாரும் வியப்புற ஏந்தி நின்றான்
    இத்திறம் யாரே செய்வார் என்றனர் முனிவ ரெல்லாம். …… 112

    அத்துடி யார்த்துச் செவ்வே அமலன் முன் அணுக – அவ்வுடுக்கை ஆரவாரஞ் செய்துகொண்டு நேரே சிவபெருமானுக்கு எதிரே வர, மற்றைக் கைத்தலம் அதனில் பற்றி – மற்றையதொரு திருக்கரத்தினா லதனைப் பற்றி, கன்னத்துக் கறங்குதி என்று – நமது காதில் ஒலித்துக்கொண் டிருக்குதி என்று, வித்தக மரபில் – சாதுரியமாயதொரு முறையில், யாரும் வியப்பு உற – யாவரும் வியக்க, ஏந்தி நின்றான் – அவ்வுடுக்கையை ஏந்தியருளினார்; முனிவர் எல்லாம் – முனிவர்களெல்லாம், இத்திறம் யாரே செய்வார் என்றனர் – இவ்வாறு யாவர் தாம் செய்யவல்லா ரென்று வியப்புற்றனர்.
    சாதுரியம் – சாமர்த்தியம் [ப 42/137]

    இனையது கண்டு பின்னும் இறுதிசெய் இறைவற் கின்றால்
    அனைய தென்றறிதல் தேற்றார் அடுசினங் கடவத் தொல்லூழ்
    வினையது விளைவாற் பின்னும் வேள்வியை இயற்றல் உற்றார்
    முனிவரர் கனற்க ணேயோர் முயலகன் எழுந்த தன்றே. …… 113

    இனையது கண்டு பின்னும் – இச் செயலினைக் கண்டதும் மேலும், இறுதி செய் இறைவற்கு – சர்வ சங்கார கருத்தாவாகிய சிவபெருமானுக்கு, அனையது இன்று என்று அறிதல் தேற்றார் – அவ்விறுதி இல்லையா மென்று அறியாராய், அடு சினம் கடவ – அடுகின்ற கோபம் பிடர்பிடித்துந்த, தொல் ஊழ் வினையது விளைவால் – பழைய ஊழ்வினையின் விளைவினால், பின்னும் வேள்வியை முனிவரர் இயற்றலுற்றார் – மேலும் யாகத்தை அந்த முனிவரர்கள் செய்தார்கள், கனற்கண் ஒரு முயலகன் எழுந்தது – யாகாக்கினியின்கண் முயலகன் எனபதொரு பூதந் தோன்றியது. [ப 42/137]

    முயலகன் தன்னை நோக்கி முகமனுஞ் சொற்றுத் தங்கள்
    செயலகன் றிருந்த வேள்வித் தீயையும் விளித்து நந்தம்
    இயலகன் றிடவே செய்த ஈசனை முடித்தி ரென்றே
    மயலகன் றிலாதார் உய்ப்ப வல்விரைந் தணைந்த அம்மா. …… 114

    முயலகன் தன்னை நோக்கி – முயலகனைப் பார்த்து, முகமனும் சொற்று – உபசாரவார்த்தையுங் கூறி, தங்கள் செயல் அகன்று – தமது யாகஞ் செய்யுஞ் செயலையும் விடுத்து, இருந்த வேள்வித் தீயையும் விளித்து – ஆண்டிருந்த யாகாக்கினியையும் அழைத்து, நம் தம் இயல் அகன்றிட செய்த ஈசனை முடித்திர் என்று – நமது நிலையை நீங்கச் செய்த சிவனைக் கொல்லுதிர் என்று கூறி, மயல் அகன்றிலாதார் உய்ப்ப – மயக்கம் நீங்காதவர்களாகிய முனிவர்கள் செலுத்த, வல் விரைந்து அணைந்த – அவைகள் மிக விரைந்து சிவபெருமானை அணுகின. [ப 43/137]

    வன்னியந் தேவும் உட்க வந்திடு கனலை யார்க்கும்
    முன்னவன் ஒருகை ஏந்தி முயலகன் தன்னை மெல்லத்
    தன்னடி அதனால் வீழத் தள்ளிஅக் கமலத் தாளை
    வென்னிடை அருளால் ஊன்றி விண்ணவர் போற்ற நின்றான். …… 115

    வன்னி அம் தேவும் உட்க வந்திடு கனலை – அக்கினிதேவனும் அஞ்சுமாறு வந்த யாகாக்கினியை, யார்க்கும் முன்னவன் ஒரு கை ஏந்தி – எவர்க்கும் முதல்வராகிய சிவபெருமான் ஒரு திருக்கரத்தில் ஏந்தி, முயலகன் தன்னை தன் அடி அதனால் வீழ மெல்லத் தள்ளி – முயலகனைத் தமது பாதத்தால் வீழும்படி மெல்லெனத் தள்ளி, அக்கமலத் தாளை – தள்ளிய அந்தத் தாமரை மலர் போன்ற பாதத்தை, அருளால் வென்னிடை ஊன்றி – திருவருளினால் அதன் முதுகில் ஊன்றி, விண்ணவர் போற்ற நின்றான் – தேவர்கள் துதிக்க நின்றருளினார். [ப 43/137]

    நிற்றலும் அதனைத் தீயோர் நெருப்பெழ விழியா இன்னும்
    உற்றனன் பரமன் அந்தோ உஞற்றி யாமுய்த்த வெல்லாம்
    இற்றன கொல்லோ என்றே இரங்கியே எண்ணில் சாபஞ்
    சொற்றனர் உலக மெல்லாந் தொலைப்பவன் தொலைய வென்றே. …… 116

    நிற்றலும் -முயலகன் மீது பாதத்தை ஊன்றி நின்றருளுதலும், அதனை தீயோர் நெருப்பு எழ விழியா – அச் செயலைத் தீயோராகிய முனிவர்கள் நெருப்பெழப் பார்த்து, அந்தோ – ஐயகோ!, இன்னும் பரமன் உற்றனன் – இன்னமுஞ் சிவன் இறவாதிருந்தனன்; யாம் உஞற்றி உய்த்த எல்லாம் இற்றன கொல் – யாவும் உண்டாக்கி விடுத்த யாவும் அழிந்துபட்டன போலும்; என்று இரங்கி – என்று கூறி இரங்கி, உலகமெல்லாம் தொலைப்பவன் தொலைய என்று – உலகமனைத்தையும் அழிப்பவன் அழிக என்று, எண்ணில் சாபம் சொற்றனர் – அளவற்ற சாபங்களைச் சொன்னார்கள். [ப 44/137].

    சங்கையில் முனிவர் யாருஞ் சாற்றிய சாபம் யாவும்
    எங்கடம் பெருமான் முன்னும் எய்திய தில்லை அன்னோர்
    அங்கவன் தன்பால் உய்க்கும் அளவையில் இறுதி நாளிற்
    பொங்கெரி அதன்மேற் செல்லும் பூளைபோல் மாய்ந்த அன்றே. …… 117

    சங்கை இல் முனிவர் யாரும் – அளவற்ற முனிவ ரனைவரும், சாற்றிய சாபம் யாவும் – சொன்ன சாபம் அனைத்தும், எங்கள் தம் பெருமான் முன்னும் எய்தியது இல்லை – எங்கள் பெருமா னெதிரிலுஞ் சென்றதில்லை; அன்னோர் அங்கு அவன் தன் பால் உய்க்கும் அளவையில் – அம்முனிவர்கள் அவ்விடத்திற் சிவபெருமான்மீது சாபஞ் சொல்லும்போதே, இறுதி நாளில் பொங்கு எரி அதன்மேல் செல்லும் பூளைபோல் – சங்கார காலத்தில் சுவாலிக்கின்ற அக்கினிமீது இடும் பஞ்சு போல, மாய்ந்த – அச்சாபங்கள் அழிந்தன. [ப 44/137]

    சாபமும் பயனின் றாகத் தவத்தர்கள் யாருங் கொண்ட
    கோபமும் நீங்கி ஆற்றல் குறைந்தொரு செயலும் இன்றிச்
    சோபமும் நாணுங் கொண்டு துளங்கியே தொலைவி லாத
    பாபமும் பழியும் பூண்டு படிக்கொரு பொறையாய் நின்றார். …… 118

    சாபமும் பயன் இன்று ஆக – தாமிட்ட சாபமும் பயனற்றதாக, தவத்தர்கள் யாரும் கொண்ட கோபமும் நீங்கி – முனிவர்கள் அனைவரும் தாம் கொண்ட கோபமுந் தணிந்து, ஆற்றல் குறைந்து – வலியிழந்து, ஒரு செயலும் இன்றி – யாதொரு செயலுமில்லாமல், சோபமும் நாணும் கொண்டு – வாட்டமும் நாணமும் கொண்டு, துளங்கி – நடுங்கி, தொலைவிலாத பாவமும் பழியும் பூண்டு – தொலையாத பாவமும் பழியும் பூண்டு – தொலையாத பாவமும் பழியுஞ் சுமந்து, படிக்கு ஒரு பொறையாய் நின்றார் – பூமிக்கு ஒரு சுமையாய் வாள நின்றார்கள். [ ப 44/137]

    ஏற்றமில் முனிவர் தங்கள் ஏழைமை தனையென் னென்று
    சாற்றுதும் இறுதி இல்லாத் தாணுவை முடிப்பான் வேள்வி
    ஆற்றினர் பலவும் உய்த்தார் அறைந்தனர் சாபம் அற்றால்
    மாற்றிட அற்றோ தங்கள் வன்மையும் இழந்தார் மாதோ. …… 119

    ஏற்றமில் முனிவர் தங்கள் ஏழையை தனை – உய்வில்லாத முனிவர்களின் ஏழைமைத்தன்மையை, என் என்று சாற்றும் – என்ன என்று உரைப்போம்; இறுதி இல்லாத் தாணுவை – என்றும் அழிவில்லாத அசைவற்ற பரம்பொருளை, முடிப்பான் வேள்வி ஆற்றினர் – அழிக்கும்பொருட்டு வேள்வி செய்தார்கள்; பலவும் உய்த்தார் – பலவற்றையும் ஏவினார்கள்; சாபம் அறைந்தனர் – சாமமிட்டார்கள்; அற்றால் மாற்றிட வற்றோ – அவ்வாற்றால் அழித்தல் கூடுவதாமோ; தங்கள் வன்மையும் இழந்தார் தங்கள் செயலாலே தங்கள் வன்மையையும் இழந்தார்கள். [ப 45/137]

    கடுக்கையும் நதியும் பாம்புங் கலைமதிக் கொழுந்துஞ் சென்னி
    முடித்தவன் பதத்தில் ஊன்று முயலகன் மெல்ல மெல்ல
    எடுத்தெடுத் தசைத்த லோடும் ஏதுவங் கதனை நோக்கி
    நடித்தனன் என்றும் நீங்கா நடம்புரி கின்ற தேபோல். …… 120

    கங்கையும் நதியும் பாம்பும் கலைமதிக் கொழுந்தும் சென்னி முடித்தவன் – கொன்றையையுங் கங்கையையும் பாம்பையும் கலையாகிய பாலசந்திரனையுஞ் சிரசில் அணிந்தவராகிய சிவபெருமான், பதத்தில் ஊன்று முயலகன் – திருவடியால் ஊன்றிய முயலகன், மெல்ல மெல்ல எடுத்து எடுத்து அசைதலோடும் – மெல்ல மெல்லத் தலையை எடுது எடுத்து அசைப்ப, அங்கு அதனை ஏது நோக்கி – அங்கு அவ்வசைப்பை ஓர் ஏதுவாகக் கொண்டு, என்றும் நீங்கா நடம் புரிகின்றது போல நடித்தனன் -அநவரத தாண்டம் புரிவது போல நடித்தருளினார்.
    அசைப்பு வியாசமாக நடித்தனன் என்க. [ப 45/137]

    ஆண்டவ ணிமையா முக்கண் ஆதிநா யகன்அஞ் ஞான்று
    தாண்டவம் புரித லோடுஞ் சகமெலாந் துளங்கிற் றங்கண்
    ஈண்டிய வுயிர்கள் அச்சுற் றிரங்கிய நடுக்கம் எய்தி
    வீண்டனர் வேள்வி செய்து வினையினை ஈட்டும் வெய்யோர். …… 121

    ஆண்டு அவன் அஞ்ஞான்று – அவ்விடத்தில் அப்பொழுது, இமையாமுக்கண் ஆதி நாயகன் – இமையாத மூன்று கண்களையுடைய முதல்வராகிய சிவபெருமான், தாண்டவம் புரிதலோடும் – திருநடனஞ் செய்ய, சகம் எல்லாம் துளங்கிற்று – உலகம் அனைத்தும் நடுங்கியது; அங்கண் ஈண்டிய உயிர்கள் அச்சுற்று இரங்கி – அவ்விடத்துச் செறிந்த உயிர்கள் அஞ்சி இரங்கின; வேள்வி செய்து வினையினை ஈட்டும் வெய்யோர் நடுக்கம் எய்தி வீண்டனர் – யாகதைச் செய்து தீவினையை ஈட்டுகின்ற கொடியோரான முனிவர்கள் நடுக்கமுற்று வீழ்ந்தார்கள்.
    வீழ்ந்தனர் வீண்டனர் என்றாயிற்று. [ப 45/137]

    நஞ்சணி கண்டத் தெந்தை நடநவில் செய்கை தன்னைக்
    கஞ்சனும் ஆழி யானுங் கண்டுகண் களித்துப் போற்றி
    நெஞ்சகம் மகிழ்ந்து பாங்கர் நின்றனர் மகவான் தன்னோ
    டெஞ்சிய அமரர் யாரும் இறைஞ்சுவார் போல வீழ்ந்தார். …… 122

    நஞ்சு அணி கண்டத்து எந்தை நடம் நவில் செய்கைதன்னை – நஞ்சையணிந்த கண்டத்தையுடைய எம்பெருமான் நடனஞ் செய்யுஞ் செயலினை, கஞ்சலும் ஆழியானும் கண்டு – கண்டு பிராமவுந் திருமாலுந் தரிசித்து, கண்களித்துப் போற்றி – கண்களித்துத் துதித்து, நெஞ்சம் மகிழ்ந்து பாங்கர் நின்றனர் – மனம்மகிழ்ந்து பக்கத்திற் சென்று நின்றார்கள்; மகவான் தன்னொடு எஞ்சிய அமரர் யாரும் – இந்திரனும் மற்றைய தேவர்கள் யாவரும், இறைஞ்சுவார் போல வீழ்ந்தார்கள் – வணங்குபவரைப்போல வீழ்ந்தார்கள்.
    நிற்ற லாற்றாமையான் வீழ்ந்தார் என்க. எஞ்சுதல் என்க. எஞ்சுதல் அஞ்சுதலுமாம். [ப 46/137]

    அருளொடு நிருத்தஞ் செய்யும் அண்ணலிப் புவனம் யாவும்
    வெருவுறு செயலும் வீழும் விண்ணவர் அயர்வு நோக்கித்
    திருநட மொழிந்து நிற்பத் தேவருந் தேவர் கோனும்
    பருவுடன் எழுந்து நின்று கைதொழூஉப் பாங்கர் உற்றார். …… 123

    அருளொடு நிருத்தம் செய்யும் அண்ணல் – திருவருளாலே திருதிருத்தஞ்செய்யும் இறைவர், இப்புவனம் யாவும் – இப் புவனம் அனைத்தும், வெரு உறும் செயலும் – அஞ்சுந் தன்மையையும், வீழும் விண்ணவர் அயர்வும் நோக்கி – வீழுகின்ற தேவர்களின் அயர்ச்சியையும் நோக்கி, திரு நடம் ஒழிந்து நிற்ப – திருநடனத்தை ஒழிந்து நிற்ப, தேவரும் தேவர்கோனும் பரிவுடன் எழுந்து நின்று – தேவர்களும் இந்திரனும் அன்போடு எழுந்து நின்று, கை தொழூஉ பாங்கர் உற்றார் – கைகூப்பி வணங்கி பக்கத்தே சென்று நின்றார்கள். [ப 46/137]

    மாதொர்பா கத்தோன் தன்னை மதித்திடா முனிவர்க் கெல்லாம்
    போதமே யருள லோடும் பொருக்கென எழுந்து பொல்லா
    ஏதமே இயற்று கின்ற எம்பெரும் பிழைகள் யாவும்
    நாதநீ பொறுத்தி என்று நடநவில் கழல்முன் வீழ்ந்தார். …… 124

    மாது ஓர் பாகத்தோன் – உமாதேவி பாகராகிய சிவபெருமான், தன்னை மதித்திடா முனிவர்க்கு எல்லாம் – தம்மை மதியாத முனிவர் அனைவருக்கும், போதமே அருளலோடும் – ஞானத்தைக் கொடுத்தருளுதலும், பொருக்கென எழுந்து – வீழ்ந்த அம் முனிவர்கள் விரைந்தெழுந்து, பொல்லாத ஏதமே இயற்றுகின்ற – பொல்லாத குற்றத்தையே செய்கின்ற, எம் பெரும் பிழைகள்யாவும் – எமது பிழைகள் அனைத்தையும், நாத நீ பொறுத்தி என்று – பரமபதியே தேவரீர் பொருத்தருள்க என்று, நடம் நவில் கழல் முன் வீழ்ந்தார் – நடனஞ் செய்யுந் திருவடிகளின் எதிரில் விழுந்து வணங்கினார்கள். [ப 46/137]

    பொறுத்தி எம்பிழையை என்றே போற்றிசெய் முனிவர் தங்கள்
    திறத்தினை நோக்கி நந்தஞ் செந்நெறி யொழுகித் தீய
    மறத்தினை அகற்றி மேலை மாதவம் புரிதி ரென்று
    நிறுத்தினன் அடையா தார்க்கும் நீடருள் புரியும் நித்தன். …… 125

    எம் பிழையைப் பொறுத்தி என்று – எங்கள் குற்றங்களைப் பொறுத்துதருள்க என்று, போற்றி செய் முனிவர் தங்கள் திறத்தினை – துதிசெய்கின்ற முனிவர்களின் செய்கையை, அடையாதார்க்கும் நீடு அருள் புரியும் நித்தன் – பகைவர்க்கும் மிக்க திருவருள் புரியும் பரம கருணாநிதியாகிய சிவபெருமான், நோக்கி – திருநோக்கஞ் செய்து, நம் தம் செம் நெறி ஒழுகி – நமது செம்மையாகிய வைதிக சைவ நெறியில் ஒழுகி, தீய மறத்தினை அகற்றி – கொடிய மறச் செயல்களை விடுத்து, மேலை மா தவம் புரிதிர் என்று – மேலாகிய பெரிய தவ்த்தைச் செய்யுங்கள் என்று ஆஞ்ஞை செய்து, நிறுத்தினன் – அம்முனிவர்களை அவ்விடத்தில் லிருக்குப்படி நிறுத்தியருளினார். [ப 47/137]

    முனிவரை நிறுவி அங்கண் முக்கணன் மீண்டு வெள்ளிப்
    பனிவரை ஏகி மாலும் பங்கயத் தவனும் வானோர்
    அனைவருந் தத்தம் பாலில் அடைந்திட அருளி அம்பொற்
    புனையிழை உமையி னோடும் பொருந்திவீற் றிருந்தான் அன்றே. …… 126

    முனிவரை அங்கண் நிறுவி – முனிவர்களை அங்கே நிறுத்தி, முக்கணன் மீண்டு – மூன்று கண்களையுடைய சிவபெருமான் அவ்விடத்தினின்றும் மீண்டு, வெள்ளிப் பனிவரி ஏகி – குளிர்சி பொருந்திய வெள்ளிமலையாகிய திருக்கைலையை அடைந்து, மாலும் பங்கயத்தவனும் வானோர் அனைவரும் – திருமாலும் பிரமாவுந் தேவர்க ளனைவரும், தத்தம் பாலில் அடைந்திட அருளி – தத்தம் இடங்களுக்குச் செல்லும்படி அநுக்கிரகஞ் செய்து, அம்பொன் புனை இழை உமையினோடும் பொருந்தி வீற்றிருந்தான் – அழகிய பொன்னாபரணம் புனைந்த உமாதேவியாரோடுங் கலந்து வீற்றிருந்தருளினார். [ப 47/137]

    உரித்திடும் உழுவை வன்தோல் உரிமுத லுள்ள எல்லாந்
    தரித்ததும் எங்கள் நாதன் தாருகா வனத்தில் அன்று
    நிருத்தம தியற்றி நின்ற நீர்மையும் பிறவும் எல்லாம்
    விரித்திவண் உரைத்தாங் கேட்டி மேலதும் இயம்பு கின்றாம். …… 127

    உரித்திடும் உழுவை வன் தோல் உரி முதல் உள்ள எல்லாம் – உரிக்கப்படுகின்ற புலியின் வலிய தோல் முதலாக உள்ளவைகளையெல்லாம், எங்கள் நாதன் தரித்ததும் – எமதிறைவராகிய சிவபெருமான் தரித்தலையும், தாருகாவனத்தில் அன்று நிருத்தமது இயற்றி நின்ற நீர்மையும் – தாருகா வனத்தில் அந்நாளில் திருநிருத்தஞ் செய்து நின்ற தன்மையையும், பிறவும் – பிறவற்றையும், இவண் விரித்து எல்லாம் உரைத்தாம் – இவ்விடத்தில் விரித்து எல்லாம் சொன்னோம்; மேலதும் – இனிமேல் உரைக்கநின்றதனையும், இயம்புகின்றோம் கேட்டி – உரைப்போம் கேட்பாயாக.
    தோல் உரி – தோலாகிய உரி; ஒருபொருட் பன்மொழி. மேலது, ‘தந்தியின் புன்றோல் வலியதன்புயம் போர்க்குமோ; என முன் வினவியதால், உரைக்க நின்ற கதை யென்க.

    வேறு
    துங்க மால்கரி யாக்கையின் உலகெலாந் தொலைக்கும்
    வெங்க யாசுரன் என்பவன் மேருவின் மிசைபோய்ப்
    பங்க யாசனற் போற்றி செய்தருந் தவம்பயில
    அங்கண் நாடியே தோன்றினன் உலகெலாம் அளித்தோன். …… 128

    துங்க மால் கரி யாக்கையின் – பெரிய மயக்கம் பொருந்திய யானையின் உருவத்தினையுடைய, உலகெலாம் தொலைக்கும் – உலகம் முழுவதையும் அழிக்கின்ற, வெம் கயாசுரன் என்பவன் – கொடிய காயாசுரன் என்பவன், மேருவின் மிசை போய் – மேருமலைக்கட் சென்று, பங்க யாசனற் போற்றிசெய்து அருந்தவம் பயில – பிரமதேவரைத் துதித்து அரிய தவத்தை செய்ய, அங்கண் நாடி – அவ்விடத்தின்கண் அதனை யறிந்து, உலகெலாம் அளிந்தோன் தோன்றினர் – உலகம் அனைத்தையும் படைந்த பிரமதேவர் தோன்றினார். [ப 48/127]

    வேண்டு கின்றதென் மொழிகென நான்முகன் விளம்ப
    ஆண்டு நோற்றிடுங் கயாசுரன் என்றனக் கடிகேள்
    மாண்டி டாதபே ராயுளும் ஆற்றலும் வயமும்
    ஈண்டு நல்குதி என்றலும் நகைத்திவை இசைப்பான். …… 129

    வேண்டுகின்றது என நீ விரும்புவது யாது; மொழிக என நான்முகன் விளம்ப – உரைப்பாயாக என்று பிரமதேவர் கூற, ஆண்டு நோற்றிடும் கயாசுரன் – அங்கே தவஞ்செய்யுங் கயாசுரன், அடிகேள் – தேவரீர், என் தனக்கு மாண்டிடாத பேர் ஆயுளும் – எனக்கு அழிவில்லாத நீண்ட ஆயுளும், ஆற்றலும் வயமும் – வலியும் வென்றியும், ஈண்டு நல்குதி என்றலும் – இப்பொழுது தந்தருளும் என்று வேண்டுதலும், நகைத்து இவைஇசைப்பான் – பிரமதேவர் சிரித்து இவற்றைக் கூறுவார். [ப 48/137]

    இந்த வண்ணநீ வேண்டிய தளித்தனம் இகலில்
    அந்தி வண்ணன்நேர் சென்றிடல் சேறியேல் அந்நாட்
    சிந்தும் இவ்வரங் கடைப்பிடி ஈதெனச் செப்பி
    உந்தி வந்தவன் போயினன் தனதுபே ருலகில். …… 130

    நீ வேண்டியது இந்த வண்ணம் அளித்தனம் – நீ விரும்பியதை விரும்பியவாறே தந்தோம்; இகல் இல் அந்தி வண்ணன் நேர் சென்றிடல் – ஒப்பில்லாத அந்திவண்ணரான சிவபெருமான் எதிரிற் செல்லற்க; சேறியேல் – செல்வாயாயின், அந்நாள் இவ்வரம் சிந்தும் – அநாளில் இவ்வரம் அழியும்; ஈது கடைப்பிடி எனச் செப்பி – இதனைக் கடைப்பிடிக்கக் கடமை என்று கூறி, உந்தி வந்தனன் தனது பேருலகில் போயினன் – உந்திக் கமலத்திற் பிறந்த பிரமதேவர் தமது பெரிய உலகத்துக்குச் சென்றார்; [ப 49/137]

    அன்ன காலையில் கயாசுரன் என்பவன் அயன்சொல்
    உன்னி ஈசன்மேற் போகலம் ஒழிந்தவர் தம்பால்
    துன்னி வெஞ்சமர் ஆற்றி எவ்வு லகமுந் தொலைத்தே
    இன்னலே புரிந்திருத் தும்என் றுன்னியே எழுந்தான். …… 131

    அன்ன காலையில் – அப்பொழுது, காயாசுரன் என்பவன் அயன் சொல் உன்னி – கயாசுரனானவன் பிரமதேவரின் கூற்றைச் சிந்தித்து, ஈசன்மேல் போகலம் – சிவபெருமான்மீது போர் மேற்கொண்டு செல்லோம்; ஒழிந்தவர் தம்பால் துன்னி – ஏனையோரிடத்துச் சென்று, வெம் சமர் ஆற்றி – கொடும் போர் புரிந்து, எவ்வுலகமும் தொலைத்து – எல்லா உலகங்களையும் அழித்து, இன்னலே புரிந்து இருத்தும் – துன்பமே செய்துகொண்டிருப்போம்; என்று உன்னி எழுந்தான் – என்று கருதி எழுந்தான். [ப 49/137]

    எழுதல் கொண்டிடும் அவுணர்கோன் அமரர்கள் யாருங்
    குழுமியே அமர்வான் பதந்தொ றுந்தொறுங் குறுகி
    வழுவியே அவர்முரிந் திடப்பொ ருதுமற் றவரூர்
    முழுது மட்டுமா சுவர்க்கமேல் ஏகினன் முனிவால். …… 132

    எழுதல் கொண்டிடும் அவணர்கோன் – போர்மேற்கொண்டு எழுகின்ற அசுரர்க் கரசனான கயாசுரன், அமரர்கள் யாரும் குழுமி அமர் வான் பதம் தொறும் தொறும் குறுகி – தேவர்க ளெல்லாங் குழுமி வாழும் வானத்திலுள்ள பதங்கள்தோறும் பதங்கள்தோறுஞ் சென்று, வழுவி அவர் முரிந்திடப்பொருது – நிலைகெட்டு அவர்கள் தோற்றோடுமாறு போர்செய்து, அவர் ஊர் முழுதும் அட்டு – அவர்களுடைய பதங்கள் அனைத்தையும் அழித்து, மாசுவர்க்கமேல் முனிவால் ஏகினன் – பெரிய சுவர்க்கத்தின் மீது கோபத்தோடு சென்றான் [ப 49/137]

    போகி யோட மராற்றியே அன்னவன் புறந்தந்
    தேகவே துரந்துயர்த் திடுநாள் மருப்பி யானைத்
    தோகை வானுதி பற்றியே பன்முறை சுலவி
    மாக யாசுரன் ஓச்சினன் மகபதி மயங்க. …… 133

    போகியோடு அமர் ஆற்றி – போகத்துக் குரியோனான இந்திரனோடு போர் செய்து, அன்னவன் புறம் தந்து ஏக துரந்து – அவ்விந்திரன் புறங்காட்டி ஓடும்படி துரத்தி, உயர்த்திடு – வாகனமாக உயர்த்திய, நால் மருப்பு யானை தோகை வால் நுதி பற்றி – நான்கு கொம்புகளையுடைய ஐராவத யானையின் தோகையாகிய வாலின் நுதியிற் பிடித்து, பன்முறை கல்வி – அதனைப் பல முறை சுற்றி, மகபதி மயங்க – இந்திரன் மயக்கங் கொள்ள, மா காயாசுரன் ஓச்சினன் – பெரிய கயாசுரன் வீசி யெறிந்தான். [ப 50/137]

    பின்னர் அன்னதோர் பொன்னகர் அழித்தனன் பெயர்ந்து
    துன்னு மெண்டிசைக் காவலர் தமையெலாந் துரந்து
    தன்னி னங்களாம் அவுணர்கள் தம்மையுஞ் சாடி
    வன்னி யஞ்சிகை அரக்கர்தங் குழுவையும் மாய்த்தான். …… 134

    பின்னர் – அதன்மேல், ஒர் அன்னது பொன் நகர் அழித்தனன் பெயர்ந்து – ஒப்பில்லாததாகிய அந்தச் சுவர்க்க உலகத்தை அழித்து அவ்விடத்தினின்றும் நீங்கி, துன்னும் எண் திசைக் காவலர் தமையெலாம் துரந்து – நெருங்கிய அட்டதிக்குப் பாலகர்களைத் துரத்தி, தன் இனங்களாம் அவுணர்கள் தம்மையும் சாடி – தனது இனமாகவுள்ள அசுரர்களையுங் கொன்று, வன்னிசிகை அரக்கர்தம் குழுவையும் மாய்த்தான் – அக்கினிபோன்ற சிகையினையுடைய இராக்கதர் கூட்டத்தையும் அழித்தான்.
    அம், சாரியை [ப 50/137]

    மஞ்சு நேர்தரு கயாசுரன் புவிமிசை வைகி
    வெஞ்சி னங்கொடே மக்கள்தந் தொகையெலாம் வீட்டி
    நஞ்ச மாமெனத் திரிதலும் நாடி நற்றவர்கள்
    அஞ்சி யோடியே அரனமர் காசியை யடைந்தார். …… 135

    மஞ்சு நேர்தரு கயாசுரன் – மேகம் போன்ற கரிய கயாசுரன், புவிமிசை வைகி – பூமிக்கு வந்து அங்கே தங்கி, வெம் சினம் கொடு – கொடிய கோபங்கொண்டு, மக்கள் தம் தொகையெலாம் வீட்டி – மக்கட் கூட்டத்தை அழித்து, நஞ்சம் ஆம் எனத் திரிதலும் – ஆலகால விடம் போல எங்குஞ் சஞ்சரித்தலும், நல் தவர்கள் நாடி – நல்ல தவத்தையுடைய முனிவர்கள் அவன் செயலை உணர்ந்து, அஞ்சி ஓடி – அவனுக்குப் பயந்து ஓடி, அரன் அமர் காசியை அடைந்தார் – சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற காசி என்கின்ற புண்ணி க்ஷேத்திரத்தை யடைந்தார்கள். [ப 50/137]

    அருந்த வத்தர்கள் அடைதலுங் கயாசுரன் அவரைத்
    துரந்து காசியிற் சென்றிட அனையவர் துளங்கித்
    திருந்தும் அந்நகர் வாணர்தங் கிளையொடுஞ் செறிந்து
    விரைந்து போய்மணி கன்னிகை புகுந்தனர் வெருவி. …… 136

    அரும் தவத்தர்கள் அடைதலும் – அரிய தவத்தையுடைய முனிவர்கள் காசியை அடைதலும், கயாசுரன் அவரைத் துரந்து காசியில் சென்றிட -காயாசுரன் அவர்களைத் துரத்திக்கொண்டு காசிக்கட் செல்ல, அனையவர் துளங்கி – அம்முனிவர்கள் நடுங்கி, திருத்தும் அந்நகர் வாணர்தம் கிளையொடும் செறிந்து – திருத்தம் பொருந்திய அந்த நகரவாசிகளாகிய கூட்டத்தோடு கலந்து, விரைந்து போய் – விரைந்து சென்று, வெருவி – அஞ்சி, மணி கன்னிகை புகுந்தனர் – மணிகர்ணிகை என்னும் ஆலயத்துட் புகுந்தார்கள். [ப 51/137]

    இனிது வித்திய தம்பயன் ஈவதே என்னத்
    தனது மந்திரம் முடிபவர் செவியிடைச் சாற்றிப்
    புனித மாயதன் னுருத்திர வடிவருள் புரியும்
    அனக நாயகற் பணிந்துநின் றின்னவா றறைவார். …… 137

    இனிது வித்திய – இனிதாக வித்திய வித்துக்கள், தம்பயன் ஈவது என்ன – தம்பயனை நல்குவது போல, தனது மந்திரம் – தமது மந்திரமானது, முடிபவர் செவியிடைச் சாற்றி – அங்கே இறப்பவர்களின் காதில் தம்மால் உபதேசிக்கப்பட்டு, புனிதமாய தன் உருந்திர வடிவு – புனிதமாகிய தமது உருத்திரவடிவாகிய சாரூபத்தை, அருள் புரியும் – அவர்களுக்கு அருள்புரிதலைச் செய்கின்ற, அனக நாயகற் பணிந்து நின்று – பாவமில்லாதவராகிய விசுவநாதரை வணங்கி நின்று, இன்னவாறு அறைவார் – இவ்வாறு கூறுவார்கள்.
    வித்து மரத்தை உதவுவது போல மந்திரம் உருத்திர வடிவத்தை அருளுகின்ற தென்க. மந்திரம் – பஞ்சாக்கர மந்திரம்; தாரகமாகிய பிரணவம் எனினுமாம். மந்திரம் அருள்புரியும் நாயகன் என்க. மந்திரத்தின் வினையாய அருள்புரியுமென்பது நாயகன் என்பதனோடு முடிந்தது. [ப 51/137]

    வெய்ய தந்தியாய் வந்தொரு தானவன் விரைவில்
    வைய கத்தையட் டெம்மையுங் கொல்லிய வருவான்
    ஐய நின்னதாள் அரணமென் றடைந்தனம் அடியேம்
    உய்ய வேயருள் புரியெனப் போற்றியே உறலும். …… 138

    வெய்ய தந்தியாய் – கொடிய யானையாய் , ஒரு தானவன் வந்து – அசுரன் ஒருவன் தோன்றி, வையகத்தை விரைவில் அட்டு – உலகினை விரைவில் அழித்து, எம்மையும் கொல்லிய வருவான் – எம்மையுங் கொல்லும்படி வருவானாயினான்; ஐய – சுவாமீ, நின்ன தாள் அரணம் என்று அடைந்தனம் – தேவரீருடைய திருவடிகளே புகலிடம் என்று அடைந்தேம்; அடியேம் உய்ய அருள் புரி – அடியேங்கள் உய்யும்படி திருவருள் புரியும்; எனப் போற்றி உறலும் – என்று துதித்துச் சரணடைதலும். [ப 51/137]

    அகில நாயகன் மந்திரத் தப்பரி சனர்கள்
    தொகையி னோடுபோய் அரணமென் றடைதரு தொடர்பை
    முகிலை நேருருக் கயாசுரன் காணுறா முனியா
    இகலி யேமணி கன்னிகை வாயில்வந் திறுத்தான். …… 139

    அகில நாயகன் மந்திரத்து – விசுவநாதருடைய ஆலயத்தின்கண், அப்பரிசனர்கள் தொகையினோடு போய் – அத் தொண்டர்கள் கூட்டத்தோடு கலந்து சென்று, அரணம் என்று அடை தரு தொடர்பை – சரணம் என்று அம்முனிவர்கள் அடைகின்ற இயல்பை, முகிலை நேர் உரு கயாசுரன் காணுறா முனியா – முகிலையொத்த உருவத்தினையுடைய கயாசுரன் கண்டு கோபித்து, இகலி – பகைத்து, மணிகன்னிகை வாயில் வந்து இறுத்தான் – மணிகர்ணிகை என்னும் ஆலயத்தின் வாயிலை வந்து அடைந்தான்.
    அகப்பரிசனர் அப்பரிசனர் ஆயிற்றெனினுமாம். [ப 52/137]

    வாயில் வந்திறுத் துருமெனத் தெழித்தலும் மதித்துக்
    கோயி லெய்திய சனமெலாம் உளங்குலை குலையா
    ஆய கண்ணுதல் நிமலனைத் தழீஇ மயக்கடையத்
    தீயன் அன்னது நாடியும் அடும்வகை செறுத்தான். …… 140

    வாயில் வந்து இறுத்து – வாயிலை வந்தடைந்து, உரும் எனத் தெழித்தலும் – இடிபோல உரப்புதலும், மதித்து – அதனையுணர்ந்து, கோயில் எய்தியசனம் எலாம் உளம் குலைகுலையா – கோயிலுட் புகுந்த சனங்க ளெல்லாம் மனம் நடுநடுங்கி, ஆய கண்ணுதல் நிமலனை தழீஇ – அங்கெழுந்தருளிய நெற்றிக் கண்ணராகிய விசுவநாதப் பெருமானைத் தழுவி, மயக்கு அடைய – மயக்கத்தைப் பொருந்த, தீயன் அன்னது நாடியும் – தீயன் அதனை உணர்ந்தும், அடும் வகை – கொல்லும்படி, செறுத்தான் – விசுவநாதப் பெருமானைச் சமீபித்தான்.
    நாடியும், ஊழிருந்தவாற்றான் வரத்தை மறந்து செறுத்தா னென்க [ப 52/137]

    செறுத்து மற்றவன் செல்லுழித் தேவர்கள் உய்யக்
    கறுத்த கந்தரத் தண்ணலாங் கத்திறங் கண்டு
    குறித்தெ லாமடும் உக்கிர வடிவினைக் கொண்டு
    நிறுத்தும் அண்டமேல் உச்சியின் முடிதொட நிமிர்ந்தான். …… 141

    அவன் செறுத்துச் செல்லுழி – அக் கயாசுரன் சமீபித்துச் செல்லுஞ் சமயத்தில், தேவர்கள் உய்யக் கறுத்த கந்தரத்து அண்ணல் – தேவர்க ளுய்யும் பொருட்டு நஞ்சுண்டு கறுத்த கண்டத்தினராகிய சிவபெருமான், ஆங்கு அத்திறம் கண்டு – அங்கே கயாசுரனது அவ்வியல்பைக் கண்டு, குறித்து எலாம் அடும் உக்கிர வடிவினைக் கொண்டு – குறிக்கொண்டு உலகம் முழுவதையும் அழிக்கின்ற உக்கிர வடிவத்தை எடுத்து, நிறுத்தும் அண்ட உச்சிமேல் – தாம் நிறுவும் அண்ட முகட்டின்மீது, முடி தொட நிமிர்ந்தான் – முடி பொருந்த நிமிர்ந்தருளினார். [ப 52/137]

    விண்ணு லாவிய அமரரும் முனிவரும் விழித்துக்
    கண்ணின் நாடரி தெனவிழி பொத்தினர் கவல
    அண்ணல் ஆயிர கோடிஆ தவர்திரண் டதுபோல்
    எண்ணி லாதபே ரொளியொடு தோன்றினன் எங்கோன். …… 142

    விண் உலாவிய அமரரும் முனிவரும் – ஆகாயத்திற் சஞ்சரித்த தேவர்களும் முனிவர்களும், கண்ணின் விழித்து நாடரிது என – கண்களினால் விழித்துக் கண்டற்கரியது என்று, விழி பொத்தினர் கவல – கண்களை மூடினராய்க் கவலைகொள்ள, அண்ணல் ஆயிரம்கோடி ஆதவர் திரண்டது போல் – பெருமையிற் சிறந்த ஆயிரகோடி சூரியர்கள் ஒருங்கு திரண்டாற்போல, எண்ணிலாத பேர் ஒளி ஒடு – அளவிட முடியாத மிக்க பிரகாசத்தோடு, எம்கோன் தோன்றினன் – எம்பெருமான் தோன்றியருளினார். [ப 53/137]

    உக்கி ரப்பெரு வடிவுகொண் டெம்பிரான் ஒருகால்
    நக்கு மெல்லென உரப்பலும் நடுங்கின அகிலம்
    அக்கொ டுந்தொனி ஒழிந்தில துகம்பல அயனும்
    மிக்க தேவரும் அவ்வொலி கேட்டலும் வெருண்டார். …… 143

    எம்பிரான் உக்கிரப் பெரு வடிவுகொண்டு – எம்பெருமான் உக்கிரப் பெரு வடிவத்தைக்கொண்டு, ஒருகால் நக்கு – ஒருமுறை சிரித்து, மெல்லென உரப்பலும் – மெல்லென்று உரப்புதலும், அகிலம் நடுங்கின – உலகங்கள் நடுங்கின; அக்கொடும் தொனி உகம் பல ஒழிந்திலது – அக்கடிய ஓசை பல உக காலம் நீங்கா தொலித்தது; அ ஒலி கேட்டலும் – அவ்வொலியைக் கேட்டவுடன், அயனும் மிக்க தேவரும் வெருண்டனர்- பிரமாவும் எண்ணில்லாத தேவர்களும் அஞ்சினார்கள். [ப 58/137].

    சொற்ற இத்திறம் உக்கிர வடிவொடுந் தோன்றிக்
    கொற்ற மால்கரி அவுணன்முன் எம்பிரான் குறுக
    மற்றி வன்சிவ னாமெனத் தேறியும் மலைவான்
    உற்று நின்றனன் அயர்த்தனன் மலரயன் உரையே. …… 144

    சொற்ற இத்திறம் – உரைத்த இந்தப் பிரகாரம், உக்கிர வடிவொடும் தோன்றி – உக்கிர வடிவத்தோடு தோன்றி, எம்பிரான் – எம்பெருமான், கொற்றல் மால் கரி அவுணன் முன் குறுக – வெற்றியுடைய பெரிய கயாசுரனுக்கு எதிரிற் செல்லாநிற்ப, இவன் சிவனாம் எனத் தேறியும் – இவ்வுக்கிர வடிவத்தினர் சிவபெருமானாகும் என்று அறிந்தும், மலைவான் உற்று நின்றனன் – போர் புரியும்பொருட்டு எதிர்த்து நின்றான்; மலர் அயன் உரை அயர்த்தனன் – பிரமாவின் வார்த்தையை அப்பொழுது மறந்தான்.
    அயன் உரையாவது, ‘அந்திவண்ணனேர் சென்றிடேல் சேறியேல் சிந்துமிவ்வரம்; கடைப்பிடி’ என்பது. [ப 54/137]

    மதித்து வேழமாந் தானவன் எதிர்தலும் வடவை
    உதித்த வன்னியும் அச்சுற எரிவிழித் தொருதன்
    கதித்த தாள்கொடு தள்ளவே கயாசுரன் கவிழ்ந்து
    பதைத்து வீழ்தலும் மிதித்தனன் சிரத்தையோர் பதத்தால். …… 145

    வேழமாம் தானவன் – கயாசுரன், மதித்து – தன்னைப் பொருள் செய்து, எதிர்தலும் – விசுவநாதப் பெருமானை எதிர்த்து வருதலும், வடமை உதித்த வன்னியும் அச்சுற – பெட்டைக் குதிரையின் முகத்தி லுதித்த அக்கினியும் அச்சங்கொள்ள, எரி விழித்து – அக்கினி காலப் பார்த்து, தன் கதிக்கு ஒரு தாள்கொடு தள்ள – தமது மேலெழுந்த திருவடியால் உதைத்து தள்ள, கயாசுரன் பதைத்துக் கவிழ்ந்து வீழ்தலும் – கயாசுரன் பதைத்துக் குப்புற விழுதலும், சிரத்தை ஓர் பதத்தால் மிதித்தனன் – அவனுடைய தலையை மற்றைத் திருவடியால் மிதித்தருளினார். [ப 54/137]

    ஒருப தத்தினைக் கவானுறுத் திருகரத் துகிரால்
    வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவக்
    குருதி கக்கியே ஒலிட அவுணர்தங் குலத்துக்
    கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையுங் கலங்க. …… 146

    ஒரு பதத்தினைக் கவான் உறுத்து – எடுததொரு திருவடியை தமது தொடையில் உறுத்திக்கொண்டு, இரு கரத்து உகிரால் – இரண்டு திருக்கரங்களின் நகங்களால், அவுணர் தம் குலத்துக் கரி – அசுரர் குலத்தில் உதித்த கயாசுரன் ஆகிய யானையை, வெரிந் இடை பிளந்து – முதுகின்கட் பிளந்து, ஈர் இரு தாள் புடை மேவ – நான்கு கால்களும் அவ்வப் பக்கத்ற் பொருந்த, குருதி கக்கி ஓலிட – இரத்தம் பிரவாகித்து இரைச்சலிட, அம்மையும் கண்டு நின்று கலங்க – உமாதேவியாரும் கண்டு நின்று இரக்கங்கொள்ள, உரித்தனன் – கயாசுர யானையின் தோலை உரித்தருளினார்.
    இக்கவி கஜசம்மார மூர்த்தியின் திருக்கோலலத்தைக் காட்டுவது. [ப 54/137]

    கார்த்த சிந்துரத் தவுணர்கோன் விளிந்திடக் கரத்தால்
    ஈர்த்த தோலினை ஈர்த்தலும் உலகுயிர் யாவுந்
    தீர்த்தன் மேனிகொள் பேரொளி நோக்கியே தியங்கிப்
    பார்த்த கண்ணெலாங் கதிரிழந் தலமரப் பதைத்த. …… 147

    கார்த்த சிந்துரத்து அவுணர்கோன் விளிந்திட – கருநிறம்படைத்த யானை உருவினனான அசுரத் தலைவன் இறந்துபட, கரத்தால் ஈர்த்த தோலினை ஈர்த்தலும் – திருக்கரங்களினால் நெய்ப்புப் பொருந்திய தோலை உரித்தருளும் போது, உலகு உயிர் யாவும் – உலகத்தின்கண்ணுள் உயிர்களனைத்தும், தீர்த்தன் மேணிகொள் பேரொளி நோக்கி – பரிசுத்தராகிய சிவபெருமானுடைய திருமேனியில் மேன்மேற் கிளர்கின்ற பேரொளியை நோக்கி, தியங்கிப்பார்த்து கண்ணெலாம் – கூசிப்பார்த்தலையுடைய கண்களெலாம், கதிர் இழந்து – ஒளி இழந்து, அலமர – அலமருதல் செய்ய, பதைத்த – பதை பதைத்தன.
    அலமலருதல் – சுழலுதல், ஈர்த்தலும் உலகுயிர் பதைக்க என்க.
    ஈர்க்கும்போது உக்கிர மிகுதிப்பாட்டால், திருமேனியினொளி மேன்மேற் கிளருமென்க. [ப 55/137]

    ஆளு நாயகன் அஃதறிந் துயிர்த்தொகை அனைத்தும்
    வாளி லாதுகண் ணயர்வது மாற்றுதல் மதித்து
    நீளி ருங்கரி உரித்திடும் அதளினை நிமலன்
    தோளின் மேற்கொடு போர்த்தனன் அருள்புரி தொடர்பால். …… 148

    ஆளும் நாயகன் நிமலன் அஃதறிந்து – ஆளுகின்ற நாயகராகிய சிவபெருமான் உயிர்களின் நிலையை அறிந்து, உயிர்த்தொகை அனைத்தும் வாள் இலாது கண் அயர்வது மாற்றுதல் மதித்து – உயிர்க்கூட்ட மனைத்துங் கண்ணொளி மழுங்கி அயர்ச்சியுறுவதை நீக்கிக் கருதி, நீள் இரும் கரி உரித்திடும் அதளினை – உயர்ந்த பெரிய யானையை உரித்த தோலை, அருள் புரிதொடர்பால் – ஆன்மாக்களுக்கு அநுக்கிரகம் புரியும் முகமாக, தோளின் மேல் கொடு போர்த்தனன் – தமது திருப்புயத்தின்மேற் கொண்டு போர்த்தருளினார். [ப 55/137]

    ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீர் அறாத
    மையல் யானைவன் தோலைமேற் கொண்டனன் மறைத்தான்
    செய்ய கோளொடு கரியகோள் இருவருஞ் செறிந்து
    வெய்ய பானுவின் நடுவுறக் கவர்ந்துமே வியபோல். …… 149

    செய்ய கோளொடு கரிய கோள் இருவரும் செறிந்து – செம் பாம்பாகிய கேதுவும் கரும் பாம்பாகிய இராகுவுமாகிய இருவரு ஒன்றுசேர்ந்து, வெய்ய பானுவின் நடுவு உறக் கவர்ந்து மேவிய போல் – வெம்மையுடைய சூரியனின் நடுவிடத்தைப் பெரிதுங் கவர்ந்து மறைத்த தன்மைபோல், ஐயன் மிக்க தன் கதிரினை – சிவபெருமான் தமது திருமேனியின் மிகுந்த பேரொளியை, குருதி நீர் அறாத மையல் யானை வன் தோலை மேற்கொண்டனன் மறைத்தான் – இரத்த வெள்ளம் நீங்காத மயக்கத்தினையுடைய யானையின் வலிய கரிய தோலைப் புயத்தின்மேற் கொண்டு மறைத்தருளினார். [ப 55/137]

    மிகவும் எம்பிரான் தன்சுடர் மாற்றி மெய்தளரும்
    அகில மேலவர் விழிக்கெலாந் தொல்கதிர் அருளித்
    தகவில் அச்சமும் அகற்றியே காத்தனன் தனக்கு
    நிகரும் மேலுமின் றாகியே அமர்தரு நிமலன். …… 150

    தனக்கு நிகரும் மேலும் இன்றாகி அமர்ந்த நிமலன் எம்பிரான் – தமக்கு ஒப்பும் உயர்வும் இல்லையாய் அமர்கின்ற நிருமலராகிய எம்பெருமான், தன் சுடர் மிகவும் மாற்றி – தமது திருமேனி ஒளியைப் பெரிதும் மாற்றி, மெய்தளரும் – உடல் தளருகின்ற, அகிலம் மேலவர் விழிக்கெலாம் தொல் கதிர் அருளி – உலகத்திலுள்ளவர்களின் கண்களுக்கெல்லாம் பழைய ஒளியைக் கொடுத்து, தகவு இல் அச்சமும் அகற்றிக் காத்தனன் – தகுதியற்ற அச்சத்தையும் போக்கிக் காத்தருளினார். [ப 57/137]

    அந்த வேலையில் அமரர்போற் றிசைத்தனர் அதுகேட்
    டெந்தை மாமணி கன்னிகை ஆலயத் தேக
    முந்து தந்திமால் அவுணற்கு வெருவி மொய்ம்பிழந்து
    சிந்தை மான்றுவீழ் பரிசனர் யாவருந் தெளிந்தார். …… 151

    அந்த வேலையில் அமரர் போற்றிசைத்தனர் – அப்பொழுது தேவர்கள் துதித்தார்கள்; அது கேட்டு – அதனைக் கேட்டு, எந்தை மாமணி கன்னிகை ஆலயத்து ஏக – எம் பிதாவாகிய சிவபெருமான் பெருமை பொருந்திய மணிகர்ணிகை என்னும் ஆலயத்துட் சென்றருள, முந்து – முன்னம், தந்தி மால் அவுணற்கு வெருவி – பெரிய கயாசுரனுக்கு அஞ்சி, மொய்ம்பு இழந்து – வலியழந்து, சிந்தை மான்று – மனம் மயங்கி, வீழ் பரிசனர் யாவரும் – விழுந்த பரிசனர்களும் முனிவர் உட்பட யாவரும், தெளிந்தார் – அறிவு தெளிந்தார்கள்.
    அதுகேட்டுத் தெளிந்தார் என்க. [ப 56/137]

    செறிவு போகிய சனத்தினோர் எழுந்தருட் டிறத்தால்
    கறைகொள் காலினான் குருதிஎன் பொடுதசை காணா
    இறைவ னேஅவன் தன்னைஅட் டானென எண்ணி
    அறையும் நேமிபோல் ஆடினர் பாடினர் ஆர்த்தார். …… 152

    செறிவு போகிய சனத்தினோர் எழுந்து – நெருக்கம் முதிர்ந்த சனத்திரளினர் எழுந்து, அருள் திறத்தால் – சிவபெருமானுடைய திருவருட் டிறத்தினால், கறைகொள் காலினான் – உரலையொத்த காலினையுடைய கயாசுரனது, குருதி என்பொடு தசை காணா – இரத்தத்தையும் எலும்பையுந் தசையையுங் கண்டு, இறைவனே – எம்பெருமானே, அவன் தன்னை அட்டான் என எண்ணி – அவனைக் கொன்றருளினார் என்று நினைத்து, அறையும் நேமிபோல் – ஆரவாரிக்கின்ற சமுத்திரம்போல, ஆடினர் பாடினர் ஆர்த்தார் – ஆடிப் பாடி ஆரவாரஞ் செய்தார்கள். [ப 57/137]

    காசி வாணரும் முனிவரும் பணிந்தனர் கழல்கள்
    பூசை யாற்றவும் புரிவித்து வழுத்தியே போனார்
    ஈசன் வேழவன் தோல்புனை பேரருள் இதுகாண்
    பேசு வாம்இனி அயன்சிரம் ஏந்திய பெற்றி. …… 153

    காசி வாணரும் முனிவரும் – காசிப்பதியில் வாழ்வோரும் முனிவர்களும், கழல்கள் பணிந்தனர் – விசுவநாதருடைய பாதங்களை வணங்கி, பூசை ஆற்றவும் புரிவித்து – பூசனையைச் சிறப்பாகவுஞ் செய்வித்து, வழுத்திப் போனார் – துதிசெய்து நின்றார்கள்; ஈசன் வேழவன் தோல் புனை பேரருள் இது – சிவபெருமான் யானையின் வலிய தோலைத் தரித்த பேரருட் சரிதம் இது; இனி அயன் சிரம் ஏந்திய பெற்றி பேசுவாம் – இனிப் பிரம கபாலத்தை ஏந்திய பெற்றியைச் சொல்லுவாம்.
    வேழவன் எனக்கொண்டு கயாசுரன் எனினுமாம். காண்க அசை. [ப 57/127]

    வேறு
    முன்னமோர் வைகல் மாலும் முண்டகத் தயனு மாகப்
    பொன்னின்மால் வரையி னுச்சிப் பொலங்குவ டொன்றின் உம்பர்
    மன்னுழி முனிவர் தேவர் வரம்பிலோர் வந்தன் னாரைச்
    சென்னியால் வணக்கஞ் செய்து செங்கரங் குவித்துச் சொல்வார். …… 154

    முன்னம் ஓர் வைகல் – முன்னொரு நாளிலே, பொன்னின் மால் வரையின் உச்சிப் பொலம் குவடு ஒன்றின் உம்பர் – பெரிய பொன்மலையாகிய மேருவின் உச்சியிலுள்ள சுவர்ண சிகரம் ஒன்றின் மீது, மாலும் முண்டகது அயனும் ஆக மன்னுழி – திருமாலும் கமலாசனரான பிரமாவும் ஒருங்கு இருந்த சமயத்தில், வரம்பிலோர் முனிவர் தேவர் வந்து – அளவில்லாத முனிவர்களுந் தேவர்களும் அங்கே வந்து, அன்னாரைச் சென்னியால் வணக்கம் செய்து – அவ்விருவரையுந் தலையால் வணங்கி, செம் கரம் குவித்துச் சொல்லுவார் – செம்மையாகிய கரங்களைச் கூப்பிச் சொல்லுவார்கள். [ப 57/137]

    மூவரின் முதலா னோரும் முதலிடை முடிவும் இல்லாத்
    தேவரும் எவையும் நல்குஞ் செல்வரும் பரமே லாகி
    ஓவரும் புவனத் துள்ள உயிர்க்குயி ராய்நின் றோரும்
    ஏவரெங் களுக்கு வல்லே இருவரும் இசைத்தி ரென்றார். …… 155

    மூவரின் முதலானோரும் – மும்மூர்த்திகளில் முதலவராயிருப்பவரும், முதல் இடை முடிவும் இல்லாத் தேவரும் – ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத மகாதேவரும், எவையும் நல்கும் செல்வரும் – எல்லாவற்றையும் படைக்கும் பிரபுவும், பரம் மேலாகிய – மிக மேலாய், ஒருவரும் புவனத்து உள்ள உயிர்க்கு உயிராய் நின்றோரும் – ஒழிவில்லாத புவனங்களில் உள்ள ஆன்மாக்களுக்குப் பரமான்மாவா யிருப்பவரும், ஏவர் – யாவர்; எங்களுக்கு வல்லே இருவரும் இசைத்திர் என்றார் – அவரை இவர் என்று எங்களுக்கு விரைந்து நீவிர் இருவீரும் உரைப்பீராக என்றார்கள். [ப 58/137]

    என்றுரைத் திடலும் வேதா எம்பிரான் பிணித்த மாயை
    தன்றலைப் படலால் யான்அத் தலைமையாம் பிரமம் ஆகும்
    நன்றிதைத் தெளிதிர் என்ன நாரணன் தானும் அற்றாய்
    உன்றனைத் தந்த யானே உயர்தரும் பிரமம் என்றான். …… 156

    என்று உரைத்திடலும் – என்று அவர்கள் கேட்டலும், வேதா – பிரமா, எம்பிரான் பிணித்த – எம்பெருமான் காட்டிய, மாயை தன் தலைப்படலால் – மாயையாகிய வலைக்குள் அகப்பட்டிருத்தலால், யான் அத்தலைமையாம் பிரமம் ஆகும் – யானே அந்தத் தலைமை வாய்ந்த பிரமம் ஆகும்; நன்று இதைத் தெளிதிர் என்ன – இதனை நன்கு தெளிவீராக என்று கூற, நாரணம் தானும் அற்றாய் – விஷ்ணுமூர்த்தி தாமும் அத்தன்மையராய், உன் தனைத் தந்தயானே – உன்னைப் பெற்ற யானே, உயர்தரும் பிரமம் என்றார் – உயர்வாகிய பிரமம் என்றார் .
    அற்றாதல், மாயைதன் தலைப்படல். [ப 58/137]

    இருவரும் இனைய பேசி எண்ணிலா வைகல் யாரும்
    வெருவரு நிலைய தாக வெய்துயிர்த் தழன்று மாறாய்ப்
    பொருவரு தருக்கஞ் செய்யப் போயினர் முனிவர் தேவர்
    ஒருவரும் இன்றி நம்மால் உற்றதிப் பெற்றி என்றே. …… 157

    இருவரும் இனைய பேசி – பிரம விஷ்ணுக்கள் இருவரும் இவ்வாறு கூறி, எண்ணிலா வைகல் – அளவில்லாத காலம், யாரும் வெருவது நிலையது ஆக – யாவரும் அஞ்சத்தக்க நிலைமை உண்டாக, மாறாய் – மாறுபட்டு, வெய்து உயிர்த்து அழன்று – வெம்மைத்தாய மூச்சுவிட்டுக் கோபித்து, பொருவரு தருக்கஞ் செய்ய – பொருதலை வருவிக்கின்ற தருக்கத்தைச் செய்ய, முனிவர் தேவர் – முனிவர்களும் தேவர்களும், நம்மால் இப்பெற்றி உற்றது என்று – எம்மால் இவ்வியல்பு உளதாயிற்று என்றெண்ணி, ஒருவரும் இன்றிப் போயினர் – ஒருவரும் அவ்விடத்தி லில்லாமல் நீங்கினார்கள். [ப 58/137]

    போதலும் அனையர் பின்னும் பூசல்செய் திட்ட காலை
    வேதமுங் குடிலை தானும் வேறுவே றுருக்கொண் டெய்தி
    வாதம தியற்றல் என்று மன்னுயிர்க் குயிராய் ஆர்க்குந்
    தாதையாஞ் சிவனே வாய்மைத் தற்பரன் என்ற அன்றே. …… 158

    போதலும் – முனிவர்களும் தேவர்களும் விட்டு நீங்க, பின்னும் – அதன் மேலும், அனையர் பூசல் செய்திட்ட காலை – அவ்விருவருஞ் சண்டை செய்த போது, வேதமும் குடிலைதானும் வேறு வேறு உரு கொண்டு எய்தி – வேதமும் பிரணவமும் வேறு வேறு உருவங்கொண்டு வந்து, வாதமது இயற்றல் – வாதஞ் செய்யாதொழிக; என்றும் மன் உயிர்க்கு உயிராய் – எப்பொழுதும் நிலைபெறுகின்ற ஆன்மாக்களுக்குப் பரமான்மாவாய், யார்க்கும் தாதையாம் சிவனே – யாவர்க்கும் பரமபிதாவாகுஞ் சிவபெருமானே, வாய்மைத் தற்பரன் என்ற – உண்மையான பரம்பொருள் என்று கூறின. [ப 59/137]

    பண்டவர் உணர்ந்த வேதப் பனுவலுங் குடிலை வாக்குங்
    கொண்டிலர் விலக்கிப் பின்னுங் கொடியவெம் பூசல் செய்யக்
    கண்டுமற் றதனை அன்னோர் கடுமுரண் தொலைக்கு மாறு
    கொண்டனன் கருணை யார்க்குங் குறித்தருள் கூரும் பெம்மான். …… 159

    பண்டு அவர் உணர்ந்த – முன்னமே அவர்கள் ஓதி உணர்ந்த, வேதப் பனுவலும் – வேத வாக்கையும், குடிலை வாக்கும் – பிரணவ வாக்கையும், கொண்டிலர் விலக்கி – கொள்ளாதவர்களாய் அவற்றை விலக்கி, பின்னும் கொடிய வெம் பூசல் செய்ய – மேலுங் கொடிய வெவ்விய பூசலைச் செய்ய, யார்க்கும் குறித்து அருள் கூரும் பெருமான் அதனைக் கண்டு – யாவர்க்குங் குறிகொண்டு கிருபை பாலிக்கின்ற எம்பெருமான் அதனைக் கண்ணுற்று, அன்னோர் கடுமுரண் தொலைக்குமாறு கருணை கொண்டருளினார்.
    பனுவல் – நூல், இங்கே வாக்கு என்னும்பொருட்டு. [ப 59/137]

    அடிமுடி யிலாத வள்ளல் அமலமாம் ஒளியாய் விண்ணின்
    நடுவுற வந்து தோன்ற நாரணன் தானும் வேதக்
    கடவுளுஞ் சிவனாம் என்று கருதிலர் யாதோ இந்தச்
    சுடரென மருண்டார் மாயச் சூழ்ச்சியின் நீங்க லாதார். …… 160

    அடி முடி இலாத வள்ளல் – ஆதியு மந்தமு மில்லாத சிவபெருமான், அமலமாம் ஒளியாய் – நின்மல ஒளியாய், விண்ணின் நடுவுற வந்து தோன்ற – ஆகாய மத்தியில் வந்து தோன்ற, நாரணன் தானும் வேதக் கடவுளும் – விஷ்ணுவும் பிரமாவும், மாயச் சூழ்ச்சியின் நீங்கலாதார் – மாயப் பிணிப்பினின்றும் நீங்காதவராய், சிவனாம் என்று கருதிலர் – அவ்வொளி சிவபெருமானாகுமென்று கருதாமல், இந்த சுடர் யாதோ என மருண்டனர் – இந்த ஒளி யாதோ என்று மயங்கினார்கள். [ப 59/137]

    இயலது தெரிந்து சோதி இடையதாய் எம்மை யாளக்
    கயிலையில் உமையா ளோடு கலந்துவீற் றிருக்குங் கோலச்
    செயல்கொடு பரமன் நண்ணச் சிவனெனச் சிந்தை தேற்றிப்
    புயலுறழ் மேனிப் புத்தேள் பொருக்கென எழுந்து தாழ்ந்தான். …… 161

    இயலது தெரிந்து – இருவருடைய இயல்பையும் அறிந்து, சோதி இடையதாய் – சோதியின் நடுவாகி, எம்மை ஆள – எம்மை ஆளும்பொருட்டு, கயிலையில் உமையாளோடு கலந்து வீற்றிருக்கும் – திருக்கைலாசத்திலே உமாதேவியாரோடு கலந்து வீற்றிருக்கின்ற, கோலச் செயல்கொடு பரமன் நண்ண – திருக்கோலச் செய்கையோடு சிவபெருமான் தோன்றியருள, சிவன் எனச் சிந்தைதேற்றி – அத் திருக்கோலஞ் சிவபெருமானே என்று மனந் தெளிந்து, புயல் உறழ் மேனித் புத்தேள் – மேகம்போன்ற மெய்யினையுடைய திருமால், பொருக்கென எழுந்து தாழ்ந்தான் – விரைந்து எழுந்து வணங்கினார். [ப 60/137]

    மாயையோர் சிறிதுந் தீரா மலரயன் நமது தந்தை
    ஆயவன் போந்தான் என்னா அச்சுத மூர்த்தி யேபோல்
    நேயமோ டெழுந்து தாழான் நெடியதன் உச்சிச் சென்னித்
    தீயதோர் வாயால் மேலாஞ் சிவனையும் இகழ்த லுற்றான். …… 162

    மாயை ஓர் சிறிதும் தீரா மலரயன் – மாயையின் பிணிப்பு ஒரு சிறிதும் விலகாத பிரமா, நமது தந்தை ஆயவன் போந்தான் என்னா – நம் பிதாவானவர் எழுந்தருளி வந்தார் என்று, அச்சுத மூர்த்தி போல் நேயமோடு எழுந்து தாழான் – திருமாலைப்போல அன்போடு எழுந்து வணங்காராய், தன் நெடிய உச்சிச் சென்னித் தீயது ஓர் வாயால் – தமது நீண்ட உச்சிச்சிரத்தின் கண்ணதாய தீயதொரு வாயினால், மேலாம் சிவனை இகழ்தல் உற்றான் – மேலாகிய சிவபெருமானை இகழ்வாராயினார்.
    உம், உயர்வு சிறப்பு. [ப 60/137]

    முண்டகம் இருந்த ஐந்து முகத்தவன் முதல்வன் தோற்றங்
    கண்டனன் இகழ வந்தக் கருணையங் கடலுஞ் சீற்றங்
    கொண்டிலன் சிறிது மற்றே கொண்டனன் என்னின் எல்லா
    அண்டமும் உயிரும் பின்னும் அழிவுறா திருக்கு மோதான். …… 163

    முண்டகம் இருந்த ஐந்து முகத்தவன் தோற்றம் கண்டனன் – தாமரை மலரிலிருந்த ஐந்து முகங்களையுடைய பிரமா முதல்வரான சிவபெருமானுடைய திருக்கோலத்தைக் கண்டும், இகழ – இகழ்தலைச் செய்ய, அந்தக் கருணையங்கடல் சீற்றம் சிறிதும் கொண்டிலன் – அக் கருணைக்கடலான சிவபெருமான் சிறுதுங் கோபங்கொண்டிலன்; அற்றே கொண்டனன் என்னின் – சிறுது சீற்றங் கொள்வாராயின், எல்லா அண்டமும் உயிரும் அழிவுறாது பின்னும் இருக்குமோ – எல்லா அண்டங்களும் அவற்றிலுள்ள உயிர்களும் பின்னரும் அழியாமலிருக்குமோ.
    கடலும் என்புழி உம்மை, கண்டனன் என்ற எச்சமுற்றுடன் கூட்டப்பட்டது, அற்றே என்பது, சிறிதே என்ற பொருள் தந்து நின்றது. [ப 60/137]

    எகினம துயர்த்த அண்ணல் இரும்பவந் தொலைப்ப ஏனைப்
    பகவர்தம் அகந்தை மாற்றப் பண்ணவர் மதர்ப்புச் சிந்த
    மிகபெருங் கருணை தன்னால் வேதநா யகனுள் ளத்து
    மகிழ்வொடு புரிந்தான் என்ப வயிரவக் கடவுள் தன்னை. …… 164

    எகினமது உயர்ந்த அண்ணல் இரும் பவம் தொலைப்ப – அன்னத்தை உயர்த்த கொடியினையுடைய பிரமதேவரின் பெரிய பாவத்தைத் தொலைக்கவும், ஏனைய பகவர் தம் அகந்தை மாற்ற – ஏனைய தேவர்களின் செருக்கை ஒழிக்கவும், பண்ணவர் மதர்ப்புச் சிந்த – முனிவர்களின் இறுமாப்பைப் போக்கவும், மிகு பெரும் கருணை தன்னால் – மிகுந்த பெருங் கருணையினாலே, வேத நாயகன் உள்ளத்து – வேத நாயகரான சிவபெருமான் தமது திருவுள்ளத்தின்கண்ணே, வயிரவக் கடவுள் தன்னை மகிழ்வொடு புரிந்தான் – வைரவக் கடவுளை மகிழ்ச்சியோடு உண்டாக்கியருளினார்; என்ப – என்று ஆன்றோர் கூறுவர். [ப 61/137]

    நீலுறு சுடரின் மெய்யும் ஞெகிழிகள் அகற்றுந் தாளும்
    ஆலம துயிர்க்குஞ் செங்கேழ் அரவவெற் றரையுஞ் சென்னி
    மாலைகள் அநந்த கோடி வயின்வயின் பெயரும் மார்புஞ்
    சூலமும் பரசும் நாணும் துடியும்ஏந் தியபொற் றோளும். …… 165

    நீல் உறு சுடரின் மெய்யும் – நீல நிறம் பொருந்திய ஒளி திகழ்கின்ற திருமேனியும், ஞெகிழிகள் அரற்றும் தாளும் – சிலம்புகள் ஒலிக்குந் திருவடியும், ஆலமது உயிர்க்கும் செங்கேழ் ஆரவ வெற்றரையும் – விடத்தினைக் காலுகின்ற செந்நிறம் பொருந்திய பாம்பை அரைஞாணாகக் கட்டிய வெற்றரையும், அநந்த கோடி சென்னி மாலைகள் வயின் வயின் பெயரும் மார்பும் – அனந்தகோடி சிரமாலைகள் ஆங்காங்கே அசையும் அகன்ற திருமார்பும், சூலமும் பரசும் நாணும் துடியும் ஏந்திய பொன் தோளும் – சூலமும் மழுவும் பாசமும் உடுக்கையும் ஏந்திய அழகிய திருக்கரங்களும். [ப 61/137]

    முக்கணுந் திங்க ளேபோல் முளைத்தவா ளெயிறும் வன்னிச்
    செக்கரஞ் சடையின் சீருஞ் செயிர்கெழு நகையு மாக
    உக்கிர வடிவு கொண்டாங் குதித்திடு வடுகன் தன்னை
    மைக்கிளர் கண்டத் தெந்தை நோக்கியே வகுத்துச் சொல்வான். …… 166

    முக்கணும் – மூன்று கண்களும், திங்களே போல் முளைத்த வாள் எயிறும் – இளம்பிறைபோலத் தோன்றிய ஒளி பொருந்திய வக்கிர தந்தங்களும், வன்னி செக்கர் அம் சடையின் சீரும் – அக்கினி மயமான செவ்வானம் போன்ற அழகிய சடையின் சிறப்பும், செயிர் கெழு நகையும் ஆக – போபங் கிளருகின்ற சிரிப்பும் ஆக, உக்கிர வடிவு கொண்டு – உக்கிர வடிவத்தை மேற்கொண்டு, ஆங்கு உதித்திடு வடுகன் தன்னை – ஆங்கே தோன்றிய வைரவ மூர்த்தியை, மைக் கிளர் கண்டத்து எந்தை நோக்கி – கருமை விளங்குகின்ற கண்டத்தையுடைய எம்பெருமான் நோக்கி, வகுத்துச் சொல்வான் – வகுத்துரைப்பார். [ப 61/137]

    திகழ்ந்தநஞ் சிறுவ னாகுஞ் செங்கம லத்தோன் சென்னி
    இகழ்ந்தது நம்மை உச்சி இருந்ததே அதனை வல்லே
    அகழ்ந்தனை கரத்தி லேந்தி அவனுயிர் நல்கித் தம்மைப்
    புகழ்ந்திடு முனிவர் தேவர் புரந்தொறும் போதி அன்றே. …… 167

    நம் சிறுவனாகும் திகழ்ந்த செங்கமலத்தோன் – நம் புதல்வனான விளங்கிய செந்தாமரை மலரிலிருக்கும் பிரமனது, உச்சி இருந்தது சென்னி நம்மை இகழ்ந்தது – உச்சிக்கட் சிரசு எம்மை இகழச்செய்தது; அதனை வல்லே அகழ்ந்தனை கரத்தில் ஏந்தி – அந்த சிரத்தை விரைந்து கையில் ஏந்தி, அவன் உயிர் நல்லி – அப்பிரமனது உயிரை மீட்டுக்கொடுத்து, தம்மைப் புகழ்ந்திடு முனிவர் தேவர் புரந்தொறும் போதி– தம்மைப் புகழுகின்ற முனிவர்கள் தேவர்கள் இருக்கும் நகரங்கள்தோறும் போகக்கடவ்வாய். [ப 62/137]

    போந்தனை அனையர் தங்கள் புலவுடற் சோரி தானே
    வாய்ந்ததோர் ஐய மாக வாங்குதி வாங்கும் வேலை
    வீந்தவர் தமக்கு மீட்டும் வியனுயிர் உதவி அன்னோர்
    ஆய்ந்திடும் அகந்தை மாற்றி அண்டமேல் அடைதி அம்மா. …… 168

    போந்தனை ஆங்காங்குச் சென்று, அனையர் தங்கள் புல உடல் சோரிதானே – அவர்களுடைய புலாலுடலின் இரத்தத்தைத் தானே, வாய்ந்தது ஓர் ஐயமாக வாங்குதி – சிறந்ததொரு பிக்ஷையாக ஏற்கக்கடவாய்; வாங்கும் வேலை – ஏற்கும்பொழுது, வீந்தவர் தமக்கு மீட்டும் வியன் உயிர் உதவி – இறந்தவர்களுக்கு மீட்டும் உயர்வாகிய உயிரை நல்கி, அன்னோர் ஆய்ந்திடும் அகந்தை மாற்றி – அவர்கள் தேடிக்கொண்ட செருக்கைப் போக்கி, அண்டம் மேல் அடைதி – அண்ட முகட்டை அடையக்கடவாய். [ப 62/137]

    முன்புடைத் தாகும் அண்ட முகடுதோய் பதத்தின் மன்னி
    மன்பதைக் குலங்கள் யாவும் வானவர் தொகையும் யாண்டுந்
    துன்பறக் காத்தி யென்று தூய நல்லருளை நல்கி
    அன்புடைக் கடலாம் எங்கோன் அமலமாஞ் சோதி புக்கான். …… 169

    முன்பு உடைத்தாகும் – முன்னே உனக்காக உள்ள, அண்ட முகடு தோய்பதத்தின் மன்னி – அண்ட முகட்டிற் பொருந்திய பைரவ புவனத்திலிருந்து, மன்பதைக் குலங்கள் யாவும் – மக்கட் பரப்பாகிய கூட்டங்கள் முழுவதையும், வானவர் தொகையும் – தேவர்கள் கூட்டத்தையும், யாண்டும் துன்பு அறக்காத்தி என்று – யாண்டுந் துன்புறாத வண்ணங் காக்கக்கடவாய் என்று; தூய நல் அருளை நல்லி – தூய நல்ல அருளைச் செய்து, அன்புடைக் கடலாம் எங்கோன் அமலமாம் சோதி புக்கான் – கருணைக்கடலான எம்பெருமான் நின்மலமாகிய சோதியுள் மறைந்தருளினார். [ப 63/137]

    ஆதியங் கடவுள் அங்கண் அடைதலும் அமல மாகுஞ்
    சோதியும் அனையர் காணாத் தோற்றம தாக மாயோன்
    ஈதெலாந் தெரிந்து நிற்றல் இயற்கையன் றென்னா முக்கண்
    நாதனை இறைஞ்சி வல்லே நடந்துதன் பதியிற் புக்கான். …… 170

    ஆதியங் கடவுள் அங்கண் அடைதலும் – ஆதியான சிவபெருமான் அழகிய அந்தச் சோதியுள் மறைந்தருள, அமலமாகும் சோதியும் அனையர் காணாத் தோற்றமதாக – நின்மலமான அந்தச் சோதியும் அவர்கள் காணாத பிரகாரம் மறைய, மாயோன் ஈது எலாம் தெரிந்து – விஷ்ணு இந் நிகழ்ச்சிகளனைத்தையும் உணர்ந்து, நிற்றல் இயற்கை அன்று என்னா – இங்கே நிற்றல் முறையன்று என்று, முக்கண் நாதனை இறைஞ்சி – சிவபெருமானை வணங்கி, வல்லே நடந்தது தன் பதியில் புக்கான் – விரைந்து சென்று தமது பதியாகிய வைகுந்தத்தை அடைந்தார். [ப 63/137]

    அளந்து மண்கொண்ட மாயன் அகனகர் அடைத லோடுங்
    கிளர்ந்தெழு காரி வேதாக் கேழ்கிளர் உச்சிச் சென்னி
    களைந்துதன் நகத்தால் ஏந்தக் காலுறு குருதி நீத்தம்
    வளைந்தது புவியைத் துஞ்சி மலரவன் தானும் வீழ்ந்தான். …… 171

    அளந்து மண் கொண்ட மாயன் அகல் நகர் அடைதலோடும் – பூமியை ஓரடியா லளந்த மாவலிபாற் பெற்ற திருமால் தமது அகன்ற நகரத்தை அடைய, கிளர்ந்து எழு காரி – உக்கிரங் கிளர்ந்தெழுகின்ற வைரவக்கடவுள், வேதா கேழ் கிளர் உச்சி சென்னி தன் நகத்தால் களைந்து ஏந்த – பிராமாவினுடைய நிறம் கிளருகின்ற உச்சித் தலையைத் தமது நகத்தாற் கிள்ளி ஏந்த, காலுறு குருதி நீத்தம் புவியை வளைந்து – கால் கொள்ளுகின்ற இரத்த வெள்ளம் பூமியைச் சூழ்ந்து; மலரவன் தானும் துஞ்சி வீழ்ந்தான் – பிராமாவும் இறந்து விழுந்தார். [ப 63/137]

    சோரிநீர் நீத்த மாகித் துண்ணென உலகங் கொண்டு
    மேருமால் வரையைச் சூழ வெய்யதன் நுதற்கண் தீயால்
    சேரவே வறப்பித் தந்தச் செங்கம லத்தி னானுக்
    காருயிர் நல்க லோடும் அவனுணர்ந் தெழுந்தான் அன்றே. …… 172

    சோரி நீர்   நீத்தம் ஆகி – இரத்தவெள்ளம் பிரவாகமாகி, துண்ணென உலகம் கொண்டு – விரைவாக உலகத்தை மூடி, மேரு மால்வரையச் சூழ – பெரிய மேருமலையைச் சூழ, வெய்ய தன் நுதல் கண் தீயால் சேர வறப்பித்து -வெம்மையுடைய தமது நெற்றிக்கண்ணக்கினியினால் ஒருசேர வற்றச் செய்து, அந்தச் செங்கமலத்தினானுக்கு ஆருயிர் நல்கலோடும் – அந்தச் செந்தாமரை ஆசனரான பிரமதேவருக்கு அரிய உயிரை வழங்குதலும், அவன் உணர்ந்து எழுந்தான் – அப் பிரமதேவர் உணர்ச்சிபெற் றெழுந்தார். [ப 64/137]

    வேறு
    துயிலு ணர்ந்தவ ராமெனத் தொல்லையில்
    பயிலு நல்லுணர் வெய்தலும் பங்கயன்
    வயிர வன்தன் மலரடி மீமிசை
    இயலும் அன்பொ டிறைஞ்சியுரை செய்வான். …… 173

    துயில் உணர்ந்தவராம் என – நித்திரைவிட் டெழுந்தவரைப் போல, தொல்லையின் பயிலும் நல் உணர்வு எய்தலும் – முன்போலப் பயிலுகின்ற நல்லறிவு கைகூடுதலும், பங்கயன் – பிரமதேவர், வயிரவன் தன் மலரடி மீமிசை – வைரவக் கடவுளுடைய திருவடி மலர்மீது, இயலும் அன்பொடு இறைஞ்சி – பொருந்துகின்ற அன்போடு வணங்கி, உரை செய்வான் – கூறுவார். [ப 64/137]

    நெற்றி யங்கண் நிமலற் கியான்செயுங்
    குற்ற முண்டு குணிப்பில அன்னதால்
    பெற்று ளேன்இப் பெரும்பழி ஈங்கினிச்
    செற்றம் ஏதுந் திருவுளங் கொள்ளலை. …… 174

    நெற்றி அம் கண் நிமலற்கு – அழகிய நெற்றிக்கண்ணரான சிவபெருமானுக்கு, யான் செய்யும் குற்றம் குணப்பில உண்டு – யான் செய்யுங் குற்றங்கள் அளவில்லாதன உண்டு; அன்னதால் இப் பெரும் பழி ஈங்குப் பெற்றுளேன் – அக் காரணத்தால் இந்தப் பெரிய பழியை இங்கே பெற்றேன்; இனி செற்றம் ஏதும் திருவுளம் கொள்ளலை – இனிக் கோபஞ் சிறிதுஞ் திருவுளத்திற் கொள்ளா தொழிக. [ப 64/137]

    இன்மை யாக இமைப்பின் உலகடும்
    வன்மை கொண்ட வடுகநின் ஆரருள்
    நன்மையால் தொல்லை நல்லுணர் வெய்தினன்
    புன்மை யாவும் பொறுத்திடல் வேண்டுமால். …… 175

    இமைப்பில் உலகம் இன்மையாக அடும் வன்மை கொண்ட வடுக – இமைப்பொழுதில் உலகத்தை இல்லையாக அடுக்கின்ற வன்மை வாய்ந்த வைரவக் கடவுளே, நின் ஆர் அருள் நன்மையால் – தேவரீருடைய நிறைந்த அருணலத்தால், தொல்லை நல்லுணர்வு எய்தினன் – பழைய நல்லுணர்வைப் பெற்றேன்; புன்மை யாவும் பொறுத்திடல் வேண்டும் – குற்றங்கள் ளனைத்தையும் பொறுத்தருளல் வேண்டும். [ப 65/137]

    தீய தான சிறியவிச் சென்னியுந்
    தூய தாகத் தொழும்பினன் கண்டுழி
    மாயை தீர மலர்க்கையிற் கோடிநீ
    மேய சூல வியன்படை என்னவே. …… 176

    தீயது ஆன சிறிய இச்சென்னியும் – சிவ தூடணத்தாலே தீயதாகிய இந்தக் கீழ்மையுடைய தலையும், தூயது ஆக – இது தூய்மையுடையதாகும்படி, தொழும்பினன் கண்டுழிமாயை தீர – அடியேன் தரிசிக்கும்போது மயக்கம் நீங்குமாறு, வியன் சூல படை என்ன – உயர்ந்த சூலப்படையைக் கையிற் கொண்டதுபோல, மலர் கையில் நீ கோடி – மலர் போன்ற திருக்கரத்திலே தேவரீர் தரித்தருள்வீராக. [ப 65/137]

    என்ன இத்தகை பன்னி இறைஞ்சலுஞ்
    சென்னி நான்குடைத் தேவனை நோக்கியே
    அன்ன தாக என்றையன் அருளியே
    பொன்னின் மால்வரை நீங்கினன் போயினான். …… 177

    என்ன இத்தகை பன்னி இறைஞ்சலும் – என்று இவை போல்வன பலவற்றறைக் கூறித் துதித்தலும், சென்னி நான்கு உடை தேவனை நோக்கி – நான்கு தலைகளையுடைய பிரமதேவரை நோக்கி, அன்னது ஆக என்று ஐயன் அருளி – அவ்வாறாகுக என்று வைரவக்கடவுள் அருள்செய்து, பொன்னின் மால்வரை நீங்கினன் போயினான் – பெரிய பொன்மலையாகிய மேருவை விடுத்துச் சென்றருளினார். [ப 65/137]

    கால வேகன் கனன்முகன் சோமகன்
    ஆல காலன் அதிபலன் ஆதியாச்
    சால நீடிய சாரதர் தானையை
    நீல மேனி நிமலன் உதவினான். …… 178

    நீல மேனி நிமலன் – நீல மேனியையுடைய வைரவக்கடவுள், கால வேகன் கனல் முகன் சோமகன் ஆலகாலன் அதிபலன் ஆதியா – காலவேகன் அக்கினி முகன் சோமகன் ஆலகாலன் அதிபலன் முதலாக, சால நீடிய சாரதர் தானையை உதவினான் – மிகக்கூடிய பூத சேனையை உண்டாக்கினார். [ப 66/137]

    எண்ணி லாஅக் கணங்களொ டெம்பிரான்
    நண்ணி ஒல்லை நவையுறு மாதவர்
    மண்ணின் மேய வனந்தொறும் வானவர்
    விண்ணின் எல்லை தொறும்விரைந் தேகினான். …… 179

    எண்ணிலா அக்கணங்களொடு எம்பிரான் – அளவற்ற அந்தப் பூதகணங்களுடனே எம்பெருமானாகிய வைரவக்கடவுள், ஒல்லி நண்ணி – விரைந்து கூடி நவையுறு மாதவர் மேய மண்ணின் வனந்தொறும் – குற்றத்தோடு கூடிய முனிவர்கள் இருக்கின்ற பூமியில் உள்ள வனங்கள் தோறும், வானவர் விண்ணின் எல்லை தொறும் – அவ்வாறாய தேவர்களிருக்கும் வானுலக எல்லைகள் தோறும், விரைந்து ஏகினான் – விரைந்து சென்றருளினார். [ப 66/137]

    மெய்யின் ஊறும் வியன்குரு திப்புனல்
    ஐய மாக்கொண் டனையர்தம் ஆவிகள்
    உய்ய வேபின் னுதவி உளமெலாந்
    துய்ய வாக்கினன் தொல்லருள் ஆழியான். …… 180

    மெய்யின் ஊறும் வியன் குருதி புனல் – உடம்பினின்று மூறுகின்ற மிக்க இரத்த வெள்ளத்தை, ஐயமாகக் கொண்டு – பிக்ஷையாக ஏற்று, அனையர் தம் ஆவிகள் உய்ய பின் உதவி – அவர்களுடைய உயிர்களை உய்யும்வண்ணம் மீட்டுக்கொடுத்து, உளம் எலாம் துய்ய ஆக்கினன் – உள்ளங்களனைத்தையுந் தூய்மையுடையன ஆக்கியருளினார்; தொல் அருள் ஆழியான் – பழைமையாகிய கிருபா சமுத்திரமான வைரவக்கடவுள். [ப 66/137]

    வடுக அண்ணல் அவ்வானவர் ஊரெலாங்
    கடிதின் நீங்கிக் கருவத்தை நீங்குறா
    நெடிய மாலுறை நீள்புரம் போயினான்
    முடுகி யேகினர் முன்கண நாதரே. …… 181

    வடுக அண்ணல் – வைரவக் கடவுள், அவ்வானவர் ஊர் எலாம் கடிதின் நீங்கி – அந்தத் தேவருல மனைத்தையும் விரைந்து கடந்து, கருவத்தை நீங்குறா – இருள்மயமான மயக்கத்தை நீங்காத, நெடிய மால் உறை நீள் புரம் போயினான் – திருநெடுமாலுறைகின்ற நீண்ட வைகுந்த நகரத்துக்குச் சென்றருளினார்; கண நாதர் முடுகி முன் ஏகினர் – பூத கண நாதர்கள் விரைந்து முன்னே சென்றனர்.

    அந்த மில்கணம் ஆனவர் யாவரும்
    முந்தி ஏக முதற்பெரு வாயிலோன்
    தந்தி ரத்தலை வன்தடுத் தானரோ
    நந்தும் ஆழியும் நாரணன் போலுளான். …… 182

    அந்தம் இல் கணமானவர் யாவரும் முந்தி ஏக – அழிவில்லாத பூதகணதின ரனைவரும் முன்னே செல்லாநிற்ப, முதல் பெரு வாயிலோன் – முதற்கண்ணுள்ள பெரிய வாயிற்காவலனும், தந்திரத் தலைவன் – சேனாதிபதியும், நந்தும் ஆழியும் நாரணன் போலுளான் – சங்கையுஞ் சக்கரத்தையுஞ் தரித்துத் திருமாலின் சாரூபத்தைப் பெற்றுளோனும் ஆகிய விடுவசேனன் என்பான், தடுத்தான் – பூதகணங்களை உள்ளே செல்லாமற் றடை செய்தான். [ப 67;137]

    கால வேகனை ஆதிக் கணத்தவர்
    ஆல மென்ன அவனொடு போர்செய
    மேலை யோன் அங்கு மேவி அவனுடல்
    சூல மேற்கொந்தித் துண்ணென ஏகினான். …… 183

    காலவேகன் ஆதி கணத்தவர் – காலவேகன் முதலிய பூதகணத்தவர்கள், ஆலம் என்ன அவனொடு போர் செய – ஆலகால விடம்போல அவ் விடுவ சேனனோடு போர் செய்யாநிற்ப, மேலையோன் அங்கு மேவி – மேலோராகிய வைரவக்கடவுள் அங்குச் சென்று, அவன் உடல் சூலமேற் கொந்தி – அவனுடம்பைச் சூலத்தாற் குத்தி – ஏந்தி, துண்ணென ஏகினான் – விரைவாக உள்ளே சென்றருளினார். [ப 67/137]

    வேறு
    நிலமகள் ஒருபுடை நிறங்கொள் பங்கய
    மலர்மகள் ஒருபுடை மருவப் பஃறலை
    குலவிய பணியின்மேற் கொண்டல் மேனியான்
    தலைமையொ டுறைதரு தானம் நண்ணினான். …… 184

    நில மகள் ஒரு புடை – பூமிதேவி ஒரு பக்கத்திலும், நிறங்கொள் பங்கய மலர்கள் ஒரு புடை – செந்நிறத்தைக் கொண்ட தாமரை மலரிலிருக்கும் இலக்குமிதேவி ஒரு பக்கத்திலும், மருவ – இருக்க, பல் தலை குலவிய பணியின் மேல் – பலதலைகள் விளங்கிய சேஷ சயனத்தின்மீது, கொண்ட மேனியான் – மேகவண்ணரான திருமால், தலைமையொடு உறைதரு தானம் நண்ணினான் – முதன்மையோடு வீற்றிருக்குந் தானத்தை அடைந்தருளினார். [ப 67/137]

    நிணங்கிளர் முத்தலை நெடிய வேல்இறை
    கணங்களின் நிரையொடு கடிது செல்லமால்
    அணங்கின ரோடெழா ஐயன் தாள்மிசை
    வணங்கிநின் றெந்தைநீ வந்ததென் னென்றான். …… 185

    நிணம் கிளர் முத்தலை நெடிய வேல் இறை – நிணம் விளங்குகின்ற மூன்று தலைகளையுடைய நீண்ட சூலப்படையைத் தரித்த வைரவக்கடவுள், கணங்களின் நிரையொடு கடிது செல்ல – பூத கணங்களாகிய படைவகுப்போடு விரைந்து செல்ல, மால் அணங்கினரோடு எழா – திருமால் மனைவியரோடெழுந்து, ஐயன் தாள் மிசை வணங்கி – வைரவக்கடவுளின் திருவடியின்மீது விழுந்து வணங்கி, நின்று – எழுந்து நின்று, எந்தை நீ வந்தது என் என்றான் – எமது பிதாவே தேவரீர் ஈண்டுப் போந்தது என்னை என்று கேட்டார். [ப 68/137]

    என்றலுங் கண்ணுதல் இறைவன் யாமிவண்
    சென்றது பலிக்குநின் றிருந்து சென்னியில்
    ஒன்றிய குருதியே உதவு வாயென
    நன்றென நாரணன் நவின்று போற்றியே. …… 186

    என்றலும் – என்று கேட்டவுடன், கண்ணுதல் இறைவன் – நெற்றிக் கண்ணினையுடைய வைரவக்கடவுள், யாம் இவண் சென்றது பலிக்கு – நாம் இங்கே வந்தது பிக்ஷைக்கு, நின் திருந்து சென்னியில் ஒன்றிய குருதியே உதவுவாய் என – உன்னுடைய திருந்திய சிரசிற் பொருந்திய இரத்தத்தையே உதவுவாயாக என்று கூற, நாரணம் நன்று என நவின்று போற்றி – திருமால் நல்லது என்று கூறித் துதித்து. [ப 68/137]

    தன்னுதல் அதனிடைத் தனாது செங்கையின்
    நன்னகத் தாலொரு நாடி வாங்கியே
    அன்னதொர் பொழுதினில் அரியுய்த் தானரோ
    துன்னிய குருதிநீர் சூலி ஏற்பவே. …… 187

    அன்னதொர் பொழிதினில் அரி – அப்பொழுதே திருமாலானவர், தன் நுதல் அதனிடை – தமது நெற்றியின்கண்ணே, தனாது செங்கையின் நல் நகத்தால் ஒரு நாடி வாங்கி – தமது சிவந்த நல்ல கைந்நகத்தால் ஒரு நரம்பை வாங்கி, துன்னிய குருதி நீர் – செறிந்த இரத்த நீரை, சூலி ஏற்ப – சூலப்படையையுடைய வைரவக்கடவுள் ஏற்கும்படி, உய்த்தான் – பிக்ஷா பாத்திரத்தில் உகுத்தார். [ப 68/137]

    வீண்டிடு சோரியின் வெள்ளம் வெம்பணி
    பூண்டதொர் கண்ணுதல் பொலங்கைச் சென்னிமேல்
    ஆண்டொரு நூறுநூ றவதி உய்த்தலும்
    மாண்டது வேறொரு மயக்கம் வந்ததே. …… 188

    வீண்டு சோரியின் வெள்ளம் – திருமாலின் நெற்றியினின்றும் வீழ்ந் தொழுகாநின்ற இரத்தப் பெருக்கு, ஆண்டு ஒரு நூறு நூறு அவதி – பதினாயிர வருடகாலம், வெம்பணி பூண்டது ஓர் கண்ணுதல் பொலங்கைச் சென்னி மேல் உய்த்தலும் – வெவ்விய சர்ப்பத்தை யணிந்த ஒப்பில்லாத நெற்றிக் கண்ணினையுடைய வைரவக்கடவுள் அழகிய திருக்கரத்தி லேந்திய பிரம கபாலத்தின்மீது உகுத்தலும், மாண்டது – வறந்துபோனது; வேறு ஒரு மயக்கம் வந்தது – அகந்தையாகிய மயக்கத்துக்கு வேறாகியதொரு மயக்கந் திருமாலுக்கு உண்டானது. [ப 69/137]

    பாதியும் நிறைந்ததும் இல்லை பாணியின்
    மீதுறு பலிக்கலன் மிக்க வன்மைபோய்ச்
    சீதரன் சோர்தலுந் திருவும் ஞாலமும்
    காதலன் நிலைமையைக் கண்டி ரங்கினார். …… 189

    பாணியின் மீது உறு பலிக்கலனும் பாதியும் நிறைந்தது இல்லை – திருக்கரத்தின்மீது பொருந்திய பிக்ஷாபாத்திரந்தானும் பாதியளவும் நிறைந்திலது; சீதரன் மிக்க வன்மை போய்ச் சோர்தலும் – திருமால் தமது மிக்க வலிமை நீங்கிச் சோர்வடைதலும், திருவும் ஞாலமும் – இலக்குமியும் பூமிதேவியும், காதலன் நிலைமையைக் கண்டு இரங்கினார் – தங்கள் நாயகரின் நிலைமையைக் கண்டு இரக்கங் கொண்டார்கள்.
    நிறைந்ததும் என்புழி உம்மை, கலன் என்பதனோடு கூட்டப்பட்டது. [ப 69/137]

    செஞ்சரண் அடைந்தயர் தெரிவை மார்தமை
    அஞ்சலென் றருளியெம் மண்ணல் அச்சுதன்
    நெஞ்சுறு மயலினை நீக்கி யாங்கவன்
    உஞ்செழு மாறுசெய் துறையுள் நீங்கினான். …… 190

    எம் அண்ணல் – எம் இறைவராகிய வைரவக்கடவுள், செம் சரண் அடைந்து அயர் தெரிவைமார் தமை – தமது செம்மையாகிய திருவடிகளை யடைந்து சோகமுறுகின்ற திருமாலின் தேவிமாரை, அஞ்சல் என்று அருளி – அஞ்சன் மின் என்று அருள்புரிந்து, அச்சுதன் நெஞ்சு உறு மயலினை நீக்கி – திருமாலினது நெஞ்சிற் பொருந்திய மயக்கத்தை நீக்கி, ஆங்கு அவன் உஞ்சு எழுமாறு செய்து – அங்கே அத் திருமால் உய்ந்தெழும்வண்ணஞ் செய்து, உறையுள் நீங்கினான் – அத் திருமாலின் இருப்பிடத்தை விடுத்துச் சென்றருளினார். [ப 69/137]

    நீங்கினன் பின்வரும் நெடிய மாயனை
    ஈங்கினி திருத்திஎன் றியம்ப அன்னவன்
    ஓங்குநின் சூலமேல் உற்று ளான்தனைப்
    பாங்குற வருள்கெனப் பகர்ந்து வேண்டவே. …… 191

    நீங்கினன் – அவ்விடத்தைவிட்டு நீங்கியருளியவரான வைரவக்கடவுள், பின் வரும் நெடிய மாயனை – தமக்குப் பின்னே தம்மை தொடர்ந்துவருகின்ற திருநெடுமாலை, ஈங்கு இனிது இருத்தி என்று இயம்ப – இங்கே இனிதாக இருக்குக என்று அநுக்கிரகிக்க , அன்னவன் – அந்தத் திருமால், ஓங்கு நின் சூலமேல் உற்றுளான் தனை – உயர்ந்து விளங்குகின்ற தேவரீரது சூலத்தின்மீது கோப்புண்டு கிடப்பவனாகிய விடுவசேனனை, பாங்குற – அடியேன் தேவரீருக்குத் தொண்டனாம் உரிமையைப் பொருந்த, அருள்க என் பகர்ந்து வேண்ட – தந்தருள்க என்று உரைத்து வேண்டுதல் செய்ய. [ப 70/137]

    கைத்தலை அயன்தலைக் கபால்கொண் டுற்றவன்
    முத்தலை வேலினும் முடிந்த சேனையின்
    மெய்த்தலை வன்தனை விடுத்துத் தொல்லுயிர்
    அத்தலை நல்கியே அருள்செய் தானரோ. …… 192

    கைத்தலை அயன் தலை கபால் கொண்டு உற்றவன் – திருக்கரத்திலே பிரமாவின் கபாலந் தரித்து எழுந்தருளியவராகிய வைரவக்கடவுள், முடிந்த சேனையின் மெய்த் தலைவன் தனை – இறந்த மெய்ம்மையான சேனாதிபதியாகிய விடுவசேனனை, முத்தலை வேலினும் விடுத்து – முத்தலைச் சூலத்தினின்றும் விடுத்து, அத்தலை – அப்பொழுது, தொல் உயிர் நல்கி – பழைய உயிரைக் கொடுத்து, அருள் செய்தான் – கருணை புரிந்தார். [ப 70/137]

    மாலுல கொருவியே வடுகன் அன்னதோர்
    கோலமொ டேகணங் குழுமிச் சூழ்தர
    மேலுள புவனமேல் மேவி வைகலும்
    பாலனஞ் செய்தனன் பலஅண் டங்களும். …… 193

    மால் உலகு ஒருவி – திருமாலின் உலகமாகிய வைகுந்தத்தை நீங்கி, வடுகன் – வைரவக் கடவுள், அன்னதோர் கோலமொடு – அந்த ஒப்பற்ற உக்கிர மூர்த்தத்தோடு, கணம் குழுமிச் சூழ்தர – பூதகணங்கள் குழுமித் தம்மைச் சூழ, மேல் உள புவனமேல் மேவி – அண்ட முகட்டிலுள்ள தமது புவனத்தின் கண் இருந்து, பல் அண்டங்களும் வைகலும் பாலனஞ் செய்தனன் – பல அண்டங்களையுந் தினந்தோறும் பாதுகாத்தருளினார். [ப 70/137]

    அடுவதொ ரிறுதியில் கமலன் ஆணையால்
    கடவுளர் சென்னியுங் கமலன் ஆதியோர்
    முடிகளும் அட்டுயிர் முற்று மாற்றிநுண்
    பொடிபட இயற்றுமால் புவனம் யாவையும். …… 194

    அடுவது ஓர் இறுதியில் – உலகினைச் சங்கரிப்பதாகிய ஒப்பற்ற சங்காரகாலத்தில், அமலன் ஆணையால் – சிவபெருமானுடைய கட்டளையினாலே, கடவுளர் சென்னியும் – தேவர்களின் தலைகளையும், அட்டு – இவ் வைரவக்கடவுள் துணித்து, உயிர் முற்றும் மாற்றி – உயிர்கள் யாவற்றையுஞ் சங்கரித்து, புவனம் யாவையும் நுண் பொடி பட இயற்றும் – புவனம் அனைத்தையும் பொடியாகச் செய்தருளுவர். [ப 71/137]

    பொறியுறும் உயிர்களும் புவனம் யாவையும்
    இறுதியாய் அழிவுறும் ஈமத் தெல்லையின்
    மறையெனு ஞாளியை உயர்த்து மற்றவன்
    உறுவதோர் மகிழ்ச்சியால் உலவும் என்பவே. …… 195

    பொறி உறும் உயிர்களும் – ஐம்பொறிகளோடு பொருந்திய உயிர்களும், புவனம் யாவையும் – எல்லாப் புவனங்களும், இறுதியாய் அழிவுறும் ஈமத்து எல்லையில் – முடிவாகி அழியும் மகா மயானத்தினிடத்தில், மறை எனும் ஞாளியை உயர்த்து – வேதம் ஆகிய ஞாளிக்கொடியை உயர்த்தி, உறுவது ஓர் மகிழ்ச்சியால் – உண்டானதொரு பேரானந்தத்தால், அவன் உலவும் – அவ் வைரவக்கடவுள் உலாவியருளுவார்; என்ப – என்று சங்கார இரகசியத்தை அறிந்தோர் கூறுவர்.
    ஞாளியை ஊர்ந்து அதனால் அதனை உயரச்செய்து என்றுமாம். [ப 71/137]

    வேறு
    கண்ட கங்கொள் கபால்கொடு காசினி
    விண்ட கந்தொறும் வெம்பலிக் குற்றதும்
    முண்ட கன்முத லோர்தமை எம்பிரான்
    தண்ட கஞ்செய் தலையளி யாகுமால். …… 196

    கண்டகம் கொள் கபால் கொடு – வைரம் பொருந்திய கபாலத்தை ஏந்திக்கொண்டு, காசினி விண்டு அகம் தொறும் – பூமியிலும் ஆகாயத்திலும் உள்ள இடந்தோறும், வெம் பலிக்கு உற்றது – விரும்பப்படும் பிக்ஷைக்குச் சென்றது, முண்டகன் முதலோர் தமை – தாமரையாசனரான பிரமா முதலியவர்களை, எம்பிரான் தண்டகம் செய் தலையளியாகும் – எம்பெருமான் தண்டித்து நல்வழிப்படுத்துகின்ற பேரருளேயாம். [ப 71/137]

    ஆற்றின் மல்கும் அவிர்சடை அண்ணல்பால்
    தோற்று கின்றதொர் தூயவன் சோரிநீர்
    ஏற்ற தன்மை இயம்பினம் ஈங்கினி
    வேற்றுருக் கொண்ட தன்மை விளம்புவாம். …… 197

    ஆற்றின் மல்கும் அவிர்சடை அண்ணல்பால் – கங்கையினாற் பொலிந்து விளங்குகின்ற சடையினையுடைய சிவபெருமானிடத்து, தோற்றுகின்றது ஓர் தூயவன் – உதிக்கின்ற ஒப்பில்லாத தூயோராகிய வைரவக்கடவுள், சோரி நீர் ஏற்ற தன்மை ஈங்கு இயம்பினம் – இரத்தப் பலியை ஏற்ற இயல்பை இங்கே சொன்னோம்; இனி வேற்றுருக் கொண்ட தன்மை விளம்புவாம் – இனிச் சிவபெருமான் வேற்றுருக்கொண்ட தன்மையைச் சொல்லுவோம்.
    அண்ணல்பால் தோற்றுகின்றதோர் தூயவன் செய்கையும் அண்ணல் செய்கையேயாம்; வைரவக்கடவுள் இறைவனின் வேறன்மையினென்க. [ப 72/137]

    வேறு
    முந்தொரு ஞான்று மூவுலகும் போற்றிடும்
    இந்திரன் இமையவர் இனத்தொ டேகியே
    அந்தமில் கயிலையில் அரனைப் போற்றுவான்
    வந்தனன் அகந்தையும் மனத்தில் தாங்கியே. …… 198

    முந்து ஒரு ஞான்று – முன்னொரு காலத்தில், மூவுலகும் போற்றிடும் இந்திரன் – மூன்றுலகத்தாருந் துகிக்கின்ற இந்திரன், இமையவர் இனத்தொடு ஏகி – தேவர் கூட்டத்துடன் சென்று, அந்தம் இல் கயிலையில் அரனைப் போற்றுவான் – அழிவில்லாத திருக்கைலாயத்தின்கண் சிவபெருமானை வழிபடுதற்கு, அகந்தையும் மனத்தில் தாங்கி வந்தனன் – அகங்காரத்தையும் மனத்திற் சுமந்துகொண்டு வந்தான். [ப 72/137]

    பொன்கெழு கடிமதில் பொன்னங் கோயில்முன்
    மின்கெழு வச்சிர வேந்தன் சேர்தலுங்
    கொன்கெழு பாரிடக் கோலந் தாங்கியே
    முன்கடை நின்றனன் முடிவின் முன்னையோன். …… 199

    பொன் கெழு – அழகு கெழுமிய, கடி மதில் – காவலாகிய மதிலினையுடைய, பொன்னங் கோயின் முன் – செம்பொற்றிருக்கோயிலி னெதிரே, மின் கெழு வச்சிர வேந்தன் சேர்தலும் – ஒளி வீசுகின்ற வச்சிராயுதந் தரித்த இந்திரம் செல்லுதலும், முடிவில் முன்னையோன் – அழிவில்லாத பழையோராகிய சிவபெருமான், கொன் கெழு – அச்சத்தை விளைக்கின்ற, பாரிடக் கோலம் தாங்கி – பூத வேடங் கொண்டு, முன் கடை நின்றனன் – முதற்கடைவாய்தலில் நின்றருளினார். [ப 72/137]

    நின்றிடும் ஒருவனை நெடிது நோக்கியே
    இன்றுனைக் கண்டனன் யாரை ஐயநீ
    மன்றவும் விருந்தினை வள்ள லைத்தொழச்
    சென்றனன் வேலையென் செப்பு கென்னவே. …… 200

    நின்றிடும் ஒருவனை – பூத வேடத்தோடு நிற்கின்ற சிவபெருமானை, நெடிது நோக்கி – நீண்ட நேரம் உற்றுப் பார்த்து, மன்றவும் விருந்தினை – மிகவும் புதியவை; இன்று உனைக் கண்டனன் – இன்று தான் உன்னை இங்கே கண்டேன்; ஐய நீ யார் – ஐயனே நீ யாவன்; வள்ளலைத் தொழச் சென்றனன் – யான் அருள்வள்ளலாகிய சிவபெருமானை வணங்குவதற்கு வந்தேன்; வேலை என் – அதற்கேற்ற செவ்விதான் யாது; செப்புக என்ன – செப்புவாயாக என்று இந்திரம் வினவ. [ப 73/137]

    மற்றது காலையின் மகேசன் யாவதுஞ்
    சொற்றில னாகியே சூர்த்த நோக்குடன்
    உற்றிட மேல்வரும் ஊற்றம் உன்னலன்
    செற்றம தாயினன் தேவர் செம்மலே. …… 201

    அது காலையின் – அப்பொழுது, மகேசன் யாவதும் சொற்றிலனாகி – மகாதேவரான சிவபெருமான் ஒன்றுஞ் சொல்லாதவராய், சூர்த்த நோக்குடன் உற்றிட – அச்சம்தரும் பார்வையுடன் வாளாநிற்க, மேல் வரும் ஊற்றம் உன்னலன் – பின்ன ருண்டாகும் ஊறுபா டொன்றையுஞ் சிந்தியாதவனாய், தேவர் செம்மல் செற்றமது ஆயினன் – தேவேந்திரன் கோபங் கொண்டான். [ப 73/137]

    அண்டரும் அகந்தையன் ஆற்ற வுந்திறல்
    கொண்டனன் என்றுதன் குலிச மாப்படை
    கண்டகன் எறிதலுங் கடவுள் மேற்படா
    நுண்டுக ளாகியே நொய்தின் மாய்ந்ததே. …… 202

    அண்டரும் அகந்தையன் – கிட்டுதற்கரிய அகங்காரம் படைத்தவன்; ஆற்றவும் திறல் கொண்டனன் – மிக்க வலிமையுடையவன்; என்று – என்று கருதி, தன் குலிச மாப்படை கண்டகன் எறிதலும் – தனது பெரிய குலிசாயுதத்தைக் கீழோனாகிய இந்திரன் எறிதலும், கடவுள்மேற் படா – அக் குலிசாயுதம் பூதவேடமாகிய கடவுள்மேற் பட்டு, நுண் துகள் ஆகி நொய்தின் மாய்ந்தது – நுண்ணிய துகளாய் விரைவி லழிந்தது. [ப 73/137]

    மருத்துவன் வச்சிரம் மாய்ந்து போதலும்
    புரத்தினை யட்டருள் புனிதன் அவ்வழிக்
    கிருத்திம வுருவினை நீங்கிக் கேழ்கிளர்
    உருத்திர வடிவினை ஒல்லை தாங்கினான். …… 203

    மருத்துவன் வச்சிரம் மாய்ந்து போதலும் – இந்திரனுடைய குலிசாயுதம் அழிந்துபோக, புரத்தின அட்டு அருள் புனிதன் – திருபுரத்தினை அழித்து அருள்புரிந்த சிவபெருமான், அவ்வழி – அப்பொழுது, கிருத்திம உருவினை நீங்கி – பூத உருவத்தை விடுத்து, கேழ் கிளர் உருத்திர வடிவினை ஒல்லை தாங்கினான் – ஒளி கிளருகின்ற உருத்திரவடிவத்தை விரைந்தெடுத்தார். [ப 74/137]

    உயர்ப்புறு சடிலநின் றூறு தண்புனல்
    அயர்ப்புறு மகபதி அகந்தை கண்டட
    மயிர்ப்புறம் எங்கணும் வந்து தோன்றலின்
    வியர்ப்புவந் தடைந்தன மேனி முற்றுமே. …… 204

    உயர்ப்பு உறு சடிலம் நின்று – உயர்வாகிய சடையினின்றும் ஊறு தண் புனல் – ஊற்றெடுக்கின்ற தண்ணிய கங்கையானது, அயர்ப்பு உறு மகபதி அகந்தை கண்டு – தன்னை மறந்த இந்திரனுடைய அகங்காரத்தைக் கண்டு, அட – அவனைத் தண்டிக்கும் பொருட்டு, மயிர்ப்புறம் எங்கணும் வந்து தோன்றலின் – மயிர்க்கால்கள் எவ்விடத்திலும் வந்து தோன்றினாற்போல, மேனி முற்றும் – மேனி முழுவதும், வியர்ப்பு வந்து அடைந்தன – வியர்வை ஒழுக்குகள் வெளிப்பட்டுத் தோன்றின. [ப 74/137]

    எள்ளுதல் செய்திடும் இவன்தன் ஆருயிர்
    கொள்ளுதும் எனச்சினங் கொண்ட தீயொடும்
    உள்ளுறு காலெழீஇ ஒருங்கு சென்றெனப்
    பொள்ளென உயிர்ப்பழல் புகையொ டுற்றதே. …… 205

    எள்ளுதல் செய்திடும் – சிவபெருமானை இகழுகின்ற, இவன் தன் ஆருயிர் கொள்ளுதும் எனச் சினம் கொண்ட – இவனுடைய அரிய உயிரை வாங்குவோம் என்று கோபங்கொண்ட, தீயொடும் – அக்கினியோடு, உள்ளுறு கால் – உள்ளே பொருந்திய காற்று, ஒருங்கு எழீஇச் சென்றென – ஒன்றுபட்டு எழுந்து சென்றாற்போல, உயிர்ப்பு அழல் – நெட்டுயிர்ப்பாகிய அக்கினி, பொள்ளெனப் புகையொ டுற்றது – விரைந்து புகையோ டெழுந்தது. [ப 74/137]

    குறுகிநின் றாற்றலால் குலிச மாப்படை
    எறிதரு கொடியனை எய்த வேளெனச்
    செறுகனல் விழியெனச் செப்பச் சேறல்போல்
    நெறிதரு புருவமும் நெற்றி சேர்ந்தவே. …… 206

    குறுகி நின்று – அணுகி நின்று, ஆற்றலால் குலிச மா படை எறிதரு கொடியனை – வன்மையினாற் குலிசமாகிய பெரிய படையை யெறிந்த இந்தக் கொடியவனை, கனல் விழி – அக்கினிக் கண்ணே நீ, எய்த வேளென செறு – மரம்பெய்த மன்மதனைச் செற்றது போலச் செறக்கடவாய்; என செப்பச் சேறல்போல் – என்று செப்புதற்குச் செல்லுவதுபோல, நெறிதரு புருவமும் நெற்றி சேர்ந்த – நெறித்த இரு புருவங்களும் நெற்றிமேற் சென்றன. [ப 75/137]

    பற்றலர் புரங்களோ உலகின் பன்மையோ
    முற்றுயிர் ஈட்டமோ முடிக்கப் பேதையைச்
    செற்றிடல் வசையவன் செயலைக் காண்டுமென்
    றுற்றனன் முறுவலும் உதித்த தொல்லையில். …… 207

    பேதையை முடிக்க – இந்த அறிவிலியைச் சங்கரித்தற்கு, பற்றலர் புரங்களோ – இவன் பகைவர்களின் முப்புரங்களும் அல்லன்; உலகின் பன்மையோ – பலவாகிய உலகக் கூட்டங்களு மல்லன்; முற்று உயிரீட்டமோ – முடிதற்குரிய உயிர்க்கூட்டங்களு மல்லன்; செற்றிடல் வசை – இவ்வற்பனைப் பொருள் செய்து சங்கரித்தல் வசையாம்; அவன் செயலைக் காண்டும் என்று உற்றனன் – அவனுடைய செய்கையைப் பார்ப்போம் என்று வாளாநின்றருளினார்; ஒல்லையில் முறுவலும் உதித்தது – உடனே புன்முறுவலும் உண்டானது. [ப 75/137]

    துடித்தன துவரிதழ் உரப்பித் தூயவாய்
    இடித்தன சேந்தன இரண்டு கண்களும்
    விடத்தினை நுகர்ந்தவன் வெகுளித் தீயினுக்
    கடுத்திடு துணைவர்தம் அமைதி போலவே. …… 208

    விடத்தினை நுகர்ந்தவன் வெகுளித் தீயினுக்கு – ஆலகால விடத்தை உண்ட சிவபெருமானது கோபாக்கினிக்கு, அடுத்திடும் துணைவர்தம் அமைதி போல – அடுத்து வந்து உதவுகின்ற உடன்பிறப்பாளரின் அமைவுபோல, துவர் இதழ் துடித்தன – செவ்விதழ்கள் துடித்தன; தூய வாய் உரப்பி இடித்தன – தூய்மையாகிய திருவாய் உரப்பி இடிகள் இடித்தன; இரண்டு கண்களும் சேர்ந்தன – இரு கண்களும் சிவந்தன. [ப 75/137]

    அக்கணம் இவ்வகை யார்க்கும் ஆதியாம்
    முக்கணன் நான்முகன் முதல தேவரும்
    மிக்குள உயிர்களும் வெருவ வெய்யதோர்
    உக்கிர வடிவுகொண்டு ருத்து நின்றனன். …… 209

    அக்கணம் – அப்பொழுது, இவ்வகை – இவ்வாறு, யார்க்கும் ஆதி ஆம் முக்கணன் – யாவர்க்கும் முதலாகிய சிவபெருமான், நான்முகன் முதல் தேவரும் – பிரமா முதலிய தேவர்களும், மிக்கு உள உயிர்களும் வெருவ – எஞ்சியுள்ள உயிர்களும் அஞ்சும்வண்ணம், வெய்யது ஓர் உக்கிர வடிவு கொண்டு – வெம்மைத்தாயதோர் உக்கிர வடிவங் கொண்டு, உருத்து  நின்றனன் – உருத்து நின்றருளினார். [ப 75/137]

    வேறு
    நிற்கின்ற எம்பெருமான் பெருஞ்சீற்றந்
    தனைநோக்கி நெஞ்சமாகுங்
    கற்குன்றம் நடுநடுங்கப் பதைபதையா
    அஞ்சியவன் கழலின் வீழ்ந்தே
    எற்குன்றன் மாயமெலாந் தெரிந்திடுமோ
    மாலயனும் இன்னுந் தேறார்
    பொற்குன்றச் சிலையானே வினையேன்செய்
    பிழையதனைப் பொறுத்தி என்றான். …… 210

    நிற்கின்ற எம்பெருமான் பெரும் சீற்றம் தனை நோக்கி – உருத்துநிற்கின்ற எம்பெருமானுடைய பெரிய கோபத்தைக் கண்டு, நெஞ்சமாகும் கல் குன்றம் நடுநடுங்க – மனமாகிய கன்மலை நடுநடுங்க, பதைபதையா அஞ்சி – பதைபதைத்து அஞ்சி, அவன் கழலி வீழ்ந்து – அப்பெருமானுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி, எற்கு உன் தன் மாயம் எலாம் தெரிந்திடுமோ – எளியேனுக்குத் தேவரீருடைய மாயங்களெலாம் தெரியுமோ; மால் அயனும் இன்றும் தேறார் – திருமாலும் பிரமதேவரும் இன்னமும் அறியார்; பொன்குன்றச் சிலையானே – பொன்மலையாகிய மேருவை வில்லாக உடையவரே, வினையேன் செய் பிழையதனை பொறுத்தி என்றான் – தீவினையேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருள்வீராக என்று பிரார்த்தித்தான். [ப 76/137]

    போற்றிப்பன் முறைதாழும் புரந்தரனை
    அஞ்சலென்று புரிந்து நோக்கி
    மேற்றிக்கில் வீழ்கின்ற செங்கதிரோ
    இதுவென்ன வேலை மேற்றன்
    சீற்றத்தீ யினைவீசி ஆங்கவற்கு
    விடைகொடுத்துச் செல்கென் றேவி
    ஏற்றிற்செய் அரியணைமேல் உறையுள்புகுந்
    துமையொடும்வீற் றிருந்தான் எங்கோன். …… 211

    போற்றி பன்முறை தாழும் புரந்தனை – துதித்துப் பலமுறை வணங்குகின்ற இந்திரனை, அஞ்சல் என்று புரிந்து நோக்கி – அஞ்சற்க என்று அபயம் அளித்து நோக்கி, மேல் திக்கில் வீழ்கின்ற செங்கதிரோ இது என்ன – மேற்றிசையில் அத்தமனஞ் செய்கின்ற செஞ்ஞாயிறோ இது என்று கருதும்படி, தன் சீற்றத் தீயினை வேலை மேல் வீசி – தமது கோபாக்கினியைச் சமுத்திரத்தின் மீது எறிந்து, ஆங்கு அவற்கு செல்க என்று விடைகொடுத்து ஏவி- அங்கே அவ்விந்திரனுக்குச் செல்லுக என்று விடைகொடுத்து அனுப்பி, உறையுள் புகுந்து – கோயிலுட் சென்று, அரி ஏற்றில் செய் அணைமேல் – சிங்கேற்றின்மீது செய்யப்பட்ட ஆசனத்தின்மீது, உமையொடும் எம் கோன் வீற்றிருந்தான் – உமாதேவியாரோடும் எம்பெருமான் வீற்றிருந்தருளினார். [ப 76/137]

    வேறு
    கூற்று வன்தனிக் கூற்றன் மந்திரம்
    வீற்றி ருந்திடும் வேலை வாய்தனில்
    ஆற்றல் சேர்புனற் கரசன் பால்விடு
    சீற்ற மானதோர் சிறுவன் ஆனதே. …… 212

    தனிக் கூற்றுவன் கூற்றன் – ஒப்பில்லாத காலகாலரான சிவபெருமான், மந்திரம் வீற்றிருந்திடும் வேலைவாய்தனில் – ஆலயத்தில் எழுந்தருளியிருந்த போது, ஆற்றல் சேர் புனற்கு அரசன்பால் விடு சீற்றமானது – வலி பொருந்திய சமுத்திரராசனாகிய வருணனிடத்து விடுத்த சீற்றமானது, ஓர் சிறுவன் ஆனது – ஒரு சிறுவன் ஆயினது. [ப 77/137]

    ஆன பாலனை அம்பு ராசிதன்
    கானு லாந்திரைக் கரங்களால் தழீஇத்
    தான வேசன்என் தனயன் ஆயினான்
    நான லாதியார் நற்றவஞ் செய்தார். …… 213

    ஆன பாலனை – அவ்வாறுண்டான சிறுவனை, அம்புராசி தன் கான் உலாம் திரைக் கரங்களால் தழீஇ – கடலானது தனது மிக்குப் பரந்த திரைகளாகிய கைகளாலே தழுவி, தானவேசன் என் தனயன் ஆயினான் – அசுரேசன் எனது புதல்வனாயினான்; நான் அலாது நல் தவம் செய்தார் யார் – யானே யல்லாமல் நல்ல தவஞ் செய்தவர் யாவர்.
    அம்புராசி ஆகுபெயராய்க் கடற்கரசனை உணர்த்திற்று, கான் மிகுது குறித்தது. [ப 77/137]

    ஊழி பேரினும் உலகம் பேரினும்
    வாழி வாழியென் மைந்த நீயெனாக்
    கேழில் ஆசிகள் கிளத்திப் போற்றினான்
    ஆழி மால்கடற் கரசன் என்பவே. …… 214

    ஊழி பேரினும் – ஊழிக்காலம் வந்தாலும், உலகம் பேரினும் – ஊழியினாலே உலகம் நிலைகுலைந்தாலும், என் மைந்த நீ வாழி வாழி எனா – எனது மகனே நீ வாழ்க வாழ்க என்று, கேழில் ஆசிகள் கிளத்தி – ஒப்பில்லாத ஆசிகள் கூறி, ஆழி மால் கடற்கு அரசன் போற்றினான் – ஆழியாகிய பெரிய கடற்கரசன் வளர்த்தான். [ப 77/137]

    நசைகு லாவிய நரலை காத்திட
    வசைவி லான்சிறி தழுத வேலையில்
    வசையி லாதுயர் வானும் மண்ணுமெண்
    டிசையும் யாவையுஞ் செவிடு பட்டவே. …… 215

    நசை குலாவிய நரலை காத்திட – புத்திர வாஞ்சை மிக்க சமுத்திரம் பாதுகாக்க, அசைவிலான் சிறிது அழுத வேலையில் – அசைவற்ற அச்சிறுவன் சிறிது அழுதபோது, வசை இலாது உயர் வானும் – வசையின்றி உயர்ந்த வானுலகமும், மண்ணும் – மண்ணுலகமும், எண் திசையும் – எட்டுத் திக்குகளும், யாவையும் செவிடு பட்ட – அனைத்துஞ் செவிடுபட்டன. [ப 78/137]

    நூன்மு கத்தினோர் நுனித்துக் காணுறு
    நான்மு கத்தினோன் நாடி இவ்வொலி
    வான்மு கத்திடை வருமி தேதெனா
    மீன்மு கத்துலாம் வேலை மேவினான். …… 216

    நூல் முகத்தினோர் – நூலறிஞர்கள், நுனித்துக் காணுறும் – நுணிகி அறிகின்ற, நான்முகத்தினோன் – பிரமா, இவ்வொலி நாடி – இவ்வழுகையொலியைக் கேட்டு, வான் முகத்திடை வரும் இது ஏது – வானத்தின்கண் வருகின்ற இவ்வொலிதான் யாதோ என்று, மீன் முகத்து உலாம் வேலை மேனினான் – மீன்கள் தம்பால் உலாவுகின்ற சமுத்திரத்தை அடைந்தார்கள். [ப 78/137]

    வேலை சேரஅவ் வேலை வேலையுஞ்
    சால வன்பினால் தவிசொன் றிட்டுநீ
    ஏல மேவுகென் றிருத்தி யான்பெறும்
    பாலன் ஈங்கிவன் பார்த்தி யாலெனா. …… 217

    வேலை சேர – பிரமதேவர் சமுத்திரத்தை அடைய, அவ்வேலை – அப்பொழுது, வேலையும் – சமுத்திர ராசனான வருணனும், சால அன்பினால் தவிசு ஒன்று இட்டு – மிக்க அன்போடு ஓராசனத்தை இட்டு, ஏல மேவுக என்று இருத்தி – பொருத்தமுற இருத்திர் என்று இருத்தி, ஈங்கு இவன் யான் பெறும் பாலன் – இங்கே அழுகின்ற இவன் யான் பெற்ற புதல்வன், நீ பார்த்தி எனா – நீர் பார்ப்பீராக என்று.

    கையில் நீட்டலுங் கடிது வாங்கியே
    ஐயன் தன்மடி அதனில் சேர்த்திடத்
    துய்ய புல்லணந் தொடர்ந்து பற்றினான்
    மையல் மைந்தனுந் தனது வன்மையால். …… 218

    கையில் நீட்டலும் – கரத்தில் நீட்ட, கடிது வாங்கி – விரைந்து பெற்று, ஐயன் – தந்தையாகிய பிரமா, தன் மடி அதனில் சேர்த்திட – தமது மடிலத்தில் வளர்த்தலும், மையல் மைந்தனும் – மயக்கத்தினையுடைய அப் புதல்வனும், தனது வன்மையால் – தனது வலிமையினால், துய்ய புல்லணம் தொடர்ந்து பற்றினான் – பிரமாவினுடைய தூய்மையான தாடியை எட்டிப் பிடித்தான்.
    மண் பொதுத்தந்தை யாதலின் ஐயன் என்றார். மையல் மைந்தன், சிவ கோபத்தா லுதித்த மைந்தன் எனினுமாம். [ப 79/137]

    நார்த்தொ டுத்தெனும் நான்கு தாடியும்
    ஈர்த்துத் தூங்கலும் இணையில் வேதனும்
    ஆர்த்தி எய்தினான் அவன்கண் ஏயவன்
    சீர்த்தி கான்றெனச் சிந்திற் றொண்புனல். …… 219

    நார்த் தொடுத்து எனும் நான்கு தாடியும் – நாரைத் தொடுத்தாற் போலும் நான்முகரின் நான்கு தாடிகளையும், ஈர்த்துத் தூங்கலும் – இழுத்துக்கொண்டு அப்புதல்வன் தூங்குதலும், இணையில் வேதனும் ஆர்த்தி எய்தினான் – ஒப்பில்லாத பிரமதேவரும் வருத்தம் உற்றார், அவன் கணே – அப்பிரமதேவரின் கண்களே, அவன் சீர்த்தி கான்றென – அப் புதல்வனுடைய கீர்த்தியைக் கான்றாற் போல, ஒண் புனல் சிந்திற்று – ஒள்ளிய நீரைச் சிந்தின.
    கண் என்பதற் கியையச் சிந்திற்று என ஒருமாயாற் கூறினார். எட்டுக் கண்களும் நீர் பொழிந்தன என்க. [ப 79/137]

    காறொ டர்ந்திழி கலங்கு கட்புனல்
    ஆறு போலிய அகலம் தன்வழிச்
    சேறல் மேயது செறிவுற் றீண்டியே
    வேறொர் வேலைபோல் வேலை புக்கதே. …… 220

    கால் தொடர்ந்து இழி கலங்கு கண் புனல் – கால் கொண்டிறங்குகின்ற கலங்கிய கண்ணீரானது, ஆறு போலிய – ஆற்றை ஒப்ப, அகலம் தன்வழிச் சேறன் மேயது – மார்பின் வழியே செல்லுதலைத் தொடங்கி, செறிவுற்று ஈண்டி – நெருங்கிப் பொருந்தி, வேறோர் வேலைபோல் வேலை புக்கது – மற்றொரு சமுத்திரத்தைப் போலச் சமுத்திரத்திற் புகுந்தது.
    போலிய, செய்யியஎன் வினையெச்சம். மேயது எச்சமுற்று. [ப 79/137]

    முக்கண் நாயகன் முனிவு தன்னிடைப்
    புக்க காலையிற் புனல்வ றந்திடு
    மைக்க ருங்கடல் வறுமை நீங்கிற்றால்
    மிக்க நான்முகன் விழியின் நீரினால். …… 221

    முக்கண் நாயகன் முனிவு – மூன்று கண்களையுடைய சிவபெருமானுடைய கோபத் தீ, தன்னிடைப் புக்க காலையில் – தன்னிடத்துப் புகுந்தபொழுது, புனல் வறந்திடு மை கருங்கடல் – நீர் வற்றிப்போன மைபோலுங் கரிய கடலானது, மிக்க நான்முகன் விழியின் நீரினால் வறுமை நீங்கிற்று – உயர்ந்த பிரமதேவரின் விழிகளினின்றும் பெருகிய கண்ணீர் வெள்ளத்தால் நீரின்மையாகிய வறுமை நீங்கியது. [ப 79/137]

    பதுமன் அவ்வழிப் படர்ம யிர்த்தொகை
    மதலை கையினும் மரபின் நீக்கியே
    கதுமெ னப்பல கரங்க ளாலெடுத்
    துததி தன்கையில் உயிர்த்து நீட்டினான். …… 222

    பதுமன் அவ்வழி – பிரமதேவர் அப்பொழுது, படர் மயிர்த்கொகை – பரந்த தாடியின் மயிர்த்தொகையை, மதலை கையினும் மரபின் நீக்கி – அச்சிறுவனது கையினின்றும் விடுவிக்கு முறையில் விடுவித்துக்கொண்டு, கதுமெனப் பல கரங்களால் எடுத்து – விரைவாக அவனைப் பல கரங்களால் எடுத்து, உததி தன் கையில் உயிர்த்து நீட்டினான் – சமுத்திரராசன் கையில் நெட்டுயிர்த்துக் கொடுத்தார்.
    இது நேர்ந்ததே என்று உயிர்த்தாரென்க. [ப 80/137]

    நீட்டி யோரிறை நினைந்து நீயிது
    கேட்டி யொன்றியாங் கிளத்து வோம்இவன்
    ஏட்டு லாயதேன் இதழி சென்னியிற்
    சூட்டும் எம்பிரான் முனிவில் தோன்றினான். …… 223

    நீட்டி – வருணன் கையிற் கொடுத்து, ஓர் இறை நினைந்து – ஒரு கணப் பொழுது சிந்தித்து, நீ இது கேட்டி – வருணனே நீ இதனைக் கேட்பாயாக; யாம் ஒன்று கிளத்துவோம் – யாம் ஒன்று கூறுவோம்; இவன் – இப்புதல்வன், ஏடு உலாய தேன் இதழி – இதழ்களிலே தேன்பொருந்திய கொன்றை மலரை, சென்னியில் சூட்டும் எம்பிரான் – சிரசிற் கூட்டுகின்ற எம்பெருமானுடைய முனிவில் தோன்றினான் – கோபத்தில் உதித்தான். [ப 80/137]

    கருதி டான்ஒரு கடவுள் தன்னையும்
    வரமும் வேண்டலன் ஏது மற்றிவன்
    ஒருவ ராலுமீ றுற்றி டானரோ
    பரமன் சீற்றமே யான பான்மையால். …… 224

    பரமன் சீற்றமே ஆன பான்மையால் – சிவபெருமானது கோபமே இச் சிறுவன் ஆகிய தன்மையால், இவன் ஒரு கடவுள் தன்னையும் கருதிடான் – இவன் யாதொரு தெய்வத்தையும் நினையான்; ஏதும் வரமும் வேண்டலன் – யாதுமொரு வரத்தையும் பெற விரும்பான்; ஒருவராலும் ஈறு உற்றிடான் – எவர் ஒருவராலும் இறக்கமாட்டான். [ப 80/137]

    தேவர் தேவர்கோன் திசையினோர் வெரீஇப்
    போவ ரேயெனில் பொருகிற் பாரெவர்
    நீவி ரேனுமுன் நிற்றல் அஞ்சுவீர்
    ஏவ ரேஇவன் எதிர்நிற் பார்களே. …… 225

    தேவர் தேவர்கோன் திசையினோர் – தேவேந்திரன் திக்குப்பாலகர், வெரீஇப் போவர எனின் – அஞ்சிப் புறங்கொடுபா ரானால், எவர் பொருகிற்பார் – எவர்தாம் இவனை எதிர்த்துப் பொரவல்லவர்; நீவிரேனும் – பெற்று வளர்க்கும் நீவிரே எனினும், முன் நிற்றல் அஞ்சுவீர் – எதிரில் வாளா நிற்றற்கும் அஞ்சுவீர்கள்; இவன் எதிர் நிற்பார்கள் ஏவர் – இங்ஙனமாயின் இனி இவன்முன் நிற்பவர்கள் யாவருளர்.
    சமுத்திரராசனோடு சமுத்திரத்தையும் முன்னிலைப்படுத்தி நீவிர் என்றார். நீயும் உன்போல்வாரும் எனினு மமையும். [ப 81/137]

    ஆயுந் தொன்னெறி அமரர் யாவரும்
    ஈயுஞ் சாபம்வந் திவனை நேருமோ
    காயுந் திண்டிறற் கடவுட் டன்மைசேர்
    தீயுந் தீயுநின் சிறுவன் வெம்மையால். …… 226

    ஆயும் தொல் நெறி அமரர் யாவரும் – ஆராயப்படும் பழைய வேத நெறி கைவந்த தேவர்களெல்லாம், ஈயும் சாபம் வந்து இவனை நேருமோ – இடுகின்ற சாபங்கள் இவனை வந்து அணுகமாட்டா; காயும் திண் திறல் கடவுள் தன்மை சேர் தீயும் – காய்கின்ற திண்ணிய திறலினையுந் தெய்வத் தன்மையையு முடைய அக்கினிதேவனும், நின் சிறுவன் வெம்மையால் தீயும் – உனது சிறுவனது வெய்ய கோபாக்கினியினால் அழியும். [ப 81/137]

    நானும் அஞ்சுவன் நளினை காவலன்
    தானும் அஞ்சுவன் தவறில் வேள்விசெய்
    கோனும் அஞ்சும்வெங் கூற்றும் அஞ்சுமவ்
    வானும் அஞ்சும்இம் மண்ணும் அஞ்சுமே. …… 227

    நானும் அஞ்சுவன் – இவனுக்குச் சிருட்டிகர்த்தாவாகிய நானும் அஞ்சுவேன்; நளினை காவலன் தானும் அஞ்சுவன் – இலக்குமி நாயகரான விஷ்ணு மூர்த்தியும் அஞ்சுவார்; தவறில் வேள்வி செய் கோனும் அஞ்சும் – குற்றமற்ற யாகங்களைச் செய்கின்ற இந்திரனும் அஞ்சுவான்; வெம் கூற்றும் அஞ்சும் – கொடிய யமனும் அஞ்சுவான்; அவ்வானும் அஞ்சும் – அந்த விண்ணுலகமும் அஞ்சும்; இம்மண்ணும் அஞ்சும் – இந்த மண்ணுலகமும் அஞ்சும்.[ப 81/137]

    பாச னங்களே பரவ ஞாலமேல்
    தேசில் வெய்யகோல் செலுத்தி யாங்கவர்
    ஆசி செய்யநீ டரசு செய்வனால்
    ஈசன் அன்றியார் இவனை வீட்டுவார். …… 228

    பாசனங்கள் பரவ – அசுரர்களாகிய உறவினர்கள் துதிக்க, ஆங்கு அவர் ஆசி செய்ய – அவ்வாறே அவர்கள்தாமே ஆசி வழங்க, தேசில் வெய்ய கோல் செலுத்தி – ஒளியில்லாத கொடுங்கோலைச் செலுத்தி, ஞாலம் மேல் நீடு அரசு செய்வன் – பூமியின்கண் நீண்ட காலம் அரசு செய்வான்; ஈசன் அன்றி இவனை வீட்டுவார் யார் – சிவபெருமானன்றி இவனை அழிக்கவல்லார் யாவர்? [ப 82/137]

    என்னு மாத்திரத் திவன்த னக்குநீ
    நன்ன லந்திகழ் நாமம் ஒன்றினைப்
    பன்னு கென்னநீ பரித்த லால்இவன்
    தன்ன தொண்பெயர் சலந்த ரன்எனா. …… 229

    என்னும் மாத்திரத்து – என்று பிரமதேவர் கூறும்பொழுது, இவன் தனக்கு – இச் சிறுவனுக்கு, நீ – பிரமாவாகிய நீர், நல் நலம் திகழ் நாமம் ஒன்றினை – நன்மையும் அழகும் விளங்குகின்ற தொருபெயரை, பன்னுக என்ன – இடுக என்று வருணன் வேண்ட, நீ பரித்ததால் – சலமாகிய நீ தரித்தலினாலே, இவன் தன்னது ஒண் பெயர்  சலந்தரன் – இவனது ஒள்ளிய பெயர் சலந்தரன் ஆகும்; என்னா – என்று கூறி.
    தரித்தல் – தாங்குதல். [ப 82/137]

    பேரிட் டொல்லையில் பிரமன் தானுறை
    ஊரிற் போயினான் உததி பற்பகல்
    சீரிற் போற்றலுஞ் சிறுவன் காளையாய்ப்
    பாரிற் சேர்ந்தனன் அவுணர் பாற்பட. …… 230

    பேர் இட்டு – சலந்தரன் என்று பெயரிட்டு, பிரமன் ஒல்லையில் தானுறை ஊரில் போயினான் – பிரமதேவர் விரைவில் தாமுறையும் உலகத்துச் சென்றார்; உததி பற்பகல் சீரிற் போற்றலும் – வருணன் பலநாளாகச் சிறப்புடன் வளர்த்துவர, சிறுவன் காளையாய் – அச் சிறுவன் காளைப்பருவத்தினனாய், பாரில் அவுணர் பாற்படச் சேர்ந்தனன் – பூமியில் அவுணர்கள் பக்ஷமாகச் சேர்ந்தான். [ப 82/137]

    சென்று பாரிடைத் திசைகள் யாவையும்
    வென்று வாசவன் விண்ணு ளோர்நிதிக்
    குன்று சேர்தரக் கொடுமை செய்தனன்
    துன்று கின்றதொல் லவுணர் சூழவே. …… 231

    துன்றுகின்ற தொல் அவுணர் சூழ – நெருங்குகின்ற பழைய அவுணர்கள் சூழ்ந்துவர, பாரிடை சென்று – பூமியிற் சென்று, திசைகள் யாவையும் வென்று – திக்குகள் அனைத்தையும் வெற்றிகொண்டு, வாசவன் விண்ணுளோர் – இந்திரனுந் தேவர்களும், நிதிக் குன்று சேர்தர – பொன்மலையாகிய மேருமலைக்குச் செல்லும்படி, கொடுமை செய்தனன் – கொடுமை செய்தான். [ப 83/137]

    பொன்னெ டுங்கிரி தனிற்புத் தேளிரு
    மன்னும் வைகலும் வான நாடெலாந்
    தன்னை நேரிலான் தான வர்க்கெலாம்
    நன்ன யப்பொடு நல்கி னானரோ. …… 232

    புத்தேளிரும் மன்னும் – தேவர்களுந் தேவேந்திரனும், பொன் நெடுங்கிரிதனில் வைகலும் – நீண்ட பொன்மலையான மேருகிரியில் வசிக்க, வான நாடு எலாம் – வானுலக மனைத்தையும், தன்னை நேரிலான் – தனக்கொப்பில்லா சலந்தரன், தானவர்க்கு எலாம் நல் நயப்பொடு நல்கினான் – அசுரர்களுக் கெல்லாம் நல்ல விருப்பத்துடன் கொடுத்தான்.[ப 83/137]

    வச்சி ரப்படை மன்னன் பொன்னகர்
    நச்சும் வண்ணமோர் நகரஞ் செய்கென
    அச்ச லந்தரன் அருளத் தானவர்
    தச்சன் அவ்வழி சமைத்து நல்கினான். …… 233

    வச்சிரப்படை மன்னன் பொன்நகர் நச்சும் வண்ணம் – வச்சிரப்படையையுடைய இந்திரனது பொன்னுலகம் விரும்பும்படி, ஓர் நகரம் செய்க என அச்சலந்திரன் அருள – ஒரு நகரத்தை உண்டாக்குவாயாக என்று அந்தச் சலந்தரன் கட்டளை செய்ய, தானவர் தச்சன் அவ்வழி சமைத்து நல்கினான் – அசுரத் தச்சன் அவ்வண்ணமே செய்து கொடுத்தான். [ப 83/137]

    பாந்தள் மீமிசை பரிக்கு நேமிசா
    லாந்த ரம்மென அறைய நின்றதோர்
    ஏந்தல் மாநக ரிடையில் தானவர்
    வேந்தர் போற்றிட அரசில் மேயினான். …… 234

    பாந்தள மீமிசைப் பரிக்கும் நேமி – ஆதிசேஷன் தலைமீது சுமக்கும் பூமியிலே, சாலாந்தரம் என அறைய நின்றது ஓர் ஏந்தல் மா நகரிடையில் – சாலாந்தரம் எனக் கூற நின்றதொரு பெருமையிற் சிறந்த பெரிய நகரத்தில், தானவர் வேந்தர் போற்றிட அரசின் மேயினான் – அசுர அரசர்கள் துதிக்க அரசுவீற்றிருந்தான். [ப 84/137]

    கால நேமியாம் அவுணன் கன்னிகை
    வேலை நேர்விழி விருந்தை யென்பவள்
    கோல நாடியே குரவன் கூறிட
    ஏல வேமணந் தின்பம் எய்தினான். …… 235

    கால நேமியாம் அவுணன் கன்னிகை – காலநேமி என்னும் அசுரன் புத்திரியாகிய, வேலை நேர் விழி விருந்தை என்பவன் கோலம் நாடி – வேற்படையையொத்த விழியினையுடைய விருந்தை என்பவளது அழகை ஆராய்ந்து, குரவன் கூறிட – குலகுருவாகிய சுக்கிராச்சாரியார் கூற, ஏலமணந்து – தன் மரபுக்கியைய மணந்து, இன்பம் எய்தினான் – இன்பத்தை அநுபவித்தான். [ப 84/137]

    பாரில் அவ்வழிப் பன்னெ டும்பகல்
    சீரின் வைகினான் தேவர் யாவரும்
    மேரு வுற்றனர் அவரை மேவியாம்
    போர்செய் வோமெனப் புகன்று போயினான். …… 236

    பாரில் அவ்வழிப் பல்நெடும் பகல் சீரின் வைகினான் – பூமியின்கண்ணே அவ்வண்ணம் பல நெடுங்காலஞ் சிறப்புடனிருந்த சலந்திரன், தேவர் யாவரும் மேரு உற்றனர் – தேவர்கள் யாவரும் எனக்கஞ்சி மேருமலையை அடைந்தனர்; அவரை மேவி – அத்தேவர்களை அடைந்து, யாம் போர் செய்வோம் எனப் புகன்று போயினான் – நாம் போர் புரிவோம் என்று கூறிச் சென்றான். [ப 84/137]

    துங்க வீரர்கள் தொழுச லந்தரன்
    அங்கண் மேவலும் அமரர் வெய்யவன்
    இங்கும் வந்தனன் என்செய் வோமெனாச்
    சிங்கங் கண்டதோர் கரியின் தேம்பினார். …… 237

    துங்க வீரர்கள் தொழு சலந்திரன் – வெற்றி பொருந்திய வீரர்கள் வணங்குகின்ற சலந்தரன், அங்கண் மேவலும் – அந்த மேருமலையை அடைதலும், அமரர் – தேவர்கள், வெய்யவன் இங்கும் வந்தனன் – கொடியோன் இவ்விடத்துக்கும் வந்துவிட்டான்; என் செய்வோம் எனா – இனி என்ன செய்வோம் என்று, சிங்கம் கண்டதோர் கரியின் தேம்பினார் – சிங்கத்தைக் கண்ட தொரு யானையைப்ப்போலக் கலங்கினார்கள். [ப 84/137]

    தேம்பு கின்றவர் செய்வ தோர்கிலார்
    பாம்ப ணைத்துயில் பவனை உன்னியே
    ஓம்பு கென்றலும் உவண மீமிசை
    ஏம்ப லோடும்வந் திமைப்பில் எய்தினான். …… 238

    செய்வது ஓர்கிலார் தேம்புகின்றவர் – செய்வதின்னதென்று தெரியாமற் கலங்குகின்ற தேவர்கள், பாம்பு அணை துயில்பவனை உன்னி – பாம்பணையில் அறிதுயில் செய்யும் விஷ்ணுமூர்த்தியைத் தியானித்து, ஓம்புக என்றலும் – பாதுகாக்குக என்று பிரார்த்தித்தலும், உவண மீமிசை ஏம்பலோடு இமைபில் வந்து எய்தினான் – கருடன்மீது விருப்பத்தோடு கணப்பொழுதில் வந்தெய்தினார். [ப 85/137]

    வருச லந்தரன் மாறு கொண்டெழ
    இருப தாயிரம் யாண்டு பல்படை
    உரிய மாயைகொண் டுருத்தெ ழுந்துமால்
    பொருதும் வென்றிலன் புகழ்ந்து போயினான். …… 239

    வரு சலந்தரன் மாறுகொண்டு எழ – பொரும்பொருட்டு வந்த சலந்தரன் மாறாக எழுந்து போர் செய்ய, இருபதாயிரம் யாண்டு – இருபதினாயிரம் வருடம், உருத்தெழுந்து – கோபித்தெழுந்து, பல் படை உரிய மாயை கொண்டு – பல படைக்கலங்களினாலுந் தமக்குரிய மாயையினாலும், பொருதும் மால் வென்றிலன் – போர்புரிந்தும் விஷ்ணுமூர்த்தி வென்றிலர்; புகழ்ந்து போயினான் – சலந்தரனைப் புகழ்ந்து சென்றார். [ப 85/137]

    கொண்டல் மேனியன் கொடியன் தன்னொடு
    மண்டு போரிடை மலையும் வேலையில்
    அண்டர் வாசவன் அஞ்சி ஆலமார்
    கண்டன் மேவிய கயிலை எய்தினார். …… 240

    கொண்டல் மேனியன் – முகில்வண்ணரான விஷ்ணுமூர்த்தி, கொடியன் தன்னொடு – கொடியோனாகிய சலந்தரனோடு, மண்டு போரிடை மலையும் வேலையில் – நெருங்கிய போரைப் போர்க்களத்திற் செய்யும்போது, அண்டர் வாசவன் அஞ்சி – தேவர்களும் இந்திரனும் பயந்து, ஆலம் ஆர் கண்டன் மேவிய கயிலை எய்தினார் – ஆலத்தை அருந்திய நீலகண்டரான சிவபெருமான் எழுந்தருளிய திருக்கைலாச மலையை அடைந்தார்கள். [ப 85/137]

    வேறு
    அற்றா கின்ற வேலையின் வேலை அருள்மைந்தன்
    பற்றார் தம்மை நாடினன் யாண்டும் பார்க்கின்றான்
    கற்றார் ஏத்துங் கண்ணுதல் மேய கயிலாயத்
    துற்றார் கொல்லென் றுன்னி வெகுண்டான் ஊர்போந்தான். …… 241

    அற்று ஆகின்ற வேலையில் – அத்தன்மைத்தாகிய நிகழ்ச்சி நிகழுகின்ற சமயத்தில், வேலை அருள் மைந்தன் – சமுத்திர குமாரனான சலந்திரன், பற்றார் தம்மை – தன் பகைவர்களாகிய தேவர்களை, யாண்டும் நாடினன் பார்க்கின்றான் – யாண்டுந் தேடிப்பார்க்கின்றவன், கற்றார் ஏத்தும் கண்ணுதல் மேய கயிலாயத்து உற்றார்கொல் என்று உன்னி – கற்றோர் துதிக்கின்ற சிவபெருமான் எழுந்தருளிய கைலாசமலையை அடைந்தார்கள்போலும் என்று எண்ணி, வெகுண்டான் – கோபித்து, ஊர் போந்தான் – தனது சாலாந்தர புரிக்குச் சென்றான். [ப 80/137]

    தூண்டா ஒற்றால் பெற்றிடு சேனைத் தொகையோடு
    மீண்டா நிற்பான் தென்க யிலைக்கென் றெழும்வேலை
    வேண்டாம் வேண்டாம் நித்த னுடன்வெஞ் சமர்செய்யின்
    மாண்டாய் என்றாள் இல்லென வாழும் மதிவல்லி. …… 242

    தூண்டா – தூண்டுதல்செய்து, ஒற்றல் பெற்றிடு சேனைத் தொகையோடும் – ஒற்றர்களால் அழைக்கப்பட்ட சேனைக் கூட்டத்தோடும், ஈண்டா நிற்பான் – நெருக்கமுற்று நிற்பவனாகிய சலந்தரன், தென் கயிலைக்கு என்று எழும் வேலை – தென்கயிலைமீது போருக்கென் றெழுகின்ற சமயத்தில், நித்தனுடன் வெம் சமர் வேண்டா வேண்டா – நித்தராகிய சிவபெருமானுடன் கொடிய யுத்தம் வேண்டா வேண்டா; செய்யின் மாண்டாய் – செய்வாயாயின் இறந்தேபோனாய்; என்றாள் இல்லென வாழும் மதிவல்லி – என்று தடுத்தாள் இல்லாளாய் வாழுகின்ற மதியினையுடைய கொடி போன்றவளாகிய விருந்தை. [ப 86/137]

    குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றங் குறிக்கொள்ளான்
    நலந்தரு கின்ற செய்வினை ஓரான் நவைபாரான்
    புலந்தரு செற்றம் மீக்கொள யாதும் பொறையின்றிச்
    சலந்த ரனாம்பே ருண்மைய தென்னச் சாதித்தான். …… 243

    குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றம் குறிக்கொள்ளான் – குடிப்பிறந்தாளாகிய விருந்தை கூறிய கூற்றைப் பொருள் செய்யானாய், நலம் தருகின்ற செய்வினை ஓரான் – தனக்கு நன்மை தருகின்ற செயலினையுஞ் சிந்தியானாய், நவை பாரான் – வரக்கடவ குற்றங்களையும் பாராதவனாய், புலம் தரு செற்றம் மீக்கொள – தன்னிடத்து விரிகின்ற கோபந்தன்னைக் கீழ்ப்படுத்த யாதும் பொறை இன்றி – சிறிதும் பொறுமை இல்லாமல், சலந்தரன் ஆம் பேர் உண்மையது என்னச் சாதித்தான் – தனக்குச் சலல்தரன் என்னும் பெயர் உபசாரமன்று உண்மையானது என்பதைச் சாதித்தானாயினான்.
    சலம் – கோபம்; தரன் – தரித்தவன் என்றவாறு. [ப 86/137]

    சோனா மேகம் போற்படை மாரி சொரிகின்ற
    சேனா யூகஞ் சூழ்தர வாழித் திருமைந்தன்
    போனான் எங்கோன் தென்க யிலைக்கோர் புடையாக
    வானா டுள்ளோன் ஆங்கது காணா மறுகுற்றான். …… 244

    சோனா மேகம் போல் – விடாமழை பொழியும் மேகம்போல, படை மாரி சொரிகின்ற சேனா யூகம் சூழ்தர – ஆயுத மழை பொழிகின்ற சேனையாகிய படைவகுப்புச் சூழ்ந்து வர, ஆழி திரு மைந்தன் – சமுத்திரம் பெற்ற வனப்புள்ள புதல்வனான சலந்தரன், எம் கோன் தென் கயிலைக்கு ஓர் புடையாகப் போனான் – எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் அழகிய கைலாசமலைக்கு ஒரு புறமாகச் சென்றான்; வான் நாடு உள்ளோன் ஆங்கு அது காண மறுகுற்றான் – இந்திரன் ஆங்கே அவன் வருகையைக் கண்டு கலங்கினான். [ப 87/137]

    தாண்டும் பாய்மாத் தேர்கரி வீரர் தற்சூழ
    ஈண்டும் வந்தான் தீயவன் ஆவி இறும்வண்ணங்
    காண்டும் என்னா வாசவன் வானோர் கணமோடும்
    வேண்டும் வெள்ளிக் குன்றுறு கோயில் மேவுற்றான். …… 245

    தாண்டும் பாய்மா – தாவுகின்ற குதிரைகளும், தேர் கரி வீரர் தன் சூழ – தேர்களும் யானைகளும் வீரர்களும் தன்னைச் சூழ்ந்துவர, தீயவன் ஆவி இறும் வண்ணம் ஈண்டு வந்தான் – தீயோன் தன் உயிர் அழியும்வண்ணம் இவ்விடத்துக்கும் வந்தான்; காண்டும் என்னா – நாம் அதனைக் காண்போம் என்று, வாசவன் வானோர் கணமோடும் – இந்திரன் தேவர் கூட்டத்தோடும், வேண்டும் வெள்ளிக் குன்று உறு கோயில் மேவுற்றான் – விரும்பப்படும் வெள்ளி மலையாகிய திருக்கைலாயத்திற் பொருந்திய செம்பொற்றிருக்கோயிலை அடைந்தான். [ப 87/137]

    வேறு
    முந்திய வாயிலின் முறைபு ரிந்திடு
    நந்தியை வணங்கியுள் நடுக்கஞ் செப்பலும்
    அந்தமில் பண்ணவன் அருளை நாடியே
    உந்திட இந்திரன் உறையுள் போயினான். …… 246

    முந்திய வாயிலின் முறை புரிந்திடு நந்தியை வணங்கி – முதலிலுள்ள வாய்தலிற் காவல் புரிகின்ற திருநந்திதேவரை வணங்கி, உள் நடுக்கம் செப்பலும் -  தம்முடைய மனக்கலக்கத்தைக் கூறுதலும், அந்தமில் பண்ணவன் அருளைநாடி – அழிவில்லாத சிவபெருமானுடைய அநுக்கிரகமாகிய அநுமதியை அறிந்து, உந்திட – உள்ளே அனுப்ப, இந்திரன் உறையுள் போயினான் – இந்திரன் ஆலயத்துட் சென்றான். [ப 87/137]

    குணங்களின் மேற்படு குழகன் மால்வரை
    அணங்கொடு வீற்றிருந் தருளும் எல்லைபோய்
    வணங்கினன் தொழுதனன் வலிய துன்பினால்
    உணங்குதன் மனக்குறை உரைத்தல் மேயினான். …… 247

    குணங்களின் மேற்படு குழகன் – முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட பேரழகரான சிவபெருமான், மால்வரை அணங்கொடு – பெருமைபொருந்திய மலைககளாகிய உமாதேவியாரோடு, வீற்றிருந்தருளும் எல்லை போய் – வீற்றிருந்தருளும் இடத்துக்குச் சென்று, வணங்கினன் தொழுதனன் – வணங்கித் தொழுது, வலிய துன்பினால் உணங்கு தன் மனக்குறை – மிக்க துன்பத்தினால் வறந்துபோன தன் மனத்திலுள்ள குறையை, உரைத்தன் மேயினான் – முறையீடு செய்வானாயினான்.
    எண்குணங்களால் மேம்பட்ட எனினுமாம். [ப 88/137]

    நிலந்தனை வளைந்த முந்நீரில் வந்தவன்
    சலந்தரன் எனும்பெயர்த் தறுகட் டானவன்
    மலைந்தெமை வென்றிட மாசுற் றோடினேன்
    நலந்தரு கின்றபொன் னாடு நீத்தனன். …… 248

    நிலந்தனை வளைந்த முந்நீரில் வந்தவன் – பூமியைச் சூழ்ந்த கடலிற் பிறந்தவனாய, சலந்தரன் எனும் பெயர்த் தறுகண் தானவன் – சலந்தரன் என்னும் பெயரினையுந் தறுகண்மையையும் உடைய அசுரன், மலைந்து எமை வென்றிட – போர் செய்து எங்களை வெற்றிகொள்ள,மாசுற்று ஓடினேன் – அதனால் மாசடைந்து ஓடி, நலம் தருகின்ற பொன்னாடு நீத்தனன் – நன்மையைத் தருகின்ற சுவர்க்க உலகத்தை விட்டு நீங்கினேன். [ப 88/137]

    வெந்துயர் எய்தியே மேரு வின்புடை
    உய்ந்தனன் யானென ஒளித்து மேவினன்
    அந்தவண் ணத்தையும் அறிகுற் றாங்கவன்
    வந்தனன் அவ்வழி மாலை உன்னினேன். …… 249

    வெம் துயர் எய்தி – கொடிய துன்பத்தை அடைந்து, மேருவின் புடை – மேருமலையில் ஓரிடத்தில், யான் உய்ந்தனன் என ஒளித்து மேவினன் – நான் பிழைத்தேன் என்று ஒளிந்திருந்தேன்; அந்த வண்ணத்தையும் அறிகுற்று – யான் அவ்வாறிருந்ததனையும் அறிந்து, ஆங்கு அவன் வந்தனன் – அங்கும் அவன் வந்தான்; அவ்வழி மாலை உன்னினேன் – அப்பொழுது திருமாலை நினைந்தேன். [ப 88/137]

    மாலும்வந் தணுகியே மலைந்து தோற்றிடா
    மேலுமங் கவன்தனை வியந்து போயினான்
    நீலகண் டத்தனே நினது மால்வரை
    ஏலவந் துற்றனன் இதுவுங் கேட்டனன். …… 250

    மாலும் வந்து அணுகி மலைந்து தோற்றிடா – திருமாலும் வந்து சமீபித்துப் போர் செய்து தோல்வியடைந்து, மேலும் அங்கு அவன் தனை வியந்து போயினான் – அவ்வாறாய பின்பும் அங்கு அவனைப் புகழ்ந்து சென்றார்; நீல கண்டத்தனே – நீலகண்டத்தையுடைய கடவுளே, நினது மால்வரை வந்து ஏல உற்றனன் – தேவரீரது பெருமைபொருந்திய கைலைமலைக்கு வந்து இயைபுறச் சரணடைந்தேன்; இதுவும் கேட்டனன் – இதனையும் அவன் கேள்வியுற்றான். [ப 89/137]

    ஈங்கும்வந் துற்றன னியாவ துன்னியோ
    ஆங்கது தெரிகிலேன் அளியன் துன்பமுந்
    தீங்குறு சலந்தரன் திறலும் வாழ்க்கையும்
    நீங்குதல் உன்னுதி நிமலநீ என்றான். …… 251

    யாவது உன்னியோ ஈங்கும் வந்துற்றனன் – எதனைக் கருதியோ இவ்விடத்துக்கும் வந்துவிட்டான்; ஆங்கது தெரிகிலேன் – அவனிடத்தாகிய கருத்தை யானறியேன்; அளியன் துன்பமும் – ஏழையேனது துன்பமும், தீங்குறு சலந்தரன் திறலும் – சீமையையுடைய சலந்திரனது வலியும், வாழ்க்கையும் – அவனது வாழ்வும், நீங்குதல் – நீங்குதலை, நிமல் நீ உன்னுதி என்றான் – நிருமலரே தேவரீர் திருவுளங் கொண்டருளல் வேண்டுமென்று பிரார்த்தித்தான். [ப 89/137]

    வரையெறி படையினன் மாற்றங் கேட்டுநின்
    பருவரல் ஒழிகெனப் பகர்ந்து போக்கியே
    கருணையின் நீர்மையாற் கணிச்சி வானவன்
    ஒருதனி ஆடலை உள்ளத் துன்னினான். …… 252

    வரை எறி படையினன் மாற்றம் கேட்டு – மலைகளின் இறகை வெட்டிய வச்சிரப்படையை யுடையவனாகிய இந்திரன் சொன்னவைகளைக் கேட்டு, நின் பருவரல் ஒழிக எனப் பகர்ந்து போக்கி – இந்திரனே உன் துன்பத்தை ஒழிவாய் என்று கூறியருளி அவனை அனுப்பிவிட்டு, கணிச்சி வானவன் – மழுவை ஏந்திய சிவபெருமான், கருணையின் நீர்மையால் – கருணைத் தன்மையால், ஒரு தனி ஆடலை – ஒப்பற்றதொரு திருவிளையாடலை, உள்ளத்து உன்னினான் – திருவுள்ளத்திற் கொண்டருளினார். [ப 89/137]

    நான்றகுண் டிகையினன் நரைகொள் யாக்கையன்
    ஊன்றிய கோலினன் ஓலைக் கையினன்
    மூன்ற னல்வளர்ப் புறுமுனி வரேயெனத்
    தோன்றினன் தனக்கொரு தோற்றம் வேறிலான். …… 253

    நான்ற குண்டிகையினன் – தூங்குகின்ற கமண்டலத்தை உடையவராய், நரைகொள் யாக்கையன் – நரைத்த திருமேனையையுடையவராய், ஊன்றிய கோலினன் – ஊன்றப்பெற்ற கோலினையுடையவராய், ஓலைக் கையினன் – ஓலைக் குடையை ஏந்திய திருக்கரத்தினை யுடையவராய், மூன்று அனல் வளர்ப்புறும் முனிவர் என் – மூவகை அக்கினியை வளர்க்கின்ற ஒரு முனிவரைப் போல, தனக்கு வேறு ஒரு தோற்றம் இலான் தோன்றினன் – தமக்குச் சுட்டி யுணர்தற்குரியதொரு தோற்றமில்லாத பெருமான் தோன்றியருளினார்.
    உறிக்கட் கோடலின் நான்ற என்றார். ஓலை , விசிறியுமாம். மூன்றனல்; காருகபத்தியம், தக்கிணாக்கினி, ஆகவனீயம் என்பன. [ப 90/137]

    விம்மலை உற்றிடு விரதர்க் காகமுன்
    கைம்மலை உரித்தவன் கயிலை என்றிடும்
    அம்மலை ஒருபுடை அணுகுந் தானவர்
    செம்மலை எதிர்கொடு செல்லல் மேயினான். …… 254

    விம்மலை யுற்றிடு விரதர்க்காக – துன்பமுற்ற முனிவர்கள் பொருட்டு, முன் கைம்மலை உரித்தவன் – முன்னாளில் யானையை உரித்த சிவபெருமான், கயிலை என்றிடும் அம்மலை ஒருபுடை அணுகும் – திருக்கைலாசம் என்கின்ற அம்மலையின் ஒருபுறத்தே வருகின்ற, தானவர் செம்மலை எதிர்கொடு – அசுரத் தலைவனாகிய சலந்திரனை எதிர்கொண்டு, செல்லன் மேயினான் – சென்றருள்வாராயினார். [ப 90/137]

    இந்திரன் இமையவர் இனத்தொ டீண்டியே
    வந்தனை செய்தனன் மறைந்து பின்வர
    அந்தணர் வடிவுகொண் டவுணர் காவலன்
    முந்துற வெய்தியே முதல்வன் கூறுவான். …… 255

    இந்திரன் இமையவர் இனத்தொடு ஈண்டி – இந்திரனானவன் தேவர் கூட்டத்தோடு நெருங்கி, வந்தனை செய்தனன் மறைந்து பின் வர – வழி பட்டுக்கொண்டு மறைந்து பின்னே வர, அந்தணர் வடிவு கொண்டு – பிராமண வேடங் கொண்டு, அவுணர் காவலன் முந்து உற எய்தி – அசுரத் தலைவனுக்கு எதிரே அணுகச் சென்று, முதல்வன் கூறுவான் – முதல்வராகிய சிவபெருமான் கூறுவார். [ப 90/137]

    எங்குளை யாரைநீ எவரை நாடியே
    இங்குறு கின்றனை இயம்பு வாயென
    அங்கணன் மொழிதலும் அந்தண் வேதிய
    சங்கைய தில்வகை சாற்றக்கேள் என்றான். …… 256

    நீ யார் எங்கு உளை – நீ யார் எங்கே உள்ளாய்; எவரை நாடி இங்கு உறுகின்றனை – யாரைத்தேடி இங்கே வருகின்றாய்; இயம்புவாய் என – உரைப்பாயாக என்று, அங்கணன் மொழிதலும் – அருட்கண்ணரான சிவபெருமான் வினவ, அந்தண வேதிய – அழகிய தண்ணளியையுடைய பிராமணரே, சங்கையது இல் வகை சாற்றக் கேள் என்றான் – சந்தேகம் இல்லாதவாறு கூறக் கேட்பீராக என்றான். [ப 91/137]

    நிலந்தனில் உற்றுளேன் நேமி காதலன்
    சலந்தரன் என்பவன் தமியன் வானவர்
    உலைந்திட நுதல்விழி ஒருவன் தன்னுடன்
    மலைந்திட வந்தனன் வல்லையீண் டென்றான். …… 257

    தமியன் – ஒப்பாரின்றித் தனித்தேனாகிய யான், நிலந்தனில் உற்றுளேன் – பூவுலகில் இருப்பவன்; நேமி காதலன் – சமுத்திரத்தின் குமாரன்; சலந்தரன் என்பவன் – சலந்தரன் என்று பெயர் கூறப்படுபவன்; வானவர் உலைந்திட – தேவர்கள் வருந்தும்படி, நுதல்விழி ஒருவன் தன்னுடைன் நெற்றிக் கண்ணினையுடைய ஒருவராகிய சிவபெருமானோடு, வல்லை மலைந்திட ஈண்டு வந்தனன் என்றான் – விரைந்து பொருந்துமாறு இங்கே வந்தேன் என்றான். [ப 91/137]

    அவ்வுரை வினவியே அண்ணல் எண்ணமுஞ்
    செவ்விது செவ்விது தீதுண் டோவெனா
    எவ்வமில் புகழ்ச்சிபோல் இகழ்ந்து காட்டிடா
    நவ்வியங் கைத்தலன் நகைத்துச் செப்புவான். …… 258

    அவ்வுரை வினவி – அம்மொழியைக் கேட்டு, செவ்விது செவ்விது – நன்று! நன்று!, அண்ணல் எண்ணமும் தீது உண்டோ – அண்ண லெண்ணமுந் தீது படுவ துண்டோ; எனா – என்று கூறியருளி, எவ்வம் இல் புகழ்ச்சி போல் இகழ்ந்து காட்டிடா – குற்றமற்ற புகழ்ச்சி போல இகழ்ந்து காட்டி, நவ்வி அம் கைத்தலன் -மானேந்திய அழகிய திருக்கரத்தினையுடைய சிவபெருமான், நகைத்துச் செப்புவான் – நகைசெய்து கூறியருளுவார்.
    அண்ணல் எண்ணம் – பெருமை பொருந்திய எண்ணம்.
    அண்ணலே உனதெண்ணமும் நன்று நன்று தீதுண்டு என இகழ்ந்து காட்டியவாறுமாம். இப்பொருளில், அண்ணல் அண்மை விளி. [ப 91/137]

    கயிலையங் கிரியுறை கண்ணு தற்பிரான்
    அயலுற இருப்பன்யான் அவனொ டேயமர்
    முயலுறு கிற்றியேல் முடிதி உய்ந்திடுஞ்
    செயலினை நினைத்தியேற் செல்கமீண் டென்றான். …… 259

    கயிலையங் கிரிஉறை – திருக்கைலாச கிரியிலிருக்கின்ற, கண்ணுதற் பிரான் அயலுற இருப்பன் யான் – கைலாசபதிக்குப் பக்கத்தி லிருப்பவன் யான்; அவனொடு அமர் முயலுறுகிற்றியேல் – அவரோடு போர் செய்ய முயலுவாயேயானால், முடிதி – இறந்துபடுவாய்; உயர்ந்திடுஞ் செயலினை நினைத்தியேல் – பிழைக்குஞ் செய்கையை நினைப்பாயானால், மீண்டு செல்க என்றான் – திரும்பிப் போவாயாக என்று கூறியருளினார். [ப 92/137]

    பண்ணவன் இனையன பகர்தல் கேட்டலும்
    எண்ணமில் சலந்தரன் எரியிற் சீறியே
    கண்ணழல் கதுவுறக் காயம் வேர்வெழத்
    துண்ணென உயிர்த்திவை சொற்றல் மேயினான். …… 260

    பண்ணவன் இனையன பகர்தல் கேட்டலும் – பிராமண முனிவராகிய சிவபெருமான் இவ்வாறு கூறியதனைக் கேட்ட உடனே, எண்ணம் இல் சலந்தரன் எரியிற் சீறி – சிந்தனையற்ற சலந்தரன் அக்கினிபோலக் கோபித்து, கண் அழல் கதுவுற – கண்ணில் அக்கினி சுவாலிக்க, காயம் வேர்வு எழ – உடலில் வியர்வை எழ, துண் என உயிர்த்து – விரைந்து நெட்டுயிர்த்து, இவை சொற்றல் மேயினான் – இவைகளைச் சொல்லுவானாயினான். [ப 92/137]

    சிறியவன் போலெனைச் சிந்தித் தீரியான்
    பெறுவதோர் சயமெலாம் பேசி யாவதென்
    இறைவரை யீண்டுநின் றெனது வன்மையை
    அறிகுதிர் அறிகுதிர் அந்தணீர் என்றான். …… 261

    சிறியவன் போல் எனை சிந்தித்தீர் – என்னை வலியிற் குறைந்தவன் போலக் கருதினீர்; அந்தணீர் – பிராமணரே, யான் பெறுவது ஓர் சயம் எலாம் பேசி ஆவது என் – யான் அடையும் ஒப்பற்ற வெற்றியையெல்லாம் உமக்குச் சொல்லி ஆவதென்னை; இறை வரை – ஒரு கணப்பொழுது, ஈண்டு நின்று – இவ்விடத்தில் நின்று, எனது வன்மையை அறிகுதிர் அறிகுதிர் என்றான் – எனது வலிமையை அறிவீராக அறிவீராக என்று கூறினான். [ப 92/137]

    என்றிவை சலந்தரன் இசைப்ப யாமுமுன்
    வன்றிறல் காணிய வந்த னம்மெனாத்
    தன்திரு வடியினால் தரணி யின்மிசை
    ஒன்றொரு திகிரியை ஒல்லை கீறினான். …… 262

    என்று இவை சலந்தரன் இசைப்ப – என்று இவைகளைச் சலந்திரன் கூறா நிற்ப, யாமும் உன் வன் திறல் காணிய வந்தனம் – நாமும் உனது வலிய திறலினைக் காணும்பொருட்டே வந்தோம்; எனா-என்று கூறியருளி, தன் திருவடியினால் – தமது திருவடியினாலே, தரணியின் மிசை – பூமியின்மீது, ஒன்றொரு திகிரியை ஒல்லி கீறினான் – ஒரு சக்கரத்தைக் கீறியருளினார்.
    ஒப்பின்மையின், ‘ஒன்று ஒரு’ என்றார். [ப 93/137]

    ஆங்கது திகிரியொன் றாக அந்தணன்
    ஈங்கிது சென்னியில் ஏற்றி வன்மையால்
    தாங்குதல் வல்லையோ என்று சாற்றலும்
    தீங்குறு சலந்தரன் இனைய செப்புவான். …… 263

    அங்கு அது – அவ்விடத்திற் கீறப்பட்ட அவ்வடிவம், திகிரி ஒன்று ஆக – ஒரு சக்கரப்படையாக, ஈங்கு இது சென்னியில் ஏற்றி வன்மையால் தாங்குதல் வல்லையோ – இங்கே இதனைத் தலைமே லேற்றி மிக முயன்றாயினுஞ் சுமக்க வல்லையோ, என்று அந்தணன் சாற்றலும் – என்று அந்தப் பிராமணர் வினாவுதலும், தீங்கு உறு சலந்தரன் இனைய செப்புவான் – தீங்கை எதிர்கொள்ளுகின்ற சலந்தரன் இவைகளைச் சொல்லுவான். [ப 93/137]

    புங்கவர் யாரையும் புறங்கண் டேன்வரு
    கங்கையை அடைத்தனன் கார்கொள் வேலையில்
    அங்கியை அவித்தனன் அரியை வென்றனன்
    இங்கிது தாங்குவ தரிய தோவெனா. …… 264

    புங்கவர் யாரையும் புறங்கண்டேன் – தேவர்க ளெல்லாரையும் முதுகு கண்டேன்; வரு கங்கையை அடைந்தனன் – பலமுகமாகப் பிரவாகித்து வருங் கங்கையை அடைந்தேன்; கார் கொள் வேலையின் அங்கியை அவித்தனன் – முகில்கள் முகந்துகொள்கின்ற சமுத்திரத்திலே உள்ள வடவாமுகாக்கினியை அவித்தேன்; அரியை வென்றனன் – விஷ்ணுமூர்த்தியை வென்ற்றேன்; இங்கு இது தாங்குவது அரியதோ எனா – எனக்கு இங்கு இஅதனை எடுத்துச் சுமப்பது அருமையோ என்று கூறி. [ப 93/137]

    புரத்தழல் கொளுவியோன் பொறித்த நேமியைக்
    கரத்திடை எடுத்தனன் கனங்கொண் டெய்தலின்
    உரத்திடைப் புயத்திடை உயிர்த்துத் தாங்கியே
    சிரத்திடை வைத்தனன் தேவர் ஆர்க்கவே. …… 265

    புரத்து அழல் கொளுவியோன் பொறித்த நேமியை – முப்புரங்களை அழல் கொளுவி எரித்தோராகிய சிவபெருமான் கீறியதனா லுண்டான சக்கரப் படையை, கரத்திடை எடுத்தனன் – கையில் எடுத்தான்; கனம் கொண்டு எய்தலின் – அது மிக்க பாரமாயிருந்ததனால், உரத்திடைப் புயத்திடை உயிர்த்துத் தாங்கி – மார்பிலுந் தோளிலும் நெட்டுயிர்ப்புடன் வைத்து, சிரத்திடைத் தேவர் ஆர்க்க வைத்தனன் – பின் ஒருவாறு தலைமீது தேவர்கள் ஆரவாரிக்குமாறு வைத்தான். [ப 94/137]

    செழுஞ்சுடர்ப் பரிதியைச் சென்னி கோடலால்
    ஒழிந்திடு சலந்தரன் உச்சி யேமுதற்
    கிழிந்தது முழுதுடல் கிளர்ந்து சோரிநீர்
    இழிந்தது புவிதனில் இழுமென் ஓசையால். …… 266

    செழும் சுடர் பரிதியை சென்னி கோடலால் – செழுமையாகிய சுடரினையுடைய சக்கரத்தைத் தலைமீது கொள்ளுதலினாலே, ஒழிந்திடு சலந்தரன் உச்சி முதல் முழுது உடல் கிழிந்து – இறந்துபடுகின்ற சலந்தரனது உச்சி தொடக்கம் உடல் முழுதுங் கிழிந்தது; சோரி நீர் கிளர்ந்து புவிதனில் இழுமென் ஓசையால் இழிந்தது – இரத்தப் பிரவாகம் மேலெ கிளர்ந்தெழுந்து பூமியிலே இழுமென்ற ஓசையோடு இறங்கியது. [ப 94/137]

    பரிதியங் கடவுள்அப் பதகன் தன்னுடல்
    இருபிள வாக்கியே இறைவன் தன்னிடை
    உருவுகொண் டுற்றதிவ் வுலகம் யாவையுங்
    குருதியம் பெருங்கடல் வளைந்து கொண்டதே. …… 267

    பரிதி அம் கடவுள் – சக்கரமாகிய அழகிய தெய்வம், அப்பதகன் தன்னுடல் இரு பிளவு ஆக்கி – கீழ்மகனான அச் சலந்தரனுடைய உடலை இருபிளவாகச் செய்து, உருவு கொண்டு – கீறியபின்னர் எடுத்து உருவத்தையே தாங்கிக் கொண்டு, இறைவன் தன்னிடை உற்றது – சிவபெருமானிடத்துச் சென்றிருந்தது; இவ் வுலகம் யாவையும் – இவ்வுலகம் முழுவதையும், குருதி அம் பெருங்கடல் வளைந்து கொண்டது – பெரிய இரத்தக் கடல் சூழ்ந்தது. [ப 94/137]

    பாதல நிரயமாம் பாழி யூடுநீ
    போதென எருவைநீர் போந்த தாயிடை
    ஆதியங் கடவுள்அவ் வவுணன் சேனையைக்
    காதினன் விழிபொழி கனலின் தானையால். …… 268

    பாதல நிரயமாம் பாழியூடு – பாதாளத்திலுள்ள நரகமாகிய பாழிக்கு, நீ போது என – நீ போகக்கடவாய் என்று கட்டளையிட, எருவை நீர் ஆயிடைப் போந்து – இரத்த வெள்ளம் அவ்விடத்துக்குச் சென்றது; ஆதியங் கடவுள் – அதன் பிறகு ஆதியான சிவபெருமான், அவ்அவுணன் சேனையை – அச் சலந்தரனது சேனையை, விழி பொழி கனலின் தானையால் காதினன் – தமது விழி பொழிகின்ற அக்கினியாகிய சேனையால் அழித்தருளினார்.
    பாழி – இடம். [ப 95/137]

    பரந்திடும் அவுணர்தம் பகுதி வீட்டியே
    கரந்ததொல் வடிவினைக் காட்டி நிற்றலும்
    புரந்தரன் முதலினோர் வணங்கிப் போற்றிஎம்
    அரந்தையை அகற்றினை ஐயநீ என்றார். …… 269

    பரந்திடும் அவுணர்தம் பகுதி வீட்டி – பரவிய அசுரப்படைகளை அழித்து, கரந்த தொல் வடிவினை காட்டி நிற்றலும் – மறைத்த பழைய தமது வடிவத்தைக் காட்டி நின்றருளுதலும், புரந்தரன் முதலினோர் வணங்கிப் போற்றி – இந்திரன் முதலியவர்கள் வணங்கித் துதித்து, ஐய நீ எம் அரந்தையை அகற்றினை என்றார் – சுவாமி தேவரீர் எமது துன்பத்தைத் துடைத்தருளினீர் என்று புகழ்ந்தார்கள். [ப 95/137

    முன்புறு புரந்தரன் முதலி னோர்க்கெலாம்
    இன்புறு தொல்லர சியற்ற நல்கியே
    அன்புடன் விடைகொடுத் தமல நாயகன்
    தென்பெருங் கயிலைமேற் சேர்ந்து வைகினான். …… 270

    மூன்பு உறு புரந்தரன் முதலினோர்க்கு எலாம் – முன்னிலையில் நின்ற இந்திரன் முதலியவர்களுக்கு, இன்புற தொல் அரசு இயற்ற நல்கி – இன்பம் பொருந்திய பழைய அரசியலை நடத்த அருள்செய்து, அன்புடன் விடை கொடுத்து – அன்போடு விடை அளித்து, அமல நாயகன் – நின்மலராகிய சிவபிரான், தென் பெருங் கயிலைமேல் சேர்ந்து வைகினான் – அழகிய பெரிய கைலாசத்தின்கண் செம்பொற்றிருக்கோயிலிலே சென்று வீற்றிருந்தருளினார். [ப 95/137]

    ஆவியை இழந்திடும் அவுணர் காவலன்
    தேவியை விரும்பியே திருவின் நாயகன்
    மாவிர தியரென மற்ற வன்மனைக்
    காவி னுள்இருந் தனன்கை தவத்தினான். …… 271

    ஆவியை இழந்திடும் அவுணர் காவலன் தேவியை – உயிரிழந்த அசுராபதியான சலந்திரனுடைய தேவியாகிய விருந்தையை, திருவின் நாயகன் விரும்பி – திருமால் இச்சித்து, மா விரதியர் என – மகா விரதியர் போல வேடம் பூண்டு, அவன் மனைக் காவிலுள் – அச் சலந்தரனுடைய மாளிகையை அடுத்த பூஞ்சோலையுள், கைதவத்தினான் இருந்தனன் – வஞ்சனையோடு தவமிருந்தார். [ப 95/137]

    இருந்திடும் எல்லையில் ஏமக் கற்புடை
    விருந்தைஎன் றிடும்அவள் வேந்தன் செய்கையைத்
    தெரிந்திலள் ஆற்றவுஞ் சிந்தை நொந்துமெய்
    வருந்தினள் உய்ந்திடும் வண்ணங் காண்கிலாள். …… 272

    இருந்திடும் எல்லையில் – திருமால் வஞ்சனையோடிருக்கும்போது, ஏமம் கற்புடை விருந்தை என்றிடும் அவள் – கற்பாகிய பாதுகாப்பினையுடைய விருந்தை என்கின்ற அப்பெண், வேந்தன் செய்கையைத் தெரிந்திலள் – சலந்தரன் நிலைமையை அறியாதவளாய், ஆற்றவும் சிந்தை நொந்து – மிகவும் மனம் வருந்தி, உய்ந்திடும் வண்ணம் காண்கிலாள் – உய்யுந் திறத்தைக் காணதவளாய், மெய் வருந்தினள் – உடல் இளைத்தாள். [ப 96/137]

    பரிதலுற் றிரங்கினள் பதைத்துச் சோர்ந்தனள்
    ஒருதனித் திருக்கிலள் உரையும் ஆடலள்
    திரிதலுற் றுலவினள் செய்வ தோர்கிலள்
    இருதலைக் கொள்ளியின் எறும்பு போன்றுளாள். …… 273

    பரிதல் உற்று – கணவன்மீது அன்பு மிக்கு இரங்கினள் பதைத்துச் சோர்ந்தனள் – இரங்கிப் பதைத்துச் சோர்ந்து, ஒது தனித்து இருக்கிலள் – ஒருத்தியாய்த் தனித்திருத்தல் ஆற்றாதவளாய், உரையும் ஆடலள் – யாரொருவரோடும் உரையாடலுஞ் செய்யாதவளாய், செய்வது ஓர்கிலள் – செய்வதின்னதென்றும் அறியாதவளாய், இருதலைக் கொள்ளியின் எறும்பு போன்றுளாள் – இருதலையுங் கொள்ளியாக அதனிடைப்பட்ட எறும்பைப் போன்றவளாய், திரிதலுற்று உலவினள் – அங்கும் இங்கும் உலாவி அலைந்தாள். [ப 96/137]

    கல்வரை யேந்திய காளை யைப்புணர்
    தொல்வரை ஊழினால் துன்பம் நீங்கலா
    மெல்வரை அன்னதோள் விருந்தை மேவினாள்
    இல்வரை இகந்திடா ஏமக் காவினுள். …… 274

    கல்வரை ஏந்திய – கோவர்த்தனகிரியைப் பசுநிரையைக் காக்கும்பொருட்டு எடுத்த, காளையைப் புணர் – காளையாகிய திருமாலை புணர்தற்குரிய, தொல் வரை ஊழினால் – பழைமாயகிய பால்வரைதெய்வ நியதியால், துன்பம் நீங்கலா மெல் வரை அன்ன தோள் விருந்தை – துன்பம் நீங்காத மிருதுவான மூங்கிலை ஒத்த தோளினையுடைய விருந்தை, இல் வரை இகந்திடா – தனது இல்லின் எல்லைக்கு அப்பாற்படாத, ஏமக் காவினுள் – பாதுகாப்பாய் அமைந்த சோலையினுள், மேவினாள் – சென்றாள்.
    புணர் ஊழினால் மேவினாள் என்க.
    பால், ஊழ், தெய்வம் ஒருபொருட் கிளவிகள், பால்வரைதெய்வம் – இருவினைய வகுக்குந் தெய்வம். இகந்திடா – இகந்து எனக் கொள்ளினுமாம். இகந்திடாது மேவினாள் என இயைத்துக் கோடலு மொன்று. [ப 96/137]

    மடவரல் வருதலும் வைகுண் டந்தனில்
    கடைமுறை போற்றிடும் இருவர் காவலர்
    அடலரி ஆகியே ஆர்த்து முன்னுற
    இடியுறும் அரவுபோல் ஏங்கி ஓடினாள். …… 275

    மடவரல் வருதலும் – விருந்தையானவள் வருதலும், வைகுண்டந்தனில் கடை முறை போற்றிடும் இருவர் காவலர் – வைகுந்தத்திலே வாய்தலை முறையானே காக்கின்ற இருவர் துவாரபாலகர், அடல் அரியாகி ஆர்த்து முன் உற – அடுதலைச் செய்கின்ற சிங்கங்களாகக் கர்ச்சித்துக்கொண்டு எதிரில் வர, இடி உறும் அரவு போல் ஏங்கி ஓடினாள் – இடியேறுண்ட சர்ப்பம் போல ஏக்கமுற்று ஓடினாள். [ப 97/137]

    மடந்தையங் கிரிதலும் மடங்க லானவர்
    தொடர்ந்தனர் பின்வரத் துளங்கிச் சோலையின்
    இடந்தனில் முனியென இருந்த வெய்யனை
    அடைந்தனள் அடைதலும் அஞ்சல்நீ என்றான். …… 276

    மடந்தை அங்கு இரிதலும் – விருந்தை அவ்விடத்தை விட்டு ஓடுதலும், மடங்கலானவர் தொடர்ந்தனர் பின்வர – சிங்க உருவங்கொண்ட தூவாரபாலகர் தன்னைத் தொடர்ந்து பின்னே வர, துளங்கி – விருந்தை நடுங்கி, சோலையின் இடந்தனில் முனியென இருந்த வெய்யனை – சோலையினிடத்தே முனிவர்போல நாடகஞ் செய்து இருந்த வெம்மையோனாகிய திருமாலை, அடைந்தனள் – சரணடைந்தாள்; அடைதலும் – அடைந்தபோது, நீ அஞ்சல் என்றான் – பெண்ணே நீ அஞ்சற்க என்று அபயமளித்தார். [ப 97/137]

    என்றருள் புரிதலும் இகல்வெஞ் சீயமாய்ப்
    பின்றொடர் காவலர் பெயர்வுற் றோடினார்
    நின்றவள் இருந்தவன் நிலைமை நோக்கியே
    நன்றிவன் இயல்பென நவில்வ தாயினாள். …… 277

    என்று அருள் புரிதலும் – அஞ்சற்க என்று அருள் செய்து, இகல் வெம்சீயமாய் பின் தொடர் காவலர் – வலிய கொடிய சிங்கங்களாய்ப் பின் தொடர்ந்த துவாரபாலகர்கள், பெயர்வு உற்று ஓடினார் – அவ்விடத்தை விட்டு ஓடினார்கள்; நின்றவள் இருந்தன் நிலைமை நோக்கி -நின்றவளாகிய விருந்தை அங்கே இருந்தவரது பெருந் தவநிலையை உற்று நோக்கி, இவன் இயல்பு – இந்த இருந்தவரது இயற்கை, நன்று என – தனக்கு நன்மையேயாகும் என்று எண்ணி, நவில்வது ஆயினாள் – தன் குறையை முறையீடு செய்வாளாயினாள்.
    அவனியல்பாவது சீயம் அஞ்சி ஓட்டெடுக்கும் அபய இயல்பு. [ப 98/137]

    எந்தையெம் பெருமகேள் எனது காதலன்
    அந்தமில் ஈசன்மேல் அமருக் கேகினான்
    வந்திலன் இன்னமும் மாய்வுற் றான்கொலோ
    உய்துள னேகொலோ உரைத்திநீ என்றாள். …… 278

    எந்தை எம்பெரும கேள் – என் தந்தையே எம்பெருமானே என் முறையீட்டைக் கேட்டருள்க; எனது காதலன் – என் பிராண நாயகர், அந்தம் இல் ஈசன்மேல் அமருக்கு ஏகினான் – அழிவில்லாத சிவபெருமானோடு போர் செய்தற்குச் சென்றார்; இன்ன்மும் வந்திலன் – இன்னும் வந்திலர்; மாய்வுற்றான் கொலோ உய்ந்துளன் கொலோ – இறந்தாரோ பிழைத்தாரோ; நீ உரைத்தி என்றால் – தேவரீர் கூறியருளல் வேண்டுமென்று பிரார்த்தித்தாள். [ப 98/137]

    இரங்கினள் இவ்வகை இசைப்ப மாதவன்
    வரங்கெழு தானையின் மன்னர் மாயையால்
    குரங்கென ஈருருக் கொண்டு கொம்மென
    உரங்கிளர் சலந்தரன் உடல்கொண் டெய்தினார். …… 279

    இரங்கினன் இவ்வகை இசைப்ப – வருந்தினவளாய் இவ்வாறு விருந்தை கூற, மாதவன் வரம் கெழு தானையின் மன்னர் – திருமாலின் வரம் பிரகாசிக்கின்ற சேனை தலைவர்களாயு மிருக்கின்ற அக்காவலர், மாயையால் குரங்கு என ஈர் உருக் கொண்டு – மாயத்தினால் இரண்டு குரங்காக வடிவங்கொண்டு, உரம் கிளர் சலந்தரன் உடல் – வலைமை விளங்குகின்ற சலந்தரனது உடலை, கொம்மெனக் கொண்டு எய்தினார் – விரைவாக அங்கே கொண்டு வந்தார்கள் .
    சிங்க உருவங் கொண்டாரே குரங்குருவம் கொண்டர்ன் என்பது முதனூலிற் கண்டது. [ப 98/137]

    இருபிள வாம்அவ னியாக்கை கொண்டுசென்
    றரிவைமுன் இட்டனர் அதனைக் காண்டலும்
    வெருவினள் பதைத்தனள் வீழ்ந்த ரற்றினாள்
    ஒருவினள் உயிரென உணர்வு நீங்கினாள். …… 280

    இரு பிளவு ஆம் அவன் யாக்கை கொண்டு சென்று – இரண்டு பிளவாகயிருக்கும் அவனுடைய உடலை எடுத்துக்கொண்டு சென்று, அரிவை முன் இட்டனர் – விருந்தையின் எதிரே வைத்தார்கள்; அதனைக் காண்டலும் – அதனைக் கண்ட மாத்திரத்தில், வெருவினள் – அஞ்சினள்; பதைத்தனள் – பதைபதைத்தாள்; வீழ்ந்து அரற்றினாள் – விழுந்து அழுதாள்; உயிர் ஒருவினள் என உணர்வு நீங்கினாள் – உயிர் நீங்கினவள்போல உணர்வு கெட்டாள். [ப 99/137]

    வருந்தலை வருந்தலை மங்கை நீயெனாக்
    கரந்தனை ஓச்சியே காதல் நீர்மையால்
    இருந்தவன் எழுப்பலும் எழுந்து தேறியே
    விருந்தைகை தொழுதிவை விளம்பல் மேயினாள். …… 281

    இருந்தவன் – அங்கே இருந்தவராகிய இருந்தவர், மங்கை நீ வருந்தலை வருந்தலை எனா – சுமங்கலியாகிய பெண்ணே நீ வருந்தற்க வருந்தற்க என்று அபயஞ் செய்து, காதல் நீர்மையால் – காதல் வயப்பட்ட இயல்புடனே, கரந்தனை ஓச்சி – கையை நீட்டி, எழுப்பலும் – விருந்தையின் மெய்யைத் தீண்டி எழுப்புதலும், விருந்தை தேறி எழுந்து – விருந்தை தெளிந்து எழுந்து, கை தொழுது – கைகூப்பி வணங்கி, இவை விளம்பல் மேயினாள் – இவற்றைச் சொல்லத் தொடங்கினாள்.
    ஓச்சி என்பதனால் மெய்தொட்டு என்பது பெற்றாம். அபயமளித்தமையின் தேறினாளென்க. [ப 99/137]

    நின்னிகர் மாதவர் நிலத்தின் இல்லையால்
    என்னுயிர் காத்தியேல் எனது நாயகன்
    பொன்னுட லந்தனைப் பொருத்தி அவ்வுயிர்
    தன்னையும் அமைத்தனை தருதிநீ என்றாள். …… 282

    நின் நிகர் மாதவர் நிலத்தின் இல்லை – தேவரீரை ஒத்த மகா தவத்தர்க்ள் இந்தப் பூமியிற் கிடையார்; என் உயிர் காத்தியேல் – என்னுயிரை என்னுடலில் நிலைக்கச் செய்து காப்பது கருத்தானால், எனது நாயகன் பொன் உடலந்தனை பொருத்தி – எனது பிராண நாயகரது அழிகிய பிளவுபட்ட உடற் பாதிகளைப் பொருத்தி, அவ்வுயிர் தன்னையும் அமைத்தனை நீ தருதி என்றாள் – அவ்வுடலுக்குரிய அந்த உயிரையும் அவ்வுடலுட் புகுத்தித் தேவரீர் தந்தருளல் வேண்டும் என்று வேண்டினாள்.
    நாயகனைத் தாரா தொழியின் என்னுயிரைக் காத்தலிற் பயனின்று என்றாளாம். [ப 99/137]

    ஆயது காலையில் அவுணன் யாக்கையை
    ஏயென ஒன்றுமா றியற்றி மாதவன்
    மாயம தாகியே மறைந்து மற்றவன்
    காயம திடைதனில் கலந்து வைகினான். …… 283

    ஆயது காலையில் – அவ்வாறாகிய சமயத்தில், அவுணன் யாக்கையை – பிளவுபட்ட சலந்தரனது உடலை, ஏயென ஒன்றுமாறு இயற்றி – விரைவிற் பொருந்தும்படி செய்து, மாதவன் மாயமதாகி மறைந்து அவன் காயமதிடை தனில் கல்ந்து வைகினான் – திருமால் மாயமாய் மறைந்து அச் சலந்திரனின் உடலிற் பிரவேசித்துக் கரந்திருந்தார். [ப 100/137]

    புல்லிய குரங்கெனப் புகுந்த கள்வரும்
    ஒல்லையின் மறைந்தனர் உயர்ச லந்தரன்
    தொல்லுடல் புகுந்தரி துண்ணென் றேயெழ
    மெல்லியல் கண்டனள் வியந்து துள்ளினாள். …… 284

    புல்லிய குரங்கு எனப் புகுந்த கள்வரும் ஒல்லையின் மறைந்தனர் – இழிந்த குரங்குருவமாக வந்த வஞ்சகரான காவலாளர்களும் விரைவாக மறைந்தார்கள்; உயர் சலந்தரன் தொல் உடல் அரி புகுந்து துண்ணென்று எழ – வலியால் உயர்ந்த சல்ந்திரனது பழைய உடலில் திருமால் பிரவேசித்து விரைந்தெழாநிற்ப, மெல்லியல் கண்டனள் வியந்து துள்ளினாள் – விருந்தை கண்டு ஆச்சரியமுற்றுத் துள்ளினாள். [ப 100/137]

    உய்ந்தனன் கணவனென் றுளத்தில் உன்னியே
    வெந்துயர் அகன்றனள் விருந்தை என்பவள்
    வந்தனை போலுமென் மகிண நீயெனா
    அந்தமில் உவகையால் அவனைப் புல்லினாள். …… 285

    உய்ந்தனன் கணவன் என்று உளத்தில் உன்னி – தன் கணவன் உயிர் பெற்று உய்ந்தான் என்று மனதில் நினைத்து, விருந்தை என்பவள் வெம்துய்ர் அகன்றனள் – விருந்தை கொடிய துன்பம் நீங்கினாள்; என் மகிண – என் பிராண நாயகரே, நீ வந்தனை போலும் எனா – நீவிர் என்னை நாடி வந்தீர்போலும் என்று, அந்தம் இல் உவகையால் – அளவிறந்த மகிழ்வோடு, அவனைப் புல்லினாள் – திருமாலாகிய அச் சலந்தரனைத் தழுவினாள். [ப 100/137]

    புல்லிய விருந்தையைப் புணர்ந்து மாயவன்
    எல்லியும் பகலுமோர் இறையும் நீங்கலான்
    அல்லியந் தேனுகர் அளியைப் போல்அவண்
    மெல்லிதழ் அமுதமே மிசைந்து மேவினான். …… 286

    புல்லிய விருந்தையை – தம்மைத் தழுவிய விருந்தையை, மாயவன் புணர்ந்து – திருமால் சேர்ந்து, எல்லியும் பகலும் ஓர் இறையும் நீங்கலான் – இரவும் பகலும் ஒரு கணப்பொழுதும் அவளை விட்டுப் பிரியாராய், அம் அல்லி தேன் நுகர் அளியைப்போல – அழகிய அகவிதழ்ற் பொருந்திய தேனை நுகருகின்ற வண்டைப்போல, அவள் மெல் இதழ் அமுதம் மிசைத்து மேவினான் – அவளுடைய மெல்லிய இதழ் அமுதத்தை அருந்தி இன்பம் நுகர்ந்திருந்தார். [ப 101/137]

    காய்கதிர் நுழைவுறாக் கடிமென் காவினுள்
    மேயினன் பலபகல் வேளின் நூல்வழி
    ஆயதோர் வைகலின் அரன தாணையால்
    மாயம தயர்த்தனன் மலர்க்கண் துஞ்சினான். …… 287

    காய் கதிர் நுழைவுறா கடி மென் காவினுள் – காய்கின்ற சூரிய கிரணம் நுழையாத செறிவு படைத்த காவலினையுடைய இள மரக்காவில், பல பகல் வேளின் நூல் வழி மேயினன் – பலநாளாக மன்மத சாத்திர முறைப்படி விருந்தையுடன் கூடியிருந்தார்; ஆயது ஓர் வைகலின் – அவ்வாறிருக்கும் நாட்களில் ஒரு நாள், அரனது ஆணையால் – சிவபெருமானது திருவரு ளாணையால், மாயமது அயர்த்தனன் – தான் கொண்ட மாயத்தை மறந்து, மலர்க்கண் துஞ்சினான் – மலர்போன்ற கண்களை மூடித் துயில் கூடினார். [ப 101/137]

    துஞ்சிய வேலையில் துணைவி யாகிய
    பஞ்சினின் மெல்லடிப் பாவை பார்த்திவன்
    வஞ்சகன் வஞ்சகன் மாய னேயெனா
    அஞ்சினள் நெஞ்சகம் அழன்று நீங்கினாள். …… 288

    துஞ்சிய வேலையில் – திருமால் மாயத்தை மறந்து துயின்ற சமயத்தில், பஞ்சின் இன் மெல்லடி – பஞ்சூட்டிய கண்ணுக்கினிய மிருதுவான அடிகளையுடைய, துணைவியான பாவை – சலந்தரன் மனைவியாகிய விருத்தை, பார்த்து – துயின்றானது கபட நிலையைப் பார்த்து, இவன் வஞ்சகன் வஞ்சகன் மாயனே – இவன் வஞ்சகன் வஞ்சகன் திருமாலேயாவன்; எனா – என்று நிச்சயித்து, அஞ்சினள் – அஞ்சி, நெஞ்சம் அழன்று – மனங் கொதித்து, நீங்கினாள் – விலகி அகன்றாள். [ப 101/137]

    அருந்ததி அன்னகற் பழிந்த தன்மையால்
    வருந்தினள் உயிர்த்தனள் மாயம் யாவையும்
    பொருந்திய தன்னுயிர்ப் போத நீர்மையால்
    தெரிந்தனள் சீதரற் கிதனைச் செப்புவாள். …… 289

    அருந்ததி அன்ன கற்பு அழிந்த தன்மையால் – அருந்ததியின் கற்பையொத்த தனது கற்பு அழிந்த தன்மையினால், வருந்தினள் உயிர்த்தனள் – வருந்தி நெட்டுயிர்த்து, பொருந்திய தன் உயிர்ப் போத நீர்மையால் – தன்மாட்டுப் பொருந்திய தனது ஆனம்போத இயல்பால், மாயம் யாவையும் தெரிந்தனள் – திருமாலின் மாயம் முழுவதையும் உணர்ந்து, சீதரற்கு இனைய செப்புவாள் – திருமாலுக்கு இதனைக் கூறுவாள். [ப 102/137]

    மாவலி யுடையதோர் மடங்க லாயினோர்
    காவல ரிருவர்அக் காவ லாளர்உன்
    மேவல ராயுற வேந்த னாகிநீ
    ஓவலை குரங்கொடு திரிதி ஒண்புவி. …… 290

    மா வலி உடையது ஓர் மடங்கல் ஆயினோர் காவலர் இருவர் – மிக்க வலி படைத்த ஒப்பற்ற சிங்கங்களாகி இங்கே வந்தவர்கள் உன் கோயில் துவார பாலகரான இருவராவர்; அக் காவலாளர் உன் மேவலராய் உற – அவர்கள் உனக்கு பகைவர்களாய் வர, நீ வேந்த னாகி – நீ ஒர் அரசனாய், ஒண் புவி – ஒள்ளிய பூமியில், குரங்கொடு ஓவலை திரிதி – குரங்குக் கூட்டத்தோடு ஒழிவின்றி அலையக் கடவாய்.
    அக்காவலர் இராவணனுங் கும்பகர்ணனுமாய்ப் பிறந்தனர் என்க. [ப 102/137]

    பொற்புறு கணவனைப் போல வந்தெனைப்
    பற்பகல் புணர்ந்தனை பகைவர் மாயையால்
    கற்புடை மனைவியைக் கவர்ந்து போகநீ
    சொற்படு பழியினைச் சுமத்தியால் என்றாள். …… 291

    பொற்பு உறு கணவனைப்போல வந்து எனைப் பற்பகல் புணர்ந்தனை – அழகு மிக்க என் கணவரைப்போல வந்து என்னைப் பலநாட் சேர்ந்தனை; பகைவர் – உன் பகைவர், கற்புடைய மனைவியை மாயையால் கவர்ந்து போக – உன்னுடைய கற்பிற் சிறந்த மனைவியை மாயத்தாற் கவர்ந்து செல்ல, நீ சொற்படு பழியினை சுமத்தி – நீ உலகத்தாற் சொல்லப்படுகின்ற பழியைச் சுமக்கக் கடவாய்; என்றாள் – என்று சாபமிட்டாள்.
    சொற்பழி, மனைவியைப் பறிகொடுத்தமையும் பறிபோயவளை அங்கீகரித்தமையுமாகிய பழி என்க. உய்த்துணரவல்லார்க்குப் பொருட்படு பழியன்மையுமுணர்க. விருந்தை, திருமால் மனைவியும், தன்போற் கேடுறுக என்று சமணப் போக்கிற் சாப மொழி பகராமை சிந்தித்து போற்றற்பாலதாம். பழி செய்தோரே தண்டனைக்குரியர். [ப 102/137]

    இக்கொடு மொழிபுகன் றெரியை மூட்டியே
    புக்குயிர் துறந்தனள் புலம்பி யாங்கவள்
    அக்குறு சுடலைநீ றாடி வாடினான்
    மைக்கடல் மேனியன் மாலின் மூழ்கியே. …… 292

    இக்கொடு மொழி புகன்று – இந்தக் கொடிய சாப மொழியைக் கூறி, எரியை மூட்டி – அக்கினியை உண்டாக்கி, புக்கு – அக்கினிப் பிரவேசஞ் செய்து, உயிர் துறந்தனள் – உயிரை விடுத்தாள்; மைக்கடல் மேனியன் – கரிய கடலை யொத்த மேனியையுடைய திருமால், மாலின் மூழ்கி – அவள்மேற் கொண்ட மோகத்தில் முழுகி, புலம்பி – அவளை நினைந்து புலம்பி, ஆங்கு அவள் அக்கு உறு சுடலை நீறு ஆடி – அவ்விடத்தில் அவள் எரிந்த என்புகள் பொருந்திய சுடலைச் சாம்பரில் விழுந்து புரண்டு, வாடினான் – வாட்டமெய்தினார். [ப 103/137]

    வேறு
    அத்துணை தன்னின் வானோர் அம்புயன் கயிலை யேகி
    நித்தனை இறைஞ்சி மாயோன் நிலைமையை உணர்த்தும் போழ்தில்
    சத்தியங் கதனைத் தேர்ந்து தலையளி செய்து தானோர்
    வித்தினை உதவி ஈது விண்டுமுன் இடுதிர் என்றாள். …… 293

    அத்துணை தன்னில் – அப்பொழுது, வானோர் அம்புயன் கயிலை ஏகி – தேவர்களும் பிரமதேவருந் திருக்கைலாசத்துக்குச் சென்று, நித்தனை இறைஞ்சி மாயோன் நிலைமையை உணர்த்தும் போழ்தில் – சிவபெருமானை வணங்கித் திருமாலின் நிலைமையை உணர்த்தும்பொழுது, சத்தி அங்கு அதனைத் தேர்ந்து – அதனை அருட்சத்தியாகிய உமாதேவியார் உணர்ந்து, தலை அளி செய்து – பேரருள் புரிந்து, தான் ஒர் வித்தினை உதவி – தாம் ஒரு வித்தினை உண்டாக்கி, ஈது விண்டு முன் இடுதிர் என்றாள் – இவ்வித்தைத் திருமாலின் எதிரில் விதையுங்கள் என்று கொடுத்தருளினார்.
    வித்து – துளசி வித்து. [ப 103/137]

    ஈதலும் அதனை வேதா இருகையால் ஏந்திச் சென்னி
    மீதுறக் கொண்டு போந்து விருந்தைதன் ஈமந் தன்னில்
    தாதுறு பலியின் வித்தித் தடங்கட லமுதம் பெய்ய
    மாதவன் முன்னம் ஆங்கோர் துளவமாய் மலிந்த தன்றே. …… 294

    ஈதலும் – உமாதேவியார் கொடுத்தருள, அதனை – அவ்வித்தினை, வேதா இரு கையால் ஏந்தி – பிரமா இரு கரங்களாலும் ஏந்தி, சென்னி மீது உறக் கொண்டு போந்து – சிரசின்மீது வைத்துக்கொண்டு சென்று, ஈமம் தன்னில் – மயானத்தில், விருந்தை தன் தாது உறு பலியின் வித்தி – விருந்தையின் சப்ததாதுக்களும் எரிதலுற்ற சாம்பரில் விதைத்து, தடம் கடல் அமுதம் பெய்ய – விசாலித்த பாற்கடலின் அமிர்தத்தை ஊற்ற, மாதவன் முன்னம் ஆங்கு – திருமாலின் முன்னிலையாகிய அவ்விடத்தில், ஓர் துளவமாய் மலிந்தது – அவ்விடத்திற் ஒரு துளசியாய் முளைத்து வளர்ந்தது. [ப 103/137]

    தண்டுள வான தாங்கோர் தையலாய் நின்ற காலைக்
    கண்டனன் தருவின் கேள்வன் கனலிடைப் புகுந்தாள் மீது
    கொண்டிடு காதல் நீங்கி அவள்வயிற் கூட்டம் வெஃக
    அண்டரும் அயனும் மாலுக் கருங்கடி இயற்றி ஈந்தார். …… 295

    தண் துளவு ஆனது – தண்ணிய துளவமானது, ஆங்கு ஒர் தையலாய் நின்ற காலை – அவ்விடத்தி லொரு பெண் வடிவமாய் நின்றபொழுது, திருவின் கேள்வன் கண்டனன் – திருமகள் நாயகரான திருமால் கண்டு, கனலிடைப் புகுந்தாள் மீது கொண்டிடு காதல் நீங்கி – அக்கினியிற் பிரவேசித் திறந்த விருந்தையிம்மீது கொண்ட மோகம் நீங்கி, அவள் வயின் கூட்டம் வெஃக – அத் துளவப் பெண்ணின் சேர்க்கையை விரும்ப, அண்டரும் அயனும் – தேவர்களும் பிரமாவும், மாலுக்கு அரும் கடி இயற்றி ஈந்தார் – திருமாலுக்கு அத் தளவப் பெண்ணை அரிய திருமணஞ் செய்து கொடுத்தார்கள். [ப 104/137]

    கடியுறு துளவம் என்னுங் கன்னியைக் கொண்டு கஞ்சக்
    கொடியுறு தகைமைத் தான கோநகர் குறுகி வேறோர்
    படியுறு பெற்றித் தல்லாப் பல்பெரும் போகம் ஆற்றி
    முடியுறு சூட்டு மாக முடித்தனன் முளரிக் கண்ணன். …… 296

    கடி உறு துளவம் என்னும் கன்னியைக் கொண்டு – திருமணம் புரிந்த துளவம் என்கின்ற பெண்ணை அழைத்துக்கொண்டு, கஞ்சக் கொடி உறு – திருமகள் வசிக்கின்ற, தகைமைத்தன – மேலான தகமையையுடைய, கோநகர் குறுகி – இராச நகராகிய வைகுந்தத்தை அடைந்து, வேறு ஒர் படி உறு பெற்றித்து அல்லா – வெறொரு பிரகாரங் கிடைத்தல் கூடாத, பல் பெரும் போகம் ஆற்றி – பல பெரிய போகங்களை அநுபவித்து, முடி உறு சூட்டும் ஆக – முடிக்கட் சூடும் மாலையாகவும், முளரிக் கண்ணன் முடித்தனன் – தாமரைக் கண்ணரான திருமால் அத் துளவப் பெண்ணைச் சூட்டிக்கொண்டார். [ப 104/137]

    அவன்சலந் தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பன்னாள்
    சிவன்கழல் வழிபட் டோர்நாள் செங்கணே மலராச் சாத்த
    உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
    நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்ப மாதோ. …… 297

    அவன் – அந்தத் திருமால், சலந்தரனை வீட்டும் ஆழியை வாங்க – சலந்தரனை கொல்லாநின்ற அந்தச் சக்கரப்படையைத் தாம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பல் நாள் சிவன் கழல் வழிபட்டு – பல நாள் சிவபெருமானுடைய திருவடிகளை ஆயிரம் ஆயிரம் தாமரை மலர்களால் அருச்சித்து, ஓர் நாள் – ஒரு நாள் ஒரு தாமரை மலர் குறைய, செங்கணே மலராய் சாத்த – தமது சிவந்த கண்ணையே  தாமரை மலராக இடந்து சாத்த, உவந்தனன் விடை மேல் தோன்றி அப்படை உதவ – அதற்குச் சிவபெருமான் மகிழ்ந்து இடபத்திலெழுந்தருளி அந்தச் சக்கரத்தினைக் கொடுத்தருள, பெற்று நிவந்தனன் – அதனைப் பெற்று உயர்ச்சியடைந்தார்; அதனால் – சக்கராயுதத்தைப் பெற்ற காரணத்தால், வையம் நேமியான் என்ப – உலகத்தார் திருமாலை நேமியான் என்று கூறுவர். [ப 105/137]

    வேறு
    போற்ற லார்தம் புரமடு புங்கவன்
    வேற்று ருக்கொள் வியனருட் டன்மையைச்
    சாற்றி னாம்இனித் தன்னிகர் இல்லதோர்
    ஏற்றின் மேல்வருந் தன்மை இயம்புவாம். …… 298

    போற்றலார் தம் புரம் அடு புங்கவன் – பகைவரின் முப்புரங்களை அழித்த சிவபெருமான், வேற்று உரு கொள் வியன் அருள் தன்மையைச் சாற்றினாம் – வேற்றுருக்கொண்ட பெரிய அருளின் தன்மையை உரைத்தோம்; இனி தன் நிகர் இல்லது ஓர் ஏற்றின்மேல் வருந் தன்மை இயம்புவாம் – இனி அப்பெருமான் தனக்கு நிகரற்றதொரு இடபத்தின்மீது இவர்ந்தருளுந் தன்மையை உரைப்பாம். [ப 105/137]

    இன்ன நான்குகத் தெல்லை இராயிரம்
    மன்னு கின்றதொர் வைகல்அவ் வைகல்தான்
    துன்னு முப்பது தொக்கதொர் திங்களாம்
    அன்ன தாறிரண் டால்வரும் ஆண்டரோ. …… 299

    இன்ன – இப்பொழுது நிகழும் சதுர்யுகம் போன்று, இராயிரம் நான்கு உகத் தெல்லை மன்னுகின்றது – இரண்டாயிரம் சதுர்யுகம் கொண்டது, ஓர் வைகல் – ஒரு தினம் ஆகும்; அவ்வைகல் முப்பது தொக்கது – அத்தினம் முப்பது கொண்டது, துன்னும் ஓர் திங்களாம் – தினங்கள் கூட்டரவு செய்யும் ஒர் மாதமாம்; அன்னது – அம்மாதம், ஆறு இரண்டால் – பன்னிரண்டன் கூட்டரவால், ஆண்டு வரும் – ஒரு வருடம் உண்டாகும்.
    இங்கே குறிப்பிட்ட தினம் பிரமாவுக்குரிய தினம். [ப 105/137]

    ஆண்டு நூறுசென் றால்அயற் காயுவும்
    மாண்டு போமது மாற்கொரு வைகலாம்
    ஈண்டு நூல்களெ லாமிவை கூறுமால்
    காண்டி யாலிவை கற்றுணர் பேதைநீ. …… 300

    ஆண்டு நூறு சென்றால் – மேற்கூறிய வருடம் நூறு கழிந்தால், அயற்கு ஆயுவும் மாண்டு போம் – பிரமாவுக்கு ஆயுளும் முடியும்; அது – பிரமாவின் ஆயுட்காலமாகிய அது, மாற்கு ஒரு வைகலாம் – திருமாலுக்கு ஒரு தினமாம்; ஈண்டும் நூல்கள் எலாம் – கருத்தால் ஒருமையுறும் நூற்பரப்புக்க ளெல்லாம், இவை கூறும் – இவற்றை உரையாநிற்கும்; கற்று உணர் பேதை நீ இவை காண்டி – கற்றறி மூடனே நீ இவற்றை அறிவாயாக. [ப 109/137]

    ஆய தன்மையில் அச்சுதற் காயுவும்
    மாயும் எல்லையின் மன்னுயிர் யாவையுந்
    தேயும் அண்டஞ் சிதைந்திடும் எங்கணும்
    பாயி ருங்கன லேபரந் துண்ணுமால். …… 301

    ஆய தன்மையில் – அவ்வாறாகிய முறையில், அச்சுதற்கு ஆயுவும் மாயும் – திருமாலுக்கு ஆயுளும் முடியும்; எல்லையில் – அச்சமயத்தில், மன்னுயிர் யாவையும் தேயும் – நிலைபெற்ற உயிர்களைத்தும் ஒடுங்கும்; அண்டம் சிதைந்திடும் – அண்டங்கள் அழியும்; எங்கணும் பாய் இருங் கனலே பரந்து உண்ணும் – எவ்விடத்திலுஞ் சுவாலிக்கின்ற பெரிய அக்கினியே பரவி அவ்விடங்களை உண்ணும் .
    பிரமாவின் ஆயுளை ஒரு தினம் என வைத்து நூறு வருடங் கழியத் திருமாலின் ஆயுள் முடியும் என்க. [ப 106/137]

    ஆன காலை அகிலமும் ஈமமாய்த்
    தூந லங்கொடு தோன்றுமச் சூழலில்
    தானு லாவித் தனிநடஞ் செய்திடு
    ஞான நாயக னாயகி காணவே. …… 302

    ஆன காலை – அப்பொழுது, அகிலமும் ஈமமாய் தூ நலம் கொடு தோன்றும் – உலகமெல்லலஞ் சுடலையாய்ப் பரிசுத்தமாகிய நன்மை உடையதாய்த் தோன்றும்; அச்சூழலில் – அந்த மகா மயானத்தில், ஞான நாயகன் – ஞான நாயகரான சிவபெருமான், நாயகி காண – ஞான நாயகியாகிய தேவி மாத்திரங் காண, தான் தனி உலாவி நடம் செய்திடும் – தாமே ஏகமாய் நின்று தீயாடி நடனஞ்செய்தருளுவர். [ப 106/137]
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் எனக்.

    பெருகு தேயுப் பிரளயம் அன்னதில்
    தருமம் யாவினுக் குந்தனித் தெய்வதம்
    வெருவி யாமிவண் வீடுது மேலினிப்
    புரிவ தேதெனப் புந்தியிற் சூழ்ந்ததே. …… 303

    பெருகு தேயுப் பிரளயம் அன்னதில் – பெருகிய அக்கினிப் பிரளயமொன்றில், தருமம் யாவினுக்கும் தனித் தெய்வதம் – தருமமாகிய அனைத்துக்கும் ஒப்பற்ற தேவதை, வெருவி – அஞ்சி, யாம் இவண் வீடுதும் – யாம் இப் பிரளயத்தில் இறந்துவிடுவோம்; இனி மேல் புரிவது ஏது என – இனிமேற் செய்வ தென்னையென்று, புந்தியில் சூழ்ந்தது – மனத்தில் எண்ணியது.
    எவ்வுயிர்களின் வாழ்வைச் சீர்செய்ய நின்றதோ, அவ்வுயிர்கள் ஒடுங்கத், தான் பயன்பாடின்றித் தனித்து நிற்றலாற்றாதே அவ்வுயிர்களைத் தன்னோடுளப்படுத்தி உயிர்களிடமாக நின்றமையின் “யாம் வீடுதும்” என்ற தென்க. [ப 107/137]

    ஆறு லாஞ்சடை அண்ணலைச் சேர்வனேல்
    ஈறிலா தென்றும் உற்றிடு வேனெனாத்
    தேறி யேஅறத் தெய்வதஞ் செங்கணான்
    ஏற தாயொ ரெழிலுருக் கொண்டதே. …… 304

    ஆறு உலாம் சடை அண்ணலைச் சேர்வனேல் – கங்கை பெருகுகின்ற சடையினையுடைய சிவபெருமானை அடைவே னாயின், ஈரு இலாது என்றும் உற்றிடுவேன் – அழியாமல் என்று மிருப்பேன்; எனாத் தேறி – என்று துணிந்து, அறத் தெய்வதம் – தரும தேவதை, செங்கள் ஆன் ஏறதாய் – சிவந்த கண்ணையுடைய ஆனேறாய், ஓர் எழில் உருக் கொண்டது – ஓர் அழகிய வடிவத்தை எடுத்தது.
    ஆனேறு – இடபம். [ப 107/137]

    ஏற்றின் மேனிகொண் டீசன்முன் ஏகியே
    போற்றி யானின்று பொன்றிடுந் தன்மையை
    மாற்றி யாற்றல் வழங்கிநிற் கூர்தியாம்
    பேற்றை எற்குப் பிரானருள் என்னவே. …… 305

    ஏற்றின் மேனி கொண்டு – இடப வடிவங் கொண்டு, ஈசன் முன் ஏகி – சிவபெருமான் னெதிரே சென்று, போற்றி – துதித்து, யான் இன்று பொன்றிடும் தன்மையை மாற்றி – யான் அக்கினிப்பிரளயமாகிய இப்பொழுது இறக்குந் தன்மையை நீக்கி, ஆற்றல் வழங்கி – தேவரீரைச் சுமக்கும் ஆற்றலை அருள் செய்து, நிற்கும் ஊர்தியாம் பேற்றை – தேவரீருக்கு வாகனமாயிருக்கும் பேற்றை, எற்கு பிரான் அருள் என்ன – அடியேற்கு எம்பெருமானே அருள் செய்க என்று பிரார்த்திக்க.[ப 107/137]

    இறத்தலை இன்மையும் யான மாய்த்தனைப்
    பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையும்
    உறைத்திடும் அன்பும்வா லுணர்வும் நல்கியே
    அறத்தனிக் கடவுளுக் கண்ணல் கூறுவான். …… 306

    இறத்தலை இன்மையும் – சாவா இயல்பையும், யானமாய் தனைப் பொறுத்திடும் தன்மையும் – வாகனமாய்த் தம்மைச் சுமக்கும் பேற்றையும், பொருவில் வன்மையும், அதற்கேற்றவாறு ஒப்பில்லாத வனமையையும், உறைத்திடும் அன்பும் – இடையீடுபடா திறுகிய அன்பையும் வாலுணர்வும் – தூய மெய்யுணர்வையும், அறத்தனிக் கடவுளுக்கு நல்லி – தனித்த தரும தேவதைக்கு அருள்செய்து, அண்ணல் கூறுவான் – சிவபெருமான் கூறியருளுவார். [ப 108/137]

    முதலயல் இடைகடை மொழிய நின்றிடுஞ்
    சதுர்வித யுகந்தனில் தருமத் தின்திறம்
    இதுவென நான்குமூன் றிரண்டொன் றாகிய
    பதமுறை யூன்றியே படியிற் சேறிமேல். …… 307

    முதல் அயல் இடை கடை மொழிய நின்றிடும் – முதலும் அதற்கயலும் இடையும் கடையும் எனக் சொல்லப்படுகின்ற, சதுர்வித யுகந்தனில் – கிரேததிரேத துவாபர கலி என்கின்ற நான்கு வகையாகிய யுகங்களிலே, தருமத்தின் திறம் இது என – தருமத்தி னியல்பு இதுவென்று யாவரும் அறியும் படி, நான்கு மூன்று இரண்டு ஒன்று படியில் ஆகிய – நான்குகால் மூன்றுகால் இருகால் ஒருகால் பூமியிற் படியும்படி, பதம் முறை ஊன்றி – உன் கால்களை யுகந்தோறும் மேற்கூறிய கிரமத்தானே ஊன்றி, மேல் சேறி – பூமியின்மீது சஞ்சரிப்பாயாக. [ப 108/137]

    ஈங்குன திடந்தனில் யாமெக் காலமும்
    நீங்கலம் இருந்தனம் நீயும் வந்துநம்
    பாங்கரின் அடைந்தனை பரிவொ டூர்தியாய்த்
    தாங்குதி யாரினுந் தலைமை பெற்றுளாய். …… 308

    ஈங்கு உனது இடந்தனில் – தருமத்தின் இடமாகிய இங்கே வந்து நிற்கும் உன்னிடத்தினின்றும், யாம் எக்காலமும் நீங்கலம் இருந்தனம் – யாம் எக்காலத்திலாயினும் உன்னைவிட்டு நீங்காமலிருந்தோம்; நீயும் வந்து நம் பாங்கரில் அடைந்தனை – தனித்த நீயும் வந்து நமது பக்கலைச் சார்ந்தாய்; பரிவோடு ஊர்தியாய் தாங்குதி – அன்போடு வாகனமாய் எமைச் சுமப்பாயாக; யாரினும் தலைமை பெற்றுளாய் – இவ்வாற்றால் யாவரினுந் தலையாய நிலையைப் பெற்றாயாயினாய். [ப 108/137]

    எண்ணுநந் தொண்டர்கள் இயற்று பாவமும்
    புண்ணிய மாநமைப் புறக்க ணித்துளார்
    பண்ணிய அறமெலாம் பாவ மாகுமால்
    திண்ணமீ தருமறை தானுஞ் செப்புமே. …… 309

    எண்ணு நம் தொண்டர்கள் இயற்று பாவமும் புண்ணியமாம் – எம்மை எண்ணுகின்ற எமது தொண்டர்கள் செய்த பாவமும் புண்ணியமாம்; நமைப் புறக்கணித்துளார் – எமை எண்ணாத எமது தொண்டர்க ளல்லாதவர்கள், பண்ணிய அறம் எலாம் பாவம் ஆகும் – செய்த அறங்களெல்லாம் பாவமாகும்; ஈது திண்ணம் – இது சத்தியம், அருமறை தானும் செப்பும் – இதனை அரிய வேதங்களும் எடுத்துச் சொல்லும்.
    எண்ணுதலாவது இறைவன் கருத்தறிதல்; தொண்டராவார் இறைபணி செய்வோர். சண்டீசர் செய்த பாவமும், இங்கே இத் தக்கன் செய்யும் அறமும் ஈண்டைக்கு உதாரணமாம்.
    • ‘அரன்றன் பாத மறந்துசெ யறங்க ளெல்லாம் வீண்செயல்’
    • வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி நரரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்த்தே’
    என்பன சித்தியார். [ப 109/137]

    மைதவிர் அடியர்செய் பவமு மற்றுளார்
    செய்திடு தருமமுந் திரிப தாகியே
    எய்திடு கின்ற தியாம்உன் றன்னிடை
    மெய்திகழ் உயிரென மேவும் பான்மையால். …… 310

    மை தவிர் அடியர் செய் பவமும் – குற்றமற்ற அடியவர்கள் செய்யும் பாவமும், மற்றுளார் செய்திடு தருமமும் – அடியர் அல்லாதார் செய்யும் அறமும், திரிப தாகி எய்திடுகின்றது – பயனால் மாறுபட்டு நிற்பது, யாம் உன் தன் இடை- யாம் உன்னிடத்தில், மெய் திகழ் உயிரென – உடலில் விளங்கும் உயிர்போல, மேவும் பான்மையால் – என்றுங் கலந்திருக்குந் தன்மையினாலேயாம். 
    அடியார்  தருமத்தை விசாரித்துச் செய்வர்; அல்லாதார் விசாரியாது செய்வர். இவ்வாற்றால் அடியார் செய்வன எல்லாம் புண்ணியமாம்; அல்லாதவர் செய்வன எல்லாம் பாவமாம். 
    
    கல்லாதா னெட்பங் கழியநன் றாயினுங்

    கொள்ளா ரறிவுடை யார்
    என்ற தேவர் குறளும்,
    புத்ரொ டமணர்கள் அறவுரை புறவுரை
    என்ற சம்பந்தப் பிரவுவின் தேவாரமும் ஈண்டுப் பெரிதுஞ் சிந்திக்கற்பாலவாம்.
    [ப 109/137]

    நின்னிடை யாமுளோம் நீயும் ஊர்தியாய்
    மன்னுதி எமதுபால் மற்றி தல்லதை
    இன்னுமோர் வடிவு கொண் டெம்மைப் போற்றுதி
    அன்னதும் உணர்கென அருளிச் செய்தரோ. …… 311

    நின்னிடை யாம் உளோம் – உன்னிடத்தில் யாம் என்றும் உறைகின்றோம்; நீயும் ஊர்தியாய் எமதுபால் மன்னுதி – நீயும் எமக்கு வாகனமாய் எமது பக்கலில் நிலைபெற்றிருப்பாயாக; இது அல்லது – ஒஃதன்றி, இன்னும் ஒர் வடிவு கொண்டு – மற்றொரு சமயத்தில் வேறுமொரு வடிவெடுத்து, எம்மைப் போற்றுதி – எம்மைப் பூசிப்பாய்; அன்னதும் உணர்க – அதனையும் இப்பொழுதே அறிவாயாக; என அருளிச் செய்து – என்று திருவாய்மலர்ந்தருளி.
    மானுட வடிவெடுத்துக் காஞ்சியிற் சிவபெருமானைப் பூசித்தமை காஞ்சிப்புராணத்திற் காண்க. [ப 110/137]

    வேறு
    கூர்ந்த சூலக் கொடும்படை வானவன்
    சார்ந்து போற்றுந் தருமக் கடவுளை
    ஊர்ந்தி டுந்தனி யூர்திய தாகியே
    சேர்ந்தி டும்படி சீரருள் செய்தனன். …… 312

    கூர்ந்த சூலக் கொடும்படை வானவன் – கூரிய சூலமாகிய கொடிய படையை ஏந்திய சிவபெருமான், சார்ந்து போற்றும் தருமக் கடவுளை – தம்மையடைந்து துதிக்கின்ற தரும தேவதையை, ஊர்ந்திடும் தனி ஊர்தியதாகி சேர்ந்திடும்படி – தாம் ஊர்ந்தருளுகின்ற ஊர்தியாய்த் தம்மைச் சேர்ந்திருக்கும்படி, சீர் அருள் செய்தனன் – சிறப்பாகிய திருவருளைச் செய்தருளினார். [ப 110/137]

    அந்த நாண்முத லாதிப் பிரான்றனைச்
    சிந்தை மேல்கொண்ட சீருடை யன்பர்முன்
    நந்தி யாகும் நலம்பெறும் ஊர்திமேல்
    வந்து தோன்றும் வரம்புரி பான்மையால். …… 313

    அந்த நாள் முதல் – அந்த நாள் முதலாக, ஆதிப் பிரான் தனைச் சிந்தை மேல்கொண்ட சீர் உடை அன்பர் முன் – ஆதிக் கடவுளாகிய தம்மைத் தியானிக்கின்ற அருட் செல்வத்தையுடைய அன்பர்களுக்கு முன்னரே, வரம் புரி பான்மையால் – வரங்கொடுத்தலை முன்னிட்டு, நந்தி ஆகும் நலம் பெறும் ஊர்தி மேல் – இடபமாகும் நலத்தைப் பெறாநின்ற தரும தேவதையாகிய ஊர்தியின்மீது, வந்து தோன்றும் – இடப்பாரூடராய்த் தோன்றி அருளுவார். [ப 110/137]

    சாற்றும் அவ்விடைக் கேதனைத் தாங்குபேர்
    ஆற்றல் ஈந்த செயலறிந் தல்லவோ
    மாற்ற லார்புரஞ் செற்றுழி மாயவன்
    ஏற்றின் மேனிகொண் டெந்தையைத் தாங்கினான். …… 314

    சாற்றும் அவ்விடைக்கு – முன்னர் கூறாநின்ற தருமதேவதையாகிய அந்த இடபத்துக்கு, தனை தாங்கு பேராற்றல் ஈந்த செயலறிந்து அல்லவோ – தம்மைச் சுமக்கும் பேராற்றலை ஈந்தருளிய அருட்செயலை அறிந்தன்றோ, மாற்றலார் புரம் சென்றுழி – பகைவர்களது திரிபுரத்தைச் சங்காரஞ் செய்த போது, மாயவன் ஏற்றின் மேனி கொண்டு – திருமால் இடபத்தின் வடிவத்தை எடுத்துக்கொண்டு, எந்தையைத் தாங்கினான் – எம்பெருமானைச் சுமந்தார். [ப 11/137]

    ஆத லால்அரன் அவ்விடை யூர்ந்திடல்
    ஏத மோவன் றிதுநிற்க தெண்டிரை
    மீது தோன்றும் விடத்தையுண் டானென
    ஓதி னாய்அதன் உண்மையைக் கேட்டிநீ. …… 315

    ஆதலால் – இங்ஙனம் இருந்தவாற்றால், அரன் – சிவபெருமான், அவ்விடை ஊர்ந்திடல் ஏதமோ – அந்த இடபத்தை ஊர்தல் குற்றமாமோ; அன்று குணமேயாம்; இது நிற்க – இவ் வரலாறு நிற்க; தெண்டிரை மீது தோன்றும் விடத்தை உண்டான் என ஓதினாய் – தெளிந்த திரையினையுடைய பாற்கடல்மீது தோன்றும் விடத்தை உண்டார் என்று சொன்னாய்; அதன் உண்மையை நீ கேட்டி – அதன் உண்மையையும் நீ கேட்பாயாக.
    விடையும் ஏறுமோ ஆலமுங் கொள்ளுமோ என்று தக்கன் வினாவியதை உட்கொண்டு விடத்தை உண்டான் என் ஓதினாய் என்றார். [ப 11/137]

    வேறு
    நிருதர் தம்முடன் அவுணரும் அமரரும் நேர்ந்து
    திருகு வெஞ்சினத் தொருபகல் முந்துபோர் செய்ய
    இருதி றத்தினும் பற்பலர் வல்லையில் இறப்ப
    வெருவி யன்னது கண்டனர் அமரினை விடுத்தார். …… 316

    முந்து ஒரு பகல் – முன்னொரு காலத்திலே ஒருதினம், நிருதர் தம்முடன் – இராக்கதர்களோடு, அவுணரும் அமரரும் நேர்ந்து – அசுரர்களும் தேவர்களும் எதிர்த்து, திருகு வெம் சினத்து போர் செய்ய – மாறுபட்டு வெவ்விய கோபத்தோடு போர்செய்ய, இரு திறத்தினும் – இராக்கதரோ டெதிர்த்த அசுரர்களுந் தேவர்களுமாகிய இருதிறத்தாரிலும், பல் பலர் வல்லையில் இறப்ப – மிகப் பலர் விரைந்திறந்தாராக, அன்னது கண்டனர் வெருவி – அதனைக்கண்டு பயந்து, அமரினை விடுத்தார் – இராக்கதரோடு சண்டை செய்வதை நிறுத்தினார்கள். [ப 11/137]

    மேலை வானவர் அவுணர்தங் கோவொடு விரவிக்
    கால மெண்ணில இருந்துபோர் செய்வது கருதி
    நாலு மாமுகத் திறையவன் பதத்தினை நணுகிச்
    சீல மோடவன் தாள்மலர் பணிந்துரை செய்வார். …… 317

    மேலை வானவர் அவுணர் – இராக்கதர்களுடன் பொருதலை நிறுத்தியவர்களாகிய விண்ணுலகிலுள்ள தேவர்கள் அசுரர்களாகிய இருதிறத்தாரும், தம் கோவொடு விரவி – தந் தலைவர்களான தேவேந்திரனோடும் அசுரேந்திரனோடும் முறைய கலந்து ஆலோசனை செய்து, எண்ணில காலம் இருந்து போர் செய்வது கருதி – எண்ணில்லாத காலஞ் சாவாமலிருந்து போர் புதிதலைக் கருத்துட் கொண்டு, நாலு மாமுகத்து இறைவன் பதத்தினை நணுகி – பெருமை பொருந்திய நான்கு முகங்களையுடைய பிரமதேவரின் உலகத்தையடைந்து, சீலமொடு – ஆண்டைக்கு வேண்டும் ஆசாரத்தோடு, அவன் தாள் மலர் பணிந்து உரை செய்வார் – அவருடைய மலரடிகளை வணங்கிக் கூறுவார்கள்.
    வானவர்தங்கோவொடும், அவுணர் தங்கோவொடும் விரவி என்க. [ப 112/137]

    ஒல்கு மாயுளை உடையரேம் பற்பகல் உஞற்று
    மல்கு பேரமர் இயற்றுவான் பாற்கடல் மதியா
    அல்க லின்றிய அமிர்தினை வாங்கியே அடிகேள்
    நல்கு வாயெமக் கென்றலும் அயன்இவை நவில்வான். …… 318

    அடிகேள் – சுவாமிகாள், ஒல்கும் ஆயுளை உடையரேம் – நாம் சுருங்குகின்ற சில்வாழ்நாளை யுடையோம்; பல் உஞற்று மல்கு பேர் அமர் இயற்றுவான் – பலகாலம் முயற்சி பெருகுதற்குரிய பெரிய யுத்தத்தைச் செய்யும் பொருட்டு, பாற் கடல் மதியா – பாற்கடலை கடைந்து, அல்கல் இன்றிய – குறைதல் இல்லாத, அமிர்தினை வாங்கி – அமிர்தத்தைப் பெற்று, எமக்கு நல்குவாய் என்றலும் – எமக்குத் தந்தருளும் என்று வேண்டுதலும், அயன் இவை நவில்வான் – பிரமதேவர் இவற்றை கூறுவார்.
    அமிர்தம் – மிருத்தை நீங்குவது; சாவ மறுந்து. மிருத்து – மரணம், சாவாமல் நிருதரோடு நெடுநாட் சமர்செய்யும்பொருட்டு அமரரும் அசுரரும் அமிர்தத்தை வேண்டினாரென்க. [ப 112/137]

    ஆதி மாயவற் கிச்செயல் மொழிகுவம் அவனே
    ஓத வேலையைக் கடைந்தமு தளித்திடும் உண்டால்
    சாதல் வல்லையில் வந்திடா தென்றயன் சாற்றிப்
    போது நாமென அவரொடும் பாற்கடல் புகுந்தான். …… 319

    ஆதி மாயவற்கு இச்செயல் மொழிகுவம் – நமக்கெல்லாம் ஆதியாகிய திருமாலுக்கு இச் செயலினைச் சொல்லுவோம்; அவன் ஓத வேலையைக் கடைந்து அமுது அளிந்திடும் – அவர் அலைகளையுடைய பாற்கடலைக் கடைந்து அமுதத்தைத் தந்தருளுவர்; உண்டால் சாதல் வல்லையில் வந்திடா – அதனை உண்டால் மரணம் விரைவில் வந்தணுகாது; என்று அயன் சாற்றி – என்று பிரமதேவர் கூறி, நாம் போதும் என – நாம் திருமாலிடம் போவோம் என்று, அவரொடும் பாற்கடல் புகுந்தான் – அவர்களோடும் பாற்கடலை அடைந்தார்.
    அவர், அமரரும் அசுரரும். [ப 112/137]

    நனந்த லைப்படு பயங்கெழு தெண்டிரை நடுவண்
    அனந்தன் மீமிசைத் துயிலுறும் மூர்த்தியை அணுகி
    மனந்த வாதபேர் அன்பொடு நான்முகன் வழுத்த
    நினைந்து கண்விழித் தொய்யென எழுந்தனன் நெடியோன். …… 320

    நனந்தலைப்படு – இலவணம் முதற் சுத்தோதகம் இறுவாயாக உள்ள ஏழு கடல்களுக்கும் நடுவட் பொருந்திய, தெண் டிரைகெழுபயம் நடுவண் – தெளிந்த திரை கெழுமிய பாற்கடலின் மத்தியில், அனந்தன் மீமிசை – சேஷ சயனத்தின்மீது, துயிலுறு மூர்த்தியை அணுகி – அறிதுயில் புரிகின்ற திருமாலை அடைந்து, மனம் தவாத பேரன்பொடு – மனத்தைவிட்டகலாத பேரன்பொடு, நான்முகன் வழுத்த – பிரமதேவர் துதிக்க, நினைந்து – அதனைத் திருவுளங்கொண்டு, கண் விழித்து – அறி துயிலுணர்ந்து, நெடியோன் ஓய் என எழுந்தனன் – திருநெடுமால் விரைந் தெழுந்தார்.
    நல் நந்து அலைப்படு எனப் பிரித்துரைப்பது சிறப்பன்று, நந்து – சங்கு, நனந்தலை – நடு . [ப 113/137]

    நீவிர் இவ்விடை வந்தவா றென்னென நெடியோன்
    பூவின் மேல்வரு பண்ணவன் அவுணர்கள் பொருவில்
    தேவர் வேந்தர்கள் வேண்டிய குறையினைச் செப்ப
    ஆவ தென்றதற் கியைந்தனன் அளித்திடும் அருளால். …… 321

    நெடியோன் – திருநெடுமால், நீவிர் இவ்விடை வந்தவாறு என் என – நீவிர் இங்கு வந்த வரலாறு என்னை என்று வினவ, பூவின்மேல் வரு பண்ணவன் – திருமாலின் உத்திக்கமலத்திற் பிறந்த பிரமதேவர், அவுணர்கள் – அசுரர்களும், பொருவில் தேவர் – ஒப்பில்லாத தேவர்களும், வேந்தர்கள் – அசுரேந்திரன் தேவேந்திரன் ஆகிய அவர்களுடைய வேந்தர்களும், வேண்டிய குறையினைச் செப்ப – வேண்டுதல் செய்த குறையை முறையீடு செய்ய, அளித்திடும் அருளால் – யாவரையும் பாதுகாக்குங் கருணையினாலே, ஆவது என்று – ஆவதாக என்று கூறி, அதற்கு இயைந்தனன் – அமிர்த மதனத்துக்கு உடன் பட்டார். [ப 113/137]

    அருள்பு ரிந்தெழு மாயவன் மந்தரம் அதனை
    உருள்பு ரிந்திடு மத்தென நிறுவியே உடலாம்
    பொருள்பு ரிந்திடும் மதியினை மதலையாப் புரியா
    இருள்பு ரிந்தவா சுகிதனை நாணென யாத்தான். …… 322

    அருள் புரிந்து எழு மாயவன் – அநுக்கிரகஞ் செய்து துயிலெழுந்த திருமால், மந்தரம் அதனை உருள் புரிந்திடு மத்தென நிறுவி – மந்திர மலையை உருட்சி பொருந்திய மத்தாக நிறுத்தி, உடல் – தேய்ந்து சென்ற தன் உடலை, ஆம் பொருள் புரிந்திடும் மதியினை – வளரும் பொருளாகச் செய்துகொண்ட சந்திரனை, மதலையாப் புரியா – கடைதறியாகச் செய்து, இருள் புரிந்த வாசுகிதனை – இருளாகிய நஞ்சைக் கொண்ட வாசுகி என்ற பாம்பை, நாண் என யாத்தான் கடைகயிறாகக் கட்டினார்.
    மந்தரம் – அட்டகிரிகளுள் ஒன்று, வாசுகி – நாகங்களுள் ஒன்று, சுழலுகின்ற மத்து எனினுமாம். [ப 114/137]

    ஒருபு றத்தினில் அமரர்கள் ஒருபுறத் தவுணர்
    இருபு றத்தினும் ஈர்த்திட நல்கியிப் புவிசூழ்
    தருபு றக்கிரி யனையமத் தடிமுடி தன்மெய்
    வருபு றத்தினுங் கரத்தினும் பரித்தனன் மாலோன். …… 323

    ஒரு புறத்தினில் அமரர்கள் – ஒரு பககத்தில் தேவர்களும், ஒரு புறத்து அவுணர் – மற்றைப் பக்கத்தில் அசுரர்களுமாக, இரு புறத்தினும் ஈர்த்திட நல்கி – இருபக்கத்திலும் நின்று இழுக்கும்படி செய்து, இப்புவி சூழ்தரு புறக்கிரி அனைய – இப் பூவுலகத்தைச் சூழ்ந்திருக்கின்ற சக்கரவாளகிரியை ஒத்த, மத்து அடிமுடி – மத்தரமாகிய மத்தின் அடியையும் முடியையும், தன் மெய் வரு புறத்தினும் கரத்தினும் மாலோர்ன் பரித்தனன் – முறையே தமது மெய்க்கட் பொருந்திய முதுகினாலுங் கரத்தினாலுந் திருமால் தாங்கினார். [ப 114/137]

    ஆன தன்மையின் மாயவன் பரித்துழி அமரர்
    கோனும் வானவர் யாவரும் அவுணருங் கோமான்
    தானும் வாசுகி பற்றியே வலியுறுந் தகவால்
    வானி லாவுமிழ் பாற்கடல் மறுகிட மதித்தார். …… 324

    ஆன தன்மையின் மாயவன் பரித்துழி – இவ்வாறகக் திருமால் மத்தைத் தாங்க, வானவர் யாவரும் – தேவர்க ளனைவரும், அமரர் கோனும் – தேவேந்திரனும், அவுணரும் – அசுரர்களும், கோமான் தானும் – அசுரேந்திரனும், வாசுகி பற்றி வலியுறும் தகவால் – வாசுகியாகிய நாணைப் பற்றி வலித்தலைச் செய்யும் இயல்பால், வால் நிலா உமிழ் பாற்கடல் மறுகிட – வெண்மையாகிய நிலாவை உமிழ்கின்ற பாற்சமுத்திரங் கலங்கும்படி, மதித்தார் – கடைந்தார்கள். [ப 114/137]

    மதித்த வேலையவ் வேலையி னுடைந்தென வாய்விட்
    டதிர்த்த தேவரும் உலைந்தனர் குலைந்தன அகிலம்
    கதித்த மேருவுஞ் சலித்தன ஒலித்தன கரிகள்
    பதைத்து வெய்துயிர்த் தொடுங்கின நடுங்கின பணியே. …… 325

    அவ்வேலையின் – அப்பொழுது, மதித்த வேலை – கடைந்த அந்தச் சமுத்திரம், உடைந்தென – கரை விண்டு கட்டுடைந்தாற்போல, வாய்விட்டு அதிர்த்தது – வாய்விட்டு ஆரவாரித்து; ஏவரும் உலைந்தனர் – எல்லோரும் நடுநடுங்கினார்கள்; அகிலம் குலைந்தன – உலகங்கள் நிலைகுலைந்தன; கதித்த மேருவும் சலித்தன – உயர்ந்த மேருமலையும் அடிமுடிகள் சலித்தன; கரிகள் ஒலித்தன – திக்கு யானைகள் பிளிறின; பணி – அட்ட நாகங்கள், பதைத்து வெய்து உயிர்த்து ஒடுங்கின நடுங்கின – பதைத்து வெம்மையை உயிர்த்து ஒடுங்கி நடுங்கின. [ப 115/137]

    உடைந்து போவது கொல்லென அமரர்கள் ஒருங்கே
    தொடர்ந்து தம்பெரு வலிகொடே மந்தரஞ் சுழலக்
    கடைந்து வேலையைக் கலக்குழி ஈர்த்திடுங் கயிறாய்
    அடைந்த வாசுகி பொறுக்கலா தயர்ந்ததை அன்றே. …… 326

    உடைந்து போவது கொல் என – வலி கெட்டுக் கடையாதொழிவதா என்று, அமரர்கள் – தேவர்கள், ஒருங்கு தொடர்ந்து – அசுரர்களோடு ஒருங்கு கடைதலைத் தொடர்ந்து, தம் பெரு வலிகொடு – தமது பெரிய வலி கொண்டு, மந்தரம் சுழல கடைந்து வேலையை கலக்குழி – மந்திரமாகிய மத்துச் சுழலும் படி கடைந்து பாற்கடலைக் கலக்கும்போது, ஈர்த்திடும் கயிறாய் அடைந்த வாசுகி – இழுக்குங் கயிறாயிருந்த வாசுகி, பொறுக்கலாது அயர்ந்தது – பொறுக்கலாற்றாது அயர்ந்தது. [ப 115/137]

    ஊன்று பேதுற வெய்தியே யாற்றவெய் துயிர்த்துத்
    தோன்று வெஞ்சினங் கொண்டுமெய் பதைத்துநாத் துடிப்ப
    ஆன்ற ஆயிரம் வாய்தொறும் ஆலகா லத்தைக்
    கான்ற தத்துணை அளக்கரும் உமிழ்ந்தது கடுவே. …… 327

    ஊன்று பேதுறவு எய்தி – இறுகப் பற்றிய துன்பத்தை வாசுகி எய்தி, ஆற்ற வெய்து உயிர்த்து – பெரிதும் வெம்மையை நெட்டுயிர்த்து, தோன்று வெம் சினம் கொண்டு – உண்டாகாநின்ற பெரிய கோபத்தைக் கொண்டு, மெய் பதைத்து – உடல் பதைத்து, நா துடிப்ப நாக்கள் துடிப்ப, ஆன்ற ஆயிரம் வாய்தொறும் ஆலகாலத்தை கான்றது – அகன்ற ஆயிரம் வாய் தோறுஞ் சுரக்கின்ற ஆலகாலவிடத்தைக் கக்கியது; அத்துணை – அவ்வளவில், அளக்கரும் கடுவே உமிழ்ந்தது – பாற்கடலும் அமுதத்தைத் தாராமல் அந்நஞ்சையே தந்தது.
    பாற்கடல், ஆயிரம் வாய்கள் வாயிலாகத் தன்பாலிட்ட நஞ்சையே வெளியிட்டதாயிற்று. தேவாசுரர்களின் முயற்ஸி, பூசிய பாலையே கறந்ததாயிற்று.[ப 115/137]

    ஈற்றுக் கோடியின் எழுமுகிற் கோடியின் இருண்டு
    கூற்றுக் கோடியின் மறங்கொடு திசைதொறுங் குலவுங்
    காற்றுக் கோடியின் விரைவினால் வடவையங் கடுந்தீ
    நூற்றுக் கோடியிற் பரந்ததவ் விடமெலாம் நொய்தின். …… 328

    ஈற்று கோடியின் – உலக முடிவின் எல்லையில், எழு முகில் கோடியின் இருண்டு – எழுகின்ற முகிற் கூட்டங்களை ஒப்பக் கருநிறம் படைத்து, கூற்று கோடியின் மறம் கொடு – கோடி கூற்றுவர்களின் மறத்தை மேற்கொண்டு, திசை தொறும் குலவும் காற்று கோடியின் விரைவினால் – திக்குக்கள் தோறுஞ் சென்று மோதுகின்ற கோடி சண்டமாருதத்தின் வேகத்தோடு, நூற்று கோடி கடும் வடவையும் தீயின் – நூறுகோடி  வெய்ய வடவாமுகாக்கினியைப் போல, அவ்விடம் எலாம் நொய்தின் பரந்து – அவ்வாலகால விடமனைத்தும் விரைவில் எங்கும் பரந்தது. [ப 116/137]

    ஓட லுற்றெழுந் தவ்விடஞ் சூழ்தலும் உலையா
    ஓட லுற்றனர் தானவர் உம்பரா யுள்ளோர்
    ஓட லுற்றனர் முனிவரர் ஓடலுற் றனரால்
    ஓட லுற்றனர் உலகெலாம் படைத்திடும் உரவோர். …… 329

    ஓடு அல் உற்று – பரக்கின்ற இருளின் தன்மையைப் பொருந்தி, அவ்விடம் எழுந்து சூழ்தலும் – அந்த ஆலகால விடம் எழுந்து எங்கும் பரவுதலும், உலையா – நிலைகுலைந்து, தானவர் ஓடலுற்றனர் -அசுரர்கள் ஓடினார்கள்; உம்பராய் உள்ளோர் ஓடலுற்றனர் – தேவர்களும் ஓடினார்கள்; முனிவரர் ஓடலுற்றனர் – முனிவர்களும் ஓடினார்கள்; உலகெலாம் படைத்திடும் உரவோர் ஓடலுற்றனர் – உலகனைத்தையும் படைத்தவரான பிரமதேவரும் உலகனைத்தையும் அரசு செய்யும்படி பெற்றுக்கொண்டோரான தேவேந்திரன் அசுரேந்திரன் என்னும் இருவரும் ஆகிய உரவோர்களும் ஓடினார்கள். [ப 116/137]

    தண்டு ழாய்முடிப் பண்ணவன் இனையதோர் தன்மை
    கண்டு மந்தரங் காப்புவிட் டுள்ளமேற் கவற்சி
    கொண்டு நாமின்று போற்றுதும் ஈதெனக் குறியா
    அண்ட ராதியர் மேற்செலும் விடத்தின்முன் அடுத்தான். …… 330

    தண் துழாய் முடி பண்ணவன் – தண்ணிய துளவ மாலையை யணிந்த திருமுடியினையுடைய திருமால், இனையது ஓர் தன்மை கண்டு – இவ்வாறயதொரு தன்மையைக் கண்டு, மந்தரம் காப்பு விட்டு – மத்தரமாகிய மத்தைக் காத்து நிற்றலை விடுத்து, உள்ளமேல் கவற்சி கொண்டு – மனக்கவலையுற்று, நாம் இன்று ஈது போற்றுதும் என குறியா – நாம் இன்று இந்த நஞ்சைத் தீது விளையாது காப்போம் என்று கருதி, அண்டர் ஆதியர் மேல் செலும் விடத்தின் முன் அடுத்தான் – தேவர் முதலியவர்கள்மீது செல்லும் ஆலகால விடத்தின் முன் சென்றார். [ப 116/137]

    மேல்வ ருங்கொடு விடத்தின்முன் னுறுதலும் வெகுண்டு
    சால அங்கது தாமரைக் கண்ணன்மேல் தாக்கி
    மூல முள்ளதோர் வச்சிர மணிநிற முருக்கி
    நீல வண்ணமே யாக்கிய தவனும்நின் றிலனால். …… 331

    மேல் வரும் கொடு விடத்தின் முன் உறுதலும் – ஆங்குள்ளார்மேல் வருகின்ற கொடிய ஆலகாலத்தின் முன் செல்லுதலும், அங்கு அது சாலவெகுண்டு – அங்கே அவ்விடம் மிகவும் கோபித்து, தாமரைக் கண்ணன் மேல் தாக்கி – தாமரைக் கண்ணரான திருமால்மீது தாக்குதல் செய்து, மூலம் உள்ளது ஓர் வச்சிர மணி நிறம் முருக்கி – பண்டுள்ளதாகிய இப்பற்ற வச்சிரத்தின் நிறத்தை மாற்றி, நீல வண்ணம் ஆக்கியது – நீல் நிறத்தைத் திருமாலுக்கு உண்டாக்கியது; அவனும் நின்றிலன் – இங்ஙனமாக அத்திருமாலும் எதிர் நிற்றலாற்றாராயினார். [ப 117/137]

    கோல காலமாய் உலகெலாம் அடுந்தொழில் கொண்ட
    ஆல காலமுன் நிற்கலார் அரிமுத லானோர்
    மூல காலமும் இறுதியும் இன்றியே மூவாக்
    கால காலன்வாழ் கயிலையை அடைந்தனர் கடிதில். …… 332

    கோல காலமாய் – உருவங்கொண்டதோர் ஊழி போன்றதாய், உலகு எலாம் அடும் தொழில் கொண்ட – உலகம் முழுவதையும் அழிக்குந் தொழிலைக் கொண்ட, ஆலகாலம் முன் நிற்கலார் – ஆலகாலத்தின்முன் நிற்றலாற்றாதவர்களாய், அரி முதலானோர் – திருமால் முதலியவர்கள், மூல காலமும் இறுதியும் இன்றி – ஆதியும் அந்தமும் இல்லாமல், மூவா காலகாலன் வாழ் கயிலையை – என்றும் மூப்படையாத காலகாலராகிய சிவபெருனான் எழுந்தருளியிருக்குங் கைலாசகிரியை, கடிதின் அடைந்தனர் – விரைவில் அடைந்தார்கள். [ப 117/137]

    முந்து வெவ்விடஞ் சுடுதலால் இரிந்தவர் முக்கண்
    எந்தை எம்பெரு மாட்டிவாழ் கயிலையில் எவரும்
    வந்த தற்புத நீரதோ வெருவினால் மைந்தர்
    தந்தை தாயிடத் தன்றியே யாங்ஙனஞ் சார்வார். …… 333

    முந்து வெவ்விடம் சுடுதலால் – ஓடுகின்ற தம்மைத் தொடர்ந்து முந்துகின்ற வெவ்விய விடஞ் சுடுதலினாலே, இரிந்தவர் எவரும் – புறங்கொடுத்தோடியவர்கள் யாவரும், முக்கண் எந்தை – மூன்று கண்களையுடைய பரமபிதாவும், எம் பெருமாட்டி – உலகமாதாவும், வாழ் கயிலையில் – எழுந்தருளியிருக்கின்ற கைலாசகிரிக்கண், வந்தது அற்புத நீரதோ – ஓடிவந்தது ஓரற்புதமாமோ; மைந்தர் வெருவினால் – பிள்ளைகளாயினோர் தமக்கோ ரச்சம் உளதானால், தந்தை தாயிடத்து அன்றி யாங்கனம் சார்வார் – தந்தை தாயரிடத் தல்லாமல் வேறெவ்விடத்துக்குப் போவார்கள். [ப 118/137]

    வேறு
    ஆயவர் கயிலையில் அமலற் காகிய
    கோயிலின் முதற்பெருங் கோபு ரத்திடை
    நாயக நந்தியந் தேவை நண்ணியே
    போயதெந் துயரெனப் புகன்று போற்றினார். …… 334

    ஆயவர் – அங்கே சென்றவர்கள், கயிலையில் அமலற்கு ஆகிய – கைலாச கிரியிலே சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பொருட்டு நிருமிக்கப்பட்ட, கோயிலின் முதல் பெரும் கோபுரத்திடை – செம்பொற் றிருக்கோயிலின் முதற்கணுள்ள பெருமை பொருந்திய கோபுர வாய்தலின்கண், நாயக நந்தியம் வேவை நண்ணி – நாயகஞ் செய்துகொண்டிருக்கின்ற நந்தியம் பெருமானை அடைந்து, எம் துயிர் போயது என புகன்று – இனி நமது துன்பம் நீங்கியது என்று கூறி, போற்றினார் – துதித்தார்கள். [ப 118/137]

    போற்றிய பின்னுறப் புகுந்த வாறெலாஞ்
    சாற்றினர் கேட்டலுந் தகுவர் தேவர்கள்
    வீற்றுற அவண்நிறீஇ வேதன் மாறிசைக்
    கோற்றொழி லார்தமைக் கொண்டு போயினான். …… 335

    போற்றிய பின்னுற – வணங்கிய பின்பு, புகுந்தவாறு எலாம் சாற்றினர் – நடந்த வரலாறனைத்துங் கூறினார்கள்; கேட்டலும் – நந்தியம்பெருமான் கேட்ட அளவில், தகுவர் தேவர்கள் அவண் வீற்றுற நிறீஇ – அசுரர்களையுந் தேவர்களையும் அவ்வாய்தலில் வேறு வேறு நிறுத்தி, வேதன் மால் – பிரம தேவரையுந் திருமாலையும், திசைக் கோல தொழிலார் தமை – திக்குப் பாலகரையும், கொண்டு போயினான் – அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
    கோற்றொழில் – காவல் . [ப 118/137]

    நடைநெறி யருள்புரி நந்தி யெம்பிரான்
    கடைநிலை ஐந்தவாங் காப்பில் எண்டிசை
    அடைதரு மன்னரை அருளின் நோக்கியிவ்
    விடைதனில் உறுதிரென் றியம்பி யேகியே. …… 336

    (அருள்முறை நாடிமால்)

    அருள்முறை நாடிமால் அயனென் றுள்ளதோர்
    இருவரை அமலன்முன் எய்த உய்த்தலுங்
    கருணையங் கடல்தனைக் கண்டு போற்றினார்
    பரவச மாயினார் பணிந்து பன்முறை. …… 337

    (போற்றினர் நிற்றலும்)

    போற்றினர் நிற்றலும் புரத்தை முன்அடும்
    ஆற்றலின் உம்பரான் அரிநின் மேனிதான்
    வேற்றுரு வாய்இவண் மேவிற் றென்னெனச்
    சாற்றினன் யாவையும் உணருந் தன்மையான். …… 338

    (மெய்வழி பாடுசெய்)

    மெய்வழி பாடுசெய் மேலை யோர்க்கெலாம்
    உய்வழி புரிபவன் இனைய ஓதலும்
    மைவழி மேனியன் மானம் உள்ளுற
    அவ்வழி இனையன அறைதல் மேயினான். …… 339

    (வஞ்சின அவுணர்கள்)

    வஞ்சின அவுணர்கள் வான மேலவர்
    வெஞ்சின அமரினில் விளிந்த வேலையில்
    எஞ்சலில் ஆயுவுற் றிகல்செய் வாமெனப்
    புஞ்சமொ டயனொடு புகறல் மேயினார். …… 340

    (அன்னமென் கொடி)

    அன்னமென் கொடியினன் அனைய ரோடுபோந்
    தென்னொடு கூறினன் யானெ ழுந்தரோ
    உன்னருள் பெற்றிலன் உணர்ந்தி டாமலே
    மன்னிய அமிழ்திவண் வருதல் வேண்டினேன். …… 341

    (தானவர் அமரர்கள்)

    தானவர் அமரர்கள் சதுர்மு கத்தவன்
    ஏனையர் தம்முட னியானின் றெய்தியே
    பானிறை கடல்கடை பொழுதிற் பாயெரி
    யானது மருளுற ஆலம் போந்ததே. …… 342

    (உன்றன தருள்பெறா)

    உன்றன தருள்பெறா உண்மை நாடியே
    இன்றுல குயிரெலாம் இறக்க அவ்விடஞ்
    சென்றதி யாவருந் தெருமந் தோடினார்
    நின்றவென் மெய்யையிந் நிறம தாக்கிற்றே. …… 343

    (வேற்றுரு வாக்கியெ)

    வேற்றுரு வாக்கியென் மெய்யில் தாக்கலும்
    ஆற்றலன் அகன்றனன் அனையர் தம்மொடே
    ஏற்றம தானவெம் மிடர்கள் யாவையும்
    ஆற்றுநர் யாருளர் மற்று நீயலால். …… 344

    (உன்னருள் பெறாம)

    உன்னருள் பெறாமல்அவ் வுததி சேர்தலால்
    இன்னதொர் இன்னல்வந் தெய்திற் றாதலால்
    நின்னடி அடைந்தனம் நீடு தீயெனத்
    துன்னிய கொடுவிடந் தொலைக்கச் செல்லுமால். …… 345

    (ஆரணம் யாவையும்)

    ஆரணம் யாவையும் அறிந்து நாடொணாப்
    பூரண வுமையொடு பொருந்தி இன்னதாம்
    ஏரண வுருவுகொண் டிருக்கை எம்மையாள்
    காரண மன்றியே கருமம் யாவதோ. …… 346

    (தீயென எழுதரு)

    தீயென எழுதரு சீற்ற வெவ்விடம்
    ஆயதை மாற்றியே அளியர் தங்களை
    நீயருள் புரிகென நீல்நி றந்திகழ்
    மாயவன் உரைத்தனன் வழுத்தி நிற்கவே. …… 347

    (மாதிர இறைவரும்)

    மாதிர இறைவரும் வானு ளோர்களும்
    நீதியில் அவுணரும் நின்ற எல்லையில்
    நாதனை வழுத்தலும் நம்பன் கேட்டரோ
    ஏதிவை அரவம்என் றியம்ப லோடுமே. …… 348

    (வானவர் அவுணர்கள்)

    வானவர் அவுணர்கள் மாதி ரத்தவர்
    ஏனையர் வல்விடத் தின்னல் உற்றுளார்
    கோநகர்க் கடைதொறுங் குழுமி ஏத்தினார்
    ஆனதிவ் வொலியென அயன்வி ளம்பவே. …… 349

    (கறுத்திடும் மிடறுடை)

    கறுத்திடும் மிடறுடைக் கடவுள் நந்தியைக்
    குறிப்பொடு நோக்கியே கொணர்தி யாலெனப்
    புறத்திலம் மேலவன் போந்து மற்றவர்
    திறத்துடன் உறையுளில் செல்ல உய்ப்பவே. …… 350

    (வந்தவர் யாவரும்)

    வந்தவர் யாவரும் வணங்கி ஈசனைப்
    புந்தியில் அன்பொடு போற்றி யாற்றவும்
    நொந்தனம் விடத்தினால் நொய்தில் அன்னதைச்
    சிந்தினை எமக்கருள் செய்தி என்னவே. …… 351

    வேறு

    (ஈதெலாங் கேட்ட)

    ஈதெலாங் கேட்ட மேலோன் இறைவியை நோக்கி இன்னோர்
    ஓதலா மாற்றம் உன்றன் உளத்தினுக் கியைவ தாமோ
    மாதுநீ புகறி யென்ன வந்துநின் னடைந்தார் வானோர்
    ஆதலால் அவர்க்கு வல்லே அருள்புரிந் திடுதி என்றாள். …… 352

    (வண்டமர் குழலெம்)

    வண்டமர் குழலெம் மன்னை மற்றிவை இசைத்த லோடும்
    அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியங் கடவுள் தன்பால்
    தொண்டுசெய் தொழுகு கின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
    கொண்டிவண் வருதி யால்அக் கொடுவிடந் தன்னை என்றான். …… 353

    (என்றலும் இனிதே)

    என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டுந்
    துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடுவந் துய்ப்ப
    ஒன்றொரு திவலை யேபோல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
    நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான். …… 354

    (காளக வுருவு கொண்)

    காளக வுருவு கொண்ட கடுவினை உண்கோ அன்றேல்
    நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
    வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னான்
    தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார். …… 355

    (ஐயநீ யன்றி யாரிவ்)

    ஐயநீ யன்றி யாரிவ் வனல்விட மாற்று நீரார்
    செய்யகைக் கொண்ட ஆற்றாற் சிறிதெனக் காட்டிற் றன்றே
    வெய்யதோர் இதனை இன்னே விட்டனை என்னிற் பின்னை
    உய்வரோ யாரும் இன்னே ஒருங்குடன் முடிந்தி டாரோ. …… 356

    (முடிவிலா உனக்கே)

    முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு பாக மெல்லாம்
    விடமதே எனினு மாக வேண்டுதும் இதனை வல்லே
    அடியரேம் உய்யு மாற்றால் அருந்தினை அருள்மோ என்னக்
    கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனிநீ ரென்றான். …… 357

    (என்றனன் விரைவில்)

    என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடமுட் கொள்ளச்
    சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
    இன்றெம துயிர்நீ காத்தற் கிங்கிது சான்றாய் அங்கண்
    நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார். …… 358

    (போற்றலும் மிடற்றில்)

    போற்றலும் மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணிய தென்ன
    மாற்றருந் தகைமைத் தான வல்விடம் நிறுவி அன்னார்க்
    கேற்றநல் லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
    தோற்றின ராகும் என்னச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார். …… 359

    (மாமகிழ் சிறந்து நிற்கு)

    மாமகிழ் சிறந்து நிற்கும் மாலயன் முதலோர் தம்மைத்
    தூமதி மிலைச்சுஞ் சென்னித் தொல்லையோன் அருளால் நோக்கிக்
    காமரு கடலை இன்னுங் கடைதிரால் அமுதுண் டாகும்
    போமினீர் இன்னே என்னப் போற்றினர் வணங்கிப் போனார். …… 360

    (போனவர் தொன்மை)

    போனவர் தொன்மை போலப் புணரியைக் கடைந்த காலை
    மேனிகழ் அமிர்த மேனை வியன்பொருள் பலவும் வந்த
    வானவர் தாமே பெற்றார் மற்றவை தம்மை ஆலம்
    ஆனதை அமலன் உண்ட தவருயிர் அளித்த தன்றே. …… 361

    (கடல்விடம் நுகர்ந்த)

    கடல்விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் னழிக்குங் காலை
    உடலுயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய விடம தன்றோ
    சுடலைய தாகும் அந்தச் சுடலைகாண் அனைய சோதி
    நடநவில் கின்ற எல்லை நாடருந் தகைமைத் தஃதே. …… 362

    (அங்கதும் அன்றி)

    அங்கதும் அன்றி எந்தை அகிலமு முடித்த ஞான்றின்
    எங்கும்வெள் ளிடைய தாகி ஈமமாம் அவ்வீ மத்து
    மங்கையுந் தானு மேவு மற்றிது தவறோ அன்னான்
    கங்கையை முடிமேற் கொண்ட காதைமேல் உரைத்தும் அன்றே. …… 363

    (ஈசனை ஒருஞான்)

    ஈசனை ஒருஞான் றம்மை எழில்பெறு கயிலைக் காவில்
    பேசலள் ஆடல் உன்னிப் பின்வரா விழியி ரண்டுந்
    தேசுறு கரத்தாற் பொத்தச் செறிதரு புவனம் யாவும்
    மாசிருள் பரந்த தெல்லா உயிர்களும் வருத்தங் கொள்ள. …… 364

    (திங்களின் கதிரும்)

    திங்களின் கதிரும் ஏனைத் தினகரன் வெயிலுந் தீயின்
    பொங்குசெஞ் சுடரும் ஏனைப் புலவர்தங் கதிரு மற்றும்
    எங்குள ஒளியும் மாய்வுற் றிருள்நிறம் படைத்த மாதோ
    சங்கரன் விழியால் எல்லாச் சோதியுந் தழைத்த நீரால். …… 365

    (தன்னிகர் பிறரி)

    தன்னிகர் பிறரி லாத தற்பரன் விழியி ரண்டுங்
    கன்னிகை கமலக் கையாற் புதைப்பஅக் கணம தொன்றின்
    மன்னுயிர்த் தொகைகட் கெல்லாம் வரம்பிலா வூழி யாக
    அன்னதோர் பான்மை நோக்கி அருளுவான் நினைந்தான் அன்றே. …… 366

    (ஓங்குதன் நுதலின்)

    ஓங்குதன் நுதலின் நாப்பண் ஒருதனி நாட்டம் நல்கி
    ஆங்கது கொண்டு நாதன் அருள்கொடு நோக்கி யாண்டும்
    நீங்கரு நிலைமைத் தாகி நின்றபேர் இருளை மாற்றித்
    தீங்கதிர் முதலா னோர்க்குச் சிறந்தபே ரொளியை ஈந்தான். …… 367

    (மண்ணுறு புவனத்)

    மண்ணுறு புவனத் துள்ள மாயிருள் முழுதும் நீங்க
    உண்ணிகழ் உவகை மேல்கொண் டுயிர்த்தொகை சிறத்த லோடுங்
    கண்ணுதல் இறைவன் செய்கை கவுரிகண் டச்சம் எய்தித்
    துண்ணென விழிகள் மூடுந் துணைக்கரம் வாங்கி னாளால். …… 368

    (சங்கரன் விழிகள்)

    சங்கரன் விழிகள் மூடுந் தனாதுகை திறக்கும் எல்லை
    அங்குலி யவையீ ரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
    மங்கையத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
    கங்கையோர் பத்தா யாண்டுங் கடல்களிற் செறிந்த அன்றே. …… 369

    (ஆயிர நூறு கோடி)

    ஆயிர நூறு கோடி அணிமுகம் படைத்தி யாண்டும்
    பாயிரு நீத்த மாகிப் பரவலும் அதுகண் டஞ்சி
    மாயனும் அயனும் வானோர் மன்னனும் பிறரும் போற்றி
    மீயுயர் கயிலை நண்ணி விமலனை அடைந்து தாழ்ந்தார். …… 370

    (அடிமலர் தொழுதே)

    அடிமலர் தொழுதே எந்தாய் அறிகிலோம் இதுவோர் நீத்தங்
    கடல்களும் அன்றால் யாண்டுங் கல்லென விரைத்தி யாரும்
    முடிவுறு திறத்தால் அண்டம் முழுவதுங் கவர்ந்த முன்னாள்
    விடமெனப் பரித்தே ஈது விமலநீ காத்தி என்றார். …… 371

    (என்றலும் நதிகள்)

    என்றலும் நதிகள் தோற்றம் இயம்பி எவ் வுலகுஞ் சூழ்போய்
    நின்றவந் நீத்தந் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
    ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்ப ருய்ப்ப
    மன்றலங் கமலத் தோனும் மாலுமிந் திரனுஞ் சொல்வார். …… 372

    (மேதினி யண்ட)

    மேதினி யண்ட முற்றும் விழுங்கிய கங்கை உன்றன்
    பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால் உனது சென்னி
    மீதினிற் செறிக்கும் பண்பால் விமலமாம் அதனில் எங்கண்
    மூதெயில் நகரம் வைகச் சிறிதருள் முதல்வ என்றார். …… 373

    (இறையவன் வேணி)

    இறையவன் வேணி யுள்புக் கிருந்ததோர் கங்கை தன்னில்
    சிறுவதை வாங்கி மூவர் செங்கையுஞ் செறிய நல்க
    நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம்
    உறைநகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம். …… 374

    (அந்நதி மூன்று)

    அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை
    பன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
    பின்னரும் இமையா முக்கட் பெருந்தகை முடிமேல் தாங்கி
    இந்நில வரைப்பிற் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான். …… 375

    (நானில மிசையே)

    நானில மிசையே உய்த்த நன்னதி சகரர் எல்லாம்
    வானுயர் கதிபெற் றுய்ய மற்றவர் என்பிற் பாய்ந்து
    மீனெறி தரங்க வேலை மேவிய திஃதொன் றல்லால்
    ஏனைய நதிகள் தொல்லை இடந்தனில் இருந்த அன்றே. …… 376

    (தொல்லையில் இறை)

    தொல்லையில் இறைவி அங்கைத் தோன்றிய கங்கை நீத்தம்
    ஒல்லையில் உலகங் கொள்ளா தடக்கிய உண்மை அன்றோ
    அல்லிருள் அனைய கண்டத் தாதியங் கடவுள் முன்னோர்
    மெல்லியல் தன்னை வேணி மிசைக்கொண்டா னென்னு மாறே. …… 377

    (மாதுமை வசத்த)

    மாதுமை வசத்த னாகி மருவுவான் என்றி அன்னாள்
    நாதன தருளே எல்லாம் நண்ணுவித் தருளும் வண்ணம்
    பேதக மாகித் தானோர் பெண்ணுருக் கொண்டு மேவும்
    ஆதலின் அவள்வந் துற்ற தன்மையை அறைவன் கேட்டி. …… 378

    (தொல்லையோர் கமல)

    தொல்லையோர் கமலத் தண்ணல் தோன்றியே இருந்த காலைப்
    பல்லுயிர்த் தொகுதி தன்னைப் படைப்பது கருதி முன்னர்
    வல்லையிற் சனக னாதி மைந்தர்நால் வரையுநல்க
    நல்லுணர் வெய்தி அன்னோர் நற்றவ ராகி உற்றார். …… 379

    (அன்னதற் பின்னர் வேத)

    அன்னதற் பின்னர் வேதன் அளிப்பதும் அல்கா தாக
    இன்னலுற் றிரக்கம் எய்தி யாதினிச் செய்வ தென்னா
    முன்னுறு குமர ரோடு முகுந்தன திடத்தில் எய்திப்
    பொன்னடி வணக்கஞ் செய்து தன்குறை புகன்று நின்றான். …… 380

    (நின்றிடு கின்ற காலை)

    நின்றிடு கின்ற காலை நேமியங் கரத்து வள்ளல்
    இன்றிது நம்மால் முற்றா தீசனால் அன்றி யென்னா
    நன்றுணர் முனிவ ரோடு நான்முக னோடும் வெள்ளிக்
    குன்றினில் ஏகி நாதன் குரைகழல் பணிந்து சொல்வான். …… 381

    (அண்டர்கள் முதல்வ கேண்)

    அண்டர்கள் முதல்வ கேண்மோ அம்புயன் படைப்பின் உள்ளங்
    கொண்ட னன்அதுமல் காதால் குறையிது நீக்கு கென்ன
    வண்டுள வத்தி னானை மைந்தரை அயனை நோக்கி
    நுண்டுகள் படவே ஈசன் நொய்தென வீறு செய்தான். …… 382

    (ஏகனை ஆகி வைகும்)

    ஏகனை ஆகி வைகும் எந்தைதன் னிடப்பா லான
    வாகுவை நோக்கும் எல்லை மற்றவண் உமையாள் தோன்றப்
    பாகம திருத்தி அன்னாள் பரிவொடு கலந்து மேவிக்
    கோகன தக்கண் ணானைக் குமரரை அயனைத் தந்தான். …… 383

    (தந்துழி ஈசன் தன்)

    தந்துழி ஈசன் தன்னைத் தனயரும் அயனும் மாலும்
    வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி
    நத்தம தருள தாகு நங்கையோ டினிது சேர்ந்தாம்
    முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான். …… 384

    (என்னலும் உவகை)

    என்னலும் உவகை எய்தி யாமினி உய்ந்தோம் என்னா
    அன்னையொ டத்தன் தன்னை அளியொடு வலஞ்செய் தேத்திப்
    பின்னரும் வணக்கஞ் செய்து பெயர்ந்தனர் பின்பு வேதா
    மன்னுயிர்த் தொகுதி யெல்லாம் வரன்முறை படைக்கல் உற்றான். …… 385

    (மாற்றலர் புரமூன்)

    மாற்றலர் புரமூன் றட்ட வானவன் உமையா ளோடும்
    வீற்றிருந் தருள லாலே விழைவுடன் ஆண்பெண் மேவி
    ஆற்றவும் இன்ப மெய்தி ஆவிகள் பெரிது மல்க
    நாற்றிசை முகத்தன் செய்கை நன்றுற நடந்த தன்றே. …… 386

    (தேனமர் கமலத்)

    தேனமர் கமலத் தண்ணல் செய்தொழில் முற்று மாற்றால்
    ஆனதன் னருளை யாங்கோ ராயிழை யாக நல்கி
    மேனிகழ் கருணை தன்னால் மேவுவ துணராய் ஏனை
    வானவர் போலெங் கோனை மதித்தனை மதியி லாதாய். …… 387

    (காமரு வடிவாய்)

    காமரு வடிவாய் எங்குங் காண்பது சத்தி அங்கண்
    மாமய மாகி நின்றான் மன்னிய சிவனாம் ஈது
    தூமறை முதலா வுள்ள தொல்லைநூல் புகலும் அன்னார்
    தாமொரு புதல்வன் தன்னைத் தந்தவா சாற்று கின்றாம். …… 388