4 சந்திர சாபப் படலம்

4.சந்திர சாபப் படலம்
இன்னபல் கிளைகள் மல்க இருந்திடுந் தக்கன் பின்னர்த்
துன்னிய நாண்மீ னத்துள் தொகைபெறும் இருபா னேழு
கன்னியர் தம்மை நல்கிக் கடிமண விதியி னீரால்
தன்னிகர் இல்லாப் பொற்பின் தண்மதிக் கடவுட் கீந்தான். 1

இன்ன பல கிளைகள் மல்க – இத்தன்மையவாய பல கிளைகள் பெருக, இருந்திடும் தக்கன் – அரசு வீற்றிருந்த தக்கன், பின்னர் – அதன்மேல், துன்னிய நாண் மீனத்துள் – செறிந்த நட்சத்திரங்களுக்குள்ளே, இருபான் ஏழு தொகை பெறு கன்னியர் தம்மை நல்லி – இருபத்தேழு என்னுந் தொகையைப் பெற்ற அசுவனி முதலிய பெண்களை பெற்று, கடி மண விதியின் நீரால் – விவாக விதிப்படி, தன் இல்லாப் பொற்பின் தண் மதிக் கடவுக்கு ஈந்தான் – தனக்கு ஒப்பில்லாத அழகினையுடைய குளிர்ந்த சந்திரதேவனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். [95]

ஈந்தபின் மதியை நோக்கி யார்க்குமோர் பெற்றித் தாக
வாய்ந்திடும் ஆர்வம் உய்த்து மருவுதி சிலர்பால் அன்பில்
தோய்ந்தொரு சிலரை எள்ளிச் சுளிகிற்பாய் அல்லை என்னா
ஆய்ந்திவை புகன்று தேற்றி அனையரோ டேகச் செய்தான். 2

ஈந்தபின் – மணஞ்செய்து கொடுத்தபின், மதியை நோக்கி – சந்திரனைப் பார்த்து, யார்க்கும் ஓர் பெற்றித்து ஆக வாய்ந்திடும் ஆர்வம் உய்த்து மருவுதி – யாவரிடத்தும் ஒரு தன்மைத்தாக வாய்ப்பாகிய காதலைச் செய்து கூடகடவை, சிலர் பால் அன்பில் தோய்ந்து – சிலரிடத்தில் அன்போடு கூடி, ஒரு சிலரை எள்ளி – மற்றொறு சிலரை இகழ்ந்து, சுளிகிற்பாய் அல்லை என்னா – வெறுத்தல் செய்யாதே என்று, இவை ஆய்ந்து புகன்ரு தேற்றி – இப்புத்திமதிகளை ஆராய்ந்து கூறித் தெளிவித்து, அனையரோடு ஏகச் செய்தான் – அப் பெண்களோடு செல்லும்படி செய்தான்.

ஏகிய கடவுட் டிங்கள் இலங்கெழில் மானத் தேறி
மாகநீள் நெறியிற் போந்து மடந்தையர் அவரை யெல்லாம்
ஓகையால் மேவ வுன்னி ஓர்பகற் கொருவர் பாலாய்ப்
போகமார் இன்ப மாற்றி வைகலும் புணர்ச்சி செய்தான். 3

ஏகிய கடவுள் திங்கள் – அவ்விடத்தை விட்டு நீங்கிய சந்திரதேவன், இலங்கு எழில் மானத்து ஏறி – விளங்குகின்ற அழகிய விமானத்தில் ஏறி, நீள் மாக நெறியில் போந்து – நீண்ட ஆகாய வழியிற் சென்று, மடந்தையர் அவரை எல்லாம் – மனைவியராகிய அப் பெண்கள் அனைவரையும், ஓகையால் மேவ உன்னி – உவகையோடு மருவ எண்ணி, ஒற் பகற்கு ஒருவர் பாலாய் – ஒரு தினத்திற்கு ஒருத்தி பக்கல் ஆகி, ஆர் இன்ப போகம் ஆற்றி – தெவிட்டாத இனப போகத்தை அனுபவித்து, வைகலும் புணர்ச்சி செய்தான் – நாள்தோறும் கூடி வாழ்ந்தான். [96]

இன்னணம் புணர்ச்சி போற்றி ஏகிய திங்கட் புத்தேள்
பன்னியர் அனையர் தம்மில் பழுதிலா ஆரல் தானும்
பின்னவள் தானும் ஆற்றப் பேரெழி லுடைய ராக
அன்னவர் திறத்து மேலாம் ஆர்வமோ டணுக லுற்றான். 4

இன்னணம் – இவ்வாறு, புணர்ச்சி போற்றி ஏகிய திங்கட் புத்தேள் – கூட்டரவு நிகழ்த்திய சந்திரதேவன், பன்னையர் அனையர் தம்மில் – அம் மனைவியருள், பழுது இலா ஆரல் தானும் பின்னவள் தானும் – குற்றமற்ற கார்த்திகையையும் உரோகிணியும், ஆற்றப் பேர் எழில் உடையர் ஆக – மிக்க பேரழகினை உடையராக, அன்னவர் திறந்து மேலாம் ஆர்வமோடு அணுகல் உற்றான் – அவர்கள்பால் மிக்க காதலோடு கூட்டரவு செய்தான். [96]

ஏனையர் தம்பால் சேரான் இருதுவின் வேலை பூத்த
தேனிமிர் சொல்லார் மாட்டுச் சேருறாக் கணவ ரேபோல்
வானிடை மதியப் புத்தேள் மறுத்தனன் திரியும் வேலை
ஆனதோர் பான்மை நோக்கி அவரெலாம் முனிந்து போனார். 5

ஏனையவர் தம்பால் சேரான் – மற்றைய மனிவியர்களை அணூகானாய், பூத்த இருதுவின் வேலை – பூப்பெய்திய இருது காலத்திலே, தேன் நிமிர் சொல்லார் மாட்டுச் சேர் உறாக் கணவர் போல் – தேனையொத்த இனிய சொல்லினையுடைய பெண்களிடம் அணுகலுறாத கணவரைப்போல, மதியப் புத்தேள் மறுத்தனன் – சந்திரதேவன் அணுக மறுத்து, வான் இடை திரியும் வேலை – ஆகாயத்திற் சஞ்சரிக்கும்போது, ஆனது ஓர் பான்மை நோக்கி – அவ்வாறாகிய அவன் தன்மையைக் கண்டு, அவர் எலாம் முனிந்து போனார் – மற்றைப் பெண்களாகிய அவரனைவரும் கோபித்துக்கொண்டு சென்றனர்.
இருது காலம் – சூதக காலம். [96]

போந்தனர் தக்கன் தன்பால் பொருமியே பொலம்பூட் கொங்கை
ஏந்திழை மாதர் தங்கள் கேள்வன தியற்கை கூறக்
காந்திய உளத்த னாகிக் கனன்றவன் கலைகள் எல்லாம்
தேய்ந்தில வாக என்று தீமொழிச் சாபஞ் செய்தான். 6

பொலம் பூண் கொங்கை ஏந்து இழை மாதர் – பொன்னாலாய பூணை அணிந்த கொங்கைகளையும் ஏந்திய ஆபரணங்களையும் உடைய அப்பெண்கள், தக்கன் தன்பால் போந்தனர் – தக்கனிடம் சென்று, பொருமி – துன்புற்று, தங்கள் கேள்வன் இயற்கை கூறா – தமது கணவனின் இயல்பை உரைக்க, காந்திய உளத்தன் ஆகி கனன்று – தக்கன் எரிந்த உள்ளத்தை உடையவனாய்க் கோபித்து, அவன் கலைகள் எல்லாம் தேய்ந்து இல ஆக என்று – அச்சந்திரனுடைய கலைகள் அனைத்தும் தேய்ந்து இல்லையாகுக என்று, தீ மொழிச் சாபம் செய்தான் – கொடு மொழிகளினாற் சாபம் இட்டான். [97]

செப்பருந் திருவில் வைகுஞ் சிறுவிதி என்பான் சொற்ற
இப்பெருஞ் சாபந் தன்னால் என்றுமெஞ் சாத திங்கள்
ஒப்பருங் கலைகள் வைகற் கோரொரு கலையாய் அஃகாப்
பொய்ப்பெருஞ் செல்வம் பெற்றோன் புகழெனக் குறைந்த அன்றே. 7

செப்பு அரும் திருவில் வைகும் சிறுவிதி என்பான் சொற்ற இப்பெரும் சாபந்தன்னால் – சொல்லுற்கரிய செல்வத்திலிருக்கின்ற தக்கன் இட்ட இந்த பெரிய சாபத்தால், என்றும் எஞ்சாத திங்கள் ஒப்பு அரும் கலைகள் – என்றுங் குறையாத சந்திரனுடைய ஒப்பற்ற கலைகள், வைகற்கு ஓர் ஒரு கலையாய் – நாளொன்றுக்கு ஒவ்வொரு கலை தேய்வதாய், பொய்ப் பெரும் செல்வம் பெற்றோன் புகழ் என – பொய்யாகிய பெரிய செல்வத்தைப் பெற்றவனுடைய பொய்ப்புகழ் தேய்வது போல, அஃகா குறைந்த – தேய்ந்து குறைந்தன. [97]

மூன்றுறழ் ஐந்து வைகல் முடிந்துழி மதியம் என்போன்
ஆன்றதண் கலையின் மூவைந் தழிதலும் அவனே யென்னச்
சான்றுரை செய்தல் போல்ஓர் தண்கலை இருத்த லோடும்
மான்றனன் மெலிந்து வெள்கி வானவர் கோனை உற்றான். …… 8

மூன்று உறழ் ஐந்து வைகல் முடிந்துழி – பதினைந்து நாள் கழிந்தபோது, மதியம் என்போன் – சந்திரன் ஆனவன், ஆன்ற தன் கலையில் மூவைந்து அழிதலும் – நிறைந்த குளிர்ந்த கலைகளிற் பதினைந்து தேய்ந்து அழிந்து போதலும், ஓர் தண் கலை – எஞ்சிய ஒரு தண்ணிய கலை மாத்திரம், அவனே என்னச் சான்று உரை செய்தல் போல – இவன்றான் அந்தச் சந்திரன் என்று சான்று பகர்வது போல, இருதலோடும் – எஞ்சியிருக்க, மான்றனன் மெலிந்து வெள்கி – அதனால் மயங்கி மெலிந்து நாணி, வானவர்கோனை உற்றான் – தேவர்களின் தலைவனாகிய இந்திரனை அடைந்தான்.
ஒரு கலை, அடையாள மாத்திரையாய் எஞ்சியிருந்ததென்க. அதுவுந் தொலையுமாயின் சந்திரன் என்றொருவ நிலனா மென்பது.[97]

தக்கனென் பவன்சா பத்தால் தண்கலை அனைத்தும் போகி
இக்கலை யொன்று நின்ற தீதும்இன் றிறக்கும் என்னில்
மிக்கஎன் னியல்புங் குன்றும் வியன்பெயர் தொலையும் யாண்டும்
புக்கதொல் புகழும் போகும் புகல்வசை யாகும் அன்றே. …… 9

தக்கன் என்பவன் சாபத்தால் தண்கலை அனைத்தும் போகி – தக்கன் இட்ட சாபத்தாற் குளிர்ந்த கலைகளனைத்துந் தொலைந்து, இக்கலை ஒன்று நின்றது – இந்த ஒரு கலை மாத்திரம் எஞ்சியிருந்தது; ஈதும் இன்று இறக்கும் என்னின் – இக்கலையும் இன்றோடு தொலையுமாயின், மிக்க என் இயல்பும் குன்றும் – மேலான எனது தன்மையுங் குறையும்; வியன்பெயர் தொலையும் – பெரிய பெயரும் தொலையும்; யாண்டும் புக்க தொல் புகழும் போகும் – எங்கும் பரவிய பழைமையான புகழும் நீங்கும்; வசை புகல் ஆகும் – வசை தான் எனக்குப் புகலிடமாகும் .
மிக்க இயல்பு பூரணசந்திரன் என்னும் இயல்ப்ய், வியன்பெயர் கலாநிதி என்னும் பெயர். புகழ், சீதள கிரணங்களைப் பரப்பிப் பலவகை உயிர்களைப் பெருகச் செய்யும் புகழ். [98]

ஈங்கினிச் செய்வ தென்னோ உணர்கிலேன் எற்கோர் புந்தி
தீங்கற வுரைத்தி யென்னச் செப்பினன் இரங்கி ஏங்கித்
தாங்கரும் பையுள் வேலை சார்தலுந் தழுவி எற்கோர்
பாங்கனை அஞ்சல் என்னா இவைசில பகர்தல் உற்றான். 10

இனி ஈங்கு செய்வது என் – இன் இங்குச் செய்யவேண்டுவ தென்னை?, உணர்கிலேன் – யான் ஒன்றும் அறியேன், தீங்கு அற எதற்கு ஓர் புந்தி உரைதி என்ன – குறைவு நீங்க எனக்கு ஒரு புத்தி உரைபாயாக என்று, செப்பினர் இரங்கி ஏங்கி – கூறிப் புலம்பி ஏங்கி, தாங்கு அரும் பையுள் வேலை சார்தலும் – தாங்குதற்கரிய துன்பக்கடலுள் மூழ்குதலும், தழுவி – அந்தச் சந்திரனை அணைத்து, எனக்கு ஓர் பாங்கனை – எனக்கு ஒப்பிலாத தோழமையுடையாய், அஞ்சல் என்னா – அஞ்சாதே என்று, சில இவை பகர்தல் உற்றான் – இந்திரன் சிலவற்றைச் சொல்லுவான் ஆயினான். [98]

ந்தைவாழ் கயிலை தன்னில் இபமுகன் முதிரை யாவுந்
தந்தபே ரகடும் அங்கைச் சகுலியும் நோக்கி நக்காய்
அந்தநாள் அனையான் சீறி ஆரும்நிற் காணா ராகி
நிந்தைசெய் தகல வேநீ நீசரின் திகழ்தி என்றான். 11

அந்த நாள் – முன்னொரு காலத்திலே, எந்தை வாழ் கயிலை தன்னில் – சிவபெருமான் இருக்கும் திருக்கைலாசமலையில், இபமுகன் – விநாயகபெருமானுடைய, முதிரை யாவும் தந்த பேர் அகடும் – முதிரை வருக்கங்களை அனைத்தையும் உட்கொண்ட பெரிய திருவயிற்றையும், அங்கைச் சகுலியும் – அழகிய திருக்கையில் உள்ள மோதகத்தையும், நோக்கி நக்காய் – பார்த்துச் சிரித்தாய்; அனையான் சீறி – அவ்விநாயகப் பெருமான் அப்பொழுது உன்னைக் கோபித்து, யாரும் நின் காணார் ஆகி – எவரும் உன்னை நோக்காராய், நிந்தை செய்து அகல – உன்னை இகழ்ந்து விலகிச்செல்லும்பொருட்டு, நீ நீசரன் திகழ்தி என்றான் – நீ நீசரைப்போல் இருக்கக்டவை என்று சாபமிட்டார்.
முதிரை ஆகுபெயர்; சிறு தானிய உணவு.[99]

என்றவச் சாபந் தன்னா லியாவரும் இறப்ப எள்ளி
அன்றுதொட் டுனைநோக் காராய் அகலநீ வெள்கி விண்மேல்
சென்றிலை ஒடுங்கல் நாடித் திசைமுகன் முதலோர் வெள்ளிக்
குன்றிடை ஏகி முன்னோன் குரைகழல் பணிந்து சொல்வார். 12

என்ற அச் சாபந் தன்னால் – என்றிங்கனம் விநாயகப்பெருமான் இட்ட சாபத்தால், அன்று தொட்டு யாவரும் உனை நோக்காராய் – அன்று தொடக்கம் யாவரும் உன்னைப் பாராதவர்களாய், இறப்ப எள்ளி அகல் -மிகவும் இகழ்ந்து அகன்றாராக, நீ வெள்கி விண்மேற் சென்றிலை – நீ வெட்கமுற்று ஆகாயத்திற் சஞ்சரித்தாயல்லை; ஒடுங்கல் நாடி – உன் மெலிவைக் கண்டு, திசைமுகம் முதலோர் வெள்ளிக் குன்றிடை ஏகி – பிரமதேவர் முதலானவர்கள் வெள்ளிமலையாகிய திருக்கைலாசத்துக்குப் போய், முன்னோரை குரை கழல் பணிந்து சொல்வார் – மூத்தபிள்ளையாரின் ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த பாதங்களை வணங்கி விண்ணப்பஞ் செய்வாராய்.
சொல்வார் என்றார் என, வருஞ் செய்யுளில் முடிபு செய்க. [99]

காண்டகு நினது மேன்மை கருதிடான் இகழ்ந்து மாசு
பூண்டனன் அதனால் திங்கள் பொருமலுற் றொடுங்கும் அன்னான்
வேண்டுமிவ் வுலகிற் கெந்தை விதித்திடு சாபத் தன்மை
ஆண்டொரு வைகல் போற்ற அருள்புரிந் தளித்தி என்றார். 13

காண் தகு நினது மேமை கருதிடான் – தரிசித்தற்குரிய தேவரீருடைய மேன்மையைக் கருதாதவனாய், திங்கள் இகழ்ந்து மாசு பூண்டனன் – சந்திரன் தேவரீரை இகழ்ச்சிசெய்து குற்றஉடையோன் ஆயினான்; அதனால் பொருமல் உற்று ஒடுங்கும் – அதனாலே துன்பம் அடைந்து ஒடுங்குகின்றான்; அன்னான் இவ்வுலகிற்கு வேண்டும் – அச்சந்திரன் இவ்வுலகத்துக்கு வேண்டியவன்; எந்தை விதித்திடும் சாபத் தன்மை – ஆகையினாலே எம்பெருமானே தேவரீர் இட்ட சாபப்பயனை ஆண்டு ஒரு வைகல் போற்ற – ஓராண்டுக்கு ஒருநாள் அநுசரிக்க, அருள் புரிந்து – கிருபை செய்த்ய், அளித்தி என்றார் – அச்சந்திரனை இரட்சிப்பீராக என்று பிரார்த்தித்தார்கள். [99]

ஐங்கரன் அதனைக் கேளா அவ்வகை அருள வெய்யோன்
திங்களின் முதலாம் பாலிற் செல்லுறு நாலாம் வைகல்
மங்குல்சூ ழுலகம் நோக்கா மரபினால் வதிந்தாய் மற்றப்
புங்கவற் கந்நாள் மிக்க பூசனை புரிய மேலோர். 14

ஐங்கரன் அதனைக் கேளா – ஐந்து கரங்களையுடைய விநாயகப் பெருமான் அவர்களுடைய வேண்டுகோளைக் கேட்டு, அவ்வகை அருள – அவ்வாறே ஆகுக என்று அருள்புரிய, வெய்யோன் திங்களின் – சூரியனுக்குரிய மாசமாகிய ஆவணியில், முதலாம் பாலில் செல்லுறும் நாலம் வைகல் – பூர்வ பக்கத்தில் வரும் சதுர்த்தித் திதியில், மங்குல சூழ் உலகம் – மேகம் தவழும் ஆகாயத்தை, உலகம் நோக்கா மரபினால் – உலகத்தவர்கள் நோக்காததொரு முறையில் மேலோர் அந்நாள் அப் புங்கவற்கு மிக்க பூசனை புரிய – மேலோர்கள் அந்த ஆவணிச்சதுர்த்தியில் அவ்விநாயகப் பெருமானுக்கு விசேட பூசனைகள் செய்ய, வதிந்தாய் – நீசத்துவத்தோடு கூடிய நீ ஒதுங்கி வாழ்ந்தாய்.

ஆவணி சிங்க சங்கிராந்தி, சிங்கம் சூரியனுக்குரிய இராசி. அதனாலே ஆவணி ஞாயிறு சூரியனுக்குச் சிறந்ததாலும் நோக்குக. முதலாம் பால் பூர்வ பக்கம். உலகம் பின்னுங் கூட்டப்பட்டது. உலகம் நோக்கக் கூசுதலின் ஒதுக்கம் வருவிதுரைக்கப்பட்டது. [100]

இதுபழி ஒன்று நிற்க இன்றுநீ தக்கன் தன்னால்
புதியதோர் குறையும் பெற்றாய் பொலிவொடு திருவுந் தீர்ந்தாய்
மதியினை மதிய தற்றாய் மற்றினி வல்லை சென்று
விதியொடு பகர்தி சேயை வேண்டியீ தகற்று மென்றான். 15

இது பழி ஒன்று நிற்க – இப்பழி ஒன்றுமே போதுமானதாயிருக்க, இன்று நீ தக்கன் தன்னால் புதியது ஓர் குறையும் பெற்றாய் – இப்பொழுது நீ தக்கனாற் புதியதொரு பழியையுஞ் சேர்த்துக்கொண்டாய்; மதியினை மதி அற்றாய் – மதியமே நீ மதியற்றாய்; இனி வல்லை சென்று – இனி விரைந்து சென்று, விதியொடு பகர்தி – பிரமதேவரிடம் முறையீடு செய்; சேயை வேண்டி – பிரமதேவர் தம் புதல்வனாகிய தக்கனை வேண்டுதல் செய்து, ஈது அகற்றும் என்றான் – இச் சாபத்தை நீக்குவார் என்று இந்திரன் மொழிந்தான்.

வச்சிரம் எடுத்த செம்மல் மற்றிவை புகலும் எல்லை
இச்செயல் இனிது வல்லே ஏகுவல் அவ்வா றென்னா
அச்சென வெழுந்து திங்கள் அவன்பணி தலைக்கொண் டேகி
முச்சகந் தன்னின் மேலாம் முளரியான் உலகம் புக்கான். 16

வச்சிரம் எடுத்த செம்மல் – வச்சிராயுதத்தைத் தாங்கிய இந்திரன், இவை புகலும் எல்லை – இவற்றைச் சொல்லும்போது, இச் செயல் இனிது – இவ்வாறு செய்தல் நன்று; அவ்வாறு வல்லே ஏகுவன் என்னா – அவ்வாறு செய்தற்கு விரைந்து செல்லுவேன் என்று, அவன் பணி தலைக்கொண்டு – அவ்விந்திரன் பணியைத் தலைமேற்கொண்டு, திங்கள் அச்சென எழுந்து ஏகி – சந்திரன் விரைந்து எழுந்து சென்று, முச் சகம் தன்னின் மேலாம் முளரியான் உலகம் புக்கான் – மூன்று உலகங்களிலும் உயர்ந்த தாமரையாசனரான பிரமதேவருடைய உலகத்தை அடைந்தான். [101]

தாமரை என்னுந் தண்பூந் தவிசிடைத் திகழ்ந்த அண்ணல்
மாமல ரடியின் வீழா மாதுலன் வெகுண்டு சொற்ற
தீமொழி யுணர்த்தி உன்றன் சேயினைத் தெருட்டித் தீயேன்
தோமுறு கவலை மாற்றித் துடைத்திஇச் சாப மென்றான். 17

தாமரை என்னும் தண் பூந்தவிசிடைத் திகழ்ந்த அண்ணல் மா மலர் அடியில் வீழா – தாமரை என்னும் தண்ணிய மலராசனத்தில் விளங்குகின்ற பிரமதேவருடைய சிறந்த மலர்ப்பாதங்களில் வீழ்ந்து வணங்கி, மாதுலன் வெகுண்டு சொற்ற தீமொழி உணர்த்தி – மாமனான தக்கம் கோபித்துச் சொன்ன கொடிய சாபத்தைச் சொல்லி, உன் தன் சேயினைத் தெருட்டி – உம்முடைய புதல்வனைத் தெளியச் செய்து, தீயேன் உறும் தோம் கவலைமாற்றி – தீயேன் அநுபவிக்கின்ற குற்றமாகிய கவலையைப் போக்கி, இச் சாபம் துடைத்தி என்றான் – இச்சாபத்தை நீக்கியருள்வீராக என்று வேண்டினான்.[101]

அன்னது மொழிந்த திங்கட் கம்புயன் மொழிவான் ஈண்டுத்
தன்னுள நெறிப்பால் அன்றிச் சார்கிலன் தக்கன் என்பான்
என்னுரை இறையுங் கொள்ளான் யான்அவன் மாட்டுஞ் செல்லேன்
முன்னுளன் அல்லன் யார்க்கும் முதல்வனே யாகி நின்றான். 18

அன்னது மொழிந்த திங்கட்கு – அதனை உரைத்த சந்திரனுக்கு, அம்புயன் மொழிவான் – பிரமதேவர் கூறுவார், தக்கன் என்பான் ஈண்டு தன் உளம் நெறிப்பால் அன்றி சார்கிலன் -தக்கன் இப்பொழுது தன் மனம் போன போக்கிற் போபவன் அல்லாமல் மற்றொரு சார்பைக் கொள்பவன் அல்லன்; என் உரை இறையும் கொள்ளான் – என் வார்த்தையைச் சிறிதும் கேளான்; யானும் அவன் மாட்டுச் செல்லேன் – யானும் அவன்பாற் போகேன்; முன் உளன் அல்லன் – அவனோ முன்னிருந்த நிலைமையன் அல்லன்; யார்க்கும் முதல்வனே ஆகி நின்றான் – யாவர்க்குந் தான் தலைவனாய்த் தலையெடுப்புற்றிருக்கின்றான்.
அம்புயன் மொழிவான், என்றலும் என முப்பத்தைந்தாஞ் செய்யுளில் முடிபு காண்க. [101]

சொல்லுவ பிறஎன் வேறு தொல்லைநாள் யானே கூற
அல்லுறழ் கண்டத் தெந்தை அரும்பெருந் தன்மை யாவும்
ஒல்லையின் உணர்ந்து பன்னாள் உழந்ததோர் தவத்தால் இந்த
எல்லையில் திருவின் வைகி இறையும்அங் கவனை எண்ணான். 19

பிற வேறு சொல்லுவ என் – இதற்கு அவனைப்பற்றி வேறு பிற சொல்லவேண்டுவன என்னை, தொல்லை நாள் யானே கூற – முன்னாளிலே யானே உபதேசிக்க, அல் உறழ் கண்டத்து எந்தை அரும் பெரும் தன்மை யாவும் ஒல்லையில் உணர்ந்து – நீலகண்டராகிய சிவபெருமானுடைய அரிய பெரிய இயல்புகள் யாவற்றையும் விரைவாக உணர்ந்து, பல் நாள் உழந்த ஓர் தவத்தால் – பலகாலம் முயன்று செய்த ஒப்பில்லாத தவத்தின் பயனாக, இந்த எல்லை இன் திருவின் வைகி – அளவிலாத இந்தச் செல்வத்தைப் பெற்று அதில் முழுகி, அங்கு அவனை இறையும் எண்ணான் – அச் செல்வத்தை வழங்கிய சிவபெருமானையுஞ் சிறிதும் மதியாதவன் ஆயினான். [102]

வேறு

செக்கரிற் படர்சடைத் தீயின் தோற்றமாம்
முக்கணா யகன்எதிர் மொழிந்து வேண்டலாம்
எக்குறை யாயினும் எவரும் ஈண்டையில்
தக்கன்முன் ஓருரை சாற்ற லாகுமோ. 20

செக்கரிற் படர் சடை – செவ்வானம்போலும் விரிந்த சடையும், தீயின் தோற்றம் – அக்கினியின் வடிவம், ஆம் – பொருந்திய, முக்கண் நாயகன் எதிர் – முக்கண்ணராகிய சிவபெருமான் முன்னிலையில், எவரும் எக்குறையாயினும் வேண்டலாம் – யாவரேயாயினும் எவ்வித குறையையேனும் முறையீடு செய்து வேண்டுதல் செய்யலா; ஈண்டையில் தக்கன் முன் – இப்பொழுதைய தக்கன் எதிரில், எவரும் – எப்படிப்பட்ட பெருமை படைத்தவராயினும், ஓர் உரை ச் சாற்றல் ஆகுமோ – ஒரு வார்த்தைதானுஞ் சொல்லுதல் கூடுமோ.
எவரும் பின்னுங் கூடப்பட்டது. [102]

அண்ணலந் திருவிடை அழுந்தி யாரையும்
எண்ணலன் செந்நெறி இயற்ற வோர்கிலன்
கண்ணிலன் மதியிலன் களிப்பி னோர்மகன்
மண்ணிடை விரைவொடும் வழிக்கொண் டாலென. 21

கண் இலன் – கண்ணில்லாதவன், மதி இலன் – அதன் மேலும் புத்தி இல்லாதவன், களிப்பின் ஓர் மகன் – இவ்விரண்டுமமையாமல் கள்ளுண்டு களித்தலையு முடையனாகிய முழுமகன் ஒருவன், மண்ணிடை விரைவோடு வழிகொண்டால் என – துணை வேண்டானாய்ப் பூமியில் விரைவாத் தானே வழிபிடித்து நடந்தாற்போல, அண்ணல் அம் திருவிடை அழுந்தி – பெருமை பொருந்திய அழகிய செல்வத்துள் முழுகி, யாரையும் எண்ணலன் – எவரையும் மதியாதவனாய், செம் நெறி இயற்ற ஓர்கிலன் -செம்மையாகிய ஒழுக்க நெறியை நடத்தச் சிந்தியாதவ னாயினான்.
தான் நினைத்த வழியிற் செல்கின்றான் என்றவாறு.

களியுறு பெற்றியன் கறுவு சிந்தையன்
அளியறு முகத்தினன் அருளில் வாய்மையன்
தெளிதரு முணர்விலன் சிதைந்து மேலிவன்
விளிவுறு பொருட்டின்இம் மேன்மை பெற்றுளான். 22

களி உறு பெற்றியன் – மிக்க களிப்பை உடையவன், கறுவு சிந்தையன் – கறுவுகின்ற மனத்தினையுடையவன், அளி அறு முகத்தினன் – இரக்கமற்ற சொல்லினை யுடையவன், தெளி தரும் உணர்வு இலன் – தெளிந்த உணர்வு இல்லாதவன், இவன் – இப்படிப்பட்ட தக்கன், மேல் சிந்தை விளிவு உறு பொருட்டின் – இனிமேல் சிதைத்து அழிந்து தொலைவுறுபொருட்டே, இம் மேன்மை பெற்றுளான் – இம்மேன்மைகளை யெல்லாம் பெற்றிருக்கின்றான். [103]

ஈண்டிவன் விளிதலும் இன்றி எம்மனோர்
பூண்டநன் னிலைகளும் போக்கல் சிந்தியான்
நீண்டசெஞ் சடைமுடி நிமலன் அன்னவன்
வேண்டிய வரமெலாம் விரைவில் நல்கினான். …… 23

ஈண்டு இவன் – இங்கு இத் தக்கன், விளிதலும் இன்றி – தான தொலைதலும் இல்லாமல், எம்மனோர் பூண்ட நன்னிலைகள் – எம்போலிகள் மேகொண்ட நன்னிலைகள், போக்கலும் சிந்தியான் – தன்னால் கெடுக்கப்படுதலையும் மனத்திற் பொருள் செய்யான்; நீண்ட செஞ்சடை நிமலம் – நீண்ட செஞ்சடையையுடைய சிவபெருமான், அன்னவன் வேண்டிய வரம எலாம் விரைவின் நல்கினான் – அத்துடன் விரும்பிய வரங்களையெல்லாம் விரைவிற் கொடுத்தருளினார்.

எம்பெருமான் கருத்தை யாவரே அறியவல்லார். விரைவு நன்மைக்கன்று போலும். நிலைகளும் என்புழி உம்மை, போக்கல் என்பதனோடு கூட்டப்பட்டது.

அன்னது நிற்கயாம் அவனை வேண்டுவம்
என்னினும் முனிவுறா இகழும் எம்மையும்
நின்னுறு சாபமும் நீக்க லான்இனிப்
பின்னொரு நெறியுள பேசக் கேண்மியா. …… 24

அன்னது நிற்க – அது நிற்க, யாம் அவனை வேண்டுவம் என்னினும் – யாமிருவேமும் அவனை இரந்து கேட்போமாயினும், முனிது உறா – கோபித்து, எம்மையும் இகழும் – எம்மையும் இகழுவான்; நின் உறு சாபமும் நீக்கலான் – உனக்குற்ற சாபத்தையும் நீக்கான்; இனி பின் – இங்கனமாயபோது, உள – என்றும் உள்ள, ஒரு நெறி – ஒன்றாகிய நெறியை, பேசக் கேள் – சொல்லக் கேட்பாயாக. [104]

செய்யனைக் கண்ணுதற் சிவனை எம்மனோர்க்
கையனை அடிகளை அமல னாகிய
மெய்யனை அடைந்து நின்மேனி மாசினை
ஒய்யென அகற்றிலை உணர்வி லாய்கொலோ. …… 25

செய்யன் – செம்மையுடையவரும், நம்மனோர்க்கு ஐயன் – நம்மவர்களுக்குத் தலைவரும், அடிகள் – பரமாசாரியரும், அமலன் ஆகிய மெய்யன் – நிருமலராகிய பரமாப்தரும் ஆகிய, கண்ணுதற் சிவனை அடைந்து – நெற்றிக்கண்களையுடைய பரமசிவனை யடைந்து, நின் மேனி மாசினை ஒய் என அகற்றிலை – உன் உடற் குற்றத்தை விரைந்து போக்குதற்குரியை, அங்கனம் செய்தாயில்லை; உணர்வு இலாய் கொல் – அவ்வாறான உணர்ச்சி கைவரப்பெற்றிலாய் போலும் [104]
செம்மை செந்நிறம்; நடுநிலையுமாம்.

ஈதவன் முன்புசென் றிசைக்க நீக்குநின்
பேதுற அனையது பேசல் வேண்டுமோ
மேதகும் இருளினால் விளங்கி டாதவை
ஆதவன் காட்டுதற் கையஞ் செய்வரோ. …… 26

அவன் முன்பு சென்று – சிவபெருமானின் முன்னிலையிற் சென்று, ஈது இசைக்க – இச் சாப வரலாற்றை விண்ணப்பிக்க, நின் பேதுறவு நீக்கும் – உன் கலக்கமாகிய குறையை நீக்கியருளுவார்; அனையது பேசல் வேண்டுமோ – அவ்வாறு செய்தருளுவார் என்பததைச் சொல்லவும் வேண்டுமோ; மேதகும் இருளினால் விளங்கிடாதவை – மிகுதியான இருளினால் மூடுண்டு விளங்காத பொருள்கலை, ஆதவன் காட்டுதற்கு ஐயம் செய்வரோ – சூரியன் விளக்கஞ் செய்து காட்டுவான் என்பதில் யாருஞ் சந்தேகங் கொள்ளுவார்களா?
சிவபெருமானிடஞ் செல்லின் நின்குறை சூரியனை எதிர்பட்ட இருள் போலாம் என்றவாறு. [104]

சிறாரென நமையெலாஞ் சிறப்பின் நல்கிய
இறால்புரை சடைமுடி எந்தைக் கன்பராய்
உறாதவர் தம்மையும் உற்ற பான்மையர்
பெறாததோர் பொருளையும் பேச வல்லமோ. …… 27

நமை எலாம் சிறார் என சிறப்பின் நல்கிய – நம்மை எல்லாந் தமது குழந்தைகளை ஒப்பச் சிறப்பின்கண் வைத்தருளிய, இறால் புரை சடை முடி எந்தைக்கு – தேனிறாலை ஒத்த சிவந்த சடைமுடியையுடைய எம் ப்ரமபிதாவுக்கு, அன்பராய் உறாதவர் தம்மையும் – அன்பராய்ச் சரணடைந்தவர்கள், பெறாறது ஓர் பொருளையும் – பெறமுடியா திருப்பதொரு செல்வத்தையும், பேச வல்லமோ – யாம் எடுத்துச் சொல்ல வல்லோமா?
உறாதார் உறா அல்லலும், உற்றார் உறாச் செல்வமும் இல்லை என்பதாம். மையும் எனப் பிரித்து, மை – குற்றம், பொருள் – குணம் எனப் பொருள் கூறுவதுமுண்டு. [105]

தெருளொடு தன்னடி சேருந் தொண்டினோர்
பருவரல் ஒழித்திடும் பான்மைக் கல்லவோ
விரிசுடர் கெழுவிய வெள்ளி ஓங்கலின்
அருளுரு வெய்தியே அமலன் மேயதே. …… 28

விரிசுடர் கெழுமிய வெள்ளி ஓங்கலில் – விரிந்த சுடர்கள் செறிந்த வெள்ளீமலையாகிய திருக்கைலாசத்தில், அமலன் அருள் உரு எய்தி மேயது – சிவ பெருமான் அருள்வடிவங் கொண்டு எழுந்தருளியிருப்பது, தெருளொடு தன் அடி சேரும் தொண்டின்னோர் – தெளிந்த புத்தியோடு தமது திருவடிகளைச் சரண் என்றடைகின்ற அடியார்களுடைய, பருவரல் ஒழித்திடும் பான்மைக்கு அல்லவோ – துன்பங்களை நீக்கியருளும் பொருட்டன்றோ. [105]

இடுக்கணங் கொருவர்மாட் டெய்தின் எந்தைதன்
அடித்துணை அரணமென் றடைவ ரேயெனில்
துடைத்தவர் வினைகளுந் தொலைக்கும் இப்பொருள்
பிடித்திலை ஆற்றவும் பேதை நீரைநீ. …… 29

ஒருவர் மாட்டு இடுக்கண் எய்தின் – ஒருவரிடத்துத் துன்பம் உண்டாயின், எந்தைதன் அடித்துணை அரணம் என்று அடைவர் எனின் – அவர் எமது பிதாவாகிய சிவபெருமானுடைய இரண்டாகிய திருவடிகளைச் சரண் என்று அடைவாரேயானால், துடைத்து – அவருக்குண்டான இடுக்களையும் பற்றறக் களைந்து, அவர் வினைகளும் தொலைக்கும் – அவருடைய வினைகளையுந் தொலைத்தருளுவர்; நீ இப்பொருள் பிடித்திலை – சந்திரன் நீ இவ்வுண்மையைப் பொருளைக் கடைபிடித்தாயல்லை; ஆற்றவும் பேதை நீரை – அதனாற் பெரிதும் பேதமை உடையை ஆயினை. [106]

அந்தியஞ் சடைமுடி அண்ணல் தன்னடி
சிந்தைசெய் தடைந்திடு சிறுவன் மேல்வரு
வெந்திறல் நடுவனை விலக்கி அன்றுமுன்
வந்தருள் புரிந்தது மறத்தி போலுமால். …… 30

அந்தி அம் சடை முடி அண்ணல் தன் அடி சிந்தை செய்து – அந்திக் காலத்து வானம் போன்ற அழகிய சடைமுடியையுடைய சிவபெருமானின் திருவடிகளை மனத்தில் இருத்திக்கொண்டு, அடைந்திடும் – அப்பெருமானின் திருவடிகளையே சரண் என்று அடைந்த, சிறுவன் மேல் வரும் வெம் திறல் நடுவனை – சிறுவராகிய மார்க்கண்டேய முனிவர் மீது வந்த கொடிய வலி படைத்த இயமனை, விலக்கி – உதைத்து விலக்கி, அன்று – அப்பொழுதே, முன்வந்து – அம் முனிவர் முன்னிலையிலே தோன்றியருளி, அருள் புரிந்து – திருவருள் பாலித்ததை, மறத்தி போலும் – மதியே மறத்தலைச் செய்வாய் போலும்.
மறத்தலாகா தென்றவாறு. [106]

விஞ்சிய திரைகெழு வேலை தன்வயின்
நஞ்சமன் றெழுதலும் நடுங்கி நாம்அவன்
தஞ்சென அடியிணை சாரத் தான்மிசைந்
தஞ்சலென் றருளிய தயர்க்க லாகுமோ. …… 31

விஞ்சிய திரை கெழு வேலை தன் வயின் – மிக்க திரை செறிந்த பாற்கடலில், அன்று – கடைந்த கால்த்தில், நஞ்சம் எழுதலும் – ஆலகால விடம் எழுதலும், நாம் நடுங்கி அவன் தஞ்சு என அடி இணை சார – நாமெலாம் நடுக்கங்கொண்டு அப்பெருமானே புகலிடம் என்று திருவடிகளிற் சரண புக, தான் மிசைந்து – அவர் தாம் அதனைத் திருவமுத் செய்து, அஞ்சல் என்று அருளியது = அஞ்சற்க என்று திருவருள் செய்ததை, அய்ர்க்கல் ஆகுமோ – மறத்தல் கூடுமோ?
அது மறக்கத்தக்க சம்பவம் அன்றே என்றவாறு. [106]

வார்த்தன உமையவள் மலர்க்கைத் தோன்றியே
ஆர்த்தெழு கங்கையிவ் வகிலம் எங்கணும்
போர்த்திட வெருவியாம் போற்றச் சென்னியில்
சேர்த்தியன் றளித்ததுந் தேற்றி லாய்கொலோ. …… 32

வார் தன உமையவள் மலர்க்கை தோன்றி – கச்சணிந்த தனத்தினையுடைய உமாதேவியாரின் மலர்போலுந் திருக்கரத்தில் உண்டாகி, ஆர்த்து எழு கங்கை – ஆரவாரித் தெழுந்த கங்கையானது, இ அகிலம் எங்களும் போர்த்திட – இந்த உலகம் முழுவதையும் மூடிக்கொள்ள, யாம் வெருவிப்போற்ற – நாம் அதற்குப் பயந்து துதிக்க, சென்னியிற் சேர்த்தி – அக் கங்கையைத் திருமுடியில் இருத்தி, அன்று அளித்ததும் – அந்நாளில் நம்மைப் பாதுகாத்தருளியதைஉம், தேற்றிலாய் கொல் – தெளிந்தாயில்லையோ? [107]

அளப்பருங் குணத்தின்எம் மண்ணல் அன்பரால்
கொளப்படும் பேரருள் கூற்றின் பாலதோ
கிளத்திட அரியதேல் கேடில் பல்பகல்
உளப்பட உன்னினும் உலவிற் றாகுமோ. …… 33

அளப்பு அரும் குணத்தில் எம் அண்ணல் – அளவிடுதற்குரிய குணங்களையுடைய எமது இறைவன், அன்பரால் கொளப்படும் பேரருள் – அன்பர்கள் பொருட்டுச் செய்தருளிய பேரருட்டிறம், கூற்றின் பாலதோ – சொல்லில் அடங்குவ தாகுமோ, கிளத்திடல் அரியதேல் – சொல்லில் அடங்காதாயின் மனத்தால் நினைக்கலாமே யெனின், கேடு இல் பல் பகல் உளப்பட உன்னினும் – இடையீடுபடாத பலவாகிய காலம் மனத்திற் பொருத்த நினைத்தாலும், உலவிற்று ஆகுமோ – முடிவு பெறுவது ஆகுமா? [107]

ஆதலின் ஈண்டுநின் றாதி நாயகன்
காதலின் மேயவக் கயிலை யுற்றவன்
பாதமிங் கரணெனப் பற்றி வல்லைநின்
பேதுறல்*1 ஒழிமதி பெருந்தண் மாமதி. …… 34

ஆதலின் – ஆதலினாலே, பெரும் தண் மா மதி – பெரிய தண்ணிய சிறந்த சந்திர்னே, ஈண்டு நின்று – இவ்விடத்தினின்றும் நீங்கி, ஆதி நாயகன் காதலின் மேய அ கயிலை உற்று – முழுமுதல்வராகிய சிவபெருமான் விருப்போடு வீற்றிருக்கின்ற அந்தத் திருக்கைலாசத்தை அடைந்து, அவன் பாதம் இங்கு அரண் என பற்றி – அப்பெருமானின் பாதங்களே இனிச் சரண் என்று இறுகப் பற்றி, நின் பேதுறவு ஒல்லை ஒழி மதி – உன்னுடைய சாபத்துயரை விரைந்து நீக்குவாயாக.
மதி அசை. [107]

என்றலும் அயன்பதத் திறைஞ்சி எம்பிரான்
நன்றிவை புகன்றனை ஞான மூர்த்திபால்
சென்றடை வேனெனச் செப்பி வெள்ளியங்
குன்றினை அணைந்து பொற்கோயில் மேயினான். …… 35

என்றலும் – பிரமதேவர் இவ்வாறு கூறுதலும், அயன் பதத்து இறைஞ்சி – அவருடைய பாதங்களை வணங்கி, எம்பிரான் நன்று இவை புகன்றனை – எம்பெருமானே நன்மையாகிய இவைகளை உரைத்தீர்; ஞான மூர்த்திப்பால் சென்று அடைவேன் என செப்பி – ஞான வடிவினராகிய சிவெபெருமானிடம் போயடைவேன் என்று கூறி, வெள்ளி அம் குன்றினை அடைந்து – அழகிய திருக்கைலாசமலையை அடைந்து, பொன் கோயில் மேயினான் – செம்பொற்றிருக்கோயிலை அணுகினான்
பதினெட்டாஞ் செய்யுளில் வந்த அம்புயன் மொழிவான், ஈண்டு என்றலும் என முடிவு பெறுதல் காண்க. [108]

தன்னுறு பருவரல் சாற்றக் காவலோன்
மன்னருள் நிலையொடு மரபின் உய்த்திடப்
பொன்னவிர் செஞ்சடைப் புனித நாயகன்
முன்னுற வணங்கினன் முடிவில் அன்பினால். …… 36

தன் உறு பருவரல் சாற்ற – தனக்குற்ற துயரத்தை விண்ணப்பஞ் செய்ய, காவலோன் – வாயில் காப்போரான திருநந்திதேவர், மன் அருள் நிலையொடு மரபின் உய்த்திட – இறைவனுடைய அநுமப்திப்படி முறைப்படி உள்ளே செலுத்த, பொன் அவிர் செம் சடைப் புனித நாயகன் முன் – பொன்மயமாக விளங்குகின்ற சிவந்த சடையையுடைய புனிதராகிய சிவபெருமான் முன்நிலையில், முடிவு ல் அன்பினால் உற வணங்கினன் – எல்லையில்லாத அன்போடு பெரிதும் வணங்கினான். [108]

மேற்றிகழ் உபநிட வேத வாய்மையால்
போற்றலும் வந்ததென் புகல்தி யாலெனச்
சாற்றினன் உயிர்தொறுந் தங்கித் தொல்வினை
தேற்றுபு வினைமுறை செலுத்துந் தொன்மையோன். …… 37

மேல் திகழ் வேத உபநிட வாய்மையால் போற்றலும் – உயர்ந்து விளங்குகின்ற வேத உபநிடத வாக்குகளாற் றுதித்தலும், உயிர்தொறும் தங்கி – உயிர்கள்தோறும் உயிர்க்குயிரா யிருந்து, தொல்வினை தேற்றுபு – அவ்வுயிர்களின் பழைமையான வினைகளை அறிந்து, வினை முறை செலுத்தும் – முகந்து கொண்ட பிராரத்த வினையை முறைப்படி நுகர்விக்கின்ற, தொன்மையோன் – பழையோரான சிவபெருமான், வந்தது என் புகல்தி என சாற்றினன் – நீ இங்கே வந்தது என்னை சொல்லுதி என்று அறியார்போல வினாவியருளினார்.
தொல்வினை சஞ்சிதம் [108]

நங்களை அலைத்திடு நண்ண லன்தனை
இங்கிவண் அடுதும்என் றிருட்கள் சூழ்ந்தென
மங்குலின் நிறங்கொடு வடிவம் வேறதாந்
திங்கள்நின் றெம்பிராற் கினைய செப்புவான். …… 38

தங்களை அலைத்திடும் நண்ணலன் தனை – நம்மை வருத்துகின்ற பகைவனை, இங்கு இவண் அடுதும் என்று – இவ்விடத்தில் அழிப்போம் என்று, இருள்கள் சூழ்ந்தென – இருட்படலங்கள் சூழ்ந்தாற்போல, மங்குலின் நிறம் கொடு – இருளின் நிறம் பொருந்தி, வடிவம் வேறு ஆம் திங்கள் நின்று – வடிவம் வேறுபட்ட சந்திரன் சிவ்பெருமான் முன்னிலையில் நின்ற், எம்ம்பிராற்கு இனைய செப்புவான் – எம்பெருமானுக்கு இவ்வாறு கூறுவான். 109]

வன்றிறல் தக்கன்முன் வழங்கு தீச்சொலால்
துன்றிருங் கலையெலாந் தொலைந்து போந்திட
ஒன்றிவண் இருந்ததால் உதுவுந் தேய்ந்திடும்
இன்றினி வினையினே னியாது செய்வதே. …… 39

வன் திறல் தக்கன் முன் வழங்கு தீச் சொலால் – வலிய திறலினையுடைய தக்கன் முன் இட்ட சாபத்தால், துன்று இரும் கலை எலாம் தொலைந்து போந்திட – செறிந்த பெரிய கலையனைத்துந் தேய்ந்துபோக, ஒன்று இவண் இருந்தது – ஒரு கலை மாத்திரம் எஞ்சியிருந்தது; உதுவும் இன்று தேய்ந்திடும் – இதுவும் இன்று தேய்ந்து ஒழியும்; வினையினேன் இனிச் செய்வது யாது – பாவியேன் இனிச் செய்வது என்னை.
பயனற்றவனாயினேன் என்றவாறு.[109]

எஞ்சிய இக்கலை இருக்கத் தேய்தரு
விஞ்சிய கலையெலா மேவ நல்குதி
தஞ்சநின் னலதிலை என்னத் தண்மதி
அஞ்சலை என்றனன் அருளின் ஆழியான். …… 40

எஞ்சிய இக்கலை இருக்க – எஞ்டியிருந்த இந்தக் கலை தேயாமலிருக்கவும், தேய்தரு விஞ்சிய கலை எலாம் மேவ – தேய்ந்தொழிந்த மிக்க கலையனைத்தும் வந்து பொருந்தவும், நல்குதி – அருள் செய்வீராக; நின் அலது தஞ்சம் இலை என – தேவரீரையன்றி எனக்குப் புகலிடம் இல்லை என்று பிரார்த்திக்க, அருளின் ஆழியன் – கிருபா சமுத்திரமாகிய சிவபெருமான், தண்மதி அஞ்சலை என்றனன் – தண்ணிய சந்திரனே அஞ்சற்க என்று அபயம் அளித்தருளினார். [109]

தீர்ந்தன அன்றியே திங்கள் தன்னிடை
ஆர்ந்திடு கலையினை அங்கை யாற்கொளா
வார்ந்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான்
சார்ந்தில தவ்வழித் தக்கன் சாபமே. …… 41

தீர்ந்தன அன்றி – தேய்ந்துபோன கலைகளைச் சேராமல், திங்கள் தன் இடை ஆர்திடு கலையினை – சந்திரனிடத்தில் எஞ்சியிருந்த ஒரு கலையை, அம் கையால் கொளா – அழகிய திருக்கரத்தாலெடுத்து, வார்ந்திடு சடைமிசைவயங்கச் சேர்தினான் – நீண்ட சடையின்மீது விளங்குமாறு தரித்தருளினார்; தக்கன் சாபம் அவ்வழி சார்ந்திலது – தக்கனிட்ட சாபம் அவ்விடம் அணுகிற்றிலது [110]

மேக்குயர் தலைவராம் விண்ணு ளோர்கள்பால்
தாக்குறு வினையையுஞ் சாபம் யாவையும்
நீக்கிய தலைவன்இந் நிலவின் சாபத்தைப்
போக்கினன் என்பது புகழின் பாலதோ. …… 42

மேக்கு உயர் தலைவராம் விண்ணுளோர்கள் பால் – மிக உயர்ந்த தலைவர்களான தேவர்களிடம், தாக்குறு வினையையும் யாவை சாபமும் நீக்கிய தலைவன் – அவர்களை வருத்துகின்ற மிக்க வினைகளையும் எப்படிப்பட்ட சாபங்களையும் நீக்கி அநுக்கிரகம் புரிந்த முதல்வராகிய சிவபெருமான், இந் நிலவின் சாபத்தை – இந்தச் சந்திரனின் அற்ப சாபத்தை, போக்கினன் என்பது – போக்கியருளினார் என்று கூறுவது, புகழின் பாலதோ – சிவபராக்கிரமமென்று எடுத்துப் புகழற்பாலதொன்றாமோ?
அப்பெருமானின் கருணைப் பிரவாகத்துக்குச் சந்திர சாபம் எம்மாத்திரம் என்றவாறு. [110]

நெற்றியங் கண்ணுடை நிமலத் தெம்பிரான்
உற்றவர்க் கருள்புரி கின்ற உண்மையைத்
தெற்றென உணர்த்தல்போல் திங்க ளின்கலை
கற்றையஞ் சடைமிசைக் கவின்று பூத்ததே. …… 43

நெற்றி அம் கண் உடை நிமலத்து எம்பிரான் – அழகிய நெற்றிக்கண்ணையுடைய நின்மலராகிய சிவபெருமான், உற்றவர்க்கு அருள் புரிகின்ற உண்மையை – தம்மைச் சரண் என்று அடைந்தவர்களுக்கு அருள் புரிகின்றா உண்மையை, தெற்றென உணர்தல் போல் – விரைந்து தெரிவிப்பது போல், திங்கள் கலை கற்றை அம் சடை மிசை கவின்று பூத்தது – சந்திரனுடைய அக் கலையானது தொகுதியாக அழகிய சடையின்மீது அழகு செய்து பொலிந்தது.[110]

எந்தை அவ்வழி மதியினை நோக்கிநீ யாதுஞ்
சிந்தை செய்திடேல் எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்த மில்லையிக் கலையிவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றுநின் கலையெலாம் நாடொறும் மரபால். …… 44

எந்தை அவ்வழி மதியினை நோக்கி – சிவபெருமான் அப்பொழுது சந்திரனைப் பார்த்து; நீயாதும் சிந்தை செய்திடேல் – சீ சிறிதும் மனசிற் கலக்கங் கொள்ளாதே; எம் முடிச் சேர்த்திய சிறப்பால் – எமது முடியிலே தரித்த சிறப்பினால், அந்தம் இல்லை – எஞ்சியிருந்த இந்த ஒரு கலைக்குத் தேய்வு ஆகிய அழிவு இல்லை; இக்கலை இவண் இருந்திடும் – இந்தக் கலை எமது முடியாகிய இவ்விடத்தில் நிலைத்து இருக்குக்; அதனால் – எம் முடிக்கண் இருக்குஞ் சிறப்பினால், நின் கலை எலாம் – தேய்ந்துபோன உன் கலைகளனைத்தும், நாள் தோறும் மரபால் வந்து தோன்றும் – நாள்தோறும் நாளுக்கு ஒன்ற என்ற முறையில் உன்பால் வந்து வளர்ந்து தோன்றும்

அந்தம் இல்லை இவன் இருந்திடும் என்றதனால், எங்குமாய பரம் பொருளின் முடிக்க ணிருந்துகொண்டே, சந்திரன்பாலும் அக்கலை தேய்வின்றி இருக்கும் என்பதாம். இவ்வாற்றால் யாதொன்று நிலைத்தல் வேண்டுமோ, அது சிவ பரம்பொருளுக்கு நிவேதிக்கற்பாலதா மென்பது.

முடிச்சேர்த்திய சிறப்பால் அந்தமின்மையும், முடிக்கண் இருந்திடுஞ் சிறப்பால் தேய்ந்தவை வந்து தோன்றுதலுஞ் சித்தித்தவாறாம். [111]

நின்ன தொல்கலை ஐந்துமுப் பகலிடை நிரம்பிப்
பின்னர் அவ்வழி தேய்ந்துவந் தோர்கலை பிரியா
தின்ன பான்மையே நிகழுமெக் காலமு மென்றான்
முன்னை ஆவிதோ றிருந்தெலாம் இயற்றிய முதல்வன். …… 45

முன்னை ஆவிதோறு இருந்து எலாம் இயற்றிய முதல்வன் – பழைமையாகிய உயிர்கள்தோறும் ஒன்றாய்க் கலந்திருந்து அனைத்தும் இயற்றி அருளிய முதல்வராகிய சிவபெருமான், நின்ன தொல் கலை – உன்னுடைய தேய்ந்து போன பழைய கலைகள், ஐந்து முப் பகலிடை நிரம்பி – பதினைந்து நாளில் நிரம்பி, பின்னர் அவ்வழி தேய்ந்து வந்து – பின்பு அம்முறையானே தேய்ந்து வந்து, ஓர் கலை பிரியாது – ஒருகலை தேய்தலைப் பொருந்தாமல் நிலைக்கும்; எக்காலமும் இன்ன பான்மை நிகழும் – இனி எக்காலமும் இவ்வாறாய வளர்வுந் தேய்வும் ஆகிய இயல்பு நிகழ்ந்துகொண்டிருக்கும், என்றான் – என்று கூறியருளினார்.

தொல்கலை வினைகளை ஓர் கலை வினையுடன் முடிக்க, நிரம்ப தேய்ந்துவர என்பனவற்றின் திரிபு எனக் கொள்ளினுமாம்.
முடிச்சேர்த்திய சிறப்பால் ஓர்கலை பிரியாதாயிற்று.[111]

முதல்வன் இவ்வகை யருள்புரிந் திடுதலும் முளரிப்
பதயு கங்களில் வணங்கினன் விடைகொடு படரா
மதிய வானவன் தன்னுல கடைந்துதொன் மரபில்
கதிகொள் செய்வினை புரிந்தனன் வளர்ந்தன கலையே. 46

முதல்வன் இவ்வகை அருள் புரிந்திடுதலும் – சிவபெருமான் இவ்வாறு திருவருள் செய்ய, முளரி பத யுகங்களில் வணங்கினன் – தாமரைமலர்போன்ற அவருடைய இரண்டாகிய பாதங்களில் வணங்கி, விடை கொடு படரா – விடை பெற்றுக்கொண்டு சென்று, மதிய வானவன் தன் உலகு அடைந்து – சந்திர தேவன் தன் உலகினை அடைந்து, தொன் மரபில் கதிகொள் செய்வினை புரிந்தனன் – பழைய முறைப்படி சஞ்சரித்த லாகிய தனது மொழிலைச் செய்தான்; கலை வளர்ந்தன – தேய்ந்த கலைகள் வளர்ந்தன. [112]

ஒன்று வைகலுக் கோர்கலை யாய்நிறைந் தோங்கி
நின்ற தொன்னிலை நிரம்பியே பின்னுற நெறியே
சென்று தேய்ந்துவந் தொருகலை சிதைவுறா தாகி
என்றும் ஆவதும் அழிவதும் போன்றனன் இரவோன். 47

இரவோன் – இரவுச் சூரியோனான சந்திரன், ஒன்று வைகலுக்கு ஓர் கலையாய் – ஒரு தினத்துக்கு ஒருகலை வளர்வதாய், நிறைந்து ஓங்கி – நிறைந்து உயர்ந்து, நின்ற தொல் நிலை நிரப்பி – நிலைபெற்ற பழைய நிலையில் நிரம்பி, பின்னுற நெறிய சென்று தேய்ந்துவந்து – பூரணமானய பின்பு முறைப்படி சென்று தேய்வுற்று, ஒரு கலை சிதைவு உறாது ஆகி – ஒரு கலை தேய்வைப் பொருந்தாததாகி, என்றும் – இவ்வாற்றால் நாள்தோறும், அழிவதும் ஆவதும் போன்றன – இறத்தலையும் பிறத்தலையும் உடையா னொத்தான். [112]

செங்க ணான்முதல் அனைவரும் அம்மதித் திறத்தை
அங்கண் நாடியே தக்கனால் இவன்கலை அனைத்தும்
மங்கு மாறுமேல் வளர்வதும் இயற்கையா வகுத்தான்
எங்கள் நாயகன் செய்கை யார்அறிந்தனர் என்றார். 48

செங்கணான் முதல் அனைவரும் – சிவந்த கண்களையுடைய விஷ்ணு முதலிய அனைவரும், அம் மதித் திறத்தை – அந்தச் சந்திரனுடைய தன்மையை, அங்கண் நாடி – அச் சந்திரன்பால் நோக்கி, இவன் கலை அனைத்தும் – இச் சந்திரனின் கலைகள் அனைத்தும், தக்கனால் மங்குமாறும் – தக்கன் சாபத்தாற் தேய்ந்து போவதையும், மேல் – அதன் பிறகு ஒரு கலை திருமுடிக்கண் இருந்திடுஞ் சிறப்பால், வளர்வதும் – வளர்ந்து வருவதையும், இயற்கையா வகுத்தான் – இச் சந்திரனுக்கு இயல்பு ஆகும்படி வகுத்தருளினார்; எங்கள் நாயகன் செய்கை யார் அறிந்தனர் என்றார் – எமது தலைவராகிய சிவபெருமானுடைய திருவருட் செய்கையை யாவர் அறிய வல்லவர் என்று கூறினார்கள்.
அனைத்தும் என்றது ஒரு கலை தவிர்ந்த அனைத்தையும் என்க. ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகின் அளவில்லை கிளக்க வேண்டா என்ற சம்பந்தப்பெருமானின் திருவாக்கை எங்க ணாயகன் செய்கையா ரறிவார் என்பது ஞாபகம் செய்தவாறு.[112]

செக்கர் வானமேற் கிளர்ந்தெழு திங்களின் செயலை
ஒக்க நாடிய சிந்தையாந் தூதினால் உணர்ந்து
தக்க னென்பவன் கனன்றியான் உரைத்தசா பத்தை
நக்க னேகொலாந் தடுக்கவல் லானென நகைத்தான். 49

செக்கர் வான மேல் கிளர்ந்து எழு திங்களின் செயலை – செவ்வானத்தின் மீது விளங்கி எழுகின்ற சந்திரனின் இயல்பை, ஒக்க நாடிய தக்கன் என்பவன் – இயைபுற நாடுதல் செய்த தக்கனானவர், சிந்தை ஆம் தூதினால் உணர்ந்து – மனமாகிய தூதினால் நடந்தவை யனைத்தையும் அறிந்து, கனன்று – கோபித்து, யான் உரைத்த சாபத்தை – நான் இட்ட சாபத்தை, தடுக்க வல்லான் நக்கனே கொல் என நகைத்தான் – தடுக்க வல்லவன் நக்கனோ என்று நகை செய்தான். [113]
நக்கன் – சிவன்

எந்தை தன்றந்தை யாவரும் மருகனுக் கியான்முன்
தந்த வாய்மையை விலக்கிலர் விலக்கஎன் றன்முன்
வந்தும் வேண்டிலர் அச்சமுற் றிருந்தனர் மற்றத்
தந்தை தாயிலா ஒருவனாம் என்னுரை தடுப்பான். 50

மருகனுக்கு யான் முன் தந்த வாய்மையை – மருகனாகிய சந்திரனுக்கு யான் முன் இட்ட சாபத்தை, எந்தை – என் தந்தையாகிய பிரமாவும், தன் தந்தை – அவர் தந்தையாகிய திருமாலும், யாவரும் – மற்றைய யாவரும், விலக்கினர் – தடுத்திலர்; விலக்க என் தன் முன் வந்தும் வேண்டிலர் – விலக்கும் பொருட்டு என்னெதிரில் வந்து வேண்டினாரு மல்லர்; அச்சம் உற்று இருந்தனர் – யாவரும் அச்சங்கொண் டிருந்தார்கள்; என் உரை தடுப்பான் – அங்கனமாகவும் யானிட்ட சாபத்தை தடுப்பவன், தந்தை தாய் இலா ஒருவனாம் – தந்தையும் தாயுமில்லாத ஏகனாகிய சிவனாம்.
நன்று நன்று என்றவாறு. சிவன், ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்பது திருவாசகம். [113]

நன்று நன்றியாம் பரம்பொருள் நான்முகன் முதலாந்
துன்று தொல்லுயிர் யாவையும் அழித்தும்ஐந் தொழிலும்
நின்று நாம்புரி கின்றனம் எங்கணும் நீங்காம்
என்று தன்மனத் தகந்தையுற் றான்கொலோ ஈசன். 51

யாம் பரம் பொருளே – நாமே பரம்பொருள்; நான்முகன் முதலாம் துன்று தொல் உயிர் யாவையும் அழித்தும் – பிரமன் முதலிய செறிய உயிர்கள் யாவற்றையுஞ் சங்கரித்தலும், நாம் நின்று – நாம் அழிவின்றி நின்று, ஐந்தொழிலும் புரிகின்றனம் – ஐந்தொழிலையும் புரிகின்றோம்; எங்கணும் நீங்காம் – எங்கும் வியாபித்திருக்கின்றோம்; என்று தன் மனத்து ஈசன் அகந்தை உற்றான் கொல் – என்றிவ்வாறு தன் மனத்தில் அச்சிவன் அகங்காரங் கொண்டான் போலும், நன்று! நன்று! [113]

அன்ன தன்றியே இன்னமொன் றுண்டுபா ரகத்தில்
தன்னை யேநிகர் தக்கனும் நோற்றிடு தவத்தான்
என்ன இத்திரு வுதவினம் என்பதை நினைந்தோ
என்ன தாணையை இகழ்ந்தனன் இத்திறம் இழைத்தான். …… 52

அன்னது அன்றி – அஃதன்றி, இன்னம் ஒன்று உண்டு – மற்ற்மொன்றுண்டு; பார் அகத்தில் – பூவுலகைல், தன்னையே நிகர் தக்கனும் – தனக்குத் தானே நிகரான தக்கன்றானும், நோற்றிடு தவத்தான் என்ன – எம்மை நோக்கிச் செய்த தவத்தையுடையானென்று, இத்திரு உதவினம் – இவ் வளங்களையெல்லாம் நாமே அவனுக்கு நல்கினோம்; எனபதை நினைந்தோ – என்பதை எண்ணித்தானோ, என்னது ஆணையை இகழ்ந்தனன் – எனது ஆணையைப் பொருள் செய்யாது, இத்திறம் இழைத்தான் – இவ்வாறு செய்தான்.
தவத்தால் நென்னல் இத்திரு எனவும் பாடம். [114]

செய்ய தோர்பரம் பொருளியா மென்பது தெளிந்தும்
வைய மீதில்இத் திருவெலாம் பெற்றுநம் மலர்த்தாள்
கையி னால்தொழான் என்றுகொல் முன்னியான் கழறும்
வெய்ய வாய்மையை விலக்கினன் சிவனென வெகுண்டான். 53

செய்யது ஓர் பரம் பொருள் யாம் என்பது தெளிந்தும் – செம்பொருளாகிய ஒப்பற்ற பரம்பொருள் யாம் என்பதைத் தெளிந்து வைத்தும், வையம் மீது இத் திரு எலாம் பெற்றும் – உலகத்தில் இச் செல்வம் அனைத்தையும் எம்மிடம் பெற்றிருந்தும், நம் மலர்த்தாள் கையினால் தொழான் என்று கொல் – நமது மலரடிகளைத் தக்கன் கையெடுத்துங் கும்பிடான் என்று கருதிப் போலும், முன் யான் கழறும் வெய்ய வாய்மையை – முன் யான் சந்திரனுக்கிட்ட கொடிய சாபத்தை, சிவன் விலக்கினன் என வெகுண்டான் – சிவன் விலக்கினான் என்று கோபித்தான். [114]

தகவும் ஈரமும் நீங்கிய புரைநெறித் தக்கன்
புகலும் வாய்மையைத் தேர்ந்துழிப் புலகன்என் றுரைப்போன்
நிகரில் கண்ணுதற் கடவுளை எள்ளலை நின்னை
இகழ்வர் யாவரும் எஞ்சும்உன் வெறுக்கையும் என்றான். 54

தகவும் ஈரமும் நீங்கிய புரை நெறித் தக்கன் – நடுநிலையும் அன்பும் இல்லாத குற்றமாகிய நெறிக்கட் செல்வோனான தக்கன், புகலும் வாய்மையைத் தேர்ந்துழி – சொல்லுகின்ற வார்த்தையைக் கேட்டபொழுது, புலகன் என்று உரைப்போன் – புகலர் என்று சொல்லப்படும் முனிவர், நிகர் இல் கண் நுதல் கடவுலை எள்ளல – ஒப்பிலாத நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானை இகழாதே; நின்னை யாவரும் இகழ்வர் – இகழின் உன்னை யாவரும் இகழ்வர்; உன் வெறுக்கையும் எஞ்சும் என்றான் – உன் செல்வமும் அழியும் என்று கூறினார்.
இப் புலக முனிவர் தக்கனின் மற்றோரு மருகர் ஆகிய புலகர் போலும் [115]

என்ற வன்முக நோக்கியே தவத்தினால் என்கண்
நின்ற இத்திரு நீங்குமோ நெடியமால் முதலோர்
என்றும் என்பணி மறுத்திலர் எள்ளுவ துண்டோ
நன்று நன்றுநின் னுணர்வெனச் சிறுவிதி நக்கான்.55

என்றவன் முகம் நோக்கி – என்று கூறிய புலக முனிவருடைய முகத்தைப் பார்த்து, தவத்தினால் என் கண் நின்ற இத் திரு நீங்குமோ – நான் செய்த தவத்தினால் என்னிடத்தில் நிலைபெற்ற இச் செல்வம் என்றாயினும் நீங்குமா; நெடிய மால் முதலோர் என்றும் என் பணி மறுத்திலர் – திருநெடுமால் முதலியவர்கள் என்றாயினும் என் கட்டளையை மறுத்தாரல்லர்; எள்ளுவது உண்டோ – அப்படிப்பட்டவர்கள் என்னை இகழ்வதும் உளதாமோ; நின் உணர்வு நன்று நன்று என சிறுவிதி நக்கான் – புலகரே உமத் அறிவு இருந்தபடி நல்லது நல்லது என்று கூறித் தக்கன் சிரித்தான். [115]

முறுவ லித்திடு தக்கனைக் கண்ணுறீஇ முனிவன்
பிறரி ழிப்புரை கூடுறா தென்னினும் பெருஞ்சீர்
குறைவு பெற்றிடா தென்னினும் நினக்கருள் கொடுத்த
இறைவ னைப்பழித் திடுவது தகுவதோ என்றான். 56

முறுவலித்திடு தக்கனை முனிவன் கண்ணுறீஇ – இகழ்ச்சிச் சிரிப்பு சிரித்த தக்கனைப் புலக முனிவர் நோக்க், பிறர் இழிப்பு உரை கூடுறாது என்னினும் – பிறர் இகழும் இகழ்ச்சியுரை உன்னைச் சாராதாயினும், பெருஞ் சீர் குறைவு பெற்றிடாது என்னினும் – நீ பெற்ற பெருவளம் குறைவுபடாததாயினும், உனக்கு அருள்புரிந்த சிவபெருமானைப் பழிப்பது தகுமோ என்றார்.
என்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்றார் என்க [115]

புலகன் என்றிடு முனிவரன் இனையன புகல
விலகு தீநெறி யாற்றிய சிறுவிதி வினவி
அலகி லாததன் னாற்றலும் பெருந்திரு அனைத்தும்
உலகில் நீங்குவான் பெருமிதங் கொண்டிவை உரைப்பான். 57

புகலன் என்றிடு முனிவரன் இனைய புகல – புலகர் என்கின்ற முனி சிரேட்டர் இவற்றைக் கூற, விலகு தீ நெறி ஆற்றிய சிறுவிதி வினவி – பெரியோர் விலகுகின்ற தீநெறியிற் சென்ற தக்கன் அவைகளைக் கேட்டு, அலகு இலாத தன் ஆற்றலும் – அளவில்லாதா தனது தவ வலியும், பெருந் திரு அனைத்தும் – தவத்தாற் பெற்ற பெருஞ் செல்வம் அனைத்தும், உலகில் நீங்குவான் பெருமிதம் கொண்டு – இவ்வுலகத்திற் கெட்டொழியும்படி இறுமாப்புக் கொண்டு, இவை உரைப்பான் – இவைகளைச் சொல்லுவான். [116]

நோற்று முன்னியான் பெற்ற இத்திரு நுகர்ந்திடுமுன்
மாற்று வான்அலன் செய்வினை முறையலால் வலிதின்
ஏற்ற மாகஒன் றிழைக்கலன் ஆதலால் என்பால்
ஆற்ற லால்அரன் செய்கின்ற தென்னென அறைந்தான். 58

முன் யான் நோற்று பெற்ற இத் திரு – முன்னர் யான் தவஞ் செய்து பெற்ற இச் செல்வத்தினை, நுகர்ந்திடு முன் மாற்றுவான் அலன் – அநுபவித்தற்கு முன்னர் உதவினோன் மாற்றுவானல்லன், செய் வினை முறை அலால் – ஒருவன் செய்த வினைக்குத் தக்க முறையால் அல்லாமல், ஏற்றம் ஆக வலிதில் ஒன்று இழைக்கலன் – அவ் வினையின் அளவுக்கு அதிகமாக வலிதாய் ஒன்றைச் செய்பவன் அல்லன்; ஆதலால் என்பால் அரன் ஆற்றலால் செய்கின்றது என் – ஆதலிலான் என்னிடத்திற் சிவன் தன் வலியினாற் செய்வதென்னை, என அறைந்தான் – என்று கூறினான். [116]

அறைத லோடுமப் புலகனென் றுரைப்பவன் அனைத்தே
உறுதி யாயினும் ஈசனை இகழ்ந்தவர் உய்யார்
மறையெ லாமவை சொற்றது மற்றவன் தன்னை
இறையும் எள்ளலை மனங்கொடு பராவுதி இனிநீ. 59

அறைதலோடும் -இவ்வாறு தக்கன் கூற, அப்புலகன் என்று உரைப்பவன் அந்தப் புலக முனிவர், அனைதே உறுதி ஆயினும் – நீ சொல்லியதே உறுதியாயினும், ஈசனை இகழ்ந்தவர் உய்யார் – சிவபெருமானை இகழ்ந்தவர் உய்ய மாட்டார்; மறை எலாம் அவை சொற்றது – வேதம் முழுவதும் அவற்றை அறுதியிட்டுரைத்தது; அவன் தன்னை இறையும் எள்ளலை – அச்சிவபெருமானைச் சிறிதும் இகழாதே; இனி நீ மனங்கொடு பாவுதி – இனி நீ மனத்தால் அப் பெருமானைப் பரவுவாயாக.
அவை என்றது இகழ்ந்தவர் உய்யாமையோடு மேற்குறிப்பிட்டவையுமாம். [116]

தன்ன டைந்தவர் ஆகுல மாற்றியே தகவால்
என்ன தோர்பொருள் வெஃகினும் ஈகின்ற தியற்கை
அன்ன வற்கது மதிதெரிந் தடைதலும் அவன்பால்
நின்னின் உற்றசா பத்தினை நீக்கினன் நெறியால். 60

தன்னை அடைந்தவர் ஆகுலம் மாற்றி – தம்மைச் சரணடைந்தவர்களின் துன்பத்தினை ஒழித்து, தகவால் என்னது ஓர் பொருள் வெஃகினும் – தகுதிப் பாட்டோடு எப்படிபட்டதொரு பொருளை விரும்பினாலும், ஈகின்றது அன்னவற்கு இயற்கை – விரும்பியதைத் கொடுத்தருளுவது அச் சிவபெருமானுக்கு இயல்பாம்; அது மதி தெரிந்து – அவ்வியல்பைச் சந்திரன் அறிந்து, அவன்பால் அடைதலும் – அப்பெருமானிடஞ் சரணடைதலும், நெறியால் – அப்பெருமான் தமக்கியல்பான முறையானே, நின்னின் உற்ற சாபத்தினை நீக்கினான் – உன்னால் எய்திய சாபத்தினை நீக்கியருளினார். [117]

கற்றை வான்கலை நிறைந்தபின் முன்னநீ கனன்று
சொற்ற வாய்மையும் நிறுவினன் நாடொறுஞ் சுருங்கச்
செற்றம் என்இனித் திங்கள்நின் மருகன்அச் சிவனாம்
பெற்றம் ஊர்தியும் அம்முறை யாவனால் பின்னாள். 61

கற்றை வான்கலை நிறைந்தபின் – தொகுதியாகிய உயர்ந்த கலைகள் நிறைந்த பிறகு, நாள்தொறும் சுருங்க – நிறைந்தவாறே நாடோறுங் குறைந்து தேய்தலால், நீ கனன்று முன்னம் சொற்ற வாய்மையும் நிறுவினன் – நீ கோபித்துச் சொன்ன சாபத்தையும் நிலைக்கச் செய்தாருமாயினார்; இனி செற்றம் என் – இவ்வாற்றால் இனிக் கோபத்தாற் பயன் என்னை, அது நிற்க; திங்கள் நின் மருமகன் – சந்திரனோ உன் மருமகன்; சிவனாம் பெற்றம் ஊர்தியும் பின்னாள் அம்முறை ஆவன் – இடபவாகனத்தை யுடையராகிய அச் சிவபெருமானும் பின்னாளில் உனக்கு அம் முறையினர் ஆவர்.
உறவு முறையானுஞ் செற்றம் செய்தற் கிடமின்றோ மென்பது. [117]

என்ன இத்திறம் மொழிதலுஞ் சினமகன் றிமையோர்
அன்னம் ஊர்தியோ னியாவரும் புகழ்தர அனையான்
பன்னெ டும்பகல் அரசின்வீற் றிருந்தனன் பரையாங்
கன்னி மற்றவன் மகண்மையாய் வருதல் கட்டுரைப்பாம். 62

என்ன இத் திறம் மொழிதலும் – என் றிவ்வண்ணம் புலக் முனிவர் உரைத்தலும், சினம் அகன்று – கோபம் நீங்கி, இமையோர் அன்னம் ஊர்தியோன் யாவரும் புகழ்தர – தேவர்களும் அன்ன வாகனத்தையுடைய பிரம தேவரும் யாவரும் புகழாநிற்ப, பல் நெடும் பகல் அரசின் வீற்றிருந்தனன் – பலநெடுங்காலம் அரசுவீற்றிருந்தான் தக்கன்; அவன் மகண்மையாய் – அத் தக்கனுக்கு மகளாய், பரையாம் கன்னி வருதல் கட்டுரைப்பாம் – பரையாகிய உமாதேவியார் திருவவதாரஞ் செய்த இனிச் சொல்லுவாம் [62 , 117]
சந்திர சாபப் படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 190

*1. பா-ம்: போதுற.
(எண் = செய்யுளின் எண்)
*1-1. நாண்மீன் – நட்சத்திரம்.
*1-2. கடிமணம் – விவாகம்.
*1-3. தண்மதிக்கடவுள் – சந்திரன்.
*2. சுளித்தல் – கோபித்தல்.
*4-1. ஆரல் – கார்த்திகை.
*4-2. பின்னவன் – இங்கு உரோகணி.
*5-1. பூத்த இருதுவின் வேலை – மாதவிருது அடைந்த காலத்தில்.
*5-2. தேனிமிர் சொல்லார் – பெண்கள்.
*7-1. வைகல் – நாள்.
*7-2. அஃகா – குறைந்து.
*8-1. அவனே – அச்சந்திரனே.
*8-2. மான்றனன் – மயங்கி.
*10-1. பையுள் வேலை துன்பக்கடல்.
*10-2. பாங்கனை – தோழனை.
*11-1. இபமுகன் – விநாயகக் கடவுள்.
*11-2. முதிரை – கடலை.
*11-3. அகடு – வயிறு.
*11-4. சகுலி – மோதகம்.
*11-5. நக்காய் – சிரித்தாய்.
*12-1. இறப்ப – மிகவும்.
*12-2. முன்னோன் – விநாயகக் கடவுள்.
*13. ஆண்டொரு வைகல் – வருடத்திற்கு ஒரு நாள்.
*14. வெய்யோன் … நாலம் வைகல் – ஆவணி மாத சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி நாள்.
*15-1. விதி – பிரம தேவன்.
*15-2. சேய் – இங்கு தக்கன்.
*16-1. வச்சிரம் எடுத்த செம்மல் – இந்திரன்.
*16-2. அச்சென – விரைவாக.
*17. மாதுலன் – மாமனான தக்கன்.
*18. இறையும் – சிறிதும்.
*21. களிப்பினோர்மகன் – கட்குடியன்.
*24. கேண்மியா – கேள்; மியா – அசை.
*25. ஆதவன் – சூரியன்.
*27. இறால்புரை – தேன்கூடுலோல் அடர்ந்த.
*28-1. பருவரல் – துன்பம்.
*28-2. வெள்ளி ஓங்கல் – கயிலைமலை.
*29. அரணம் – அடைக்கலம்.
*30-1. சிறுவன் – மார்க்கண்டன்.
*30-2. நடுவன் – எமன்.
*32. வார் – கச்சு.
*34-1. அரண் – அடைக்கலம்.
*34-2. வல்லை – விரைவில்.
*34-3. ஒழிமதி (மதி) – ஆசை.
*37. புகல்தியால், ஆல் – ஆசை.
*38. மங்குல் – கருமை.
*39. வினையினேன் – பாவியாகிய நான்.
*40. அருளின் ஆழியான் – கருணைக்கடலான சிவபெருமான்.
*43. கவின்று – அழகுடன்.
*44. அந்தம் இல்லை – அழிவு இல்லை.
*45. ஐந்து முப்பகல் – பதினைந்து நாட்கள்.
*49. நக்கன் – சிவபெருமான்.
*52. பாரகம் – பூமி.
*54-1. ஈரம் – இரக்கம்.
*54-2. புலகன் – ஒரு முனிவன்; இவர் தக்கன் மருமக்களில் ஒருவர்.
*57. விலகு தீ நெறி – நல்லாரிடைப் பொருந்தாது அகன்ற தீயமார்க்கம்.
*59. பராவுதி – துதிப்பாயாக.
*60-1. ஆகுலம் – துன்பம்.
*60-2. வெஃகல் – விரும்பல்.
*61-1. வான் – உயர்வு.
*61-2. பெற்றம் – வெள்விடை.
*61-3. அம்முறை – மருமகன்முறை.
*62. பரையாங்கன்னி – பராசக்தி
ஆகத் திருவிருத்தம் – 8406

  1. உமை கயிலை நீங்கு படலம்
    கமல மூர்த்தியுங் கண்ணனுங் காண்கிலா
    அமல மேனியை அன்பினர் காணுற
    நிமல மாகிய நீள்கயி லாயமேல்
    விமல நாயகன் வீற்றிருந் தானரோ. 1

கமல் மூத்தியும் கண்ணனும் காண்கிலா அமல மேனியை – பிரம விஷ்ணுக்களாலுந் தேடிக் காண்டற்கரியதாகிய அமலமான தமது அருட்டிய மேனியை, அன்பினர் காணுற – அன்பிலையுடைய அடியார்கள் தரிசித்து உய்யும்பொருட்டு, விமல் நாயகன் – அநாதி மலமுத்தரான சிவபெருமான், நீள் நிமலமாகிய கயிலாயமேல் – நீண்ட பரிசுத்தமாகிய திருக்கைலாச மலையின்கண்ணே, வீற்றிருந்தான் – அநுக்கிரக முகமான எழுந்தருளியிருந்தார்.
கமல மூர்த்தி – தாமரைமலரில் இருக்குங் கடவுள், சிவபெருமான் விமல நாயகன்; அவர் திருமேனி அமலமேனி; அவருறைவிடம் நிமலமாகிய கைலாயம். அ, ந், வி இன்மைப்பொருள் குறித்தவை. காலத்தா லழிவின்மையின் நீல் கயிலாயம் என்றார். [118]

வீற்றி ருந்தவன் மெல்லடி கைதொழூஉப்
போற்றி யுன்றன் பொருவரு மெய்மையைச்
சாற்று வாயெனச் சங்கரி வேண்டலும்
ஆற்ற அன்புசெய் தாங்கருள் செய்குவான். 2

வீற்றிருந்தவன் மெல்லடி – திருக்கைலாசத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீகண்ட பரமேசுவரனுடைய மென்மையாகிய திருவடிகளை, சங்கரி கைதொழூஉப் போற்றி – உமையம்மையர் கைகூப்பி வணங்கித் துதித்து, உன் தன் பொருவு அரு மெய்ம்மையைச் சாற்றுவாய் என வேண்டலும் – தேவரீரின் ஒப்பற்ற உண்மைத் தன்மையைத் திருவாய்மலர்தருளல் வேண்டுமென்று பிரார்த்திக்க, ஆற்ற அன்பு செய்து – அவ்வம்மையார் மீது மிக்க அன்பு செய்து, ஆங்கு அருள் செய்குவான் – அப்பொழுது திருவாய்மலந்தருளுவாராயினார்.
சங்கரி – சுகஞ் செய்பவள், ஆங்கு அவ்விடமுமாம். [118]

உருவொடு குணஞ்செயல் ஒன்றும் இன்றியே
நிருமல மாய்ச்சிவன் நிறைந்து நின்றதும்
பரவிய வுயிர்த்தொகைப் பந்தம் நீக்குவான்
ஒருதனிச் சத்தியால் உன்னல் உற்றதும். 3

உருவொடு குணம் செயல் ஒன்றும் இன்றி – உருவம் குணம் செயல் என்னும் இவற்றில் ஒன்றும் இல்லாமல், நிருமலமாய் – சுத்தமாய், சிவன் நிறைந்து நின்றதும் – சச்சிதானந்த சொரூப சிவம் எங்கும் நிறைந்து நின்ற தன்னியல்பும், பரவிய உயிர்த்தொகைப் பந்தம் நீக்குவான் – பரந்த உயிர்க் கூட்டத்தின் பந்தத்தை நீக்கும்பொருட்டு, ஒரு தனிச் சத்தியால் – ஒப்பில்லாத ஏக சத்தி மூலமாக, உன்னல் உற்றதும் – சங்கற்பம் உளதாயதும்.
ஒன்றும் இன்றி என்றதனால் உருவத்துக் கினமான அருவுரு, உரு ஆகிய நிலைகளும், செயலுக்கினமான அறிவு இச்சைகளுங் கொள்க, குணம் – முக்குணம் உயர்ப்பரப்புக்கு எல்லையின்மையின், பரவிய உயிர்தொகை என்றார், ஒது தனி என்ற விசேடணம் உன்னலாகிய சங்கற்பத்துக்கு முந்திய சத்தியின் விகாரமற்ற சொரூப நிலையை ஞாபகஞ் செய்வதாம்.

நிறைந்து நின்றதும் என்றதனாற் சொரூப நிலையும், உன்னர் உற்றதும் என்றதனாற் சிவம் சத்தி என்கின்ற தடத்த நிலையுங் குறிப்பிட்டவாறு [3,119]

ஐந்தியற் சத்திகள் ஆயி னோர்தமைத்
தந்ததும் அருவுருத் தாங்கி அவ்வழிச்
சிந்தனை அருச்சனை செய்தி யாவரும்
உய்ந்திடச் சதாசிவ வுருவைந் துற்றதும். 4

ஐந்து இயல் சத்திகள் ஆயினோர் தமைத் தந்ததும் – ஐந்து வகையான இயல்பினையுடைய பஞ்ச சத்திகளை உதவியும், அவ்வழி – அப்பஞ்ச சத்திகளின் வழியாய், அரு உருத் தாங்கி – அருவுருவத்தைத் பொருந்தி, சதாசிவ உரு ஐந்து – சதாசிவ உருவம் என்று சொல்லப்படுகின்ற பஞ்ச சாதாக்கிய வடிவம், சிந்தனை அருச்சனை செய்து யாவரும் உய்ந்திட – தியானமும் பூசனையுஞ் செய்து அனைவரும் உய்யும்பொருட்டு, உற்றதும் – உளதாயதும்.
பஞ்சசத்திகள் பராசக்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி. இவற்றினம்சமாய் முறையே சிவசதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியும், மூர்த்தி சதாக்கியம், கர்த்திரு சதாக்கியம், கன்ம சதாக்கியம் என்று சதாக்கியம் ஐந்து வகையாம்.
கன்ம சதாக்கியம் நாதமயமாகிய இலிங்கமும் பிந்துமயமாகிய பீடமுங் கூடியதாய்ப் பஞ்ச கிருத்தியத்தை யுடையதாயிருக்கும் கன்ம சதாக்கியர் இலிங்கமும் பீடாமுமாயிருப்பினும், ஐந்து திருமுகமும் பத்துத் திருங்கரங்களுமுடையவராய்த் தியான ரூபராயிருப்பர். [120]

இருபதின் மேலும்ஐந் தீசன் கேவல
உருவம தாகியே உறைந்த பெற்றியும்
விரவிய குடிலையின் விளைவு செய்துபின்
அருள்புரி மூர்த்திக ளாய பேதமும். 5

இருபதின் மேலும் ஐந்து ஈசன் கேவல உருவம் ஆகி – இருபத்தைந்து மகேசுர மூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற கேவல வடிவம் உளதாய், உறைந்த பெற்றியும் – அமைந்த இயல்பும், விரவிய குடிலையின் விளைவு செய்து, வியாபகமான சுத்தமாயையில் விளைதல் உளதாகச் செய்து, பின் – அதன் மேலும், அருள் புரி மூர்த்தியின் ஆய பேதமும் – திருவருள் புரிகின்ற அதிட்டான வாயில்கள் எனப்படும் மூர்த்திகள் ஆகிய பேத நிலையும்.

குடிலையின் விளைவை, நிருமலமாய்ச் சிவன் நிறைந்து நின்றதாகிய சுவரூபநிலை தவிர்ந்த தடத்தங்களுக்குக் கொள்க. பஞ்ச சத்திகள் பராசத்தியைச் சுவரூமமெனக் கோடலுண்டு.

மகேசுர வடிவம் சந்திரசேகரர் தொடக்கம் இலிங்கோற்பவர் இறுதியாக இருபத்தைந்தாம். அருள்புரி மூர்த்திகள் அநந்தேசுரர் ஸ்ரீகண்டர் முதலாய அதிட்டான பேதங்களாம்.
செய்து ஆய என்க. [5, 120]

முந்திய மாயைகள் மூல மாகவே
அந்தமில் தத்துவம் ஆறொ டாறுமுன்
வந்திட அளித்தது மரபின் ஐந்தொழில்
சிந்தைகொள் கருணையான் நடாத்துஞ் செய்கையும். 6

முந்திய மாயைகள் மூலமாக – ஆதியாய மாயைகளை மூலமாகக்கொண்டு, அந்தம் இல் தத்துவம் ஆறோடு ஆறும் – முடிவற்ற தத்துவங்கள் முப்பத்தாறும், முன் வந்திட அளித்ததும் – அம்மாயைகளிலே தோன்ற உதவியதும், மரபின் ஐந்தொழில் சிந்தைகொள் கருளையால் நடாத்தும் செய்கையும் – முறையான பஞ்ச கிருத்தியங்களைத் திருவுளத்திற் பொருத்திய கருணையாகிய திருவருளால் நடத்துகின்ற தன்மையும்.
மாயைகள் சுத்தமாயை அசுத்தமாயை பிரகிருதிமாயை. மூலம் முதற் காரணம். தத்துவங்கள் எல்லைகாண்பரியவாதலின் அந்தமில் என்றார் [6, 121]

விதித்திடு மூவகை வியனு யிர்த்தொகை
கதித்திடு தத்துவக் கணங்கள் அங்குளார்
உதித்திடு முறைமையின் ஒடுங்கச் செய்துதான்
மதித்தொரு தன்மையாய் மன்னி நிற்பதும். 7

விதித்திடு – சிருட்டி செய்யப்பட்ட, மூவகை வியன் உயிர்த்தொகை – மூன்று வகையான பெரிய உயிர்க்கூட்டங்களும், கதித்திடு – ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்து கதிக்கின்ற, தத்துவக் கணங்கள் – தத்துவக் கூட்டங்களாகி, அங்குளார் – அங்கே வசிக்கும் தத்துவ சாசிகளும், உதித்திடு முறைமையின் – சிருட்டிக்கிரமம் இருந்தவாறே, ஒடுங்கச் செய்து – ஒடுங்கும்படி செய்து, தான் ஒரு தன்மையாய் மதித்து மன்னி நிற்பதும் – தாம் ஏக வஸ்துவாய்க் கருதப்பட்டு விகாரமின்றி நிலைத்து நிற்பதும்.
மூவகை உயிர்த்தொகை – விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகல்ர், என்கின்ற மூவகை உயிர்க்கூட்டம்.
கதித்திடுதல் தாத்விகங்களாய்க் கதித்திடுதலுமாம்.
தான் மதித்தொரு தன்மையாய் மன்னி நிற்பது, உருவொடு குணஞ்செயலொன்று மின்றி நிருமலமாய்ச் சிவன் நிறைந்து, நிற்பதாம் என்க. [7, 121]

ஆனதன் னியற்கைகள் அனைத்துங் கண்ணுதல்
வானவன் ஆகம மறையின் வாய்மையான்
மேனிகழ் தொகைவகை விரிய தாகவே
தானருள் புரிந்தனன் தலைவி கேட்கவே. 8

ஆன – இவ்வாறான, தன் இயற்கைகள் அனைத்தும் – தமது சுவரூபம் தடத்தமாகிய இயற்கைகள் அனைத்தையும், கண்ணுதல் வானவன் தான் – நெற்றிக்கண்ணையுடைய ஸ்ரீகண்ட பரமேசுரராகிய தாம், தலைவி கேட்க – உலக மாதாவாகிய உமையம்மையார் கேட்க, ஆகம் மறையின் வாய்மையால் – ஆகமத்திற் சென்று முற்றுகின்ற வேத சத்திய வாக்க்குகளால், மேல் நிகழ் – மேன்மையுடைதாய் நிகழ்கின்ற, தொகை வகை விரி அது ஆக – தொகை வகை விரி என்னும் அம்முறை அமைய, அருள் புரிந்தனன் – திருவாய் மலர்ந்தருளினார்.

நின்றதும் உற்றதும் உற்றதும் பேதமும் செய்கையும் நிற்பதும் ஆன என்க. சுவரூபம் இருந்தபடி இருக்கத் தடத்தம் அவாறமையும் ஆதலின் அதுவும் இயற்கை எனப்பட்டது. [8, 121]

சுந்தரி இவ்வகை உணர்ந்து தோமிலா
எந்தைநிற் குருவிலை என்றி பின்னுற
ஐந்தொடு பலவுரு அடைந்த தென்னெனக்
கந்தனை அருளுவான் கழறல் மேயினான். 9

சுந்தரி – உமையம்மையார், இவ்வகை – சுவரூபமும் தடத்தமுமாகிய சிவ பரம்பொருளின் இயல்புகளாகிய இவ்வகைகளை, உணர்ந்து – அறிந்து, தோம் இலா எந்தை – குற்றமில்லாத எம்பெருமானே, நிற்கு உருவு இலை என்றி – தேவரீருக்கு உருவம் முதலிய ஒன்றும் இல்லை என்று அருளிச்செய்தீர்; பின் உற – ப்ன்பு அதற்கு மாறாக, ஐந்தொடு பல உரு அடைந்தது என் என – பஞ்ச சாதாக்கியத்தோடு வேறு பல வடிவங்களையும் பொருந்தியது என்னை என்று வினவ், கந்தனை அருளுவான் கழறன் மேயினான் – கந்தக்கடவுளைத் தந்தருளுபவராகிய சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளுவாராயினார். [9, 122]

உருவிலை நமக்கென ஒன்று நம்வயின்
அருளுரு அவையெலாம் என்ன அன்னதோர்
பொருளென உன்னியே புவனம் ஈன்றவள்
பெருமகிழ் வெய்தியிப் பெற்றி கூறினாள். 10

நமக்கு என உருவு இலை – நமக்கு என்று ஓர் உருவம் இல்லை; அவை எலாம் நம் வயின் ஒன்றும் அருள் உரு என்ன – மேற் குறிப்பிட்ட வடிவங்கள் எல்லாம் நம்மிடத்து நம்மோ டபின்னமாய் ஒருமைப்பட்டிருக்குஞ் சத்தி காரியமாகிய அருள் வடிவங்களாம் என்று அருளிச்செய்ய, அன்னது ஓர் பொருள் என உன்னி – அவ்வாறு கூறியருளியதைத் தமக்கு வாய்ப்பானதொரு பொருளாகக் கருதி, பெரு மகிழ்வு எய்தி – அதனாற் பெரு மகிழ்ச்சியுற்று, புவனம் ஈன்றவள் இப்பெற்றி கூறினாள் – உலகங்களை ஈன்றருளிய உமையம்மையார் இத்தன்மையைக் கூறியருளினார். [10, 122]

அந்நிலை வடிவெலாம் அருளின் ஆதலால்
உன்னருள் யானென உரைப்ப துண்மையே
என்னுரு வாம்அவை என்று பாங்கமர்
கன்னிகை வியந்தனள் கழறும் வேலையே. 11

அவ்வடிவு நிலை எலாம் – மேலே குறிப்பிட்ட உருவ நிலைகள் அனைத்தும், அருளின் ஆதலால் – அருட்சத்தியினால் உண்டாதலினாலும், உன் அருள் யான் என உரைப்பது உணமி ஆதலால் – தேவரீன் அருட்சக்தி யானே என்று சொல்வது சத்தியம் ஆதலினாலும், அவை என் உரு ஆம் – அவ்வடிவங்கள் அனைத்தும் என் வடிவமேயாம்; என்று பாங்கு அமர் கன்னிகை வியந்தனள் – என்று கூறி வாமபாகத்தில் வீற்றிருக்கும் உமையம்மையார் தம்மைத் தாமே வியந்தருளினார்; கழறும் வேலை – அவ்வாறு வியந்தருளும்போது.
ஆதலால், உண்மை என்பதனோடுங் கூட்டப்பட்டது. [11,122]

கயந்தன தீருரி கவின்று பொற்புறப்
புயந்தனில் அணிந்தருள் புனிதன் நங்கைநீ
நயந்தரு நின்புகழ் நாடி நம்முனம்
வியந்தனை உனையென விளம்பி மேலுமே. 12

கயம் தனது ஈர் உரி – யானையினது உரித்தோலானது, கவின்று பொற்பு உற – விளங்கி அழகு மிக, புயம்தனில் அணிந்து அருள் புனிதன் – திருப்புயத்தில் அணிந்தருளிய பரிசுத்தராகிய சிவபெருமான், நங்கை நீ – உமையே நீ, நயம் தரு நின் புகழ் நாடி – ஆன்மாக்களுக்கு நன்மையைச் செய்கின்ற உன் புகழை நீ விரும்பி, நம் முனம் உனை வியந்தனை – நம் முன்னிலையில் உன்னை நீயே வியந்துகொண்டாய்; என விளம்பி – என்று திருவாய்மலர்ந்துதருளி, மேலும் – பின்னரும்.
மேலும் புகலவேண்டுமோ காண்கெனா நீங்கினான் என வருஞ்செய்யுளோடியைத்து முடிக்க.[12,123]

இருளுறு முயிர்தொறு மிருந்து மற்றவை
தெருளுற வியற்றுது மதனைத் தீர்துமேன்
மருளுறு சடமதாய் மாயு மேனைய
பொருளுறு நிலைமையைப் புகல வேண்டுமோ. 13

இருள் உறும் உயிர்தொறும் இருந்து – இருளாகிய ஆணவ மலத்திற் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள் தோறும் ஒன்றாயக் கலந்திருந்து, அவை தெருள் உறவு – அவ்வுயிர்களின் இருணீங்கி ஞான உறுதலை, இயற்றுதும் – நிகழ்த்துவோம்; அதனைத் தீர்துமேல் – கலந்திருந்துகொண்டே அந் நிகழ்த்துகையை நீங்குவோமானால், மருள் உறும் சடம் ஆய் மாயும் – மயக்கம் பொருந்திய சடப்பொருளாய் அவ்வுயிர்கள் அழிந்துபடும்; ஏனை பொருள் உறும் நிலைமையை புகல வேண்டுமோ – சித்துப்பொருளின் நிலைமை அவ்வாறானால் ஏனைய சடப்பொருள்கல் அடையுந் தன்மையைச் சொல்லவும் வேண்டுமோ.
சிவம் உயிர்தொறும் இருந்தபடி இருக்க தெருளுறவு நிகழும் என்க. தெருளுறவுக்குத் தாமே கருத்தாவாதலின் இயற்றுதும் என்றருளினார். தெருள் உற இயற்றதும் எனப் பிரித்துரைப்பினும் அமையும். [13,123]

உன்னிடை தனினும்யா முறுத லில்வழி
நின்னுயி ருணர்வுறா நினக்குக் காட்டுது
மன்னது காண்கெனா வயனை யாதிய
மன்னுயிர் இயற்றிடும் வண்ணம் நீங்கினான். 14

உன்னிடை தனினும் – உமையே எம்மோடு அபின்னமாயிருக்கும் உன்நிடத்திலேதானும், யாம் உறுதல் இவ்வழி – யாம் தெருள் உற வியற்றுதலைப் பொருந்தாதவழி, நின் உயிர் உணர்வு உறா(து) – உன்னுடைய ஆன்மாவும் உணர்ச்சி கைகூடாது; அன்னத் நினக்குக் காட்டுதும் காண்க எனா – அவ்வியல்பை உனக்குக் காட்டுவோம் காண்பாயாக என்று கூறியருளி, அயன் ஆதிய மன்னுயிர் இயற்றிடும் வண்ணம் நீங்கினான் – பிரமா முதலிய நிலைபெற்ற உயிர்களை இயக்குவிக்குந் தன்மையை நீங்கிச் சும்மாவிருந்தருளினார்.

உயிர்கள்தோறும் இருத்தலை நீங்காதே உயிர்கள்தோறும் இயற்றிடும் வண்ணம் நீங்கினான் என்க. நினைக்குக் காட்டுதும் என்றதனால் இயற்றிடும் வண்ணம் நீங்கியதை உமை தவிர்ந்த உயிர்களுக்குக் கொள்க, உறாது ஈறுகெட்டு நின்றது. காண்க ‘அ’ கெட்டது. ஐ சாரியை. [14,124]

தேவர்கள் நாயகன் செயலி லாமையால்
ஆவிகள் யாவையுஞ் சடம தாகியே
ஓவிய மேயென உணர்வின் றுற்றன
பூவுல கேமுதற் புவனம் யாவினும். 15

தேவர்கள் நாயகன் செயல் இலாமையால் – தேவர்கள் நாயகரான சிவபெருமான் தெருளுற இயக்கும் செயல் இன்றிச் சும்மா இருந்தமையால், பூவுலகு முதற் புவனம் யாவினும் ஆவிகள் யாவையும் – பூவுலகம் முதலிய புவனங்கள் அனைத்திலுமுள்ள உயிர்க அனைத்தும், சடம் ஆகி – சடங்களாய், ஓவியம் என உணர்வு இன்று உற்றன – பாவைகளைப்போல அறிவின்றிக் கிடந்தன.
ஓவியம் சித்திரம் எனினுமாம். [15,124]

ஆட்டுவித் திடுபவன் அதுசெ யாவழிக்
கூட்டுடைப் பாவைகள் குலைந்து வீழ்ந்தென
நாட்டிய பரனருள் நடாத்தல் இன்மையால்
ஈட்டுபல் லுயிர்த்தொகை எனைத்து மாய்ந்தவே. 16

ஆட்டுவித்திடுபவன் – நூலை ஆட்டுதல்மூலம் பாவைகளை ஆடவைப்பவன், அது செயாவழி – அவ்வாட்டுதற்றொழிலைச் செய்யாதபோது, கூட்டுடைப்பாவைகள் – கூட்டுதலையுடைய பாவைகள், குலைந்து வீழ்ந்தென – கூட்டுதல் இல்லாதபோது நிலைகுலைந்து வீழ்ந்தாற்போல, நாட்டிய பரன் – யாவற்றையும் நிலைக்கச் செய்த பரம்பொருளாகிய சிவபெருமான், அருள் நடாத்தல் இன்மையால் – தமது திருவருளை நடாத்தல் செய்யாது சும்மா இருந்தமையால் , ஈட்டு பல் உயிர்த்தொகை எனைத்தும் – வினைகளை ஈட்டுகின்ற பலவாகிய உயிர்க்கூட்டம் எலலம், மாய்ந்த – உணர்வின்றி மாய்ந்து போயின.

நூலசைவினாற் பாவை இயங்குவதுபோல திருவருள் அனைவினால் உலகம் இயங்கும் என்க. அருளசைவுக்கு கருத்தா இறைவன். [16, 124]

இந்தவா றுயிர்த்தொகை யாவும் ஒல்லையில்
நந்தியே சடமதாய் நணிய வெல்லையில்
சிந்தைசெய் தினையது தெருமந் தஞ்சியே
சுந்தரி அரனடி தொழுது சொல்லுவாள். 17

இருந்தவாறு – இவ்வண்ணம் , உயிர்த்தொகை யாவும் ஒல்லையில் நந்தி – உயிர்க்கூட்டம் முழுவதும் விரைவில் உணர்வு கெட்டு, சடமதாய் நணிய எல்லையில் – சடமாய்ப்போன சமயத்தில், சுந்தரி இனையது சிந்தை செய்து – உமையம்மையார் இவ்வாறாய தன்மையைச் சிந்தித்து, தெருமந்து அஞ்சி – கலங்கிப் பயந்து, அரன் அடி தொழுது சொல்லுவாள் – சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கிக் கூறுவார் [17-125]

அறிகில னெந்தைநீ யனைத்து மாகியே
செறிவது முழுதுயிர்த் திறன்இ யற்றியே
யுறுவதை யென்பொருட் டொருவி நின்றனை
இறுதியி னவையெலா மிருளின் மூழ்கவே. 18

எந்தை நீ அனித்தும் ஆகி செறிவது முழுது அறிகிலன் – எம்பெருமானே தேவரீர் எல்லாமாய்க் கலந்திருப்பதன் பயன் முழுவதையும் யான் அறிய வல்லேன் அல்லேன், உயிர்த்திறன் இயற்றி உறுவதை – உயிர்வகைகளினிடத்திலே தெருளுறவு ஆகிய ஞானத்தை நிகழச் செய்து தேவரீ ரிருப்பதை, என்பொருட்டு ஒருவி – இப்பொழுது எனக்கு உணர்த்தும்பொருட்டு நீங்கி, அவை எலாம் இறுதியின் இருளின் மூழ்க நின்றனை – அவ்வுயிர்கள் அனைத்தும் இறுதிக் காலதிற்போல இருளின் மூழ்குமாறு நின்றருளினீர்.

அனைத்துமாகிச் செறிவதன் பயன்களுல் ஒன்று, உயிர்த்திறங்கள் பால் தெருளுறவு இயற்றல் என்க. [18-125]

ஓரிறை யாகுமீ துனக்கு யிர்க்கெலாம்
பேருகம் அளப்பில பெயரும் என்பிழை
சீரிய வுளங்கொளல் தேற்றம் பெற்றெழீஇ
ஆருயிர் மல்குமா றருளு வாயெனா. 19

ஈது – தேவரீ ஒருவி நின்றருளிய இச் செயல் நிகழ்ச்சிக் காலம், உனக்கு ஓர் இறையாகும் – தேவரீருக்கு ஓரிறைப்பொழுது ஆகும், உயிர்க்கு எலாம் அளப்பில் பேருகம் பெயரும் – உயிர்வர்க்கங்களுக்கெல்லாம் அநேக உகங்கள் கழியுங் காலமாகும்; என பிழை சீரிய உளம் கொளல் – என்னால் நிகழ்ந்த இப்பிழையைச் சிறப்புப் பொருந்திய திருவுளத்திற் கொள்ளாதொழிக; ஆர் உயிர் தேற்றம் பெற்று எழீஇ மல்குமாறு – அரிய உயிர்கள் தெளிவு பெற்று எழுந்து விருத்தியுறுமாறு, அருளுவாய் எனா – அருள் புரிவீராக என்று.
எனாப் பரவினாள் பணிந்து நிற்றலும் என வருஞ் செய்யுளின் முடிபுகாண்க [19,126]

பன்முறை பரவினள் பணிந்து நிற்றலும்
அன்மலி கூந்தலுக் கருளி யாவிகள்
தொன்மையில் வினைப்பயன் துய்ப்ப நல்குவான்
நின்மலன் நினைந்தனன் கருணை நீர்மையால். 20

பன்முறை பரவினள் பணிந்து நிற்றலும் – பலமுறை துதித்து வணங்கி நிற்க, அல் மலி கூத்தலுக்கு அருளி – கருமை மிக்க கூந்தலினையுடைய உமையம்மையாருக்கு அருள்செய்து, ஆவிகள் தொன்மையில் வினைப்பயன் துய்ப்ப நல்குவான் – உயிர்கள் முன்போல வினைப்பயன்களை நுகர்தற்கு அருளும்படி, கருணை நீர்மையால் நின்மலன் நினைந்தனன் – இயல்பாகிய கருணையினால் நின்மலரான சிவபெருமான் இதிவுளம்கொண்டருளினார். [20,126]

திருத்தகு தனதருள் சேர்ந்த பல்வகை
உருத்திரர் தமக்குமுன் னுணர்வு செய்துழி
நிருத்தனை அவ்வழி நினைவுற் றிச்செயல்
கருத்திடை யாதெனக் கருதி நாடினார். 21

முன் – முதற்கண், தனது திருத்தகு அருள் சேர்ந்த – தமது செவ்விய திருவருளை அடைந்த, பல்வகை உருத்திரர் தமக்கு – பலவகை உருத்திரர்களுக்கு, உணர்வு செய்துழி – உணர்வு உதிக்கும்படி செய்தருளியபோது, அவ்வழி – அது வாயிலாக, நிருத்தனை நினைவு உற்று – நள்ளிருளில் நட்டம் பயில்பவராகிய சிவபெருமானை அவ்வுருத்திரர்கள் நினைவு கூர்ந்து, இச் செயல் யாது என – இந்நிகழ்ச்சி யாதோ என்று, கருத்திடைக் கருதி நாடினார் – தம் மனத்தின்கட் சிந்தித்து ஆராய்ந்தார்கள்.
சாரூபம் பெற்றவர் ஆதலின் அருள் சேர்ந்த என்றார், பல்வகை யுருத்திரல் பதினோருருத்திரர். ஐந்து மாறுமாம் மெய்வகை யுருத்திரர் எனப் பின் வருதல் காண்க. பக்குவம் மிக்காராதலின் முதற்கண் உருத்திரர் தமக்கு உணர்வு நல்கப்பட்டது.

நாடிய எல்லையில் நான்மு கத்தன்மால்
தேடிய அண்ணல்தன் செய்கை யீதெனக்
கூடிய ஓதியாற் குறித்து முன்னுற
வீடிய உயிர்த்தொகை எழுப்ப வெஃகியே. 22

நாடிய எல்லையில் – இச் செயல் யாது என்று ஆராய்ந்த சமயத்தில், ஈது – இச்செயல், நான்முகத்தன் மால் தேடிய அண்ணல் தன் செய்கை என – பிரமாவுந் திருமாலுந் தேடிய சிவபெருமானுடைய செயலேயாம் என்று, கூடிய ஓதியால் குறித்து – கைகூடிய ஞானத்தினால் அறிந்து, வீடிய உயிர்த்தொகை – உணர்வு மாய்ந்து சடமாய்ப்போன உயிர்க்கூட்டம், முன் உற எழுப்ப வெஃகி – முன்னிலைமையை உறும்பொருட்டு எழுப்ப விரும்பி. [22-127]

கண்ணுதல் எந்தைதன் கழல்கள் அர்ச்சனை
பண்ணுதல் உன்னியப் பகவன் தொல்சுடர்
விண்ணிடை இன்மையின் வேலை காண்கிலா
மண்ணிடை அருச்சுன வட்டத் தெய்தினார். 23

கண்ணுதல் எந்தைதன் கழல்கள் அர்ச்சனை பண்ணுதல் உன்னி – கண்ணுதலாகிய எம்பெருமானின் பாதங்களை அருச்சனை செய்வதைக் கருத்துட்கொண்டு, அப்பகவன் தொல் சுடர் விண் இடை இன்மையின் – அப்பகவானின் பழைமையாகிய சுடர்கள் ஆகாயத்தில் இயக்கம் இன்மையால், வேலை காண்கிலா மண்ணிடை – காலந் தெரியாமல் இருக்கின்ற பூமியின்கண்ணே, அருச்சுன வட்டத்து எய்தினார் – திருவிடை மருதூரை அடைந்தார்கள்.

உயிர்த்தொகை எழுப்ப வெஃகி அர்ச்சனை பண்ணுதல் உன்னினர் என்க. சுடர், சந்திர சூரியர். அனியாயும் விழியாயும் மூர்த்தமாயும் அமைதலின் பகவன் றொல்சுடர் என்றார். இன்மையின் காண்கிலா என்க.

அருச்சுனம் – மருதமரம், அருச்சுனப் பெயரால் வழங்கும் மூன்று தலங்களுள் இத்தலம் இடைக்கண்ணது. அதனால் மத்தியார்ச்சுனம் எனப்படும். வட்டம் – எல்லை, இங்கே எல்லைப்படுத்தப்படுவதாகிய ஊர். ‘தில்லை வட்டம்’ எனத் தேவாரத்தில் வருதல் காண்க.

இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு என்பது திருவாசகம். வானிடத்தவரும் மண்மேல் வந்தரன்றனை யர்ச்சிப்பர்’ என்பது சித்தியார். உருத்திரர் தம் பதத்தினீங்கி, அர்ச்சனைபண்ணுதல் உன்னி மண்ணிடை எய்தினாரென்க. [23-127]

எங்க ணும் கனையிருள் இறப்ப வீசலிற்
கங்குலே போன்றதிக் காலை கண்ணுதற்
புங்கவற் கேற்றிடு பூசை செய்துமென்
றங்கவர் யாவரும் ஆய்தல் மேயினார். 24

எண்ணும் கனை இருள் இறப்ப வீசலின் – எவ்விடத்திலும் செறிந்து இருள்மிக்குப் பரவுவதால், கங்குலே போன்றது – அக்காலம் இராக்காலம் போன்றிருந்தது; இக்காலை – இப்படிப்பட்ட காலத்தில், கண்ணுதற் புங்கவற்கு – கண்ணுதலாகிய சிவபெருமானுக்கு, ஏற்றிடும் பூசை செய்தும் என்று – ஏற்ற பூசையைக் செய்யக்கடவேம் என்று, அங்கு அவர் யாவரும் ஆய்தன் மேயினார் – அவ்விடத்தில் அவ்வுருத்திரர் யாவரும் பூசைக் கிரமத்தைச் சிந்திப்பாராயினார்.[24-127]

முண்டக மலர்கெழு முக்கண் மேலையோன்
கொண்டதோர் ஐம்பெருங் கோலத் தேவரும்
எண்டகு மூவகை இயல்பு ளாங்கவர்
மண்டல விதியினால் வடிவ தாக்கியே. 25

எண் தகும் மூவகை இயல்புள் – எண்ணப்படும் அரு அருவுரு உரு என்கின்ற மூவகைத் தடத்த இயல்புகளே, முண்டக மலர் கெழு முக்கண் மேலையோன் – தாமரை மலர்போல் விளங்குகின்ற மூன்று கண்களையுடைய சிவபெருமான், கொண்டௌ ஓர் ஐம் பெருங் கோலத்து வரும் வடிவது – அமைந்தருளிய பஞ்ச சாதாக்கியத்துட் பொருந்திய அருவுருவத் திருமேனியை, ஆங்கு அவர் மண்டல விதியினால் ஆக்கி – அவ்விடத்தில் அவ்வுருத்திரர் மண்டலவிதிப் பிரகாரம் தாபனஞ் செய்து.

மூவகை யியல்புள் ஐம்பெருங் கோலத்து வரும் வடிவம் அருவுருவம் என்க. அது பகுதிப்பொருள் விகுதி. குண்டம் மண்டலம் வேதிகை என்ற மூன்றனுள் மண்டலம் என்க. இம் மண்டலத்தை ஏகாதச மண்டலம் என்றலுமாம், ஏகாதசம் பதினொன்று.[25-128]

எண்ணிரு திறத்தவாய் இயன்ற நற்பொருள்
உண்ணிகழ் அளியொடும் உய்த்து வேதனுங்
கண்ணனும் வழிபடு கங்குற் பூசையைப்
பண்ணுதல் முயன்றனர் பரிவின் மேலையோர். 26

பரிவின் மேலையோர் – அன்பின் மிக்க்கோரான அவ்வுருத்திரர், உள் நிகழ் அளியொடு – உள்ளத்துள் எழுகின்ற அன்போடு, எண்ணிரு திறத்தவாய் இயன்ற நன்பொருளும் உய்த்து – பதினாறு வகையாய்ப் பொருந்திய நல்ல உபசாரப் பொருள்களையும் அமைத்துக்கொண்டு, வேதனம் கண்ணனும் வழிபடு கங்குற் பூசையை – பிரமாவுந் திருமாலுஞ் செய்து வழிபட்ட சிவராத்திரிப் பூசையை, பண்ணுதல் முயன்றனர் – செய்ய முயன்றார்கள்.

எண்ணிரு பொருள் சோடசோபசாரப் பொருள். ஓடும் என்புழி உம்மை பொருள் என்பதனோடு கூட்டப்பட்டது. வழிபடுபூசை வினைத்தொகை. அப்பூசை சிவராத்திரிப்பூசை. [26-128]

ஆறிரு நாலுடன் அஞ்செ ழுத்தையுங்
கூறினர் எண்ணினர் கோதில் கண்டிகை
நீறொடு புனைந்திறை நிலைமை யுட்கொளா
வேறுள முறையெலாம் விதியிற் செய்துபின். 27

நீறோடு கோதில் கண்டிகை புனைந்து – விபூதியையுங் குற்றமற்ற உருத்திராக்கத்தையுந் தரித்து, இறை நிலைமை உள்கொளா – சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனையையும் அவர் இயல்புகளையும் தியானஞ்செய்து, ஆறிரு நால்டன் அஞ்செழுத்தையும் எண்ணினர் கூறினர் – சோடச கலாப்பிராசாத மந்திரத்தையும் பஞ்சாக்கிரக மந்திரத்தையும் சிந்தித்துச் செபித்து, வேறு உள முறை எல்லாம் – வேறு செய்யற்பாலவாயுள்ள முறை அனைத்தையும், விதியிற் செய்து பின் – விதிப்படி செய்து பின்னர்.

உடன் எண்ணுமைப் பொருட்டு. சோடம் பதினாறு. பிரசாத மந்திரம் பிரணவ பீச்சங்களுடன் கூடிப் பதினாறு மாத்திரைகள் ஒலிக்குஞ் சூக்கும பஞ்சாக்கரம் என்பர். கூறினர் எண்ணினர் எச்சமுற்று. கோதின்மை நீற்றுக்குமாம். இறையும் நிலைமையு மென்க. மேல் ஐம்பெருங் கோலத்து வடிவு என்றதனால் அருவுருவத் திருமேனியாகிய சதாசிவ வடிவைத் தியானித்தன் ரென்க. வேறுள முறை யென்றது பூதசுத்தி அந்திரியாஅகம் முதலியவற்றை, பின் என்றதனால் முன்னிகழ்ந்தது அகப்பூசை; இனி நிகழ்வது புறப்பூசை என்க. [27-129]

வான்குலாம் வில்லுவம் மருமென் பாசடை
தேன்குலா மரையிதழ் செய்ய சாதிவீ
கான்குலாம் வலம்புரி கடவுள் தொல்பெயர்
நான்கியா மத்தினும் நவின்று சாத்தியே. 28

வான்குலாம் வில்லுவ மருமென் பாசடை – பெருமை பொருந்திய மணமும் மென்மையும் வாய்ந்த பசிய வில்வப்பத்திரம், தேன் குலாம் மரைஇதழ் – தேன் பொருந்திய தாமரைமலரிதழ், செய்ய சாதி வீ – செம்மை பொருந்திய சாதிப் புஷ்பம், கான் குலாம் வலப்புரி – வாசனை பொருந்திய நந்தியாவர்த்தம் ஆகிய இவைகளால், நான்கு யாமத்திலும் – முறையெ நான்கு யாமங்களிலும், கடவுள் தொல் பெயர் நவின்று சாத்தி – பழைமையாகிய சிவநாம மந்திரங்களைச் சொல்லி அருச்சித்து.

சிவநிசிப் பூசைக்குச் சிறந்ததாய்ப் பெருமை படைத்தது வில்லவம். வில்லுவ அடை என்று கூட்டுக. சாதி, சிறு சண்பகம், சாதி மல்லிகை என்பாரு முளர். [28-129]

ஏயவான் பயறுபால் எள்நல் ஓதனந்
தூயநல் லுணவிவை தொகுத்துக் கண்ணுதல்
நாயகன் முன்னுற நான்கியா மத்தும்
நேயமொ டம்முறை நிவேதித் தேத்தியே. 29

வான் ஏய நல் – உயர்ச்சி பொருந்திய நல்ல, பயறு பால் எள் ஓதனம் – முற்கான்னம் பாலன்னம் திலான்னம், தூய நல் உணவு – சுத்தான்னம், இவை தொகுத்து – ஆகிய இவைகளை அமைத்து, அம்முறை – அந்த முறையானே, நான்கு யாமத்தும் – நான்கு யாமங்களிலும், கண்ணுதல் நாயகன் முன்னுற நேயமொடு நிவேதித்து ஏத்தி – கண்ணுதலாகிய சிவபெருமானது முன்னிலையில் அன்போடு நிவேதனஞ் செய்து துதித்து.

முற்கம் பச்சைப்பயறு, பால் ஓதனம் பாயசான்னமுமாம். [29-130]

பின்னரும் இயற்றிடு பெற்றி யாவையுந்
தொன்னிலை விதிகளில் தோமு றாவகை
உன்னினர் புரிந்துழி யுவந்து ருத்திரர்
முன்னுற வந்தனன் முக்கண் மூர்த்தியே. 30

பின்னரும் – மேலும், இயற்றிடு பெற்றி யாவையும் – செயற்பாலனவாய செய்கைகள் யாவற்றையும், தொல் நிலை விதிகளில் தோம் உறா வகை – பழைமையாகிய நிலைபெற்ற விதிகளினின்றும் வழு வாராத பிரகாரம், உன்னினர் புரிந்துழி – சிந்தித்துச் செய்த சமயத்தில், முக்கண்மூர்த்தி உவந்து – மூன்று கண்களையுடைய சிவபெருமான் தமக்குள் அவர்கள் செய்த பூசைக்கு மகிழ்ந்து, உருத்திரம் முன்னுற வந்தனன் – அவ்வுருத்திரர்களுக்கு முன்னே தோன்றியருளினார். [30 130]

அவ்விடை மருதினில் ஐந்தும் ஆறுமாம்
மெய்வகை உருத்திரர் வேண்டி யாங்கருள்
செய்வதொர் கண்ணுதல் தேவன் தொன்மைபோல்
எவ்வகை உயிரையும் இயற்ற வுன்னலும். 31

அ இடை மருதினில் – அந்தத் திருவிடை மருதூரில், மெய்வகை ஐந்தும் ஆறும் ஆம் உருத்திரர் – சிவபெருமானுடைய வடிவத்தைக் கொண்ட வகையினரான பதினோரு ருத்திரர்களும், வேண்டியாங்கு – விரும்பியவாறு, அருள் செய்வது ஓர் கண்ணுதல் தேவன் – அருள் செய்வதை மேற்கொண்டருளியவராகிய சிவபெருமான், எவ்வகை உயிரையும் – இயக்கமற்றுக் கிடந்த எவ்வகைப்பட்ட உயிர்களையும், இயற்ற – அவ்வுயிர்கள் இயக்கம் உற, உன்னலும் – திருவுளங் கொண்டருளுதலும்,

உருத்திரர் வேண்டியது , முன்னுற வீடிய உயிர்த்தொகை எழுப்ப வெஃகி என முன்னுரைக்கப்பட்டது. [31,130]
எழுந்தனர் மாலயன் இந்தி ராதியர்
எழுந்தனர் எழுந்தனர் யாரும் வானவர்
எழுந்தனர் முனிவரர் ஏனை யோர்களும்
எழுந்தன உயிர்த்தொகை இருளும் நீங்கிற்றால். 32

வானவர் யாரும் எழுந்தனர் – தேவர்கள் அனைவரும் எழுந்தார்கள்; முனிவரர் எழுந்தனர் – முனி சிரேட்டர்கள் எழுந்தார்கள்; ஏனையோர்களும் எழுந்தனர் – மற்றைய முனிவர்கள் சித்தர்கள் கிம்புருடர் என்றித்திறத்தார் யாவரும் எழுந்தார்கள்; உயிர்த்தொகை எழுந்தன; இருளும் நீங்கிற்று – வேலை காண்கிலா இருளும் நீங்கியது.

உன்னலும் யாவரும் எழுந்தனர்; யாவும் எழுந்தன என்க. [32,131]

அல்லிடை உறங்கினர் அறிவு சேர்ந்துழி
மெல்லென அயர்ந்தகண் விழித்தெ ழுந்தபோல்
எல்லையில் உயிர்த்தொகை யாவும் அவ்வழி
ஒல்லையில் எழுந்தன உலகில் எங்கணும். 33

அல்லிடை உறங்கினர் – இரவில் உறங்கியவர்கள்; அறிவு சேர்ந்துழி – அறிவு வந்து கூடியபோது, அயர்ந்த கண் மெல்ல்லென விழித்து எழுந்தபோல் – அயர்ச்சி யெய்திய கண்ணை மெல்லென்று விழித்து எழுந்தவாறு போல, அவ்வழி உலகில் எங்களும் ஒல்லையில் எழுந்தன – அப்பொழுது உலகில் எவ்விடங்களிலும் விரைவில் எழுச்சியுற்றெழுந்தன.
அயர்ந்த கண் – மூடிய கண். [33,131]

ஓங்கலுங் கரிகளும் உலப்பில் நாகமுந்
தாங்கின தரணிபா தலத்திற் கூர்மமாம்
ஆங்கது போற்றிய தண்டந் தன்னிடைத்
தீங்கதிர் மதியுடுப் பிறவுஞ் சென்றவே. 34

ஓங்கலும் கரிகளும் உலப்பு இல் நாகமும் – அட்ட குல மலைகள் அட்ட யானைகள் கெடுதலில்லாத அட்டமா நாகங்கள் ஆகிய அனைத்தும், தரணி தாங்கின – பூமியை முன் சுமந்தவாறே சுமந்தன; பாதலத்தில் ஆங்கு கூர்மமாம் அது போற்றியது – பாதலமாகிய அவ்விடத்தில் ஆதி கூர்மமாகிய அது முன்போலப் பூமியைத் தாங்கியது; அண்டம் தன்னிடை – ஆகாயத்தின் கண்ணே, தீம் கதிர் மதி உடு பிறவும் சென்ற – இனிய சூரியன் சந்திரன் நட்சத்திரம் என்பன்வும் பிறவுஞ் சஞ்சாரஞ் செய்தன.

இருளில் மூழ்கியோர்க் கினிமை செய்தலின் தீங்கதிர் மதி உடு என்றார். [34,131]

அன்னதொர் திறமெலாம் அமலன் ஆணையால்
தொன்னிலை அமைந்தவத் தொடர்பு நோக்கியே
இந்நெறி யாவையும் ஈசன் செய்கையே
பின்னிலை என்றனர் பிரம னாதியோர். 35

அன்னதொர் திறம் எலாம் – ஒப்பிலாத அத்தகைய செயலனைத்தும், அமலன் ஆணையால் – சிவபெருமானின் ஆஞ்ஞையால், தொல் நிலை அமைந்த – முன் அமைந்திருந்தவாறு அமைந்தன; அத் தொடர்பு – முன்போலமைந்த அவ்வியல்பை, பிரமன் ஆதியோர் நோக்கி – பிரமா முதலியவர்கள் பார்த்து, இந்நெறி யாவையும் – இவ்வாறமைந்த செயலனைத்தும், ஈசன் செய்கையே பின் இலை என்றனர் – சிவபெருமானுடைய செய்கையேயாம் வேறு இல்லை என்றார்கள். [35,132]

மற்றிவை நிகழும் வேலை மன்னுயிர்க் குணர்ச்சி நல்கி
உற்றனன் எந்தை என்றே உருத்திரர் உணர்ந்து தம்முன்
பற்றலர் எயில் மூன் றட்ட பண்ணவன் வரநேர் சென்று
பொற்றிரு வடியில் வீழ்ந்து போற்றலும் அமலன் சொல்வான். 36

இவை நிகழும் வேலை – இந் நிகழ்ச்சிகள் நிகழும்போது, மன் உயிர்க்கு உணர்ச்சி எந்தை உற்று நல்கினன் என்று – நிலைபெற்ற உயிர்களுக்கு இழந்த உணர்ச்சியை எம்பெருமான் எழுந்தருளி நல்கினா ரென்று, உருத்திரர் உணர்ந்து – அவ்வுருத்திரர்கள் அறிந்து, பற்றலர் எயில் மூன்று அட்ட பண்ணவன் தம்முன் வர – பகைவர்களின் மூன்று மதில்களையும் அழித்த சிவபெருமான் தமக்கு முன்னிலையில் எழுந்தருளிவர, நேர் சென்று – தாம் எதிர் சென்று, பொன் திருவடியில் வீழ்ந்து போற்றலும் – அப்பெருமானின் அழகிய திருவடிகளில் விழுந்து வணங்குதலும், அமலன் சொல்வான் – சிவபெருமான் கூறியருளுவார்.

உற்று நல்கினன் என இயைக்க. [36,132]

ஈண்டெமை அருச்சித் திட்ட இயல்பினால் உயிர்கட் கெல்லாம்
மாண்டதொல் லுணர்ச்சி நல்கி எழுப்பினம் மற்று நீவிர்
வேண்டின யாவுங் கேண்மின் விரைந்தென அமலன் தன்கண்
பூண்டதொ ரன்பு மிக்கோர் இனையன புகலல் உற்றார். 37

நீவிர் – நீவிர், ஈண்டு – இத்திருவிடை மருதூர் என்னுந் தலத்தில், எமை அருச்சித்திட்ட வியல்பினால் – எமக்கு அருச்சனை செய்த காரணத்தால், உயிர் கட்கு எல்லாம் மாண்ட தொல் உணர்ச்சி நல்கி எழுப்பினம் – உயிர்களனைத்துக்கும் மாய்ந்துபோன பழைய உணர்ச்சியை அருளி எழுப்பினோம்; மற்று வேண்டின யாவும் விரைந்து கேண்மி என – இதனோடமையாமல் வேறு விரும்புவன யாவற்றையும் விரைந்து கேளுங்கள் என்று அருளிச்செய்ய, அமலன் தண்கண் பூண்டது ஓர் அன்பின் மிக்கோர் – சிவபெருமானிடத்துப் பிணிப்பதாகிய ஒப்பில்லாத அன்பால் மிக்கோரான அவ்வுருத்திரர், இனைய புகலல் உற்றார்- இவற்றை உரைபார் ஆயினார்.

விடிய உயிர்த்தொகை எழுப்பி வெஃகி அர்ச்சனை செய்தாராதலின், உணர்ச்சி நல்கி எழுப்பியருளினாரென்க. [37,132]

நிற்றலும் அல்லில் எம்போல் நின்னடி எனைய ரேனும்
பற்றுடன் அருச்சித் தோர்க்குப் பழிதவிர் மாசுத் திங்கள்
உற்றிரு கதிரு மொன்றும் ஒண்பகல் முதனாட் கங்குல்
பெற்றிடு சிறப்பு நல்க வேண்டுமால் பெரும என்றார். 38

நிற்றலும் அல்லில் – நாள்தோறும் இராக்காலத்தில், எம்போல் எனையரேனும் பற்றுடன் நின் அடி அருச்சித்தோர்க்கு – எம்மைப்போல எப்படிப் பட்டவரேனும் அன்போடு தேவரீரது திருவடியை அருச்சனை செய்தவருக்கு, பழி தவிர் மாகத் திங்கள் – குற்றமற்ற மாசி மாதத்தில், இரு கதிரும் உற்று ஒன்றும் ஒண்பகல் – சந்திர சூரியர்கள் ஒன்றுசேருகின்ற சிறந்த அமாவசித் தினத்துக்கு, முதல்நாள் கங்குல் – முதனாளாகிய சதுர்த்தசியின் இரவாகிய மகாசிவராத்திர்ப் பூசையில், பெற்றிடு சிறப்பு – பெறுகின்ற சிறப்பை, பெருமநல்க வேண்டும் என்றார் – பெருமானே கொடுத்தருளல் வேண்டும் என்று வேண்டினார்கள்.

நித்தலும் நிற்றலும் என் நின்றது,, கங்குல் ஆகுபெயர், சிறப்பு – பலன் [38,133]

நீவிர்செய் பூசை தன்னை நெடிதுநாம் மகிழ்ந்த வாற்றால்
ஆவிகள் அனைத்தும் உய்ந்த அருவினை அகன்று நும்போல்
பூவினில் என்றும் பூசை புரிந்தவர்க் கெல்லாம் முத்தி
மேவர அளித்தும் என்றே வியனருள் புரிந்து போந்தான். 39

நீவிர் செய் பூசை தன்னை – நீவிர்கள் செய்த பூசையை, நாம் நெடிது மகிழ்ந்தவாற்றால் – யாம் பெரிதும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டமையால், ஆவிகள் அனைத்தும் உய்ந்த – உயிர்களெல்லாம் உய்ந்தன; அருவினை அகன்று – நீக்குதற்கரிய வினைகள் நீங்கி, பூவினில் நும்போல் என்றும் பூசை புரிந்தவர்க்கு எல்லாம் – பூமியில் நும்மைப்போல எக்காலத்தும் நம்மைப் பூசித்தவர்களுக்கெல்லாம், முத்தி மேவர அளித்தும் என்று – மோட்சத்தை அடையுமாறு அருள்வோம் என்று, வியன் அருள் புரிந்து போந்தான் – மிக்க அருளைச் செய்து எழுந்தருளினார்.

அருவினை பாவச்செயல், பூசை இராப்பூசை [39,133]

எம்பெருந் தலைவன் ஏக வுருத்திரர் யாரும் ஈண்டித்
தம்பதங் குறுகி முன்போற் சார்ந்தனர் அனைய காலை
அம்புய னாதி வானோர் அனைவருங் கயிலை புக்கு
நம்பனை வணக்கஞ் செய்து தொழுதிவை நவிலல் உற்றார். 40

எம் பெருந் தலைவன் ஏக – எமது பெரிய தலைவராகிய சிவபெருமான் எழுந்தருள, உருத்திரர் யாரும் ஈண்டி – உருத்திரர் யாவரும் ஒருங்கு திரண்டு, தம் பதம் குறுகி முன் போல் சார்ந்தனர் – தம்முடைய பதத்தை அடைந்து முன்போல் இருந்தார்கள்; அனைய காலை – அச்சமயத்தில், அம்புயன் ஆத் வானோர் அனைவரும் கயிலை புக்கு – பிரமா முதலிய தேவரனைவருந் திருக்கைலையை அடைந்து, நம்பனைத் தொழுது வணக்கஞ் செய்து இவை நலிலல் உற்றார் – சிவபெருமானைத் தொழுது வணங்கி இவற்றை உரைப்பாராயினர். [40,134]

மன்னுயிர்க் குயிராய் உற்ற வள்ளல்கேள் யாங்கள் எல்லாம்
உன்னருள் உறாத நீரால் உணர்வொரீஇச் சடம தாகிப்
பன்னெடுங் காலம் வாளா கிடந்தனம் பவமூழ் குற்றேம்
அன்னது தனக்குத் தீர்வொன் றருளென அண்ணல் சொல்வான். 41

மன் உயிர்க்கு உயிராய் உற்ற வள்ளல் கேள் – நிலைபெற்ற உயிருக்குயிரான அருள் வள்ளலே கேட்டருள்வீராக; யாங்கள் எல்லாம் உன் அருள் உறாத நீரால் – நாமெல்லாம் தேவரீரின் அருளைப் பெறாமையால், உணர்வு ஓரீஇ – அறிவிழந்து, சடம் ஆகி – சடப்பொருளாய், பல் நெடும் காலம் வாளாகிடந்தனம் – பல நெடுங்காலம் சும்மா கிடத்தோம்; பவம் மூழ்குற்றேம் – அதனால் பாவத்தில் மூழ்கினோம்; அன்னது தனக்குத் தீர்வு ஒன்று அருள் என – அதற்கு ஒரு கழுவாயினை அருளிச்செய்வீராக என்று பிரார்த்திக்க, அண்ணல் சொல்வான் – சிவபெருமான் திருவாய்மலந்தருளுவார்.
விலக்கியன் செய்தல்போல விதித்தன செய்யாமையும் பாவமாம். அதனால் பவம் மூழ்குற்றேம் என்ற தென்க. [41,134]

மங்கியே உணர்வு சிந்தி மறைமுறை புரியா நீரால்
உங்கள்பால் வருவ வெல்லாம் உமையிடத் தாகு மன்றே
இங்குநீர் இன்று பற்றி இயற்றுநுங் கடன்கள் என்னப்
பங்கயா சனனுந் தேவர் யாவரும் பணிந்து போனார். 42

உணர்வு சிந்தி மங்கி – அறிவு சிதறுற்று மழுங்கி, மறை முறை புரியா நீரால் – வேதாநுட்டானங்களைச் செய்யாமையால், உங்கள்பால் வருவ எல்லாம் – உங்களிடத்து வரக்கடவ பாவம் முழுவதும், உமை இடத்து ஆகும் – உமாதேவியாரிடத்துச் சேரும்; இங்கு நீர் – இவ்விடத்திலுள்ள நீவீர், இன்று பற்றி – இன்று தொடங்கி, நும் கடன்கள் இயற்றும் என்ன – உங்கள் நித்திய கடன்களைச் செய்யுங்கள் என்று திருவாய்மலர்ந்தருள, பங்கயாசனனும் தேவர் யாவரும் பணிந்து போனார் – பிரமாவும் எல்லாத் தேவரும் சிவபெருமானை வணங்கி முன்போலத் தத்தங் கடன்களைச் செய்யும்பொருட்டுச் சென்றார்கள்.

உயிர்கள் விதித்தன செய்யாமை அவ்வுயிர்களின் முனைப்பால் லாகாமையின் அவ்வுயிர்கள்பால் வருவ உமையின்பாலாயின. அன்று ஏ அசைநிலை. [42,134]

வேறு

வாலி தாமயன் முதலினோர் வணங்கினர் ஏக
ஏல வார்குழல் உமையவள் பிரான்கழல் இறைஞ்சி
மேலை நாளுயிர்த் தொகையினுக் கெய்திய வினையென்
பால்வ ரும்பரி சென்கொலோ பணித்தருள் என்ன. 43

வாலியாம் அயன் முதலினோர் வணங்கினர் ஏக – தூயதாகிய அறிவைப் பெற்ற பிரமா முதலியவர்கள் வணங்கிச் செல்ல, ஏல வார்குழல் உமையவள் பிரான் கழல் இறைஞ்சி – மயிர்ச்சந் தணிந்த நீண்ட கூந்தலினையுடைய உமையம்மையார் சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, மேலை நாள் உயிர்த் தொகையினுக்கு எய்திய வினை – முன்னாளில் உயிர்க்கூட்டங்களுக்கு உண்டாகிய பாவம், என்பால் வரும் பரிசு என் – என்னிடம் வரும் காரணம் என்னை, பணித்தருள் என்ன – திருவாய்மலர்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க. [43,135]

முன்பு நீயுனை வியந்தனை அத்துணை முனிந்து
நின்பொ ருட்டினால் உயிர்கள்தம் முணர்ச்சியை நீக்கிப்
பின்பு ணர்த்தினம் ஆதலின் அன்னவை பெற்ற
மன்பெ ரும்பவம் யாவையும் நின்னிடை வருமால். 44

முன்பு நீ உனை வியந்தனை – எம் முன்னிலையைல் உமையே நீ வியந்துரைத்தாய்; நின்பொருட்டு அத்துணை முனிந்து – நீ உன்னியல்பை உணரும் பொருட்டு அப்பொழுது யாம் உன்னைக் கோபித்து, உயிர்கள் தம் உணர்ச்சியை நீக்கி – உயிர்களின் உணர்ச்சியை நீக்கி – உயிர்களின் உணர்ச்சியை நீங்கச்செய்து, பின் உணர்த்தினம் – பின்னர் அவ்வுணர்ச்சியை வருவித்தோம்; ஆதலின் – இவ்வாறு உணர்ச்சி இடையீடுபட்டதனால், அவைபெற்ற மன் பெரும் பவம் யாவையும் – அவ்வுயிர்கள் அடைந்த மிக்க பெரும்பாவம் முழுவதும், நின்னிடை வரும் – உன்னிடம் வந்து சேரும்; முறையது ஆகும் – அவ்வாறு வந்து சேருவது நீதியேயாம்.
உணர்ச்சி இடையீடுபட்டதனால் விதித்தன் செய்யாமையால் பவம் உளதாயிற்றென்க.

முறையதாம் என்பது, அடுத்த பாட்டின் தொடக்கம். இரங்காமல் இருக்கமாட்டாமையாகிய திருவருளைத் தன்பாற் கொண்ட அருட்சத்திக்கே, விளையாட்டாகவேனும் முனைப்புளதாயவழித் தண்டனை உளதாமேல், வேகங் கெடாத மன்னுயிர்களின் முனைப்பின் பயன் யாதா மென்க. விளையாட்டாவது ஆன்மாக்களுக்குச் சிவத்தின் இயல்பு இருந்தபடியை உணர்த்து முகமாய தொரு ஆடல் என்க.

ஆன்மா திருவருளோடொத்துச் செல்லாதே முளைப்புளதாயவழித்தன்வினைக்குத் தானே பாத்திரமாவரைத், திருவருளாகிய சத்தி சிவத்தோடொத்துப்போகாதே முனைத்தவழி அதந் நிலையே இவ்வாறாமெனக் சத்தியில் வைத்துப் பேசியவாறாம். [44,135]

முறைய தாகுமால் பின்னுமொன் றுண்டுயிர் முற்றும்
பெறுவ தாமுனக் கல்லது பெரும்பவம் அவற்றால்
பொறைபு ரிந்திடற் கெளியவோ போற்றுநீ யென்றான்
சிறுவி திக்கருள் பரிசினை முடிவுறச் செய்வான். 45

முறையே ஆகும் பின்னும் ஒன்று உண்டு – உயிர்களின் பவம் நின்னிடை வருதல் நீதியாதலுமே யல்லாமல் மற்றொரு காரணமும் உண்டு; உயிர் முற்றும் பெறுவது ஆம் உனக்கு அல்லது – உயிர் முழுவதையும் ஈன்றருளுதலைக் கொள்ளுந் தாயாகிய உனக்கே யல்லாமால், அவற்றால் பொறை புரிந்திடற்கு – உன் குழந்தைகளாகிய அவ்வுயிர்கள் சுமத்தற்கு, பெரும் பவம் எளிவோ – அவை செய்த பெரிய பாவங்கள் எளியவாமோ; நீ போற்று – தாயாகிய நீயே சுமப்பாயாக; என்றான் – என்று திருவாய்மலர்ந்தருளினார்; சிறுவிதிக்கு அருள் பரிசினை முடிவுறச் செய்வான் – தக்கனுக்குத் தாம் முன் கொடுத்த வரத்தை இனி முற்றுவிப்பாராகிய சிவபெருமான்.

செய்வான் என்றான் என்க. செய்வான் வானீற்று வினையெச்சமுமாம். பெயராயவழிக் கருத்துடையடைகொளியாம். இதனை ஒரு வியாஜமாகக் கொண்டு பரிசினை முடிவுறச் செய்யத் திருவுளங்கொள்வா ராயினா ரென்க. பரிசு ஈண்டு வரம். பாதியன பராபரை யான்பெறு மாதராக என்று முன்பெற்றா வரமென்க.

குழந்தைக்கு பால் சுரக்கு மன்னை அதற்கு நோய் வாராமே மருந்து தருவதொரு முறையில் நீ போற்று என்றிருளினா ரென்க. [45,136]

நாதன் அவ்வுரை இயம்பலும் உளம்நடு நடுங்கிப்
பேதை யேன்செயும் பிழைதணித் தென்வயிற் பெருகும்
ஏத மாற்றவோர் பரிசினை உணர்த்துதி என்னாப்
பாத பங்கயந் தொழுதலும் இனையன பகர்வான். 46

நாதன் – சர்வலோகைக நாயகராகிய சிவபெருமான், அவ்வுயிர் இயம்பலும் – அவ்வார்த்தைகளைக் கூறியருள, உளம் நடுநடுங்கி – உமாதேவியார் மனம் நடுநடுங்கி, பேதையேன் செயும் பிழை தணித்து – பேதையாகிய யான் செய்யும் பிழையைப் பொறுத்து, என் வயின் பெருகும் ஏதம் மாற்ற ஓர் பரிசினை உணர்த்துதி என்னா – என்னிடம் வந்து பெருகுகின்ற பாவத்தை நீக்குதற்கு ஓர் உய்பாயத்தை உணர்த்தியருள்வீராக என்று, பாத பங்கயம் தொழுதலும் – திருவடிக்கமலங்களை வணங்குதலும், இனையன பகர்வான் – இவைகளைச் சிவபெருமான் கூரியருளூவாராயினர். [48,136]

ஆல மேபுரை நிறத்ததாய் அமிழ்தினுஞ் சுவைத்தாய்
ஞால மார்தர வொழுகிய காளிந்தி நதிபோய்
மூல மெய்யெழுத் தன்னதோர் முதுவலம் புரியின்
கோல மாகிநோற் றிருத்தியால் உலகருள் குறிப்பால். 47

ஆலம் புரை நிறத்ததாய் – நஞ்சை ஒத்த நிறத்தினையுடையதாய், அமிழ்தினும் சுவைத்தாய் – அமிர்தினும் இனிதாய், ஞாலம் ஆர்தர ஒழுகிய – பூமியில் உள்ளவர் நுகரும்படி பெருகுதலைச் செய்த, காளிந்தி நதி போய் – காளிந்தி நதியை அடைந்து, மூலம் மெய் எழுத்து அன்னது ஓர் முது வலம் புரியின் கோலமாகி – வேத மூலமான மெய்மையான பிரணவத்தை ஓத்ததாகிய ஒரு முதிய வலம்புரிச் சங்கின் வடிவமாகி, உலகு அருள் குறிப்பால் நோற்று இருத்தி – உலகத்தை இரட்சிக்குங் குறிப்போடு அந்நதியிலே தவஞ் செய்துகொண்டு இருப்பாயாக. [47,137]

அந்ந திக்குள்நீ பற்பகல் இருந்துழி அயன்சேய்
என்ன நின்றிடு தக்கனென் பவன்அவண் எய்தி
உன்னை நேர்ந்துசென் றெடுத்தலுங் குழவியின் உருவாய்
மன்னி யாங்கவன் பன்னிபாற் சிறுமியாய் வளர்தி. 48

அந்த நதிக்குள் நீ பற்பகல் இருந்துழி – அத்தக் காளிந்த நதியிற் பல காலம் நீ தவஞ்செய்துகொண்டிருக்கும்போது, அயன் சேய் என்ன நின்றிடு தக்கன் என்பவன் – பிரமாவின் புதல்வன் என்றிருக்கின்ற தக்கனானவன், அவண் எய்தி – அங்கு அடைந்து, உன்னை நேர்ந்து சென்று – உன்னை அணுகி வந்து, எடுத்தலும் – கையில் எடுக்க, குழவியின் உருவாய் மன்னி – குழந்தையின் வடிவமாய்ப் பொருந்தி, ஆங்கு அவன் பன்னி பால் – அவன் மனைவியாகிய வேதவல்லியிடத்து, சிறுமியாய் வளர்தி – சிறு பெண்குழந்தையாய் வளர்வாயாக. [48,137]

ஐந்தி யாண்டெனும் அளவைநிற் ககன்றுழி அதற்பின்
புந்தி ஆர்வமோ டெமைநினைந் தருந்தவம் புரிதி
வந்தி யாமது காணுறா மணஞ்செய்து மறையால்
இந்த மால்வரை யிடைஉனைத் தருதுமென் றிசைத்தான். 49

ஐந்து யாண்டு எனும் அளவை நிற்க அகன்றுழி – ஐந்து பிராயம் என்னுங் காலம் உனக்கு நீங்கியவுடன், அதன்பின் புந்தி ஆர்வமோடு எமை நினைந்து அருந்தவம் புரிதி – அதன்பின்பு மனவிருப்பத்தோடு எம்மை நினைந்து அரிய தவஞ் செய்வாயாக; யாம் அது வந்து காணுறா – யாம் அத்தவத்தை வந்து கண்டு, மறையால் மணஞ்செய்து – மறைவிதிப்படி திருமணஞ்செய்து, இந்த மால்வரையிடை உனைத் தருதும் – இந்தப் பெரிய திருக்கைலாச மலைக்கு உன்னை அழைத்து வருவோம்; என்று இசைத்தான் – என்று திருவாய் மலர்ந்தருளினார்.
மறை, கரத்தல் அகிய களவுமாம். [40,137]

இசைத்த வாசகம் உணர்தலும் இறையுரத் தழுந்தத்
தசைத்த பூண்முலை உமையவள் அன்னவன் சரணின்
மிசைத்தன் வார்குழல் தைவர வணங்கியே விடைபெற்
றசைத்த சிந்தையள் நீங்கினள் உலகுநோற் றதனால். 50

இசைத்த வாசகம் உணர்தலும் – சிவபெருமான் அருளிச்செய்த வார்த்தைகளைக் கேட்டவுடன், இறை உரத்து அழுந்தத் தசைத்த பூண் முலை உமையவள் – அச் சிவபெருமானுடைய திருமார்பில் அழுந்தும்படி பூண்களை அணிந்த முலைகளையுடைய உமையம்மையார், அன்னவன் சரணின்மிசை தன் வார்குழல் தைவர வணங்கி – அப்பெருமானுடைய திருவடிகளிமீது தமது நீண்ட கூந்தல் பொருந்தும்படி வணங்கி, விடை பெற்று – விடைபெற்றுக்கொண்டு, அசைத்த சிந்தையள் உலகு நோற்றதனால் நீங்கினள் – பெருமானைப் பிரிதலால் அசைவு கொண்ட மனத்தை யுடையவராய் உலகஞ் செய்த தவத்தாற் கைலையை நீங்கினார்.

பேதித்து நம்மை வளர்த்தெடுக்க்ம் பெய்வளையாகிய மாதாவின் தவம் உலகு உய்யுந் தவமாகையால் , உலகு நோற்றதனால் என்றார். [50,138]

ஆதி தேவனை ஒருவியே புடவியில் அணுகி
ஓத வேலையை மாறுகொள் காளிந்தி யுழிப்போய்
வேத மூலநேர் வால்வளை உருக்கொடு விளங்கி
ஏத மில்லதோர் பதுமபீ டத்தின்மேல் இருந்தாள். 51

ஆதி தேவனை ஒருவி புடவியல் அணுகி – உமாதேவியார் முதல்வராகிய சிவபெருமானைப் பிரிந்து பூமியை அடைந்து, ஓத வேலையை மாறு கொள் காளிந்தி யுழிப்போய் – அலைகளை யுடைய சமுத்திரத்தோடு மாறுபடுகின்ற காளிந்தி நதிப்பாற் சென்று, வேத மூலம் நேர் வால் வளை உருக்கொடு விளங்கி – வேத மூலமான பிரணவத்தை ஒத்த வெள்ளிய சங்கின் உருவத்தைக் கொண்டு விளங்கி, ஏதம் இல்லது ஓர் பதுமபீடத்தின்மேல் இருந்தாள் – குற்றமில்லாதாகிய ஒரு தாமரைமலர்ப் பீடத்தின்மீது எழுந்தருளி, இருந்தாள் எச்சமுற்று.

தெளித ருஞ்சிவ மந்திரஞ் சிந்தனை செய்தே
அளவில் பற்பகல் அன்னைநோற் றிருந்தனள் அவட்கண்
டுளம கிழ்ந்தெடுத் தேகுவான் ஓங்குகா ளிந்தி
நளிகொள் சிந்துவில் தக்கன்உற் றனஇனி நவில்வாம். 52

தெளி தரும் சிவமந்திரம் சிந்தனை செய்து – ஞானத்தைத் தருகின்ற சிவமூலமந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டு, அளவுஇல் பல்பகல் அன்னை நோற்றிருந்தனள் – அளவில்லாத பலகாலம் உலகமாதாவாகிய தேவி தவஞ் செய்து கொண்டிருந்தார்; அவட் கண்டு – அவ்வாறு தவஞ் செய்ய்துகொண்டிருந்த தேவியைக் கண்டு, உளம் மகிழ்ந்து – மனம் மகிழ்ந்து, எடுத்து ஏகுவான் – எடுத்துச் சொல்லும்பொருட்டு, ஓங்கு காளிந்தி நளி கொள் சிந்துவில் – உயர்ந்த காளிந்தியாகிய குளிர்ச்சிபொருந்திய ஆற்றின்பால், தக்கன் உற்றன இனி நவில்வாம் – தக்கனிடம் நிகழ்ந்தவற்றை இனிக் கூறுவாம்.

இப்படலத்தில் உயிர்கள் உணர்ச்சி யிழந்து இருளில் மூழ்கியிருந்த காலத்தை, மாகா சங்காரத்தின் பின் உயிர்கள் இளைப்பாறுவதாகிய காலத்தோடும், இருளில் உருத்திரர்கள் உய்யும்பொருட்ட்ப் பூடனைபுரிந்த காலத்தை மகா சிவராத்திரி காலத்தோடும் ஒப்பிட்டுச் சிந்திக்கும் முகத்தால், ஆணவ் இருளில் முழுகி விடிவாம் அளவும் விளக்கனைய மாயையால் அறிவுசிறிது விளங்குஞ் சகலராகிய நாம், நாடோறு மெய்தும் இராப்பொழுதின் நான்கு யாமங்களையும் எவ்வாறு சிவசிந்தனையிற் பயன்செய்வதென நினைவு கூறுவோமாக.

உமை கயிலை நீங்கும் படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 242

தட்சகாண்டம்