12 – ததீசிப் படலம்
அன்ன வேலையில் ஆரிடர் தம்மொடுந்
துன்னி னானொரு தொல்லிறைக் காகவே
முன்ன மாலமர் மூண்டெழ மற்றவன்
தன்னை வென்ற ததீசிஎன் பானரோ. …… 1
ஒரு தொல் இறைக்காக – பழைய குபன் என்னும் ஓரரசனுக்காக, முன்னம் மால்அமர் மூண்டு எழ – முன்னொருகாலத்திலே திருமாலானார் போர் மேற்கொண்ட டெழுந்தபோது, அவன் தன்னை வென்ற அந்தத் திருமாலை வென்ற, ததீசி என்பான் – தசீசி என்று சொல்லப்படும் முனிவர் பிரான், அன்ன வேலையில் – தக்க யாகம் நடந்துகொண்டிருக்குஞ் சமயத்தில், ஆரிடர் தம்ம்மொடும் துன்னினான் – முனிவர் கூட்டத்தோடு அங்கே சென்றருளினார்.
குமன் என்னும் அரசனை ஒருசமயத்தில் ததீசி முனிவர் உதைக்க, அவனுக்காகப் போர் மேற்கொண்டவர் திருமால். [பக்கம் 1/25]
கடிது போந்து கடிமகச் சாலையின்
இடைய தாகி இமையவர் யாவரும்
அடையும் எல்லை அணுகலுங் கண்ணுறீஇக்
கொடிய தக்கன் குறித்துணர் கின்றனன். …… 2
கடிது போந்து – விரைந்து போய், கடி மகச் சாலையின் இடையது ஆகி – காவல்பொருந்திய யாகசாலையின் நடுவட் சென்று, இமையவர் யாவரும் அடையும் எல்லை அணுகலும் – தேவர்கள் எல்லாம் தங்கியிருக்கும் இடத்தை அணுகியபோது, கொடிய தக்கன் கண்ணுறீஇ – கொடியோனாகிய தக்கன் முனிவர்பிரானின் வரவைக் கண்டு, குறித்து உணர்கின்றனன் – அவரைப் பற்றிக் கூர்ந்து சிந்திக்கின்றான். [பக்கம் 1]
ஆகும் ஆகும் அரற்குரித் தல்லன்இப்
பாக மாமகம் பார்க்கும் பொருட்டினால்
ஏகி னானெனக் கஞ்சி எனாநினைந்
தோகை யெய்தி உளங்குளிர்ப் பாகியே. …… 3
ஆகும் ஆகும் – இம் முனிவரின் வருகை தகும் தகும்; அரற்கு உரித்தல்ல்லன் – இவர் சிவன் பக்கத்தைச் சார்ந்தவரல்லர்; இப்பாகம் ஆம் மகம் பார்க்கும் பொருட்டினால் – இந்த அவிப்பாகத்துக்குரிய யாகத்தைத் தரிசிக்கும்ப்பொருட்டு, எனக்கு அஞ்சி ஏகினான் எனா நினைந்து – எனது ஆணைக்கு அடங்கி இங்கே வந்தனர் என்று நினைத்து, ஓகை எய்தி – உவகை அடைந்து, உளம் குளிர்ப்பு ஆகி – மனங் குளிர்ந்து. [பக்கம் 2]
வருக ஈண்டென மற்றவன் தன்னிடை
ஒருபெ ருந்தவி சுய்த்தலும் மாதவர்
இரும ருங்கும் இருந்திட ஆயிடைப்
பொருவின் மாதவப் புங்கவன் மேவியே. …… 4
ஈண்டு வருக என – இங்கே வருக என்று உபசார மொழி கூறி, அவன் தன்னிடை – அம் முனிவர் பிரான் எழுந்தருளியிருக்கு மிடத்துக்கு, ஒரு பெருந்தவிசு உய்த்தலும் – ஒரு பெரிய ஆசனத்தைக் கொண்டு சென்று இடுதலும், மாதவர் இரு மருங்கும் இருந்திட – பெரிய தவத்தினையுடைய முனிவர்கள் இருபக்கத்திலும் இருக்க, பொருவில் மாதவப் புங்கவன் – ஒப்பில்லாத பெரிய தவத்தினையுடைய உயர்ந்தோரான தசீசி முனிவர், ஆயிடை மேவி – அந்த ஆசனத்தில் எழுந்தருளியிருந்தது.[பக்கம் 2]
ஆக்கந் தீரும் அயன்புதல் வன்தனை
நோக்கி எம்மை நொடித்ததென் நீயிவண்
ஊக்கி யுற்றதென் ஒல்லையில் யாவையும்
நீக்க மின்றி நிகழ்த்துதி யென்னவே. …… 5
ஆக்கம் தீரும் அயன் புதல்வன் தனை நோக்கி – ஐசுவரியத்தை இழக்கின்ற பிரமபுத்திரனான தக்கனை நோக்கி, எம்மை நீ இவன் நொடித்தது என் – எம்மை இங்கே நீ அழைத்த காரணம் என்னை; ஊக்கி உற்றது என் – இங்கே நீ முயன்று தொடங்கிய கருமம் யாது; இல்லையில் யாவையும் நீக்கம் இன்றி நிகழ்த்துதி என்ன – விரைவாக அனைத்தையும் ஒன்றும் விடாமல் உரைப்பாயாக என்று கூறியருள. [பக்கம் 2]
தக்கன் ஆண்டுத் ததீசியை நோக்கியே
நக்க னென்பவன் நான்பெறுங் கன்னியை
மிக்க காதலின் வேட்டொளித் தோர்பகல்
உக்க மேலுய்த் துயர்வரை ஏகினான். …… 6
ஆண்டுத் தக்கன தசீசியை நோக்கி – அவ்விடத்திலே தக்கன் தசீசி முனிவரை நோக்கி, நக்கன் என்பவன் – அந்த நிர்வாணியான சிவன், நான் பெறும் கன்னியை மிக்க காதலின் வேட்டு – என் புதல்வியை காதலோடு மணந்து, ஒளித்து – இடையில் மறைந்து போய், ஓர் பகல் உக்க மேல் உய்த்து – மற்றொரு தினம் மருங்கில் வைத்துக்கொண்டு, உயர்வரை ஏகினான் – உயர்ந்த கைலாசமலைக்குச் சென்றுவிட்டான்.
உக்கம், இடபமுமாம் . [பக்கம் 3]
போய பின்னைப் புதல்விக்குத் தன்பெரு
மாயை செய்தனன் மற்றவர் தங்களை
ஆயு மாறவ் வகன்கிரி எய்தினேன்
ஏய தன்மை இருவருந் தேர்ந்தரோ. …… 7
போய பின்னை – அவ்வாறு சென்றபின்பு, புதல்விக்குத் தன் பெரு மாயை செய்தனன் – என் புதல்விக்குத் தனது பெரிய மாயையைச் செய்து வயப்படுத்திக்கொண்டான்; அவர் தங்களை ஆயுமாறு – அவர்களுடைய நிலைமையை ஆராய்ந்தறியும்பொருட்டு, அ அகன் கிரி எய்தினேன் – அந்த அகன்ற கைலாயகிரிக்கு நான் சென்றேன்; இருவரும் ஏய தன்மை தேர்ந்து – இருவரும் நான் அங்கே சென்ற தன்மையை அறிந்து. [பக்கம் 3]
அடுத்த பூதரை ஆங்கவர் கூவியே
தடுத்தி டுங்களத் தக்கனை நம்முனம்
விடுத்தி ரல்லிர் விலக்குதி ராலென
எடுத்தி யம்பினர் ஏயினர் போலுமால். …… 8
அடுத்த பூதரை ஆங்கு அவர் கூவி – தம்மை அடுத்து நின்ற பூதர்களை அவ்விடத்தில் அவ்விருவரும் அழைத்து, அத் தக்கனைத் தடுத்திடுங்கள் – அத் தக்கனை இங்கே வரவொட்டாது தடுங்கள்; நம் முனம் விடுத்திர் அல்லிர் – எம்மெதிரில் விடாதீர்; விலக்குதிர் – விலக்குங்கள்; என எடுத்து இயம்பினர் – என்று எடுத்துச் சொல்லி, ஏயினர் போலும் – என்மேல் ஏவிவிட்டார்கள் போலும் . [பக்கம் 3]
இற்று ணர்ந்திலன் ஏகினன் பூதர்கள்
நிற்றி நீயென்று நிந்தனை எண்ணில
சொற்ற லோடுந் துணையதில் வெள்ளியம்
பொற்றை நீங்கிப் புரம்புகுந் தேனியான். …… 9
இற்று உணர்ந்திலன் ஏகினன் – இத்தன்மைத்தாகிய நிலையை அறியேன் அங்குச் சென்றேன்; பூதர்கள் நீ நிற்றி என்று – பூதர்கள் இங்கே நீ நில் என்று என்னைத் தடுத்து, எண்னில் – நிந்தனை சொற்றலோடும் துணை அதில் – எண்ணிலாத் நிந்தனைகளையுஞ் சொன்னார்கள் சொன்ன அந்தச் சமயத்தில், வெள்ளி அம் பொற்கை நீங்கி – வெள்ளியங்கிரியை விட்டு நீங்கி, யான் புரம் புகுந்தேன் – யான் எனது நகரஞ் சென்று சேர்ந்தேன்.[ பக்கம் 3,4]
தங்கண் மாநகர் சார்ந்தனன் நீங்குழி
எங்கண் மாதும் எனைவந்து கண்டிலள்
மங்கை யென்செய்வள் மற்றவன் மாயையால்
துங்க மேன்மை துறந்தனள் போயினாள். …… 10
தங்கள் மாநகர் சார்ந்தனன் நீங்குழி – தங்களுடைய பெரிய நகரத்தை அடைந்து உட்புக முடியாது நீங்குஞ் சமயத்திலாவது, எங்கள் மாதும் எனை வந்து கண்டிலள் – எங்கள் புதல்விதானும் என்னை வந்து கண்டாளில்லை; மங்கை என் செய்வள் – அவள் என்ன செய்வாள்; அவன் மாயையால் – அந்தச் சிவனுடைய மயக்கத்தினால், துக்க மேன்மை – பிரசாபதியின் புத்திரி என்கின்ற உயர்ந்த மேன்மையும், துறந்தனள் போயினாள் – இழந்துவிட்டாள்.[பக்கம் 4]
அந்த வேலை அரும்பெரும் வேள்வியொன்
றெந்தை செய்துழி யான்சென் றரற்குமுன்
தந்த பாகந் தடுத்தனன் அவ்வழி
நந்தி சாபம் நவின்றனன் போயினான். …… 11
அந்த வேலை – அவ்வாறாகிய சமயத்தில், அரும் பெரும் வேள்வி ஒன்று எந்தை செய்துழி – அரிய பெரிய யாகம் ஒன்றினை என் தந்தையாகிய பிரமதேவர் செய்தபோது, யான் சென்று – யான் அங்கு சென்று, அரற்கு முன் தந்த பாகம் தடுத்தனன் – சிவனுக்கு பண்தொட்டுக் கொடுத்துவந்த அவிப் பாகத்தைக் கொடுக்கவொட்டாது தடுத்தேன்; அவ்வழி நந்தி சாபம் நவின்றனன் போயினான் – அப்பொழுது அதனைப் பொறாத நந்தி சாபம் இட்டுச் சென்றான். [பக்கம் 4]
வேறு
எறுழ்படு தண்ணுமை இயம்பு கையுடைச்
சிறுதொழி லவன்மொழி தீச்சொற் கஞ்சியே
முறைபடு வேள்வியை முற்றச் செய்திலன்
குறையிடை நிறுவினன் குரவ னாகியோன். …… 12
எறுழ்படு தண்ணுமை இயம்பும் கையுடை – வலியற்ற மிருதங்கத்தை ஒலிக்கின்ற கையையுடைய, சிறுதொழிலவன் மொழி – அற்ப தொழிலைச் செய்யும் நந்தி சொன்ன, தீச் சொற்கு அஞ்சி – தீய சாபமொழிக்குப் பயந்து, குரவனாகியோன் – என் தந்தையாகிய பிரமதேவன் முறைபடு வேள்வியை – வேத முறையோடு கூடிய யாகத்தை, முற்றச் செய்திலன் – முடியச் செய்தானல்லன்; குறையிடை நிறுவினன் – குறையில் நிறுத்தினான்.
எறுழ்படு – வலிமை பொருந்திய என்றுமாம். [பக்கம் 5]
நஞ்சமர் களன்அருள் நந்தி கூறிய
வெஞ்சொலும் என்பெரு விரத முந்தெரீஇ
அஞ்சினர் இன்றுகா றாரும் வேள்வியை
நெஞ்சினும் உன்னலர் நிகழ்த்தும் வேட்கையால். …… 13
நஞ்சு அமர் களன் அருள் நந்தி கூறிய வெம் சொல்லும் – நஞ்சுபொருந்திய கண்டத்தையுடைய சிவபெருமானது அருளைப் பெற்ற நந்தி கூறிய கொடிய சாபத்தையும், என் பெரு விரதமும் தெரீஇ – நான் மேற்கொண்ட விரதத்தையும் அறிந்து, இன்று காறு – இற்றைநாள் வரையும், ஆரும் வேள்வியை அஞ்சினர் – யாவரும் வேள்வியைச் செய்ய அஞ்சினார்கள்; ஆல் – ஆகையால், நிகழ்த்தும் வேட்கை நெஞ்சினும் உன்னலர் – யாகஞ் செய்யும் விருப்பத்தை மனத்திலுங் கொண்டிலர். [பக்கம் 5]
ஆனதொர் செயலுணர்ந் தையம் ஏற்றிடும்
வானவன் தனக்கவி மாற்றும் பான்மையான்
நானொரு வேள்வியை நடாத்து கின்றனன்
ஏனைய தோர்பயன் யாதும் வேண்டலன். …… 14
ஆனதொர் செயல் உணர்ந்து – அத்தகையதொரு நிலை இருந்தபடியை யான் அறிந்து – ஐயம் ஏற்றிடும் வானவன் தனக்கு அவி மாற்றும் பான்மையால் – பிச்சையேற்று வாழுஞ் சிவனுக்கு அவியைக் கொடாது மாற்றி மற்றொருவருக்குக் கொடுப்பதொரு முறையில், நான் ஒரு வேள்வியை நடாத்துகின்றனன் – நானே முன்மாதிரியாக ஒரு வேள்வியைத் தொடங்கி நடத்துகின்றேன்; ஏனையது ஓர் பயன் யாதும் வேண்டலன் – மற்றொரு பிரயோசனம் எதனையும் விரும்பினேன் அல்லேன். [பக்கம் 5]
அப்பெரு மகந்தனக் கமரர் மாதவர்
எப்பரி சனரும்வந் தீண்டு தொக்கனர்
ஒப்பருந் தவத்தினீர் உமக்கும் இத்திறஞ்
செப்பினன் விடுத்தனன் செயலி தென்னவே. …… 15
அப்பெரு மகம் தனக்கு – சுட்டிக்கூறும் பெருமை படைத்த இந்த யாகத்துக்கு, அமரர் – தேவர்களும், மாதவர் – பெரிய தவத்தர்களான முனிவர்களும், எப் பரிசனரும் – மற்றை யாவர்களும், வந்து ஈண்டு தொக்கினர் – வந்து இங்கு குழுமினார்கள்; ஒப்பரும் தவத்தினீர் – ஒப்பற்ற தவத்தினையுடைய முனி சிரேட்டரே, உமக்கு இத்திறம் விடுத்தனன் செப்பினன் – உமக்கு இந்த நிகழ்ச்சியைத் தூது விடுத்துத் தெரிவித்தேன்; இது செயல் – இது யான் எண்ணித் துணிந்த கருமம்; என்ன – என்றிவ்வாறு தக்கன் கூறி [பக்கம் 6]
வேறு
தண்ணளி புரித தீசி தக்கன துரையைக் கேளாப்
புண்ணியம் பயனின் றம்மா பொருளினிற் பவமே யென்னா
எண்ணினன் வினைக ளீட்டு இழிதகன் இயற்கை போலாம்
அண்ணல்தன் செயலும் என்னா அணியெயி றிலங்க நக்கான். …… 16
தண்ணளி புரி தசீசி – எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகுந் தசீசி முனிவர், தக்கனது உரையைக் கேளா – தக்கன் வார்த்தைகளைக் கேட்டு, பொருளினிற் புண்ணியம் பயனின்று – வெறும் பொருட்செல்வத்தாற் செய்யும் புண்ணியம் பயனற்றதாகும்; பொருளினிற் பவமே – அதனாற் பாவமே உண்டாகும்; என்ன எண்ணினன் – என்று சிந்தித்து, வினைகள் ஈட்டும் – தீவினைகளை ஈட்டுகின்ற, இழிதகன் இயற்கை போலாம் – இந்தக் கீழ்மகனின் இயற்கையாகிய செயல்கள் போலாகுமா, அண்ணல் தன் செயலும் என்ன – பெருமையிற் சிறந்தோராகிய சிவபெருமானுடைய அருட் செயல்களும் என்று, எயிறு அணி இலங்க நக்கான் – பல்வரிசை வெளிப்பட்டு விளங்கிச் சிரித்தார் [பக்கம் 6]
நக்கதோர் வேலை தன்னில் நலத்தகும் ஊழிக் கான்மேன்
மிக்கெழும் வடவை என்ன வெய்துயிர்த் துரப்பிச் சீறி
முக்கணன் அடியான் போலும் முறுவலித் திகழ்ந்தாய் என்னத்
தக்கனீ துரைத்த லோடுந் ததீசிமா முனிவன் சொல்வான். …… 17
நக்கது ஓர் வேலை தன்னில் – தசீசி முனிவர் சிரித்த சமயத்தில், நலம் தகும் ஊழிக் கால் மேல் – வேகமாகிய நலம் மிக்க ஊழிக் காற்றினாலே, மிக்கு எழும் வடவை என்ன – கிளர்ந்தெழுகின்ற வடவாமுகாக்கினி போல, வெய்து உயிர்த்து உரப்பிச் சீறி – வெம்மையையுடைத்தாய உயிர்த்து உறுக்கிக் கோபித்து, முக்கணன் அடியான் போலும் – நீ முக்கண்ணனான சிவனது அடிமை போலும், முறுவலித்து இகழ்ந்தாய் – சிரித்து என்னை இழழ்ந்தாய்; என்ன – என்று, தக்கன் ஈது உரைத்தலோடும் – தக்கன் இதனைச் சொல்ல, தசீசி மாமுனிவன் சொல்வான் – தசீசி மகாமுனிவர் கூரியருளுவார். [பக்கம் 6]
மலரயன் முதலே யாக வரம்பிலா உயிரை முன்னந்
தலையளித் துதவு கின்ற தாதையாய் அளித்து மாற்றி
உலகெலா மாகி ஒன்றாய் உயிர்க்குயி ராகி மேலாய்
இலகிய பரனை நீத்தோ யாகம்ஒன் றியற்ற நின்றாய். …… 18
மலரவன் முதலேயாக வரம்பிலா உயிரை – தாமரை மலரிலிருக்கும் பிரமா முதலாகவுள்ள எண்ணிலாத உயிர்களை, முன்னம் – சிருட்டியாரம்ப காலத்தில், தலையளித்து – கருணை செய்து, உதவுகின்ற தாதையாய் – தந்தருளுகின்ற பிதாவாகியும், அளித்து மாற்றி – அவ்வுயிர்களைக் காத்தும் ஒடுக்கியும், உலகெலா மாகி ஒன்றாய் – எல்லா உலகமுந் தாமேயாகிக் கலந்திருத்தலால் ஒன்றாகியும், மேலாய் – உலகங்களுக்கு அப்பாலாய் வேறாகியும், உயிர்க்கு உயிர் ஆகி – உயிருக்குயிராய் உடனாகியும், இலகிய பரனை நீத்தோ – உபகரித்து விளங்குகின்ற பரம்பொருளாகிய சிவபெருமானை விலக்கியோ, யாகம் ஒன்று இயற்ற நின்றாய் – யாகமொன்றனைச் செய்யத் துணிந்தனை.
ஏகமாகிய பரம்பொருள் தானே, உயிர்களோ டத்துவிதமாய் அபேதமாயும் பேதமாயும் பேதாபேதமாயும் உபகரிக்குமாறு பேசியவாறாம் [பக்கம் 7]
புங்கவர் எவர்க்கும் நல்கும் புவிபுகழ் அவிகொள் வானும்
அங்கியின் முதலும் வேள்விக் கதிபனும் அளிக்கின் றானுஞ்
சங்கரன் தானே வேதஞ் சாற்றுமால் மகத்துக் காதி
இங்கொரு தேவுண் டென்னின் எழுகென உரைத்தி மாதோ. …… 19
புங்கவர் எவர்க்கும் நல்கும் புவி புகழ் அவி கொள்வானும் – தேவர்கள் யாவருக்குங் கொடுக்கின்ற உலகம் புகழும் அவிப்பாகங்களை ஏற்றுக்கொள்ளும் அக்கினியாயிருப்பவனும், அங்கியன் முதலும் – அவ்வக்கினிக்கு முதல்வராயிருப்பவனும், வேள்விக்கு அதிபனும் – யாகாதிபதியும், அளிக்கின்றானும் – யாக ரஷ்கரும், சங்கரன் தானே – சிவபெருமானேயாம்; வேதம் சாற்றும் – இவ்வுண்மையை வேதங்கள் எடுத்துச் சொல்லும்; மகத்துக்கு ஆதி இங்கு ஒரு தேவு உண்டு என்னின் – யாகாதிபதியாய் இங்கே மற்றொரு தேவன் உளனேயாயின், எழுக என உரைத்தி – அத்தேவன் இச் சபையிலே தலைநிமிர்ந்தெழுக என்று சொல்லு பார்ப்போம்.
அத்தேவனைப் பார்க்க விரும்புகின்றோம் என்றவாறு. அவ்வவர்க்குரிய அவியை அவரவர்பாற் சேர்ப்பிப்போன் அக்கினி பகவான்; ஆதலிலாலே தேவர்கள் நா என்று புகழப்படுபவன் [பக்கம் 7]
மாலயன் முதலோர் யாரும் வரம்பிலித் திருவை எய்த
மேலைநாள் அளித்தோன் தானும் விமலனும் இனையர்க் கெல்லாம்
மூலமுந் தனக்கு வேறோர் முதலிலா தவனும் எங்கள்
ஆலமர் கடவுள் அன்றி அமரரில் யாவர் அம்மா. …… 20
மால் அயன் முதலோர் யாரும் – விஷ்ணு பிரமா முதலிய யாவரும், வரம்பு இல் இத் திருவை எய்த – அளவில்லாத இச் செல்வங்களையெல்லாம் எய்தும்பொருட்டு, மேலைநாள் அளித்தோன் தானும் – முன்னாளிற் கொடுத்தருளியவரும், விமலனும் – மலமில்லாதவரும், இனையர்க்கு எல்லாம் மூலமும் – இந்த விஷ்ணு முதலியவர்களுக்கெல்லாம் உபாதானமாய் இருப்பவரும், தனக்கு வேறு ஓர் முதல் இலாதவனும் – தமக்கு மற்றோர் உபாதானம் இல்லாதவரும், எங்கள் ஆல் அமர் கடவுள் அன்றி – கல்லால் விருட்சத்தின் கீழ்த் தஷ்ணாமூர்த்தியா யெழுந்தருளிய எங்கள் சிவபெருமானே யன்றி, அமரரில் யாவர் – தேவர்களூக்குள் அத்தகையார் யாவர் உளர்.
இலர் என்றவாறு . [பக்கம் 8]
தேவதே வன்மா தேவன் சிறப்புடை ஈசன் எங்கோன்
மூவரின் முதல்வன் ஏகன் முடிவிற்கு முடிவாய் நின்றோன்
ஆவியுள் ஆவி யானோன் அந்தண னாதி என்றே
ஏவரை யிசைத்த அம்மா எல்லையில் மறைக ளெல்லாம். …… 21
தேவதேவன் – தேவாதி தேவன், மாதேவன் – மாதேவன், சிறப்புடை ஈசன் – மகேசன், எங்கோன் – நமது நாயகன், மூவரின் முதல்வன் – மும்மூர்த்திகளுக்கு முதல்வன், ஏகன் – ஒருவன் என்னும் ஒருவன், முடிவிற்கு முடிவாய் நின்றோன் – தனக்குப் பின் தோன்றிய யாவும் முடிந்துபோகத் தான் முடியாதிருப்பவன், ஆவியுள் ஆவி ஆனோன் – உயிர்க்குயிராய் இருப்பவன், அந்தணன் – பிராமணன, ஆதி – தொடக்கங்களுக் கெல்லாம் தொடக்கமாயிருப்பவன், என்று – என்றிவ்வாறு, எல்லையில் மறைகள் எல்லாம் ஏவரை இசைத்த – எல்லையில்லாத வேதங்களெல்லாம் யாவரை எடுத்துப் புகழ்ந்தன.
சிவபரம்பொருளையே அன்றோ இவ்வாறு மறைகள் எடுத்துப் புகழ்ந்தன என்றவாறு. [பக்கம் 8]
விதிமுத லாகி உள்ளோர் வியனுயிர்த் தொகையாம் ஈசன்
பதியவன் பணிய தன்றே பரித்தனர் இனையர் எல்லாம்
இதுவுமச் சுருதி வாய்மை இவையெலாம் அயர்த்து வாளா
மதிமயங் கினையால் பேரா மாயையூ டழுந்து கின்றாய். …… 22
விதி முதலாகி உள்ளோர் வியன் உயிர்த்தொகையாம் – பிரமா முதலாகவுள்ள அனைவரும் பெரிய பசுவர்க்கங்கள்; ஈசன் பதி – சிவபெருமான் ஒருவரே பதி; இனையர் எல்லாம் – இத் தேவர்களெல்லாம், அவன் பணியது அன்றோ பரித்தனர் – அந்தச் சிவபெருமான் இட்ட கட்டளையை யன்றோ தலைமேற் கொண்டார்கள்; இதுவும் அ சுருதி வாய்மை இதுவும் அந்த வேத உண்மையாம்; இவை எலாம் அயர்த்து – இவற்றையெல்லாம் நீ உணர்ந்திருந்தும் இப்பொழுது மறந்து, வாளா மதி மயங்கினை – வளா புத்தி மயங்கி, பேராமாயை ஊடு அழுந்துகின்றாய் – நீங்காத மாயையில் அழுந்துகின்றாய்.[பக்கம் 8]
அந்தணர்க் காதி ஈசன் ஏனையோர்க் கரியே வேதா
இந்திரன் என்று வேதம் இயம்பிய மறையோர் தங்கண்
முந்தையின் முதலை நீத்து முறையகன் றொழுகல் பெற்ற
தந்தையை விலக்கி வேறு தேடுவான் தன்மை யன்றே. …… 23
அந்தணர்க்கு ஆதி ஈசன் – பிராமணர்களுக்கு ஆதி தெய்வமுமாயிருப்பவர் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான்; ஏனையோர்க்கு ஆதி – ஏனைய மூன்று வருணத்தாருக்கும் அதி தெய்வம், அரி வேதா இந்திரன் என்று – முறையே விஷ்ணுவும் பிரமாவும் இந்திரனும் என்று, வேதம் இயம்பிய – வேதங்கள் உரைத்தன; மறையோர் தங்கள் முந்தை இன் முதலை நீத்து – பிராமணர்கள் தமது பழைமையாகிய இனிய முழுமுதலாகிய சிவபெருமானை விடுத்து, முறை அகன்று ஒழுகல் – வேதநெறி கடந்து ஒழுகுதல், பெற்ற தந்தையை விலக்கி – தன்னைப் பெற்றா பிதாவைத் தன் பிதா அல்லன் என விடுத்து, வேறு தேடுவான் தன்மை அன்றே – மற்றொருவனைத் தன் பிதாவென்று தேடிக் கொள்ளுவான் தன்மையேயாம்.
பிராமணனாகிய நீ மற்றொருவரைத் தெய்வம் என்று கொள்ளற்பாலை இல்லை என்றவாறு. எல்லார்க்குந் தான் ஈசன் ஆயினும், ஏனையோர் தத்தம் அதிதெய்வம் வயிலாக யாக கருமத்தில் அவ்வீசனைப் பிரீதி செய்யற்பாலர் போலும். ஆதி பின்னுங் கூட்டப்பட்டது. [பக்கம் 9]
ஆதலின் எவர்க்கும் மேலாம் ஆதியை இகழா நிற்றல்
பேதைமை யன்றி யீதோர் பெருமித மன்றால் ஆற்ற
நோதக உன்னி யாரே நோற்பவர் அனைய நீயே
வேதம தொழுக்கம் நீத்திவ் வேள்வியைப் புரிய நின்றாய். …… 24
ஆதலின் – ஆகையினாலே, எவர்க்கும் மேலாம் ஆதியை இகழா நிற்றல் பேதமை – யாவருக்கும் மேலான சிவபெருமானை இகழுதல் அறியாமையேயாம்; அன்றி – அல்லாமல், ஈது ஒர் பெருமிதம் அன்று – அது ஒரு மேம்பாடு ஆகாது; ஆற்ற நோதகவு உன்னி நோற்பவர் – யாரே – பெரிதுந் துன்பத்தை அநுபவிக்க விரும்பித் தவஞ் செய்வாரும் உலகத்தில் உளரோ; நீயே அனையை – நீ யொருவனே அத்தகையோனாய் இருக்கின்றாய்; வேதம் ஒழுக்கம் நீத்து – வேத நெறி கைவிட்டு, இவ் வேள்வியை புரிய நின்றாய் – இந்த யாகத்தைச் செய்தத் துணிந்தாய். [பக்கம் 9]
விலக்கினை மறையின் வாய்மை வேள்விசெய் யினுமுற் றாது
கலக்குமேல் அமல னாணை காண்டியால் அவனுக் கஞ்சா
வலத்தினர் யாவ ருண்டேல் மாய்வரே மறையும் எம்முன்
இலைப்பொலி சூலம் ஏந்தும் ஏகனென் றேத்திற் றன்றே. …… 25
மறையின் வாய்கை விலக்கினை – வேதாசாரமான உணமையை நீ கைவிட்டாய்; செய்யினும் – இத்தன்மையையாகிய நீ பெரிதும் முயன்று வேள்வியைச் செய்தாலும், வேள்வி முற்றாது – அது நிறைவேறாது; மேல் அமலன் ஆணை கலக்கும் – இனிமேல் சிவபெருமானுடைய ஆக்ஞை உனது வேள்வியை முற்றாது கலக்கிவிடும்; காண்டி – அதனை நீ காண்பாயாக; அவனுக்கு அஞ்சாவலத்தினர் யாவர் – அச் சிவபெருமானுக்கு அஞ்ஞாத வன்மையுடையோர் யார் ஒருவர் உளர்; உண்டேல் மாய்வர் – உளராயின் அவர் இறந்துபடுவர்;மறையும் – வேதங்களும், என் முன் – எமது பரமபதி, இலைப் பொலி சூலம் ஏந்தும் ஏகன் என்று ஏத்திற்று – இலைவடிவு பொருந்திய சூலபாணியாகிய ஏகனே என்று அப்பெருமானைத் துதிசெய்தது. [பக்கம் 10]
ஆதியு முடிவும் இல்லா அமலனுக் கவியை நல்கி
வேதக முறைவ ழாது வேள்விஓம் புவது நாடாய்
தீதுநின் எண்ணம் என்னச் சிவன்தனக் கருள்பா கத்தை
மாதவன் தனக்கு நல்கி மாமகம் புரிவன் என்றான். …… 26
வேதக – தேத நெறியை வேறுபடுத்தும் வேத விரோதியே, ஆதியும் முடிவும் இல்லா அமலனுக்கு அவியை நல்கி – ஆதியும் அந்தமுமில்லாத சிவபெருமானுக்கு அவியை வழங்கி, முறை வாழாது – வேதநெறி பிறழாமல், வேள்வி ஓம்புவது நாடாய் – யாகஞ் செய்வதை நாடினாயில்லை; நின் எண்ணம் தீது – தக்கனே உன் எண்ணம் தீயது; என்ன – என்றிவ்வாறு தசீசி மகாமுனிவர் கூறியருள, சிவன் தனக்கு அருள் பாகத்தை மாதவன் தனக்கு நல்கி – சிவனுக்குக் கொடுக்கும் அவிப்பாகத்தை விட்டுணுவுக்குக் கொடுத்து, மாமகம் புரிவன் என்றான் – பெருமை பொருந்திய யாகத்தைச் செய்வேன் என்றான்.
வேதகம் வேறுபடுத்துவது. [பக்கம் 10]
அவ்வுரை கொடியோன் கூற அருந்தவ முனிவன் கேளா
எவ்வமீ துரைத்தாய் மேலாய் யாவரும் புகழ நின்ற
செவ்வியர் தமையி ழித்துச் சிறியரை உயர்ச்சி செய்தல்
உய்வகை அன்றா னும்மோ ருயிர்க்கெலா முடிவீ தென்றான். …… 27
அவ் வுரை கொடியோன் கூற – அந்த வார்த்தையைக் கொடியோனான தக்கன் சொல்ல, அரும் தவ முனிவன் கேளா – அரிய தவத்தினையுடைய தசீசி முனிவர் கேட்டு, எவ்வம் ஈது உரைத்தாய் – குற்றம் ஆகிய இம் மொழியைக் கூறினாய்; யாவரும் மேலா புகழ் நின்ற – யாவரும் மேலாய் புகழுதற்குப் பாத்திரமான, செவ்வியர் தமை இழித்து – மேலோரை இழிது செய்து, சிறியரை உயர்ச்சி செய்தல் – சிறியோரை உயர்த்துதல், உய்வகை அன்று – உய்யுந்திறம் ஆகாது; ஈது நும்மோர் உயிர்க்கு எலாம் முடிவு என்றான் – இச் செயல் நும்மவர்களுடைய உயிர்கெல்லாம் முடிவுக்கு ஏதுவாகும் என்று கூறியருளினார். [பக்கம் 10]
ஊறுசேர் தக்கன் சொல்வான் உனதுருத் திரனை ஒப்பார்
ஆறின்மே லைந்த வான உருத்திரர் அமர்வார் ஆசை
ஈறுசேர் தருமீ சானர் இருந்தனர் அவர்க்கே முன்னர்
வீறுசேர் அவியை நல்கி வேள்வியை முடிப்ப னென்றான். …… 28
ஊறு சேர் தக்கன் சொல்வான் – குற்றத்தோடு ஒன்றுபட்ட தக்கன் சொல்லுவான், உனது உருத்திரனை ஒப்பார் – உமது சிவனாகிய உருத்திரரை ஒப்பவர், அ ஆறின் மேல் ஐந்து ஆன உருத்திரர் அமர்வார் – அந்தப் பதிரொருவராகிய உருத்திரர் உளர்; ஈறு சேர்தரும் ஆசை ஈசானர் இருந்தனர் – திக்கின் முடிவாய்ப் பொருந்திய வடகீழ்த்திசையில் ஈசான உருத்திரர் உளர்; அவர்க்கே முன்னர் வீறுசேர் அவியை நல்கி – அந்த உருத்திரர்களுக்கே முதற்கண் உயர்ச்சிபொருந்திய அவியைக் கொடுத்து, வேள்வியை முடிப்பன் என்றான் – யாகத்தை முடிப்பேன் என்றான். [பக்கம் 11]
என்னலும் முனிவன் சொல்வான் ஈறுசெய் தகில மெல்லாந்
தன்னிடை யொடுக்கி மீட்டுந் தாதையாய் நல்கி யாரு
முன்னருந் திறத்தில் வைகும் உருத்திர மூர்த்திக் கொப்போ
அன்னவன் வடிவும் பேரும் அவனருள் அதனாற் பெற்றோர். …… 29
என்னலும் முனிவன் சொல்வான் – என்று தக்கன் கூறத் ததீசிமுனிவர் கூறியருளுவார், அகிலம் எல்லாம் ஈறு செய்து – உலகம் முழுவதையுஞ் சங்கரித்து, தன்னிடை ஒடுக்கி – அவற்றைத் தம்பால் ஒடுக்கி, மீட்டும் நல்கி – ஈறு செய்யுமுன் படைத்தவாறு மீட்டும் படைத்து, தாதையாய் – இவ்வாற்றால் உலகத்துக்குக் கருத்தாவாய், யாரும் உன் அரும் திறத்தில் வைகும் – எத்தகையோரும் பசு பாச ஞானங்களாற் சிந்தித்தற்கரிய இயல்பினை யுடையராயிருக்கும், உருத்திர மூர்த்திக்கு – முழுமுதலாகிய மகா உருத்திரமூர்த்திக்கு, அன்னவன் வடிவம் – அந்த உருத்திர மூர்த்தியினுடைய சாரூபமும், பேரும் – அவனுடைய திருநாமமும், அவன் அருளாற் பெற்றார் – அந்த உருத்திர மூத்தியினுடைய அருளாற் பெற்றோரான இந்த் ஈசான உருத்திரரும் ஏகாதச உருத்திரரும், ஒப்போ – ஒப்பாவார்தாமோ.
அது, பகுப்பொருள் விகுதி, அன், சாரியை [பக்கம் 11]
உருத்திர மூர்த்தி என்போன் உயர்பரம் பொருளா யுள்ளே
நிருத்தம தியற்று கின்ற நித்தனாம் அவன்தன் பொற்றாள்
கருத்திடை நினைந்தோர் அன்னான் காயமுந் திருப்பேர் தானும்
பரிப்பரால் அனையர் எல்லை பகர்ந்திடின் உலப்பின் றாமால். …… 30
உருத்திர மூர்த்தி என்போன் – மாக உருத்திர மூர்த்தி என்று வேதங்களாற் புகழப்படுபவர், உயர் பரம்பொருளாய் – மேலாகிய முழுமுதற் பொருளாய், உள்ளே நிருத்தம் இயற்றுகின்ற நித்தனாம் – உயிரினுள்ளே அந்தரியாமியாய் இடையறாது நட்டம் பயில்கின்ற நித்தியர் ஆவர்; அவன் தன் பொன் தாள் கருத்திடை நினைந்தோர் – அவருடைய திருவடிகளைச் சித்தத்திற் பதித்தவர்கள், அன்னான் காயமும் – அவருடைய சாரூபமும், திருப்பேர்தானும் – அவருடைய திருநாமமும், பரிபர் – பொருத்துவர்கள்; அனையர் எல்லை – அத்தகையார் தொகையை, பகிர்ந்திடின் உலப்பு இன்றாம் – உரைப்ப தென்றால் முடிபு போகாதாம்.
உருத்திரர் ஈசானரும் ஏகாதசரும் மாத்திரர் அல்லர் என்றவாறு. ஏகாதசம் பதினொன்று. அனையராவார் காயமும் பெயரும் பரித்தோர் [பக்கம் 12]
ஆதிதன் நாமம் பெற்றோர் அவனியல் அடையார் கொண்ட
ஏதமில் வடிவும் அற்றே என்னினும் இறைவ ரென்றே
பூதல முழுதும் விண்ணும் போற்றிட இருப்பர் இந்த
வேதனும் புகழு நீரான் மெய்ந்நெறித் தலைமை சார்வார். …… 31
ஆதி தன் நாமம் பெற்றோர் அவன் இயல் அடையார் – ஆதியாகிய உருத்திர மூர்த்தியின் திருநாமத்தைப் பெற்ற உருத்திரர்கள் அப் பதியினிலட்சணத்தைப் பொருந்தார்கள்; கொண்ட ஏதம் இல் வடிவும் அற்றே – அவர்கள் கொண்ட சாரூபமும் பதியினிலட்சணத்தைப் பொருந்தாத அத் தன்மையை யுடையதாம்; என்னினும் – இங்ஙனமாயபோதும், பூதலம் முழுதும் விண்ணும் இறைவர் என்றே போற்றிட இருப்பர் – பூவுலகத்தாரும் வானுலகத்தாரும் உருவமும் நாமமும்பற்றி இறைவர் என்றே உபசாரமுகத்தால் துதிப்ப இருபர்; இந்த வேதனும் புகழும் நீரால் – இப் பிரமாவும் புகழுதற்குரிய நீர்மையினால், மெய்நெறித் தலைமை சார்வார் – உண்மை நெறிக்கண் முதன்மையைச் சார்வோராவர்.
ஈசனை அளப்பில் காலம் இதயமேல் உன்னி நோற்றே
ஆசக லுருவம் பெற்ற அன்பினர் போல்வர் இன்னோர்
வாசவன் முதலோர் போல வரத்தகார் எந்தை பால்நீ
நேசமில் லாத தன்மை நினைந்திலர் போலு மென்றான். …… 32
ஈசனை அளப்பு இல் காலம் இதயமேல் உன்னி நோற்று – சிவபெருமானை அளவற்ற காலம் மனத்தின்கண் நினைத்துத் தவஞ்செய்து, ஆசு அகல் உருவம் பெற்ற, அன்பினர் போல்வர் இன்னோர் – பரிபக்குவரான அன்பினையுடையோர் போல்வர் இவ்வேகாதச ஈசானாதி உருத்திரர்கள்; வாசவன் முதலோர் போல வரத்தகார் – இவ்வுருத்திரர்கள் இந்திரன் முதலியவர்களைப்போல இங்கே வரக்கூடியவர்களல்லர்; எந்தை பால் – எம்பெருமானிடத்து, நீ நேசமில்லாத தன்மை நினைந்திலர் போலும் – நீ அன்பற்றிருக்கும் பான்மையை நினைத்தலைச் செய்திலர் போலும்; என்றான் – என்று தசீசி மாகாமுனிவர் கூறியருளினார்.
அன்பினர் போலவர் என்பதற்கு அன்பினர் ஆவர் எனப் பொருளுரைத்து, போல்வர் என்பதை ஒப்பில் போலிக் குறிப்பினது எனக் கொள்ளினுமாம்.
[பக்கம் 12]
வேறு
என்ற காலை இருந்ததக் கன்னிது
நன்று நாரணன் நான்முகன் நிற்கஈ
றொன்று செய்யும் உருத்திர னாதியாய்
நின்ற தென்கொல் நிகழ்த்துதி யென்னவே. …… 33
என்ற காலை – ததீசி முனிவர் இவ்வாறு கூறியளியபோது, இருந்த தக்கன் – கேட்டுக்கொண்டிருந்த தக்கன், இது நன்று – இது நல்லது நல்லது!, நாரணன் நான்முகன் நிற்க – சிருட்டி திதிகளைச் செய்யும் பிரம விட்டுணுக்கள் முதற் கடவுளல்லராக, ஈறு ஒன்று செய்யும் உருத்திரன் – அழித்தற் றொழிலைச் செய்யும் உருத்திரன் மாத்திரம், ஆதியாய் நின்றது என் – முதற்கடவுளாய் நின்ற தென்னை; நிகழ்த்துதி என்ன – கூறுக என்று வினவ. [பக்கம் 13]
விதிசி ரங்கள் வியன்முடி வேய்ந்திடும்
பதிசி வன்தன் பதத்துணை உட்கொடு
மதிசி றந்திட வாலிதின் வைகிய
ததீசி யென்னுந் தவமுனி சாற்றுவான். …… 34
விதி சிரங்கள் வியம் முடி வேய்ந்திடும் – பிரமர்களின் சிரங்களைப் பெருமை பொருந்திய முடியிலே தலைமாலையாக அணியும், பதி சிவன்தன் பதித்துணை உட்கொடு – பதியாகிய சிவபெருமானுடைய இரண்டாகிய பாதங்களைத் தியானித்து, மதி சிறந்திட – புத்தி விளங்காநிற்க, வாலிதின் வைகிய – தூய்மையாஅகிய இயல்புடன் வீற்றிருந்த, தசீசி என்னுந் தவமுனி சாற்றுவான் – தசீசி என்கின்ற தவமுனிவர் கூறியருளுவார்.
ததிசி என்றும் பாடம் [பக்கம் 13]
இருவர் தம்மொடும் எண்ணிய தன்மையால்
ஒருவ னான உருத்திர மூர்த்தியைப்
பெரியன் என்று பிடித்திலை அன்னதுந்
தெரிய ஓதுவன் தேர்ந்தனை கேட்டியால். …… 35
ஒருவனான உருத்திர மூர்த்தியை – உயர்வொப்பற்ற ஏகவஸ்துவாகிய உருத்திர மூர்த்தியை, இருவர் தம்மொடும் எண்ணிய தன்மையால் – பிரம விட்டுணுக்களாகிய இருவரோடு சமத்துவம் பண்ணி நீ எண்ணிய தன்மையினாலே, பெரியன் என்று பிடித்திலை – முழுமுதற் பொருளென்று மனதிற் கொண்டிலை; அன்னதும் – உருத்திர மூர்த்தியே முழுமுதற் பொருளாவதும், தெரிய ஓதுவன் – நீ அறிய ஓதுவோம்; தேர்ந்தனை கேட்டி – கேட்டுத் தெளிவாயாக.
இருவரோடு சேர்த்து மூவர் என்று எண்ணிய தன்மையால் எனினுமாம் [பக்கம் 14]
ஆதி யந்தமி லாதஎம் மண்ணலுக்
கோது பேரும் உருவுமொர் செய்கையும்
யாது மில்லையிவ் வாற்றினை எண்ணிலா
வேதம் யாவும் விளம்புந் துணிபினால். …… 36
ஆதி அந்தம் இலாத எம் அண்ணலுக்கு – ஆதியும் அந்தமும் இல்லாத நமது கடவுளுக்கு, ஓது பேரும் உருவும் ஓர் செய்கையும் யாதும் இல்லை – உரைக்கப்படும் நாமமும் உருவமும் யாதாயினுமொரு செயலும் எதுவும் இல்லை; இவ்வாற்றினை – இவ்வுண்மைநெறியை, எண்ணிலா வேதம் யாவும் துணிபினால் விளம்பும் – எண்ணிலாத வேதங்கள் யாவும் அறுதியிட்டுக் கூறும். [பக்கம் 14]
அன்ன தோர்பரத் தண்ணல்தன் னாணையால்
முன்னை யாரிருள் மூடத்துண் மூழ்கிய
மன்னு யிர்த்தொகை வல்வினை நீக்குவான்
உன்னி யேதன்னு ளத்தருள் செய்துமேல். …… 37
அன்னது ஓர் பரத்து அண்ணல் – அத்தகையதான ஒப்பற்ற மேன்மை பொருந்திய சிவபெருமான், முன்னை ஆர் இருள் மூடத்துள் மூழ்கிய – அநாதியே ஆணவ இருளாகிய மூடத்துள் அழுந்திக்கிடந்த, மன் உயிர்த் தொகை வல்வினை – நிலைபெற்ற உயிர்க்கூட்டத்தின் வலிய வினைய, தன் ஆணையால் நீக்குவான் – தமது அருட்சக்தியால் நீக்கும் பொருட்டு, தன் உளத்து உன்னி – தமது திருவுள்ளத்தில் நினைந்து, அருள் செய்து – கருணை கூர்ந்து. மேல் – பின்னர்
அன்னது ஓர் பரத்து அண்ணல் – உருவும் பெயருஞ் செயலுமற்ற கடவுள், உன்னுதல் அருள் செய்தல், யாவும் ஆணையாகிய சத்தியின் செயலேயாமென்க. சிவத்தின் இன்றியமையாமை நோக்கிச் சத்தியின் செயல் சிவத்தில் ஏற்றிக் கூறப்படும். அது கிரணத்தில் செயல் சூரியன்மேலேற்றிக் கூறப்படுவதில் வைத்துணரப்படும். [பக்கம் 14]
உருவுஞ் செய்கையும் ஓங்கிய பேருமுன்
அருளி னாற்கொண்ட னைத்தையும் முன்புபோல்
தெரிய நல்கித் திசைமுக னாதியாஞ்
சுரர்கள் யாரையுந் தொன்முறை ஈந்துபின். …… 38
உருவும் செய்கையும் ஓங்கிய பேரும் – உருவத்தையுஞ் செயலையும் விளங்கிய பெயரையும், முன் – சிருட்டி யாரம்ப காலத்திலே, அருளினால் கொண்டு – ஆணையாகிய சிவசத்தியாற் றரித்து, அனைத்தையும் – ஒடுங்கியிருந்த அனைத்தையும், முன்பு போல – முன் புனருற்பவஞ் செய்தவாறுபோல, தெரிய நல்கி – விளக்கமுறும்படி செய்து, திசைமுகன் ஆதியாம் சுரர்கள் யாரையும் – பிராமா முதலிய தேவர்கள் யாவரையும், தொன்முறை ஈந்து பின் – முன்போலவே படைத்துப் பின்பு
ஏற்ற தொல்பணி யாவும் இசைத்தவை
போற்று செய்கை புரிந்துபின் யாவையும்
மாற்று கின்றது மற்றெமக் காமெனச்
சாற்றி னான்அத் தகைமையுங் கேட்டிநீ. …… 39
ஏற்ற தொல் பணி யாவும் இசைத்து – அவரவர்களுக்குகேற்ற பழைமையாகிய சிருட்டி முதலிய தொழில்களைக் கொடுத்து, அவை போற்று செய்கை புரிந்து – அவைகளை நடாத்தும் முறைகளையும் உபதேசித்து, பின் – பின்னர், யாவையும் மாற்றுகின்றது – அனைத்தையுஞ் சங்காரஞ் செய்வதாகிய தொழில், எமக்கு ஆம் எனச் சாற்றினான் – நமக்காகும் என்று கூறியருளீனார்; அத் தகைமையும் கேட்டி நீ – அவ்வியல்பையும் நீ கேட்பாயாக. [பக்கம் 15]
வேறு
அந்தம் ஆதியின் றாகியே உயிரெலாம் அளிக்குந்
தந்தை யாகிய தனக்கன்றி முழுதடுந் தகைமை
மைந்த ராகிய அமரரான் முடிவுறா மையினால்
எந்தை தன்வயிற் கொண்டனன் ஈறுசெய் யியற்கை. …… 40
அந்தம் ஆதி இன்றாகி – அந்தமும் ஆதியும் இன்றி, உயிர் எலாம் அளிக்கும் தந்தையாகிய தனக்கு அன்றி – உயிரனைத்தையும் இரட்சிக்கின்ற பரம பிதாவாகிய தம்மா லன்றி, முழுது அடும் தகைமை – அனைத்தையு மடுதலாகிய செயற் கருஞ் செயல், மைந்தர் ஆகிய அமரரால் முடிவுறாமையினால் – தம் மைந்தராகிய தேவர்களால் முடியாமையினால், எந்தை – எமது பிதாவாகிய சிவபெருமான், ஈறு செய் இயற்கை தன் வயின் கொண்டனன் – சர்வ சங்காரத் தொழிலைத் தம்மிடத்தே வைத்துக்கொண்டார். [பக்கம் 15]
அன்று தேவர்கள் யாவரும் எம்பிரான் அடியில்
சென்று தாழ்ந்தெமக் கிப்பணி புரிந்தனை சிறியேம்
என்று தீருதும் இப்பரம் என்றலும் எங்கோன்
ஒன்று கூறுதுங் கேண்மினோ நீவிர்என் றுரைத்தான். …… 41
அன்று தேவர்கள் யாவரும் – அந்நாளிலே தேவர்களனைவரும், எம்பிரான் அடியில் சென்று தாழ்ந்து – எம்பெருமானுடைய திருவடிகளிற் சென்று வணங்கி, எமக்கு இப்பணி புரிந்தனை – எங்களுக்குப் படைப்பு முதலிய இத் தொழில்களைத் தந்தருளினீர்; சிறியேம் – யாம் அவற்றைப் பரித்தற்கேற்ற வலியிலேம்; இப் பரம் என்று தீருதும் என்றலும் – இப்பாரம் எங்களைவிட்டு எப்பொழுது தீரும் என்று கேட்டலும், எங்கோன் ஒன்று கூறுதும் நீவிர் கேண்மின் என்று உரைத்தான் – எம்பெருமான் நாம் ஒன்று சொல்லுகின்றோம் நீவிர் கேண்மின் என்று கூறியருளினார். [பக்கம் 16]
ஆயுள் மற்றுமக் கெத்துணை அத்துணை யளவு
நீயிர் இச்செயல் புரிமின்கள் பரமென நினைந்தீர்
தூய வித்தையால் நீறுள தாக்கியே தொழுது
காய மேற்புனைந் தஞ்செழுத் துன்னுதிர் கருத்தின். …… 42
ஆயுள் உமக்கு எத்துணை அத்துணை அளவும் – உங்களுக்கு ஆயுள் எத்துணைக்காலமோ அத்துணைக் காலமளவும், நீயிர் இச்செயல் புரிமின்கள் – நீவிர் இச் செயல்களைச் செய்ம்மின்; பரம் என நினைந்தீர் – நீவிர் இச்செயல்களைப் பாரம் என்று கருதினீர்கள்; தூய வித்தையால் நீறு உளதாக்கி – தூய்மையான மந்திரபூர்வமாக வீபூதியை உண்டாக்கி, தொழுது – அதனை வணங்கி, காயமேற் புனைந்து – அதனை உடம்பிலணிந்து, கருத்தின் அஞ்செழுத்து உன்னுதிர் – உளத்திற் பஞ்சாக்கரத்தைத் சிந்தியுங்கள்.
தூய விந்தையால் – சிரெளத பாசுபத் வித்தியாப் பிரகாரம் என்றுரைப்பினுமாம். [பக்கம் 16]
தன்மை யிங்கிவை புரிதிரேல் இத்தொழில் தரிக்கும்
வன்மை யெய்துவீர் அன்றிநங் கலைகணும் மருங்கு
தொன்மை யுள்ளன காட்டிநின் றருளுமால் தொலைவில்
நன்மை எய்துவீர் என்றருள் செய்தனன் நம்பன். …… 43
தன்மை இங்கு இவை புரிதிரேல் – இத்தன்மையான காரியங்களைச் செய்வீராயின், இத்தொழில் தரிக்கும் வன்மை எய்துவீர் – இத் தொழில்களைத் தாங்கும் வன்மையை அடைவீர்; அன்றி – அல்லாமல், நும்மருங்கு தொன்மை உள்ளன நம் கலைகள் – நும்மாட்டு முன்னமே யுள்ளனவாகிய நம் கலைகள், காட்டி நின்று அருளும் – நீவிர் காணதவற்றைக் காட்டி நும்முடன் நின்று அருள் செய்யும்; தொலைவில் – முடிவில், நன்மை யெய்துவீர் – நன்மையை அடைவீர்கள்; என்று அருள் செய்தனன் நம்பன் – என்று நம்பராகிய சிவபெருமான் அருளிச்செய்தார்.
தொலைவில் – அழிவில்லாத என்றுமாம், தொலைவில் நன்மையாவது வீடு பேறாம்.
அன்ன வர்க்கொடே யெவ்வகைச் செய்கையும் அளித்துப்
பின்னை யுள்ளதோர் செய்கையும் புரியுமெம் பெருமான்
முன்னை வேதங்கள் அவன்தனை ஐந்தொழில் முதல்வன்
என்னும் மற்றிது தேருதி கேட்டியால் இன்னும். …… 44
அன்னவர் கொடு எவ்வகைச் செய்கையும் அளித்து – அத்தேவர்களைக் கொண்டே எவ்வகையான தொழில்களையுஞ் செய்வித்து, பின்னை உள்ளது ஓர் செய்கையும் எம்பெருமான் புரியும் – இறுதியில் உள்ளதாகிய சங்காரம் என்கின்ற ஒரு தொழிலையும் எம்பெருமான் தாமே செய்தருளுவார்; அவன் தனை – அந்தக் கடவுளை, முன்னை வேதங்கள் – பழைய வேதங்கள், ஐந் தொழில் முதல்வன் என்னும் – பஞ்ச கிருத்திய கருத்தா என்று கூறும்; இது தேருதி – இதனை அறிவாயாக; இன்னும் கேட்டி – மேலும் கேள்.
அன்னவர் ஈண்டுப் பிரம விஷ்ணுக்கள், எவ்வகைச் செய்கை, படைத்தல், காத்தல் [பக்கம் 17]
வேறு
உருத்திரன் என்னும் நாமம் ஒப்பிலா அரற்கும் அன்னான்
தரத்தகு சிறார்கள் ஆனோர் தங்கட்கும் அனையன் பாதங்
கருத்திடை உன்னிப் போற்றுங் கணங்கட்கும் அவன்றன் மேனி
பரித்திடு வோர்க்குஞ் செந்தீப் பண்ணவன் தனக்கும் ஆமால். …… 45
உருத்திரன் என்னும் நாமம் – உருத்திரன் என்கின்ற பெயர், ஒப்பு இலா அரற்கும் – ஒப்பற்ற மகாருத்திரர் ஆகிய சிவபெருமானுக்கும், அன்னான் தரத்தகும் சிறார்கள் ஆனோர் தங்கட்கும் – அப்பெருமான் தருதலால் தகுதி பொருந்திய வீரபத்திரர் ஐயனார் என்கின்ற குமாரர்களுக்கும், அனையன் பாதம் கருத்திடை உன்னிப் போற்றும் கணங்கட்கும் – அப்பெருமானுடைய பாதங்களை மனத்திலே தியானித்துத் துதிக்கின்ற கணங்களுக்கும், அவன் தன் மேனி பரித்திடுவோர்க்கும் – அப்பெருமானுடைய சாரூபத்தைத் தாங்கிய காலாக்கினி ருத்திரர் முதலியோருக்கும், செந்தீப் பண்ணவன் தனக்கும் – அக்கினி தேவனுக்கும், ஆம் – செல்லாநிற்கும்.
கணம் – உருத்திரகணம் [பக்கம் 17]
இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்
அன்னவன் தரவந் தோர்க்கும் அடியடைந் தோர்க்கும் அன்னான்
தன்னுரு வெய்தி னோர்க்குஞ் சார்ந்ததால் அவன்த னிப்பேர். …… 46
இன்னல் அம் கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கு நீரால் – துன்பத்தைத் தருகின்ற கரைதெரியாமையாகிய அழகினையுடைய பிறவியாகிய கடலுள் வீழ்ந்து கிடப்போர் யாவரையுந் திருவருளாகிய கையினாலே தூக்கியெடுத்து முத்திக் கரையில் விடுந் தன்மையினால், உன்னரும் பரம் மூர்த்தி – நினைத்தற்கரிய பரமபதி, உருத்திரன் எனும் பேர் பெற்றான் – உருத்திர மூர்த்தி என்னும் பெயரைப் பெற்றார், அன்னவன் தர வந்தோர்க்கும் – அவருடைய குமாரர்களுக்கும், அடி அடைத்தோர்க்கும் – அவருடைய திருவடிகளை அடைந்தோர்க்கும், அன்னன் தன் உரு எய்தினோர்க்கும் – அவருடைய சாரூபத்தை அடைந்தோர்க்கும், அவன் தனிப்பேர் சார்ந்தது – அவருடைய ஒப்பற்ற திருநாமம் உபசார நெறியிற் சென்று பொருந்தியது.
உருத்திரன் பகைவரை அழுவிப்போன், துக்கத்தினை நீக்குவோன், தீங்கினை நீக்குவோன், சமுரார பந்தத்தினின்றும் உயிர்கலை விடுவிப்போன், சப்த மயப் பிரபஞ்சத்தினைத் தன்வயஞ் செய்தவன். எல்லாச் சொற்களாலுஞ் சொல்லப்படுவோன்., பிரம ஞானத்தைப் போதிப்பவன், மெளன சமாதியைப் போதிப்பவன், பிரம வித்தையினால் உயிர்களுடைய அறியாமையைக் கரைப்பவன், ஆன்மாக்களால் அழுதடையப்படுபவன், தமோகுணத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டவன், உயிர்களிடத்துள்ள அஞ்ஞாஅன நிமித்தந் துயருருவோன், எவ்வுலகுக்கும் அச்சங்கொடுபோன் என்றிங்ஙனம் பொருளுரைப்பர் நிகண்டுரையாசிரியர், முதலிருபொருள் தவிர ஏனைப் பொருள்கள் சாபால உபநிடத உரையிற் கண்டவை [பக்கம் 18]
செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர்
வந்தது புகல்வன் கேட்டி வானவர் யாரும் ஈண்டி
முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல
அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார். …… 47
செந்தழல் என்ன நின்ற தேவனுக்கு – செந்தழல் என்று சொல்ல நின்ற அக்கினிதேவனுக்கு, உருத்திரப் பேற் வந்தது புகல்வன் கேட்டி – உருத்திரன் என்னும் நாமம் வந்த காரணத்தைச் சொல்லுவேன் கேள்; முந்தையில் – முன்னொரு காலத்தில், வானவர் யாரும் ஈண்டி – தேவர்கள் எல்லாம் ஒருங்கு திரண்டு, அந்தம் இல் நிதியம் தன்னை – மரணத்தை இன்மை செய்யும் அமிர்தத்தை, ஒருங்கு பெற்றோர் – முழுவதையுந் தாமே பெற்றுக்கொண்டவராய், அவுணர் தம்மை முனிந்து – அசுரர்களை கோபித்து, இடமுயன்று – அவர்களோடு போரிட முயன்று, செல்ல – அவர்கள்பாற் போர்மேலிட்டுச் செல்லும் பொருட்டு, அவ்வழி – அப்பொழுது,
அந்தமில் நிதி அளவற்ற நிதியுமாம், அவ்வழி என்பதற்கு அவ்விடத்தில் எனினுமாம். பெற்றார் என்பதைப் பெயராக்கினும் அமையும். [பக்கம் 18]
பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலால் கனல்பால் வைத்துச்
செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர்
உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ
மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும். …… 48
தேவர் பெற்றிடு நிதியம் எல்லாம் – தேவர்கள் தாம் பெற்ற நிதியம் முழுவதையும், பீடு இலாக் கனல்பால் வைத்து – பெருமையற்ற அக்கினியிடம் வைத்துவிட்டு, செற்றலர் தம்மேற் சென்று செரு செய்து – பகைவர் மீது சென்று போர்செய்து, மீண்டு உற்றுழி – மீண்டு வந்தபோது, அது கொடாமல் ஓடலும் – அந்த நிதியைக் கொடாமல் அக்கினி ஓட, தொடர்ந்து சூழ – தேவர்கள் அவ்வக்கினியைச் சூழ்ந்துகொள்ள, அவன் கலுழ்தலாலே வந்தது – அவ்வக்கினி ரோதானஞ் செய்தமையால் உருத்திரன் என்னும் பெயர் அக்கினிக்கு உண்டானது; மறையும் கூறும் – இதனை வேதங்களும் எடுத்துக் கூறும்.
ரோதனம் அழுதல், பாதுகாக்கும்படி வைத்ததனைக் கொடாது அபகரித்துக்கொண்டோடினமையின் “பீடிலாக் கனல்” என்றார்.
ஓதுமா மறைகள் தம்மில் உருத்திரன் எனும்பேர் நாட்டி
ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா வந்த
ஆதிநா யகனைச் சுட்டி அறைந்ததும் பிறர்மாட் டேறா
மேதைசா லுணர்வின் ஆன்றோர் விகற்பம்ஈ துணர்வ ரன்றே. …… 49
ஓதும் மா மறைகள் தம்மில் – ஓதப்படும் பெருமை பொருந்திய வேதங்களில், உருத்திரன் எனும் பேர் நாட்டி – உருத்திரன் என்னும் பெயரை இட்டு, ஏதிலார் தம்மைச் சொற்றது ஈசன் மேற் சாரா – அயலாராகிய சிறியோரைப் பற்றிக் கூறியவைகள் சிவபெருமானைச் சாராவாம்; அந்த ஆதி நாயகனைச் சுட்டி அறைந்ததும் – அவ்வாறே ஆதியாகிய சிவபெருமானைக் குறிப்பிட்டுக் கூறியவைகளும், பிறர்மாட்டு ஏறா – பிறர்மாட்டுச் செல்லாவாம்; மேதை சால் உணர்வின் ஆன்றோர் – அறிவான் மிக்க ஞானசாதகர், ஈது விகற்பன் உணர்வர் – இவ் வேறுபாட்டை அறிவர்.
உருத்திரன் எனும் பேர் நாட்டி என்பதனை ஆதி நாயகனுக்குங் கொள்க. சொற்றது, அறைந்தது தொழிற் பெயர்கள். [பக்கம் 19]
ஓங்கிய சுருதி தன்னுள் உருத்திரன் எனுநா மத்தால்
தீங்கன லோனை ஏனைத் திறத்தரை உரைத்த வாற்றை
ஈங்கிவண் மொழியல் எங்கோற் கியம்பிய இடங்கள் நாடி
ஆங்கவன் தலைமை காண்டி அறைகுவன் இன்னும் ஒன்றே. …… 50
ஓங்கிய சுருதி தன்னுள் – உயர்ந்த வேதங்களில், உருத்திரன் எனும் நாமத்தால் – உருத்திரன் என்னும் பெயரால், தீங்கனலோனை – தீயாகிய அக்கினி தேவனையும், ஏனைத் திறந்தரை – ஏனைய கடவுளரையும், உரைத்தவாற்றை – குறித்துக் கூறிய ஒழுகலாறுகளை, ஈங்கு இவண் மொழியில் – இங்கே சிவபெருமானிடத்து ஏற்றிக் கூறாதே; எங்கோற்கு இயம்பிய இடங்கள் நாடி – எம்பெருமானுக்கு அப்பெருமானுடைய புகழ் பேசிய இடங்களை ஆராய்ந்து, ஆங்கு அவன் தலைமை காண்டி – அப்பெருமானுடைய தலைமைத் திறத்தைத் காண்பாயாக; இன்னும் ஒன்று அறைகுவேன் – மேலும் ஒன்று கூறுவேன்.
உருத்திரன் என்னும் நாம ஒற்றுமை பற்றி அக்கினிதேவன் முதலியோருக் குரைதவற்றைச், சிவனுக்குரிய வென்று கொள்ளற்க என்பதாம் [பக்கம் 20]
வேறு
முந்தை யோர்பகன் முனிவர்கள் யாவரு முதலோ
டந்த மில்லதோர் பரம்இவர் அவரென அறைந்து
தந்தமிற் சென்று வாதுசெய் தறிவருந் தகவால்
நொந்து மற்றவர் பிரமனை வினவுவான் நுவன்றார். …… 51
முந்தை ஓர் பகல் – முன்னர் ஒரு தினம், முனிவர்கள் யாவரும் – முனிவர்கள் எல்லாம், முதலோடு அந்தம் இல்லதோர் பரம் அவர் இவர் என அறைந்து – ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு தனிப் பரம்பொருள் அவரோ இவரோ என்று சந்தேகம் பேசி, தந்தமில் வாது செய்து சென்று – தங்களுக்குள் ஒருவரோ டொருவர் வாது செய்து காலங்கழித்து, அறிவரும் தகவால் நொந்து – நிச்சயித்தறிதற் கரிய தன்மையால் வருந்தி, அவர் பிரமனை வினவுவான் நுவன்றார் – அம்முனிவர்கள் பிரமதேவரை வினவி அறிவதென்று அவரை வினவும்பொருட்டுத் தம்முட் பேசிக்கொண்டார்கள். [பக்கம் 20]
மல்லல் மேருவின் முடிதனில் மனோவதி வைகும்
அல்லி வான்கம லத்திடை அண்ணலை அணுகி
எல்லை தீர்ந்திடு பரம்பொருள் உணர்கிலேம் இவரென்
றொல்லை தன்னில்நீ உரைத்தருள் செய்யென உரைத்தார். …… 52
மல்லல் மேருவின் முடிதனில் மனோவதி வைகும் – பொலிவு பொருந்திய மேருமலையின் சிகரத்திலுள்ள மனோவதி என்கின்ற நகரத்தினில் வசிக்கும், அல்லி வான் கமலத்திடை அண்ணலை அணுகி – அகவிதழினையுடைய உயர்ந்த கமலாசனத்திலிருக்கின்ற பிரமதேவரை அடைந்து, எல்லை தீர்ந்திடும் பரம் பொருள் உணர்கிலேம் – பிரமாணாதீதரான பரம்பொருளை அறியேம்; இவர் என்று – பரம்பொருள் இவரே என்று, நீ ஒல்லை தன்னில் உரைத்தருள் செய் என உரைத்தார் – தேவரீர் விரைவிற் கூறியருள வேண்டுமென்று பிரார்த்தித்தார்கள். [பக்கம் 20]
உரைத்த வாசகங் கேட்டலும் நான்முகத் தொருவன்
கருத்தில் இங்கிவை தெளிதர மறைமொழி காட்டி
விரித்து மென்னினுந் தெளிவுறார் மெய்மையால் விரைவில்
தெரித்து மிங்கென உன்னினன் அவர்மயல் தீர்ப்பான். …… 53
நான்முகத்து ஒருவன் – பிரமதேவர், உரைத்த வாசகம் கேட்டலும் – முனிவர்கள் உரைத்த வார்த்தைகளைக் கேட்டவுடன், கருத்தில் தெளிதர – மனத்தில் தெளிவு உண்டாக்கும் பொருட்டு, இங்கு மறைமொழி இவை காட்டி விரித்தும் என்னினும் – இங்கே வேத வசனங்களாகிய இவற்றைக் காட்டி விரித்துரைத்தோமாயினும், மெய்ம்மை தெளிவுறார் – உண்மையை உணரமாட்டார்கள்; ஆல் – ஆதலால், இங்கு விரைவில் தெரித்தும் என -இங்கு மற்றோ ருபாயத்தால் விரைவில் உண்மையை உணர்த்துவோமென்று, அவர் மயல் தீர்ப்பான் உன்னினன் – அம் முனிவரின் மயக்கத்தைப் போக்கும் படி சிந்தித்தார். [பக்கம் 21]
நாற்ற லைச்சிறு மாமகன் தாதைதன் னலஞ்சேர்
தோற்ற முள்ளுற உன்னியே விழிபுனல் சொரிய
ஏற்றெ ழுந்துமீக் கரம்எடா வுருத்திர னென்றே
சாற்றி மும்முறை நின்றனன் தெளிதருந் தகவால். …… 54
நால் தலைச் சிறு மாமகன் – நான்கு தலைகளையுடைய மிகச் சிறு பிள்ளையாகிய பிரமா, தாதை தன் நலம் சேர் தோற்றம் உள்ளுற உன்னி – தந்தையாகிய சிவபெருமானுடைய நன்மை பொருந்திய ஞான சொரூபத்தை மனத்தினுள்ளே பொருந்தத் தியானித்து, விழி புனல் சொரிய – கண்கள் ஆனந்த அருவி சொரிய, ஏற்று எழுந்து – அவர்கள் எதிரே எழுந்து, கரம் மீ எடா – கைகளை மேலே எடுத்து, உருத்திரன் என்றே மும்முறை சாற்றி – முழுமுதற் பரம்பொருள் உருத்திரர் உருத்திரர் உருத்திரர் என்று மூன்று முறை கூறி, தெளிதருந் தகவால் நின்றனன் – அவர்கள் உண்மையை உணரும் முகமாக நின்றார்.
எழுந்து நின்று உரைத்தல் உண்மை தெரிவிப்பதோர் உபாயமாம். [பக்கம் 20]
அங்கண் நான்முகன் சூளினால் ஆதியம் பகவன்
சங்க ரன்எனக் காட்டியே பொடிப்புமெய் தயங்க
வெங்க னற்படும் இழுதென உருகிமீ மிசைசேர்
செங்கை மீட்டனன் முனிவருக் கினையன செப்பும். …… 55
அங்கண் நான்முகன் – அவ்விடத்திற் பிரமதேவர், ஆதியம் பகவன் சங்கரன் எனச் சூளினால் காட்டி – ஆதியாகிய கடவுள் மகாசங்கார உருத்திரரே என்று ஆணைமேலிட்டுக் காண்பித்து, மெய் பொடிப்புத் தயங்க – மெய்க்கட் புளகம் விளங்க, வெம் கனல் படும் இழுது என உருகி – வெவ்விய அழலிடைப்பட்ட நெய்போல மனமுருகி, மீமிசை சேர் செங்கை மீட்டனன் – மேலே எடுத்து சிவந்த கைகளை மீட்டு, முனிவருக்கு இனையன் செப்பும் – முனிவர்களுக்கு இவைகளைக் கூறுவார். [பக்கம் 21]
வம்மி னோவுமக் கோருரை மொழிகுவன் வானோர்
தம்மை எங்களை அளித்தனன் மறைகளுந் தந்தான்
மெய்ம்மை யாவர்க்குஞ் செய்பணி உதவினன் மேனாள்
மும்மை யாகிய செய்கைநம் பாலென மொழிந்தான். …… 56
வம்மின் உமக்கு ஓர் உரை மொழிகுவன் – முனிவர்களே வாருங்கள் உங்களுக்கு ஓர் உறுதிமொழி கூறுவேன்; வானோர் தம்மை – தேவர்களையும், எங்களை – பிரம விஷ்ணுக்களாகிய எங்களையும், மேல்நாளில் அளித்தனன் – சிருட்டி ஆரம்பகாலத்தில் படைத்தருளினார்; மறைகளும் தந்தான் – வேதங்களையுந் தந்தருளினார்; யாவர்க்கும் செய்பணி மெய்மைஉதவினன் – யாவர்க்கும் அவரவர் செய்யும் பணியின் மெய்ம்மையைத் தெரிவித்தருளினார்; மும்மையாகிய செய்கை – மூன்றாகிய தொழிலும், நம்பால் என மொழிந்தான் – நம்மிடத்தேயாமென்று அந்த மெய்ம்மையையுங் கூறியருளினார்.
படைத்தல் காத்தல் நாங்கள் செய்பவைகளேயாயினும், அழித்தலோடு சேர்த்து முத்தொழில்களும் அம் மாகா உருத்திரர்பாலனவேயா மென்க. மும்மையாகிய செய்கை என்பதற்கு மூன்றாவதான அழித்தற் றொழில் எனக் கூறுவாறு முளர். [பக்கம் 22]
அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
பரமன் நின்மலன் ஏதுவுக் கேதுவாம் பகவன்
ஒருவர் பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
இருமை யாயுறை பூரண னியாவர்க்கும் ஈசன். …… 57
அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் – ஆன்மாக்கள் மீது வைத்த அருட்டன்மையாற் பஞ்சகிருத்தியஞ் செய்பவர்; அநாதி – தொடக்கமில்லாதவர்; பரமன் – மேலானவர்; நின்மலன் – மலரகிதர்; ஏதுவுக்கு ஏது ஆம் பகவன் – உபாதானங்களுக் கெல்லாம் உபாதானமாய சாட்குண்ணியர்; ஒருவர் பாலினும் பிறந்திட்டான் – ஒருவரிடத்தும் பிறவாதவர்; அருவதாய் உருவாய் இருமையாற் உறை பூரணன் – அருவமாயும் உருவமாயும் அருவுருவமாயும் இருக்கின்ற பரிபூரணர்; யாவர்க்கும் ஈசன் – அனைவருக்குந் தலைவர்.
உபாதானம் – காரணம், சாட்குண்ணியம் – அறுகுணமுடமை [பக்கம் 22]
முற்று மாயினான் முடிவிற்கும் முடிவிற்கும் முடிவாய்
உற்றுளான் என்றும் உள்ளவன் அனைத்தையும் உடையோன்
மற்றென் னாலுரைப் பரியதோர் சீர்த்தியன் மலர்த்தாள்
பற்றினோர்க் கன்றி உணரவொண் ணாததோர் பழையோன். …… 58
முற்று ஆயினான் – முழுதுமாயிருப்பவர்; முடிவிற்கும் – சேதனப் பிரபஞ்ச முடிவுக்கும், முடிவிற்கும் – அசேதன பிரபஞ்ச முடிவுக்கும், முடிவாய் உற்றுளான் – முடிவாயிருப்பவர்; என்றும் உள்ளவன் – அநாதி நித்தியர்; அனைத்தையும் உடையோன் – எலாமுடையவர்; என்னால் உரைப்பு அரியது ஓர் சீர்த்தியன் – என்னால் உரைத்தற்கரிய கீர்த்தியுடையவர்; மலர்த்தாள் பற்றினோர்க்கு அன்றி – தமது மலரடிகளைப் பற்றினவர்களுக்கன்றி, உணர ஒண்ணாததோர் பழையோன் – உணர ஒண்ணாமையையுடைய ஒப்பற்ற புராதனர்.
முடிவாயுள்ளன வென்று சொல்லப்படுவனவற்றுக்கெல்லாம் முடிவாயுள்ளனவற்றிற்கும் முடிவாயுள்ளவர் எனினுமாம்.
அன்ன தோர்சிவன் பரமென மறையெலாம் அறையும்
இன்னு மாங்கவன் நிலையினைக் கண்ணனும் யானும்
உன்னி நாடியுங் காண்கிலம் அவன்பதி ஒழிந்தோர்
மன்னு யிர்த்தொகை யென்றனன் அன்னதொல் மலரோன். …… 59
அன்னது ஓர் சிவன் பரம் என – அத்தகைய ஒப்பற்ற சிவபெருமானே பரம்பொருள் என்று, மறை எலாம் அறையும் – வேதங்களெல்லாம் முழுங்கும்; ஆங்கு அவன் நிலையினை – அச்சிவபெருமானுடைய இயல்பை, கண்ணனும் யானும் இன்னும் உன்னி நாடியும் காண்கிலம் – திருமாலும் யானும் இன்னமும் உன்னி ஆராய்ந்தும் அறியேம்; அவன் பதி – அச்சிவனே பதிப் பொருள்; ஒழிந்தோர் மன்னுயிர்த்தொகை – மற்றையோர் நிலைபெற்ற பசு வர்க்கங்கள்; என்றனன் – என்று கூறினார், அன்ன தொல் மலரோன் – அந்தப் பழையோரான பிரமததேவர்.[பக்கம் 23]
அருள்பு ரிந்துபின் சிவனடி கைதொழு தந்நாள்
மருள கன்றிடு பிதாமகன் இருந்தனன் மற்றப்
பொருளின் நீர்மையைத் தெரிந்துதம் புந்திமேற் கொண்ட
இருளொ ழிந்தனர் மகிழ்ந்தனர் முனிவரர் இசைப்பார். …… 60
அருள் புரிந்து – இங்ஙனம் உபதேசஞ்செய்து, பின் – பின்பு, சிவன் அடி கை தொழுது – சிவபெருனானுடைய திருவடிகளைக் கைகூப்பி வணங்கி, மருள் அகன்றிடு பிதாமகன் – மயக்கமற்ற பிரமதேவர், அந்நாள் இருந்தனன் – அந்நாளில் இருந்தார்; அப் பொருளின் நீர்மையை – அம் மெய்ப்பொருளின் இயல்பை, தெரிந்து – தெளிந்து, தம் புந்தி மேல் கொண்ட இருள் ஒழிந்தனர் – தம் மனத்திற் கொண்ட மயக்கம் நீங்கி, மகிழ்ந்தனர் – மகிழ்ந்து, முனிவரர் இசைப்பார் – முனி சிரேட்டர்கள் கூறுவார்கள். [பக்கம் 23]
தாதை யாய்எமை அளித்தனை யாங்கள்உன் தனயர்
ஆத லால்எமக் கித்திறம் தேற்றினை அடிகேள்
ஈதலால் இன்று குரவனும் ஆயினை என்றே
பாத தாமரை வணங்கினர் முனிவரர் பலரும். …… 61
தாதையாய் எமை அளித்தனை – பிதாவாகி எங்களைப் பெற்றருளினீர்; யாங்கள் உங்கள் தனயர் – நாங்கள் உம்முடைய பிள்ளைகள்; ஈது அலால் – இவ்வாறு அல்லாமல், அடிகேள் எமக்கு இத்திறம் தேற்றினை ஆதலால் – அடிகளே எங்களுக்கு இவ்வுண்மையை உபதேசித்தருளினீர் ஆகையால், இன்று குரவனும் ஆயினை – இன்று ஆசாரியரும் ஆயினீர்; என்று முனிவரர் பலரும் – என்று கூறி முனிசிரேட்டர் பலரும், பாத தாமரை வணங்கினர் – பிரமதேவருடைய பாத கமலங்களை வணங்கினார்கள். [பக்கம் 24]
அடிவ ணங்கினர் தமைத்தெரிந் தின்றுதொட் டமலன்
வடிவம் உன்னுதிர் அருச்சனை புரிகுதிர் வயங்கும்
பொடிய ணிந்துநல் லஞ்செழுத் தியம்புதிர் புரைசேர்
கொடிய வெம்பவம் அகலுதிர் எனவிடை கொடுத்தான். …… 62
அடி வணங்கினர் தமை தெரிந்து – தமது பாதங்களை வணங்கிய முனிவர்களை நோக்கி, இன்று தொட்டு அமலன் வடிவம் உன்னுதிர் – நீவிர் இன்று தொடக்கம் நின்மலரான சிவபெருமானுடைய திருவுருவதைத் தியானஞ்செய்குதிர்; அருச்சனை புரிகுதிர் – அப்பெருமானுக்கு பூசனை செய்குதிர்; வயங்கும் பொடி அணிந்து – சிவதத்துவம் விளங்கும் விபூதியை தரித்து, நல் அஞ்செழுத்து இயம்புதிர் – ஸ்ரீ பஞ்சாட்சரத்தைச் செபிக்குதிர்; புரை சேர் கொடிய வெம் பவம் அகலுதிர் – குற்றம் பொருந்திய வெவ்விய கொடிய பிறவியை நீங்குதிர்; என விடை கொடுத்தான் – என்று உபதேசஞ் செய்து விடை கொடுத்தனுப்பினார். [பக்கம் 24]
ஆதலால் எங்க ளீசனே பரம்பொருள் அல்லா
ஏதி லாரெலாம் உயிர்த்தொகை யாகுமால் இதனைக்
காத லாலுரைத் தேன்அன்று வாய்மையே காண்டி
வேத மேமுத லாகிய கலையெலாம் விளம்பும். …… 63
ஆதலால் எங்கள் ஈசனனே பரம்பொருள் – ஆதலினாலே எங்கள் சிவபெருமானே பரம்பொருள்; அல்லர் ஏதிலார் எலாம் உயிர்தொகையாகும் – சிவபெருமானல்லாத பிறர் எல்லாம் பசுக்களாகும்; இதனைக் காதலால் உரைத்தேன் – இவ்வுண்மையை உன்பாற்கொண்ட அன்பினால் கூறினேன்; நன்று வாய்மை காண்டி – நன்மையாகிய சத்தியத்தைக் கடைப்பிடிப்பாயாக; வேதம் முதலாகிய கலையெலாம் விளம்பும் – இவ்வுண்மையை வேதம் முதலிய கலைகளெல்லாம் விளம்பும் மொழியும்
காதலால் உரைத்தேன் அன்று எனப் பிரித்து, இறைவன் மீது கொண்ட காதலால் உரைத்தேனல்லேன்; வாய்மையையே உரைத்தேன் என உரைப் பினுமாம். [பக்கம் 24]
அன்றி முன்அயன் உன்றனக் கரன்புகழ் அனைத்தும்
நன்று கேட்டிட உணர்த்தினன் நீயது நாடி
நின்று மாதவம் புரிந்திது பெற்றனை நினக்குப்
பொன்று காலம்வந் தெய்தலின் மறந்தனை போலாம். …… 64
அன்றி – அல்லாமலும், முன் – முன்னர், அயன் – உன் பிதாவாகிய பிரமதேவர், அரன் புகழ் அனைத்தும் நன்று கேட்டிட உந்தனக்கு உணர்தினன் – சிவபெருமானுடைய புகழ் அனைத்தையும் நீ நன்கு கேட்கும்வண்ணம் உனக்கு உபதேசித்தார்; நீ அது நாடி நின்று – நீ அவ்வுபதேசத்தை ஆராய்ந்து அவ்வுபதேச வழியில் நின்று, மாதவம் புரிந்து – பெரிய தவத்தைச் செய்து, இது பெற்றினை – இச் செல்வத்தைப் பெற்றாய்; நினக்குப் பொன்று காலம் வந்து எய்தலின் – உனக்கு அழிவுகாலம் வந்து கிட்டுதலால், மறந்தனை போலாம் – உன் பிதாவின் உபதேசத்தையும் யாவற்றையும் மறந்தாய் போலும். [பக்கம் 25]
தந்தை யேமுதல் யாவரும் முடிவுறுந் தகவால்
வந்து நின்னவை இருந்தனர் மாயையால் மருண்டாய்
உய்ந்தி டும்படி நினைத்தியேல் அரற்கவி உதவி
இந்த மாமகம் புரிந்திடு வாயென இசைத்தான். …… 65
தந்தையே முதல் யாவரும் – உன் தந்தையாகிய பிரமா முதலிய யாவரும். முடிவு உறும் தகவால் வந்து நின் அவை இருந்தனர் – இறக்கும் இயல்பால் வந்து உன் சபையில் இருந்தார்கள்; மாயையால் மருண்டாய் – நீயோ மாயையினால் மயங்கினாய்; உய்ந்திடும்படி நினைத்தியேல் – நீ உய்யும்வண்ணம் நினைப்பாயானால், அரற்கு அவி உதவி – சிவபெருமானுக்கு அவியை நல்கி, இந்த மாமகம் புரிந்திடுவாய் – இந்தப் பெரிய யாகத்தைச் செய்குதி; என இசைத்தான் – என்று ததீசி மகாமுனிவர் கூறியருளினார்.
ததீசிப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 519