7 உமை தவம்புரி படலம்

7 உமை தவம்புரி படலம்

கொண்டுதன தில்லில் குறுகியபின் வேதவல்லி
மண்டுபெருங் காதலொடு மகண்மையாவ ளர்த்தனளால்
அண்டமள வில்லனவும் அலகிலா உயிர்த்தொகையும்
பண்டுதன துந்தியினால் படைத்தருளும் பராபரையை. …… 1

அளவு இல்லன அண்டமும் அலகு இலா உயிர்த்தொகையும் – அளவில்லாத அண்டங்களையும் எண்ணில்லாத உயிர்க் கூட்டங்களையும், பண்டு – சிருட்டி காலத்தில், தனது உந்தியினாற் படைத்தருளும் பாராபரையை – தமது திருவயிற்றினின்றும் படைத்தருளிய பராபரையாகிய உமாதேவியாரை, வேதவல்லி கொண்டு தனது இல்லிற் குறுகியபின் – வேதவல்லி தன் கணவனிடம் பெற்றுக்கொண்டு தன் மாளிகையை அடைந்த பிறகு, மண்டு பெருங் காதலொடு – அதிகரிக்கின்ற மிக்க பேரன்போடு, மகண்மையா வளர்த்தனள் – தன் புதல்வியாகிய வளர்த்தாள். [1-12]

வளருமதிக் குழவியென மாநிலமேல் தவழ்தலொடுந்
தளருநடை பயில்கின்ற தாறுமுடன் தப்பியபின்
முளையெயிறுள் ளெழுபோத முளைத்ததெனத் தோன்றுதலும்
அளவிலுயிர் முழுதீன்றாள் ஐந்தாண்டு நிரம்பினளால். …… 2

அளவு இல் முழுது உயிர் ஈன்றாள் – எண்ணற்ற உயிர் முழுவதையும் ஈன்றருளிய உமாதேவியார், வளரு மதிக்குழவி என – வளருகின்ற பிறைச் சந்திரன் போன்று வளர்ந்து, மா நிலமேல் தவழ்தலொடும் – பெரிய பூமியின் மீது தவழும் பருவமும், தளரு நடை பயில்கின்ற தாறும் – தளர்நடையில் பயில்கின்ற வருகைப் பருவமும், உடன் தப்பிய பின் – ஒருங்கு கழிந்த பிறகு, உள் எழு போதம் முளைத்தது என் – உள்ளத்தினுள்ளே எழுகின்ற ஞான போதம் முளை கொண்டதுபோல, முளை எயிரு தோன்றுதலும் – நாணன் முளை போன்ற பல் முளைகொள்ள, ஆண்டும் ஐந்து நிரம்பினள் – வயசும் ஐச்து நிரம்பியவர் ஆயினார். [1/12]

ஆறான ஆண்டெல்லை அணைதலும்அம் பிகைதனக்கோர்
கூறான பிரான்றன்னைக் கோடன்முறை குணித்தனளாய்
மாறாது நோற்பலென மனங்கொண்டி யாய்தனக்கும்
பேறான தக்கனெனும் பெருந்தவற்கும் இஃதுரைத்தாள். …… 3

ஆறான ஆண்டு எல்லை அணைதலும் – ஆறாவது வயசு வருதலும், அம்பிகை தனக்கு ஓர் கூறான பிரான் தன்னைக் கோடன் முறை குணித்தனளாய் – உமையம்மையார் தமது ஒரு கூறான சிவபெருமான் தம்மை மணஞ் செய்துகொள்ளும் முறையை எண்ணியவராய், மாறாது நோற்பல் என மனங் கொண்டு – தவறாது தவஞ் செய்வேன் என்று திருவுளங்கொண்டு, யாய் தனக்கும் – மாதாவாகிய வேதவல்லிக்கும், பேறு ஆன தக்கன் எனும் பெருந் தவற்கும் – தவப்பேறு சித்தித்த தந்தையாகிய தக்கன் என்னும் பெரிய தவத்தோனுக்கும், இஃது உரைத்தாள் – தாம் மேற்கொண்ட இச்செயலை உரைத்தருளினார். [2/12]

கூறுவதொன் றுமக்குண்டால் குரவீர்காள் இதுகேண்மின்
ஆறுபுனை செஞ்சடிலத் தண்ணலுக்கே உரித்தாகும்
பேறுடையேன் அவன்வதுவை பெறுவதற்கு நோற்பலியான்
வேறொருசார் கடிமாடம் விதித்தென்னை விடுத்திரென. …… 4

குரவீர்காள் – அன்னையுந் தந்தையுமாகிய இரு முது குரவீர்காள், உமக்குக் கூறுவது ஒன்று உண்டு – யான் உங்களுக்குக் கூறுவதொன் றுளது, இது கேண்மின் – இதனைக் கேளுங்கள், ஆறு புனை செஞ் சடிலத்து அண்ணலுக்கு உரித்து ஆகும் பேறு உடையேன் – கங்கையைத் தரித்த செம்மையாகிய சடையினையுடைய சிவபெருமானுக்குச் சத்தியாகும் பேற்றை யுடையேன் ஆகையினாலே, அவன் வதுவை பெறுவதற்கு யான் நோற்பன் – அச் சிவபெருமான் என்னை மணத்தலாகிய வரத்தை யான் பெறுவதற்குத் தவஞ் செய்வேன், வேறு ஒரு சார் கடி மாடம் விதித்து – வேறொரு பக்கத்தில் காவல் பொருந்தியதொரு தவமாடத்தை அமைத்து, என்னை விடுத்திர் என – அதில் என்னைத் தவஞ்செய்ய விடுக்குதிர் என்று கூறியருள.
உரித்து – சத்தி

[2/12]

நன்றென்று மகிழ்சிறந்து நல்லாயுந் தந்தையுமாய்ப்
பொன்துஞ்சு தமதிருக்கைப் பொருவில்நகர்ப் புறத்தொருசார்
அன்றங்கொர் கடிமாடம் அணிசிறக்கப் புனைவித்துச்
சென்றங்கண் தவமியற்றச் சேயிழையை விடுக்கின்றார். …… 5

நல் ஆயும் தந்தையும் – நல்ல தாயும் தந்தையும் ஆய் ஒன்று சேர்ந்து, நன்று என்று மகிழ் சிறந்து – நல்லது என்று மகிழ்ச்சி மிக்கு, பொன் துஞ்சு தமது இருக்கைப் பொருவில் நகர்ப் புறத்து ஒரு சார் – இலக்குமி வசிக்கின்ற தமது இருப்பிடமாகிய ஒப்பில்லாத கோயிலின் அயலிலே ஒரு பக்கத்தில், அன்று அங்கு ஓர் கடி மாடம் அணி சிறக்கப் புனைவித்து – அப்பொழுது அங்கே ஒரு காவல் பொருந்திய தவச்சாலையை அழகு சிறப்பச் செய்வித்து, அங்கள் சென்று தவம் இயற்ற – அச் சாலையிற் சென்று தவஞ் செய்தற்கு, சேயிழையை விடுக்கின்றார் – செம்மையாகிய ஆபரணம் அணிந்த உமாதேவியாரை விடுக்கின்றவர்கள் .
விடுக்கின்றார் ஏகுவித்தார் என அடுத்த செய்யுளில் முடிக்க. [3/12]

முச்சகமுந் தருகின்ற முதல்விதனைத் தம்மகளென்
றிச்சைகொடு நனிபோற்றி இருவரும்நா ரொடுநோக்கி
உச்சியினைப் பன்முறைமோந் துயிர்த்தம்மோ உன்னுளத்தின்
நச்சியநோன் பியற்றுகென நாரியரோ டேகுவித்தார். …… 6

முச்சகமுந் தருகின்ற முதல்விதனை – மூன்றுலகங்களையும் ஈன்றருளுகின்ற முதல்வியாகிய உமாதேவியாரை, தம் மகள் என்று இச்சை கொடு நனி போற்றி – தம்மகள் என்று விருப்பத்தோடு பெரிதும் வாழ்த்தி, இருவரும் நாரொடு நோக்கி – பெற்றோரிருவரும் அன்பால் நோக்கி – பன்முறை உச்சி மோந்து உயிர்த்து – பலமுறை உச்சி மோந்து நெட்ட்டுயிர்த்து, அம்மோ – அம்மையே, உன் உளத்தில் நச்சிய நோன்பு இயற்றுக என – உன் மனத்தில் விரும்பிய தவத்தைச் செய்குதி என்று, நாரியரோடு ஏகுவித்தார் – சேடியர்களாகிய பெண்களோடு அனுப்பினார்கள். [3/12]

மாதவர்பால் விடைபெற்று வல்விரைவுற் றேகுதலும்
வேதவல்லி அதுகாணா மெய்க்கணவன் தனைநோக்கிப்
பேதையிவள் சிவனையுணர் பெற்றிமைஎன் மொழிகென்ன
ஈதனையள் நிலைமையென யாவுமெடுத் தியம்புகின்றான். …… 7

மாது அவர்பால் விடைபெற்று – உமாதேவியார் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, வல் விரைவுற்று ஏகுதலும் – பெரிதும் விரைவுபட்டுத் தவச்சாலைக்குச் செல்லுதலும், அது வேதவல்லி காணா – அச்செயலை வேதவல்லி கண்டு, மெய்க் கணவன் தனை நோக்கி – மெய்ம்மையினையுடைய கணவனாகிய தக்கனை நோக்கி, பேதை இவள் – சிறுமியாகிய இவ்ள், சிவனை உணர் பெற்றிமை என் மொழிக என்ன – சிவபெருமானை அறிந்த தன்மை என்னை உரைக்குக என்று வினவ, அனையள் நிலைமை ஈது என் – அவளுடைய நிலைமை இதுவாகும் என்று, யாவும் எடுத்து இயம்புகின்றான் – சம்பவம் முழுவதையும் தக்கம் தன் மனைவிக்குச் சொல்லுகின்றான்.
பேதை பருவங் குறித்ததாயினும் ஈண்டுச் சிறுமி என்னும் பொருட்டு [பக்கம் 3]

பொங்குபுனல் தடத்திடையான் புரிகின்ற தவங்காணூஉச்
சங்கரன்அங் கெய்திடலுந் தாழ்வில்வரம் பலகொண்டுன்
பங்கினள்என் மகளாகப் பண்ணவநீ என்மருகாய்
மங்கலநல் வதுவையுற மறையவனாய் வருகென்றேன். …… 8

பொங்கு புனல் தடத்திடை யான் புரிகின்ற தவம் காணூஉ சங்கரன் அங்கு எய்திடலும் – பொங்குகின்ற நீரினையுடைய மானதவாவியின்கண் யான் செய்கின்ற தவத்தைக் கண்டு சுகஞ் செய்பவராகிய சிவபெருமான் அங்கே எழுந்தருளுதலும், தாழ்வில் வரம் பல கொண்டு – குறைவில்லாத பல வரங்களைப் பெற்றுக்கொண்டு (இறுதியில்), உன் புதல்வியாகிய, பண்ணவ நீ என் மருகாய் மறையவனாய் – தேவரீர் என் மருகராய் மறையவராய், மங்கல் நல் வதுவை உற – மங்களகரமான நல்ல திருமணத்தைச் செய்ய, வருக என்றேன் – வந்தருள்க என்று கேட்டுக்கொண்டேன். [பக்கம் 4]]

அற்றாக நின்பாலென் றருள்செய்தான் அம்முறையே
கற்றாவின் ஏறுயர்த்த கண்ணுதலோன் முழுதுலகும்
பெற்றாளை யமுனையென்னும் பெருநதியில் உய்ப்பநம்பால்
உற்றாள்மற் றெஞ்ஞான்றும் உணர்வினொடு வைகினளால். …… 9

நின்பால் அற்று ஆக என்று அருள் செய்தான் – உன்னிடம் அவ்வாறாகுக என்று வரந்தந் தருளினார்; அம் முறையே – அவ் வரத்தின் வண்ணமே, கற்றாவின் எறு உயர்த்த கண்ணுதலோன் – ஆனேறாகிய கொடியை உயர்த்தியருளிய சிவபெருமான், முழுதுலகும் பெற்றாளை யமுனை எனும் பெருநதியில் உய்ப்ப – எல்லா உலகங்களையும் பெற்றருளிய தேவியைக் காளிந்தி நதிக்கண் அனுப்ப, நம்பால் உற்றாள் – தேவி நம்மிடம் நம் மகளாய் வந்து, எஞ்ஞான்றும் உணர்வினொடு வைகினள் – வந்தகாலந் தொட்டு எக்காலத்திலும் முன்னை உணர்வோடு இருந்தாள்.
கற்றா, ஆன் என்னும் பொருட்டு [பக்கம் 4]]

மாதவமோர் சிலவைகல் பயின்றுமதிக் கோடுபுனை
ஆதிதனக் கன்பினளாய் அருந்துணைவி யாகின்றாள்
பேதையென நினையற்க பெருமாட்டி தனையென்னக்
காதலிவிம் மிதமெய்திக் கரையிலா மகிழ்சிறந்தாள். …… 10

ஓர் சில வைகல் மாதவம் பயின்று – ஒரு சிலதினம் தவஞ் செய்து, மதிக் கோடு புனை ஆதி தனக்கு அன்பினளாய் – இள்ம்பிறையை அணிந்த ஆதியாகிய சிவபெருமானுக்கு அன்புடையவளாய், அரும் துணைவி ஆகின்றாள் – அரிய சத்தியாகப் போகின்றாள்; பெருமாட்டி தனை பேதை நினையற்க – இவ்வாறான எம்பெருமாட்டியை பேதையாகிய சிறுமெயென்று கருதற்க; என்ன – என்று தக்கன் கூற, காதலி விம்மிதம் எய்தி கரை இலா மகிழ்சிறந்தாள் – காதலாகிய வேதவல்லி ஆச்சரியமுற்று அளவில்லாத மகிழ்ச்சியிற் சிறந்தாள். [பக்கம் 4]

இந்நிலைசேர் முதுகுரவர் ஏவலினால் சிலதியராங்
கன்னியர்கள் சூழ்போதக் கடிமாடம் போந்துமையாள்
சென்னிநதி புனைந்தபிரான் திருநாமம் உள்ளுறுத்தி
நன்னியமந் தலைநின்று நாளுநனி நோற்கின்றாள். …… 11

இந்நிலைசேர் முது குரவர் ஏவலினால் – இத்தன்மையரான அன்னை தந்தையாரின் கட்டளையினால், சிலதியராம் கன்னியர்கள் சூழ போத – சேடியர் ஆகிய கன்னியர்கள் சூழ்ந்துவர, கடிமாடம் போந்து – காவலினையுடைய தவமாடத்தை அடைந்து, உமையாள் – உமாதேவியார், சென்னி நதி புனைந்த பிரான் திருநாமம் உள்ளுறுத்தி – சிரசிற் கங்கையைத் தரித்த சிவபெருமானுடைய திருநாமமாகிய ஸ்ரீ பஞ்சாட்சரத்தை மனசிற் பதித்து, நல் நியமம் தலைநின்று – நல்லமதியத்திலே தலைப்பட்டு நின்று, நாளும் நோற்கின்றாள் – நடோறும் பெரிதுந் தவம் புரிகின்றார். [11,153]

வேறு

ஈண்டுறு மடவார் சூழ இம்முறை இருத்த லோடும்
ஆண்டுபன் னிரண்டு சென்ற அம்பிகைக் கனைய காலை
வேண்டிய வேண்டி யாங்கு விரதருக் குதவும் வண்மை
பூண்டிடு பரமன் அன்னாள் புரிந்திடு தவத்தைக் கண்டான். …… 12

ஈண்டுறு மடவார் சூழ – நெருங்கிய மாதர்கள் சூழ, இம்முறை இருத்த லோடும் – இவ்வாறு தவஞ் செய்துகொண்டிருக்க, அம்பிகைக்கு ஆண்டு பன்னிரெண்டு சென்ற – உமாதேவியாருக்கு வயசு பன்னிரெண்டு முற்றியது; அனைய காலை – அப்பொழுது, விரதருக்கு வேண்டிய வேண்டியாங்கு உதவும் வண்மை பூண்டிடும் பரமன் – தவவிரதம் பூண்டோருக்கு விரும்பியவைகளை விரும்பியவாறே வழங்கும் வள்ளன்மையைத் தமக்கு இயல்பான குணமாகப் பூண்டருளிய சிவபெருமான், அன்னாள் புரிந்திடும் தவத்தைக் கண்டான் – அவ்வுமாதேவியார் மேற்கொண்ட தவத்தைத் திருவுளங் கொண்டருளினார் [பக்கம் 5]

கண்டு மற்றவளை ஆளக் கருதியே கயிலை யென்னும்
விண்டினை இகந்து முந்நூல் வியன்கிழி தருப்பை யார்த்த
தண்டுகைக் கொண்டு வேதத் தலைநெறி ஒழுக்கம் பூண்ட
முண்டவே தியனில் தோன்றி முக்கண்எம் பெருமான் வந்தான். …… 13

கண்டு – உமாதேவியாரின் தவத்தை திருவுளங்கொண்டு, அவளை ஆளக் கருதி – அவ் வுமாதேவியாரை ஆட்கொண்டருளக் கருதி, கயிலை என்னும் விண்டினை இகந்து – கயிலாயம் என்னும் மலையை நீங்கி, முந்நூல் வியன்கிழி தருப்பை ஆர்த்த தண்டு கைக்கொண்டு – முப்புரிநூல் சிறந்த கோவணம் தருப்பை என்னும் இவைகளைக் கட்டிய ஒரு தண்டத்தைக் கையிற் பிடித்து, வேதத் தலைநெறி ஒழுக்கம் பூண்ட – வேதத்திற் சொல்லப்பட்ட முதல் நிலையான பிரமசரிய ஒழுக்கம் பூண்ட, மூண்ட வேதியனின் தோன்றி – திரிபுண்டரம் அணிந்த பிராமணைனைப்போல வேடங்கொண்டு, முக்கன் எம்பெருமான் வந்தான் – மூன்று கண்களையுடைய சிவபெருமான் எழுந்தருளீனார் [பக்கம் 6]

தொக்குலாஞ் சூலத் தண்ணல் தொல்புவி உய்ய வேதச்
செக்கர்நூ புரத்தாள் பின்னுஞ் சேப்புற மண்மேற் போந்து
தக்கமா புரத்தின் நண்ணிச் சங்கரி யென்னுந் தொல்பேர்
மைக்கணாள் நோற்குந் தெய்வ மல்லல்மா ளிகையிற் புக்கான். …… 14

தொக்கு உலாம் சூலத்து அண்ணல் – எங்கும் வியாபித்து விளங்குகின்ற சூலத்தினையுடைய சிவபெருமான், தொல்புவி உய்ய – தொன்மையாகிய பூமி உய்யும்பொருட்டு, வேத நூபுரச் செக்கர் தாள் – வேதமாகிய சிலம்பணிந்த சிவந்த திருவடிகள், பின்னும் சேப்புற மண்மேற் போந்து – மேலும் சிவக்கும் படி மண்ணில் நடந்து, தக்க மா புரத்தின் நண்ணி – தக்கபுரியை அடைந்து, சங்கரி என்னும் தொல்பேர் – சுகஞ் செய்தலால் சங்கரி என்கின்ற பழைமையான பெயர் படைத்த, மைக்கணாள் நோற்கும் – மை தீட்டிய கண்கலையுடைய உமாதேவியார் தவஞ் செய்யும், தெய்வ மல்லல் மாணிகையில் புக்கான் – தெய்வீகமான பெருமை பொருந்திய மாளிகையின்கட் சென்றருளினார். [பக்கம் 6]

அன்னைநோற் கின்ற கோட்டத் தணுகியே அளப்பில் மாதர்
முன்னுறு காவல் போற்றும் முதற்பெருங் கடையிற் சாரக்
கன்னியர் எவரும் வந்து கழலிணை பணித லோடும்
என்னிலை தலைவிக் கம்ம இயம்புகென் றிசைத்து நின்றான். …… 15

அன்னை நோற்கின்ற கோட்டத்து அணுகி – மாதாவாகிய உமாதேவியார் தவஞ்செய்கின்ற தவச்சாலையை அடைந்து, அளப்பு இல் மாதர் முன் உறு காவல் போற்றும் – அளவிலாத பெண்கள் முற்பட்டுக் காவலைச் செய்கின்ற, முதற் பெருந் கடையிற் சார – பெரிய முதற் கடைவாசலிற் செல்ல, கன்னியர் எவரும் வந்து கழல் இணை பணிதலோரும் – பெண்கள் அனைவரும் வந்து தமது திருவடிகளை வணங்க, என் நிலை தலைவிக்கு இயம்புக என்று இசைத்து நின்றான் – எமது வருகையை உமது தலைவிக்கு உரைப்பீராக என்று திருவாய்மலர்ந்தருளி நின்றார். [பக்கம் 6]

நிற்றலுங் கடைகாக் கின்ற நேரிழை மகளிர் சில்லோர்
பொற்றொடி உமைபால் எய்திப் பொன்னடி வணங்கி ஈண்டோர்
நற்றவ மறையோன் நின்பால் நண்ணுவான் விடுத்தான் என்ன
மற்றவன் தன்னை முன்கூய் வல்லைநீர் தம்மின் என்றாள். …… 16

நிற்றலும் – அவ்வந்தணர் வாசலில் நிற்க, கடை காக்கின்ற நேர் இழை மகளிர் சில்லோர் – வாசலைக் காக்கின்ற இயைந்த ஆபரணத்தை அணிந்த பெண்கள் சிலர், பொற்றொடி உமைபால் எய்தி – பொன்னாலய வளையலையணிந்த உமாதேவியாரிடம் சென்று, பொன் அடி வணங்கி – அழகிய திருவடிகளை வணங்கி, ஈண்டு ஓர் நல் தவம் மறையோன் – இவ்விடத்தில் ஒரு நல்ல தவத்தையுடைய அந்தணர், நின்பால் நண்ணுவான்– தேவியாகிய நும்மை அடையும்பொருட்டு, விடுத்தான் என்ன – எம்மை நும்பால் அனுப்பினார் என்று கூற, அவன் தன்னை வல்லை கூய் – அவ்வந்தணரை விரைந்தழைத்து, நீர் முன் தம்மின் என்றாள் – நீவிர் என்முன் கொண்டுவாருங்கள் என்று பணித்தார். [பக்கம் 7]

தம்மினீர் என்ற லோடுந் தாழ்ந்தனர் விடைபெற் றேகி
அம்மினேர் கின்ற நாப்பண் அரிவையர் கடைமுன் னேகி
வம்மினோ அடிகள் எம்மோய் வரவருள் புரிந்தாள் என்னச்
செம்மலும் விரைவிற் சென்று தேவிதன் னிருக்கை சேர்ந்தான். …… 17

தம்மில் நீர் என்றலோடும் – நீவிர் அழைத்து வாருங்கள் என்று கூறியவுடன், தாழ்ந்தனர் விடை பெற்று ஏகி -வணங்கி விடைபெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டகன்று, அம் மின் நேர்கின்ற நாப்பண் அரிவையர் கடை முன் ஏகி – அழகிய மின்னலை ஒத்த இடையினையுடைய அப் பெண்கள் தலைவாய் தலிற் சென்று, அடிகள் வம்மின் – அடிகாள் வருக, எம்மோய் வர அருள் புரிந்தாள் என்ன – எம்மன்னை அங்கே அடிகள் எழுந்தருளத் திருவுளம் செய்த்தாள் என்று விண்ணப்பிக்க, செம்மலும் விரைவிற் சென்று – இறைவராகிய அந்தணரும் விரைந்து சென்று, தேவி தன் இருக்கை சேர்ந்தான் – இறைவி தவஞ்செய்யுந் தவச்சாலையை அடைந்தார்.[பக்கம் 7]

தேவர்கள் தேவன் அங்கோர் சீர்கெழு மறையோன் போலாய்
மேவிய காலை அம்மை விரைந்தெதிர் ஏகி மற்றென்
காவலர் தம்பால் அன்பர் இவரெனக் கருதி அன்னான்
பூவடி வணங்கி வேண்டும் பூசனை புரிந்து நின்றாள். …… 18

தேவர்கள் தேவன் அங்கு ஓர் சீர்கெழு மறையோர் போலாய் மேவிய காலை – தேவதேவரான சிவபெருமான் அவ்விடத்தில் அருட்செல்வம் பொருந்திய ஒரு பிராமணரைப் போன்ற வடிவத்தை உடையவராய் அடைந்தபோது, அம்மை விரைந்து எதிர் ஏகி – உமாதேவியார் விரைவாக எதிரே சென்று, இவர் என் காவலர் தம்பால் அன்பர் எனக் கருதி – இப்பிராமணர் எமது நாயகரான சிவபெருமான் மீது அன்புடையார் என்று கருதி, அன்னான் பூ அடி வணங்கி வேண்டும் பூசனை புரிந்து நின்றாள் – அவருடைய மலர் போன்ற பாதங்களை வணங்கிச் செய்யவேண்டுவதாகிய பூசனையைச் செய்து நின்றார். [பக்கம் 7]

நேயமொ டருச்சித் தேத்தி நின்றவள் தன்னை நீல
ஞாயிறு நிகர்த்த மேனி நகைமதி முகத்தாய் ஈண்டியாம்
ஏயின தொன்றை வெஃகி விரைந்தருள் புரிதி என்னின்
ஆயது புகல்வம் என்ன அம்மையிங் கிதனைச் சொல்வாள். …… 19

நேயமொடு அருச்சித்து ஏத்தி நின்றவள் தன்னை – அன்போடு பூசித்து வணங்கி நின்ற தேவியை, நீல ஞாயிறு நிகர்த்த மேனி நகை மதி முகத்தாய் – நீல நிறமானதொரு ஞாயிற்றினை ஒத்த திருமேனியையும் ஒளி செய்கின்ற சந்திரனை யொத்த முகத்தையு முடைய பெண்ணே, யாம் ஈண்டு மேயினது ஒன்றை வெஃகி – யாம் இவ்விடத்துக்கு வந்தது ஒன்றைப் பெற விரும்பியேயாம்; விரைந்து அருள் புரிதி என்னின் – விரைந்து யாம் விரும்பியதை அநுக்கிரகஞ் செய்வாயாயின், ஆயது புகல்வம் என்னை – அதனைச் சொல்லுவோம் என்று கூற, அம்மை இங்கு இதனைச் சொல்லுவாள் – உமா தேவியார் இதனைச் சொல்லுவார். [பக்கம் 7]

எனக்கிசை கின்ற தொன்றை இசைத்தியே என்னின் இன்னே
நினக்கது கூடும் இங்ஙன் நினைத்ததென் மொழிதி என்ன
உனைக்கடி மணத்தின் எய்த உற்றனன் அதுவே நீஎன்
தனக்கருள் புரியு மாறு தடுத்தெதிர் மொழியல் என்றான். …… 20

எனக்கு இசைகின்றது ஒன்றை இசைத்தியே என்னின் – என்னால் உதவக் கூடியதொன்றைக் கூறுவிராயின், இன்னே நினக்கு அது கூடும் – இப்பொழுதே உமக்கு அது கைகூடும்; இங்கன் நினைத்தது என் மொழிதி என்ன – இவ்விடத்துப் பெற்றுக்கொள்ள எண்ணியது என்னை உரைப்பீராக என்று வினவ, உனைக் கடிமணத்தின எய்த உற்றனன் – உன்னைத் திருமணஞ் செய்துகொள்ள வந்தோம்; அதுவே நீ என் தனக்கு அருள் புரியுமாறு – அதுவே நீ எமக்கு அநுக்கிரகஞ் செய்ய வேண்டுவது; தடுத்து எதிர் மொழியல் என்றான் – இதனைத் தடுத்து எதிர்வார்த்தை ஆடாதே என்றார். [பக்கம் 7]

வேறு

அத்தன் ஈதுரைத் தலோடும் அம்மை அங்கை யாற்செவி
பொத்தி வெய்தெனக் கனன்று புந்தி நொந்து யிர்த்துநீ
இத்தி றம்புகன்ற தென்னை என்னை யாளு கின்றதோர்
நித்தன் வந்துவதுவை செய்ய நீள்த வஞ்செய் தேனியான். …… 21

அத்தன் ஈது உரைத்தலோடும் – சிவபெருமானாகிய பிராமணா இவ்வாறு கூறுதலும், அம்மை அங்கையாற் செவி பொத்தி – உமாதேவியார் அகங்கைகளாற் செவிகளைப் பொத்தி, வெய்து எனக் கனன்று – வெம்மை யுடைத்தாகக் கோபித்து, புந்தி நொந்து – மனம் நொந்து, உயிர்த்து – பெருமூச்சு விட்டு, என்னை ஆளுகின்றது ஓர் நித்தன் வந்து வதுமை செய்ய – என்னை ஆளுகின்றது ஒப்பற்ற நித்தராகிய சிவபெருமான் எழுந்தருளிவந்து திருமணஞ் செய்யும்பொருட்டு, யான் நீள் தவம் செய்தேன் – யான் மிக்க தவத்தினைச் செய்தேன் அங்ஙனமாக, நீ இத்திறம் புகன்றது என்னை – நீர் இவ்வாறு கூறியதென்னை?
என்னலொடும் என வருஞ் செய்யுளில் முடிக்க. [பக்கம் 9]

என்ன லோடும் இனையன் என்றி யாருமென்றும் இறையுமே
முன்னொ ணாதுநின்ற ஆதி முதல்வன் நின்னை வதுவையால்
மன்னு கின்றதரிது போலும் மாத வங்கள் ஆற்றியே
கன்னி நீவருந்தல் என்று கழற மாது புகலுவாள். …… 22

என்னலொடும் – உமாதேவியார் இவ்வாறு கூறுதலும், யாரும் என்றும் இனையன் என்று இறையும் முன் ஓணாது நின்ற ஆதி முதல்வன் – யாவரும் எக்காலத்தும் இத்தன்மையர் என்று சிறிதும் நினைக்க முடியாமல் நின்ற முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான், நின்னை வதுவையால் மன்னுகின்றது அரிது போலும் – உன்னைத் திருமணமுறையால் மேவுவது அரிதுபோலும்; கன்னி நீ மாதவங்கள் ஆற்றி வருந்தல் என்று கழற – கன்னிகையே நீ பெரிய தவங்களைச் செய்து வருந்தாதே என்று இடித்துரைக்க, மாது புகலுவாள் – உமாதேவியார் கூறுவார்.
போலும் ஒப்பில் போலி [பக்கம் 9]

பரம னேவிரும்பி வந்து பாரின் மாம ணஞ்செய
அரிய மாதவங்கள் செய்வல் அன்ன தற்கு முன்னவன்
வருகி லாதுதவிர்வன் என்னின் வலிதின் ஆவிநீப் பன்யான்
சரதம் ஈது பித்தனோ சழக்கு ரைத்தி ருத்திநீ. …… 23

பரமனே பாரில் விரும்பி வந்து மாமணம் செய அரிய மாதவங்கள் செய்வல் – சிவபெருமானே இந்தப் பூமியில் விரும்பி எழுந்தருளித் திருமணம் செய்யும்பொடுட்டு அரிய பெரிய தவங்களைச் செய்வேன், அன்னதற்கு முன்னவன் வருகிலாது தவிர்வன் என்னின் – அத்தவத்திற்கு முதல்வராகிய சிவபெருமான் வாராதொழிவாராயின், யான் வலிதின் ஆவி நீப்பன் – யான் வலிந்து உயிரை நீத்துவிடுவேன்; ஈது சரதம் – இது சத்தியம்; நீ பித்தனோ – நீர் பித்துப்பிடித்தவரோ, சழக்கு உரைத்து இருத்தி – பொய் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்
சழக்கு – நீதிக்கு மாறானது [பக்கம் 9]

போதி போதிஎன் றுதானொர் புடையின் ஏக உவகையாய்
மாது நின்தன் அன்பு முள்ள வன்மை தானும் நன்றெனா
ஆதி தேவன்ஏ னையோர்கள் அறிவு றாத வகையவள்
காதல் நீடு தனதுதொல் கவின்கொள் மேனி காட்டினான். …… 24

போதி போதி என்று தான் ஓர் புடையின் ஏக – இவ்விடத்தினின்றும் அகன்று போக என்று சொல்லிக்கொண்டு தாம் வேறொரு பக்கத்தே செல்ல, உவகையாய் – மகிழ்வுடையவராய், மாது நின் தன் அன்பும் உள்ளவன்மை தானும் நன்று எனா – பெண்ணே உன்னுடைய அன்பும் மன வுறுதியும் நன்று என்று கூறி, ஆதி தேவன் ஏனையோர் அறிவுறா வகை – ஆதியாகிய சிவபெருமான் பிறர் அறியாவண்னம், அவள் காதல் நீடு தனது தொல் கவின்கொள் மேனி காட்டினான் – அவ்வுமாதேவியாரது காதலை மிகுவிக்கின்ற தமது தொன்மையாகிய அழகினையுடைய திருமேனையைக் காட்டியருளினார். [பக்கம் 10]

ஆதி தன்தொல் உருவுகாட்ட அமலை கண்டு மெய்பனித்
தேதி லாரெ னாநினைந் திகழ்ந்த னன்எ னாவவன்
பாத பங்க யங்களிற் பணிந்து போற்றி செய்தியான்
பேதை யேனு ணர்ந்திலேன் பிரான்ம றைந்து வந்ததே. …… 25

ஆதிதன் தொல் உருவு காட்ட – சிவபெருமான் தமது தொன்மையாகிய திருமேனியைக் காட்ட, அமலை கண்டு – நின்மலையாகிய உமாதேவியார் தரிசித்து, மெய் பனித்து – சரீரம் நடுங்கி, ஏதிலார் எனா நினைந்து இகழ்ந்தனன் எனா – அயலவரென்று தேவரீரை இகழ்ந்தேனே என்று, அவன் பாதபங்கயங்களில் பணிந்து வணங்கித் துதித்து, யான் பேதையேன் – யான் அறிவிலாதவள், பிரான் மறைந்து வந்தது உணர்ந்திலேன் – தேவரீர் மறைந்து வந்ததை அறியேன்.[10/12]

உன்ன ருட்கண் எய்துமேல் உணர்ச்சி யெய்தி நிற்பன்யான்
பின்னொர் பெற்றி இல்லையாற் பிழைத்த துண்டு தணிதிநீ
என்னு நற்றவத் திதன்னை இனிதின் எந்தை கண்ணுறீஇ
நின்னி யற்கைநன் றுநன்று நீது ளங்கல் என்றனன். …… 26

உன் அருட்கண் எய்துமேல் – தேவரீருடைய கிருபா நோக்கம் கிடைக்குமானால், யான் உணர்ச்சி எய்தி நிற்பன் – நான் அறிவைப் பொருந்தியிருப்பேன்; பின் – கிருபாநோக்கம் கிடையாதவழி, ஓர் பெற்றி இல்லை – எனக்கென்றொரு சுதந்திரமாகிய தன்மை இல்லை; பிழைத்தது உண்டு – என்னிலைமையை யானறியாது தேவரீருக்குப் பிழை செய்ததுண்டு; நீ தணிதி – தேவரீர் கோபஞ் செய்யாது பொறுத்தருள்க; என்னும் நல் தவத்தி தன்னை – என்றிங்கணம் குறையிரந்து பிரார்த்திக்கின்ற நல்ல தவத்தையுடைய உமாதேவியாரை, எந்தை இனிது கண்ணுறீஇ – எம்பெருமான் இனிது கிருபா நோக்கஞ் செய்து, நின் இயற்கை நன்று – உமையே உன் இயற்க்கை நல்லல்து! நல்லது!, நீ துளங்கள் என்றனன் – நீ அஞ்சற்க என்று அபயம் அளித்தருளினார்.[10/12]

உன்னிடை தனினும்யாம் உறுதி இல்வழி
நின்னுயிர் உணர்வுறா நினக்குக் காட்டுது
மன்னது காண்கெனா’
க் காட்டியவழிக் கண்டாராதலின் தமக்கென ‘ஓர் பெற்றி’ இன்மையை உணர்ந்து, முன் தம்மைத்தாம் வியந்தமைக்கு நாணிப், பிழைத்த துண்டு என்றார்என்க . [பக்கம் 11]

என்ற நாத னைப்பினும் இறைஞ்சி யெம்பி ராட்டிபால்
நின்ற மாதரைத் தனாது நேத்தி ரத்தின் நோக்கலாள்
ஒன்றும் உன்னல் செய்திலாள் உலப்பில் எந்தை தொல்புகழ்
நன்று போற்றெடுத் துநிற்ப நாட்டம் நீரு குத்தரோ. …… 27

எம்பிராட்டி – எம்பெருமாட்டியாகிய உமாதேவியார், என்ற நாதனைபினும் இறைஞ்சி – என்றருளிச் செய்த சிவபெருமானைப் பின்னரும் வணங்கி, பால் நின்ற மாதரை தனாது நேத்திரத்தில் நோக்கலாள் – பக்கத்தே நின்ற பெண்களைத் தமது கண்களால் நோக்காதவராய், ஒன்றும் உன்னல் செய்திலாள் – மற்றொன்றை நினையாதவராய், எந்தை உலப்பு இல் தொல் புகழ்நன்று போற்றெடுத்து – எம்பெருமானுடைய அளவற்ற தொன்கையாகிய புகழ்களை எடுத்து நன்கு துதித்து, நாட்டம் நீர் உகுத்து நிற்ப – கண்ணீர் சொரிந்துகொண்டு நிற்ப. [பக்கம் 11]

கண்டு பாங்க ராயமாதர் கன்னி எம்மை நோக்கலாள்
மண்டு காதல் அந்தணாளன் மாயம் வல்ல னேகொலோ
பண்டு நேர்ந்துளா ரையுற்ற பான்மை போலும் மேலியாம்
உண்டு தேரு மாறதென் றுளத்தில் ஐயம் எய்தினார். …… 28

பாங்க ராய மாதர் கண்டு – பக்கத்தில் நின்ற தோழியர் கூட்டத்தினர் இச் செயலைக் கண்டு, கன்னி எம்மை நோக்கலாள் – நமது கன்னிகையானவர் நம்மைப் பார்க்கின்றாரில்லை; மண்டு காத அந்தணாளன் மாயம் வல்லன் கொல் – மிக்க காதலினையுடைய இவ்வந்தணர் மாயத்தில் வல்லவர் போலும்; பண்டு நேர்ந்துளாரை உற்ற பான்மை போலும் – இவர்கள் நிலைமை முன்னே எதிர்ப்பட்டார் இருவர் ஒருவரை ஒருவர் சந்தித்த தன்மையை ஒக்கும்; மேல் யாம் தேருமாறு உண்டு – மேல யாம் ஆராயதற்பாலது உளது; என்று உளத்தில் ஐயம் எய்தினார் – என்றிவ்வாறு தம் மனத்தில் ஐயங் கொண்டார்கள். [11/12]

சிலதி யர்க்குள் விரைவிரைந்து சிலவர் சென்று தக்கனென
றுலகு ரைக்கும் ஒருவன்வைகும் உறையுள் நண்ணி உன்மகள்
நிலைமை ஈது கேளெனா நிகழ்ந்த யாவும் முறையினால்
வலிது கூற மற்றவன் மனத்தி லோர்தல் உற்றனன். …… 29

சிலதியர்க்குள் சிலவர் விரைந்து சென்று – தோழியருட் சிலர் விரைந்து சென்று, தக்கன் என்று உலகு உரைக்கும் ஒருவன் வைகும் உறையுள் நண்ணி – தக்கன் என்று உலகினர் கூறுகின்ற ஒரு தனி முதல்வன் வீற்றிருக்கின்ற இருப்பிடத்தை அடைந்து, உன் மகள் நிலைமை ஈது – உன்னுடைய புதல்வியின் நிலை இது, கேள் எனா – அதனைக் கேட்பாயாக என்று, நிகழ்ந்த யாவும் முறையினால் வலிது கூற – அங்கே நிகழ்ந்தன அனைத்தையும் முறையாக வலிந்து சொல்ல, அவன் மனதில் ஓர்தல் உற்றனன் – அத்தக்கன் மனத்தால் நடந்தவைகளை அறிவான் ஆயினான் .
அவன் கேளாமலே கூறினமையின் வலிது கூற என்றார். [12/12]

போத நீடு புந்தியால் புலப்ப டத்தெ ரிந்துழி
ஆதி யந்த மின்றிநின்ற அண்ணல் வந்த தாகலும்
ஏதி லாம கிழ்ச்சிபெற் றெழுந்து துள்ளி யான்பெறு
மாதை அங்கவற் களிப்பன் வதுவை ஆற்றி என்றனன். …… 30

போதி நீடு புந்தியால் தெரிந்துழி – ஞானம் மிகுந்த புத்தியினால் ஆராய்ந்துபோது, புலப்பட – நடந்தவை அனைத்தும் புலம் ஆக, ஆதி அந்தம் இன்றி நின்ற அண்ணல் வந்தது ஆகலும் – ஆதியும் அந்தமும் இல்லாமல் நின்ற இறைவனன்றோ அங்கு எழுந்தருளியது தோன்றுதலும், ஏது இலா மகிழ்ச்சி பெற்று – ஒப்பில்லாத மகிழ்ச்சி அடைந்து, எழுந்து துள்ளி – இருக்கை விட்டெழுந்து கூத்தாடி, யான் பெறும் மாதை – யான் பெற்ற புதல்வியை, அங்கு அவற்கு வதுமை ஆற்றி அளிப்பன் என்றனன் – அச் சிவபெருமானுக்குத் திருமணஞ் செய்து கொடுப்பேன் என்று கூறினான் [12/12]

உமை தவம்புரி படலம் முற்றிற்று
ஆகத் திருவருத்தம் – 292

தட்சகாண்டம்