9 தக்கன் கயிலைசெல் படலம்

  1. தக்கன் கயிலைசெல் படலம்

மெய்ம்மா தவத்தால் திருத்தக்கு விளங்கு தக்கன்
எம்மான் தனைஎண் ணலன்ஆவி இழப்பன் வல்லே
அம்மா வியாமும் அவன்ஏவலை யாற்று கின்றாம்
நம்மா ருயிர்க்கும் இறுவாய் நணுகுற்ற போலும். …… 1

மெய் மாதவத்தால் திருத்தக்கு விளங்கு தக்கன் – உண்மையான பெரிய தவத்தாற் செல்வம் மிக்கு விளங்குகின்ற தக்கன், எம்மாந்தனை எண்ணிலன் – எம்பெருமானை நினைக்கின்றிலன்; வல்லே ஆவி இழப்பன் – ஆதலினாலே விரைந்து இறந்துபடுவன்; அம்மா – அம்மவோ!, யாமும் அவன் ஏவலை ஆற்றுகின்றோம் – நாமும் அவனுடைய ஏவலைச் செய்கின்றோம்; நம் ஆரூயிர்க்கும் இறுவாய் நணுகுற்றுது போலும் – நமது அரிய உயிருக்கு இறுதி கிட்டியதுபோலும். [பக்கம் 1/9]

ஆனால் இனித்தக் கனைஎண் ணலமாயின் அன்னான்
மேனாள் அரனால் பெறுகின் றதொர் மேன்மை தன்னால்
மானாத சீற்றங் கொடுநம்பதம் மாற்றும் என்னா
வோநாம் இனிச்செய் பரிசென் றிவை ஓர்ந்து சொல்வார். …… 2

ஆனால் – இவ்வாற்றால், இனி தக்கனை எண்ணலம் ஆயின் – இனித் தக்கனை மதியோம் ஆனால், அன்னான் அரனால் மேல் நாள் பெறுகின்றது ஓர் மேன்மை தன்னால் – அவன் சிவபெருமானிடம் முன்னாளிற் பெற்றுள்ளதாகிய ஒப்பற்ற வரத்தின் உதவியினால், மானத சீற்றம் கொடு – நிகரில்லா கோபங் கொண்டு, நம் பதம் மாற்றும் என்னா – நம்பதவியை மாற்றிவிடுவான் என்று சிந்தித்து, ஓ இனி நாம் செய் பரிசு இவை என்று ஓர்ந்து – ஓகோ இனி நாம் செய்யுங்காரியம் இவையேயாம் என்று உணர்ந்து, சொல்வார் – உரைபார் [பக்கம் 1/9]

ஈசன் கயிலை தனில்தக்கன் எழுந்து செல்ல
மாசொன்று சிந்தை கொளத்தேற்றினம் வல்லை யென்னில்
நேசங் கொடுபோய் அவற்காணின் நிலைக்கும் இச்சீர்
நாசம் படலும் ஒழிவாகும் நமக்கும் என்றார். …… 3

ஈசன் கயிலை தனில் தக்கன் எழுந்து செல்ல – சிவபெருமான் எழுந்தருயிருக்கும் கைலாசமலைக்குத் தக்கன்இவ்விடத்தினின்றும் நீங்கிச் செல்லும் பொருட்டு, மாசு ஒன்று சிந்தை கொள – மாசு படிந்த அவனுடைய மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில், வல்லை தேற்றினம் என்னின் – விரைந்து அவனைத் தேற்றுவோம் ஆயின், நேசம் கொடு போய் அவன் காணின் – அவனும் விருப்பத்தோடு சென்று சிவபெருமானைக் காணுவானானால், இச் சீர் நிலைக்கும் – இந்தச் செல்வம் நிலையாகும், நமக்கு நாசம் படலும் ஒழிவாகும் என்றார் – நமக்கு நாசமாதலும் நீங்கும் என்றார்கள். [பக்கம் 1/9]

வேதா முதலோர் இதுதன்னை விதியின் நாடித்
தீதான தக்கன்றனை மேவிநின் செய்த வத்தின்
மாதா னவளைச் சிவனோடு மறத்தி போலாம்
ஏதா முனது நிலைக்கம்ம இனைய தொன்றே. …… 4

வேதா முதலோர் இது தன்னை விதியின் நாடி – பிரமா முதலியவர்கள் இதனை முறைப்படி ஆராய்ந்து, தீது ஆன் தக்கன் தனை மேவி – தீமை பொருந்திய தக்கனை அடைந்து, நின் செய் தவத்தின் மாது ஆனவளை – உனது செய்யப்படுவதாகிய தவத்தினாற் பெற்ற புதல்வியாகிய அச் சிவ சக்தியை, சிவனோடு – மருகராகிய சிவபெருமானோடும், மறத்தி போலாம் – மறக்கின்றாய் போலும்; உனது நிலைக்கு – உனது உன்னத நிலைக்கு, இனையது ஒன்று ஏதாம் – இஃதொன்றிருந்தபடி யென்னை; அம்ம – இவ்வாறாதல் ஆச்சரியம் [பக்கம் 2/9]

குற்றந் தெரிதல் அஃதேகுண னென்று கொள்ளில்
சுற்றம் மொருவற் கெவணுண்டு துறந்து நீங்கிச்
செற்றஞ் செய்கண்ணும் மகிழ்வுண்டிது சிந்தி யாயேல்
மற்றுன்னை வந்தோர் வசைசூழ்தரும் வள்ள லென்றார். …… 5

குற்றம் தெரிதல் அஃதே குணம் என்று கொள்ளின் – குற்றத்தை ஆராய்தலையே குணமாகக்கொண்டால், ஒருவற்கு சுற்றம் எவண் உண்டு – ஒருவனுக்குச் சுற்றம் எங்ஙனம் உளதாம்; துறந்து நீங்கிச் செற்றஞ் செய்கண் – சுற்றத்தை விட்டு விலகிக் கோபங்கொண்டவழி, மகிழ்வும் உண்டு – எப்பொழுதாயினும் மகிழ்ச்சியும் உளதாமோ?; இது சிந்தியாயேல் – இதனை நீ சிந்தியாது விடுதியாயின்,வள்ளல் – வள்ளலே, ஒர் வசை வந்து உன்னைச் சூழ்தரும் என்றார் – ஒப்பற்ற அபகீர்த்தி உன்னை வந்து மூடும் என்றார்கள்.

செய்கண்ணும் என்புழி உம்மை மகிழ்வுடன் கூட்டப்பட்டது, உண்டு உண்டாமோ என்னும் பொருட்டு.

குற்றம் பார்க்கிற சுற்றம் இல்லையாம்; சுற்றம் இல்லையாகச் செற்றம் உளதாம்; அதனால் மகிழ்ச்சி பாழாம் என்றவாறு. [பக்கம் 2/9]

முன்னின் றவர்கூ றியபான்மை முறையின் நாடி
என்னிங் கியான்செய் கடனென்ன இறைவி யோடும்
பொன்னஞ் சடையோன் றனைக்கண்டனை போதி என்ன
மன்னுங் கயிலை வரையே கமனம் வலித்தான். …… 6

முன் நின்று அவர் கூறிய பான்மை முறையின் நாடி – எதிரில் நின்று அவர்கள் கூறிய தன்மையை முறைப்படி ஆராய்ந்து, இங்கு யான் செய் கடன் என் என்ன – இனி இங்கு யான் செயற்பாலது யாது என்று தக்கன் வினவ, இறைவியோடும் பொன் அம் சடையோன் தனைக் கண்டனை போதி என்ன – உமாதேவியாருடன் பொன்மயமான சடையையுடைய சிவபெருமானைச் சென்று கண்டு வருவாயாக என்று அவர்கள் கூற, மன்னும் கயிலை வரை ஏக மனம் வலித்தான் – என்றும் நிலைபெற்றுறிருக்கின்ற கயிலாய கிரிக்குச் செல்ல மனவுறுதியுற்றான். [பக்கம் 3/9]

கானார் கமலத் தயன்இந்திரன் காமர் பூத்த
வானாடர் யாரும் அவணுற்றிடும் வண்ண நல்கி
ஆனாத முன்பிற் றுணையோரொ டகன்று தக்கன்
போனான் அமலனமர் வெள்ளியம் பொற்றை புக்கான். …… 7

கான் ஆர் கமலத்து அயன் இந்திரன் காமர் பூத்த வாணாடர் யாரும் – வாசனை பொருந்திய தாமரை மலராசனரான பிரமா இந்திரன் அழகு வாய்ந்த வானுலகத்வர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரையும், அவண் உற்றிடும் வண்ணம் நல்கி – அங்கே தங்கியிருக்கும்படி செய்து, முன்பின் ஆனாத துளையோரொடு அகன்று தக்கன் போனான் – வலிபடைத்த மெய்காப்பாளரோடுந் தக்கன் சென்று, அமலன் அமர் வெள்ளியம் பொற்றை புக்கான் – நின்மலரான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் வெள்ளி மயமான அழகிய கயிலாய மலையை அடைந்தான். [பக்கம் 3/9]

வெள்ளிச் சயிலந் தனில்எய்தி விமலன் மேய
நள்ளுற்ற செம்பொற் பெருங்கோயிலை நண்ணி நந்தி
வள்ளற் குறையுளெனுங் கோபுர வாயில் சாரத்
தள்ளற்ற காவல் முறைப்பூதர் தடுத்தல் செய்தார். …… 8

வெள்ளிச் சயிலந்தனில் எய்தி – வெள்ளி மலையை அடைந்து, விமலன் மேய நள்ளுற்ற செம்பொற் பெருங் கோயிலை நண்ணி – சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற நடுவட் பொருந்திய பெருமைமிக்க செம்பொற் றிருக்கோயிலை அணுகி, வள்ளல் நந்திக்கு உறையும் எனும் கோபுர வாயில் சார – ஞான வள்ளலாகிய நந்திதேவருக்கு உறைவிடமான கோபுர வாய்தலையடைய, தள்ளற்ற காவல் முறைப் பூதர் – நீங்குதலில்லாத காவலை முறை செய்கின்ற பூதர்கள், தடுதல் செய்தார் – தக்கனை உட்புக ஓட்டாது தடுத்தார்கள். [பக்கம் 4/9]

கடிகொண்ட பூதர் நிரைதன்னைக் கனன்றி யான்முன்
கொடுக்கின்ற காதல் மடமான்தன் கொழுந னோடும்
அடுக்கின்ற பான்மை இவணாடி அறிவன் நீவிர்
தடுக்கின்ற தென்கொ லெனக்கூறினன் தக்கன் என்போன். …… 9

கடிகொண்ட பூதர் நிரை தன்னைக் கனன்று – காத்தலைச் செய்த பூதக் கூட்டத்தாரைக் கோபித்து, யான் முந் கொடுக்கின்ற காதல் மடமான் – யான் முன்னர் மணஞ்செய்து கொடுத்த என் தன்பிற்குரிய மடப்பம் பொருந்திய மான்போல்வாளாகிய என் புதல்வி, தன் கொழுநனோடும் அடுக்கின்றபான்மை – தன் நாயகனோடுஞ் சேர்ந்திருக்கின்ற தன்மையை, இவன் நாடி அறிவில் – இவ்விடத்தைல் நான் கண்டு அறிவேன்; நீவிர் தடுக்கின்றது என்கொல் – நீவீர் தடை செய்கின்ற தென்னை; எனக் கூறினன் தக்கன் என்போன் – என்று தக்கன் என்போன் கூறினான். [பக்கம் 4/9]

அவ்வா சகஞ்சொல் கொடியோனை அழன்று நோக்கி
மெய்வாயில் போற்றும் பெருஞ்சாரதர் மேலை ஞான்று
மைவாழுங் கண்டன் றனைஎள்ளினை மற்று நீயீண்
டெவ்வா றணைகின் றனைசால இழுதை நீராய். …… 10

அவ் வாசகம் சொல் கொடியோனை அழன்று நோக்கி – அம்மொழி கூறிய கொடியோனாகிய தக்கனை கோபித்துப் பார்த்து, மெய் வாயில் போற்றும் பெருஞ்சாரதர் – மெய்மையாகிய கயிலை வாய்தலைக் காக்கும் பெருமை பொருந்திய பூதர்கள், சால இழுதை நீராய் – மிக்க இழுதையின் தம்மையை உடையவனே, மேலை ஞான்று மை வாழுங் கண்டன்றனை எள்ளினை – முன்னாளில் நீலகண்டரகி சிவபெருமானை இகழ்ந்தாய், நீ – இகழ்ந்த நீ, ஈண்டு – இம் மெய்வாய்தலின்கண், அணைகின்றனை – அணுகுகின்றாய், எவ்வாறு – பொய்யனே அஃதெவ்வாறாகும்.

பொய்யனுக்கும் மெய்வாய்தலுக்கும் வெகுதூரம் என்றவாறு, இழுதை அறிவிலான். [பக்கம் 4/9]

முந்துற்ற தொல்லை எயின்மூன் றுறை மொய்ம்பி னோர்கள்
நந்துற்ற வையந் தனைவானை நலிவ ரேனும்
எந்தைக்கு நல்லர் அவரன்பில் இறையும் நின்பால்
வந்துற்ற தில்லை எவணோஇனி வாழ்தி மன்னோ. …… 11

முந்து உற்ற – முற்காலத்திலிருந்த, தொல்லை மூன்று எயில் உறை மொய்ம்பினோர்கள் – பழைய முப்புரதிலுள்ள வலிய அசுரர்கள், நந்து உற்ற வையந்தனை வானை நலிவரேனும் – செழிப்பு வாய்ந்த மண்ணையும் விண்ணையும் வருத்துவரேனும், எந்தைக்கு நல்லவர் – எம்பெருமானுக்கு நல்லவர்கள்; நின்பால் – வேதப் பிராமணனான உன்னிடத்தில், ஆவர் அன்பில் இறையும் வந்துற்றது இல்லை – அவர்களிடமிருந்த அன்பில் இறையளவு கூட உதித்ததில்லை; இனி எவண் வாழ்தி – இனி அன்பிலியே நீ எங்கனம் வாழ்வாய்.[பக்கம் 5/9]

இறக்கின்ற வேலை இமையோர்கள்தம் இன்னல் நீக்கிக்
கறுக்கின்ற நீல மிடற்றெந்தை கருணை செய்த
சிறக்கின்ற செல்வ மிசைந்தன்னவன் செய்கை யாவும்
மறக்கின் றனைநீ யெவன்செய்குதி மாயை உற்றாய். …… 12

இறக்கின்ற வேலை – இறக்க நேர்ந்த சமயத்தில், இமையோர்கள் தம் இன்னல் நீக்கி – தேவர்களுக்குண்டான மரணத் துன்பத்தை நீக்கி, கறுக்கின்ற நீல மிடற்று எந்தை – கரிய நீலகண்டரான எம்பெருமான், கருணை செய்த சிறக்கின்ற செல்வம் மிசைந்து – தந்தருளிய சிறப்பாகிய செல்வத்தை அநுபவித்துக்கொண்டே, அன்னவன் செய்கை யாவும் மறக்கின்றன்றனை – அப்பெருமான் செய்த நன்றிகளனைத்தையும் மறக்கின்றாய், மாயை உற்றாய் – மாயை வசப்பட்டாய், நீ எவன் செய்குதி – நீ என்ன செய்துகொண்டிருக்கின்றனை. [பக்கம் 5/9]

ஈசன் தனது மலர்த்தாளை இறைஞ்சி யாற்ற
நேசங்கொடு போற்றலர் தம்மொடு நேர்தல் ஒல்லா
பாசந் தனில்வீழ் கொடியோய்உனைப் பார்த்தி யாங்கள்
பேசும் படியுந் தகவோபவப் பெற்றி யன்றோ. …… 13

ஈசன் தனது மலர்த்தாளை இறைஞ்சி – சிவபெருமானுடைய மலர்ப்பாதங்களை வணங்கி, ஆற்ற நேசங் கொடு போற்றவர் தம்மொடு – மிகவும் அன்பு கொண்டு வழிபாடு செய்யாதவர்களோடு, நேர்தல் ஒல்லா – பழகுதல் கூடா; பாசம் தனில் வீழ் கொடியோய் – பாசப் பிணிப்பில் அமிழ்ந்துகின்ற பரம துட்டனே, உனைப் பார்த்து யாங்கள் பேசும்படியும் தகவோ – உன்னைப் பார்த்து நாங்கள் பேசுவதுந் தகுதியாகாதே; பவப் பெற்றி அன்றோ – பாவப் பேறேயாமன்றோ. [பக்கம் 5/9]

ஆமேனும் இன்னுமொரு மாற்றமுண் டண்ணல் முன்னர்
நீமேவி அன்பிற் பணிவா யெனில் நிற்றி அன்றேல்
பூமே லுனது நகரந்தனில் போதி என்னத்
தீமேல் கிளர்ந்தாலென ஆற்றவுஞ் சீற்ற முற்றான். …… 14

ஆமேனும் இன்னும் ஒரு மாற்றம் உண்டு – அங்ஙனமாயினும் இன்னும் ஒரு வார்த்தை உளது, அண்ணல் முன்னர் நீ மேவி – சிவபெருமானெதிரே நீ சென்று, அன்பினில் பணிவாய் எனில் நிற்றி – அன்பினோடு அப்பெருமானை வழிபடுவாயாயின் இங்கே நில்; அன்றேல் – அவ்வாறு செய்யாவிடில், பூமே உனது நகரம் தனில் போதி என்ன – பூமியிலுள்ள உனது நகரத்துக்குப் போகக்கடவாய் என்று கூற, தீ மேல் கிளர்ந்தா லென – அக்கினிமேலே கிளர்ந்தெழுந்தாற் போல, ஆற்றவும் சீற்றம் உற்றான் – மிகவும் கோபங் கொண்டான். [பக்கம் 6/9]

பல்லா யிரவர் பெருஞ்சாரதர் பாது காக்கும்
எல்லார் செழும்பொன் மணிவாயில் இகந்து செல்ல
வல்லான் நனிநாணினன் உள்ளம் வருந்தி அங்கண்
நில்லாது மீள்வான் இதுவொன்று நிகழ்த்து கின்றான். …… 15

பலாயிரவர் பெருஞ் சாரதார் பாதுகாக்கும் – பெரிய பூதர்கள் பல்லாயிரவர் காவல் புரிகின்ற, எல் ஆர் செழும் பொன் மணிவாயில் இகந்து செல்ல வல்லான் – ஒளி பொருந்திய அழகிய பொன்னாலும் மணியாலும் ஆகிய வாயிலைக் கடந்து செல்லமாட்டாதவனாய், நனி நாணினன் உள்ளம் வருந்தி – மிக நாணி மனம் வருந்தி, அங்கண் நில்லாது மீள்வான் – அவ்விடத்தில் நில்லாது மீள்பவன், இது ஒன்று நிகழ்த்துகின்றான் – இஃதொன்றைச் சொல்லுகின்றான். [பக்கம் 6/9]

கொன்னாருஞ் செம்பொற் கடைகாக்குங் குழாங்கள் கேண்மின்
எந்நாளும் உங்க ளிறைதன்னை இறைஞ்ச லேன்யான்
அன்னா னெனது மருகோனிதறிந்தி லீரோ
இந்நா ரணனும் அயனும்மெனக் கேவல் செய்வார். …… 16

கொன் ஆரும் செம்பொற் கடை காக்கும் குழாங்கள் கேண்மின் – பெருமை பொருந்திய செம்பொற் கோயிலின் வாய்தலைக் காக்கும் பூதங்களே கேழுங்கள், எந்நாளும் உங்கள் இறை தன்னை யான் இறைஞ்சலேன் – எக்காலத்திலும் உங்கள் இறைவனை நான் வணங்கேன், அன்னான் எனது மருகோன் – உங்கள் இறைவன் எனது மருகன், இது அறிந்திலீரோ – இதனை நீவிர் அறிந்திலீர்போலும், இது நிற்க; இந் நாரணனும் அயனும் எனக்கு ஏவல் செய்வார் – இந்த விஷ்ணுவும் பிரமாவும் எனக்கு ஏவல் செய்பவர்கள்; அறிந்துகொள்ளுங்கள் என்றவாறு.[பக்கம் 6/9]

நின்றா ரெவரு மெனதொண்டர்கள் நீடு ஞாலம்
பின்றாது போற்றும் இறையான்பெயர் தக்கன் என்பார்
ஒன்றாய உங்கள் பெரும்பித்தனை ஒல்லை மேவி
இன்றா மரபிற் பணிந்தேதொழு தேத்து கின்றேன். …… 17

நின்றார் எவரும் என் தொண்டர்கள் – பிரம விஷ்ணுக்களேயன்றி ஏனையராய் நின்ற யாவரும் எனக்குத் தொண்டு செய்பவர்கள், யான் நீடு ஞாலம் பின்றாது போற்றும் இறை – யானோ நிலைக்கின்ற உலகத்தைத் தாழ்விலாது பாதுகாக்கும் மன்னன், பெயர் தக்கன் என்பார் – என்பெயர் தக்கன் என்று சொல்லுவார்கள், இப்படிப்பட்ட யானோ, ஒன்றாய உங்கள் பெரும் பித்தனை ஒல்லை மேவி தொடர்பின்றித் தனித்த உங்களுடைய பெரிய பித்தனை விரைந்து சென்று, இன்றாம் மரபில் – இற்றைவரை என்பாலில்லாததொரு முறையில், தொழுது பணிந்து ஏத்துகின்றேன் – வணங்கிப் பணிந்து துதிப்பேன்; நன்று! நன்று! என்றவாறு. [பக்கம் 7/9]

நில்லிங் கெனவே தடைசெய்த நிலைமை நும்மால்
செல்லும் பரிசோ மருகோனுஞ் சிறுமி தானுஞ்
சொல்லும் படியல் லதுசெய்வதென் தொண்ட ரானீர்
ஒல்லும் படியாற் றுதல்உங்கட் குறுதி யன்றோ. …… 18

நில் இங்கு என தடை செய்த நிலைமை நும்மால் செல்லும் பரிசோ – நில் இங்கே என்று தடுத்த தன்மையை உங்களால் நிகழ்த்தப்படும் பான்மையதோ; மருகோனும் சிறுமிதானும் – மருமகனாகிய பித்தனும் அந்தச் சிறுமியும், சொல்லும்படி அல்லது – சொல்லிய பிரகாரமன்றி, தொண்ட ரானீர்செய்வது என் – அடிமைகளாயிருப்பவர்களே நீவீர் வேறு செய்யத்தக்க தென்னை; ஒல்லும்படி ஆற்றுதல் – அவர்களுக்கு ஏற்ற முறையிற் செய்தல், உங்கட்டு உறுதி அன்றோ – உங்களுக்கு தகுதிதானே
உங்கள்பாற் குற்றமில்லை என்றவாறு.[பக்கம் 7/9]

தேற்றாமல் இன்ன வகைசூழ்ந்த நுந்தேவை யாரும்
போற்றாமல் வந்து பணியாமற் புகழ்ந்து மேன்மை
சாற்றாமல் எள்ளல் புரிபான்மை சமைப்பன் என்னா
மேற்றா னிழைத்த வினையுய்த்திட மீண்டு போனான். …… 19

தேற்றாமல் இன்ன வகை சூழ்ந்த நும் தேவை – ஆராயாமல் இவ்வாறு செய்த உங்களுடைய இறைவனை, யாரும் போற்றாமல் – இனி எவரும் துதியாமலும், வந்து பணியாமல் – வந்து வணங்காமலும், புகழ்ந்து மேன்மை சாற்றாமல் – மேன்மைகளை எட்டுத்துப் புகழ்ந்து சொல்லாமலும், எள்ளல் புரி பான்மை சமைப்பன் – இகழுதலைச் செய்யுங் காரியத்தைச் செய்வேன், என்னா – என்று கூறி, மேல் தான் இழைத்த வினை உய்திட – முன் தான் செய்த வினை தன்னைப் பிடர்பிடித்துந்த, மீண்டு போனான் – மீண்டும் தன்னகரத்துகுச் சென்றான். [பக்கம் 7/9]

மீண்டுதன் பதியை எய்தி விரிஞ்சனை யாதி யாக
ஈண்டுபண் ணவரை நோக்கி என்மகள் ஈசன் தன்பால்
பூண்டபே ரார்வத் தொன்றிப் புணர்ப்பதொன் றுன்னித் தங்கண்
மாண்டகு வாயி லோரால் மற்றெமைத் தடுப்பச் செய்தார். …… 20

மீண்டும் தன் பதியை எய்தி – கயிலையினின்றும் மீண்டு தன்னகரத்தை அடைந்து, விரிஞ்சனை ஆதியாக ஈண்டு பண்ணவரை நோக்கி – பிரமா முதலாக நெருங்கியுள்ள தேவர்களைப் பார்த்து, என் மகள் ஈசன் தன்பால் பூண்ட பேரார்வத்து ஒன்றி – எனது புதல்வி சிவனிடத்துக்கொண்ட பெரு விருப்பத்தால் ஒன்றுபட்டு, புணர்ப்பது ஒன்று உன்னி – இருவரும் ஓர் உபாயத்தைச் சிந்தித்து, தங்கள் மாண் தகு வாயிரோலால் – தங்களது மாண்பு பொருந்திய வாயிற் காவலர்களால், எம்மைப் தடுப்பச் செய்தார் – எம்மை உட்புகாது தடுக்குமாறு செய்தார். [பக்கம் 8/9]

பின்னரும் பலவுண் டம்மா பேசுவித் தனவும் அவ்வா
றென்னையென் றுரைப்பன் அந்தோ எண்ணினும் நாணுக் கொள்வேன்
அன்னஈங் கிசைப்ப னேனும் ஆவதென் அவர்பாற் போந்தேன்
தன்னைநொந் திடுவ தன்றித் தாழ்வுண்டோ அனையர் தம்பால். …… 21

பின்னரும் – மேலும், பேசுவித்தனவும் பல உண்டு – நிந்தை செய்வித்தனவும் பல உள, அந்தோ அவ்வாறு என்னை என்று உரைப்பன் – ஐயகோ அந்த் நிந்தை நெறியை என்னவென்று வாயாற் சொல்லுவேன்; எண்ணினும் நாணுக் கொள்வேன் – அதனை இப்பொழுது நினைத்தாலும் நாணம் அடைவேன்; அன்ன ஈங்கு இசைப்பனேனும் ஆவது என் – அந்த நிந்தைகளை இங்கே உரைப்பே னாயியும் ஆவது ஒன்றும் இல்லை; அவர்பால் போந்தேன் தன்னை நொந்திடுவது அன்றி – அவர்களிடத்து வலிந்து சென்றேனாகிய என்னை யான் நோவதல்லாமல், அனையர் தம்பால் தாழ்வு உண்டோ – அவர்களிடத்துக் குற்றம் இலலையே [பக்கம் 8/9]

நன்றுநன் றென்னை எண்ணா நக்கனை உமையை நீவிர்
இன்றுமுன் னாக வென்றும் இறைஞ்சியே பரவு கில்லீர்
அன்றியும் மதித்தீர் அல்லீர் அப்பணி மறுத்தீ ராயின்
மன்றநும் முரிமை இன்னே மாற்றுவன் வல்லை யென்றான். …… 22

நன்று நன்று – நல்லது! நல்லது!, என்னை எண்ணா – என்னை மதியாத, நக்கனை உமையை – திகம்பரனையும் உமையையும், நீவிர் இன்று முன்னாக – நீவிர்கள் இன்று தொடக்கமாக, என்றும் இறைஞ்சி பரவுகில்லீர் – என்றும் வணங்கித் துதியாதொழிமின்; அன்றியும் மதித்திர் அல்லீர் – அல்லாமலும் மதித்தலுஞ் செய்யாதீர்கள்; அப் பணி மறுத்தீராயின் – அந்தக் கட்டளையை மறுத்து நடப்பீராயின், நும் உரிமை இன்னே வல்லை மன்ற மாற்றுவன் என்றான் – உங்கள் உத்தியோக உரிமைகளை இதோ விரைந்து நிச்சயமாக நிக்குவேன் என்றான். [பக்கம் 9/9]

கறுத்திவை உரைத்தோன் தன்னைக் கடவுளர் யாரும் நோக்கி
வெறுத்தெமை உரைத்தாய் போலும் மேலுநின் னேவல் தன்னின்
மறுத்தன வுளவோ இன்றே மற்றுநின் பணியின் நிற்றும்
செறுத்திடல் என்னாத் தத்தஞ் சேணகர் சென்று சேர்ந்தார். …… 23

கறுத்து இவை உரைத்தோன் தன்னை – கோபித்து இவற்றைக் கூறிய தக்கனை, கடவுளர் யாரும் நோக்கி – தேவர்கள் யாவரும் நோக்கி, எமை வெறுத்து உரைத்தா போலும் – எங்களை வெறுத்து இவ்வாறு கூறினாய் போலும், மேலும் – முன்னர் எப்பொழுதாயினும், நின் ஏவல் தன்னின் மறுத்தன் உளவோ – உன் ஏவல்களில் யாம் மறுத்தனவும் உண்டோ, இன்றே – இல்லையே; மற்று நின் பணியில் நிற்றும் – இனியும் உன் ஏவலின் வழியிலேயே நிற்போம்;செறுத்திடல் என்னா – இங்ஙனமாதலின் எங்களைச் கோபியா தொழி என்று கூறி, தத்தம் சேண் நகர் சென்று சேர்ந்தார் – தங்கள் தங்கள் வானுலக நகரங்களைப் போய்ச் சேர்ந்தார்கள் . [பக்கம் 9/9]

தக்கன் கயிலைசெல் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 370

தட்சகாண்டம்