தந்தை யிவ்வகை யுரைத்தலுங் கேட்டுணர் தக்கன்
முந்து வீடுசேர் நெறியினை முன்னலன் முக்க
ணெந்தை யாலன் முதல்வர் தம்மினும் யானேற்
றந்த மில்வளம் பெறுவனென் றுன்னின னகத்துள். 1
தந்தை இவ்வகை உரைத்தலும் – பிதாவான பிரமதேவர் இவ்வாறு கூற, கேட்டு உணர் தக்கன் – அவைகளைக் கேட்டுணர்ந்த தக்கன், முந்து வீடு சேர் நெறியினை முன்னலன் – முதன்மையான வீட்டினை அடையும் நெறியை நினைத்தானல்லன்; அயன் முதல்வர் தம்மினும் யான் நோற்று – பிரமதேவர் முதலியவர்களிலும் பார்க்க யான் கூடிய தவஞ்செய்து, முக்கன் எந்தையால் – மூன்று கண்களையுடைய சிவபெமானிடம், அந்தமில் வளம் பெறுவன் என்று அகத்துள் உன்னினன் – முடிவில்லாத வளங்களைப் பெறுவேன் என்று மனத்துள் நினைத்தான்.
ஏத வல்வினை யுழந்திடு மூழினா லிதனைக்
காத லோடுனி தந்தையை வணங்கிநீ கழறு
மாதி தன்னையான் பரமென வறிந்தன னவன்பால்
மாத வத்தினாற் பெற்றிட வேண்டினன் வளனே. 2
வல்வினை ஏதம் உழந்திடும் ஊழினால் – வல்வினையால் வரும் துன்பத்தை உழத்தற்குரிய ஊளினால், இத்னை காதலோடு உனி – வளம் பெறுதலாகிய இதனை மிக்க விரும்பத்தோடு நினைத்து, தந்தையை வணங்கி – பிதாவை வணங்கி, நீ கழறும் ஆதி தன்னை பரம் என யான் ஆறிந்தனன் – நீ உரைக்கின்ற ஆதியான சிவபெருமானைப் பரம்பொருள் என்று யான் அறிந்துகொண்டேன்; அவன்பால் வளன் மாதவத்தினால் பெற்றிட வேண்டினன் – அப் பரம்பொருளிடத்தில் வளங்களை மாக தவஞ் செய்து பெறுதற்கு விரும்பினேன்.
கணிப்பின் மாதவம் புரிதர வோரிடங் கடிதிற்
பணித்து நல்குதி விடையென நான்முகப் பகவ
னிணைப்பி லாதவன் மனத்திடைத் தொல்லைநா ளெழுந்த
மணிப்பெ ருந்தடத் தேகென விடுத்தனன் மன்னோ. 3
கணிப்பு இல் மாதவம் புரிதர – அளவற்ற பெரிய தவத்தைச் செய்வதற்கு, ஓர் இடம் கடித்ல் பணித்து – உரியதோர் இடத்தை விரைவில் கட்டளை செய்து, விடை நல்குதி என – விடையளிபாயாக என்று தக்கன் கேட்க, நான்முகப் பகவன் – நான்கு முகங்களையுடைய பிரமதேவர், தொல்லைநாள் இணைப்பு இலாத தன் மனத்திடை எழுந்து – முன்னொரு காலத்திலே ஒப்பிலாத தனது மனத்தின்கண் உண்டான, மணிப் பெருந் தடத்து ஏக என விடுத்தான் – அழகிய பெரிய மானச வாவிக்கு செல்லுக என்று விடைகொடுத் தனுப்பினார்.
ஈச னல்லரு ளன்னதோர் மானத மென்னும்
வாச நீர்த்தடம் போகியோர் சாரிடை வைகி
வீசு கான்மழை யாதபம் பனிபட மெலியாப்
பாச நீக்குந ராமென வருதவம் பயின்றான். 4
ஈசன் நல் அருள் அன்னது ஓர் மானதம் என்னும் வாச நீர்த்தடம் போகி – சிவபெருமானுடைய நல்ல அருளை ஒத்தும் ஒப்பற்றதுமான மானசம் என்னும் பெயரினையுடைய வாசனை பொருந்திய நீர் நிறைந்த வாவியை அடைந்து, ஓர் சாரிடை வைகி -அதன் ஒரு புறத்திலிருந்து, வீசு கால் மழை ஆதபம் பனிபட மெலியா – வீசுகின்ற காற்று மழை வெயில் பனி என்றிவைகள் தன்மீது படுதலால் மெலிந்து, பாசம் நீக்குநர் ஆம் என – பாசமாகிய மலத்தை ஒழிப்பவரை ஒப்ப, அருந்தவம் பயின்றான் – அரிய் தவத்தைச் செய்தான்.
காலை நேர்பெற வோட்டியே கனலினை மூட்டிப்
பால மார்பயன் வீட்டியே தன்னுறு படிவத்
தேனு மன்பினின் மஞ்சன மாட்டியே யிறைக்குச்
சீல மாமலர் சூட்டியுட் பூசனை செய்தான். 5
காலை நேர்பெற ஓட்டி – பிராண வாயுவை நேராக ஓடச்செய்து, கனலினை மூட்டி – மூலாக்கினயை எழுப்பி, பாலம் ஆர் பயன் வீட்டி – நெற்றிக்கட் பொருந்திய அமிர்தத்தினை உருக்கி, தன் ஊறு படிவத்து ஏலும் அன் பினின் மஞ்சனம் ஆட்டி – தனது பரிசுத்தம் மிக்க வடிவத்திற்கு சுரக்கின்ற அன்பாகிய தீர்த்ததினால் அபிடேகஞ் செய்து, சீல மா மலர் சூட்டி – கொல்லாமை முதலிய சீலங்களாகிய பெருமை பொருந்திய மலர்களைச் சூட்டி, உட்பூசனை – மனத்தாற் செய்யும் உட்பூசனையை, இறைக்குச் செய்தான் – சிவபெருமானுக்குச் செய்தான்.
பாலம்-நெற்றி, பயன் – பயம்; அமிர்தம், வீட்டுதல் உருக்குதல் என்னும் பொருட்டு சீலம் ஒழுக்கம்.
உட்பூசனைக்குரிய சீலமாமலர்: கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எட்டுமாம்.
சுத்தம் நீடிய தன்னுள மொருமையிற் றொடர
வித்தி றத்தினா லெம்பிராற் கருச்சனை யியற்றிச்
சித்த மேலவ னாமமும் விதிமுறை செப்பிப்
பத்து நூறியாண் டருந்தவ புரிந்தனன் பழையோன். 6
பழையோன் – பழையோனாகிய தக்கன், சுத்தம் நீடிய தன் உளம் ஒருமையின் தொடர – தூய்மை மிக்க தன் உள்ளம் ஒரு நெறிப்படர, இத்திறத்தினால் எம்பிராற்கு அருச்சனை இயற்றி – மேற்கூறிய பிரகாரம் எம்பெருமானுக்கு அருச்சனை செய்து, சித்தம் மேல் அவன் நாமமும் விதிமுறை செப்பி – உள்ளத்தின்கண் சிவபெருமானின் திருநாமத்தையும் விதிப்படி உச்சரித்து, பத்து நூறு யாண்டு அருந்தவம் புரிந்தனன் – ஆயிரம் வருட அரிய தவத்தைச் செய்தான். பக்கம் 60
அன்ன மூர்திசே யன்னமா தவஞ்செயு மதனை
முன்னி நல்வள னுதவுவான் மூரிவெள் ளேற்றிற்
பொன்னின் மால்வரை வெள்ளியங் கிரிமிசைப் போந்தா
லென்ன வந்தன னுமையுட னெம்மையா ளிறைவன்.7
அன்னம் ஊரித் சேய் அன்ன மாதவம் செயும் அதனை – அன்ன வாகனரான பிரமதேவரின் புதல்வனாகிய தக்கன் அத்தன்மையான பெரிய தவத்தைச் செய்கின்ற அதனை, எம்மை ஆள் இறைவன் முன்னி – எம்மை ஆளுகின்ற சிவபெருமான் திருவுளங்கொண்டு, நல் வள்ன் உதவுவான் – அவனுக்கு நல்ல வளங்களை நல்கும்பொருட்டு, பொன்னின் மால்வரை – பொன்னாகிய பெரியமலை, அம் வெள்ளிக் கிரிமிசைப் போந்தா லென்ன – அழகிய வெள்ளிமலைமீது இவர்ந்து வந்தாற் போல, மூரி வெள் ஏற்றில் – வலிய வெள்ளிய இடபத்தின்மீது, உமையுடன் வந்தான் – உமாதேவியாருடன் எழுந்தருளினார்.
வந்த செய்கையைத் தெரிதலும் விரைந்தெழீஇ மற்றென்
சிந்தை எண்ணமும் முடிந்தன வால்எனச் செப்பி
உந்து காதலுங் களிப்புமுள் புக்குநின் றுலவ
எந்தை தன்னடி பரவுவல் யானென எதிர்ந்தான். 8
வந்த செய்கையைத் தெரிதலும் விரைந்து ஏழீஇ – சிவபெருமான் எழுந்தருளிய தன்மையை அறிந்தவுடன் விரைந்து எழுந்து, என் சிந்தை எண்ணமும் முடிந்தன எனச் செப்பி – என் எண்ணங்கள் அனைத்தும் நிறைவெய்தின எனக் கூறி, உந்து காதலும் – பிடர்பிடித்துத் தள்ளுகின்றா ஆசையும், களிப்பும் – ஆசை தித்திப்பதா லுண்டாகுஞ் செருக்கும், உள்புக்கு நின்று உலவ – உள்ளத்தினுள்ளே புகுந்து நிலைத்து நின்று உலாவ, எந்தைதன் அடி யான் பரவுதல் என எதிர்ந்தான் -எம்பெருமானின் திருவடிகளை யான் துதுப்பேன் என்று எதிர்சென்றான்.
மற்று, ஆல் அசை.
சென்று கண்ணுதல் அடிமுறை வணங்கியே சிறப்பித்
தொன்று போலிய ஆயிரந் துதிமுறை யுரையா
நின்ற காலையில் உன்செயல் மகிழ்ந்தனம் நினக்கென்
இன்று வேண்டிய தியம்புதி யால்கடி தெனலும். 9
சென்று – எதிரே சென்று, கண்ணுதல் அடிமுறை வணங்கிச் சிறப்பித்து – நெற்றிக்கண்ணரான சிவபெருமானின் திருவடிகளை முறையாக வணங்கிப் புகழ்ந்து, ஒன்று போலிய துதி ஆயிரம் முறை உரையா – ஒன்றை ஒன்று ஒத்த பலவேறு தோத்திரங்களை ஆயிரம் முறை உரைத்து, நின்ற காலையில் – நின்ற சமயத்தில், உன் செயல் மகிழ்ந்தனம் – தக்கனே உன் செயலுக்கு மகிழ்ந்தோம், நினக்கு வேண்டியது என் – உனக்கு வேண்டியது என்னை, இன்று கடிது இயம்புதி எனலும் – இப்பொழுது விரைவாக உரைப்பாயாக என்று சிவபெருமான் திருவாய்மலந்தருளுதலும்.
ஆற்று தற்கரு நோன்மைய னாகியோன் அமலன்
பேற்றின் வேண்டுவ கொள்கென இசைத்தலும் பிறவி
மாற்றும் முத்திய திரந்திலன் தொல்விதி வழியே
ஏற்ற புந்தியுஞ் சேறலின் மயங்கியீ திசைப்பான். 10
அமலன் பேற்றின் வேண்டுவன கொள்க என இசைத்தலும் – மலமில்லாதவராகிய சிவபெருமான் பேறுகளுக்குள்ளே நீ விரும்பியவாறு பேறுகளைப் பெற்றுக்கொள்வாயாக என்று கூறியருளுதலும், ஆற்றுதற்கும் அரும் நோன்மையன் ஆகியோன் – செய்தற்கரிய தவத்தைச் செய்தவனான தக்கன், பிறவி மாற்றும் முத்தி இரந்திலம் – பிறவியைப் போக்குகின்ற முத்தையை இரந்து கேட்டானல்லன், தொல் விதி வழியே – பழைமையாகிய ஊழின் வழியே, ஏற்ற புந்தியும் சேறலின் – ஊழுக்கேற்ற அவன் பத்தியும் அவ்வூழின்வழியே செல்லுதலால், மயங்கி ஈது இசைபான் – மயக்கங் கொண்டு இவ்வாறு கூறுவான்.
விதியே மதியாய் விடும் என்றவாறு, சிறுவிதி மதி, விதிவழி சென்றது.
நீணி லப்பெரு வைப்பும் நிகரிலா
வீணை வல்லவர் ஏனையர் மேவிய
சேணும் மாலயன் ஊரும் திசையுமென்
ஆணை செல்ல அளித்தருள் செய்தியால். 11
நீல பெரு நில வைப்பும் – நீண்ட பெரிய பூமியினிடமும், நிகர் இலா வீணை வல்லவர் ஏனையர் மேவிய சேணும் – ஒப்பில்லா வீணையில் வல்லோரான காந்தருவரும் ஏனையோரும் வசிக்கின்ற மேலுலகமும், மால் அயன் ஊரும் – பிரம் விஷ்ணுக்களின் உலகங்களும், திசையும் – திக்குக்களுமாகிய எவ்விடங்களிலும், என் ஆணை செல்ல – எனது ஆஞ்சை செல்லுமாறு, அளித்து அருள்செய் – வரந்தந்தருள்வீராக.
உன்னை வந்து வழுத்தும் உயிரெலாம்
என்னை வந்து வழுத்தவும் யானினி
நின்னை யன்றி நெஞ்சாலும் பிறர்தமைப்
பின்னை வந்தியாப் பெற்றியும் ஈதியால். 12
உன்னை வந்து வழுத்தும் உயிர் எலாம் – தேவரீரை வந்து வணங்கும் உயிரனைத்தும், இனி என்னை வந்து வழுத்தவும் – இனி என்னையும் வந்து வணங்கவும், பின்னை – இன்று தொடக்கம், யான் நின்னை அன்றி பிறர் தமை நெஞ்சாலும் வந்தியாப் பெற்றியும் – யான் தேவரீரையன்றிப் பிறரை மனசாலும் வணங்காத தன்மையும், ஈதி – அளிதருள்வீராக.
ஆய தேவர் அவுணர்கள் யாரும்யான்
ஏய செய்கை இயற்றவும் எற்குநற்
சேயி னோர்களுஞ் சிற்றிடை மாதரும்
மாய்வில் கொள்கையில் மல்கவும் நல்குதி. 13
ஆய தேவர் அவுணர்கள் யாரும் – உயர்ந்தோராய தேவர்களும் அவுணர்களும் யாவரும், யான் ஏய செய்கை இயற்றவும் – யான் ஏவிய ஏவல்களைச் செய்யவும், ஏற்கு – எனக்கு, நல் சேயினோர்களும் சிற்றிடை மாதரும் – நல்ல ஆண்பிளைகளும் சிறிய இடையையுடைய பெண்பிள்ளைகளும், மாய்வில் கொள்கையின் – தீர்க்காயுளோடு கூடியவர்களாய், மல்கவும் நல்குதி – பெருகுமாறு அருள்புரிவீராக.
மாய்வு – இறப்பு, இறப்பில்லா கொள்கையாவது நீண்ட ஆயுள் உளதாதல்.
ஆதி யாகி அனைத்தையும் ஈன்றநின்
பாதி யான பராபரை யான்பெறு
மாத ராக மறையவ னாகிநீ
காத லாகக் கடிமணஞ் செய்தியால். 14
ஆதி ஆகி – ஆதிசத்தியாய், அனைத்தையும் ஈன்ற – சராசர மனைத்தையும் ஈன்றருளிய, நின் பாதியான பராபரை – தேவரீரது பாதியுருவமான பராபரையாகிய தேவி, யான் பெறு மாதர் ஆக – யான் பெற்ற பெண்ணாகுக; நீ மறையவன் ஆகி – தேவரீர் மறையவராய், காதல் ஆக கடிமணம்செய்தி – காதல் உண்டாகத் திருக்கலியாணஞ் செய்தருளுவீராக.
கடவுள் மறையவராய்க் காதல் மணமாகிய களவுமணம் புரிதல் பின் வருமாறு காண்க. மறையவராதல் களவுக்குப் பொருத்தமாதலுங் காண்க.
என்று தக்கன் இயம்பலும் இங்கிது
நன்று னக்கது நல்கினம் நன்னெறி
நின்றி யென்னில் நிலைக்குமிச் சீரெனா
மன்று ளாடிய வானவன் போயினான். 15
என்று தக்கன் இயம்பலும் – என்றிவ்வாறு தக்கம் உரைத்தலும், இங்கு இது நன்று – இவ்விடத்து நீ வேண்டுகின்ற இவ்வரம் நல்லது; அது உனக்கு நல்கினம் – அவ்வரத்தை உனக்குத் தந்தோம்; நல் நெறி நின்றி என்னில் – தக்கனே நீ சன்மார்க்க நெறியில் நிற்பாயானால், இச் சீர் நிலைக்கும் எனா – நீ பெற்ற இந்தச் சிறப்பு நிலைக்கும் என்று கூறியருளி, மன்றுள் ஆடிய வானவன் போயினான் – திருவம்பலத்தில் திருநிருத்தஞ் செய்தருளிய மாகாதேவரான சிவபெருமான் மறைந்தருளினார்.
ஈசன் அவ்வரம் ஈந்தனன் ஏகலும்
நேச மோடவன் நீர்மையைப் போற்றியே
தேசின் மிக்க சிறுவிதி யாரினும்
பேசொ ணாத பெருமகிழ் வெய்தினான். 16
ஈசன அவ்வரம் ஈந்தனன் ஏகலும் – சிவபெருமான் தக்கன் கேட்ட அவ்வரங்களைக் கொடுத்துப் போதலும், தேசின் மிக்க சிறுவிதி – வரப்பிரசாதத்தாற் பிரகாசம் மிக்க தக்கன், அவன் நீர்மையை நேசமொடு போற்றி – சிவபெருமானின் இயல்புகளை ஆராமையோடு துதித்து, யாரினும் பேசொணாத பெரு மகிழ்வு எய்தினார் – யாவரினும் பார்க்கப் பேசுதற்கரிய பெரு மகிழ்ச்சியை அடைந்தான்.
ஓகை மேயவன் ஓதிம வூர்திமேல்
ஏகும் ஐயனை எண்ணலும் அச்செயல்
ஆக மீதுகண் டன்னவன் மங்கையோர்
பாகன் ஈந்த பரிசுணர்ந் தானரோ. 17
ஓகை மேயவன் – உவகையடைந்த தக்கன், ஓதிம ஊர்திமேல் ஏகும் ஐயனை எண்ணலும் – அன்னவாகனத்திற் செல்லுந் தன்னுடைய தந்தையாகிய பிரமதேவரை நினைத்தலும், அன்னவன் – அப்பிரமதேவர், அச்செயல் ஆக மீது கண்டு – தக்கன் நினைத்ததைத் தம் உள்ளத்துள் உணர்ந்து, மங்கையோர்பாகன் ஈந்த பரிசு உணர்ந்தான் – உமாதேவி பாகராகிய சிவபெருமான் தக்கனுக்குக் கொடுத்த வரத்தி னியல்பை அறிந்தார்.
வேறு
பெற்றிடு மதலை யெய்தும் பேற்றினை அவன்பால் மேல்வந்
துற்றிடு திறத்தை யெல்லாம் ஒருங்குற வுணர்வால் நாடித்
தெற்றென உணர்ந்து தக்கன் சிவனடி உன்னிப் பன்னாள்
நற்றவம் புரிந்த வாறும் நன்றென உயிர்த்து நக்கான். 18
பெற்றிடு மதலை எய்தும் பேற்றினை – தாம் பெற்ற புதல்வனான தக்கம் வரத்தால் எய்தும் பேறுகளும், அவன்பால் வந்து உற்றிடு திறத்தை – அப்பேறு காரணமாக அவனிடத்தில் உண்டாகும் மாற்றங்களும், எலாம் – ஆகிய அனைத்தையும், ஒருங்கு உற உணர்வான் நாடி தெற்றென உணர்ந்து – ஒரு சேர உள்ளுணர்வால் ஆராய்ந்து விரைவாக அறிந்து, தக்கன் சிவன் அடி உன்னி – தக்கன் சிவபெருமானின் திருவடிகளை நினைந்து, பன்னாள் நல் தவம் புரிந்தவாறு – பலகாலம் நல்ல தவஞ் செய்தவாறு, நன்று என உயிர்த்து நக்கான் – நல்லது என்று பெருமூச்சு விட்டு சிரித்தார்.[பக்கம் 64]
முப்புர முடிய முன்னாள் முனிந்தவன் நிலைமை யான
மெய்ப்பொருள் பகர்ந்தேன் மைந்தன் வீடுபெற் றுய்ய அன்னான்
இப்பரி சானான் அந்தோ என்னினிச் செய்கேன் நிம்பங்
கைப்பது போமோ நாளுங் கடலமிர் துதவி னாலும். 19
மைந்தன் வீடு பெற்று உய்ய – என் புதல்வன் முத்தி பெற்று உய்யும் பொருட்டு, முன்னாள் முப்புரம் முடிய முனிந்தவன் – முன்னாளில் முப்புரங்கள் அழியும்படி கோபித்தருளிய சிவபெருமானின், மெய்ப்பொருள் நிலைமை ஆன பகர்ந்தேன் – மெய்மையாகிய பரம்பொருள் இயல்புகள் ஆயினவற்றை உபதேசித்தேன்; அன்னான் இப்பரிசு ஆனான் – அவவோ இவ் வண்னம் ஆயினான்; அந்தோ இனி என் செய்கேன் – ஐயகோ இனி என்ன செய்வேன்; நாளும் கடல் அமிர்து உதவினாலும் – நாள்தோறும் கடலிணுண்டான அமிர்தத்தைப் பொழிந்தாலும், நிம்பம் கைப்பது போமோ – வேம்பு கசக்கும் தன்மை நீங்குமோ நீங்காதே.
ஆலமார் களத்தோன் தானே ஆதியென் றுணர்ந்து போந்து
சாலவே இந்நாள் காறுந் தலையதாந் தவத்துள் தங்கி
ஞாலமேல் என்றும் நீங்கா நவையொடு பவமும் பெற்றான்
மேலைநாள் வினைக்கீ டுற்ற விதியையார் விலக்க வல்லார். 20
ஆலம் ஆர் களத்தோன் தானே ஆதி என்று உணர்ந்து – விடம் பொருந்திய கண்டத்தையுடைய சிவபெருமாந்தானே பரம்பொருள் என்று உணர்ந்து,, போந்து – அவ்வுணர்ச்சியோடுதானே போய், இந்நாள் காறும் தலையதாம் தவத்துள் சாலத் தங்கி – இந்நாள்வரை சிறந்ததாகிய தவ ஒழுக்கத்திலேயே மிகுதிப்பட்டிருந்தும், ஞாலம் மேல் என்று – உலக போகமே மேலானது என்று கருதி, நீங்கா நவையொடு பவமும் பெற்றான் – நீங்காத குற்றங்களையும் அவற்றா னெய்தும் பிறவியையுமே பெற்றுக்கொண்டான்; மேலை நாள் வினைக்கு – மேலைநாளிற் சம்பாதித்து வைத்த வினைக்கு, ஈடு உற்ற விதியை – தகுதியாய் வந்து விருந்திய,பொதியை, விலக்க வலார் யார் – விலக்க வல்லுநர் யாவர்.
தங்கியும் என் உம்மையும் பவமுமே என ஏகாரமும் வருவிக்கப்பட்டன. மேலைநாள்வினை, சஞ்சிதமும் முகந்துகொண்ட பிராரத்தமுமாம். ஈடுற்றா விதி ஆகாமியம். ஆகாமியமாவது இனிச் சம்பாதிக்குஞ் சம்பாத்தியம். அது சஞ்சித பிராரத்தங்களுக்கு ஏற்றவாறு பெரிதும் அமையுமென்பதாம்.
செய்வதென் இனியான் என்னாச் சிந்தையின் அவலஞ் செய்து
மைவளர் தீய புந்தி மைந்தனை அடைந்து வல்லே
மெய்வகை யாசி கூறி மேவலும் வெய்ய தக்கன்
இவ்விடை நகர மொன்றை இயற்றுதி ஐய வென்றான். 21
இனி யான் செய்வது என் என்னா – இனி யான் செய்யத்தக்கது யாது என்று, சிந்தையின் அவலஞ் செய்து – மனத்திலே துன்பம் உற்று, மைவளர் தீய புந்தி மைந்தனை வல்லே அடைந்து – மயக்கம் வளருகின்ற கொடிய புத்தியினையுடைய புதல்வனான தக்கனை விரைவாக அடைந்து, மெய்வகை ஆசி கூறி – உருவத்தால் மெய்மை வகையைச் சேர்ந்த ஆசி மொழி பகர்ந்து, மேவலும் – இருத்தலும், வெய்ய தக்கன் – கொடிய தக்கன், ஐய – பிதாவே, இவ்விடை நகரம் ஒன்றை இயற்றுதி என்றான் – இவ்விடத்தில் ஒரு நகரத்தை உண்டாக்குவாயாக என்று கூறினான்.
மனத்தொடு படாத ஆசி ஆதலின், மெய்வகை ஆசி என்றார்.[பக்கம் 65]
என்னஅத் தக்கன் கூற இமைப்பினில் அமைப்பன் என்றே
கொன்னுறு கமலத் தண்ணல் குறிப்பொடு கரங்க ளாலே
தன்னகர் என்ன ஒன்று தக்கமா புரியீ தென்றே
பொன்னகர் நாணுக் கொள்ளப் புவியிடைப் புரிந்தான் அன்றே. 22
அத்தக்கன் என்னக் கூற – அத்தக்கன் என்றிவ்வாறு கூற , கொள் உறு கமலத்து அண்ணல் – பெருமை பொருந்திய ஆசனரான பிரமதேவர்,இமைப்பினில் அமைப்பன் என்று – இமைப்பொழுதில் செய்வேன் என்று கூறி, குறிப்பொடு – தனது குறிப்பின் வழியே, ஒன்று – ஒரு நகரத்தை, ஈது – அந்நகரம், தக்க மா புரி என்று – தக்கமாபுரி என்று பெயர் சொல்லப்பட்டு, தன் நகர் என்ன – தமது சத்திய உலகத்திலுள்ள நகரத்தை ஒப்ப, பொன் நகர் நாணுக் கொள்ள – சுவர்க்கநகரம் வெட்கம் உற, கரங்களால் – தமது கரங்களாலே, புவியிடைப் புரிந்தான் – இப்பூவுலகத்திலே இயற்றினார்.
கொள் அச்சமுமாம். தக்கன் நிலை அச்சத்துக்கேதுவாம். [பக்கம் 66]
அந்தமா நகரந் தன்னில் அருந்தவத் தக்கன் சென்று
சிந்தையுள் உவகை பூத்துச் சேணகர் தன்னுள் ஒன்றும்
இந்தவா றணிய தன்றால் இணையிதற் கிஃதே என்னாத்
தந்தைபால் அன்பு செய்து தன்பெருங் கோயில் புக்கான். 23
அந்த மா நகரந்தன்னில் – அந்தப் பெருமை பொருந்திய தக்கமா புரிக்குள், அருந் தவத் தக்கன் சென்று – அரிய தவத்தைச் செய்த தக்கன் பிரவேசித்து, சிந்தையுள் உவகை பூத்து – மனத்துள் மகிழ்ச்சி மிக்கு, சேண்நகர் தன்னுள் ஒன்றும் – வானுலக நகரத்துள் எதுவும், இந்தவாறு அணியது அன்று – இதுபோல் அழகியது அன்று, இதற்கே இஃதே இணை என்னா – இதற்கு இது ஒப்பு என்று, தந்தை பால் அன்பு செய்து – அந்தநகரைப் படைத்த பிதாவிடம் அன்பு கூர்ந்து, தன் பெருங் கோயில் புக்கான் – தனக்குரிய பெரிய மாளிகையை அடைந்தான்.
தன்பெருங் கோயில் எய்தித் தவமுனி வரர்வந் தேத்த
மன்பெருந் தன்மை கூறும் மடங்கலந் தவிசின் உம்பர்
இன்புறு திருவி னோடும் இனிதுவீற் றிருந்தான் என்ப
பொன்புனை கிரியின் மீது பொலஞ்சுடர்க் கதிருற் றென்ன.24
தன் பெருங் கோயில் எய்தி – தனது பெரிய மாளிகையை அடைந்து, தவ முனிவர் வந்து ஏத்த – தவத்தினையுடைய முனிசிரேட்டர்கள் வந்து துதிக்க, மன்பெருந் தன்மை கூறும் – பெருமையோடு கூடிய தலைமைத் தன்மையைக் காட்டுகின்ற, மடங்கல் அம் தவசின் உம்பர் – அழகிய சிங்காசனத்தின் மீது, பொன் புனை கிரியின் மீது பொலஞ் சுடர்க் கதிர் உற்றென்ன – பொன்னாலான மேருமலையின்மீது பொன்மயமான கிரணங்களையுடைய சூரியன் உதயஞ் செய்தாற் போல, இன்புஉறு திருவினோடும் இனிதுவீற்றிருந்தான் – இன்பம் மிகுகின்ற செல்வங்களோடு இனிதாக அரசு வீற்றிருந்தான்.
எனப அசை
கேசரி அணையின் மீது கெழீஇயின தக்கன் எண்டோள்
ஈசன்நல் வரம்பெற் றுள்ள இயற்கையை ஏமஞ் சான்ற
தேசிக னாகும் பொன்போய்ச் செப்பலுந் துணுக்க*1 மெய்தி
வாசவன் முதலா வுள்ள வானவர் யாரும் போந்தார். 25
கேசரி அணையின் மீது கெழீஇயின் தக்கன் – சிங்காசனத்தின்மீது அரசுவீற்றிருந்த தக்கனானவம், எண்தோல் ஈசன் நல் வரம் பெற்றுள்ள இயற்கையை – எட்டுப் புயங்களையுடைய சிவபெருமானிடத்தல் நல்ல வரம்பெற்றுள்ள தன்மையை, ஏமம் சான்ற தேசிகன் ஆகும் பொன் போய்ச் செப்பலும் – கலக்கம் மிக்க தேவா குரு ஆகும் வியாழபகவான் இந்திராதி தேவர்களிடஞ் சென்று கூறுதலும், வாசவன் முதலா உள்ள வானவர் யாரும் துணுக்கம் எய்தி – இந்திரம் முதலிய தேவர்களெல்லாம் துன்பம் அடைந்து, போந்தார் – தக்கனிடஞ் சென்றார்கள்.
தக்கனின் தகவின்மை நோக்கித் தேவ குரு கலங்கினார் என்க. ஏமம் – கலக்கம், தேவருக்கு ஏமஞ் செய்தலில் மிக்க எனினுமாம். இப்பொருளில் ஏமம் – சேமம். [பக்கம் 67]
வானவர் போந்த பான்மை வரன்முறை தெரிந்து மற்றைத்
தானவர் குரவ னானோன் தயித்தியர்க் கிறையைச் சார்ந்து
போனதுன் னவலம் அஞ்சேல் புரந்தரன் தனக்குத் தக்கன்
ஆனவன் தலைவ னானான் அன்னவன் சேர்தி என்றான். 26
வானவர் போந்த பான்மை – தேவர்கள் தக்கன்பாற் சென்ற தன்மையையும், வரல் முறல் – செல்லற்பாலதாகிய முறையினையும், தானவர் குரவன் ஆனோன் தெரிந்து – அசுர குருவாகிய சுக்கிரபகவான் அறிந்து, தயித்தியர்க்கு இறையைச் சார்ந்து – அசுரக்கு கரசனாகிய அசுரேந்திரனை அடைந்து, உன் அவலம் போனது – உனக்குத் தேவர்களாலுண்டான துன்பந் தொலைந்தது; அஞ்சேல் – அஞ்சற்க (என்று ஆசி வழங்கி), புரந்தரன் தனக்கு தக்கன் தலைவன் ஆனான் – இந்திரனுக்குத் தக்கன் தலைவனாய்விட்டான்; (என்று காரணத்தையும் கூறி), அன்னவன் சேர்தி என்றான் – அத் தக்கனை நீ அடையக் கடவாய் என்று கூறினார்.
தகுதியில்லான் தலைவனாயது, தானவ னொருவன் தலைவனாதலிலும் மேல் ஆதலின், ‘போனது அவலம்; அஞ்சேல் ‘ என்க.
சேருதி யென்னு மாற்றஞ் செவிதளிர்ப் பெய்தக் கேளா
ஆரமிர் தருந்தி னான்போல் அகமுறும் உவகை பொங்க
மேருவின் ஒருசார் வைகும் வெந்திறல் அவுணர் கோமான்
காரென எழுந்து தொல்லைக் கிளைஞரைக் கலந்து போந்தான். 27
மேருவின் ஒருசார் வைகும் மெம் திறல் அவுணர் கோமான் – மேரு மலையின் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருக்கும் கொடுந்திறனினை யுடையவனாகிய அசுரேந்திரன், சேருதி என்னும் மாற்றம் – நீ தக்கனைச் சென்றடைவாய் என்று சுக்கிரபகவான் கூறிய வார்த்தையை, செவி தளிர்ப்பு எய்தக் கேளா – காது குளிரக் கேட்டு, ஆர் அமிர்து அருந்தினான் போல் அகம் உறும் உவகை பொங்க – அரிய அமிர்தத்தை உண்டவனைப்போல அகத்தே பெருகிய உவகை புறத்தே பொங்க, கார் என எழுந்து – சூல்கொண்ட மேகம் போலெழுந்து, தொல்லைக் கிளைஞரைக் கலந்து – பழைய சுற்றத்தினரைக் கலந்து, போந்தான் – அவர்களுடன் தக்கனிடஞ் சென்றான்.
ஆளரி ஏறு போலும் அவுணர்கோன் சேற லோடும்
வாளுறு கதிர்ப்புத் தேளும் மதியமும் மற்று முள்ள
கோளொடு நாளும் ஏனைக் குழுவுறு கணத்தி னோரும்
நீளிருந் தடந்தேர் மீதும் மானத்தும் நெறியிற் சென்றார். 28
ஆள் அரி ஏறு போலும் அவுணர்கோன் சேறலோடும் – நரசிங்கத்தை ஒத்த அசுரேந்திரன் செல்லுதலும், வாள் உறு கதிப் புத்தேளும் – ஒளி பொருந்திய கிரகணங்களையுடைய சூரியதேவனும், மதியமும் – சந்திரனும், மற்றும் உள்ள கோள் ஒடு நாளும் – ஏனைய கோள்களும் நாள்களும், ஏனைக் குழுவு உறு கணத்தினோரும் – மற்றைய கூட்டமான கணங்களா யுள்ளவரும், நீள் இரும் தடம் தேர் மீதும் – நீண்ட பெரிய அகன்ற தேர்மீதும், மானத்தும் – விமானமீதும், நெறியிற் சென்றார் – தக்கப் பிரசாபதியிடஞ் செல்லும் முறையிற் சென்றார்கள்.
மங்குல்தோய் விண்ணின் பாலார் மாதிரங் காவ லோர்கள்
அங்கத நிலயத் துள்ளார் அனையவர் பிறரும் உற்றார்
இங்கிவர் யாருந் தக்கன் இணையடி வணங்கி ஈசன்
பொங்குபே ரருளின் ஆற்றல் புகழ்ந்தன ராகி நின்றார். 29
மங்குல் தோய் விண்ணின் பாலார் – மேகம் படிகின்ற வானில் உள்ளார், மாதிரம் காவலோர்கள் – திக்குப் பாலகர், அங்கத நிலையத்து உள்ளார் – பாம்புகள் உறைகின்ற பாதலத்தில் உள்ளார், அனையவர் பிறரும் – ஆகிய அவர்களும் பிறரும், உற்றார் – தக்கனைச் சென்றடைந்தார்கள்; இங்கிவர் யாரும் தக்கன் இணையடி வணங்கி – இவர்க ளனைவரும் தக்கனுடைய இரண்டாகிய பாதங்களை வணங்கி, ஈசன் பொங்கு பேர் அருளின் ஆற்றல் – சிவபெருமானுடைய பெருகுகின்ற பெரிய அருளினாலே தக்கனுக்குக் கிடைத்த ஆற்றல்களை, புகழ்ந்தனர் ஆகிநின்றார் – புகழ்ந்தபடி நின்றார்கள்.
அவ்வகை முளரி அண்ணல் ஆதியாம் அமரர் தத்தஞ்
செய்வினை யாக வுன்னி வைகலுஞ் செறிந்து போற்ற
மெய்வகை உணராத் தக்கன் வியன்மதிக் குடையுங் கோலும்
எவ்வகை உலகுஞ் செல்ல இருந்தர சியற்றல் செய்தான்.30 அவ்வகை முளரி அண்ணல் அதி ஆம் அமரர் – இவ்வாறு தாமரை ஆசனரான பிரமதேவர் முதலிய அமரர்கள், தம் தம் செய்வினை ஆக உன்னி – தாம் தாம் செய்யக்கடவ செய்தொழிலாகக் கருதி, வைகலும் செறிந்து போற்ற- தின்ந்தோறும் நெருங்கிச் சென்று துதிக்க, மெய் வகை உணராத் தக்கன் – மெய்யுணர்ச்சி இல்லாதவனான தக்கன், வியன் மதிக் குடையும் கோலும் – பெரிய சந்திரவட்டக் குடையும் ஆஞ்ஞையும், எவ்வகை உலகும் செல்ல – எல்லா உலகத்திலும் செல்லுமாறு, அரசு இருந்து இயற்றல் செய்தான் – அரசு வீற்றிருந்து பரிபாலனஞ் செய்வானாயினான்.
கோடினான் கோல் ஆதலின், ஆஞ்ஞை என்றுரை செய்யப்பட்டது
தக்கன் றவஞ்செய் படலம் முற்றிற்று
ஆக திருவிருத்தம் – 62 [பக்கம் 69]