8 திருமணப் படலம்

8 திருமணப் படலம்
தொல்லையில் வதுவையந் தொழில்ந டாத்திட
ஒல்லுவ தெற்றையென் றுளங்கொண் டாய்வுழி
நல்லன யாவும்அந் நாளில் நண்ணலும்
எல்லையில் உவகைமிக் கேம்பல் எய்தினான். …… 1

தொல்லையில் வதுவை அம் தொழில் நடாத்திட – பழைமையான வேத விதிப்படி திருமணமாகிய மங்கள காரியத்தைச் செய்தற்கு, ஒல்லுவது எற்றை என்று உளங்கொண்டு ஆய்வுழி – இசைந்தது எந்த நாழ் என்று மனதினால் ஆராயந்தவிடத்து, அந்நாளில் நல்லன யாவும் நண்ணலும் – அந்நாளிற்றானே நட்சத்திரம் முதலிய் யாவும் நல்லனவாய்ப் பொருந்தியிருத்தலும், எல்லை இல் உவமை மிக்கு – அளவற்ற மகிழ்ச்சி மிகுந்து, ஏம்பல் எய்தினான் – இறுமாப்படைந்தான். [1,21]

அண்ணலுக் கிப்பகல் அணங்கை ஈவனென்
றுண்ணிகழ் ஆர்வமோ டுளத்தில் தூக்கியே
விண்ணவர் யாவரும் விரைந்து செல்லிய
துண்ணென ஒற்றரைத் தூண்டி னானரோ. …… 2

இப்பகல் அண்ணலுக்கு அணங்கை ஈவன் என்று – இற்றைத் தினத்திற் சிவபெருமானுக்கு என் மகளை மணஞ்செய்து கொடுப்பேன் என்று, உள் நிகழ் ஆர்வமோடு உளத்தில் தூக்கி – உள்ளத்துள்ளே நிகழுகின்ற ஆராமையுடன் மன உறுதி செய்து, விண்ணவர் யாவரும் விரைந்து செல்லிய – தேவர்கள் அனைவரும் விரைந்து வரும்பொருட்டு, ஒற்றரை துண்ணெனத் தூண்டினான் – தூதுவர்களை விரைவாக அனுப்பினான். [1,21]

தன்னகர் அணிபெறச் சமைப்பித் தாங்கதன்
பின்னுற முன்னினும் பெரிதும் ஏர்தக
மன்னுறு கோயிலை வதுவைக் கேற்றிடப்
பொன்னகர் நாணுறப் புனைவித் தானரோ. …… 3

தன் நகர் அணிபெறச் சமைப்பித்து – தனது நகரத்தை அழகுபெற அலங்கரிப்பித்து, ஆங்கதன் பின்னுற – அதற்குப் பின்னர், மன்னுறு கோயிலை – தான் இருக்கும் மாளிகைய, பொன் நகர் நாணுற – சுவர்க்கமும் நாணும்படி, முன்னினும் பெரிதும் ஏர் தக வதுகைக்கு ஏற்றிட புனைவித்தான் – முன்னையினும் பெரிதுஞ் சிறப்பாகத் திருமணத்துக்கு ஏற்றவாறு அலங்கரிப்பித்தான். [2, 21]

கடிவினை புரிதரக் காசின் றாக்கிய
படியறு திருநகர் பைய நீங்கியே
கொடியுறழ் மெல்லிடைக் குமரி பால்வரும்
அடிகளை அணுகினன் அடிகள் போற்றியே. …… 4

கடிவினை புரிதர – கடிமணஞ் செய்யும்பொருட்டு, காசு இன்று ஆக்கிய – குற்றம் இல்லாமற் புனைவித்த, படிஅறு திரு நகர் பைய நீங்கி – ஒப்பில்லாத அழகிய நகரத்தை மெல்ல நீங்கி, கொடி உறழ் மெல்லிடைக் குமரிபால் வரும் – கொடிபோன்ற மெல்லிய இடையினையுடைய உமாதேவியாரிடம் எழுந்தருளியிருக்கின்ற, அடிகள் போற்றி அணுகினன் – கடவுளைத் திருவடிகளில் வணங்கி அணுகினான்.[பக்கம் 2/21]

அணுகினன் அண்ணல்நீ அணைந்து மற்றிவள்
மணநய வேட்கையால் மாது நோற்றனள்
நணுகுதி அடியனேன் நகரின் பாலெனா
நுணுகிய கேள்வியான் நுவன்று வேண்டவே. …… 5

அணுகினன – அணுகி, அண்ணல் நீ இவண் அணைந்து நய மண வேட்கையால் – தேவரீர் இவ்விடத்துக்கு எழுந்தருளி நன்மையாகிய திருமணத்தைச் செய்யவேண்டுமென்கின்ற விருப்பத்தால், மாது நோற்றனள் – என் புதல்வி தவஞ்செய்தாள்; அடியேன் நகரின் பால் அணுகுதி என – ஆகையினாலே அடியேனுடைய நகரத்தின்கண்ணே தேவரீர் எழுந்தருள்வீராக என்று, நுணிகிய கேள்வியான் நுவன்று வேண்ட – நுண்ணிய கேள்வியறிவினையுடையவனாகிய தக்கன் கூறி வேண்டுதல் செய்ய.[பக்கம் 2/21]

இறையவன் நன்றென எழுந்து சென்றொராய்
நறைமலர் செறிகுழல் நங்கை யாளொடு
மறல்கெழு மனத்தினான் மனையுற் றானரோ
அறைதரு நூபுரத் தடிகள் சேப்பவே. …… 6

இறையவன் நன்று என ஓராய் எழுந்து சென்று – சிவபெருமான் நல்லது என்று அவ்விடத்தினின்றும் நீங்கி எழுந்து சென்று, நறை மலர் செறி குழல் நங்கையாளொடு – தேன் பொருந்திய மலர் செறிந்த கூந்தலையுடைய உமாதேவியாரோடு, அறை தரு நூபுரத்து அடிகள் செப்ப – ஒலிக்கின்ற நூபுரம் அணிந்த திருவடிகள் சிவப்ப, மறல் கெழு மனத்தினான் மனை உற்றான் – மயக்கம் பொருந்திய மனத்தினையுடைய தக்கனது மாளிகையுட் பிரவேசித்தருளினார்
மறல் மறதியுமாம். நூபுரம் பாதகிண்கிணி . [பக்கம் 3/21]

பூந்திரு நிலவிய பொருவில் கோயின்முன்
காந்தியொ டேகலுங் கடவுள் முன்னரே
வாய்ந்ததொ ரெண்வகை மங்க லங்களும்
ஏந்தினர் ஏந்திழை மார்கள் எய்தினார். …… 7

பூந் திரு நிலவிய பொரு இல் கோயில் முன் – பொலிவாகிய இலக்குமி வாசஞ் செய்கின்றா ஒப்பற்ற மாளிகையின் எதிரில், காந்தியொடு ஏகலும் – சுயம்பிரகாசத்தோடு எழுந்தருளுதலும், கடவுள் முன்னர் – சிவபெருமானுக்கு முன்னிலையில், வாய்ந்தது ஓர் எண்வகை மங்கலங்களும் ஏந்தினர் – சிறப்பினை யுடையதாகிய எண்வகை மங்கலப் பொருள்களையும் ஏந்திக்கொண்டு, ஏந்திழைமார்கள் ஏய்தினார் – பெண்கள் வந்தார்கள். [பக்கம் 3/21]

தையலர் மங்கலத் தன்மை நோக்கியே
வையகம் உதவிய மங்கை தன்னுடன்
ஐயனும் உறையுளின் அடைந்து தானொரு
செய்யபொற் பீடமேற் சிறப்பின் வைகினான். …… 8

தையலர் மங்கலத் தன்மை நோக்கி – பெண்கள் ஏந்தி வந்த மங்கலப் பொருள்களின் மங்களகரமான இயல்புகளை நோக்கிக்கொண்டு, வையகம் உதவிய மங்கை தன்னுடன் ஐயனும் – உலகத்தை ஈன்ற மங்கையாகிய அம்மாதாவும் பிதாவாகிய தாமும், உறையுளின் அடைந்து – மாளிகையினுட் சென்று, தான் ஒரு செய்ய பொற் பீடமேல் சிறப்பின் வைகினான் – தாம் ஒரு செந்நிறம் பொருந்திய பொற்பீடத்தின்மீது சிறப்பாக எழுந்தருளியிருந்தார்.

தன் கட்டுப்பொருட்டு, உடன் உம்மைப்பொருட்டு, தான் சிவபெருமான். [பக்கம் 3/21]

அன்னது காலையில் ஆற்று நோன்புடைக்
கன்னியை மறைக்கொடி கண்டு புல்லியே
தன்னுறு மந்திரந் தந்து மற்றவள்
பின்னலை மென்மெலப் பிணிப்பு நீக்கினாள். …… 9

அன்னது காலையில் ஆற்று நோன்புடைக் கன்னிகை – அப்பொழுது செய்யப்படுகின்ற தவத்தினையுடைய கன்னிகையாகிய புதல்வியை, மறைக்கொடி கண்டு புல்லி – மாதாவாகிய வேதவல்லி கண்டு தழுவி, தன்னுறு மந்திரம் தந்து – தனது மாளிகைக்கு அழைத்துக் கொண்டுவந்து, அவள் பின்னலை மென்மெல பிணிப்பு நீக்கினாள் – அத் தவப்புதல்வியாருடைய கூந்தலின் பின்னற் செறிவை மெல்ல மெல்ல நீக்குவாளாயினாள். [பக்கம் 4/21]

சிற்பரை ஓதியின் செறிவை ஆய்ந்தபின்
பொற்புறு நானநெய் பூசிப் பூந்துவர்
நற்பொடி தீற்றியே நவையில் கங்கைநீர்
பற்பல குடங்கரின் பாலுய்த் தாட்டினாள். …… 10

சிற்பரை ஓதியின் செறிவை ஆய்ந்த பின் – அருட் சத்தியாகிய உமாதேவியாருடைய கூந்தலின் சிக்கை நீக்கியபின், பொற்பு உறு நான நெய் பூசி – அழகுவாய்ந்த புழுகு கலந்த நெய்யைப் பூசி, பூந் துவர் நற் பொடிதீற்றி – பொலிவாகிய பத்துவகைத் துவரையும் நல்ல முப்பத்திரண்டுவகைச் சரக்குகளாலான ஓமாலிகையும் அக் கூந்தலுக்கு ஊட்டி, நவை இல் கங்கி நீர் பற்பல குடங்கரின்பால் உய்த்து – குற்றமில்லாத கங்காசலத்தைப் பலவாகிய குடங்களி நிறைத்து, ஆட்டினாள் – அந்நீரினால் திருமுழுக்காட்டினாள். [பக்கம் 4/21]

ஆட்டினள் மஞ்சனம் அணிய பூந்தொடை
சூட்டினள் பொற்கலை சூழ்ந்து பல்கலன்
பூட்டினள் எம்பிரான் புடையில் உய்த்தனள்
ஈட்டுறும் உயிர்த்தொகை ஈன்ற ஆய்தனை. …… 11

மஞ்சனம் ஆட்டினள் – திருமுழுக்குச் செய்து, அணிய பூந்தொடை சூட்டினள் – அழகிய மலர்மாலையைச் சூட்டி, பொற்கலை சூழ்ந்து – பொன்னாடயைத் தரித்து, பல் கலன் பூட்டினள் – பலவகை ஆபரணங்களை அணிந்து, ஈட்டுறும் உயிர்த்தொகை ஈன்ற ஆய்தனை வினைகளை ஈட்டுகின்ற உயிர்க்கூட்டங்களைப் பெற்ருளிய உலகமாதாவை, எம்ம்பிரான் புடையி உய்த்தனம் – எம் பரமபிதாவாகிய சிவபெருமானுக்குப் பக்கத்தில் இருக்கச் செய்தான். [பக்கம்4/21]

மணவணி முற்றுறு மாது போந்துதன்
கணவன தொருபுடை கலந்த காலையில்
பணைமுத லாகிய பல்லி யங்களும்
இணையற இயம்பின ரியாரும் ஏத்தவே. …… 12

மணி அணி முற்றுறு மாது போந்து – திருமண அலங்காரம் முற்றுப்பெற்ற உமையம்மையார் சென்று, தன் கணவனது ஒரு புடை கலந்த காலையில் – தம் கணவருக்கு ஒருபக்கத்தே இருந்த சமயத்தில், யாரும் ஏத்த – அதனைக் கண்ணுற்ற யாவரும் துதிசெய்ய, பணை முதலாகிய பல் இயங்களும் இணைஅற இயம்பினர் – அதேசமயத்தில் முரசு முதலிய பல வாத்தியங்களையும் ஒப்பின்றி முழக்கஞ் செய்தார்கள். [பக்கம் 5/21]

தூதுவர் உரைகொளீஇத் துண்ணென் றேகியே
மாதவன் முதலிய வானு ளோரெலாம்
போதினை வளைதரு பொறிவண் டாமென
ஆதியை அடைந்தனர் அடிப ணிந்துளார். …… 13

மாதவன் முதலிய வானுளோர் எல்லாம் – திருமால் முதலிய தேவர்களனைவரும், தூதுவர் உரை கொளீஇ – தூதுவர் சொல்லிய வார்த்தையைக்கேட்டு, துண்ணென்று ஏகி – விரைந்து சென்று, அடி பணிந்துளார் – சிவபெருமானுடைய பாதங்களை வணங்கினவர்களாய், போதினை வளைதரு பொறி வண்டா மென – அலரும் பருவத்துப் புஷ்பத்தைச் சூழ்ந்து மொய்க்கின்ற புள்ளி பொருந்திய வண்டுகளைப் போல, ஆதியை அடைந்தனர் – அப்பெருமானை அணுகிச் சூழ்ந்து நின்றார்கள். [பக்கம் 5/21]

வீழ்குறும் இழுதெனும் வெய்ய நோன்குரல்
காழ்கிளர் திவவுடைக் கடிகொள் யாழினை
ஊழ்கிளர் கின்னரர் உவணர் ஏந்துபு
கேழ்கிளர் மங்கல கீதம் பாடினார். …… 14

வீழ்குறு இழுகு எனும் – ஒழுகுகின்ற நெய்யின் வீழ்ச்சியைப்போலும், வெய்ய நோன் குரல் – வெய்ய வலிய தந்தியினையும், காழ் கிளர் திவது உடை – வைரம் பொருந்திய வார்க்கட்டினையு முடைய, கடி கொள் யானினை – காப்பமைந்த யாழினை, ஊழ் கிளர் கின்னரர் உவணர் ஏந்துபு – யாழ்வாசிக்கும் முறையான் மிக்க கின்னருங் கருடரும் ஏந்தி, கேழகிளர் மங்கல கீதம் பாடினார் – விளக்கம் வாய்ந்த மங்கல கீதங்கலைப் பாடினார்கள் [பக்கம் 5/21]

கானுறு பஃறலைக் காவு கான்றிடு
தேனுறு விரைமலர் அடிகள் சிந்துபு
வானவர் மகளிர்கள் வணங்கி வாழ்த்துரை
ஆனவை புகன்றனர் அமலை பாங்கரில். …… 15

கான் உறு பல் தலை காவு கான்றிடு – வாசனை மிகுகின்ற பல தலைகளையுடைய கற்பகச் சோலையில் உண்டான, தேனுறு விரை மலர் வானவர் மகளிர்கள் அடிகள் சிந்துபு வணங்கி – தேன் பொருந்திய மணமுடைய மலர்களைத் தேவ மகளிர்கள் திருவடிகளில் அர்ச்சித்து வணங்கி, அமலி பாங்கரில் வாழ்த்துரை யானவை புகன்றனர் – நின்மலையாகிய உமாதேவியாருக்குப் பக்கத்தில் நின்று மங்கல வாழ்த்துப் பாடல்களைப் பாடினார்கள் [பக்கம் 6/21]

எல்லைய தாகலும் இருந்து தக்கனாங்
கொல்லையின் மறைமொழி உரைத்துத் தன்மனை
வல்லிபொற் சிரகநீர் மரபின் வாக்குற
மெல்லென அரனடி விளக்கி னானரோ. …… 16

எல்லையது ஆகலும் – முகூர்த்தம் வருதலும், தக்கன் ஆங்கு இருந்து – தக்கன் அவ்விடத்தில் இருந்து, மனை வல்லி பொற் சிரக நீர் மரபின் வாக்குற – தனது மனைவியாகிய வேதவில்லி பொன்னாலான கரத்தால் நீரை முறையானே வார்க்க, மறை மொழி ஒல்லி உரைத்து – வேத மந்திரத்தை விரைந்து சொல்லி, அரன் அடி மெல்லென விளக்கினான் – சிவபெருமானுடைய திருவடிகளை மெல்லென்று விளக்கினான்.
இன், சாரியை [பக்கம் 6/21]

விளக்கிய பின்றையில் விரைகொள் வீமுதற்
கொளப்படு பரிசெலாங் கொணர்ந்து மற்றவற்
குளப்படு பூசனை உதவி மாதினை
அளித்திட உன்னினன் அமரர் போற்றவே. …… 17

விளக்கிய பின்றையில் – திருவடிகலை விளக்கஞ் செய்த பின்பு, விரை கொள் வீ முதல் கொளப்படு பரிசு எலாம் கொணர்ந்து – வாசனை பொருந்திய புஷ்பம் முதலிய பூசைக்குரிய உபகரணங்களை யெல்லாங் கொண்டுவந்து, உளப்படு பூசனை உதவி – மன அன்போடு கூடிய பூசையைச் செய்து, அமரர் போற்ற – தேவர்கள் துதிக்க, அவற்கு மாதினை அளித்திஎஅ உன்னினன் – சிவபெருமானுக்குத் தன் மகளைக் கொடுக்கக் கருதினான். [பக்கம் 6/21]

சிற்கன வடிவினன் செங்கை யுள்உமை
நாற்கரம் நல்குபு நன்று போற்றுதி
நிற்கிவள் தன்னையான் நேர்ந்த னன்எனாப்
பொற்கர கந்தரு புனலொ டீந்தனன். …… 18

சிற்கன வடிவினன் செங்கையுள் – ஞானகன வடிவினரான சிவபெருமானுடைய செம்மையாகிய திருக்கரத்தின்மீது, உமை நற்கரம் நல்குபு – உமாதேவியாருடைய நல்ல திருக்கரத்தை வைத்து, நிற்கும் இவள் தன்னை யான் நேர்ந்தனன் – தேவரீருக்கு இப் பெண்ணை யான் தந்தேன், நன்று போற்றுதி எனா – நன்றாகப் பாதுகாத்தருள்க என்று கூறி, பொற்கரம் தரு புனலொடு ஈந்தனன் – பொன்னாலான கரகந் தருகின்ற நீரை வார்த்தத் தத்தஞ் செய்தான் . [பக்கம் 7/21]

மூர்த்தமங் கதனிடை முதல்வன் அம்பிகை
சீர்த்திடு மணவணி தெரிந்து கைதொழூஉ
நீர்த்தொகை கதிரொடு நிலவு கண்டுழி
ஆர்த்தென வழுத்தினர் அமரர் யாவரும். …… 19

மூர்த்தம் அங்கு அதனிடை – அச் சுபமுகூர்த்த காலத்தில், அமரர் யாவரும் – தேவர்களெல்லாம், முதல்வன் அம்பிகை சீர்த்திடு மண அணீ தெரிந்து – முதல்வராகிய சிவபெருமானதும் உமாதேவியாரதுஞ் சிறப்புப் பொருந்திய திருமணக் கோலத்தைத் தரிசித்து, கை தொழுஉ – கைகூப்பி வணங்கி, கதிரொடு நிலவு கண்டுழி நீர்த்தொகை ஆர்த்தென – சந்திரிகையோட்ய் கூடிய பூரணை சந்திரனைக் கண்டபோது சமுத்திரங்கள் ஆரவாரித்தாற்போல, வழுத்தினர் – ஆரவாரஞ் செய்து துதித்தார்கள் [பக்கம் 7/21]

மாடுறு திசைமுகன் மணஞ்செய் வேள்வியில்
கூடுறு கலப்பைகள் கொணர்ந்து நூன்முறை
நேடினன் சடங்கெலாம் நிரப்ப மால்முதல்
ஆடவர் இசைத்தனர் அமலன் வாய்மையே. …… 20

மாடு உறு திசைமுகன் – பக்கத்திலிருந்த பிரமதேவர், மணஞ்செய் வேள்வியிற் கூடுறு கலப்பைகள் கொணர்ந்து – திருமண வேள்விற்குரிய உபகரணங்களைக் கொண்டுவந்து, நூல் முறை நேடினன் – வேத விதியை ஆராய்ந்து, சடங்கெலாம் நிரப்ப – கிரியைகள் எலாவற்றையும் நிறைவு செய்ய, மால் முதல் ஆடவர் அமலன் வாய்மை இசைத்தனர் – திருமால் முதலிய தேவர்கள் அமலன் வாய்மைகளாகிய வேதங்கலை ஓதினார்கள். [பக்கம் 8/21]

அன்னுழி உருவமும் அருவும் ஆவியும்
முன்னுறும் உணர்வுமாய் உலகம் யாவிற்கும்
நன்னயம் புணர்த்தியே நண்ணு நாயகன்
தன்னுறு ஒளித்தனன் அருளின் தன்மையால். …… 21

அன்னுழி – அப்பொழுது, உருவமும் அருவும் ஆய் – உருவமாயும் அருவமாயும் அருவுருவமாயும், ஆவியும் உன்னுறும் உணர்வுமாய் – ஆன்மாக்களாகியும் அவைகளால் அறியும் அறிவுமாய், உலகம் யாவிற்கும் நல் நயம் புணர்த்தியே நண்ணு நாயகன் – உலகம் முழுவதற்கும் நல்ல சுகத்தைச் செய்துகொண்டேயிருக்கும் ஆன்ம நாயகராகிய சிவபெருமான், அருளின் தன்மையால் தன் உரு ஒளித்தனன் – திருவருள் விசேடத்தாலே தமது வடிவத்தை மறைத்தருளினார்.

அன்னுழி ஒளித்தனன் என்க. ஆய் முன்னுங் கூட்டப்பட்டது. அருவும் உருவும் சொன்னமையின் அருவுரு வருவிக்கப்பட்டது. [பக்கம் 8/21]

மறைந்தனன் இருத்தலும் மகிணன் காண்கிலாள்
அறந்தனை வளர்க்கும்எம் மன்னை நோற்றுமுன்
பெறும்பெரு நிதியினைப் பிழைத்து ளோரெனத்
துறந்தனள் உவகையைத் துளங்கி மாழ்கியே. …… 22

மறைந்தனன் இருத்தலும் – சிவபெருமான் மறைந்திருந்தபோது, அறந்தனை வளர்க்கும் எம் அன்னை – முப்பத்திரண்டு தருமங்களையும் வளர்தருளுகின்ற எமது மாதாவாகிய உமாதேவியார், மகிணன் காண்கிலாள் – தமது நாயகரைக் காணாதவராய், நோற்று முன் பெறும் பெரும் நிதியினைப் பிழைத்துளோர் என – தவஞ்செய்து முன்னர்ப் பெறும் பெரிய செல்வத்தினைப் பின்னர் இழந்தவர்களைப்போல, துளங்கி மாழ்கி உவகையைத் துறந்தனள் – நடுங்கி வருந்தி மகிழ்ச்சியை இழந்தார். [பக்கம்8/21]

பொருக்கென எழுந்தனள் பூவின் மீமிசைத்
திருக்கிளர் திருமுதல் தெரிவை மாதர்கள்
நெருக்குறு சூழல்போய் நிறங்கொள் தீமுகத்
துருக்கிய பொன்னென உருகி விம்மினாள். …… 23

பொருக்கென எழுந்தனள் – விரைவாக இருக்கைவிட்டெழுந்து, பூவின் மீமிசை திருக்கிளர் திரு முதல் தெரிவை மாதர்கள் நெருக்கு உறு சூழல் போய் – தாமரை மலரின்மீது அழகு விளங்க இருக்கின்ற இலக்குமி முதலிய தேவப்பெண்கள் செறிந்திருக்கின்ற இடத்துக்குச் சென்று, நிறம் கொள் தீ முகத்து உருக்கிய பொன் என – நிறம் விளங்குகின்ற உலைமுகத்தக்கினியில் உருக்கிய பொன்னைப்போல, உருகி விம்மினாள் – உருகிப் பொருமினார். [பக்கம்8/21]

உயிர்த்தனள் கலுழ்ந்தனள் உணர்வு மாழ்கியே
அயர்த்தனள் புலர்ந்தனள் அலமந் தங்கமும்
வியர்த்தனள் வெதும்பினள் விமலன் கோலமே
மயிர்த்தொகை பொடிப்புற மனங்கொண் டுன்னுவாள். …… 24

உயிர்த்தனள் – பெருமூச்சுவிட்டு, கலுழ்ந்தனள் – அழுது, உணர்வு மாழ்கி அயர்த்தனள் – அறிவு அழிந்து மறந்து, புலர்ந்தனள் – புலர்ந்து, அலமந்து – கழன்று, அங்கமும் வியர்த்தனள் – சாரீரமும் வியர்த்து, வெதும்பினள் – வெதும்பி, மயிர்த்தொகை பொடிப்புற – உரோமங்கள் பொடிப்புக்கொள்ள, விமலன் கோலமே மனங்கொண்டு உன்னுவாள் – விமலராகிஅய் நாயகரின் திருக்கோலத்தையே மனதிற்கொண்டு நினைப்பாராயினார். [பக்கம் 9/21]

புரந்தரன் மாலயன் புலவர் யாவரும்
நிரந்திடும் அவையிடை நிறுக்கும் வேள்விவாய்
இருந்தனன் மாயையால் இறைவன் துண்ணெனக்
கரந்தனன் ஆதலின் கள்வன் போலுமால். …… 25

புலந்தரன் மால் அயன் புலவர் யாவரும் – இந்திரம் திருமால் பிரமா முதலிய தேவர்கள் யாவரும், நிரந்திடும் அவையிடை – நிறைந்த சபையில், நிறுக்கும் வேள்வியாய் – செய்யும் விவாக வேள்விக்கண், இருந்தவன் இறைவன் – இறுந்தருளியவராகிய இறைவா, மாயையால் துண்ணெனக் கரந்தனன் – மாயையால் விரைந்து மறைந்தருளினார், கள்வன் போலும் – அதனால் அவர் வஞ்சகம் உடையரோ? [பக்கம் 9/21]

எய்தியெற் கொண்டதோர் இறைவன் தன்னையான்
கைதவ னேயெனக் கருத லாகுமோ
மெய்தளர் பான்மையின் வினையி னேன்இவண்
செய்தவஞ் சிறிதெனத் தேற்றல் இன்றியே. …… 26

எய்தி – வலிந்து வந்து, என் கொண்டது ஓர் இறைவன் தன்னை – என்னை மணஞ்செய்துகொண்ட ஒப்பில்லாத இறைவரை, மெய் தளர் பான்மையில் வினையினேன் யான் இவண் செய்தவம் – உடல் வருந்தும் வகையில் தீவினையேனாகிய யான் இவண் செய்தவம் – உடல் வருந்தும் வகையில் தீவினையேனாகிய யான் இவ்விடத்துச் செய்த தவம், சிறிது எனத் தேற்றல் இன்றி – அற்பம் என்று தெளிதலை விட்டு, கைதவனே எனக் கருதல் ஆகுமோ- வஞ்சக்ர் போலும் என்று கருதுதல் பொருந்துமோ? பொருந்தாதே. [பக்கம் 9/21]

வேறு

என்றென் றுன்னி உயிர்த்திரங்கும்
இறைவி செய்கை எதிர்நோக்கி
மன்றல் நாறுங் குழல்வேத
வல்லி புல்லி மனந்தளரேல்
உன்றன் கணவன் பெறும்வாயில்
தவமே இன்னும் உஞற்றுகென
நின்ற திருவும் நாமகளும்
பிறரும் இனைய நிகழ்த்தினரால். …… 27

என்றென்று உன்னி உயிர்த்து இரங்கும் இறைவி செய்கை – என்றிவ்வாறு நினைத்து நெட்டுயிர்த்து இரங்குகின்ற இறைவியின் செய்கையை, எதிர் நோக்கி – உற்றுநோக்கி, மன்றல் நாறுங் குழல் வேதவல்லி – மணங் கமழும் கூந்தலினையுடைய வேதவல்லியானவள், புல்லி – அணைந்து, மனம் தளரேல் – மகளே மனந்தளராதே, உன் தன் கணவன் பெறும் வாயில் – உனது கணவனை நீ அடைதற்கு வழி, தவமே – தவமேயாகும், இன்னும் உஞற்றுக என – மேலும் அதனையே செய்க என்று கூற, நின்ற திருவும் நாமகளும் பிறரும் – அங்கே நின்ற திருமகளும் நாமகளும் மற்றைய தேவமகளிரும், இனைய நிகழ்த்தினர் – இவ்வாறு கூறினார்கள். [பக்கம் 10/21]

அன்னை வாழி இதுகேண்மோ
அகில முழுதும் அளித்தனையால்
என்ன பொருளும் நின்னுருவே
யாண்டும் நீங்கா நின்கணவன்
தன்னை மறைக்கு மறையுளதோ
தவத்தை அளிப்பான் நினைந்தனையோ
உன்னல் அரிதாம் நுமதாடல்
முழுதும் யாரே உணர்கிற்பார். …… 28

அன்னை இது கேள் – உலகமாதாவே இதனைக் கேட்பாயாக, அகிலம் முழுதும் அளித்தனை – உலகம் முழுவதையும் நீயே பெற்றாய்; என்ன பொருளும் நின் உருவே – எல்லாப் பொருள்களும் உனது வடிவமேயாம்; யாண்டும் நீங்கா நின் கணவன் தன்னை – எவ்விடத்தும் நீங்காது நிறைந்த உன் நாயகரை, மறைக்கும் மறை உளதோ – நீ காணதே மறைக்கும் மறைப்புமொன் றுளதாமோ; தவத்தை அளிப்பான் நினைத்தாயோ – தவத்தைப் பாதுகாத்தற்குத் திருவுளங் கொண்டாய் போலும்; நுமது ஆடல் உன்னல் அரிது – நாயகரும் நீயும் செய்யுநீ திருவிளையாடல் எம்மனோரால் நினைத்தற் கரியதாம்; முழுதும் உணர்கிற்பார் யார் – நும்மியல்பை முற்றும் உணரவல்லார் யாவர்?
வாழி அசை [பக்கம்10/21]

வாக்கின் மனத்தில் தொடர்வரு நின்மகிணன்
தனையும் உன்றனையும்
நோக்க முற்றோம் தஞ்சமென
நுவறல் செய்யா வினையாவும்
போக்க லுற்றோம் தோற்றமுறும்
புரையுந் தீர்ந்தோம் போதமனந்
தேக்க லுற்றோம் உய்ந்துமியாஞ்
செய்யுந் தவமுஞ் சிறிதன்றே. …… 29

வாக்கின் மனத்தின் தொடர்வு அரும் – வாக்கினாலும் மனத்தினாலுந் தொடர்தற்கரிய, நின் மகிணன் தனையும் உன தனையும் – உன்னுடைய நாயகரையும் உன்னையும், நோக்கம் உற்றோம் – தரிசிக்கப்பெற்றோம்; தஞ்சம் என நுவறல் செய்து வினை யாவும் போக்கல் உற்றோம் – நுமக் கடைக்கலம் என்று கூறி எங்கள் வினைகள் முழுவதையும் போக்கிவிட்டோம்; தோற்றம் உறும் புரையும் தீர்ந்தோம் – பிறவி எடுக்குங் குற்றமும் நீங்கினோம்; மனம் போதம் தேக்கல் உற்றோம் – மத்தில் ஞான நிறைவு பொருந்தப்பெற்றோம்; உய்ந்தும் – இவ்வாற்றால் உய்தி கூனினோம்; யாம் செய்யும் தவமும் சிறிதன்று – யாம் செய்த தவமேயன்றி இனிச் செய்யுந் தவமும் அற்பம் அன்று.
உய்ந்தோமாதலின் இனிச் செய்யுந் தவமும் அற்பம் ஆகா தென்பதாம். [பக்கம்11/21]

என்னா இயம்பி வாழ்த்தெடுப்ப
இறைவி அவர்க்கண் டினிதருள்செய்
தன்னார் பொய்தல் ஒருவிப்போய்
அருமா தவமே புரிவாளாய்
முன்னா முன்னைக் கடிமாடம்
முயன்று போந்தாள் இவ்வனைத்தும்
நன்னா ரணனே முதலானோர்
நோக்கி நனிவிம் மிதரானார். …… 30

என்னா இயம்பி வாழ்த்து எடுப்ப – என்று கூறி வாழ்த்துச் சொல்ல, இறைவி அவர்க்கண்டு இனிது அருள் செய்து – உமாதேவியார் அவர்களை நோக்கி இனிதாகத் திருவருள் செய்து, அன்னார் பொய்தல் ஒருவிப்போய் – அம் மகளிர்கூட்டத்தை நீங்கிச் சென்று, அரு மா தவமே புரிவாளாய் – அரிய சிறந்த தவத்தையே செய்பவராய், முன்னா முயன்று – அத் தவத்தினையே திருவுளங்கொண்டு, முன்னைக் கடி மாடம் போந்தாள் – முன்னிருந்த தவஞ்செய்த காவல் பொருந்திய தவச்சாலையை அடைந்தார்; இவ் அனைத்தும் – இவையனைத்தையும், நல் நாரணனே முதலானோர் நோக்கி – நல்ல திருமால் முதலியவர்கள் கண்டு, நனி விம்மிதர் ஆனார் – மிக ஆச்சரியம் அடைந்தார்கள். [பக்கம் 11/21]

எங்குற் றனன்கொல் இறையென்பார்
இஃதோர் மாயம் எனவுரைப்பார்
மங்கைக் கொளித்த தென்னென்பார்
வாரி காண்டு மேலென்பார்
அங்கித் தகைய பலபலசொற்
றலமந் தேங்கி யதிசயித்துக்
கங்குற் போதின் மாசூர்ந்த
கதிர்போன் மாழ்கிக் கவலுற்றார். …… 31

இறை எங்கு உற்றனன் என்பார் – சிவபெருமான் எங்கே போயினாரோ என்பார் சிலர்; இஃது ஓர் மாயம் என உரைபார் – இஃது மாயம் இருந்தவாறு என்பார் சிலர்; மங்கைக்கு ஒளித்தது என் என்பார் – தமது தேவியாருக்கு ஒளித்தது என்னை என்பார் சிலர்; மேல் வாரி காண்டும் என்பார் – மேல் வரக்கடவதை இருந்து பார்ப்போம் என்பார் சிலர்; அங்கு இத்தகைய பல பல சொற்று – இங்கனமாக அங்கே இவைபோல்வன பலப்பல கூறி, அமைந்து ஏங்கி அதிசயித்து – கலங்கி ஏங்கி ஆச்சரியப்பட்டு, கங்குற்போதில் மாசு ஊர்ந்த – இராக்காலத்தில் மேகத்தால் மூடப்பட்ட, கதிர் போன்று – சந்திரனைப் போன்று, மாழ்கிக் கவல் உற்றார் – ஒளிமடங்கிக் கவலை அடைந்தார்.
மாசு – மேகம், மாழ்குதல் – மயங்குதல், இங்கே ஒளிகுன்றுதல். [பக்கம் 12/21]

நோக்குற் றனைய பான்மைதனை
நொய்தில் தக்கன் நனிகனன்று
தீக்கட் கறங்க வெய்துயிர்த்துச்
செம்பொற் கடகக் கைபுடைத்து
மூக்கிற் கரந்தொட் டகம்புழுங்க
முறுவல் செய்து முடிதுளக்கி
ஆக்கத் தொடியாம் புரிவதுவை
ஆற்ற அழகி தாமென்றான். …… 32

தக்கன் அனைய பான்மைதனை நொய்தில் நோக்குற்று – தக்கன் அத் தன்மைகளையெல்லாம் விரைந்து நோக்கி, நனி கனன்று – மிகவுங் கோபங்கொண்டு, தீ கண் கறங்க வெய்துயிர்த்து – தீகாலுங் கண்கள் சுழலச் சுடுமூச்சு விட்டு, செம் பொன் கடகக் கை புடைத்து – செம்பொன்னாலான கடகமணிந்த கையை தட்டி, மூக்கில் கரம் தொட்டு – மூக்கின்மீது கைவிரல் வைத்து, அகம் புழுங்க முறுவல் செய்து – மனம் புழுங்கச் சிரித்து, முடி துளக்கி – தலையசைத்து, ஆக்கத்தொடு யாம் புரி வதுவை – அட்ட ஐசுவரியத்தோடு நாம் செய்த கலியாணம், ஆற்ற அழகிதாம் என்றான் – மிகவும் அழகாயிருக்கிறது என்று கூறினான். [பக்கம் 12/21]

வரந்தா னுதவும் பெற்றியினான்
மற்றென் மகடூஉ வயின்வாரா
இரந்தான் அதனை யான்வினவி
இயல்பின் வதுவை முறைநாடி
நிரந்தார் கின்ற சுரர்காண
நெறியால் நேர்ந்தேன் நேர்ந்ததற்பின்
கரந்தான் யாரு மானமுற
நவையொன் றென்பாற் கண்டானோ. …… 33

வரம் தான் உதவும் பெற்றியினால் – வரவேண்டும் முறையாக, என் மகடூஉ வயின் வாரா – என் மகளிடத்து வந்து, இரந்தான் – தன்னை மணஞ் செய்துகொள்ளும்படி இரந்தான், அதனை யான் வினவி – அதனை யான் கேட்டு, இயல்பின் வதுவை முறை நாடி – உலகியலாகச் செய்யப்படும் விவாக முறையை ஆராய்ந்து, நிரந்து ஆர்கின்ற சுரர் காணா – செறிந்து நிறைந்த தேவர்கள் சான்றாக, நெறியால் நேர்ந்தேன் – முறையாக மணஞ்செய்து கொடுத்தேன், நேர்ந்ததன்பின் யாரும் மானம் உற கரந்தான் – கொடுத்தபின் யாவரும் வெட்கம் உறும்படி மறைந்தான்; நமை ஒன்று என்பால் கண்டானோ – யாதொரு குற்றத்தையாயினும் என்னிடத்துக் கண்டானோ?
வரம் தான் உதவு பெற்றியினால் என்பதற்கு முன் மானத வாவியிலே தவஞ் செய்தபொழுது தான் எனக்குத் தந்த வரத்தின் தன்மையினால் என்றுரைப்பினு மமையும். [பக்கம் 13/21]

புனையுந் தொன்மைக் கடிவினையைப்
புன்மை யாக்கி ஊறுபுணர்த்
தெனையும் பழியின் மூழ்குவித்தே
இறையும் எண்ணா தொளித்தானே
அனையுந் தாதை யுந்தமரும்
ஆரும் இன்றி அகன்பொதுவே
மனையென் றாடும் ஒருபித்தன்
மறையோ னாகில் மயல்போமோ. …… 34

புனையும் தொன்மைக் கடிவினையைப் புன்மை ஆக்கி – செய்யாநின்ற பழைமையாகிய திருமணத்தை இழிவாக்கி, ஊறு புணர்த்து – இடையூறு செய்து, எனையும் பழியின் மூழ்குவித்து – என்னையும் பழியில் மூழ்கச்செய்து, இறையும் எண்னாது – சிறிதும் மதியாது, ஒளித்தானே -மறைந்தானே; அனையும் தாதையும் தமரும் ஆரும் இன்றி அகன் பொதுவே மனையென்று ஆடும் ஒரு பித்தன் – தாயுந் தந்தையுஞ் சுற்றத்தினரும் ஆகிய எவருமின்றி விசாலமான அம்பலமே தனது வீடென்று கூத்தாடுகின்ற ஒரு பித்தன் அவன்; மறையோன் ஆகில் மயல் போமோ – மறையோனாயவிடின் அவனுக்கு அந்தப் பித்தம் நீங்குமோ?
பொது மாயானமுமாம். மறையோன், மறைதலையுடையோன், பிராமணன் என இரு பொருள் பயந்து நின்றது. எவ்வாற்றானும் அவன் பித்தனே பித்தன் என்றானாம். [பக்கம் 13/21]

ஆயிற் றீதே அவனியற்கை
அறிந்தேன் இந்நாள் யானென்று
தீயுற் றெனவே உளம்வெதும்பித்
திருமால் முதலாந் தேவர்தமைப்
போயுற் றிடுநும் புரத்தென்று
போக விடுத்துப் புனிதன்செய்
மாயத் தினையே யுன்னியுன்னி
வதிந்தான் செற்றம் பொதிந்தானே. …… 35

ஆயின் அவன் இயற்கை தீதே – ஆராயுமிடத்து அந்தப் பித்தனின் இயற்கை தீயதே. யான் இந்நாள் அறிந்தேன் என்று – யான் இதுபோழ்ந்து உள்ளவாறறிந்தேன் என்று கூரி, தீ உற்றென உளம் வெதும்பி – தீப்பட்டாற் போல மனங் கொதித்து, திருமால் முதலாம் தேவர் தமை நும்புரத்துப் போயுற்றிடும் என்று போகவிடுத்து – திருமால் முதலிய தேவர்கலை உங்கள் நகரங்களுக்குப் போங்கள் என்று அனுப்பிவிட்டு, புனிதன் செய் மாயத்தினையே உன்னி உன்னி – புனிதராகிய சிவபெருமான் செய்த மாயத்தையே நினைந்து நினைந்து, செற்றம் பொதிந்தான் வதிந்தான் – மன வயிரத்தினாலே பொதியப்பெற்றோனாய் இருந்தான். [பக்கம் 14/21]

பொன்னார் மேனிக் கவுரிமுன்னைப்
பொலன்மா ளிகையிற் போந்துலப்பின்
மின்னார் செறிந்த பண்ணையுடன்
மேவி அங்கண் வீற்றிருந்து
பன்னாள் ஈசன் தனையெய்தப்
பரிந்து நோற்கப் பண்ணவனோர்
நன்னாள் அதனில் தாபதன்போல்
நடந்தான் அவள்தன் இடந்தானே. …… 36

பொன்னார் மேனிக் கவுரி – கிளிச்சிறை என்னும் பசும் பொன் போன்ற மேனியையுடைய கெளரியாகிய உமையம்மையார், முன்னைப் பொலன் மாளிகையிற் போந்து – முன்னர்த் தவஞ்செய்த அழகிய தவச்சாலைக்கட் சென்று, உலப்பு இல் மின்னார் செறிந்த பண்ணையுடன் மேவி – அளவற்ற செறிந்த மின்னலை ஒத்த மகளிர் கூட்டத்தோடு பொருந்தி, அங்கண் வீற்றிருந்து – அங்கே இருந்து, ஈசன் தனை எய்தப் பரிந்து – சிவபெருமானை அடையும்படி விரும்பி, பல்நாள் நோற்க – பல நாள் தவஞ்செய்ய, ஓர் நல் நாள் அதனில் – ஒரு நல்ல தினத்தில் , பண்ணவன் தாபதன் போல் அவள் தன் இடம் நடந்தான் – சிவபெருமான் ஒரு தவசியைப்போல வேடம் பூண்டு அவ்வுமாதேவியார் தவஞ்செய்யும் இடத்துக்கு நடந்தருளினார்.

தாபதன் ஈண்டுக் கபாலி, தான் , ஏ அசை. [பக்கம் 14/21]

நலனேந் தியவெண் டலைக்கலனும்
நறிய களப நீற்றணியுங்
களனேந் தியகண் டிகைதொடுத்த
கவின்சேர் வடமுங் கடிப்பிணையும்
நிலனேந் தியதா ளிடைமிழற்றும்
நீடு மறையின் பரியகமும்
வலனேந் தியசூ லமும்பின்னல்
வனப்புங் காட்டி வந்தனனே. …… 37

நலன் ஏந்திய வெண் தலைக் கலனும் – பிரம விஷ்ணுக்களின் நன்மையின் பொருட்டு ஏந்திய வெண்மையாகிய சிர கபாலமாகிய பிஷாபாத்திரமும், நறிய களப நீற்றணியும் – மணம் பொருந்திய கலவைச் சாந்தோடு கூடிய வீபுதிப் பூச்சும், கலன் ஏந்திய – ஆபரணமாக அணிந்த, கவின்சேர் கண்டிகை தொடுத்த வடமும் – அழகிய உருத்திராக்க வடமும், கடிப் பிணையும் – காதணியும், நிலன் ஏந்திய தாளிடை – உலகுக்கு ஆதாரமாகிய பாதங்களில், மிழற்றும் நீடு மறையின் பரியகமும் – ஒலிக்கின்ற உயர்ந்த வேதச் சிலம்பும், வலன் ஏந்திய சூலமும் – வலக்கரத்திலே தாங்கிய சூலப்படையும், பின்னல் வனப்பும் – சடையின் அழகும், காட்டி – ஆகிய வடிவத்தை காட்டி, வந்தனன் – எழுந்தருளினார்.
தலைக்கல்ன் தலைமாலையுமாம் . [பக்கம் 15/21]

வேறு
வந்துமை முற்பட வந்த வனைக்கண்
டெந்தை பிராற்கினி யாரிவ ரென்னாச்
சிந்தனை செய்தெதிர் சென்றுகை கூப்பி
அந்தரி போற்றினள் அன்புறு நீரால். …… 38

வந்து – இத்தகைய கோலத்தோடு எழுந்தருளி, உமை முற்பட – உமாதேவியாருக்கு முன்னிலையில் தோன்ற, வந்தவனைக் கண்டு – வந்த அந்தக் காபாலரைத் தரிசித்து, இவர் எந்தை பிராற்கு இனியார் என்னா சிந்தனை செய்து – இவர் எம் பரமபிதாவாகிய சிவபெருமானுக்கு இனியவர் என்று கருதி, அந்திரி எதிர் சென்று கைகூப்பி – உமாதேவியார் எதிர் சென்று கைகூப்பி, அன்புறு நீரால் போன்றினள் – அன்பு மிகுகின்ற இயல்பானே துதித்தா. [பக்கம் 15/21]

பற்றொடு சென்று பராய்த்தொழும் எல்லைப்
பெற்றம் அதன்மிசை பெண்ணிட மன்றி
மற்றுள தொல்வடி வத்தொடு நித்தன்
உற்றனன் அவ்விடை ஒண்டொடி காண. …… 39

பற்றொடு சென்று பராய்த் தொழும் எல்லை – ஆராமையோடு எதிர் சென்று துதித்து வணங்குஞ் சமயத்திலே, பெற்றம் அதன் மிசை -இடபவாகனத்தின்மீது, இடம் பெண் அன்றி – இடப்பாகத்தில் சக்தி இல்லாமல், நித்தன் உள தொல் வடிவத்தொடு – நித்தியராகிய சிவபெருமான் தாமாந்தன்மை அறிதற் குரியதாயுள்ள பழையதாகிய திருவடித்தோடு, ஒண்தொடி காண அ இடை – ஒள்ளிய வளைஅலையணிந்த தாக்‌ஷாயணியாகிய உமாதேவியார் காணும்படி அவ்விடத்தில் வெளிப்பட்டார். [பக்கம் 16/21]

பார்ப்பதி யாகிய பாவை நுதற்கண்
நாற்புயன் என்வயின் நண்ணினன் என்னா
ஏற்புறு சிந்தைகொ டின்னல் இகந்தே
மேற்படும் ஓகையின் வீற்றின ளானாள். …… 40

பார்ப்பதியாகிய பாவை – உமாதேவியார், நுதற்கண் நாற்புயன் என் வயின் நண்ணினர் என்னா – நெற்றிக்கண்களையும் நான்கு புயங்களையு முடைய சிவபெருமான் என்பால் எளிவந்தருளினா ரென்று, ஏற்புறு சிந்தை கொடு – அப்பெருமான்பால் இசைவு மிக்கு ஒன்றிய மனத்தையுடையவராய், இன்னல் இகந்து – துன்பங்களைக் கடந்து, மேற்படும் ஓகையின் வீற்றினள் ஆனாள் – மேற்பட்டெழுகின்ற உவகைப்பெருக்கில் மூழ்கியவர் ஆயினார் [16/21]

பன்முறை வீழ்ந்து பணிந்து பராவி
என்முனம் முந்தை இகந்தனை இன்றிப்
புன்மையை நீக்குதி போந்தனை கொல்லோ
சின்மய என்றெதிர் சென்றுரை செய்தாள். …… 41

பன்முறை வீழ்ந்து பணிந்து பராவி – பலமுறை விழுந்து வணங்கித் துதித்து, என்முனம் முந்தை இகந்தனை – என் முன்னிலையில் முன்னர் என்னைக்கைவிட்டு மறைந்தருளினீர்; இன்று இப் புன்மையை – இப்பொழுது என்னை இகத்தற்குக் காரணமாய் என்பாலுள்ள இச் சிறுமையை, நீக்குதி போந்தனை கொல் – நீக்கியருள்வீராய் எழுந்தருளினீர் போலும்; சின் மய என்று – ஞானமயமானவரே என்று, எதிர் சென்று உரை செய்தாள் – எதிர்சென்று குறையிரந்து கூறினார்.[பக்கம் 16/21]

அம்முறை செப்பும் அணங்கு தனைக்கூய்
மைம்மலி கண்டன் மலர்க்கரம் ஓச்சித்
தெம்முனை சாடுறு சீர்விடை மேற்கொண்
டிம்மென வேதன் இடத்தினில் வைத்தான். …… 42

அம்முறை செப்பும் அணங்குதனைக் கூய் – அவ்வணங் கூறும் உமாதேவியாரை வருக என்றழைத்து, மைம் மலி கண்டன் மலர்க் கரம் ஒச்சி – நீலகண்டராகிய சிவபெருமான் மலர்போன்ற திருக்கரத்தினை நீட்டி, தெம்முனை சாடுறு சீர் விடைமேற்கொண்டு – பகை முனையை அழிக்கின்ற சிறப்புப் பொருந்திய இடபத்தின்மீது இவரும்படி செய்து, இம்மென தன் இடத்தினில் வைத்தான் – விரைவாக தனது இடப்பாகத்தில் இருத்தியருளினார். [பக்கம்17/21]

நீல்விட மேயினன் நேரிழை யோடும்
பால்விடை ஊர்ந்து படர்ந்தனன் வெள்ளி
மால்வரை ஏகினன் மற்றவள் பாங்கர்
வேல்விழி மாதர் விரைந்தது கண்டார். …… 43

நீல் விடம் மேயினன் – நீலநிறமான விடத்தைக் கண்டத்திற் பொருந்தியவராகிய சிவபெருமான், நேரிழையோடும் – உமாதேவியாருடன், பால் விடை ஊர்ந்து படர்ந்தனன் – வெள்ளிய இடபத்தை ஊர்ந்து சென்று, வெள்ளிமால்வரை ஏகினன் – பெருமை பொருந்திய திருக்கைலாச மலையை அடைந்தார்; அவள் பாங்கர் வேல் விழி மாதர் – அந்த உமாதேவியாரின் பக்கத்து நின்ற வேல் போன்ற கண்களையுடைய சேடியர்கள், விரைந்து கண்டார் – பிராட்டி பெருமானுடன் விரைந்து சென்றதனைக் கண்டார்கள். [பக்கம் 17/21]

இக்கென உட்கி இரங்கினர் ஏகித்
தக்கன் இருந்திடு சங்கமுன் ஆகிச்
செக்க ரெனத்திகழ் செஞ்சடை அண்ணல்
புக்கன னால்ஒரு புண்ணிய னேபோல். …… 44

இக்கு என் உட்கி – சாறுபோன உள்ளீடற்றா கரும்பு போல மனம் உட்கி, இரங்கினர் ஏகி – இரக்கங்கொண்டு சென்று, தக்கன் இருந்திடு சங்கம் முன் ஆகி – தக்கன் இருக்குஞ் சபைமுன் அணுகி, செக்கர் எனத் திகழ் செஞ்சடை அண்ணல் – செவ்வானம்போல விளங்குகின்ற சிவந்த சடையினையுடைய சிவபெருமான், ஒரு புண்ணியன் போல் புக்கனன – ஒரு முனிவர் போலத் தவச்சாலையை அடைந்தார். [பக்கம் 17/21]

கண்டனள் நின்மகள் கைதவம் ஓராள்
அண்டினள் சேர்தலும் ஆயவன் வல்லே
பண்டை யுருக்கொடு பாற்பட அன்னாட்
கொண்டுசெல் வான்இது கூறுவ தென்றார். …… 45

நின்மகள் கண்டனள் – உனது மகள் கண்டு, கைதவம் ஓராள் – கபடத்தை உணராமல், அண்டினள் சேர்தலும் – அணுகுதலும், ஆயவன் – அந்த வேடதாரி, வல்லே பண்டை உரு கொடு – விரைந்து பழைய உருவத்தை எடுத்துக்கொண்டு, அன்னாள் பாற்படக் கொண்டு செல்வான் – அவ்வுமையைப் பக்கத்தில் இருந்திக்கொண்டு செல்வாராயினார்; இது கூறுவது என்றார் – இது ஈண்டு யாம் விண்ணப்பிப்பது என்றார்கள். [பக்கம் 18/21]

பாங்கியர் இன்ன பகர்ந்தன கேளாத்
தீங்கனல் மீமிசை தீயதோர் தூநெய்
ஆங்குபெய் தென்ன அளப்பில செற்றந்
தாங்கி யுயிர்ப்பொடு தக்கன் இருந்தான். …… 46

பாங்கியர் இன்ன பகர்ந்தன கேளா – பாங்கியர்கள் இவ்வாறு கூறியவைகளைக் கேட்டு, தீங்கினல் மீமிசை எரிகின்ற அக்கினியின்மீது, ஆங்கு – எரியும்போது, தீயது ஓர் தூநெய் பெய்தென்ன – உருக்கியதும் மிகத் தூயதுமாகிய நெய்யைச் சொரிந்தா வெவ்வாறாமோ அவ்வாறு, அளப்பு இல செற்றம் தாங்கி – அளவற்ற கோபங் கொண்டு, உயிர்பொடு – நெட்டுயிர்ப்போடு, தக்கன் இருந்தான் – தக்கன் என்பவன் இருந்தான்.
தீக்கனல் எதுகை நோக்கி தீங்கனல் என்றாயிற்று. [பக்கம் 18/21]

அக்கணம் வானவர் ஆயினர் எல்லாந்
தொக்கனர் வந்து தொழுங்கடன் ஆற்றிப்
பக்கம தூடு பராவினர் வைகத்
தக்கன் அவர்க்கிவை சாற்றுதல் உற்றான். …… 47

அக்கணம் வானவ ராயினர் எல்லாம் தொக்கனர் வந்து – அப்பொழுது தேவர்களெல்லாங் குழுமி வந்து, தொழும் கடன் அற்றி – தொழுதலாகிய கடனைச் செய்து, பக்கமதூடு பராயினர் வைக – பக்கத்திலே துதிசெய்து கொண்டிருக்க, அவர்க்கு இவை தக்கன் சாற்றுதல் உற்றான் – அத் தேவர்களுக்கு இவைகளைத் தக்கன் சொல்லுவான் ஆயினான். [18/21]

என்புகல் வேன்இனி என்மகள் தன்னை
அன்புற வேட்டருள் ஆல மிடற்றோன்
மன்புனை யுங்கடி மன்றல் இயற்று
முன்பு கரந்தனன் முன்னரி தாகி. …… 48

இனி என் புகவேன் – யான் இனி என்ன சொல்லுவேன், என் மகள் தனை அன்பு உற வேட்டருள் ஆல மிடற்றோன் – என் புதல்வியை விருப்போடு மணந்த நீலகண்டனாகிய சிவன், மன் புனையும் கடி மன்றல் இயற்று முன்பு – பெரிதும் அலங்கரித்துச் செய்யும் மணச்சடங்கு நிறைவேறுதற்கு முன்பு, முன் அரிதாகிக் கரந்தனன் – யாவருக்கும் எதிரிலே தன் வடிவங் காணுதற் கரிதாகி மறைதலைச் செய்தனன். [பக்கம் 18/21]

அற்றல தின்றும் என்ஆடவள் பாங்கில்
கற்றை முடிக்கொள் கபாலி யெனச்சென்
றுற்றனன் என்முன் உறாமல் ஒளித்தான்
பற்றி னன்அன் னவளைப் படர்கின்றான். …… 49

அற்று அலது – அத்தன்மையே யல்லாமல், இன்றும் என் ஆடவள் பாங்கில் – இன்றும் என் மகளிடம், கற்றை முடிகொள் கபாலி எனச் சென்று உற்றனன் – தொகுதியான மிடியினை யுடைய காபால வேடதரிபோலச் சென்றடைந்து, என்முன் உறாமல் ஒளித்தான் – என்னெதிரில் வாராமல் மறைந்து, அன்னவளைப் பற்றினன் படர்கின்றான் – அவளைக் கைப்பற்றிக்கொண்டு செல்லுகின்றான். [பக்கம் 19/21]

அன்னையும் அத்தனும் ஆர்வமொ டீய
மன்னிய கேளிர் மகிழ்ந்தனர் வாழ்த்தப்
பின்னர் மகட்கொடு பேர்ந்திலன் ஈன்றோர்
தன்னை மறைத்திது செய்வது சால்போ. …… 50

அன்னையும் அத்தனும் ஆர்வமொடு ஈய – மாதாவும் பிதாவும் அன்போடு தத்தஞ் செய்ய, மன்னிய கேளிர் மகிழ்ந்தனர் வாழ்த்த – நெருங்கிய சுற்றத்தவர் மகிழ்ந்து வாழ்த்த, பின்ன்னர் – அதன்பிறகு, மகல் கொடு போர்ந்திலன் – மகளை அழைத்துக்கொண்டு முறைப்படி சென்றானல்லன், ஈன்றோர் தன்னை மறைத்து இது செய்வது சால்போ – பெற்றோரை மறைத்து இவாறு செய்வது சான்றாண்மையாகுமே?
[பக்கம்19/21]

இங்கிது போல்வன யாவர்செய் கிற்பார்
சங்கர னேல்இது தான்செய லாமோ
நங்கள் குலத்தை நவைக்கண் உறுத்தான்
அங்கது மன்றியென் னாணையும் நீத்தான். …… 51

இங்கு இது போல்வன யாவர் செய்கிற்பார் – எந்து ஆஞ்சைக்குட்பட்ட இங்கே இதுபோலவன கருமத்தை யாவரே செய்ய வல்லவர்?, தான் சங்கரனேல் – தான் சுகத்தைச் செய்பவன் என்னும் பெயருடையனே யானால், இது செயல் ஆமோ – இவ்வாறு செய்தல் ஆகாதே; நங்கள் குலத்தை நவைக்கண் உறுத்தான் – நமது குலத்தைக் குற்றத்தின்கட் படுத்தினான்; அங்கு அதும் அன்றி – இங்கனமாத லன்றி, என் ஆணையும் நீத்தான் – என் ஆணையையுங் கடந்தான். [பக்கம் 19/21]

வேறு
இரந்தனன் சிவனெனும் ஏதம் எங்கணும்
நிரந்தது மற்றது நிற்க இவ்விடை
கரந்தனன் என்பதோர் உரையுங் காசினி
பரந்தது வேறுமோர் பழியுண் டாயதே. …… 52

சிவன் எங்கணும் இரந்தனன் எனும் ஏதம் நிரந்தது – சிவன் எங்கும் பிஷை வேண்டி இரந்தான் என்கின்ற குற்றம் முன்னமே நிறைந்துள்ளது; அது நிற்க – அது அவ்வாறிருக்க; இவ்விடை கரந்தனன் என்பது ஓர் உரையும் காசினி பரந்து – இவ்விடத்த்திற்கு கரந்தான் என்கின்றதொரு வார்த்தையும் உலகிற் பரவியது; வேறும் ஓர் பழி உண்டாயது – அந்த இரண்டன்மேல் மற்றுமொரு பழியும் இப்பொழுது உளதாயது.
அப்பழியாவது களவு. [பக்கம் 20/21]

பண்டொரு பாவையைப் பரிந்து மன்றல்வாய்
ஒண்டொடிச் செங்கையின் உதக மேவுறக்
கொண்டிலன் என்பதுங் கொள்ளு நீரரைக்
கண்டிலன் என்பதுங் காட்டி னானரோ. …… 53

பண்டு ஒரு பாவையை – முன்பு ஒரு பெண்ணை, பரிந்து – விரும்பி, மன்றல் வாய் – திருமணச் சடங்கில், ஒண் தொடிச் செங்கையில் – ஒள்ளிய கங்கணம் அணிந்த சிவந்த கையில், உத்தகம் மேவுற – தாரைநீரோடு பொருந்த, கொண்டிலன் என்பதும் – ஏற்றுப் பழகாதவன் என்பதையும், கொள்ளும் நீரரை – அவ்வாறு முறையானே ஏற்கும் இயல்புடையாரை, கண்டிலம் என்பதும் – கண்டும் அறியாதவன் என்பதையும், காட்டினான் – இங்கே காட்டிவிட்டான்.
மணஞ்செய்து பழக்கம் இல்லாதவன்; மணந்தாரைக் கண்டு மறியாதவன் என்றவாறு [பக்கம் 20/21]

என்றிவை பற்பல இசைத்துச் செய்நலங்
கொன்றிடு சிறுவிதி குழுமித் தன்புடைத்
துன்றிய சுரர்தமைத் தொல்லைத் தத்தமூர்
சென்றிட ஏவினன் செயிர்த்து வைகினான். …… 54

என்று இவை பற்பல இசைத்து – என்றிவ்வாறு பலவற்றைச் சொல்லி, செய்நலம் கொன்றிடு சிறு விதி – செய்ந்நன்றி கொன்றோனாகிய தக்கன், தன்புடைக் குழுமித் துன்றிய சுரர்தமை – தன் பக்கத்திற் குழுமி நெருந்ங்கியிருந்த தேவர்களை, தத்தம் தொல்லை ஊர் சென்றிட ஏவினன் – தமது பழைமையாகிய இடங்களுக்குச் செல்லும்படி ஏவி, செயிர்த்து வைகினான் – தான் கோபித்தவாறிருந்தான். [பக்கம் 20/21]

கறுவுகொள் நெஞ்சொடு கயவன் அன்றுதொட்
டிறைவனை நினைக்கிலன் எள்ளும் நீர்மையான்
உறுதலும் சிலபகல் உயங்கி இச்செயல்
அறிதரும் அயன்முதல் அமரர் தேர்குவார். …… 55

கயவன் – கீழோனான தக்கன், அன்று தொட்டு – அன்று முதலாக, கறுவு கொள் நெஞ்சொடு இறைவனை நினைக்கிலன் – கறுவுதலைக் கொண்ட மனதோடு சிவபெருமானைச் சிந்தியாதவனாய், எள்ளும் நீர்மையான் உறுதலும் – இகழும் இயல்பினனா யிருத்தலும், இச்செயல் அறிதரும் அயான் முதல் அமரர் – இச்செயலையறிந்த பிராமா முதலிய தேவர்கள், சில பகல் உயங்கி – சில தினம் வருந்தியிருந்து, தேர்குவார் – பின் சிந்திப்பாராயினார். [பக்கம் 21/21]

திருமணப் படலம் முற்றிற்று

ஆகத் திருவிருத்தம் – 347

தட்சகாண்டம்