அன்றுமுன் னாகவே யளப்பில் காலமா
வொன்றுமவ் வேள்வியி லோம்பு கின்றிலர்
துன்றிய முனிவருஞ் சுரரும் பார்தனில்
முன்றிக ழந்தணர் முதலி னோர்களும். …… 1
அன்று முன்னாக – அன்று முதலாக, அளப்பில் காலமா – அளவில்லாத காலமாக, அவ் வேளையில் ஒன்றும் – வேதத்தில் விதிக்கப்பட்ட அந்த யாகங்களில் ஒன்றனையும், துன்றிய முனிவரும் – நெருங்கிய முனிவர்களும், சுரரும் – தேவரும், பார் தனில் முன் திகழ் அந்தணர் முதலினோர்களும் – பூமியில் முதன்மைபெற்று விளங்குகின்ற பிராமணர் முதலியவர்களும், ஓம்புகின்றிலர் – செய்யாராயினார் [பக்கம் 1/20]
ஓர்ந்தன னன்னதை யூழின் றீநெறி
சார்ந்திடு தக்கன்னோர் வைக றன்முனஞ்
சேர்ந்திடு மிமையவர் திறத்தை நோக்கியே
யீர்ந்திடு தீயதொன் றியம்பு கின்றனன். …… 2
ஊழின் தீநெறி சார்ந்திடு தக்கன் – ஊழினாலே தீய வழியில் நடத்தலைச் செய்யுந் தக்கன், அன்னதை ஓர்ந்தனன் – யாகத்தை யாவருஞ் செய்யாதிருத்தலை அறிந்து, ஓர் வைகல் தன்முனம் சேர்ந்திடும் இமையவர் திறத்தை நோக்கி – ஒருநாள் தன்முன் வந்த தேவர் கூட்டதை நோக்கி, ஈர்ந்திடு தீயதொன்று இயம்புகின்றனன் – உள்ளத்தை பிளந்திடுவதொரு கொடிய வார்த்தையைக் கூறுகின்றான். [பக்கம் 1/20]
எடுத்திடு சுருதியின் இயற்கை முற்றுற
வடித்திடு தேவிர்காள் வரம்பில் காலமா
அடுத்திடும் வேள்விய தாற்றல் இன்றியே
விடுத்ததென் அனையது விளம்பு வீரென்றான். …… 3
எடுத்திடு சுருதியின் இயற்கை முற்றுற வடித்திடு தேவியர்கள் – பிரமாணமாக எடுத்துப் பேசப்படும் வேதத்தின் இயல்புகளனைத்தையுங் கடைபோக நன்கு தெளிந்த தேவர்கள், வரம்பு இல் காலமா – அளவில்லாத காலமாக அடுத்திடும் வேள்வி ஆற்றல் இன்றி – உங்களுக் குரியதாய்ப் பொருந்திய யாகத்தைச் செய்யாமல், விடுத்து என் – நீவிர் விட்ட காரணம் என்னை; அனையது விளம்புவீர் என்றான் – அதனை எனக்குச் சொல்லுங்கள் என்றான். [பக்கம் 2/20]
வேறு
எய்யாது வெய்ய வினையீட்டு தக்கன்
இவைசெப்ப லோடும் இமையோர்
மெய்யார ணத்தன் முதனாள் இயற்று
வேள்விக் களத்தில் அவியூண்
ஐயான னத்தர் பெறநல்கல் என்றி
அதனாலும் நந்தி யடிகள்
பொய்யாத சாப உரையாலும் யாங்கள்
புரியாதி ருத்து மெனவே. …… 4
எய்யாது – வேத உண்மைகளை அறியாது, வெய்ய வினை ஈட்டு தக்கன் – கொடிய வினைகளைச் செய்கின்ற தக்கன், இவை செப்பலோடும் – இவ்வாறு வினவ, இமையோர் – தேவர்கள், மெய் ஆரணத்தன் முதல் நாள் இயற்று வேள்விக் களத்தில் – மெய்ம்மையான வேதங்களை உணர்ந்த பிரமதேவர் முன்னாளில் இயற்றாநின்ற யாகசாலையில், ஐ ஆனனத்தர் பெற அவி ஊண்நல்கல் என்றி – ஐந்து திருமுகங்களையுடைய சிவபெருமான் ஏற்றுக்கொள்ள்ளும்படி அவியுணவைக் கொடாதொழிக என்று நீ கட்டளை செய்தாய்; அதனாலும் – அக்காரணத்தினாலும், நந்தியடிகள் பொய்யாத சாப உரையாலும் – நந்திதேவரின் பொய்த்தலில்லாத சாபவார்த்தையினாலும், யாகங்கள் புரியாது இருந்ததும் என – நாங்கள் யாகஞ் செய்யாதிருப்போமாயினேம் என்று கூற [பக்கம் 2/20]
அந்நாளில் ஈசன் விடுகின்ற நந்தி
அறைகின்ற சாபம் அதனுக்
கிந்நாளும் அஞ்சி மகவேள்வி தன்னில்
யாதுஞ்செ யாது திரிவீர்
முன்னாக யானொர் பெருமா மகத்தை
முறைசெய்வன் முற்றி இடுமேல்
பின்னாக நீவிர் புரிமின்க ளென்று
பீடில்ல வன்பு கலவே. …… 5
அந்நாளில் ஈசன் விடுகின்ற நந்தி அறைகின்ற சாபம் அதனுக்கு – அந்தக் காலத்திலே சிவபெருமான் நந்திதேவர் இட்ட சாபத்துக்கு, இந்நாளும் அஞ்சி மக வேள்வி தன்னில் யாதும் செயாது திரிவீர் – இந்தக்காலத்திலும் பயந்து யாகக் கிரியையில் யாதொன்றையுஞ் செய்யாது திரிதலைச் செய்வீர்; முன்னாக – முன்மாதிரிகையாக, யான் ஒரு பெரு மாமகத்தை முறை செய்வன் – ஒரு பெரிய சிறந்த யாகத்தை யான் முற்கூறிய முறைபப்டி செய்வேன், முற்றியிடுமேல் – அது முடிவுபெறுமானால், பின்னாக நீவிர் புரிமின்கள் என்று – அதன்பின்பு அதனைக் கடைப்பிடித்து நீவிருஞ் செய்யுங்கள் என்று, பீடு இல்லவன் புகல – அருட்பெறுமையற்ற தக்கன் கூற.
மகவேள்வி உம்மைத்தொகையுமாம்; மகமும் வேள்வியும் யாக பேதங்கள் [பக்கம் 2/20]
நீமுன்னொர் வேள்வி புரிகின்ற தைய
நெறியென்றி சைப்ப அவரைப்
போமின்கள் யாரும் எனவே புகன்று
புரிதோறு மேவி மிகவும்
ஏமங்கொள் சிந்தை யுளதக்கன் ஊழின்
இயல்பால்அ தற்பின் ஒருநாள்
ஓமஞ்செய் வேள்வி புரிவான்வி ரும்பி
உள்ளத்தில் உன்னி முயல்வான். …… 6
ஐய நீ முன் ஓர் வேள்வி புரிகின்ற நெறி என்று இசைப்ப – ஐயனே நீயே முதற்கண் ஒரு யாகத்தைச் செய்கின்றது முறையாமென்று கூற, அவரை யாரும் போமின்கள் என புகன்று – அத்தேவர்களை நீவீர் யாவரும் போகக்கடவீர்கள் என்று கூறி, புரிதோறும் ஏவி – அவர்களுடைய நகரங்கள் தோறும் அவர்களை அனுப்பிவிட்டு, மிகவும் ஏமம் கொள் சிந்தை உள தக்கன் – மிகவும் இறுமாப்புக் கொண்ட உள்ளத்தையுடைய தக்கன், ஊழின் இயல் பால் – ஊழ் இருந்தவாற்றால், அதன்பின் ஒருநாள் – அதன்பின்பு ஒருதினம், ஓமம் செய் வேள்வி புரிவான் விரும்பி – ஆகுதி வழங்குகின்ற யாகம் ஒன்றனைச் செய்ய விரும்பி, உள்ளத்தில் உன்னி முயல்வான் – செய்யவேண்டியவைகளை மனத்தில் எண்ணி முயற்சி செய்வானாயினான்.
முயல்வான் என்பதைப் பெயராக்கி வருஞ் செய்யுளில் முடிபு காண்டலுமாம் . [பக்கம் 3/20]
தொட்டாம னுத்தொல் மயனைத் தனாது
சுதரென்ன முன்னம் உதவிக்
கட்டாம ரைக்குள் விதிபோல நல்கு
கலைகற்று ளானை விளியா
முட்டாத வேள்வி யதுவொன்று செய்வன்
முனிவோர்கள் தேவர் உறைவான்
எட்டாத வெல்லை தனில்இன்றொர் சாலை
இயல்பால்வி தித்தி எனவே. …… 7
தொட்டா மனு தொன் மயனை – துவட்டாமனு பழைய மயன் என்னுமிவர்களை, தனாது சுதர் என்ன முன்னம் உதவி – தனது பிள்ளைகள் என்னும்படி முன்னரே பெற்று, கள் தாமரைக்குள் விதிபோல – தேன்பொருந்திய தாமரைமலரின் மீதிருக்கும் பிரமாவைப்போல, நல் கலை கற்றுளானை – படைக்கும் கலையைக் கற்றோனாகிய விசுவகன்மனை, விளியா – அழைத்து, முட்டாத வேள்வி ஒன்று செய்வன் – இடையூறில்லாத யாகம் ஒன்று செய்வேன், முனிவோர்கள் தேவர்கள் உறைவான் – முனிவர்களும் தேவர்களும் இருக்கும்பொருட்டு, எட்டாத எல்லை தனில் – விஸ்திரமான இடத்தில், ஒர் சாலை இயல்பால் இன்று விதித்தி என – ஒரு சாலையை முறையானே இப்பொழுது உண்டாக்கக்கடவை என்று கூற.
துவட்டா முதலியவர்கள் நல் கலை வல்லோர். மனு, மனுஷவர்க்கத்தைத் தோற்றுவிப்பவர். மற்றையோர் சிற்பம் வல்லோர், இங்கே நல்கு கலை சிற்பசாத்திரம் .[பக்கம் 4/20]
வேறு
இனிதென இறைஞ்சியே ஏகிக் கங்கையம்
புனனதி அதனொரு புடைய தாகிய
கனகலம் என்பதோர் கவின்கொள் வைப்பிடை
வினைபுரி கம்மியன் விதித்தல் மேயினான். …… 8
வினைபுரி கம்மியன் இனிது என இறைஞ்சி ஏகி – சிற்பத் தொழிலினைச் செய்யும் விசுவகன்மன் நல்லது என்று வணங்கிச் சென்று, கங்கை அம்புனல் நதியன் ஒரு புடையது ஆகிய – கங்கையாகிய அழகிய நீரினையுடைய நதியின் ஒருசார் பொருந்திய, கனகலம் என்பதோர் கவின்கொள் வைப்பிடை – கனகலம் என்று சொல்லப்படுகின்ற அழகியதோரிடத்தில், விதித்தன் மேயினான் – யாகசாலையை உண்டாக்கத் தொடங்கினான். [பக்கம் 4 /20]
பத்துநூ றியோசனைப் பரப்பும் நீளமும்
ஒத்திடும் வகையதா ஒல்லை நாடியே
வித்தக வன்மையால் வேள்விக் கோரரண்
அத்தகு பொழுதினில் அமைத்து நல்கினான். …… 9
பரப்பு – யாகத்துக்குரிய இடம், பத்து நூறு யோசனை நீளமும் – ஆயிரம் யோசனை நீளமும் அத்துணை அகலமும், ஒத்திடும் வகையதா – தம்முள் ஒக்கும் வகையாக, வேள்விக்கு ஓர் அரண் – அவ்வியாகசாலைக்கு ஒரு மதிலை, ஒல்லை நாடி – விரைந்து ஆராய்ந்து, வித்தக வன்மையால் – சிற்ப சாதுரிய வல்லபத்தால், அத்தகு பொழுதினில் அமைத்து நல்கினான் – அந்த ஏற்ற சமயத்திலேதான் அமைத்தலைச் செய்வான் ஆயினான்.
நீளமும் என்ற உம்மையான் அகலமும் வருவிக்கப்பட்டது. அது பகுதிப் பொருள் விகுதி.
[பக்கம் 4]
நாற்றிசை மருங்கினும் நான்கு கோபுரம்
வீற்றுவீற் றுதவிய வியன்கொள் நொச்சியில்
ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி அன்னதை
ஆற்றலை யுடையதோ ரரணம் ஆக்கினான். …… 10
நற்றிசை மருக்கினும் நான்கு கோபுரம் வீற்று வீற்று உதவி – நான்கு திக்குக்களிலும் நான்கு கோபுரங்களை வேறு வேறு அமைத்து, அவ்வியன்கொள் நொச்சியில் – அந்தப் பெருமை பொருந்திய மதிலில், ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி – பொருத்தமான ஞாயில்களையும் அமைத்து, அன்னதை – அந்தமதிலை, ஆற்றலை உடையது ஓர் அரணம் ஆக்கினான் – வலி படைத்ததோர் அரணாகச் செய்தான்.
ஞாயிறு மதிலுறுப்பு, அது மறைந்து நின்று அம்பு எய்தற்குரியது, இதனை ஏப்புழை, ஏவறை, முடக்கறை என்றுங் கூறுவர். இனி, ஞாயில் என்பதற்கு வாயில் என்று உரைபாருமுளர். அரண் – பாதுகாப்பு. [பக்கம் 5/20]
உள்ளுற அணங்கினர் உறைதற் கோரிடை
தெள்ளிதின் நல்கியே தேவர் தம்மொடு
வள்ளுறை வேற்கணார் மருவி ஆடுவான்
புள்ளுறை வாவியும் பொழிலும் ஆக்கினான். …… 11
அணங்கினர் உள்ளுற உறைதற்கு – தேவப் பெண்கள் உள்ளே இருத்தற்கு, ஓர் இடை தெள்ளிதின் நல்கி – ஓரிடத்தை விளக்கம் உடையதாகச் செய்து, வள்ளுரை வேற்கணார் – கூர்மை பொருந்திய வேல்போன்ற கண்களையுடைய அத் தேவப்பெண்கள், தேவர் தம்மொடு மருவி ஆடுவான் – தேவர்களோடு கூடி விளையாடுதற்கு, புள் உறை வாவியும் பொழிலும் ஆக்கினான் – புட்கள் உறைகின்ற வாவிகளையுஞ் சோலைகளையும் உண்டாக்கினான்.
புள் – வண்டு; பறவையுமாம். [பக்கம் 5/20]
அப்பரி சமைத்துமேல் அமரர் வேதியர்
எப்பரி சனரும்வந் தீண்டி வெஃகின
துய்ப்பதற் கொத்திடு சுவைகொள் தீம்பதம்
வைப்பதோர் இருக்கையும் மரபில் தந்தனன். …… 12
அப்பரிசு அமைத்து – அவ்வாறு செய்து, மேல் – அதன் பின்பு, அமரர் வேதியர் எப்பரிசனரும் வந்து ஈண்டி – தேவர்களும் பிராமணர்களும் மற்றை எல்லாப் பரிசனங்களும் வந்து செறிந்து, வெஃகின துய்ப்பதற்கு – விரும்பியவைகளை உண்ணும் பொருட்டு, சுவை கொள் ஒத்திடு தீம்பதம் – சுவைகள் மாறின்றி ஒன்றோ டொன்று ஒத்திருக்கின்ற இனிய அன்னம் முதலிய உணவு வகைகள், வைப்பது ஓர் இருக்கையும் மரபில் தந்தனன் – வைப்பதற்கேற்ற ஒப்பில்லாத சாலையுஞ் சிற்பநூல் விதிப்படி உண்டாக்கினான்.
துய்ப்பதற்க்கு ஒத்திடு – உண்பதற்குப் பொருத்தமான, எனினுமாம் [பக்கம் 6/20]
அந்தண ராதியோர் அமரர் யாவரும்
வந்துண வருந்துவான் வரம்பில் சாலைகள்
இந்திர வுலகென இமைப்பில் ஈந்தனன்
முந்தையின் மகவிதி முழுதும் நாடினான். …… 13
முந்தையின் மகவிதி முழுதும் நாடினான் – பழைமையாகிய யாக விதிகள் முழுவதையும் ஆராய்ந் தறிந்தவனான விசுவகன்மன், அந்தணர் ஆதியோர் – பிராமணர் முதலியவர்களும், அமரர் யாவரும் – தேவர்க ளனைவரும், வந்து உணவு அருந்துவான் – வந்து உணவு அருந்துதற்கு, வரம்பில் சாலைகள் – அளவில்லாத போசன சாலைகளை, இந்திர உலகு என இமைப்பில் ஈந்தனன் – இந்திரனுடைய உலகம் என்று சொல்லும்படி இமைப்பொழுதில் உண்டாக்கினான். [பக்கம் 6/20]
விருந்தினர் பெற்றிட விரைமென் பாளிதம்
நரந்தமொ டாரம்வீ நறைகொள் மான்மதம்
அருந்துறு வெள்ளடை ஆன பாகிவை
இருந்திடு சாலையும் இயற்றி னானரோ. …… 14
விருந்தினர் பெற்றிட – விருந்தினராகிய வந்தவர்கள் பெறும்வண்னம், விரை மென் பாளிதம் – வாசனை பொருந்திய மென்மையான சந்தனக்குழம்பும், நரந்தமொடு ஆரம் வீ – வாசனைப் பொருள்களும் முத்து மாலைகளும் புஷ்பங்களும், நறை கொள் மான் மதம் – மணம்பொருந்திய கஸ்தூரியும், அருந்துறு வெள் அடை – அருந்துதற்குரிய வெற்றிலையும், பாகு – பாக்கும், ஆன இவை – ஆகிய இவைகள், இருந்திடு சாலையும் இயற்றினான் – இருக்குஞ் சாலைகளையும் உண்டாக்கினான். [பக்கம் 6/20]
ஆனபல் வகையுடை ஆடை செய்யபூண்
மேனதொர் அம்பொனின் வியன்கொள் குப்பைகள்
ஏனைய வெறுக்கைகள் மணிகள் யாவையுந்
தானம தியற்றிடத் தானம் நல்கினான். …… 15
பல்வகையான உடை ஆடை – பலவகையான உடுத்தற்குரிய வஸ்திரங்கள், செய்ய பூண் – செப்பமாய ஆபரணங்கள், மேனது ஓர் அம் பொனின் வியன் கொள் குப்பைகள் – உயர்ந்த ஒப்பில்லாத அழகிய பொன்னாலாகிய பலவகைக் குவியல்கள், ஏனை வெறுக்கைகள் – ஏனைய செல்வங்கள், மணிகள் – இரத்தினங்கள், யாவையும் – ஆகிய எல்லாவற்றையும், தானம் இயற்றிட – தானம் வழங்குவதற்கு, தானம் நல்கினான் – உரிய இடங்களை உண்டாக்கினான்.
அது பகுதிப் பொருள் விகுதி. [பக்கம் 7/20]
கடிகெழு சததளக் கமல மேலுறை
அடிகள்தன் நகர்கொலென் றையஞ் செய்திட
நடைதரு வேள்விசெய் நலங்கொள் சாலைய
திடையுற அமைத்தனன் யாரும் போற்றவே. …… 16
கடி கெழு சத தளக் கமல மேல் உறை – வாசனை பொருந்திய நூறு இதழ்களைக் கொண்ட தாமரைமலர் மீதிருக்கின்ற, அடிகள் தன் நகர்கொல் என்று ஐயம் செய்திட – பிரமதேவருடைய நகரமோ என்று ஐயுறும்படி, நடை தரு வேள்விசெய் நலங்கொள் சாலையது இடை – நிகழ்கின்ற யாகஞ் செய்தற்குரிய நலங்களைக்கொண்ட யாகசாலையினிடத்தே, உற – பொருந்தும்படி, யாரும் போற்ற அமைத்தனன் – யாவருந் துதிக்கும்படி முற்கூறிய அனைத்தையும் உண்டாக்கினான். [பக்கம் 7/20]
நூறெனும் யோசனை நுவலும் எல்லையின்
மாறகல் சாலையின் வன்னி சேர்தரக்
கூறிய மூவகைக் குண்டம் வேதிகை
வேறுள பரிசெலாம் விதித்தல் செய்தனன். …… 17
நூறு எனும் யோசனை நுவலும் எல்லையின் – நூறு யோசனை என்று சொல்லப்படும் எல்லையினை யுடைய, மாறு அகல் சாலையின் – ஒப்பில்லாத யாக சாலைக்கண்ணே, வன்னி சேர்தர – அக்கினி பொருந்துமாறு, கூறிய மூவகைக் குண்டம் வேதிகை – சாத்திரத்திற் கூறப்பட்ட சதுரம் வட்டம் கோணம் என்னும் மூவகைக் குண்டங்களும் யாக வேதிகைகளும், வேறு உள பரிசு எலாம் – வேறாக யாகத்துக்குரியனவாயுள்ள யாவும், விதித்தல் செய்தனம் – உண்டாக்கினான். [பக்கம் 7/20]
மேலொடு கீழ்புடை வெறுக்கை யின்மிசைக்
கோலநன் மணிகளாற் குயிற்றி வாவியுஞ்
சோலையும் பறவையுந் தோமில் தேவரும்
போலிய ஓவியம் புனைந்திட் டானரோ. …… 18
மேலொடு கீழ் புடை – மேலுங் கீழும் பக்கமும், வெறுக்கையின் மிசை – பொன்னின் மீது, கோலநன் மணிகளாற் குயிற்சி – அழகிய நல்ல இரத்தினங்களாற் சித்திரம் இழைத்து, வாவியும் சோலையும் பறவையும் – வாவிகளுஞ் சோலைகளும் பறவைகளும், தோம் இல் தேவரும் – குற்றமற்ற தேவர்களும், போலிய ஓவியம் – போன்ற சித்திரங்களை, புனைந்திட்டான் – புனைந்து அலங்காரஞ் செய்தான். [பக்கம் 8/20]
புண்டரீ காசனம் பொருந்து நான்முகன்
தண்டுள வோன்இவர் தமக்கி ருக்கையும்
எண்டிசை வாணருக் கியலி ருக்கையும்
அண்டருக் கிருக்கையும் அருளல் செய்துமேல். …… 19
புண்டரீக ஆசனம் பொருந்தும் நான்முகன் – தாமரை மல ராசனத்தில் இருக்கும் பிரமதேவர், தண் துளவோன் – தண்ணிய துளவமாலையை யணிந்த விஷ்ணு, இவர் தமக்கு இருக்கையும் – ஆகிய இவர்களுக்கு ஆசனங்களும், எண் திசை வாணருக்கு இயல் இருக்கையும் – திக்குப் பாலகர்க்கு இயைந்த ஆசனங்களும், அண்டருக்கு இருக்கையும் – தேவர்களுக்கு ஆசனங்களும், அருளல் செய்து – உண்டாக்கி, மேல் – அதன் பின்பு [பக்கம் 8/20]
தொக்குறு முனிவரர் தொல்லை வேதியர்
ஒக்கலின் மேயினர் உறையி ருக்கையுந்
தக்கனுக் கிருக்கையுஞ் சமைத்து நல்கினான்
வைக்குறு தவிசின்நூன் மரபின் நாடியே. …… 20
தொக்குறு முனிவரர் – தொகுதியாய்ப் பொருந்திய முனி சிரேட்டர்கள், தொல்லை வேதியர் – பழைய பிராமணர்கள், ஒக்கலின் மேயினர் – சுற்றத்தவர்களாய் வந்தவர்கள், உறை இருக்கையும் – இருத்தற்குரிய ஆசனங்களையும், தக்கனுக்கு இருக்கையும் – தக்கனுக்கு ஆசனத்தையும், வைக்குறு தவிசின் நூல் மரபின் நாடி அமைத்து நல்கினான் – வைதல் உறுகின்ற ஆசனத்துக்குரிய நூன்முறையால் ஆராய்ந்து உண்டாக்கிக் கொடுத்தான். [பக்கம் 8/20]
தக்கனை வணங்கிநின் சாலை முற்றிய
புக்கனை காண்கெனப் புனைவன் செப்பலும்
அக்கண மதுதெரிந் தளவி லாதர
மிக்கனன் மகிழ்ந்தனன் விம்மி தத்தினான். …… 21
புனைவன் – விசுவகன்மன், தக்கனை வணங்கி – தக்கனை வணக்கஞ் செய்து, நின் சாலை முற்றிய – உனது யாகத்துக்குரிய சாலைகள் முற்றுப்பெற்றன; புக்கனை காண்க எனச் செப்பலும் – சென்று காண்பாயாக என்று கூறுதலும், அக்கணம் அது தெரிந்த – அப்பொழுதே அதனைச் சென்று கண்டு, அளவு இல் ஆதரம் மிக்கனன் மகிழ்ந்தனன் – அளவில்லாத அன்பு மிகுந்து மகிழ்ந்து, விம்மிதத்தினான் – ஆச்சரியம் உடையவன் ஆயினான். [பக்கம் 9]
பூங்கம லத்தமர் புனிதன் கான்முளை
பாங்கரின் முனிவரில் பலரைக் கூவியே
தீங்கனல் மாமகஞ் செய்ய நூன்முறை
யாங்கனம் வலித்தனன் அவர்க்குச் செப்புவான். …… 22
பூங்கமலத்து அமர் புனிதன் கான்முளை – தாமரைமலரில் இருக்கும் புனிதரான பிரமதேவரின் புதல்வனான தக்கன், பாங்கரின் முனிவரிற் பலரைக் கூவி – பக்கத்திலிருந்த முனிவர்களிற் பலரை விளித்து, நூன்முறை – சாத்திரவிதிப்படி, தீங்கனல் மாமகம் செய்ய வலித்தனன் – நல்ல அக்கினியோடு கூடிய பெரிய யாகத்தைச் செய்தற்கு மனவுறுதிகொண்டவனாய், அங்கனம் அவர்க்குச் செப்புவான் – அவ்விடத்தில் அவர்களுக்குச் சொல்லுவானாயினான். [பக்கம் 9/20]
தருவுறு சமிதைகள் சாகை தண்ணடை
பரிதிகள் மதலைநாண் பறப்பை பல்பசு
அரணிநன் முதிரைகள் ஆதி யாவிதற்
குரியன உய்த்திரென் றொல்லை ஏவினான். …… 23
தருவுறு சமிதைகள் – தக்களிற் பொருந்திய சமித்துகள், சாகை கிளைகள், தண் அடை – தண்ணிய இலைகள், பரிதிகள் – விட்டரங்கள், மதலை – யாகத்தம்பம், நாண் – தருப்பைக்கயிறு, பறப்பை – நெய்விடும் பாத்திரம், பல் பசு – பலவாகிய யாகப் பசுக்கள், அரணி – தீக்கடைக்கோல், நல் முதிரைகள் – நல்ல தானியங்கள், ஆதியா – முதலியனவாக, இதற்கு உரியன உய்த்திர் என்று – இந்த யாகத்துரியவைகளைக் கொண்டுவாருங்கள் என்று, ஒல்லி ஏவினான் – விரைவாக அனுப்பினான்.
விட்டரங்கள் ஆசனமாகிய பீடங்கள். இவை யாக வேதிகையி லிடப்படுவன. வட்டவடிவினவாதல் பற்றிய பரிதிகள் எனப்பட்டன. நாண் யாகப் பசுக் கட்டுங் கயிறுமாம். நெய்விடும் பாத்திரம் பறவை வடிவினதாதலின் பறப்பை எனப்பட்டது. யாக வேதிகையிற் சித்தரிக்கும் பறவை வடிவமும் பறப்பை என்னபடும். அதில் யாகப் பசுவை நிறுத்துதலினாலே பறப்பைப் படுத்துப் பசுவேட்டு என்றது தேவாரம். யாகத்திற் பலியிடும் ஆடு முதலியன பசுவெனப்படுதலின் பல்பசு என்றார். பலியாவது பசுத்துவ நீக்கமாம். புன்மையாம் பசுத் தடிந்து என்பது காமதகனம். காமன் புன்மையாகிய பசுதத்துவம் தடியப்பட்டு உயர்நிலை எய்தி எழுந்து யாகத்தின் பெருநிலைய உணர்த்துவதாம்.
புன்மையாம் பசுத்த டிந்து புரையில் வேள்வி யாற்றியே
தொன்மைபோ லெழுப்பு மாறு சுருதி சொற்று வாறு
காமதகனம் எழுபத்திரண்டாஞ் செய்யுள். இங்கே வருந் தொன்மை, புன்மையாகிய முந்திய நிலை அன்றென்பது சிந்திக்கற்பாலதாம்.[ப 9/20]
ஆனொடு நிதிகளை மணியை ஐந்தருக்
கானினை அழைத்துநம் மகத்தைக் காணிய
மாநிலத் தந்தணர் வருவர் உண்டியும்
ஏனைய பொருள்களும் ஈமென் றோதினான். …… 24
ஆனொடு நிதிகளை – காமதேனுவையும் சங்கநிதி பதுமநிதிகளையும், மணியை – சிந்தாமணியையும், ஐந்தருக் கானினை – ஐந்தருக்களாகிய சோலைகளையும், அழைத்து – விளித்து, நம் மகத்தைக் காணிய மாநிலத்து அந்தணர் வருவர் – நமது யாகத்தைத் தரிசித்தற்குப் பெரிய பூமியில் உள்ள பிராமணர்கள் வருவார்கள், உண்டியும் ஏனைய பொருள்களும் ஈம் என்று ஓதினான் – அவர்களுக்கு உணவும் பிற பொருள்களும் உதவுங்கள் என்று பணித்தான்
ஐந்தரு: அரிச்சந்தானம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்பன. [பக்கம் 10/20]
நல்விடை கொண்டுபோய் நவையி லான்முதற்
பல்வகை யவையெலாம் படர்ந்து வீற்றுவீற்
றொல்வதோ ரிடந்தொறும் உற்ற ஆயிடைச்
செல்வதோர் பொருளெலாஞ் சிறப்பின் நல்கவே. …… 25
நவை இல் ஆன் முதற் பல்வகை அவை எலாம் – குற்றமில்லாத காமதேனு முதலிய பலவகைபட்டனவாகிய அனைகள் அனைத்தும், நல் விடை கொண்டு போய் – நன்கு விடைபெற்றுக்கொண்டு சென்று, படர்ந்த – பரந்து, வீற்று வீற்று ஒல்வதோர் இடந்தொறும் – வேறு வேறு இயைந்த இடந்தோறும், ஆயிடை – அவ்விடத்தின்கண், செல்வது ஓர் பொருள் எலாம் – கொடுத்தற்குரிய சிறந்த பொருள்களை யெல்லாம், சிறப்பின் நல்க உற்ற – சிறப்பாகக் கொடுத்தற்குரிய சிறந்த பொருள்களை யெல்லாம், சிறப்பின் நல்க உற்ற – சிறப்பாகக் கொடுத்தற்கு இருந்தன.
இடந்தொறுங் கொடுக்கும்முகமாக இருந்தன என்பதாம். [பக்கம் 10/20]
தனதுறு கிளைஞராய்த் தணப்பி லாததோர்
முனிவரர் தங்களின் முப்ப தாயிரர்
துனியறு வோர்தமைச் சொன்றி ஏனவை
அனைவரும் விருப்புற அளித்தி ரென்றனன். …… 26
தனது உறு கிளைஞராய் – தன்னுடைய உற்ற சுற்றத்தவர்களாய், தணப்பு இலாதது ஓர் முனிவரர் தங்களில் – நீங்குதலில்லாத ஒப்பற்ற முனி சிரேட்டர்களில், துனி அறுவோர் முப்பதாயிரர் தமை – நிகழ்ச்சிகளில் வெறுப்பில்லாத முப்பதாயிரவர்களை, சொன்றி ஏனவை – சோற்றையும் ஏனைய வற்றையும், அனைவரும் விருப்பு உற – யாவரும் விரும்பி ஏற்றுக்கொள்ள, அளித்தனர் என்றனன் – கொடுக்குதிர் என்று பணித்தான். [பக்கம் 10/20]
மற்றவர்க் கிருதிற மாத வத்தரை
உற்றனர் யாவரும் உண்டி அன்றியே
சொற்றன யாவையுந் தொலைவின் றீமென
நற்றவத் தயன்மகன் நயப்புற் றேவினான். …… 27
அவர்க்கு இருதிற மாதவத்தரை – முற்கூறப்பட்ட முனிவர்களின் தொகையினும் இருமடங்கு தொகையினராகிய முனிவர்களை, உற்றனர் யாவரும் -இங்கே வந்தவர் அனைவரும், உண்டி அன்றி – உணவு அல்லாமல், சொற்றன யாவையும் – கேட்டன யாவற்றையும், தொலைவு இன்று – ஓய்வு இல்லாமல், ஈம் என – கொடுக்குதிர் என்று, நல் தவத்து அயன் மகன் – நல்ல தவத்தையுடைய பிரமாவின் புதல்வனான தக்கன், நயப்புற்று ஏவினான் – விருப்பத்தோடு பணித்தான்.
அவர்க் கிருதிறம் – அறுபதினாயிரம். [பக்கம் 11/20]
தீதினை நன்றெனத் தெளியும் நான்முகன்
காதலன் ஓர்மகங் கடிதி யற்றுவான்
வேதியர் விண்ணவர் யாரும் மேவுவான்
தூதரை நோக்கியே இனைய சொல்லுவான். …… 28
தீதினை நன்று எனத் தெரியும் நான்முகன் காதலன் – குற்றத்தைக் குணமென்று துணியும் பிரம புத்திரனான தக்கன், ஓர் மகம் கடிது இயற்றுவான் – ஒப்பற்ற யாகத்தை விரைந்து செய்தற்கு, வேதியர் விண்ணவர் யாரும் மேவுவான் – பிராமணர்களுந் தேவர்களும் மற்றையோர் யாவரும் வரும் பொருட்டு, தூதரை நோக்கி இனைய சொல்லுவான் – தூதுவர்களைப் பார்த்து இவைகளைச் சொல்லுனானாயினான். [பக்கம் 11/20]
நக்கனை யல்லதோர் நாகர் தங்களை
மிக்குறு முனிவரை வேத மாந்தரைத்
திக்கொடு வான்புவி யாண்டுஞ் சென்றுகூய்
உய்க்குதி ராலென உரைத்துத் தூண்டினான். …… 29
ஓர் நக்கனை அல்லது – சுற்றத் தொடர்பில்லாத ஒருவனும் நிர்வாணியுமான அந்தச் சிவனை அழைத்தல் செய்யாமல், நாகர் தங்களை – தேவர்களையும், மிக்கு உறு முனிவரை – எண்ணால் மிக்க முனிவர்களையும், வேத மாந்தரை – வைதிகப் பிராமணர்களையும், திக்கொடு வான் புவி யாண்டும் சென்று – திக்குகள் விண் மண் ஆகிய எவ்விடங்களிலுஞ் சென்று, கூய் உய்க் குதிர் என உரைத்துத் தூண்டினான் – அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறி அனுப்பினான்.
அல்லது , கூய் என்பதற்கு எதிர்மறையாகிய பொருளில் வந்தது. நக்கனே முக்கியமானாவன்; அவனையன்றி மற்றையோரையுங் கூய் உய்க்குதிர் என்ற பொருள் தக்கன் வாக்கில் அவனறியாமலே அமைந்து கிடந்தமையுங் காண்க. [ப 12/20]
முந்துற வரித்திடும் முனிவர் அவ்வழித்
தந்தனர் மகஞ்செயத் தகுவ யாவையும்
வந்தன நோக்கியே மரபில் உய்த்திரென்
றெந்தைதன் அருளிலான் இயம்பி னானரோ. …… 30
முந்துற வரித்திடு முனிவர் – முன்னமே வரிக்கப்பட்ட முனிவர்கள், அவ்வழி மகஞ் செய்த் தகுவ யாவையும் தந்தனர் – அவ்விடத்தில் யாகஞ் செய்தற்குத் தக்கனவாய பொருள்க ளனைத்தையுங் கொண்டுவந்தார்கள்; வந்தன நோக்கி – அவர்கள் கொண்டுவந்தனவாகிய பொர்ருள்களைப் பார்த்து; மரபில் உய்த்தியர் என்று – அவைகளை முறையானே வைக்கவேண்டிய இடங்களில் வைக்குதிர் என்று, எந்தை தன் அருள் இலான் இயம்பினான் – எம்பெருமானுடைய திருவருளில்லாத தக்கன் கூறினான். [பக்கம் 12/20]
வரித்திடு பான்மையின் வழாது போற்றிடும்
இருத்தினர் தமிற்பலர் யாக சாலையுள்
திருத்திய வேதிவாய்ச் செறிபல் பண்டமும்
நிரைத்தனர் பறப்பையும் நிலையிற் சேர்த்தினார். …… 31
வரித்திடு பான்மையின் – நியமிக்கப்பட்ட முறையானே, வாழாது போற்றிடும் இருத்தினர் தமில் பலர் – தமக்கு விதித்தவற்றை வழுவின்றிச் செய்யும் இருத்துவிக்குக்களிற் பலர், யாக சாலையுள் திருத்திய வேதிவாய் – யாகசாலையுட் செப்பனிடப்பட்ட வேதிகைகளில், செறி பல் பண்டமும் – செறிந்த பலவகைப் பொருள்களையும், நிரைத்தனர் – நிரைத்து, பறப்பையும் நிலையிற் சேர்த்தினார் – நெய்ப் பாத்திரங்களையும் வைக்கவேண்டு மிடத்தில் வைத்தார்கள்.
அசைவறு வேதியின் அணித்தி னோரிடை
வசைதவிர் மதலைகள் மரபின் நாட்டுபு
பசுநிரை யாத்தனர் பாசங் கொண்டுபின்
இசைதரு பூசையும் இயல்பின் ஆற்றினார். …… 32
அசைவு அறு வேதியின் அணித்தின் ஓர் இடை – அசைவற்ற வேதியின் சமீபத்தில் ஒரு பக்கத்தில், வசை தவிர் மதலைகள் மரபின் நாட்டுபு – குற்றமற்ற யாகத் தம்பங்களை விதிப்படி நாட்டி, பாசங்கொண்டு பசுநிரை யாத்தனர் – கயிறுகளால் யாகப் பசுநிரைகளை அத் தம்பங்களிற் கட்டி, பின் – பின்பு, இயல்பின் இசை தரு பூசையும் ஆற்றினர் – முறைப்படி அவற்றுக்கு விதித்த பூசையையுஞ் செய்தார்கள்.
பசு என்பது யாகத்திற்கு பலியிடும் ஆடு முதலியவைகளுக்கு வழங்குவதொரு குறியீடு; பசுத்துவம் போக்கப்படுதலின் அக்குறியீடு வழங்கலாயிற்று. நிரை வரிசை என்னும்பொருட்டு.[ப 13/20]
வேறு
நடையிது நிகழும் வேலை நலமிலாத் தக்கன் நல்கும்
விடைதலைக் கொண்டு போய வியன்பெருந் தூதர் தம்மில்
புடவியின் மறையோர்க் கெல்லாம் புகன்றனர் சிலவர் வெய்யோன்
உடுபதி நாள்கோள் முன்னர் உரைத்தனர் சிலவர் அன்றே. …… 33
இது நடை நிகழும் வேலை – இந்த யாகக் கிரிகைகள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க, நலம் இலாத் தக்கன் நல்கும் விடை தலைக் கொண்டு போயவினன் பெருந் தூதர் தம்மில் – அருட்செல்வம் இல்லாத தக்கன் இட்ட கட்டளையைத் தலைமேற்கொண்டு சென்ற மிகப் பெருமை படைத்த தூதுவர் களுக்குள்ளே, சிலவர் புடவியின் மறையோர்க்கெல்லாம் புகன்றனர் – சிலர் பூமியிலுள்ள பிராமணர்க ளனைவருக்குஞ் சொன்னார்கள்; சிலவர் வெய்யோன் உடுபதி நாள் கோள் முன்னர் உரைத்தனர் – சிலர் சூரியன் சந்திரன் நட்சத்திரம் கிரகம் என்னும் இவற்றின் முன்னிலையிற் சென்று சொன்னார்கள். [ப13/20]
காவல ராகி வைகுங் கந்தரு வத்த ராதி
ஆவதோர் திறத்தோர்க் கெல்லாம் அறைந்தனர் சிலவர் ஆசை
மேவிய கடவு ளோர்க்கும் விளம்பினர் சிலவர் முப்பால்
தேவர்கள் யாருங் கேட்பச் செப்பினர் சிலவ ரன்றே. …… 34
சிலவர் – சிலர்; காவலர் ஆகி வைகும் – அரசர்களாயிருக்கும், கந்தருவத்தர் ஆதி – கந்தருவர் முதலிய, ஆவதோர் திறத்தோர்க்கு எல்லாம் – அத்தகைய தலைமைப்பாடுடையவர்களுக் கெல்லாம், அறைந்தனர் – சொன்னார்கள்; சிலவர் – சிலர், ஆசை மேவிய கடவுளோர்க்கும் விளம்பினர் – திக்குக்களிற் பொருந்திய திக்குப் பாலகர்களாகிய தேவர்களுக்குஞ் சொன்னார்கள்; சிலவர் – சிலர், முப்பால் தேவர்கள் யாரும் கேட்பச் செப்பினர் – முத்திறத்தாராகிய தேவர்களெல்லாங் கேட்கும்படி சொன்னார்கள்.
முப்பால் தேவர்கள்: வசுக்கள் உருத்திரர் மருத்துவர், இவர்களோடு எண்ணப்படும் ஆதித்தியர் மேலைச் செய்யுளில் வெய்யோன் என்பதில் அடங்குவர். [பக்கம் 13/20]
விண்ணக முதல்வ னுக்கு விளம்பினர் சிலவர் ஆண்டு
நண்ணிய தேவர்க் கெல்லாம் நவின்றனர் சிலவர் மேலைப்
புண்ணிய முனிவ ரர்க்குப் புகன்றனர் சிலவர் ஏனைப்
பண்ணவர் முன்னஞ் சென்று பகர்ந்தனர் சிலவர் அம்மா. …… 35
சிலவர் விண்ணக முதல்வனுக்கு விளம்பினர் – சிலர் வானுலக முதல்வனாகிய இந்திரனுக்கு சொன்னார்கள்; சிலர் ஆண்டு நண்ணிய தேவர்க்கெல்லாம் நவின்றனர் – சிலர் விண்ணுலகில் வாழந் தேவர்களுக்கு எல்லாம் சொன்னார்கள்; சிலவர் ஏனைப் பண்ணவர் முன்னம் சென்று பகர்ந்தனர் – சிலர் மற்றையவிடங்களிலுள்ள முனிவர்கள் எதிரே சென்று அவர்களுக்குஞ் சொன்னார்கள்.
மேலைப் புண்ணிய முனிவர் – தேவ முனிவர் [பக்கம் 14/20]
வானவர் முதுவன் தொல்லை மன்றன்மா நகரத் தெய்திக்
கோனகர் வாயில் நண்ணிக் குறுகினர் காப்போர் உய்ப்ப
மேனிறை காத லோடும் விரைந்தவற் றாழ்ந்து நின்சேய்
ஆனவன் வேள்விக் கேக அடிகள்என் றுரைத்தார் சில்லோர். …… 36
வானவர் முதுவன் தொல்லை மன்றல் மாநகரத்து எய்தி – தேவர்களுள் முதியோரான பிரமதேவரின் பழைமையும் மங்களகரமும் பொருந்திய நகரமாகிய மனோவதியை அடைந்து, கோனகர் வாயில் நண்ணிக் குறுகினர் – அரசமாளிகையின் வாயிலைச் சமீபித்துப் போய், காப்போர் உய்ப்ப – காவலாளர் உள்ளே விடுப்ப, மேல் நிறை காதலோடும் விரைந்து அவற் றாழ்ந்து – மிக்கு நிறைந்த அன்போடும் விரைந்து அப்பிரமதேவரை வணங்கி, அடிகள் – சுவாமிகாள், நின்சேய் ஆனவன் கேள்விக்கு ஏக என்று – உமது குமாரனான தக்ஷப்பிரசாபதியின் யாகத்துக்கு எழுந்தருள்க என்று, சில்லோர் உரைத்தார் – சிலர் சொன்னார்கள். [பக்கம் 14/20]
மேனகு சுடர்செய் தூய விண்டுல கதனை நண்ணி
மானிறை கின்ற கோயில் மணிக்கடை முன்னர் எய்திச்
சேனையந் தலைவன் உய்ப்பச் சீதரற் பணிந்து வேள்விப்
பான்மைய தியம்பி எந்தை வருகெனப் பகர்ந்தார் சில்லோர். …… 37
மேல் நகு சுடர் செய் தூய விண்டு உலகதனை நண்ணி – மேலாகிய ஒளி காலுகின்ற தூய விட்டுணுவின் உலகத்தை அடைந்து, மால் நிறைகின்ற கோயில் மணிக்கடை முன்னர் எய்தி – பெருமையாகிய திருநிறைகின்ற அழகிய கடைத்தலை வாய்தலிற் சென்று, சேனையந் தலைவன் உய்ப்ப – சேனைத் தலைவனாகிய விடுவசேனன் உள்ளே விடுப்ப, சீதரற் பணிந்து – ஸ்ரீதரனான திருமாலை வணங்கி, கேள்விப் பான்மையது இயம்பி – யாகத்தின் வரலாற்றைச் சொல்லி, எந்தை வருக எனச் சில்லோர் பகர்ந்தார் – எம்பெருமானே எழுந்தருள்வீராக என்று சிலர் கூறினார்கள். [ப 15/20]
மற்றது போழ்து தன்னில் மாயவன் எழுந்து மார்பூ
டுற்றிடு திருவும் பாரும் உடன்வர உவணர் கோமான்
பொற்றடந் தோள்மேற் கொண்டு போர்ப்படை காப்பத் தன்பாற்
பெற்றனர் சூழத் தானைப் பெருந்தகை பரவச் சென்றான். …… 38
அது போழ்து தன்னின் மாயவன் எழுந்து – அப்பொழுது மகாவிஷ்ணு மூர்த்தியானவர் எழுந்து, மார்பு ஊடு உற்றிடு திருவும் பாரும் உடன்வர – மார்பின்கட் பொருந்திய திருமகளும் பூமகளும் உடன்வாராய்நிற்ப, உவணர் கோமான் பொன் தடம் தோள் மேற் கொண்டு – கருடர்கோமானின் அழகிய விசாலித்த தோள்மீதிவர்ந்து, போர்ப்படை காப்ப – பொருகின்ற சேனைகள் காத்துவர, தன்பாற் பெற்றனர் சூழ – தம்மிடம் தமது சாரூபத்தைப் பெற்றவர்களாகிய நாராயணர்கள் சூழ்ந்துவர, தானைப் பெருந்தகை பரவச் சென்றான் – சேனாபதியாகிய விடுவசேனன் துதிக்கச் சென்றார். [பக்கம் 15/20]
செல்லலும் அதனை நாடித் திசைமுகக் கடவுள் அங்கண்
ஒல்லையில் எழுந்து முப்பால் ஒண்டொடி மாத ரோடும்
அல்லியங் கமலம் நீங்கி அன்னமேற் கொண்டு மைந்தர்
எல்லையில் முனிவர் யாரும் ஏத்தினர் சூழப் போந்தான். …… 39
செல்லும்படி – இவ்வாறு மகாவிஷ்ணு செல்லுதலும், திசைமுகக் கடவுள் அதனை நாடி – பிரமதேவர் அதனை அறிந்து, அங்கண் ஒல்லையின் எழுந்து – அவ்விடத்தில் விரைந்தெழுந்து, ஒண்டொடி முப்பால் மாதரோடும் – ஒள்ளிய வளையலையணிந்த காயத்திரி சாவித்திரி சரசுவதி ஆகிய மூன்று சத்திகளோடும், அல்லி அம் கமலம் நீங்கி – அகவிதழினையுடைய அழகிய தாமரை ஆசனத்தை விடுத்து, அன்னம் மேற் கொண்டு – அன்னத்தின்மீதிவர்ந்து, மைந்தர் – நவப்பிரமாக்களாகிய தம்புதல்வர்கள், எல்லையில் முனிவர் – அளவற்ற முனிவர்கள், யாரும் -ஆகிய யாவரும், ஏத்தினர் சூழப் போந்தான் – துதித்துச் சூழ்ந்துவரச் சென்றார். [ப 15/20]
மாலொடு பிரமன் ஈண்டி வருதலும் மகவான் என்போன்
வேலொடு வில்லும் வாளும் விண்ணவர் ஏந்திச் சூழ
நாலிரு மருப்பு வெள்ளை நாகம துயர்த்துத் தங்கள்
பாலுறை குரவ ரோடு பாகமார் விருப்பில் வந்தான். …… 40
மாலொடு பிரமன் ஈண்டி வருதலும் – விஷ்ணுவும் பிரமாவும் பரிவாரங்களோடு கூடிச் செல்லுதலும், மகவான் என்போன் – இந்திரன், விண்னவர் வேலொடு வில்லும் வாளும் ஏந்திச் சூழ – தேவர்கள் வில் வாள் என்கின்ற படைகளை ஏந்திக்கொண்டு சூழ்ந்து வர, நால் இரு மருப்பு வெள்ளை நாகமது உயர்ந்து – நான்கு பெரிய தந்தங்களையுடைய வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் இவர்ந்து, தங்கள் பால் உறை – தேவர்கள்பாலுறைகின்ற, குரவரோடு – வியாழபகவான் முதலிய குரவர்களோடு, பாகம் ஆர் விருப்பில் வந்தான் – அவிப்பாகத்தை நுகரும் விருப்பத்துடன் சென்றான்.
உயர்த்து – உயரச்செய்து, தன்னை உயரச்செய்தலாவது இவர்தலாம். சுக்கிர பகவானையுஞ் சேர்த்துக் குரவர் என்றார். அவர் அசுர குருவாயினும் தேவர்கள்பா லுறைபவ ரென்க. [ப 16/20]
ஆயவன் புரத்தில் வைகும் அரம்பையே முதலா வுள்ள
சேயிழை மார்கள் யாருந் தேவரோ டகன்றார் எங்கள்
நாயகன் போந்தான் என்றே நலமிகு சசியென் பாளுந்
தூயதோர் மானத் தேறித் தோகையர் காப்பச் சென்றாள். …… 41
ஆயவன் புரத்தில் வைகும் – அந்த இந்திரனுடைய நகரத்தில் வசிக்கின்ற, அரம்பை முதலான உள்ள சேயிழைமார்கள் யாரும் – அரம்பை முதலிய செம்மையாகிய ஆபரணங்களை யணிந்த தெய்வப் பெண்கள் எல்லாம், தேவரொடு அகன்றார் – தேவர்களோடு சென்றார்கள்; எங்கள் நாயகன் போந்தான் என்று – எங்கள் நாயகனாகிய இந்திரன் சென்றான் என்று கூறி, நலம் மிகு சசி என்பாளும் – நலம் மிக்க இந்திராணியும், தூயது ஓர் மானத்து ஏறி – தூய்மையுடைய விமானத் திவர்ந்து, தோகையர் காப்பச் சென்றாள் – தேவப்பெண்கள் காத்துவரச் சென்றாள்.[ப 16/20]
எண்டிசைக் காவலோரும் ஈரிரு திறத்த ரான
அண்டரும் உடுக்கள் தாமும் ஆரிடத் தொகையு ளோரும்
வண்டுளர் குமுதம் போற்றும் மதியமும் ஏனைக் கோளும்
விண்டொடர் இயக்கர் சித்தர் விஞ்சையர் பிறரும் போந்தார். …… 42
எண்டிசைக் காவலோரும் – திக்குப்பாலகர்களும், ஈர் இரு திறத்தரான – ஆதித்தியர் உருத்திரர் வசுக்கள் மருத்துவர் என்னும் நான்கு பகுதியினரான, அண்டரும் – முப்பத்துமுக்கோடி தேவரும், உடுக்கள் தாமும் – நட்சத்திரங்களும், ஆரிடத் தொகையுளோரும் – இருடிகளின் கூட்டமும், வண்டு உளர் குமுதம் போற்றும் – வண்டுகள் உளருகின்ற குமுதமலர் தனக்கு நாயகன் என்று வணங்கும், மதியமும் – சந்திரனும், ஏனைய கோளும் – ஏனைய கிரகங்களும், விண் தொடர் – விண்ணிற் சஞ்சரிக்கின்ற, இயக்கர் சித்தர் விஞ்சையர் பிறரும் போந்தார் – இயக்கர்களுஞ் சித்தர்களும் வித்தியாதரர்களும் மற்றையோர்களுஞ் சென்றார்கள்.
ஆதித்தர் பன்னிருவர் ; உருத்திரர் பதிரொருவர்; வசுக்கள் எண்மர்; மருத்துவர் இருவர் ஆகத் தேவர்கள் முப்பத்துமூன்று திறத்தார் என்க. [பக்கம் 16/20]
சேணிடை மதியி னோடு செறிதரும் உடுக்க ளான
வாணுதல் மகளிர் யாரும் மகிழ்வொடு தந்தை வேள்வி
காணிய வந்தார் ஈது கண்ணுறீஇ அவுணர் கோமான்
சோணித புரத்துக் கேளிர் தொகையொடுந் தொடர்ந்து சென்றான். …… 43
சேண் இடை மதியினோடு செறிதரும் – ஆகாயத்தின்கண்ணே சந்திரனோடு செறிந்திருக்கின்ற, உடுக்களான வாள் நுதல் மகளிர் யாரும் – அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களாகிய ஒளி பொருந்திய நெற்றியினையுடைய பெண்கள் யாவரும், தந்தை வேள்வி காணிய மகிழ்வொடு வந்தார் – தந்தையாகிய தக்கனின் யாகத்தைக் காணும்பொருட்டு மகிழ்ச்சியோடு சென்றார்கள்; அவுணர் கோமான் ஈது கண்ணுறீஇ – அசுரர்க் கரசனான அசுரேந்திரன் இதனைக் கண்டு, தொடர்ந்து – அவர்களை தொடர்ந்து, சோணித் புரத்துக் கேளிர் தொகையொடு சென்றாள் – சோனித புரமான தனது நகரதிலுள்ள சுற்றத்தவர்களோடு தானுஞ் சென்றான். [ப 17/20]
வனைகலன் நிலவு பொற்றோள் வாசவன் முதலா வுள்ள
இனையரும் பிறரும் எல்லாம் இருவர்தம் மருங்கும் ஈண்டிக்
கனகல வனத்திற் செய்த கடிமகச் சாலை எய்த
முனிவர ரோடுந் தக்கன் முன்னெதிர் கொண்டு நின்றான். …… 44
வனை கலன் நிலவு பொற்றோள் – அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்கள் பிரகாசிக்கின்ற அழகிய புயங்களையுடைய, வாசவன் முதலா உள்ள இனையரும் பிறரும் எல்லாம் – இந்திரன் முதலிய இத்தகையாரும் பிறரெல்லாரும், இருவர் தம்மருங்கும் ஈண்டி – பிரம் விஷ்ணுக்களாகிய இருவரின் பக்கத்திலும் நெருங்கி, கனகல வனத்திற் செய்த கடி மகச் சாலை எய்த – கனகலம் என்னும் வனத்திற் செய்த காவல் பொருந்திய யாகசாலையை அடைய, தக்கன் முனிவரரோடு முன் எதிர்கொண்டு நின்றான் – தக்கன் முனிசிரேட்டர்களோடு அவர்கள் முன்னிலையிற் சென்று எதிர்கொண்டு நின்றான். [ப 17/20]
எதிர்கொடு மகிழ்ந்து மேலாம் இருவர்தங் களையும் அங்கண்
முதிர்தரு காத லோடு முறைமுறை தழுவி வானோர்
பதிமுத லோரை நோக்கிப் பரிவுசெய் தினையர் தம்மைக்
கதுமெனக் கொண்டு வேள்விக் கடிமனை இருக்கை புக்கான். …… 45
அங்கண் எதிர்கொடு மகிழ்ந்து – அங்கே எதிர்கொண்டு மகிழ்ச்சியெய்தி, மேலாம் இருவர் தங்களையும் – மேலான பிரம விஷ்ணுக்கள் இருவரையும், முதிர் தரு காதலோடு – முதிர்ந்த ஆராமையோடு, முறை முறை தழுவி – தழுவும் முறைப்படி முறையே தழுவுதல் செய்து, வானோர் பதி முதலோரை பரிவு செய்து நோக்கி – தேவேந்திரன் முதலியவர்களை அன்புகூர்ந்து நோக்குதல் செய்து, இனையர் தம்மை கதுமெனக் கொண்டு – இத்தகையாரையெல்லாம் விரைந்து அழைத்துக்கொண்டு, வேள்விக் கடி மனை இருக்கை புக்கான் – யாகசாலையுள்ளே காவல்பொருந்திய தனக்குரிய மனையாகிய இருபிடத்தை அடைந்தான். [ப 18/20]
மாலயன் தன்னை முன்னர் மணித்தவி சிருத்தி வான
மேலுறை மகவா னாதி விண்ணவர் முனிவர் யார்க்கும்
ஏலுறு தவிசு நல்கி இடைப்பட இருந்தான் தக்கன்
காலுறு கடலா மென்னக் கடவுள்மா மறைக ளார்ப்ப. …… 46
மால் அயன் தன்னை முன்னர் மணித் தவிசு இருந்தி – விட்டுணுவையும் பிரமாவையும் முதற்கண் இரத்தினாசனங்களில் இருத்தி, வான்மேல் உறைமகவான் ஆதி விண்ணவர் முனிவர் யார்க்கும் – வானத்தில் வசிக்கும் இந்திரன் முதலிய தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மற்றை யாவருக்கும், ஏல் உறு தவிசு நல்கி – அவரவர் தாரதம்மியத்துக் கேற்ப ஆசனங்களைக் கொடுத்து, கால் உறு கடலாம் என்ன – காற்றால் மோதுண்ட கடல்போல, கடவுள் மா மறைகள் ஆர்ப்ப – தெய்வத்தன்மை பொருந்திய பெரிய வேதங்கள் முழங்க, இடைப்பட்ட இருந்தான் தக்கன் – அவர்களுக்கு எல்லாம் மத்தியில் வீற்றிருந்தான் தக்கப் பிரசாபதி. [ப 18/20]
அல்லியங் கமல மாதும் அம்புவி மகளும் வேதாப்
புல்லிய தெரிவை மாரும் பொருவிலா உடுவி னோருஞ்
சொல்லருஞ் சசியும் ஏனைச் சூரினர் பிறரும் வேத
வல்லிதன் இருக்கை நண்ணி மரபின்வீற் றிருந்தார் மன்னோ. …… 47
அல்லி அம் கமல் மாதும் – அகவிதழினையுடைய அழகிய தாமரை யாசனியாகிய மகாலக்குமியும், அம் புவிமகளும் – அழகிய பூமிதேவியும், வேதாப் புல்லிய தெரிவைமாரும் – பிரமதேவர் மணந்த சரசுவதி சாவித்திரி காயத்திரியாகிய மூவர் மாதரும், பொருவு இலா உடுவினோரும் – ஒப்பற்ற அசுவனி முதலிய நட்சத்திரங்களும், சொல் அரும் சசியும் – சொல்லுதற்கரிய புகழினையுடைய இந்திராணியும், ஏனை சூரினர் பிறரும் – ஏனைய தேவமாதரும் பிறரும், வேதவல்லிதன் இருக்கை நண்ணி – தக்கன் மனைவியாகிய வேதவல்லியின் இருப்பிடத்தை அடைந்து, மரபின் வீற்றிருந்தார் – தத்தமக்கு ஏற்ற இடங்களில் இருந்தார்கள். [ப18 /20]
மாமலர்க் கடவுள் மைந்தன் மகத்தினை நாடி யாருங்
காமுறும் உண்டி மாந்திக் கதுமென மீடும் என்றே
பூமிசை மறையோர் தாமும் முனிவரும் போந்து விண்ணோர்
தாமுறும் அவையை நண்ணித் தகவினால் சார்த லோடும். …… 48
முனிவரும் – முனிவர்களும், மாமலர்க் கடவுள் மைந்தன் மகத்தினை நாடி – பெருமை பொருந்திய கமலாசனராகிய பிரமதேவரின் புதல்வனான தக்கனுடைய யாகத்தை தரிசித்து, யாரும் காமுறும் உண்டி மாந்தி – யாவரும் விரும்பும் உணவை நிறைய உண்டு, கதுமென மீள்தும் என்று – விரைவில் மீண்டும் வருவோம் என்று கருதி, பூமிசை மறையோர் தாமும் – பூவுலகத்துப் பிராமணர்களும், விண்ணோர் தாம் உறும் அவையை போந்து நண்ணி – தேவர்கள் மிக இருக்கும் அந்த யாகசாலையைப் போய் அணுகி, தகவினால் சார்தலோடும் – தத்தந் தகுதிக்கேற்றவாறு சார்ந்திருக்க.
தூதர் வணங்கி நிற்ப மொழிமெனப் பேசலுற்றார் என, வருஞ் செய்யுளில் முடிப் காண்க.[ப19/20]
அழைத்திடப் போன தூதர் அனைவரும் போந்து தக்கன்
கழற்றுணை வணங்கி நிற்பக் கருணைசெய் தவரை நோக்கி
விழுத்தகு தவத்தீர் நீவிர் விளித்தனர் தமிலு றாது
பிழைத்தனர் உளரோ உண்டேல் மொழிமெனப் பேசல் உற்றார். …… 49
அழைத்திடப் போன தூதர் அனைவரும் போந்து – அழைக்கச் சென்ற தூதுவர் அனைவரும் வந்து, தக்கன் கழல் துணை வணங்கி நிற்ப – தக்னுடைய உபய பாதங்களையும் வணங்கி நிற்க, கருணை செய்து – அவர் களுக்குக் கிருபை பாலித்து, அவரை நோக்கி – அவர்களைப் பார்த்து, விழுத்தகு தவத்தீர் – விழுப்பம்மிக்க தவத்தினையுடைய தூதுவர்காள், நீவிர் விளித்தனர் தமில் – நீவிர் இவ்விடம் வருமாறு அழைத்தவர்களுள், உறாது பிழைத்தனர் உளரோ – இங்கே வாராது தவறினாரும் உளரேயோ; உண்டேல் – உளராமாயின், மொழியும் என – அவர்கள் நாமங்கள் கூறுங்கள் என்று கூற , பேசல் உற்றார் – அத் தூதுவர்கள் கூறுவார் ஆயினார். [ப 19/20]
அகத்தியன் சனகன் முன்னோர் அத்திரி வசிட்டன் என்பான்
சகத்துயர் பிருகு மேலாந் ததீசிவெஞ் சாபத் தீயோன்
பகைத்திடு புலத்தை வென்ற பராசரன் இனைய பாலார்
மகத்தினை இகழா ஈண்டு வருகிலர் போலும் என்றார். …… 50
அகத்தியன் – அகத்தியர், சனகன் முன்னோர் – சனகாதி முனிவரர், அத்திரி – அத்திரி முனிவர், வசிட்டன் என்பான் – வசிட்டர், சகத்து உயர் பிருகு – உலகில் உயர்ந்த் பிருகு முனிவர், மேலாந் ததீசி – மேன்மை பொருந்திய ததீசி முனிவர், வெம் சாபத் தீயோன் – வெவ்விய சாபாக்கினியையுடைய துருவாச முனிவர், பகைத்திடு புலத்தை வென்ற பராசரன் – பகைக்கின்ற ஐம்புலன்களை வென்ற பராசர முனிவர், இனைய பாலார் – இவர்களும் இன்னோரன்னோரும், மகத்தினை இகழா – யாகத்தைப் பொருள்செய்து, ஈண்டு வருகிலர் போலும் என்றார் – இவ்விடத்து வாரார்போலும் என்றார்கள்.
இகழாது விகுதிகெட்டு நின்று, வருகிலர் என்பதன் முதனிலையோடு முடிந்தது. இனி இகழ்ந்து எனப் பொருள் உரைப்பினுமாம். [ப 19/20]
மற்றது புகல லோடு மலரயன் புதல்வன் கேளா
இற்றிது செய்தார் யாரே முனிவரில் இனையர் தாமோ
நெற்றியங் கண்ணி னார்க்கும் நேயம துடைய ரென்னாச்
செற்றமொ டுயிர்த்து நக்கான் தேவர்கள் யாரும் உட்க. …… 51
அது புகலலோடும் – தூதுவர் அதனைச் சொன்னவுடனே, மலரயன் புதல்வன் கேளா – பிரம புத்திரனான தக்கன் கேட்டு, இற்று இது -தன்மைத்தாகிய இதனை, செய்தார் யாரோ – செய்தார் யாவரோ; முனிவரில் இனையர் தாமோ – முனிவர்களுள் இவர்கள்தாமோ, நெற்றி அம் கண்ணினார்க்கு நேயமது உடையர் – அழகிய நெற்றிக்கண்களையுடைய பித்தருக்கு அன்புடையவர்; என்னா – நன்று நன்று, செற்றமொடு உயிர்த்து – கோபத்தோடு நெட்டுயிர்த்து, தேவர்கள் யாரும் உட்க நக்கான் – தேவர்கள் யாவரும் அஞ்சும்படி சிரித்தான்.[ப 20/20]
சாலை செய் படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 454