3.தக்கன் மகப்பெறு படலம்

தட்ச காண்டம்

ஆங்கவன் தேவி யானாள் அருந்ததிக் கற்பின் மிக்காள்
வாங்கிய நுசுப்பின் நல்லாள் மறைக்கொடி யெனுநா மத்தாள்
பூங்கம லத்துப் புத்தேள் பொன்னடி தன்னில் வந்தாள்
ஓங்குதொல் லுலகுக் கெல்லாம் ஒருதனி முதல்வி யானாள். 1

பூங்கமலத்துப் புத்தேள் பொன்னடி தன்னில் வந்தாள் – தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவரின் அழகிய பாதத்தில் உதித்தவள், வாங்கிய நுசுப்பின் நல்லாள் –துவளுகின்ற இடையினை உடைய நல்லவள், மறைக்கொடி எனும் நாமத்தாள்-வேதவல்லி என்னும் பெயருடையவள், மறைக்கொடி என்னும் நாமத்தாள்- வேதவல்ல்லி என்னும் பெயருடையவள்,  அருந்ததிக் கற்பின் மிக்காள்- அருந்ததியின் கற்புப்போன்ற கற்பினாற் சிறந்தவள், ஆங்கவன் தேவியானாள் – அந்தத் தக்கனுக்கு மனைவியானாள்; ஒங்கு தொல் உலகுக்கு எல்லாம் ஒரு  தனி முதல் ஆனாள் – அதனாலே அவ் வேதவல்லி உயர்ந்த பழைமையான உலகம் அனைத்துக்கும் ஒப்பற்றதொரு தலைவியானாள். [பக்கம் 70]

சேயிழை அவளொடு செறிந்து புல்லியே
மீயுயர் கமலமேல் விரிஞ்சன் காதலன்
மாயிரும் பணிபதி மணிகள் ஈன்றென
ஆயிர மைந்தரை அருளி னானரோ. 2

மீ உயிர் கமலமேல் விரிஞ்சன் காதலன் – புஷ்பங்களுக்குள்ளே மேலானதாய் உயர்ந்து விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவரின் புதல்வனான தக்கன், சேயிழை அவளொடு செறிந்து புல்லி – செம்மையாகிய ஆபரணங்களை அணிந்த அந்த வேதவல்லியோடு ஒருமையெய்திச் சேர்ந்து,  மா இரும் பணி பதி மணிகள் ஈன்றென– பெருமைமிக்க சர்ப்பங்களின் அரசனான ஆதிசேடன் இரத்தினங்களை உதவினாற் போல , ஆயிரம் மைந்தரை அருளினான் –ஆயிரம் புதல்வர்களைப் பெற்றான்.

ஆதிசேடன் ஆயிரம் தலையுடையவன், ஆகவே, பணிபதி ஆயிரம் மணிகளை ஈன்றாற்போல, தக்கம் ஆயிரம் மைந்தரைப் பெற்றான்.  [பக்கம்70]

அப்பெரு மைந்தர்கள் ஆயி னோர்க்கெலாம்
முப்புரி நூல்விதி முறையின் ஆற்றியே
செப்பரு மறைகளின் திறமும் ஈந்துபின்
இப்பரி சொன்றினை இசைத்தல் மேயினான்.3

அப்பெரு மைந்தர்கள் ஆயினோர்க்கு எல்லாம் – அந்த எண்ணிக்கையாற் பெரிய புதல்வாராயுள்ளா ரனைவரும், முப்புரிநூல் விதிமுறையின் ஆற்றி –முப்புரிநூல் தரித்தலாகிய சடங்கை வேதிப்பிரகாரஞ் செய்து, செப்பு அரும் மறைகளின் திறமும் ஈந்து – அதிகாரிகளல்லாதார் ஓதலாகாத வேதங்களின் மந்திரங்களை ஓதும் அதிகாரத்தையும் கொடுத்து, பின் – அதன்மேல், இப்பரிசு ஒன்றினை இசைத்தல் மேயினான்-இவா றொன்று கூறினான்.

[பக்கம்71]

நல்லதோர் மானதம் நணுகி நீவிர்கள்
எல்லிரும் ஈசனை எண்ணி நோற்றிரீஇப்
பல்லுயி ருந்தரும் பரிசு பெற்றிவண்
செல்லுதி ராலெனச் செப்பி ஏவினான்.  4

நீங்கள் எல்லிரும் நீவிர் எல்லாம், நல்லதம் ஒர் மானதம நணுகி – நல்ல தாகிய ஒப்பற்ற மானத வாவியை அடைந்து, இரீஇ – அங்கே தங்கி, ஈசனை எண்ணி நோற்று –சிவபெருமானை நினைந்து தவஞ்செய்து, பல் உயிரும் தரும் பரிசு பெற்று –பலவாகிய உயிர்களையும் படைக்கின்ற உத்தியோகத்தைப் பெற்றுக்கொண்டு, இவண் செல்லுதிர் எனச் செப்பி ஏவினான் – இவ்விடத்துக்கு வாருங்கள் என்று கூறி  அனுப்பினான். [பக்கம்71]

ஏயின காலையில் இறைஞ்சி மைந்தர்கள்
போயினர் மானதப் பொய்கை புக்கனர்
ஆயிடைப் படிந்தனர் அரனை உன்னியே
மாயிரு நோன்பினை இயற்றி வைகினார்.  5

ஏயின காலையில் – மேற்கூறியவாறு ஏவிய சமயத்தில், மைந்தர்கள் இறைஞ்சி –புதல்வர்கள் தந்தையாகிய  தக்கனை வணங்கி,  மானதப் பொய்கை போயினர் புக்கனர்-மானத வாவியைப் போயடைந்து, ஆயிடைப் படிந்தனர் – அவ்வாவியில் முழுகி, அரனை உன்னி – சிவபெருமானை நினைந்து, மா இரு நோன்பினை இயற்றி வைகினார்- மிகப்பெரிய தவத்தைச் செய்துகொண்டிருந்தனர். [பக்கம் 71]

நேரற இன்னணம் நெடிது நோற்புழி
நாரதன் என்பவன் நண்ணி ஆயிடை
வாரியுள் ஆற்றவும் வருந்து கிற்றிரால்
காரியம் யாவது கழறு வீர்என்றான்.  6

இன்னணம் – இவ்வாறு, நேர் அற – நிகரில்லாமல், நெடிது நோற்புழி – நீண்டகாலம் அப்புதல்வர்கள் தவஞ் செய்துகொண்டிருக்கும்போது, அஇடை நாரதன் என்பவன் நண்ணி – அவ்விடத்துக்கு நாரதர் என்கின்ற முனிவர் சென்று, வாரியும் ஆற்றவும் வருந்துகிற்றிர் –நீர் நிலையில் தவங்கிடந்து பெரிதும் வருந்துவதிற்றிளைக்கின்றீர்கள்; காரியம் யாவது-இதனாற் பெறும் பயன் யாதோ, கழறுவீர் என்றான் – சொல்லுங்கள் என்று வினவினார். [பக்கம் 72]

என்னலும் முனிவகே ளியாங்கள்*1 நல்கிடும்
முன்னுற நல்குவான் முயன்று முக்கணான்
தன்னடி உன்னியே தவத்தை ஆற்றுதும்
அன்னதும் எந்தைதன் ஆணையா லென்றார். 7

என்னலும் – என்று நாரதமுனிவர் வினவ, முனிவ கேள் – முனிவரே கேட்பீராக; யாங்கள் முன் உற – தக்கன் புதல்வர்களாகிய நாங்கள் முதன்மை பெற, நல்கிட – சிருட்டித்தொழிலைச் செய்யும்பொருட்டு, முக்கணான் நல்குவான்-மூன்று கண்களையுடைய சிவபெருமான் அருளுவதற்காக, தன் அடி உன்னி – அச் சிவபெருமானுடைய பாதங்களை நினைந்து, தவத்தை முயன்று ஆற்றும் – தவத்தை முயன்று செய்கின்றோம், அன்னதும் – அவ்வாறு செய்வதும், எந்தை தன்  ஆணையால் என்றார்- எம்முடைய தந்தையின் கட்டளையினாலேயாம் என்று கூறினார்கள்.[பக்கம் 72]

அறிந்திடு முனிவரன் அதனைக் கேட்டலுஞ்
செறிந்திடு கரத்தொடு செங்கை தாக்குற
எறிந்தனன் நகைத்தனன் இதுகொல் ஈசனால்
பெறும்பரி சேயெனப் பின்னுங் கூறினான். 8

அறிந்துடும் முனிவரன் – அறிவறிந்த முனிவர் பிரானாகிய நாரதர், அதனைக் கேட்டதும்- அவர்கள் கூறியதைக் கேட்ட உடனே, செறிந்திடு கரத்தொடு – மற்றைக் கையைச் சென்று செறிகின்ற கையோடு, செங்கை தாக்குற – அவ்வாறு சென்று செறிகின்ற செம்மையாகிய மற்றைக் கையுந் தாக்குதலைச் செய்ய, எறிந்தனன் – கைகொட்டி,  நகைத்தனன் – சிரித்து, இது கொல் –இது தானா, ஈசனால் பெறும் பரிசு என  – சிவபெருமானிடத்துப் பெறும் பேறு என்று, பின்னும் கூறினான் – மேலுங் கூறினார். [பக்கம் 72]

ஈசனை யேநினைந் திறைஞ்சி யேத்தியே
பேசரும் அருந்தவம் பிடித்து மூவகைப்
பாசம தகல்நெறி படரச் சிந்தியீர்
ஆசுறு படைப்பினுக் கார்வஞ் செய்திரோ. 9

ஈசனையே நினைந்து இறைச்ஞி ஏத்தி – சிவபெருமானையே நினைந்து வணங்கித் துதித்து, பேசு அரும் அருந்தவம் பிடித்தும் – பேசுதற்கு அரிய அருமையான தவத்தைச் செய்தும், மூவகைப் பாசமது அகல நெறிபடரச் சிந்தியீர் – மூன்று வகையான பாசமும் அகலும் வழியிற் செல்லுதற்குச் சிந்தனை செய்திலீர்; ஆசு உறு படைப்பினுக்கு ஆர்வம் செய்திர் – குற்றம் பெருகுதற்குரிய படைத்தற் றொழிலைப் பெறுதற்கு இச்சை வைத்தீர்.

நும் அறிவு இருந்தபடி என்னை என்றவாறு. [பக்கம் 73]

சிறப்புள அருந்தவஞ் செய்து நீர்இனி
உறப்படு கதிமுறை உரைப்பக் கேட்டிரால்
பிறப்புள திடருள தன்றிப் பின்னரும்
இறப்புள ததுநுமக் கினிய தாகுமோ.  10

நீர் சிறப்புள அரும் தவம் செய்தும் – நீவிர் சிறப்பு வாய்ந்த அரிய தவத்தைச் செய்துவைத்தும்( பெற வேண்டுவதைப் பெ விரும்பாமையால்), இனி உறப்படும் –இனி நும்மால் அடையப்படும், கதி முறை உரைப்பக் கேட்டிர்- கதிகளின் கிரமத்தை விளக்கிச் சொல்லக் கேட்பிராக; பிறப்பு உளது-நீர் விரும்பும் நெறியில் பிறப்பென்ப தொன்று உண்டு; இடர் உளது – பிறப்பினால் இடர் உண்டாம்; அன்றி –அல்லாமல், பின்னரும் – அவற்றின்மேலும், இறப்பு உளது –அஞ்சுதற்குரிய இறப்பும் உண்டாம்; அது  -இத் துணை இடரை வருவிக்கின்ற அப்படைத்தற் றொழில், நுமக்கு இனிது ஆகுமோ-தவத்தர்களாகிய நுமக்கு இனிமை செய்வதாகுமோ?

‘இறப்பதனுக் கென்கடவேன்’ என்ப ஆதலின், அஞ்சுதற்குரிய என்பது வருவிக்கப்பட்டது. தவஞ்செய்து இனி நீர் பெறுகின்ற சிருட்டித் தொழிலின் முறையை என்று உரைப்பினும் அமையும்.

இன்றுநீர் வெஃகிய தியற்று நான்முகன்
தன்றலை ஐந்தினில் ஒன்று சங்கரன்
பொன்றிகழ் கரங்கொளப் புகுந்த தீமையும்
நின்றதோர் பழியையும் நினைக்கி லீர்கொலோ. 11

இன்று நீர் வெஃகியது – இப்பொழுது நீவீர் விரும்பியதாகிய படைத்தற்றொழிலை, இயற்றும் நான்முகன் – இயற்றிக்கொண்டிருக்கின்ற பிரமதேவர், தன் தலை ஐந்தினில் ஒன்று – தமது ஐந்து தலைகளில் ஒன்றை, சங்கரன் பொன் திகழ் கரம் கொள – சங்கரராகிய சிவபெருமான் அழகு விளங்குகின்ற திருக்கரத்தால் கிள்ளி எடுக்கும்பொருட்டௌ, புகுந்த தீமையும் – பிரமதேவரிடம் உண்டான அகங்காரமாகிய தீமையையும், நீன்றது ஓர் பழியையும் – அதனால் நிலைபெற்ற வசையையும், நினைக்கிலீர்கொல் – நினைக்கின்றீர்போலும்.

ஐந்தலைகளுல் ஒன்று போயினமையின், பிரமதேவரை நான் முகன் என்றார், கரம்கொள் என்பதற்குக் கரத்தில் ஏந்த என்னுமாம். [பக்கம் 73]

என்னல திறையவர் இல்லை யார்க்கும்யான்
முன்னவன் என்றுநான் முகத்தன் மாலொடு
பன்னெடு நாளமர் பயின்று சோதிகண்
டன்னம தானதும் அறிந்தி லீர்கொலோ. 12

என் அலது இறையவர் இல்லை – என்னை அல்லாமல்  தலைமைக்கடவுள் என்று ஒருவர் இலர், யான் யார்க்கும் முன்னவன் – படைப்போனாகிய யானே யாவர்க்கும் முதலிலுள்ளவன், என்று – என்று கூறி, நான்முகத்தன் மாலொடு பல் நெடுநாள் அமர் பயின்று – பிரமதேவர் பலநெடுங் காலம் போர்செய்து, சோதி கண்டு – பரம்பொருளைச் சோதிவடிவிற் கண்டு, அன்ன மது ஆனது – அச் சோதியைத் தேட அன்னப்பறவை வடிவெடுத்த கதையை, அறிந்திலீர் கொல் – அறிந்திலீர் போலும் [பக்கம் 74]

நேயமெண் ணுற்றென நிறைந்த கண்ணுதல்
நாயகன் விதித்திட நம்மில் யாவையும்
ஆயவென் றகந்தையுற் றமர்வன் அன்னவன்
மாயமென் றுரைத்திடுந் தளையின் வன்மையால்.  13

நேயம் எண் உற்றென – நெய் நிறைந்து  நின்றாற்போல, நிறைந்த கண்ணுதல் நாயகன் யாவையும் விதித்திட  – எங்கும் நிறைந்த நெற்றிக் கண்ணராகிய சிவபெருமான் அனைத்தையுஞ் சிருட்டி செய்திடவும், நம்மில் ஆய என்று – அவையெல்லாம் நம்மாற் சிருட்டிக்கப்பட்டன என்று, அன்னவன் – அந்தப் பிரமதேவர், மாயம் என்று உரைத்திடும் தளையின் வன்மையால் – வஞ்சனை என்று சொல்லப்படும் மலப்பிணியின் வலியால், அகந்தை உற்று அமர்வன் – அகந்தை கொண்டிருப்பர்.[பக்கம் 74]

மலப்பிணிப்புப் புளதாயவழி அகந்தையுறுதல் தப்பாதென்க. நம் என்ற பன்மை வாய்பாடு அகந்தையின் விளைவைக் குறிப்பதுபோலும். மாயம் தளையின் காரியம். தளையை மாயம் என்றது உபசாரம்.

பற்றொடு முழுதுயிர் படைக்கும் பான்மையால்
பெற்றிடு பயனெவன் பெருமை யல்லது
நற்றவ முனிவிர்காள் நன்கி தென்றொரு
பொற்றளை தம்பதம் பூட்ட லாகுமோ. 14

நல் தவ முனிவர்கள் – நல்ல தவம் உடைய முனிவர்களே, பற்றொடு பற்றுக் காரணமாக, முழுது உயிர் படைக்கும் பான்மையால் – அனைத்துயிரையும் படைக்குந் தொழிலைப் பெற்றுக்கொள்ளும் இயல்பினால், பெருமை அல்லது – வீண் பெருமையெ யல்லாமல், பெற்றிடு பயன் எவன் – பெறக்கடவதாகிய நிலையான பேறு யாது, ஒரு பொன் தளை இது நன்கு என்று – பொன் விலங் கொன்றினை இது அழகிது என்று, தம் பதம் பூட்டல் ஆகுமோ – தம்முடைய கால்களிற் பூட்டிக்கொள்ளுதல் விவேகம் ஆகுமா?

பற்றொடு பட்ட படைத்தற்றொழில் பயனற்றதென உணர்தலை வேண்டி, நற்றவ முனிவர்கள் என்று விளித்தார் என்க. [பக்கம் 75]

எத்துணை எத்துணை இன்பம் வேண்டுநர்க்
கத்துணை அலக்கண்வந் தடையும் ஆங்கது
மெய்த்திறம் நீவிரும் விதியின் நிற்றிரேல்
கைத்துறு துயரெனுங் கடலில் சார்திரால்.  15

எத்துணை எத்துணை இன்பம் வேண்டுநர்க்கு – எவ்வளவு எவ்வளவு இன்பத்தினை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு, அத்துனை அலக்கம் வந்து அடையும் – அவ்வளவு அவ்வளவு துன்பம் வந்து சேரும்; ஆங்கு அது மெய்த்திறம் – அவ்வாறாதல் சத்தியமாம்; நீவீரும் விதியில் நிற்றிரேல் – நீங்களும் படைத்தற்றொழிலை விரும்பி அதில் நிற்றலைச் செய்வீராயின், கைத்து – ஒரு காலத்தில் வெறுப்புற்று, உறு துயர் எனும் கடலில் சார்திர் – மிக்க துன்பமாகிய கடலில் முழுகுதலைச் செய்வீர்.

அடுக்கு மிகுதி குறித்தது, கைத்து உறு – வெறுப்புப் பொருந்திய எனினுமாம்.

அன்றியும் ஈசனை அயர்த்தி யாமிறை
என்றுளம் உன்னுதிர் இசைவில் தீவினை
மன்றவு மாற்றுதிர் மயக்கங் கொள்ளுதிர்
ஒன்றிய பேருணர் வொருவிப் போதிரால். 16

அன்றியும் –  அல்லாமலும், ஈசனை அயர்த்து – இறைவனை மறந்து, யாம் இறை என்று உளம் உன்னுதிர் – படைக்கின்ற யாமே பரப்பிரமம் என்று மனத்தில் நினைத்தலைச் செய்வீர்; இசைவு தீவினை மன்றவும் ஆற்றுதிர் – அதனாலே பொருத்தமற்ற கொடிய வினைகளை மிகுதியுஞ் செய்வீர்; மயக்கம் கொள்ளுதீர் – இவ்வாற்றால் மயக்கம் உறுவீர்; ஒன்றிய பேருணர்வு ஒருவிப் போதிர் – இறைவனோ டொன்றிய பேரறிவை விலகி நடப்பீர். [பக்கம் 75]

வீட்டிடும் இச்செயல் வீடு சேர்தர
மோட்டுறு நிலைகொடு முயன்று கூடுதிர்
ஈட்டுறு நன்னெறிக் கியைவ தொன்றினைக்
காட்டியே இனைத்தெனக் கழற லாகுமோ. 17

இச் செயல் விட்டிடும் – கேட்டுக்குக் காரணமான இப்படைப்புத்தொழில் விருப்பை விட்டுவிடுங்கள்; மோடு உறு நிலை கொடு – உயர்ச்சிமிக்க நிலையில் நின்றுகொண்டு, வீடு சேர்தர முயன்று கூடுதிர் – முத்தியடைதற்கு முயன்று செய்வன செய்மின்கள்; ஈட்டுறு நல் நெறிக்கு – சம்பாதிக்கப்படுவதாகிய நல்ல  வீட்டு நெறிக்கு, இயைவது ஒன்றினைக் காட்டி – ஒத்ததொன்றை எடுத்துக் காட்டி, இனைத்து என – அவ்வீட்டு நெறியை இவ்வியல்பிற்று என்று, கழறல் ஆகுமோ – உவமை முகத்தால் உரைத்தல் இயலுமா?

வீடு ஒப்புயர்வு அற்றதென்றவாறு.

அற்றமில் தவம்புரிந் தரிய வீட்டினைப்
பெற்றவர் அளப்பிலர் பெறுவ தாகியே
உற்றவர் அளப்பிலர் உலகில் சிற்சில
மற்றவர் தமதியல் வகுப்பக் கேண்மினோ. 18

உலகில் – வினை ஈட்டத்துக்கு உரியதாகிய  இவ்வுலகில், அற்றம் இஅல் தவம் புரிந்து – அழிவில்லாத தவத்தைச் செய்து, அரிய வீட்டினைப் பெற்றவர் அளப்பு இலர் – பெறுதற்கரிய வீடுபேற்றைப் பெற்றவர்கள் அளவில்லாத வர்கள்; பெறுவது ஆகி உற்றவர் அளப்பு இலர் – வீடு பேற்றை பெறுவதை மேற்கொண்டு முயல்பவர்களும் அளவிலாதவர்கள்; அவர் தமது சிற்சில் இயல் – வீடு பெற முயல்பவரது சிற்சில இயல்பை, வகுப்பக் கேண்மின் – வகுத்துச் சொல்லக் கேட்பீராக. [பக்கம் 76]

வீடு பெற முயல்வாரது இயல்பே ஈண்டைக்கு வேண்டுவதாதலின், அதனை வகுப்பாராயினா ரென்க.

சுற்றம தரனடித் தொண்டர் அல்லது
மற்றிலர் அவனடி மலர்க ளேயலால்
பற்றிலர் சாலவும் இனிய பண்பினர்
குற்றம தகன்றதோர் கொள்கை மேயினார். …… 19

சுற்றம் – வீட்டைக் காதலிப்போருக்குச் சுற்றம் ஆவார், அரன் அடித் தொண்டர் –  சிவபெருமான் திருவடிக்குத் தொண்டு செய்யும் சிவனடியாராவர்; அல்லது மற்று இலர் – சிவனடியா ரல்லாமல் வேறு சுற்றம் அவர்களுக்கு இல்லை; அவன் அடி மலர்களே அலால் பற்று இலர் – சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளி ல்லாமல் மற்றொன்றிப் பற்று இல்லாதவர்கள் அவர்கள், சாலவும் இனிய பண்பினர் – இவ்வாற்றல் மிகவும் இனிதாய பண்பினை யுடையவர்கள்; குற்றம் அகன்றது ஓர் கொள்கை மேயினார் – குற்றம் அற்றதான ஒப்பில்லாத கோட்பாட்டை மேற்கொண்டவர்கள் என்க.

ஈரிடத்தும் ‘அது’ பகுதிப்பொருள் விகுதி. தந்தை தாயாரும் சுற்றனன்மையின் மற்றிலர் என்றார். ‘உற்றார் ஆருளரோ’ என்றவாறு. [பக்கம் 76]

நேசமுற் றடைபவர் நினைப்பின் நீக்கரும்
ஆசறுத் தருள்பொழி அறிவின் மேலையோர்
ஈசனைக் குறுகியெஞ் ஞான்றும் வாழ்பவர்
பேசுதற் கரியதோர் பெருமை எய்தினார். 20

நேசன் உற்று – வீட்டைக் காதலித்து, அடைபவர் –  அதனை அடைதற்குத் தவமுயற்சி செய்பவர் ஆகிய, நீக்கரும் ஆசு நினைப்பின் அறுத்து – நீக்குதற்கரியதாகிய மாசினை நினைப்பினின்றும் நீக்கி, அருள் பொழி அறிவின் மேலையோர் – திருவருளால் அநுக்கிரகிக்கப்பட்ட ஞான அறிவான் மிக்கோர், ஈசனைக் குறுகி – சிவபெருமானை அணுகி, எஞ்ஞான்றும் வாழ்பவர் – எக்காலத்தும் மாற்றம் அற்ற   பெருவாழ்வு படைத்தவர் ஆவர்; பேசுதறகு அரியது ஓர்    பெருமை எய்தினார் – அதனாலே பேசுதற்கரியதும் ஒப்பற்றதுமான பெருமையைப் பெற்றார் ஆயினார்.

அடைபவராகிய மேலையோர் என்க. [பக்கம் 77]

ஆதலின் அவரென அவாஇன் றுற்றிடு
மேதகு நெறியுறீஇ வீடு சேருதிர்
ஏதமில் வெறுக்கைபெற் றெண்ணந் தீர்ந்திடுந்
தாதைதன் பணியினைத் தவிர்திர் என்னவே. …… 21

ஆதலின் – வீடு காதலிப்பா ரியல்பு இங்கனம் ஆதலினாலே, அவர் என – அவர்களைப்போல, அவா இன்று – மற்றொரு பற்று இன்றி, மேதகு நெறி உறீஇ – அடைதற்குரிய மேன்மை தக்க வீட்டு நெறியைப் பேணி, ஏதம் இல் வெறுக்கை பெற்று – குற்றம் இல்லாத அருட் செல்வத்தைப் பெற்று, வீடு சேருதிர் – வீட்டினை அடையக் கடவீர்கள்; எண்ணம் தீர்ந்திடும் தாதை தன் பணியினைத் தவித்திர் – நல்லெண்ணம் இல்லாத உங்கள் தந்தையின் கட்டளையை விட்டிவிடுங்கள்; என்ன – என்றிங்கனம் நாரதர் முனிவர் கூற.

வெறுக்கை பெற்று எண்ணந் தீர்ந்திடும் தாதை எனக் கிடக்கை முறையில் வைத்துரைப்பினும் அமையும். அவ்வாறுரைப்பின், ஏதம் உள் வெறுக்கையை ஏதம் இல் வெறுக்கை என மங்கலஞ் செய்வவாறாகும். அன்றி, ஏதமேயன்றிப் பிறிதொன்று மில்லாத வெறுக்கையெனக் கொள்ளினுமாம். [பக்கம் 77]

அந்தமில் வீடுபே றடையும் ஊழுடை
மைந்தர் கள்ஓர்புடை வந்து தேர்வுறாத்
தந்தைசொல் லினுமிது தக்க தேயெனப்
புந்திகொண் டடிகளை வணங்கிப் போற்றினார்.  22

அந்தம் இல் வீடு பேறு அடையும் ஊழ் உடை மைந்தர்கள் – முடிவில்லாத வீடுபேற்றினை அடைதற்குரிய ஊழினையுடைய அந்தப் புதல்வர்கள், ஓர் புடை வந்து – ஒரு பக்கத்தே ஒன்று சேர்ந்து, தேர்வு உறா – ஆலோசனை செய்து, இது – இந்த உபதேசம், தந்தை சொல்லினும் தக்கது எனப்புந்தி கொண்டு – தந்தையாகிய தக்கனின் கட்டளையினும் உயர்ந்ததாம் என்று புத்தி பண்ணி, அடிகளை வணங்கிப் போற்றினார் – குருவாய் எழுந்தருளிய நாரத முனிவரின் திருவடிகளை வணங்கித் துதித்தார்கள்.

வீடுபே றடையும் ஆகூழ் உடைமையால், ஒரு புடை வந்து தேர்ந்துதெளிந்தார்க ளென்க. [பக்கம் 78]

வேறு

போற்று மைந்த ரைப்பெரும் புறந்தழீஇ அரன்புகழ்
சாற்றி வீடு வெஃகுறுந் தவத்தினோர்கள் நிலையினைத்
தேற்றி மந்தி ரங்களுஞ் செயற்கையும் புணர்த்தியே
மாற்றினன் தொல்லுணர்வு தன்னை மற்றொருண்மை உதவினான்.23

போற்றும் மைந்தரை பெரும் புறம் தழீஇ – தம்மைத் துதிக்கின்ற தக்கன் புதல்வர்களைப் பெருமை பொருந்திய முதுகு தைவந்து, அரன் புகழ் சாற்றி – சிவபெருமானின் புகழை எடுத்துச் சொல்லி, வீடு வெஃகுறும் தவத்தினோர்கள் நிலையினைத் தேற்றி – வீடு காதலிக்குந் தவத்தர்கள் நிற்கும் நிலையைத்தெளிவித்து, மந்திரங்களும் செயற்கையும் புணர்த்து – அதற்குரிய மந்திரங்களையுங் கிரியைகளையும் பயிலச் செய்து, தொல் உணர்வு தன்னை மாற்றினன் – பழைய எண்ணத்தை மாற்றி, ஓர் உண்மை உதவினான் – ஒன்றாகிய வீட்டு நெறி உண்மையை உபதேசித்தார். [பக்கம் 78]

வேறொ ருண்மை உதவல்செய்து விதியின்நாடி வேதநூல்
கூறு கின்ற முறைபுரிந்து குமரர்யாரும் இன்னணம்
ஈறின் மாத வங்கள்ஆற்றி எல்லைதீர்ந்த முத்தியில்
சேறி ரென்று முனிவன்ஒல்லை சேணெழுந்து போயினான்.  24

வேறு ஓர் உண்மை உதவல் செய்து – வேறானதும் ஒன்றானதுமான முத்தியுண்மையை உபதேசஞ் செய்து, குமரர் யாரும் – குமரர்களே நீவிர் எல்லாம், விதியின்நாடி – முறைப்படி ஆராய்ந்து, வேத நூல் கூறுகின்ற முறை புரிந்து – வேத சாத்திரம் கூறுகின்ற முறைகளை அநுட்டித்து, இன்னணம் ஈறில் மாதவங்கள் ஆற்றி – இவ்வாற்றால் அழிவில்லாத சிறந்த தவங்களைச் செய்து, எல்லை தீர்ந்த முத்தியில் சேறிர் என்று – எல்லையற்ற முத்தி நெறியிற் செல்லக் கடவீர் என்று கூறி, முனிவன் சேண் எழுந்து ஒல்லை போயினான் – நாரத முனிவர் ஆகாய வழிக்கொண்டு விரைந்து சென்றார்.

தொல்லி யுணர்வுக்கு வேறான தாதலின் வேறு என்றார். ஓர் குறுகி ஓர் என்றாயிற்று. புணர்ந்தாற் புணருந் தொறும் புதிது ஆதலின், எல்லை தீர்ந்த முத்தி என்றார். [பக்கம் 78]

போகு நார தற்புகழ்ந்து பொன்னடித் தலத்தின்மேல்
ஓகை யோடு தாழ்ந்துமுன் உணர்த்துபான்மை உன்னியே
மோக மாதி யானதீமை முழுதுமாற்றி மோனிகள்
ஆகி மைந்தர் எவரும் அங்கண்ஆற்றினார் அருந்தவம். 25

போகும் நாரதன் புகழ்ந்து – ஆகாய வழிக்கொண்டு செல்லுகின்ற நாரத முனிவரைப் புகழ்ந்து, பொன் அடித் தலத்தின் மேல் ஓகையோடு தாழ்ந்து – அவருடைய பொன்போலும் பாதங்களின்மீது உவகையோடு வணக்கஞ் செய்து, முன் உணர்த்து பாமை உன்னி – முன்னர் உபதேசித்த முத்திநெறி இயல்புகளை நினைந்து, மோகம் ஆதியான தீமை முழுதும் மாற்றி – மோகம் முதலிய குற்றங்கள் முழுவதையும் நீக்கி, மோனிகள் ஆகி – மெளன விரதர்களாய், மைந்தர் எவரும் அங்கள் அருந் தவம் ஆற்றினார் – தக்கன் புதல்வரெல்லாம் அவ்விடத்தில் செய்தற்கரிய தவத்தைச் செய்தார்கள்.

காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் எனப்படும் அறுவகைக் குற்றங்கள் ஈண்டு மோகமாதியான எனப்பட்டன. ஒன்றினைக் கைவிட்ட வழியும், அதன்பால் உளதாய மோகம் நீக்குதற்கரியதாதலின், அதனை முன்னிட்டு மோக மாதியான என்றார். [பக்கம் 79]

அருந்த வங்கள் பலவும்ஆற்றி அவர்கள்வீடு சேர்தலும்
இருந்த வம்பு ரிந்த தக்கன் இளைஞர்பெற்றி இன்னமுந்
தெரிந்த தில்லைஎன்று சிந்தை செய்துபோத வுணர்வினால்
பொருந்த நோக்க லுற்ற வட்பு குந்த பான்மை கண்டனன்.  26

அருந் தவங்கள் பலவும் ஆற்றி – அரிய தவங்கள் பலவற்றையுஞ் செய்து, அவர்கள் வீடு சேர்தல்ம் – அப்புதல்வர்கள் வீடுபேற்றை அடைதலும், இரும் தவம் புரிந்த தக்கன் –   பெரிய தவங்களைச் செய்த தக்கன், இளைஞர் பெற்றி இன்னமும் தெரிந்ததில்லை – புதல்வர்களின் நிலைமை இத்தகையது என்று இதுவரை தெரியவில்லை; என்று    சிந்தை  செய்து – என்றிவாறு நினைந்து, போத உணர்வினால் பொருந்த நோக்கலு உற்று – ஞான உணர்வினாலே இயை புற நோக்கி, அவண் புகுந்த பான்மை கண்டவுடன் – அவ்விடம் நடந்தவைகளை அறிந்தான்.

போதம் ஆத்மபோதம், அது பசு ஞானம் எனப்படும், இருந்து அவம் புரிந்த தக்கனுமாம். [பக்கம் 79]

மானதத்த டத்தி னூடு மாற்றருந்த வத்தராய்
மோனமுற்ற சிறுவர் பாலின் முன்னிவந்து நாரதன்
ஞானமுற்று மோதி யென்சொல் நவையதென்று மாற்றியே
மேனிலைக்கண் உய்த்து மீண்டு விண்படர்ந்து போயினான்.  27

மானதத் தடத்தின் ஊடு – மானத தடாகத்தின் கண்ணே, மாற்று அரும் தவத்தராய் – நீக்குதற்கரிய தவத்தை மேற்கொண்டவராய், மோனம் உற்ற சிறுவர்பால் – மெளன நிலையிலிருந்த என் குழந்தைகளிடம், நாரத முன்னி வந்து – நாரத முனிவன் மனச் சங்கற்பஞ் செய்துகொண்டு வந்து, ஞானம் முற்றும் ஓதி-  வீட்டு நெறிக்குரிய ஞானம் முழுவதையும் உபதேசித்து, என் சொல் நவையது என்று மாற்றி – என் கட்டளையைக் குற்றமுடையதென்று விலக்கி, மேல் நிலைக்கண் உய்த்து – மேலாய வீட்டு நெறிக்கண் அவர்களைச் செல்லும்படி செய்து, மீண்டு – பின்பு, விண் படர்ந்து போயினான் – ஆகாய வழிக்கொண்டு சென்றுவிட்டான்.[பக்கம் 80]

மிக்க மைந்தர்அவன் உரைத்த விதியினின்று வீடுபே
றொக்க லோடுமே யினார்கள் ஒருவரின்றி எற்கினி
மக்க ளின்றெனத் தெரீஇ வருத்தமுற்றி ருந்திடுந்
தக்கன் மற்றும் ஆயிரந் தவச்சிறாரை உதவினான்.28

மிக்க மைந்தர் –  ஆயிரவர் மைந்தரும், ஒருவர் இன்றி – ஒருவர் தாமும் எஞ்சுதல்   இன்றி, ஒக்கலோடும் – சுத்றத்தோடனைவரும், அவன் உரைத்த விதியின் நின்று – அந்த நாரதமுனிவன் உரைத்த   வீட்டு நெறியில் நின்று, வீடு பேறு மேயினார்கள் – வீடுபே றெய்தினார்கள்; இனி  எதற்கு மக்கள் இன்று – இனி எனக்கு மக்கள் உளராதல் இல்லை, எனத் தெரீஇ – என்று தெரிந்து, வருத்தம் உற்று –  துன்பம் அடைந்து இருந்திடும் தக்கன் – வாளா இருந்த தக்கன், மற்றும் ஆயிரம் தவச் சிறாரை உதவினான் – மீண்டும் ஆயிரவர் தவஞ்செய்தற்குரிய புதல்வர்களைப் பெற்றான்.

அவர்களுக் அவர்களே சுற்றாம் என்க, சுற்றாம் மற்றிலர் என்பதாம். [பக்கம் 80]

,

பெற்ற மைந்தரைத் தழீஇப் பிறங்குகாமர் மீச்செல
அற்றமில் சிறப்பின் வேதம் அறிவுறுத்தி ஆதியாம்
நெற்றியங் கணானை உன்னி நீவிர்யாவும் நல்குவான்
நற்ற வஞ்செய் தணைதிர் மானதத்தடத் தில்என்னவே.  29

பிறங்கு காமர் மீச் செல – புதல்வர்ப் பேற்றால் விளங்குகின்ற அழகு மேன்மேற் கிளர, பெற்ற மைந்தரைத் தழீஇ – தான் பெற்ற புதல்வர்களைத் தழுவி, அற்றம் இல               சிறப்பின் வேதம் அறிவு உறுத்து – அழிவில்லாத சிறப்பினையுடைய வேதங்களை அறிவுறுத்தி, நீவீர் – நீவிரெலாம், ஆதி ஆம் நெற்றி அம் கணானை உன்னி -முதல்வராகிய நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானை நினைந்து, யாவும் நல்குவான் – யாவற்றையுஞ் சிருட்டி செய்யும் பொருட்டு, மானதத் தடத்தில் நல் தவஞ்செய்து அணைதீர் என்ன – மானத வாவியை அடைந்து நல்ல தவஞ் செய்து வாருங்கள் என்று கூற.

கேட்ட மைந்தர் தாதைதாள் கெழீஇயதங்கள் சென்னியில்
சூட்டி ஏவல் போற்றிஅன்ன தூமலர்த் தடத்திடை
ஈட்ட மோடு சென்றிருந் திருந்தவம் புரிந்தனர்
காட்டி லுள்ள கயமுனிக் கணங்கள்அங் கணுற்றென.  30

கேட்ட மைந்தர்  – இவ்வாறு தக்கன் கூறியவைகளைக் கேட்ட புதல்வர்கள், தாதை தாள் தங்கள் சென்னியில்  கெழீஇய சூட்டி –  பிதாவின் பாதங்களைத் தங்கள் சிரசிற் செறிந்து பொருந்தும்படி சூட்டி, ஏவல் போற்றி – பிதாவின் கட்டளையைப் பேணி, அன்னதூ மலர்த் தடத்திடை ஈட்டமோடு சென்று – அந்த பரிசுத்தமான மலர்களையுடைய மானத வாவியைக் கூட்டமாக அடைந்து, காட்டில் உள்ள கயமுனிக் கணங்கள் – காட்டிலுள்ள யானைக்கன்றின் கூட்டங்கள், அங்கண் உற்றென் இருந்து – அவ்விடத்தில் வந்து குழுமினாற்போலக் குழுமியிருந்து, இரும் தவம் புரிந்தனர் – பெரிய தவத்தைச் செய்தார்கள்.[பக்கம் 81]

வேறு

ஆன காலையில் அனைய மைந்தர்கள்
ஊன மின்றிநோற் றொழுக முன்னரே
போன நாரதன் புணர்ப்பொன் றோர்ந்திடா
மான தத்தட மருங்கில் எய்தினான். 31

ஆன காலையில் – அவ்வாறாய சமயத்தில், அனைய மைந்தர்கள் – அப்புதல்வர்கள், உனம் இன்றி நோற்று ஒழுக – குறைபாடு இன்றித் தவத்தை மேற்கொண்டிருக்க, முன்னர் போன நாரதன் – முன்னர் அவ்விடத்துகுச் சென்ற நாரத முனிவர், ஒன்று புணர்ப்பு ஓர்ந்திடா – ஓர் உபாயத்தைச் சிந்தித்துத்கொண்டு, மானதத் தடம் மருங்கில் – மானதத் தடாகக் கரைக்கண்,  எய்தினான் – பின்னருஞ் சென்றான்.

முன்னர் என்றதனால் பின்னர் வருவிக்கப்பட்டது.முன்னையவர்களிடஞ் சென்றவாறு பினையவர்களிடமுஞ் சென்றா ரென்க. [பக்கம் 81]

எய்தி யாவர்நீர் யாரும் மாதவஞ்
செய்திர் எப்பொருள் சேர்தல் வெஃகினீர்
நொய்தில் அன்னது நுவல வேண்டுமால்
கைத வம்பெறாக் கருத்தி னீரென. 32

எய்தி – தக்கன் புதல்வர்கள் தவஞ்செய்யும் இடத்தை அடைந்து, கை தவம் பெறாக் கருத்தினீர் – வஞ்சகம் இல்லாத மனத்தை யுடையர்களே, மாதவம் செய்திர் நீர் யாரும் யாவர் – பெரிய தவத்தைச் செய்வீராகிய  நீவிரெல்லாம் யாவிர்; எப்பொருள் சேர்தல் வெஃகினீர் – தவத்தால் எப்பொருளை அடைய விரும்பினீர்; நொய்தல் அன்னது நுவறல் வேண்டும் – விரைவில் உங்கள் கருத்தைச் சொல்லுதல் வேண்டும்; என என்று நாரத முனிவர் வினவ. [ப 82]

தந்தை யாகியோன் தக்கன் ஆங்கவற்
கந்தி வண்ணனார் அருளும் பேற்றினால்
வந்த மைந்தரேம் யாங்கண் மற்றவன்
இந்த வான்தடத் தெம்மை ஏவினான். 33

தக்கன் ஆகியோன் தந்தை – தக்கன் என்று சொல்லப்படுபவன் எங்கள் பிதா; ஆங்கு அவற்கு – அந்தத் தக்கனுக்கு, அந்தி வண்ணனார் அருளும் பேற்றினால் – அந்திவண்னரான சிவபெருமான் அருளிய வரத்தினால், வந்த மைந்தரேம் யாங்கள் – பிறந்த பிள்ளைகள் நாங்கள்; அவன் இந்த வான் தடத்து எம்மை ஏவினான் – பிதாவாகிய அத்தக்கன் இந்த உயர்ச்சி பொருந்திய தடாகத்துக்கு எங்களை அனுப்பினான். [ப 82]

தேவ தேவனைச் சிந்தை யிற்கொடே
ஆவி யோடுடல் அலச நோற்றிரீஇ
ஓவில் பல்லுயிர் உதவல் பெற்றிட
ஏவி னானெமை என்று சொற்றனர்.  34

தேவதேவனை சிந்தையில் இரீஇக்கொடு – மகாதேவராகிய சிவபெருமானை மனத்தில் இருத்திக்கொண்டு, ஆவியோடு உடல் அலச நோற்று – உயிரும் உடம்பும் வருந்தத் தவஞ்செய்து, ஓவு இல் பல் உயிர் உதவல் பெற்றிட – ஒழிதல் இல்லாத பலவாகிய உயிர்களைப் படைக்குந் தொழிலைப் பெறும் பொருட்டு, எமை ஏவினான் என்று சொற்றனர் – எங்களை அனுப்பினான் என்று சொன்னார்கள்

சொற்ற காலையில் துகளில் தூயவன்
நற்ற வஞ்செய்வீர் தாதன் தாளையே
பற்ற தாவுளீர் பயனென் றுன்னலீர்
குற்றம் யாவரே குறுக லார்களே.  35

சொற்ற காலையில் – தக்கன் புதல்வர்கள் இவ்வாறு கூறியபொழுது, துகள் இல் தூயவன் – குற்றமற்ற தூயோராகிய நாரதமுனிவர், நல் தவம் செய்வீர் – நனமையாகிய தவத்தைச் செய்பவர்களே, நாதன் தாளையே பற்றதா உளீர் – நீவீர் முதலவராகிய சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டுள்ளீர், பயன் என்று உன்னலீர் – அவ்வாறு  திருவடிகளைப் பற்றிக்கொண்டிருப்பதையே முக்கியப் பிரயோடனம் என்று கருதுகின்றிலீர்; குற்றம் குறுகலார்கள் யாவர் – இவ்வுலகில் இலக்கைத் தவறுதலாகிய குற்றத்தை அடையாதவர்கள் யாவர்?

யாவரும் குற்றத்தில் தவறி வீழ்கின்றார்கள் ஆதலின், சிறுவர்களாகிய நும்பாற் குற்றங்காணுவதிற் பயனின் றென்பதாம். [ப 83]

நோற்றி யாவையும் நோக்கிச் செய்வினைப்
பேற்றை எய்துவீர் பிறப்பு மாய்வது
மாற்று வீரலீர் மயக்கந் தீர்திரோ
ஏற்றம் என்கொல்நீர் ஈகின் றீரினும்.  36

நோற்று – தவஞ்செய்து, யாவையும் நோக்கி – எல்லா உயிர்களின் நிலையையும் பார்த்து, செய்வினைப் பேற்றை –        படைத்தற் றொழிலைச் செய்வதாகிய உத்தியோகத்தை, எய்துவீர் – எய்துதற்கு தவம் புரிபவர்களே, நீர் ஈகின்றீர் – தவத்தின் பயனாக நீவிர் படைக்கின்றீர் என்று வைத்துக்கொள்வோம், பிறப்பு மாய்வது மாற்றுவீர் – எடுத்துக்கொண்ட தொழில் விசேடத்தாற் பிறப் பிறப்பாகிய துன்பத்தை மாற்ற வல்லீரா? அலீர் – மாற்ற வல்லீர் அல்லீர்; மயக்கம் தீர்திரோ – அது நிற்க, போக்குதற்பாலதாய அஞ்ஞானமாகிய மயக்கத்தத்தைத் போக்கிக்கொள்வீரா? அதுவும் இயலாதே; இனும் ஏற்றம் என் கொல் – இவ்வாற்றால் இப்பொழுதைய நிலையினும் நீவிர் பெறும் படைப்புத் தொழிலாற் பெறும் உயர்ச்சி யாதோ?

அத்தொழிலால் அடையற்பாலனவாய ஏற்றம் இல்லையா மென்றவாறு. பிறப்பிறப்பை மாற்றுவதும் மயக்கந் தீர்வதுமே உணமையான ஏற்றம் என்க. மாற்றுவீர் வினாவாதல் உச்சரித்துக் காண்க. [ப 83]

மேய மாசுதோய் விழைவின் மெய்யினர்
தூய தோர்தடந் துறையை எய்தியுஞ்
சேய சேதகந் திளைத்தல் போலுமால்
நீயிர் கொண்டதோர் நிலைமை தானுமே.  37

மேய – முன்னமே பொருந்த்திய, மாசு தோய் – அழுக்கு மூடிய , விழைவு இல் மெய்யினர் – விரும்பத்தகாத உடலினை யுடையவர், தூயது ஓர் தடம் துறையில் எய்தியும் – பரிசுத்தமானதும் ஒப்பில்லாததுமாகிய பெரிய நீர்த் துறையை அடைந்தும், சேய சேதகம் திளைத்தல் – அண்மைக்கண்ணதாகிய நீரைப் பயன் செய்யாது சேய்மைக்கண்ணதாகிய சேற்றில் முழுகுதலும், நீயிர் கொண்டது ஓர் நிலையும் – நீவிர்கள் மேற்கொண்ட தொன்றாகிஅய் இந் நிலைமையும், போலும் – தம்முள் ஒக்கும்.

உடலினர் சேதகம் திளைத்தலும் நீஇர் படைப்பை மேற்கோடலும் ஒக்கும் என்றவாறு. சேயது ‘து’ கெட்டது. திளைத்தலும் என உம்மை வருவிக்க.[ப 83]

ஆல், ஓ, தான் அசை, சேய்மை என்றதனால் அண்மை வருவிக்கப்பட்டது. திருவடியைப் பற்றித் தவஞ்செய்தலாகிய நீர்நிலையில் நின்றுகொண்டு, படைப்பாகிய சேதத்தை விழைதல் எத்துணை பேதமை என்றதாம்.

தலைய தாகிய தவந்த னக்குநீர்
விலைய தாப்பெறும் விதியின் செய்கையும்
நிலைய தாகுமோ நீடு நாளொடே
உலக மீதுசீர் உறுவ தன்றியே. 38

தலையது ஆகிய தவம் தனக்கு – உயர்ச்சியுடையதாகிய தவத்துக்கு, நீர் விலையதா பெறும் விதியின் செய்கையும் – நீங்கள் விலையாகப் பெறுகின்ற சிருட்டித் தொழில் தானும், உலகம் நீடு நாளொடு சீர் உறுவது அன்றி – நிலையாத இவ்வுலகத்திலே நீண்டகாலம் சிறப்புற்று வாழ்வதற்கு உபகாரமாவ தன்றி, நிலையது ஆகுமோ – நிலையானது ஆகுமோ?

விலை, பயன் என்னும் பொருட்டு, நிலையாயது பெறுதற்குரிய தவத்துக்கு விலையாக நிலையற்றது பெறுமாறு என்னை என்றவாறு. [ப 84]

வேறு

போவதும் வருவதும் பொருமலும் நன்குமின்
றாவதோர் கதியதே ஆருயிர்க் குறுதியாம்
நீவிரக் கதியினை நினைகிலீர் இறுதியும்
ஓவரும் பிறவியும் உம்மைவிட் டகலுமோ.  39

போவதும் வருவதும் – இறப்பும் பிறப்பும், பொருமலும் நன்கும் – துன்பமும் இன்பமும் ஆகிய இரட்டைகள், இன்று ஆவது ஓர் கதியதே ஆர் உயிர்க்கு உறுதியாம் – இல்லையாய் உளதாவதொரு வீட்டு நெறியே அரிய உயிர்க்கு உறுதிபயப்பதாம்; அக்கதியினை நீவிர் நினைகிலீர் – அவ்வாறாகிய வீட்டு நெறியினை நீவிர் நினைக்கின்றிலீர்; உம்மை – வீட்டு நெறியை நினையாத உங்களை, இறுதியும் ஓவு அரும் பிறவியும் விட்டகலுமோ – இறப்பும் ஒழிதல் இல்லாத பிறப்பும் விட்டு நீங்குமோ நீங்காவே.

இறப்பு பிறப்பு நீங்காவாகவே துன்பமும் அதுபோன்ற நிலையற்ற இன்பும் அவ்வாறே நீங்காவாம் என்றவாறு. [ப 84]

சிறுவர்தம் முள்ளமுஞ் சேயிழை மகளிர்தம்
அறிவுமா லெய்தினோர் சிந்தையும் ஆனவால்
உறுவதோர் பனுவலும் உற்றிடும் பெற்றியே
பெறுவதாம் அன்றியே பின்னரொன் றாகுமோ.  40

சிறுவர்தம் உள்ளமும் – சிறுவர்களின் உள்ளத்தையும், சேயிழை மகளிர் தம் அறிவும் – செம்மையாகிய ஆபரணங்களை அணிந்த மகளிரின் அறிவையும், மால் எய்தினோர் சிந்தையும் – மயக்கம் எய்தினவர்களின் நிலைவையும், மான – போல , உறுவதோர்பனுவலும்  – நீவிர் தவஞ்செய்து படைப்புத் தொழிலைப் பெறுவதொருபுத்தியும், உற்றிடும் பெற்றியே பெறுவதாம் – இயல்பானே எய்தும் பெற்றியைப் பெறுவதேயாம்; பெறுவதாம் – இயல்பானே எய்தும் பெற்றியைப் பெறுவதேயாம்; அன்றி பின்னர் ஒன்று ஆகுமோ – அவ்வாறன்னி வேறோன்று ஆகுமோ ஆகாதே.

அடையத்தகும் பெற்றியைப் பெறுவதே ஆங்காரியம். அதுவே புத்தி பெற்றி, விதியே மதியாகும் பெற்றி [ப 85] 10-07-24:10:21pm

ஆதலால் உங்களுக் கருள்செயுந் தன்மையான்
தாதையா கின்றதோர் தக்கனே எனின்அவன்
பேதையாம் ஈசனால் பெருவளம் பெற்றவன்
பாததா மரையினில் பரிவுறா நெறிமையால்.  41

ஆதலால் – இவ்வாற்றால், உங்களுக்கு அருள் செயும் தன்மையான் – உங்களுக்குப் பனுவலை உபதேசிக்கும் பண்பினனாய தேசிகனும், தாதை ஆகின்றது ஒரு தக்கனே – தந்தை ஆகிய தவறுதலில் ஒப்பில்லாத தக்கனேயாவன்; அவன் எனின் – அத்தக்கனோ வென்றால், பேதையாம் – அறிவிலியாவன்; ஈசனால் பாத தாமரையினில் பரிவு உறா நெறிமையால் – ஆதலினாற்றானே சிவபெருமானிடம் அப்பெருமானின் பாதகமலங்களின் அன்பு பொருந்துறாத நெறியில், பெருவளம் பெற்றவன் – நிலையற்றா பெரிய வளங்களைக் கேட்டுப் பெற்றவன்.

ஆகின்றது தொழிற் பெயர். பேதையின் புத்தி கேட்கர்பாலதன்றாம். [ப 85]

ஆங்கவன் மையலோன் ஆதலால் அவனருள்
நீங்களும் அனையரே நெறிதருந் தேசிகன்
தீங்கெலாம் நீக்கியே சிவகதிப் பாற்பட
ஓங்குபேர் அருளொடும் உணர்த்துவான் அல்லனோ.  42

ஆங்கு அவன் – அத்தக்கன், மையலோன் ஆதலால் – மயக்க அறிவினன் ஆகையினாலே, அவன் அருள் நீங்களும் அனையரே – அம்மயக்கமுடையோன் பெற்ற நீவிரும் அம் மயக்முடையீர் ஆவிர்; நெறி தரும் தேசிகன் – ஞான நெறியைப் போதிக்குந் தேசிகராவார், தீங்கு எலாம் நீக்கி – புன்னெறியதனிற் செல்லும் போக்குக்கள் அனைத்தையும் விலக்கி, சிகதிப் பாற்பட – சிவகதியை பற்றும்பொருட்டு, ஓங்கு பேர் அருளொடு – மிகுகின்ற  பேரருளை முன்னிட்டுக்கொண்டு, உண்ர்த்துவான் அல்லனோ – உபதேசித்தருளுவார் அன்றோ

அல்லனோ தேற்றப் பொருட்டு.[ப 85]

முந்துமா யிரவரும் முன்பரிப் பொய்கைவாய்த்
தந்தைதன் பணியின்மூ தாதைபோல் நல்கவே
வந்துளார் நோற்றுழி மயலறத் தேற்றியே
அந்தமா நெறிநிறீஇ அரியவீ டருளினாம்.  43

முந்தும் – முன்னரும், முன்பர் ஆயிரவரும் – நும் தமையன்மார் ஆயிரவர்களும், தந்தைதன் பணியின் – தந்தையாகிய தக்கனின் கட்டளையால், மூதாதை போல் நல்க – தந்தையின் தந்தையாகிய பிரமதேவரைப்போலப் படைத்தற் றொழிலைச் செய்யும் பொருட்டு, இப் பொய்கைவாய் வந்துளார் – இப்பொய்கையினிடத்து வந்து தவஞ் செய்துகொண்டிருக்கும்போது, மயல் அறத் தேற்றி – அவர்களுடைய மயக்கம் ஒழியும்படி உபதேசஞ் செய்து, அந்தம் மா நெறி நிறீஇ – முடிந்த பெருநெறியாகிய முத்திநெறியில் அவர்களை நிறுத்தி, அரிய வீடு அருளினாம் –   பெறுதற்கரிய வீடுபேற்றைக் கொடுத்தோம். [ப 86]

என்னலும் நாரதன் எழில்மலர்த் தாளிணை
சென்னிமேற் சேர்த்தியே சிறியரேம் உய்யவே
உன்னியீண் டேகிநீர் உணர்த்துமெய்ந் நெறியினை
இன்னதென் றுணர்கிலேம் எமக்கருள் புரிதிரால்.  44

நாரதன் என்னலும் – நாரத மாமுனிவர் என்றிவ்வாறு கூறுதலும், எழில் மலர் தாள் இணை சென்னிமேல் சேர்த்தி – நாரத முனிவருடைய அழகிய மலர்போன்ற  இரண்டாகிய திருவடிகளைத்  தமது சிரமேற் கொண்டு, சிறியரேம் உய்ய – சிறியேங்களும் உய்யும் பொருட்டு, உன்னி ஈண்டு ஏகி – திருவுளம்கொண்டு ஈண்டு எழுந்தருளி, உணர்த்தும் மெய்ந்நெறியினை – எமக்கு உணர்த்துவதாகிய உண்மை நெறியை, இன்னது என்று உணர்கிலேம் –  இத்தகையது என்று அறியேம், நீர் எமக்கு அருள் புரிதிர் – தேவரீர் சிறியேங்களுக்கு உபதேசித்தருளுவீராக.

சிறியேமும் என உம்மை வருவிக்கப்பட்டது, நமர்களாகிய தமையன்மாரன்றி நாமும் என்றவாறு. [ப 86]

என்பவர்க் கருள்புரிந் தெண்ணிலார் வத்தொடு
நன்பொருட் காட்சியை நானுமக் குதவியே
வன்புலத் தாறுபோய் மதிமருண் டின்பமுந்
துன்புமுற் றுழல்பவந் தொலைவுசெய் திடுவனால்.  45

என்பவர்க்கு – என்றிவ்வாறு வேண்டுபவர்களாகிய தக்கன் புதல்வர்களுக்கு, எண் இல் ஆர்வத்தோடு அருள் புரிந்து – எல்லைகடந்த ஆராமையோடுங் கிருமை பாலித்து, நான் உமக்கு நன் பொருட்காட்சியை உதவி – நான் நுங்களுக்கு நன்மையாகிய மெய்ப்பொருட்காட்சியை வருவித்து, வன்புலத்து ஆறு போய் – வலிய ஐம்புல வழியிற் சென்று, மதி மருண்டு – புத்தி கலங்கி, இன்பமும் துன்பமும் உற்று – இன்பத் துன்பச் சுழலிற் பட்டு, உழல் பவம் – உழலுகின்ற பிறவித் துன்பத்தை,  தொலைவு                  செய்திடுவன் – ஒழித்தலைச் செய்து வைப்பேன். [ப 87]

ஆதியார் தாளிணை அருளொடே வழிபடும்
நீதியாம் நீரினார் நிலைமையாய் நின்றிடும்
பாதநான் கவர்பெறும் பதமுநான் கதனுளே
ஓதியார் பெறுவதோர் உயர்பெருங் கதியதே.  46

ஆதியார் தாள் இணை – ஆதியாகிய சிவபெருமானுடைய திருவடிகளை, அருளொடு வழிபடும் நீதிஆம் நீரினார் – அப்பெருமானி அருளால் வழி படுகின்ற நீதியாகிய இயல்பினையுடையவர்கள், நிலைமாயாய் நின்றிடும் பாதம் நான்கு – சாதித்து நிலையாய் நிற்கும் பாதங்கள் நான்காம், பெறும் பதமும் நான்கு – அச்சாதகத்தாற் பெறும் பதங்கள் நான்காம், அதனுள் – அந்நான்கனுள், ஓதியார் பெறுவது – ஞானபாத சாதகர்கள் பெறுவது, ஓர் உயர் பெருங் கதி – ஒப்பிலாத உயர்பெருங் கதியாகிய நான்காவதாம்.

அதுதான் சாயுச்சியம் எனப்படும் முத்தியாம்.

பாதம் நானகாவன சரியை, கிரியை யோகம் ஞானம். பதம் நான்காவன சாலோக சாமீப சாரூப சாயுச்சியமாம். பதம் நிலை, இந்திரன் முதலிய இறையவர் பதம் என்புழி பதன் வேறு; இது வேறு. பலம் என்றும் பாடம். பலம் பயன். அது, பகுதிப்பொருள் விகுதி.

முத்தியென் றிடுவதே மொழிவதோர் நாமமாம்
அத்திறங் கடவுளர்க் காயினுந் தெரிவதோ
நித்தன்அன் புறுவதோர் நெறியராய் இருவினை
ஒத்தபண் போர்களால் உணரலாம் அல்லதே.  47

மொழிவதோர் நாமம் – அவ் வுயர்பெருங் கதிக்குச் சொல்லப்படுவதொரு பெயர், முத்தி என்றிடுவதாம் – முத்தி என்பதாம்; அத்திறம் – அம் முத்தியின் இயல்பு, நித்தன் அன்பு உறுவது ஓர்  நெறியராய் – நித்தராகிய சிவபெருமான் மீது அன்பு மிகுவதொரு ஞான நெறியினராய், இருவினை ஒத்த பண்போர்களால் – இருவினை ஒப்பற்ற மலபரிபாகர்களால், உணர ஆம் அல்லது – ஒருவாறுணர்தல் கூடும் அல்லாமல், கடவுளர்க்கு ஆயினும் தெரிவதோ – தேவர்களுக்குத்தானுந் தெரிதற் கரியதாம். [ப 87]

அந்நிலைக் கண்ணுளார் ஆதியார் தாளடைந்
தின்னலுக் கிடையதாம் இப்பெரும் பிறவியுட்
பின்னருற் றிடுகிலர் பேசுதற் கரியதோர்
நன்னலத் தொடுகெழீஇ நாளுமின் புறுவரே.  48

அந்நிலை கண்ணுளார் – அந்த் ஞான சாதகர், ஆதியார் தாள் அடைந்து – சிவபெருமானுடைய திருவடிகளைத் தலைப்பட்டு, இன்னலுக்கு இடையது ஆம் இப்பெரும் பிறவியுள் –  துன்பத்துக்கிடமானதாகிய இந்தப் பெரிய பிறவிச்சுழியுள், பின்னர் உற்றிடுகிலர் – இனி வீழார்; பேசுதற்கு அரியது ஓர் நல் நலத்தொடு – வாக்குக்கெட்டாததும் ஒன்றாகியதும் ஆகிய சிவத்தோடு, கெழீஇ – இருமையின் ஒருமை எய்தி, நாளும் – கணந்தோறும், இன்பு உறுவர் – புணர்ந்தாற் புணருந்தொறும் புதிதாகிய இன்பத்தில் ஒருகாலைக் கொருகான் மிகுவர்.

பேசுதற்கரியது என்றனால் இனம்பற்றி மனத்துக்கெட்டாததுமாம். இரண்டாவதொரு பதி யின்மையின்   ஓர் என்றார், நன்னலம் சிவம். நாள் ஆகுபெயர். [ப 88]

ஆதலால் நீவிரும் அந்நெறிப் பாலுறீஇ
மேதைசால் யோகினால் வீடுசே ருதிரெனா
ஆதியாம் இறைவனூல் அறையுமுண் மைகளெலாம்
நாதனார் அருளினால் நாரத னுரைசெய்தான்.  49

ஆதலால் நீவிரும் அந்நெறிப்பால் உறீஇ – ஆதலினாலே நீங்களும் அந்த ஞானமார்க்கத்தில் நின்று, மேதை சால் யோகியால் – பேரறிவு மிக்க ஞான யோக         சாதத்தால், வீடு சேருதிர் எனா – முத்தி யடையக் கடவீர்கள் என்று, ஆதியாம் இறைவன் நூல் அறையும் உண்மைகள் எல்லாம் – முதல்வராகிய சிவபெருமான் அருளிய முதனூலகாகிய வேதாகமங்கள் முழங்கும் உண்மைகள் அனைத்தையும், நாதனார் அருளினால் –  சிவபெருமானுடைய     திருவருளினாலே, நாரதன் உரை செய்தான் – நாரத மாகாமுனிவர் உபதேசித்தார். [ப 88]

அன்றுநா ரதமுனி அவரெலாம் அவ்வழி
நின்றிடும் படிநிறீஇ நெறிகொள்வா னுலகமேல்
சென்றனன் பின்னரச் சிறுவரா யிரவரும்
ஒன்றுசிந் தனையினால் உயர்தவத் தொழுகினார். 50

நாரத முனி – நாரத மாகாமுனிவர், அவர் எலாம் – தமது உபதேசத்தைக் கேட்ட அவர்கள் எல்லாம், அன்று அவ்வழி நின்றிடும்படி நிறீஇ – அபபொழுதே அந்த ஞானநெறியில் நிற்கும்படி நிறுத்தி, வான் நெறிகொள் மேல் உலகம் சென்றனன் – ஆகாய வழியைக் கொண்ட மேல் உலகத்துக்குச் சென்றார்; பின்னர் – அதன்மேல், அச்சிறுவர் ஆயரவரும் – ஆயிரம் சிறுவர்களும், ஒன்று சிந்தையினால் – ஓருமையுறுகின்ற நினைவோடு, உயர் தவத்து ஒழுகினார் – உயர்ந்த தவநிலையில் நின்றார்கள்.

உயர்தவக் கிழமையில் ஒழுகியே யுற்றுளோர்
மயல்தொலைத் தருள்சிவன் மன்னுபே ரருளினால்
வியனெறிப் பாலதாம் வீடுபே றெய்தினார்
அயன்மகற் கினிமைகூர் ஆயிரங் குமரரும். 51

அயன் மகற்கு இனிமை கூர் ஆயிரம் குமரரும் – பிரமபுத்திரனான தக்கனுக்கு மிக்க இனிமை செய்வோரான ஆயிரம் புதல்வர்களும், உயர் தவக்கிழமையில் ஒழுகி – உயர்ந்த தவ சம்பந்தம் உற்று அதில் ஒழுகி, உற்றுளோர் மயல் தொலைந்து அருள் சிவன் மன்னு பேர் அருளினால் – தம்மை அடைந்தவர்களின் மயக்கத்தைப் போக்க்கி அருள் புரிகின்ற சிவபெருமானுடைய நிலை பெற்ற பெரிய திருவருளினால், வியன் நெறிப் பாலதாம் வீடு பேறு எய்தினார் – உயர் நெறிப்பாலதாகிய வீடுபேற்றை எய்தினார்கள். [பக்கம் 89]

உங்ஙனம் நாரதன் ஓதிய துணர்வுறா
இங்ஙனம் வீடுபே றெய்தலுஞ் சிறுவர்கள்
எங்ஙனம் போயினார் இன்னும்வந் திலரெனா
அங்ஙனஞ் சிறுவிதி அயருவான் ஆயினான். 52

உங்கனம் – மேற்கூறிய பிரகாரம், நாரதன் ஓதியது உண்ர்வு உறா – நாரதமுனிவர் உபதேசித்த முத்தி மார்கத்தை உணர்ந்து, சிறுவர்கள் இங்கனம் வீடு பேறு எயதலும் – புதல்வர்கள் ஆயிரவரும் இவ்வாறு முத்திப் பெரும் பேறு எய்தினார் ஆக, சிற்வர்கள் இன்னும் வந்திலர் – தவஞ்செய்யச் சென்ற புதல்வர்கள் இன்னமும் வந்தாரில்லை, எங்கனம் போயினார் எனா – இவர்களும் எவ்வாறாயினரோ என்று, அங்கனம் – அவ்வாற்றால், சிறுவிதி அயருவான் ஆயினான் – தந்தையாகிய தக்கன் அயர்ச்சி உறுவான் ஆயினான்.
சிறுவர்கள் பின்னுங் கூட்டப்பட்டது. [பக்கம் 89]

வேறு

போதத் துணர்வால் அவர்க்கண் ணுறும் போழ்து தன்னின்
மேதக்க மைந்தர் தமைநாரதன் மேவி மேலாம்
ஓதித் திறமுள்ளன கூற உணர்ந்து நோற்றுத்
தீதற்று வீடு புகுதன்மை தெரிந்த தன்றே. 53

போதத்து உணர்வால் – ஞான திருஷ்டியினால், அவர்க் கண்ணுறும் போழ்து தன்னில் – அப்புதல்வர்களை நோக்கியபோது, மேதக்க மைந்தர் தமை – மேன்மை வாய்ந்த புதல்வர்களை, நாரதன் மேவி – நாரத முனிவர் அடைந்து, மேலாம் ஓதி திறம் உள்ளன கூற – மேலாகிய ஞானத் திறங்களாய் உள்ளனவற்றை உபதேசிக்க, உணர்ந்து நோற்று – அவைகளை உணர்ந்து அவ்வழியில் தவம்செய்து, தீது அற்று – தீமைகள் நீங்கி, வீடு புகு தன்மை தெரிந்தது – முத்தியடைந்த விதம் புலப்பட்டது.

தெரிகின்ற வேலைக் கிளர்கின்றது சீற்றம் உள்ளம்
பரிகின்ற தாவி பதைக்கின்றது பையுள் மாலை
விரிகின்ற தம்மா வியர்க்கின்றது மேனி விண்ணின். 54

தெரிகின்ற வேலை – தக்கன் ஞான திருட்டியால் நடந்தவவைகளை அறிந்த போது, சீற்றம் கிளர்கின்றது – கோபம் மேன்மேற் கிளர்ந்து, உள்ளம் பரிகின்றது – மனம் வருந்தியது, ஆவி பதைக்கின்றது – உயிர் பதைபதைத்தது, பையுள் மாலை விரிகின்றது – துன்பவரிசை விரிந்தது, மேனி வியர்க்கின்றது – உடல் வியர்த்தது, கோல் வின் இன்று இரிகின்றது – கோள்கள் ஆகாயத்தில் இலாமல் ஓடின, ஞாலம் எல்லாம் இரங்குற்றது – உலகம் முழுவதும் புலம்பிதத்து.

தக்கன்பால் நிகழ்ந்தவை, அப்பொழுதைய நிலையைப் புலப்படுத்து முகத்தால் நிகழ்ந்தகாலத்து வைத்துரைக்கப்பட்டன.

தன்பா லகர்தஞ் செயல்கண்டு தளர்ந்து சோரும்
வன்பா லினனா கியதக்கன் வரத்தை வேண்டும்
என்பாலர் என்பால் இலதாக்கினன் எண்ண மிக்கு
நன்பா லுலகத்து ழல்வானினி நாளு மென்றான். 55

தன் பாலகர் செயல் கண்டு – தன் புதல்வர்கள் நாரதமுனிவர் சொற்கேட்டுச் செய்த செய்கையை நோக்கி, தளர்ந்து சோரும் – தளர்ந்து சோருகின்ற, வன் பாலினன் ஆகிய தக்கன் – வன்கண்மையனாகிய தக்கன், வரத்தை வேண்டும் என்பாலர் – படைத்தற் றொழிலுக்குரிய வரத்தை விரும்பும் என் புதல்வர்களை, என்பால் இலது – என் சார்பின்வழி நிற்றல் இல்லாமல், ஆக்கினன் – மனமாற்றஞ் செய்தவன் எவனோ அவன், எண்ணம் மிக்கு – எண்ணங்கள் அதிகரித்து, நன்பால் உலகத்து – நன்மைப் பகுதியை உடைய இவ்வுலகத்தில், இனி நாளும் உழலவான் என்றான் – இனி நாடோறும் உழன்று திரியக்கடவன் என்று சாபமிட்டான்.
இவ்வுலகம் அமைதி கைகூடுதற்குரிய நன்பால் உலகம். இப்படிப்பட்ட உலகத்திலே எண்ணிறந்த எண்ணங்களைச் சுமந்துகொண்டு நாரதன் திர்வானாக என்றவாறு.

மேனா ரதன்செய் புணர்ப்புன்னி வெகுண்டு தக்கன்
நோனாது சாபம் நுவன்றே நனிநோற்க மைந்தர்
ஆனாரை நல்கேன் மகப்பெற்ற தமையு மென்னா
மானார் தமையே புரியத்தன் மனம்வ லித்தான். 56

தக்கன் நாரதன் செய் புணர்ப்பு உன்னி – தக்கன் நாரத முனிவர் செய்ய்த சூழ்ச்சியை நினைந்து, நோனாது – பொருமை இழந்து, வெகுண்டு – கோபித்து, சாபம் நுவன்று – சாபமொழி கர்ந்து, மேல் – அதன்மேல், நோற்க – படைப்புப் தொழிலைப் பெறத் தவஞ்செய்யும் பொருட்டு, மைந்தர் ஆனாரை நனி நல்கேன் – புதல்வர்க ளாயினாரை ஆயிரக்கணக்கிற் பெறுதலைச் செய்யேன்; மகப் பெற்றது அமையும் – ஆண்மக்களைப் பெற்றது போதும்; என்னா – என்று கருதி, மானார் தமையே புரிய – மான்போன்ற பெண்மகளையே இனிப் பெறுதற்கு, மனம் வலித்தான் – மனத்தில் நினைத்தான்.

வேறு

இருபதின் மேலும் மூவர் ஏந்திழை மாரை நல்கிப்
பெருமை கொள்தக்கன் தன்மன் பிருகுவே மரீசி யென்போன்
கருணை கொள்பு லத்தியன் அங்கிராப் புலகன் வசிட்டன்
திரிவில் அத்திரி தீவேள்வி சீர்ப்பி தராவுக் கீந்தான்.57

பெருமை கொள் தக்கன் – பெருமை படைத்தோனான தக்கம், இருபதின் மேலும் மூவர் ஏந்திழைமாரை நல்லி – இருபத்துமூவர் பெண்பிள்ளைகளைப் பெற்று, தன்மன் பிருகு மரீசி என்போன் – தருமன் பிருகு மரீசி என்று சொல்லப்படுபவன், கருணைகொள் புலத்தியன் – இரகமுடைய புலத்தியன், அங்கிரா புலகன் வசிட்டன்-, திரிவு இல் அத்திரி – கெடுதலில்லாத அத்திரி, தீ – அக்கினி, வேள்வி – கிரது, சீர்ப்பிதராவுக்கு – சிறப்பு பொருந்திய பிதரா ஆகிய பதினொருவருக்கு, ஈந்தான் – மணஞ்செய்து கொடுத்தான்.
தன்மன் – தருமன் எனப் பெரிய முனிவன். கேள்வியின் பரியாய நாமங் கிரது ஆதலால் கிரதுவை வேள்வி எனக் கூறினார். [பக்கம் 91]

துய்யதோர் சுபுத்தி புத்தி சுரசையே திருதி துட்டை
செய்யநற் கிரியை கீர்த்தி சிரத்தையோ டிலச்சை மேதா
மைவிழிக் கத்தி சாந்தை வபுவைமுன் தருமன் வேட்டுப்
பொய்தவிர் இருபா னேழு புதல்வரை அளித்தான் மன்னோ. 58

துய்யதோர் கபுத்தி -தூய்மையுடைய ஒப்பில்லாத கபுத்தி, புத்தி சுரசை திருதி துட்டை -, செய்ய நல் கிரியை- செவ்விய நல்ல கிரியை, கீர்த்தி சிரத்தை இலச்சை மேதா-, மைவிழிக் கத்தி – கரிய விழியினளாகிய கத்தி, சாந்தை வபுவை – சாந்தை வபு ஆகிய பதின்மூவரை, முன் தருமன் வேட்டு – முதற்கண் தருமன் மணந்து, பொய் தவிர் இருபான் ஏழு புதல்வரை அளித்தான் – சத்திய சந்தரான இருபத்தேழு புதல்வர்களைப் பெற்றான்.

கேதமில் பிருகு என்பான் கியாதியைக் கொண்டு புல்லி
ஏதமில் விதாதாத் தாதா என்றிரு சிறாரை ஈன்று
சீதள வனசங் கொண்ட செந்திரு வையுமுன் தந்து
மாதவன் தனக்கு நல்கி மாதவத் திருந்தான் மாதோ. 59

கேதம் இல் பிருகு என்பான் கியாதியைக் கொண்டு புல்லி – குற்றமற்ற பிருகு என்பவன் கியாதியை மணந்து கலந்து, சீதள வசனங் கொண்ட செந்திருவை முன் தந்து – குளிர்ச்சி பொருந்திய தாமரை இடமாகக் கொண்ட திருமகளை முதற்கட் பெற்று, மாதவன் தனக்கு நல்கி – திருமாலுக்கு மணம்செய்து கொடுத்து, ஏதம் இல் விதாதா தாதா என்று இரு சிறாரையும் ஈன்று – பின் துன்பம் இல்லாத விதாதா தாதா என்று சொல்லப்படுகின்ற இரு புதல்வர்களையும் பெற்று, மாதவத்து இருந்தான் – சிறந்த தவத்திலிருந்தான்.
முன் என்பதனால் பின் என்பது வருகிக்கப்பட்டது. திருவையும் என்புழி உம்மை சிறாருடன் கூட்டப்பட்டது. [பக்கம் 9

தாரணி புகழ்ம ரீசி சம்பூதி தன்னை வேட்டாங்
கீரிரு பிணாக்கள் ஈந்தான் இவர்வழிப் பிறந்தார் பல்லோர்
போரியல் புலத்தை வென்ற புலத்திய முனிவன் என்பான்
நாரிசன் னதியை வேட்டு நன்மகார் பலரைத் தந்தான். 60

தாரணி புகழ் மரீசி சம்பூதி தன்னை வேட்டு – உலகம் புகழும் மரீசி சம்பூதியை மணந்து, ஈர் இரு பிணாக்கள் ஈந்தான் – நான்கு பெண்களைப் பெற்றான்; இவர்வழிப் பல்லோர் பிறந்தார் – இந் நால்வர் வழியிற் பலர் பிற்ந்தனர்; போர் இயல் புலத்தை வென்ற புலத்திய முனிவ னென்பான் – போரிடுகின்ற ஐம்புலன்களை வென்ற புலத்திய முனிவர், நாரி சன்னதியை வேட்டு – நாரி சன்னதியை மணந்து, நன் மகார் பலரைத் தந்தான் – நன் மக்கள் பலரைப் பெற்றான்.
நாரி சன்னதி – சன்னதியான பெண் [பக்கம் 92]

அங்கிரா மிருதி என்னும் ஆயிழை தனைம ணந்து
பங்கமில் அங்கி தீரன் பரதனாம் மகாரைப் பெற்று
மங்கையர் நால்வர் தம்மை மகிழ்ந்துடன் அளித்தான் அன்னார்
தங்குடிப் பிறந்த மேலைத் தவத்தரும் அளப்பி லோரால். 61

அங்கிரா மிருதி என்னும் ஆயிழை தனை மணந்து – அங்கிரா மிருதி என்னும் பெண்ணை மணந்து, பங்கம் இல் அங்கிதீரன் பரதனாம் மகாரைப் பெற்று – குற்றமற்ற அங்கிதீரன் பரதன் ஆகிய புதல்வர்களைப் பெற்று, மங்கையர் நால்வர் தம்மை மகிழ்ந்து உடன் அளித்தான் – நான்கு பெண் பிள்ளைகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றான்; அன்னார் தம்குடிபிறந்த மேலைத் தவத்தரும் அளப்பிலர் – அவர்கள் குடியிற் பிறந்த உயர்ந்த தவமுடையாரும் அநேகர். [பக்கம் 92]

பெருமைகொள் புலகன் என்போன் பிருதியைக் கொண்டு தத்தாத்
திரிதனைப் பயந்தான் அன்னோன் சீர்வழிக் கும்பன் போந்தான்
ஒருமைசேர் வசிட்டன் என்போன் ஊற்சையை மணஞ்செய் தாங்கோர்
தெரிவையை நல்கி மைந்தர் எழுவரைச் சிறப்பில் தந்தான். 62

பெருமை கொள் புலகன் என்போன் பிருதியைக் கொண்டு – பெருமை பொருந்திய புலகன் பிருதியை மணந்து, தத்தாத்திரிதனைப் பயந்தான் – தத்தாத்திரி என்னும் புதல்வனைப் பெற்றான்; அன்னோன் சீர் வழிக் கும்பன் போந்தான் – அத் தத்தாத்திரியின் சிறப்புப் பொருந்திய வழியிற் கும்மன் போந்தான் – அத் தத்தாத்திரியன் சிறப்புப் பொருந்திய வழியிற் கும்பன் என்பான் பிறந்தான்; ஒருமை சேர் வசிட்டன் என்போன் – ஒருமை வாய்ந்த வசிட்டன், ஊற்சையை மணம் செய்து, ஒர் தெரிவையை நல்லி – ஒரு புத்திரியைப் பெற்று, மைந்தர் எழுவரைச் சிறப்பில் தந்தான் – ஏழு புதல்வர்களையும் சிறப்போடு பெற்றான்.
கும்பன் அகஸ்தியர், ஒருமை – மன ஒருமை [பக்கம் 93]

அத்திரி என்னு மேலோன் அனசூயை தன்னை வேட்டுச்
சத்தி நேத்திரனே திங்கள் சனிசங்க தானன் என்னும்
புத்திரர் தம்மைத் தந்தான் பொங்குதீச் சுவாவை வேட்டு
மெய்த்திறல் படைத்த மைந்தர் மூவரை விரைவொ டீந்தான். 63

அத்திரி என்னும் மேலோன் அனசூசை தன்னை வேட்டு – அத்தரி என்னும் உயர்ந்தோன் அனசூசையை மணந்து, ச்த்திநேத்திரன் திங்கள் சனி சங்கதானன் என்னும் புத்திரர் தம்மைத் தந்தான் – சத்திநேத்திரன் சந்திரன் சனி சங்கநானன் என்னும் புத்திரர்களைப் பெற்றான், பொங்கு தீ சுவாவை வேட்டு – பொங்குகின்ற அக்கினி சுவா என்பவளை மணந்து, மெய்த்திறல் படைத்த மைந்தர் மூவரை விரைவோடு ஈந்தான் – சரீரவன்மை வாய்ந்த மூவ்ர் மைந்தரை விரைந்து பெற்றான்.
சுவா – சுவாகாதேவி [பக்கம் 93]

கவிபுகழ் கிரது வானோன் கமைதனை மணத்திற் கூடி
உவகையின் மூன்று பாலர் உதவினன் பிதரா என்போன்
சுவதையென் றிசைக்க நின்ற துடியிடை தன்னை வேட்டுத்
தவலருஞ் சிறப்பின் மேனை தரணிமங் கையரைத் தந்தான். 64

கவி புகழ் கிரது ஆனோன் கமை தனை மணத்திற் கூடி – கவிந்த புகழினையுடைய கிரது என்பான் கமை என்பாளை மணஞ்செய்து கூடி, உவகையின் மூன்று பாலர் உதவினன் – உவகையோடு மூவர் புதல்வர்களைப் பெற்றான்; பிதரா என்போன் சுவதை என்று இசைக்க நின்ற துடி இடை தன்னை வேட்டு – பிதரா என்பவன் சுவதை என்று சொல்லப்பட்டு இளையாளாய் நின்ற துடிபோன்ற இடையினை யுடையாளை மணந்து, தவல் அரும் சிறப்பின் மேனை தரணி மங்கையரைத் தந்தான் – கேடில்லா சிறப்பினையுடைய மேனை பூமி என்னும் புதல்வியர்களைப் பெற்றான்.
கவி – வெள்ளி, வெள்ளியாற் புகழப்படும் கிரது எனினுமாம். [பக்கம் 94]

அந்தநன் மேனை தன்னை ஆர்வமோ டிமவான் கொண்டான்
முந்துறு தரணி தன்னை முறையினால் மேரு வேட்டு
மந்தர கிரியை நல்க மற்றது நோற்று முக்கண்
எந்தைதன் னிடத்தெஞ் ஞான்றும் இருந்திடப் பெற்ற தன்றே. 65

அந்த நல் மேனை தன்னை – அந்த நலல் மேனை என்பவளை, இமவான் ஆர்வமொடு கொண்டான் – இமயமலையரசன் விருப்பத்தோடு மணந்தான்; முந்து உறு தரணி தன்னை – முதன்மை மிக்க பூமியை, மேரு முறையினால் வேட்டு – மேருமலை முறைப்படி மணஞ்செய்து, மந்தர கிரியை நல்க – மந்தர கிரியைப் பெற்றதாக , அது – அம் மந்தரகிரி, நோற்று – தவஞ்செய்து, முக்கண் எந்தை தன்னிடத்து எஞ்ஞான்றும் இருந்திடப் பெற்றது – முக்கண்ணராகிய சிவபெருமான் தன்னிடத்தில் எந்நாளும் எழுந்தருளியிருக்கப்பெற்றது. [பக்கம் 94]

விண்ணுயர் மேருப் பின்னர் வேலையென் பவளை நல்கித்
தண்ணுறு கடற்கு நல்கச் சரவணி என்ன ஆங்கோர்
பெண்ணினை அனையன் பெற்றுப் பெரும்புகழ்ப் பிராசி னப்பேர்
அண்ணலுக் குதவ அன்னான் ஐயிரு மகாரைத் தந்தான். 66

விண் உயர் மேரு பின்னர் வேலை என்பவளை நல்கி – ஆகாய மளாவிய மேரு அதன்மேல் வேலை என்பவளைப் பெற்று, தன் உறு கடற்கு நல்க – தண்மை மிக்க வருணனுக்கு மணம்செய்து கொடுக்க, அனையன் சரவணி என்ன ஆங்கு ஓர் பெண்ணைப் பெற்று – அவன் சரவனி என்னும் ஒரு பெண்ணைப் பெற்று, பெரும் புகழ் பிராசினப்பேர் அண்ணலுக்கு உதவ – பெரும் புகழினையும் பிராசினன் என்னும் பெயரினையுமுடைய பெருமையிற் சிறந்த முனிவனுக்கு மணஞ்செய்து கொடுக்க, அன்னான் ஐயிரு மகாரைத் தந்தான் – அந்தப் பிராசின முனிவம் பத்துப் புதல்வர்களைப் பெற்றான்.
கடல், கடற்கரசனான வருணன்
தக்கன் மகப்பெறு படலம் முற்றிற்று. [பக்கம் 94]
ஆகத் திருவிருந்தம் 128 [ஆனி திருமஞ்சன நாளில்  முடிந்தது 11-07-24]

தட்சகாண்டம்