6.காளிந்திப் படலம்

காளிந்திப் படலம்

நீளுங் தகைசேர் நிலமா மகடன்
கோளுந் தியபூங் குழல்வார்ந் தெனலாய்
நாளுந் தியவீ நணுகிக் கரிதாங்
காளிந் தியெனுங் கடிமா நதியே

காளிந்தி எனும் கடி மா நதி – காளிந்தி என்னும் புதுமை பொருந்திய பெரிய நதி, நாள் உந்திய வீ நணுகி – அன்றலர்ந்த பூக்கள் பொருந்தி, நீளும் தகை சேர் நில மாமகள் தன் – நீளுகின்ற தகுதியினையுடைய பூமிதேவியின், கோள் உந்திய – குற்றம் நீங்கிய, பூங் குழல் வார்ந்து எனலாய் – பூவையணிந்த கூந்தல் வார்ந்து என்று கூறத்தக்கதாய், கரிது ஆம் – கருநிற முடைத்தாய் விளங்கும்.

வார்ந்தது வார்ந்து என நின்றது, வார்தல் நீண்டடொழுகுதல், கோள் உந்திய – குணம் மிக்க என்றுரைப்பினும் அமையும். காளிந்தி கருநிறத்தது; பூக்களோடு கூடியது. அதனால் பூங்குழல் வார்ந் தெனலாய் என்றார். [பக்கம் 1]

முத்துங் கதிரும் முழுமா மணியுந்
தொத்துந் தியசெந் துகிரும் மகிலு
நத்தும் பிறவுந் நனிநல் குவபோல்
ஒத்துந் துவதவ் வொலிநீர் நதியே. 2

முத்தும் – முத்துக்களும், கதிரும் முழு மா மணியும் – ஒளி செய்யும் முழுத்த சிறந்த இரத்தினங்களும், தொத்து உந்திய துகிரும் – சொத்துக்களாய் விரிந்து சிவந்த பவளங்களும், அகிலும் – அகில்களும், நத்தும் பிறவும் – சங்குகளும் பிற பொருள்களும், நனி நல்குவ போல் – அந்நதியாற் பெரிதும் வழங்கப்படுவனபோலாக, ஒத்து உந்துவது – மன்மொத்துத் தன்னிடத்திலிருந்து அவைகளை வீசுதலைச் செய்வது, அ ஒலி நீர் நதி – ஒலித்தலைச் செய்கின்ற அந்த நீர் நிறைந்த காளிந்தி நதி

செயப்படுபொருளைச் செய்வதுபோலச் செப்பும் வழக்குப்பற்றி நல்குவ என்றார். இனி நல்குவ என்பதைச் தொழிற் பெயரெனக் கொண்டு, முத்து முதலியவ்வைகளை நல்குதலைப்போல என்றுரைப்பினுமாம். [2,1]

எண்மே னிமிரும் மிருநீர் பெருகி
விண்மே லுலவா விரிகின் றதொரீஇ
மண்மே லொலியா மலிகார் தழுவிக்
கொண்மூ வரவொத் துளதக் குடிஞை. …… 3

எண்மேல் நிமிரும் – அளவிடுதல் அரிதாகின்ற, இருநீர் பெருகி – மிக்க நீர் பெருகி, விண்மேல் உலவா விரிகின்றது ஒரிஇ – ஆகாயத்தில் உலாவி விரிகின்றதை நீங்கி, ஒலியா – ஒலித்து, மலி கார் தழுவி – மிக்க காரைத் தழுவி, ஒத்துளது – அந்தக் காளிந்தி நதி நிகர்த்தது.

பெருகுதல் ஒருவுதல் ஒலித்தல் தழுவல் இரண்டுக்கும் பொருத்தமாதல் காண்க, கொண்மூவுக்குக் கார் கார்காலம் ; நதிக்கு கருமை [3,2]

மீனார் விழிமங் கையர்விண் ணுறைவோர்
வானார் செலவின் வருநீள் இடையில்
கானா மெனவுங் கடலா மெனவுந்
தானா குவதத் தடமா நதியே. …… 4

நீர் இடையிற் கானாம் எனவும் – நீண்ட இடத்தினையுடைய காட்டைப் போலவும், கடலாம் எனவும் – கடலைப்போலவும், தான் ஆகுவது அத் தட மா நதி – தான் தோன்றுவதாகிய அந்த விசாலமான காளிந்தி நதி, விண் உறைவோர் மீனார் விழி மங்கையர் வானோர் செலவின் வரும் – விண்ணில் உறைவோராகிய மீன்போலுங் கண்களையுடைய தேவ மகளிர்கள் வானத்தின்கட் செல்லுகின்ற செல்லுகையை ஒப்பச் செல்லாநிற்கும்.

வானர மகளிரின் வான் செலவு காண்டற் கரிதால்போல ஆழ்ந்த நீரினை யுடைத்தாகிய இக் காளிந்தியின் செலவுங் காண்டற் கரியதுபோலும். நதியைப் பெண்மைப்படுத்தும் மரபு பற்றி அதன் செலவு மங்கையர் செலவோடு ஒப்பிடப்பட்டது. கருநிற மிகுதியாற் கானா மெனவும், அதனோடு ஒலி மிகுதியாற் கடலாமெனவும் ஆகுவது காளிந்தி என்க. [4,2]

பாரின் புடையே படரந் நதியை
நேரும் படியோர் நெடுநீ ருளதோ
காருந் தெளியாக் கடலீ தெனவே
யாரும் பெருமைத் தஃதா யிடவே. …… 5

காருந் தெளியா – மேகமும் பேதந் தெரியாமல், ஈது கடலே என ஆகும் பெருமைத்து அஃது – இது கடலேயாமென்று படிந்து நீர் பருகும் பெருமையுடையது அந்தக் காளிந்தி நதி; பாரின் புடைபடர் அந்நதியை நேரும்படி – பூமியின்கட் செல்லுகின்ற அந்த நதியை ஒக்கும்படி, ஆய்இட – ஆராய்ந்து சொல்ல, ஓர் நெடுநீர் உளதோ – ஒரு சமுத்திரம் உளதாமோ.

தெளியா ஈறுகெட்டு நின்றது. தெளியா ஆரும் என்க [5,3]

துப்பா யினதாய்த் துவரத் தகைசே
ரப்பா யுவரற் றழிவில் பொருளின்
வைப்பா யருளால் வருமவ் வொலியற்
கொப்பா குவதோ வுவரா ழியதே. …… 6

துப்பு ஆயினதாய் – துப்பார்க்குத் துப்பாயதாய், துவரத் தகைசேர் அப்புஆய் – அதனாலே முற்றுந் தகுதி வாய்ந்த நீனினையுடையதாய், உவர் அற்று – உவர்த்தன்மையின்றி, அழிவு இல் பொருளின் வைப்பாய் – அழிவற்ற பொருளுக்கு இருப்பிடமாய், அருளால் வரும் அ ஒலியற்கு – இறைவனருளால் வாராநின்ற அந்த நதிக்கு, உவர் ஆழி ஒப்பு ஆகுவதோ – உவர்க்கடல் ஒப்பாகுமா.
துப்பு – உணவு, அழிவில் பொருள் ஈண்டுத் திருவருட் சத்தியாகிய உமை. ஒலியல் – யாறு. [6, 3]

பாலோங் கியவிற் பணிலம் படர்வாள்
நீலோங் கியஅம் பொடுநே மியெலாம்
மேலோங் கியதன் மையின்மெய்த் துயில்கூர்
மாலோன் றனையொத் ததுமற் றதுவே. …… 7

பால் ஓங்கிய வில் பணிலம் – வெண்மை மிகுந்த ஒளியினையுடைய சங்கு, படர் நீல் வாள் ஓங்கிய அம்பு – பரக்கின்ற நீல் ஒளிமிக்க நீர், நேமி – சக்கர வாகப்புள், எலாம் – ஆகிய இவையெல்லாம், மேல் ஓங்கிய தன்மையின் – தன்பால் விளங்கிய தன்மையினால், மெய்த்துயில் கூர் மாலோன் தனை – மெய்மையாகிய அறிதுயில் பயில்கின்ற திருமாலை, அது ஒத்தது – அக் காளிந்தி நதி ஒத்தது.

நதியின் பாலோங்கிய தன்மையிலே ( பால் – பாற்சமுத்திரம், வில், பணிலம் – சங்கு, பகைவர்க்குப் படர் விளைக்கும் வாள், நீல் நஞ்சூட்டிய அம்பு, நேமி – சக்கரம் ஆகிய ) மாலோன் மேல் ஓங்கிய தன்மை அமைதலின், அது மாலோனை ஒத்தது என்க. [7,3]

மீன்பட் டமையால் விரியுந் தொழுதிக்
கான்பட் டிடவுங் கழுநீ ருறலால்
தேன்பட் டிடவுந் திரைபட் டிடவும்
வான்பட் டிடுமோ சைமலிந் ததுவே. …… 8

மீன் பட்டமையால் – மீன்கள் உண்மையால், விரியும் தொழுதிக் காந் பட்டிடவும்- விரிகின்ற காடுபோன்ற பறவைக் கூட்டத்தின் ஒலி செறிதலானும், கழுநீர் உறலால் – கழுநீர்கள் இருத்தலால், தேன் பட்டிடவும் – வண்டுகள் வீழ்ந்தொலித்தலானும், திரை பட்டிடவும் – திரைகள் எழுந் தொலித்தலானும், வான் பட்டிடும் ஓசை மலிந்து – வானத்தை அளாவும் ஒலி மிக்கது அந்நதி.

எழுவாய் வருவிக்கப்பட்டது. தொழுதி பறவைக்கூட்டத் தொலி, பறவைக் கூட்டமுமாம், பறவைகள் மிக்குச் செறிதலின் காடுபோன்றிருந்தன. [8,4]

ஊன்பெற் றலகில் உயிர்பெற் றகிலம்
வான்பெற் றவள்வால் வளையா யுறவெங்
கோன்பெற் றிடுமக் கொடிமெய் யுருவந்
தான்பெற் றதையொத் ததுமா நதியே. …… 9

ஊன் பெற்று – ஊனாகிய உடல்களை ஈன்று, அலகில் உயிர்பெற்று – அவ்வுடல்களோடு கூட்டும் முறையில் அளவில்லாத உயிர்களை ஈன்று, அகிலம் வான் பெற்றவள் – அவ்வளவோடு அமையாமல் விண்ணையும் மண்ணையும் ஈன்றவளாகிய தேவி, வால் வளையாய் உற – வெள்ளிய சங்கின் வடிவமாய் எழுந்தருள், மாநதி – அதற்கு ஏற்றவாற்றால் அந்தப் பெருமை பொருந்திய நதி, எங்கோன் பெற்றிடும் அக் கொடி மெய் உருவம் – எம்பெருமான் மணந்து கொள்ளும் அந்தக் கொடிபோன்ற தேவியினுடைய திருமேனியின் நிறத்தை, தான் பெற்றதை ஒத்தது – தான் பெற்றிருந்ததை ஒத்தது. [9,9]

வேறு

நஞ்செனக் கொலைசெய் கூர்ங்கண் நங்கையர் குடையக் கூந்தல்
விஞ்சிய நானச் சேறும் விரைகெழு சாந்தும் ஆர்ந்து
தஞ்செனக் கொண்ட நீலத் தன்மை குன்றாது மேலோர்
அஞ்சனப் போர்வை போர்த்தால் அன்னதால் அனைய நீத்தம். …… 10

நஞ்சு எனக் கொலை செய் கூர்ங்கண் நங்கையர் குடைய – விடம்போலக் கொலை செய்கின்ற கூரிய கண்களையுடைய பெண்கள் நீராடுதல் செய்ய, கூந்தல் விஞ்சிய நானச் சேறும் – கூந்தலின் மிக்கிருந்த கஸ்தூரிக் குழம்பும், விரை கெழு சாந்தும் – வாசனை பொருந்திய சந்தனமும், ஆர்ந்து – பொருந்தப் பெற்று, தஞ்சு எனக் கொண்ட நீலத் தன்மை குற்றாது – பற்றுக்கோடாகத் தன்னை பற்றியிருந்த நீலநிறத் தன்மை குறையாது, அனைய நீத்தம் – அந்தக் காளிந்தி நதி யிருப்பது, மேலோர் அஞ்சனப் போர்வை போர்த்தாலன்னது – வளத்தான் மிக்கோர் நீலவர்ணப் போர்வையைப் போர்த்தியிருந்ததால் அவ்வாறு போர்த்தியிருப்பதை ஒப்பதாம் .

சேறும் சாந்தும் ஆர்தல் மேலோர்க்கும் பொருந்தும். [10, 4]

இவ்வுல கத்தோர் உள்ளத் தெய்திய இருளும் அன்னார்
வெவ்வினை இருளுந் தன்பால் வீழ்த்தியே விளங்கி ஏக
அவ்விருள் அனைத்துந் தான்பெற் றணைந்தென அங்கங் காராய்ச்
செவ்விதின் ஒழுகிற் றம்மா சீர்திகழ் யமுனை யாறே. …… 11

இவ்வுலகத்தோர் உள்ளத்து எய்திய இருளும் – இவ்வுலகத்திலுள்ளவர்கள் தமது உள்ளத்திற் பொருந்திய அகவிருளையும், அன்னார் வெவ்வினை இருளும் – அவர்கள் தங்களுடைய கொடிய தீவினை இருளையும், தன்பால் வீழ்த்தி விளங்கி ஏக – தன்னிடத்து முழுகுதலால் இட்டுப் பரிசுத்தமாகிய விளக்கம் அடைந்து செல்ல, அவ்விருள் அனைத்தும் தான் பெற்று அணைந்து என – அவர்கள் இட்டுச் சென்ற அவ்விருள் முழுவதையும் தான் பெற்று இருந்தாற்போல, அங்கம் காராய் – மேனி கருநிறமுடையதாய், செவ்விதின் ஒழுகிற்று – செப்பமுற ஒழுகுதல் செய்தது, சீர் திகழ் யமுனை யாறு – சிறப்புப் பொருந்திய காளிந்தி நதி.
காளிந்துக்கு மற்றொரு பெயர் யமுனை. [11, 5]

எத்திறத் தோரும் அஞ்ச எழுந்துமால் வரையிற் சார்ந்து
மெய்த்தலை பலவும் நீடி விரிகதிர் மணிகள் கான்றிட்
டொத்திடு கால்கண் மேவி ஒலிகெழு செலவிற் றாகி
மைத்துறு புனற்கா ளிந்தி வாசுகி நிகர்த்த தன்றே. …… 12

மால் வரையிற் சார்ந்து – களிந்தம் என்னும் பெரிய மலையின்கட் பொருந்தியிருந்து, எத்திறத்தோரும் அஞ்ச எழுந்து – எத்தகையோரும் அஞ்சும்படி பிரவாகித்து, மெய்த் தலை பலவும் நீடி – மெய்மையாகிய கிளைகள் பலவும் நீண்டு, விரி கதிர் மணிகள் கான்றிட்டு – விரிகின்ற கதிரினையுடைய இரத்தினங்களை வீசி, ஒத்திடு கால்கள் மேவி – இயைந்த வாய்க்கால்கள் தோறும் சென்று, ஒலி கெழு செலவிற்று ஆகி – ஒலி பொருந்திய செலவினை யுடைய தாய், மைத்து உறு புனல் காளிந்தி – கருமைத்தான நீர்மிக்க காளிந்தி நதி, வாசுகி நிகர்த்தது – வாசுகி என்னும் அரவத்தை ஒத்தது.

வாசுகி, அஞ்சு எழுந்து, பெரிய மந்திர மலையைச் சார்ந்து, மெய்க்கட்பல தலை நீடி, மணிகள் கான்று, உணவாயியைந்த வாயுக்களை மிசைத்து, ஒலிகெழு செலவிற்றாய் நதிக்குவமமாதல் காண்க. வாசுகி அட்ட நாகங்களுள் ஒன்று. இனம் பற்றி அதன்பால் ஆதிசேஷனின் தன்மைகளும் பேசப்பட்டன. [12, 5]

நிலமகள் உரோம வல்லி நிலையென நகிலின் நாப்பண்
இலகிய மணித்தார் என்ன இருங்கடற் கேள்வன் வெஃகுங்
குலமகள் என்ன நீலக் கோலவா ரமுத மென்ன
உலவிய யமுனை எம்மால் உரைக்கலாந் தகைமைத் தாமோ. …… 13

நிலமகள் உரோம வல்லி நிலை என – பூமிதேவியின் உந்தியிற் பொருந்திய உரோம ரேகையைப் போலவும், நகிலின் நாப்பண் இலகிய மணித்தார் என்ன – அவளுடைய தனங்களுக்கு இடையே விளங்கிய நீலமணி மாலையைப் போலவும், இரும் கடற் கேள்வன் வெஃகும் குலமகள் என்ன – பெருமை பொருந்திய கடலாகிய நாயகன் விரும்புகின்ற குலமகளைப்போலவும், நீலக் கோல் ஆர் அமுதம் என்ன – நீலநிறமும் பொருந்திய தொரு அரிய அமிர்தத்தைப் போலவும், உலவிய யமுனை – ஒழுகிய காளிந்தி, எம்மால் உரைக்கலாம் தகைமைத்து ஆமோ – எமால் இத்தகைத்து என்று எடுத்துச் சொல்லும் இயல்பினை யுடையதாகுமோ? ஆகாதென்றவாறு.
குலமகள் கங்கையுமாம் . [13,6]

இன்னபல் வகைத்தாய் நீடும் இரும்புனல் யமுனை யின்கண்
மன்னிய நெறிசேர் மாசி மகப்புன லாட வேண்டி
அந்நிலத் தவர்கள் யாரும் அடைந்தனர் உலக மெல்லாந்
தன்னிகர் இன்றி யாளுந் தக்கன்இத் தன்மை தேர்ந்தான். …… 14

இன்ன பல் வகைத்தாய் நீடும் இரும் புனல் யமுனையின்கள் – இன்னோரன்ன பலவகைச் சிறப்பினையுடையதாய் அதனால் மிக்கு விளங்கும் பெரிய நீரினையுடைய காளிந்தி நதியின்கண், மன்னிய நெறி சேர் மாசிப் மகப் புனல் ஆடவேண்டி – நிலைபெற்ற நன்னெறியிற் சேர்க்கின்ற மாசி மகத் தீர்த்தம் ஆடுதலை விரும்பி, அந் நிலத்தவர்கள் யாரும் அடைந்தனர் – அந்த காளிந்தியையடுத்த சேஷத்திரங்களில் உள்ளவர்கள் எல்லாஞ் சென்றார்கள்; இத்தன்மை – இந் நிகழ்ச்சியை, உலகம் எலாம் தன் நிகர் இன்றி ஆளும் தக்கன் தேர்ந்தான் – உலகம் முழுவதையுந் தனக் கொப்பாரின்றி அரசு புரிந்த தக்கப் பிரசாபதி அறிந்தான்.
யமுனையின்கண் ஆடல் வேண்டி என்க. [14, 6]

மெய்ப்பயன் எய்து கின்ற வினைப்படும் ஊழின் பாலால்
அப்பெரு நதியில் அஞ்ஞான் றாடலை வெஃகித் தக்கன்
மைப்படுங் கூர்ங்கண் வேத வல்லியை மகளி ரோடும்
ஒப்பில்பல் சனத்தி னோடும் ஒல்லைமுன் செல்ல உய்த்தான். …… 15

மெய்ப் பயன் எய்துகின்ற வினைப்படும் ஊழின் பாலால் – உண்மைப் பயன் கைகூடுகின்ற நல்வினைப்பாற்பட்ட ஊழின் பகுதியினால், அஞ்ஞான்று அப் பெரு நதியில் ஆடலை தக்கன் வெஃகி – அப்புண்ணிய காலத்திலே அந்தப் பெரிய புண்ணிய நதியிலே நீராடுதலைத் தக்கன் தானும் விரும்பி, மைப்படும் கூர்ங்கண் வேதவல்லியை – மை தீட்டிய கூரிய கண்களையுடைய வேதவல்லியாகிய தன் மனைவியை, மகளிரோடும் – தோழியர் முதலிய பெண்களோடும், ஒப்பில் பல சனத்தினோடும் – ஒப்பில்லாத பல சனங்களோடும், ஒல்லை முன் செல்ல உய்த்தன் – விரைவாக முன்னே செல்லுமாறு அனுப்பினான். [15, 6]

மாற்றமர் செம்பொற் கோயில் வயப்புலித் தவிசின் மீதாய்
வீற்றிருந் தருடல் நீங்கி விரிஞ்சனு முனிவர் யாரும்
ஏற்றதோர் ஆசி கூற இமையவர் கணமா யுள்ளோர்
போற்றிட யமுனை யென்னும் புனலியா றதன்கட் போனான். …… 16

மாற்று அமர் செம்பொன் கோயில் – மாற்றமைந்த செம்பொன்னாலான மாளிகையில், வயப் புலித் தவிசின் மீதாய் வீற்றிருந் தருளல் நீங்கி – சிங்காசனத்தின்மீது வீற்றிருந்தருளுதலை நீங்கி, விரிஞ்சனும் முனிவர் யாரும் ஏற்றது ஓர் ஆசி கூற – பிரமாவும் முனிவர் யாவரும் இயைந்துஞ் சிறந்ததுமான ஆசி மொழி கூற, இமையவர் கணமாய் உள்ளோர் போற்றிட – தேவர்கணமா யுள்ளவர்கள் துதிக்க, யமுனை என்னும் புனல் யாறு அதன்கண் போனான் – யமுனை என்று பெயர் சொல்லப்படும் நீரினையுடைய ஆறாகிய அக் காளிந்தி நதியினிடத்துச் சென்றான்
வயப்புலி – சிங்கம் [16,7]

போனதொர் தக்கன் என்போன் புரைதவிர் புனற்கா ளிந்தித்
தூநதி யிடைபோய் மூழ்கித் துண்ணென வரலும் ஓர்பால்
தேனிமிர் கமல மொன்றிற் சிவனிடத் திருந்த தெய்வ
வானிமிர் பணிலம் வைக மற்றவன் அதுகண் ணுற்றான். …… 17

போனது ஓர் தக்கன் என்போன் – போதலைச் செய்த ஒரு தனித் தக்கன் என்பான், புரைதவிர் புனல் காளிந்தித் தூ நதியிடை போய் மூழ்கி – குற்றம் நீங்கிய நீரினையுடைய காளிந்தியாகிய பரிசுத்த நதியின்கட் சென்று முழுகி, துண்ணென வரலும் – விரைந்து திரும்பி வருதலும், ஓர் பால் – ஒரு பக்கத்தே, தேன் நிமிர் கமலம் ஒன்றில் – தேன் ததும்புகின்ற தாமைரைப் புஷ்பம் ஒன்றின் மீது, சிவன் இடத்திருந்து தெய்வ வால் நிமிர் பணிலம் வைக – சிவபெருமானுடைய வாம பாகத்தில் இருந்த தெய்வத்தன்மை பொருந்திய வெண்ணிறம் மிக்க வலம்புரிச் சங்கம் எழுந்தருளியிருப்ப, அவன் அது கண்ணுற்றான் – அத்தக்கன் அதனைக் கண்டான்.
போனது காலங் காட்டுந் தொழிற்பெயர், புரை தவிர்க்கும் புனலுமாம், தெய்வப் பணிலம், வலம்புரிச் சங்கு, பணிலமே தேவியே யாதலின் சிவனிடத்திருந்த பணிலம் எனப்பட்டது. [17,7]

வேறு

கண்ணுறுவான் நனிமகிழ்ந்தே கையினையுய்த்
தெடுத்திடுங்காற் காமர் பெற்ற
பெண்ணுருவத் தொரு குழவி யாதலும்விம்
மிதப்பட்டுப் பிறைதாழ் வேணி
அண்ணலருள் புரிவரத்தாற் கவுரியே
நம்புதல்வி யானாள் என்னா
உண்ணிகழ்பே ருணர்ச்சியினாற் காணுற்றுத்
தேவர்குழாம் ஒருவிப் போனான். …… 18

கண்ணுறுவான் நனி மகிழ்ந்து – காண்போனான தக்கன் மிக மகிழ்ந்து, கையினை உய்த்து – கையை நீட்டி, எடுத்திடுங்கால் – எடுக்கும்பொழுது, காமர் பெற்ற பெண் உருவத்து ஒரு குழமி ஆதலும் – பெண் உருவமான உரு குழந்தையாய் அச் சங்கந் தோன்றுதலும், விம்மிதப்பட்டு – ஆச்சரியம் உற்று, பிறை தாழ் வேணி அண்ணல் அருள்புரி வரத்தினால், கவுரியே நம் புதல்வி ஆனாள் என்னா – கெளரியாகிய உமையே நமது மகளாயினாள் என்று, உள் நிகழ் பேறுணர்ச்சியினால் காணுற்று – உள்ளத்தினுள்ளே நிகழ்ந்த பேருணர்வாகிய ஞானத்தினாற் கண்டு, தேவர் குழாம் ஒருவிப் போனான் – தேவர்கள் கூட்டத்தை நீங்கிச் சென்றான். [18,8]

அந்நதியின் பால்முன்னர் அவன்பணியாற்
சசிமுதலாம் அணங்கி னோர்கள்
துன்னினராய் வாழ்த்தெடுப்பத் துவன்றுபெருங்
கிளைஞரொடுந் தூநீ ராடி
மன்னுமகன் கரைஅணுகி மறையிசைகேட்
டமர்வேத வல்லி யென்னும்
பன்னிதனை யெய்தியவள் கரத்தளித்தான்
உலகீன்ற பாவை தன்னை. …… 19

அந் ததியின்பால் – அக் காளிந்தி நதியின்கண், முன்னர் அவன் பணியால் – முன்னர்த் தக்கனது ஏவலின்படி, சசி முதலாம் அணங்கினோர்கள் துன்னினராய் வாழ்த்தெடுப்ப – இந்திராணி முதலிய தேவ மாதர்கள் நெருங்கி நின்று வாழ்த்தொலி செய்ய, துவன்று பெருங் கிளைஞ்ரோடும் தூநீர் ஆடி – செறிகின்ற பெரிய சுற்றத்தாரோடும் பரிசுத்தமாகிய தீர்த்தமாடி, மன்னும் அகன் கரை அணுகி – நிலைபெற்ற அகன்ற கரையை அடைந்து, மறை இசை கேட்டு – வேதாத்தியயனத்தைக் கேட்டுக்கொண்டு, அமர் வேதவல்லி எனும் பன்னிதனை எய்தி – அமர்கின்ற வேதவல்லி என்னும் மனைவியை அடைந்து, அவள் கரத்து உலகு ஈன்ற பாவை தன்னை அளித்தான் – அவளுடைய கரங்களில் உலகங்களை ஈன்ற உலக மாதாவாகிய பெண் குழந்தையைக் கொடுத்தான். [19,147]

ஏந்துதனிக் குழவியினைத் தழீஇக்கொண்டு
மகிழ்ந்துகுயத் திழிபா லார்த்திக்
காந்தண்மலர் புரைசெங்கைச் சூர்மகளிர்
போற்றிசைப்பக் கடிதின் ஏகி
வாய்ந்ததன திருக்கையிடைப் புக்கனளால்
தக்கன் அங்கண் வானோ ரோடும்
போந்துமணிக் கோயில்புக்குத் தொன்முறைபோல்
அரசியற்கை புரிந்தி ருந்தான். …… 20

ஏந்து தனிக் குழவியினை – தக்கனாற் கொடுக்கப்பெற்றுக் கரங்களில் ஏந்திய ஒப்பற்ற குழந்தையை, தழீஇக்கொண்டு மகிழ்ந்து – மார்போடணைத்துக் கொண்டு மகிழ்ந்து, குயத்து இழி பால் ஆர்த்தி – தனங்களினின்றும் உருக்கத்தாற் சுரந்தொழும் பாலை ஊட்டி, காந்தள் மலர் புரை செங்கைச் சூர் மகளிர் போற்றிசைப்ப – காந்தள்மலர் போன்ற சிவந்த கைகளையுடைய சூரரமகளிர்கள் துதிசெய்ய, கடிதின் ஏகி – விரைந்து சென்று, வாய்ந்த தனது இருகையிடைப் புக்கனள் – வளம் நிறைந்த தனது மாளிகையை அடைந்தாள்; தக்கன் அங்கண் வானோரோடும் போந்து – தக்கன் அவ்விடத்திற் கூடியிருந்த தேவர்களோடுஞ் சென்று, மணிக்கோயில் புக்கு – அழகிய மாளிகையை அடைந்து, தொன் முறைபோல் அரசியற்கை புரிந்து இருந்தான் – முன்போலத் தனது அரசியல் முறையை நடாத்திக்கொண்டிருந்தான் .

காளிந்திப் படலம் முற்றிற்று [148]
ஆகத் திருவிருத்தம் 262