இப்படி பன்னாள் யாரும் இவன்தனி ஆணைக் கஞ்சி
அப்பணி இயற்ற லோடும் அம்புய மலர்மேல் அண்ணல்
முப்புரம் முனிந்த செங்கண் முதல்வன தருளால் ஆங்கோர்
செப்பரும் வேள்வி யாற்ற முயன்றனன் சிந்தை செய்தான். …… 1
இப்படிப் பன்னாள் யாரும் இவன் தனி ஆணைக்கு அஞ்சி – இப்படிப் பலகாலம் யாவரும் இத்தக்கனுடைய தனித்த ஆணைக்குப் பயந்து, அப் பணி இயற்றலோடும் – அவனுடைய ஏவலைச் செய்துகொண்டு வர, அப்புய மலர்மேல் அண்ணல் – தாமரையாசனரான பிரமா, முப்புரம் முனிந்த செங்கள் முதல்வ்னது அருளால் – முப்புரங்களைக் கோபித்த சிவந்த கண்களையுடைய சிவபெருமானது கருணையினால், ஆங்கு ஒர் செப்பரும் வேள்வி ஆற்ற – ஆண்டுச் செப்ப்புதற்கரியதொரு யாகத்தைச் செய்தற்கு, சிந்தை செய்தான் முயன்றனன் – சிந்தனை செய்து ஏற்ற முயற்சி செய்தார். [பக்கம் 1/14]
வேண்டிய கலப்பை யாவும் விதியுளி மரபி னோடு
தேண்டினன் உய்த்துத் தக்கன் செப்பிய துன்னி யானே
மாண்டிட வரினும் முக்கண் மதிமுடிப் பரமன் தன்னை
ஈண்டுதந் தவிமுன் ஈவல் எனக்கிது துணிபா மென்றான். …… 2
வேண்டிய கலப்பை யாவும் – யாகத்துக்கு வேண்டிய உபகரணங்கள் எல்லாவற்றையும், விதி உளி மரபினோடு தேண்டினன் உய்த்து – விதிப்படி சிரத்தையாகிய மரபோடு சம்பாதித்து, தக்கன் செப்பியது உன்னி – தக்கன் கூறியதனையும் நினைந்து, யானே மாண்டிட வரினும் – யானே இறக்க வரினும், முக்கண் மதிபுடிப் பரமன் தன்னை ஈண்டு தந்து – மூன்றுகண்களையும் சந்திரனைத் தரித்த முடியினையுமுடைய சிவபெருமானை யாகத்தில் வரித்து, முன் அவி ஈவல் – முதற்கண் சிவபெருமானுக்கு அவிப்பாகத்தைக் கொடுப்பேன்; இது எனக்குத் துணிபாம் என்றான் – இது எனது துணிபாகும் என்று கூறினார். [பக்கம் 1/14]
இனையன புகன்று சிந்தை யாப்புறுத் தேவல் போற்றுந்
தனையர்தங் குழுவைக் கூவித் தண்டுழாய் முகுந்த னாதி
அனைவரும் அவிப்பால் கொள்ள அழைத்து நீர்தம்மின் என்னாத்
துனையவே தூண்டிப் போதன் தொல்பெருங் கயிலை புக்கான். …… 3
இனையன புகன்று – இதுபோன்ற வார்த்தைகளை மேலுஞ் சொல்லி, சிந்தையாப்புறுத்து – மனத்தை உறுதி செய்து, ஏவல் போற்றும் தனையர் தம் குழுவை கூவி – தமது கட்டளையைப் பேணுகின்ற புதல்வர் கூட்டதை அழைத்து, தண் துழாய் முகுந்தன் ஆதி அனைவரும் அவிப்பால் கொள்ள – தண்ணிய துழாய்மாலையை யணிந்த திருமால் முதலிய அனைவரையுந் தத் தமக்குரிய அவிப்பாகத்தை ஏற்றுக்கொள்ளும்படி, நீர் அழைத்துத் தம்மின் என்னா – நீவீர் அழைத்துத் தருதிர் என்று, துனையத் தூண்டி – விரைந்து தூண்டி, போதன் தொல்பெருங் கயிலை புக்கான் – பிரமாவாகிய தாம் பழைமையாகிய பெரிய கயிலையை அடைந்தார். [பக்கம் 2/14]
கயிலையின் நடுவ ணுள்ள கடவுள்மா நகரில் எய்தி
அயிலுறு கணிச்சி நந்தி அருள்நெறி உய்ப்ப முன்போய்ப்
பயிலுமன் பொடுநின் றேத்திப் பணிதலுஞ் சிவன்ஈண் டுற்ற
செயலதென் மொழிதி என்னத் திசைமுகன் உரைப்ப தானான். …… 4
கயிலையின் நடுவன் உள்ல கடவுள் மா நகரில் எய்தி – திருக்கயிலாயத்தின் மத்தியில் உள்ள சிறந்த தெய்வத்தன்மை பொருந்திய திருக்கோயிலை அடைந்து, அயில் உறு கணிச்சி நந்தி – கூர்மைமிக்க மழுவைத் தாங்கிய நந்திதேவர், அருள் நெறிப் உய்ய – சிவபெருமானுடைய அநுக்கிர நெறியானே உள்ளே விடுப்ப, முன்போய் – சிவபெருமானது திருமுன் சென்று, பயிலும் அன்பொடு நின்று ஏத்திப் பணிதலும் – பழகிய அன்போடு நின்று துதித்து வணங்குதலும், சிவன் ஈண்டு உற்ற செயலது என் மொழித் என்ன – சிவபெருமான் பிரமனே நீ இங்கு வந்த காரியம் என்னை கூறுதி என்று திருவாய்மலர்ந்தருள, திசைமுகன் உரைப்பது ஆனான் – பிரமதேவர் கூறத் தொடங்கினார். [பக்கம் 2/14]
அடியனேன் வேள்வி ஒன்றை ஆற்றுவல் அரண மூன்றும்
பொடிபட முனிந்த சீற்றப் புனிதநீ போந்தென் செய்கை
முடிவுற அருடி யென்ன முறுவல்செய் திறைவன் நந்தம்
வடிவுள நந்தி அங்கண் வருவன் நீபோதி என்றான். …… 5
அடியனேன் வேள்வி ஒன்றை ஆற்றுவல் – அடியேன் ஒரு யாகத்தைச் செய்வேன், அரணம் மூன்றும் பொடிபட முனிந்த சீற்றப் புனித – மூன்று மதில்களும் நீறாமாறு கோபித்த சீற்றத்தினையுடைய பரிசுத்தரே, நீ போந்து – தேவரீர் எழுந்தருளி, என் செய்கை முடிவு உற அருள்தி என்ன – எனது யாகக் கிரிகை முற்றுதல் உறும்படி அநுக்கிரகித் தருள்வீராக வென்று பிரார்த்திக்க, இறைவன் முறுவல் செய்து – சிவபெருமான் திருபுன்முறுவல் செய்து, நந்தம் வடிவுள நந்தி அங்கண் வருவன் – நமது சாரூபத்தைக் கொண்ட நந்தி அங்கே வருவான், நீ போதி என்றான் – நீ போவாயாக என்று அருளிச்செய்தார். [பக்கம் 2/14]
போகென விடுத்த லோடும் பொன்னடி பணிந்து வல்லே
ஏகிய தாதை தக்கன் இருந்துழி எய்தி யேயான்
பாகநல் வேள்வி ஒன்று பண்ணுவன் முனிவர் விண்ணோர்
ஆகிய திறத்த ரோடும் அணுகுதி ஐய என்றான். …… 6
போக என விடுத்தலோடும் – போகக்கடவை என்று அனுப்பிய கடவுளே, பொன் அடி பணிந்து – சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, வல்லே ஏகிய தாதை – விரைந்து சென்ற தந்தையாகிய பிரமா, தக்கன் இருந்துழி எய்தி – தக்கன் அரசு வீற்றிருந்த இடத்தை அடைந்து, ஐய – மகனே, யான் யாக நல் வேள்வி ஒன்று பண்ணுவன் – நான் அவிப்பாகம் நல்குதற்குரியதொரு நல்ல யாகத்தைச் செய்வேன், முனிவர் விண்ணோர் ஆகிய திறத்தரோடும் அணுகுதி என்றான் – நீ முனிவர்கள் தேவர்கள் ஆகிய இருதிறத்தாரோடும் வருவாயாக என்றார். [பக்கம் 3/14]
என்னலும் நன்று முன்போய் இயற்றுதி மகத்தை யென்னப்
பொன்னவிர் கமலத் தண்ணல் மனோவதி அதனில் போந்து
செந்நெறி பயக்கும் வேள்விச் செய்கடன் புரிதல் உற்றான்
அன்னதோர் செய்கை மாலோன் ஆதியர் எவருந் தேர்ந்தார். …… 7
என்னலும் – என்று கூற, நன்று முன் போய் மகத்தை இயற்றுதி என்ன – நல்லது முன்னர்ச் சென்று யாகத்தைச் செய்க என்று தக்கன் சொல்ல, பொன் அவிர் கமலத்து அண்ணல் மனோவதி அதனிற் போந்து – பொன்போல விளங்குகின்ற தாமரையாசனரான பிரமா தமது மனேவதி நகரை அடைந்து, செந்நெறி பயக்கும் வேள்விச் செய்கடன் புரிதலுற்றான் – நன்னெறியைத் தருகின்ற யாகத்தின் செய்கிருத்தியங்களைச் செய்யலாயினார்; அன்னதோர் செய்கை – அவ்வாறாகிய செயலை, மாலோன் ஆதியர் எவரும் தேர்ந்தார் – திருமால் முதலிய யாவரும் அறிந்தார்கள். [பக்கம் 3/14]
வேறு
அக்க ணந்தனில் மாயவன் இமையவர்க் கரசன்
மிக்க தேவர்கள் முனிவரர் யாவரும் விரைந்து
தக்கன் முன்னுற மேவலும் அவரொடுந் தழுவி
முக்க ணாயகற் கவியினை விலக்குவான் முயன்றான். …… 8
அக்கணம் தனில் – அப்பொழுது, மாயவன் இமையவர்க்கு அரசன் மிக்க தேவர்கள் முனிவரர் யாவரும் – திருமால் தேவர்க்கரசனான இந்திரன் அளவிறந்த தேவர்கள் முனிசிரேட்டர்கள் ஆகிய யாவரும், தக்கன் முன்னுற விரைந்து மேவலும் – தக்கன் எதிரே விரைந்து அடைதலும், அவரொடும் தழுவி – அவர்களோடுஞ் சேர்ந்து, முக்கண் நாயகற்கு அவியினை விலக்குவான் முயன்றான் – முக்கண்களையுடைய சிவபெருமானுக்கு அவி கொடுப்பதை விலக்குதற்கு முயற்சி செய்தான். [பக்கம் 3/14]
ஏற்றம் நீங்குறு தக்கன்அக் கடவுள ரியாரும்
போற்றி யேதனைச் சூழ்தரத் தாதைதன் புரத்தில்
ஆற்றும் வேள்வியில் அணைதலும் அயன்எழுந் தாசி
சாற்றி ஆர்வமொ டிருத்தினன் பாங்கரோர் தவிசின். …… 9
ஏற்றம் நீங்குறு தக்கன் – உயர்ச்சியை இழக்கும் தக்கன், அக் கடவுளர் யாரும் போற்றி தனைச் சூழ்தர – அத்தேவர்களனைவரும் துதித்துத் தன்னைச் சூழ்ந்து வர, தாதை தன் புரத்தில் ஆற்றும் வேள்வியில் அணைதலும் – தந்தையாகிய பிரமா தமது நகரத்திற் செய்யும் வேள்விச் சாலையை அடைதலும், அயன் எழுந்து – பிரமா எழுந்து, ஆசி சாற்றி – ஆசி கூறி, பாங்கர் ஓர் தவிசில் ஆர்வமோடு இருத்தினன் – தமக்குப் பக்கத்தில் ஓராசனத்தில் அன்போடு தக்கனை இருத்தினார்.[பக்கம் 4/14]
கானு லாவுதண் டுளவினான் அடிகள் கைதொழுதே
ஆன பான்மையி லோர்தவி சிருத்தினன் அல்லா
ஏனை யோருக்கும் வீற்றுவீற் றுதவினன் இடையில்
தானொ ராசனத் திருந்தனன் மறையெலாந் தழங்க. …… 10
கான் உலாவு தண் துளவினான் அடிகள் கைதொழுது – வாசனை பொருந்திய தண்ணிய துளவமாலையணிந்த திருமாலின் திருவடிகளைக் கை கூப்பி வணங்கி, ஆன பான்மையின் – தகுந்த பிரகாரம், ஓர் தவிசு இருத்தினர் – ஓராசனத்தில் இருத்தினார்; அல்லா ஏனையோருக்கும் – மற்றையோராகிய முனிவர்களும் தெவர்களும், வீற்று வீற்று உதவினன் – தனித்தனி ஆசனம் வழங்கினார்; இடையில் – மத்தியில், மறை எல்லாம் தழங்க – வேதமனைத்தும் முழக்கஞ் செய்ய, தான் ஓராசனத்து இருந்தனன் – தாமும் ஓராசனதிலிருந்தார். [பக்கம் 4/14]
வேறு
அங்கண் ஞாலம தளித்தவன்
இவ்வகை அமர்தலும் அதுபோழ்தின்
நங்கை யாளொரு பங்கினன்
அருளொடு நந்திதே வனைநோக்கிப்
பங்க யாசனன் வேள்வியிற்
சென்றுநம் பாகமுங் கொடுவல்லே
இங்கு நீவரு கென்றலும்
வணங்கியே இசைந்தவ னேகுற்றான். …… 11
அங்கண் ஞாலமது அளித்தவன் – அழகிய இடத்தினையுடைய உலகத்தினைப் படைத்த பிரமதேவர், இவ்வகை அமர்தலும் – இவாறிருக்க, அது போழ்தினில் – அப்போழுது, நங்கையாள் ஒரு பங்கினன் அருளொடு நந்திதேவனை நோக்கி – உமாதேவி பாகரான சிவபெருமான் கருணையோடு நந்திவேவரைப் பார்த்து, பங்கயாசனன் வேள்வியிற் சென்று – பிரமன் செய்யும் யாகத்திற் சென்று, நம் பாகமும் கொடு – நமக்குரிய அவிப்பாகத்தையும் ஏற்றுக்கொண்டு, வல்லே இங்கு நீ வருக என்றலும் – விரைவாக இங்கே நீ வருவாயாக என்று கூறியருளுதலும், அவன் வணங்கி இசைந்து ஏகல் உற்றான் – அந் நந்திதேவர் வணங்கிச் சிவாஞ்ஞையை மேற்கொண்டு செல்வராயினார்.
உம்மையால் ஏனை உபசாரமுங் கொள்க. [பக்கம் 5/14]
நூற்றுக் கோடிவெங் கணத்தவர்
சூழ்தர நொய்தின்அக் கிரிநீங்கி
ஏற்றின் மேல்வரும் அண்ணலை
உள்ளுறுத் தேர்கொள்பங் கயப்போதில்
தோற்று நான்முகக் கடவுள்முன்
அடைதலுந் துண்ணெ னவெழுந் தன்பிற்
போற்றி யேதொழு திருத்தினன்
என்பஓர் பொலன்ம ணித்த விசின்கண். …… 12
நூற்றுக் கோடி வெம் கணத்தவர் சூழ்தர – நூறு கோடி வெவ்விய பூதகணத்தவர்கள் சூழ்ந்து வர, அக்கிரி நொய்தின் நீங்கி – அக் கயிலாச மலையை விரைவில் நீங்கி, ஏற்றினன் மேல் வரும் அண்ணலை உள் உறுத்து – இடபத்தில் எழுந்தருளும் இறைவரை மனசில் தியானித்துக்கொண்டு, ஏற்கொள் பங்கயப் போதில் தோற்றும் – அழகிய உந்திக்கமலத்திற் பிறக்கும், நான்முகக்கடவுள் முன் அடைதலும் – பிரமதேவருக்கு எதிரே செல்ல, துண்ணென எழுந்து – பிரமதேவர் விரைந்தெழுந்து, அன்பின் போற்றித் தொழுது – அன்பொடு துதித்து வணங்கி, ஓர் பொலன் மணித் தவிசின்கண் இருத்தினன் – ஓர் அழகிய இரத்தினாசனத்தின்மீது இருத்தினார். [பக்கம் 5/14]
நின்ற பாரிடத் தலைவர்க்கும்
வரன்முறை நிரந்தஆ சனநேர்ந்து
பின்றை நான்முகன் வேள்விய
தியற்றலும் பிறங்கெ ரியுற நோக்கி
நன்றி யில்லதோர் தக்கன்அக்
கிரியுறை நக்கனுக் காளாகிச்
சென்ற வன்கொலாம் இவனென
நகைத்தனன் செயிர்த்திவை யுரைக்கின்றான். …… 13
நின்ற பாரிடத் தலைவர்க்கும் – உடன் வந்த பூதத் தலைவருக்கும், வரன் முறை நிரந்த ஆசனம் நேர்ந்து – வரன்முறையே தொழில் முற்றிய ஆசனங்களைக் கொடுத்து, பின்றை – அதன்மேல், நான்முகன் வேள்வியது இயற்றலும் – பிரமதேவர் யாகத்தைச் செய்தலும், நன்றி இல்லது ஓர் தக்கன் பிறங்கி எரி உற நோக்கி – நன்றிக்கேட்டுக்கு ஒப்பில்லாத தக்கன் சுவாலிக்கின்ற நெருப்பு எழப் பார்த்து, அக் கிரி உறை நக்கனுக்கு – அந்தக் கயிலாயகிரியிலிருக்கின்ற நிருவாணியான சிவனுக்கு, ஆளாகிச் சென்றவன் கொலாம் இவன் என – அடிமையாகி இருந்தவன்போலும் இங்கு வந்து இருந்த இவன் என்று கூறி, செயிர்த்தனன் நகைத்து இவை உரைக்கின்றான் – கோபித்துச் சிரித்து இவற்றைச் சொல்லுவான்.
இனி நக்கனுக்கு ஏவலாளாய் வந்தவன்போலும் இவன் எனினுமாம். [பக்கம் 6/14]
நார ணன்முத லாகிய
கடவுளர் நளினமா மகளாதிச்
சீர ணங்கினர் மாமுனி
கணத்தவர் செறிகுநர் உறைகின்ற
ஆர ணன்புரி வேள்வியில்
விடநுகர்ந் தாடல்செய் பவன்ஆளுஞ்
சார தங்களு மோநடு
வுறுவது தக்கதே யிதுவென்றான். …… 14
நாரணம் முதலாகிய கடவுளார் – திருமால் முதலிய தேவர்களும், நளினமாமகள் ஆதிச் சீர் அணங்கினர் – கமலாசனியாகிய பெருமை பொருந்திய திருமகள் முதலிய சிறந்த தேவமகளிரும், மாமுனி கணத்தவர் – பெரிய முனிவர் குழாத்தினரும், செறிகுநர் உறைகின்ற – செறிந்திருக்கின்ற, ஆரணம்புரி வேள்வியில் – வேதத்துக் குரியோரான பிரமா செய்யும் யாகத்தில், விடம் நுகர்ந்து ஆடல் செய்பவன் ஆளும் – நஞ்சையுண்டு கூத்தாடுவோனாகிய சிவனுடைய அடிமையான நந்தியும், தாரதங்களுமோ – பூதங்களுமா, நடு உறுவது – நடுவே வீற்றிருப்பது, இது தக்கதே என்றான் – இது தகுதியானது தானே என்று கூறினான். [பக்கம் 6/14]
மேவ லாரெயில் முனிந்ததீ
விழியினன் வெள்ளிமால் வரைகாக்குங்
காவ லாளனாம் நந்தியுங்
கணத்தருங் கதுமென இவண்மேவக்
கூவி னாரெவ ரோஎன
உளத்திடைக் குறித்தனன் தெரிகுற்றான்
தேவர் யாவரும் வெருவுற
அயன்தனைச் செயிர்த்தி வையுரைக் கின்றான். …… 15
மேவலார் எயில் முனிந்த – பகைவர்களின் மும்மதில்களைக் கோபித்த, தீ விழியினன் வெள்ளி மால்வரை காக்கும் – அக்கினிக் கண்ணராகிய சிவபெருமானுடைய பெரிய வெள்ளிமலையைக் காவல் செய்கின்ற, காவலாளனாம் நந்தியும் – காவல் புரிவோனான நந்தியும், கணத்தரும் – பூதகணத்தோரும், கதுமென இவண் மேவக் கூவினார் எவரோ என – விரைந்து இங்கு வருதற்கு அழைத்தார் யாவரோ என்று, உளத்திடைக் குறித்தனன் தெரிகுற்றான் – மனத்தின்கண் ஆராய்ந்து அறிந்து, தேவர் யாவரும் வெருவுற – தேவர்கள் யாவரும் அஞ்சும்படி, அயந்தனைச் செயிர்த்து – பிரமாவைக் கோபித்து, இவை உரைக்கின்றான் – இவற்றைச் சொல்லுகின்றான்.
மேவலார் எயின முனிந்த தீவிழியினன் என்றதனாலே தன்னழிவையுந் தானறியாதே தன்க்குத்தானே வாய் சோர்ந்தானுமாம். [பக்கம் 7/14]
ஆதி நான்முகக் கடவுளை
யாகுநீ அழல்மகம் புரிசெய்கை
பேதை பாகனுக் குரைத்தனை
அவன்விடப் பெயரும்நந் தியைஎன்முன்
காத லோடுகை தொழுதுநள்
ளிருத்தினை கடவதோ நினக்கீது
தாதை ஆதலிற் பிழைத்தனை
அல்லதுன் தலையினைத் தடியேனோ. …… 16
நீ ஆதி நான்முகக் கடவுளை ஆகும் – நீயோ ஆதியாகிய நான்கு முகங்களையுடைய கடவுளா யிருக்கின்றாய்; அழன் மகம் புரி செய்கை பேதை பாகனுக்குரைத்தனை – அக்கினியை முன்னிட்டு யாகஞ் செய்ய இருப்பதைப் பேதையாகிய பெண்ணைப் பாகத்தில் வைத்த பித்தனுக்குத் தெரிவித்தாய்; அவன் விடப் பெயரும் நந்தியை – அப்பித்தன் அனுப்ப வந்த நந்தியை, என் முன் காதலோடு கைதொழுது நள் இருத்தினை – என் முன்னிலையில் அன்போடு கைகூப்பி வணங்கி மத்தியில் நடுநாயகமாக இருத்தினாய்; நினக்கு ஈது கடவதோ – உனக்கு இரு செய்யத்தகுவனோ; தாதை ஆதலின் பிழைத்தனை – நீ என் பிதாவாதலின் உயிர் பிழைத்தாய்; அல்லது உன் தலையினைத் தடியேனோ – அங்கனமாயின் உன் தலைகளை வெட்டி வீழ்த்தேனோ.
நீ என் உயர்வினையும் என் அதிகாரத்தையும் அறிந்திலை என்றானாம். [பக்கம் 7/14]
இன்னம் ஒன்றியான் உரைப்பதுண்
டஞ்ஞைகேள் ஈமமே இடனாகத்
துன்னு பாரிடஞ் சூழ்தரக்
கழியுடல் சூலமீ மிசையேந்தி
வன்னி யூடுநின் றாடுவான்
தனக்குநீ மகத்திடை யவிக்கூற்ற
முன்னை வைகலின் வழங்கலை
இப்பகல் முதலவன் றனக்கின்றால். …… 17
இன்னம் ஒன்று யான் உரைப்பது உண்டு – இன்னும் ஒன்று யான் சொல்ல வேண்டுவ துண்டு; அஞ்ஞை கேள் – மூடனே கேட்பாயாக; ஈமமே இடன் ஆக – சுடுகாடு வாழுமிடமாக, துன்னு பாரிடம் சூழ்தர – நெருங்கிய பூதங்கள் சூழ, கழி உடல் சூல மீமிசை ஏந்தி – கங்காளத்தைச் சூலத்தின்மீதே ஏந்தி, வன்னியூடு நின்று ஆடுவான் தனக்கு – அக்கினியிலே நின்று ஆடுவானாகிய அந்தச் சிவனுக்கு, மகத்திடை அவிற்கூற்றும் முன்னை வைகலின் நீ வழங்கலை – யாகத்தில் அவிப்பாகத்தை முன்னைநாளிற் போல நீ கொடாதே; இப்பகல் முதல் அவன் தனக்கு இன்று – இனி இன்று தொடக்கம் அந்த சிவவனுக்கு அவிப்பாகம் கிடையாது. [பக்கம் 8/14]
அத்தி வெம்பணி தலைக்கலன்
தாங்கியே அடலைமேற் கொண்டுற்ற
பித்தன் வேள்வியில் அவிகொளற் கு
ரியனோ பெயர்ந்தஇப் பகல்காறும்
எத்தி றத்தரும் மறையொழுக்
கெனநினைந் தியாவதும் ஓராமல்
சுத்த நீடவி யளித்தனர் அன்னதே
தொன்மையாக் கொளற் பாற்றோ. …… 18
அத்தி வெம்பணி தலைக்கலன் தாங்கி – எலும்பு கொடிய பாம்பு தலைமாலை ஆகிய இவற்றைச் சுமந்து, அடலை மேற்கொண்டுற்ற – சாம்பரை உடம்பின் மேற் பூசிக்கொண்டிருக்கின்ற, பித்தன் வேள்வியில் அவிகொளற்கு உரியனோ – வெறும் பைத்தியகாரான் யாகத்தில் அவிப்பாகம் ஏற்றுதற்கு உரியனோ; பெயர்ந்த இப் பகல்காறும் – சென்றுபோன இந்நாள்வரையும், எத்திறத்தரும் – எப்படிப்பட்டவரும், மறை ஒழுக்கு என நினைந்து – வேதாசாரம் என்று நினைந்து, யாவரும் ஓராமல் – சிறிதுஞ் சிந்தியாமல், சுத்தம் நீடு அவி அளித்தனர் – தூய்மை மிக்க அவியை அந்தச் சிவனுக்கு வழங்கி வந்தார்கள்; அன்னதே – அத் தவறான வழக்கத்தையே, தொன்மையாகக் கொளற் பாற்றோ – தொன்றுதொட்ட வழக்கமாகக் கைக்கொள்ளுதல் தகுதியாமோ? [பக்கம் 8/14]
மற்றை வானவர் தமக்கெலா
நல்குதி மாலையே முதலாக
இற்றை நாண்முதற் கொள்ளுதி
இவற்குமுன் ஈகுதி யவிதன்னைக்
கற்றை வார்சடை யுடையதோர்
கண்ணுதற் கடவுளே பரம்என்றே
சொற்ற மாமறைச் சுருதிகள்
விலக்குதி துணிவுனக் கிதுவென்றான். …… 19
மற்றை வானவர் தமக்கெலாம் நல்குதி – சிவன் தவிர்ந்த மற்றைத் தேவர்களுக்கெல்லாம் இவ்வவியைக் கொடுப்பாயாக; இற்றை நாள் முதல் மாலையே முதலாகக் கொள்ளுதி – இன்று முதல் திருமாலை முதல்வராகக் கொள்வாயாக; அவிதன்னை இவற்கு முன் ஈகுதி – ஆகவே அவியை இத்திருமாலுக்கே முதலிற் கொடு; கற்றை வார்சடை உடையதோர் கண்ணுதற் கடவுளேபரம் என்று சொற்ற மாமறைச் சுருதிகள் விலக்குதி – கற்றையான நீண்ட சடையினையுடைய கண்ணுதற் பெருமானே பரம்பொருள் என்று கூறிய பெரிய வேதவாக்குக்களை விலக்கக்டவாய்; உனக்கு இது துணிவு என்றான் – உனக்கு இம்முடிபே முடிந்த முடிபாம் என்றான் [பக்கம் 9/14]
என்ற வாசகங் கேட்டலும்
நந்திதன் இருகரஞ் செவிபொத்தி
ஒன்று கொள்கையின் ஆதிநா
மந்தனை உளத்திடை நனிஉன்னி
இன்றி வன்சொலுங் கேட்ப உய்த்
தனைகொலாம் எம்பிரா னெனைஎன்னாத்
துன்று பையுளின் மூழ்குறா
ஆயிடைத் துண்ணென வெகுளுற்றான். …… 20
என்ற வாசகங் கேட்டலும் – என்று கூறிய வார்த்தைகளைக் கேட்டவுடன், நந்தி தன் இருகரம் செவி பொத்தி – நந்திதேவர் தமது இருகரங்களாலும் இரு செவிகளையும் பொத்தி, ஒன்று கொள்கையின் ஆதி நாமந்தனை உளத்திடை நனி உன்னி – மனம் ஒருமைப்படும் முறையிற் சிவநாமத்தை மிக்குத் தியானித்து, இன்று இவன் சொலும் கேட்ப – இன்றைக்கு இவ்வதிபாதகன் சொல்லையுங் கேட்கும்படி, எம்பிரான் எனை உய்த்தனை கொலாம் எனா – எம்பெருமானே அடியேனை அனுப்பியருளினீரோ என்று, துன்று பையுளின் மூழ்குறா – அதிகரிக்கின்ற துன்பத்துள் முழுகி, ஆயிடைத் துண்ணென வெகுளுற்றான் – அவ்விடத்துத் தீடீரென்று கோபிப்பரானார்.[பக்கம் 9/14]
பண்டு மூவெயில் அழலெழ
நகைத்திடு பரம்பரன் அருள்நீரால்
தண்ட நாயகஞ் செய்திடு
சிலாதனார் தனிமகன் முனிவெய்தக்
கண்ட வானவர் யாவரும்
உட்கினர் கனலும்உட் கவலுற்றான்
அண்டம் யாவையும் நடுநடுக்
குற்றன அசைந்தன உயிர்யாவும். …… 21
பண்டு மூவெயில் அழல் எழ நகைத்திடு பரம்பரன் அருள் நீரால் – முன்னாளில் முப்புரங்கள் அக்கினி மயமான நகைசெய்த சிவபெருமானுடைய திருவருள் நீர்மையினால், தண்ட நாயகம் செய்திடு – வேத்திரப் படையைத் தாங்கி முதன்மையாகிய காவலைச் செய்கின்ற, சிலாதனார் தனிமகன் முனிவு எய்த – சிலாத முனிவரின் ஒப்பற்ற புதல்வரான நந்திதேவர் கோபிக்க, கண்ட வானவர் யாவரும் உட்கினர் – அதனைக் கண்ட தேவர்கள் அனைவரும் உட்கினார்கள்; கனலும் உள் கவலுற்றான் – அக்கினி தேவனும் உள்ளம் வெதும்பினான்; கனலும் உள் கவலுற்ரான் – அக்கினி தேவனும் உள்ளம் வெதும்பினான்; அண்டம் யாவையும் நடுநடுக்குற்றன – அண்டங்களனைத்தும் நடுநடுங்கின; உயிர் யாவும் அசைந்தன – உயிர்களெல்லாம் அசைந்தன. [பக்கம் 10/14] [22-8-2024]
ஏற்றின் மேயநம் அண்ணறன்
சீர்த்தியில் இறையுமே குறிக்கொள்ளா
தாற்ற லோடவி விலக்கிய
தக்கனுக் கஞ்சினம் இசைந்தோமால்
மாற்றம் ஒன்றும் இங்குரைத்திடல்
தகாதென மற்றது பொறாதந்தோ
சீற்ற முற்றனன் நந்தியென்
றுட்கினர் திசைமுக னொடுமாலோன். …… 22
ஏற்றின் மேய நம் அண்ணல்தன் சீர்த்தியில் இறையுமே குறிக்கொள்ளாது – இடபத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய கீர்த்தியில் ஒருசிறிதும் எண்ணாது, ஆற்றலோடு அவி விலக்கிய தக்கனுக்கு அஞ்சினம் – வலியோடு சிவபெருமானுக்குரிய அவியைக் கொடாது தடுத்த தக்கனுக்குப் பயந்தோமாய், மாற்றம் ஒன்றும் இங்கு உரைத்திடல் தகாதென இசைத்தோம் – ஒரு வார்த்தைதானும் இங்கே கூறுதல் தகாது என்று அவன் போக்குக்கு இசைந்திருநதோம்; அந்தோ அது பொறாதே – ஐயகோ! அதனைப் பொறாமலேதான், நந்தி சீற்றம் உற்றனன் – நந்தி தேவர் கோபங்கொண்டார்; என்று – இனி என்ன விளையுமோ என்றும் திசைமுகனொடு மாலோன் உட்கினர் – பிரமாவும் விஷ்ணுவும் மனம் உடைந்தார்கள். [பக்கம் 10/14]
ஈது வேலையில் நந்திஅத்
தக்கனை எரிவிழித் தெதிர்நோக்கி
மாது பாகனை இகழ்ந்தனை
ஈண்டுநின் வாய்துளைத் திடுவேனால்
ஆதி தன்னருள் அன்றென
விடுத்தனன் ஆதலின் உய்ந்தாய்நீ
தீது மற்றினி உரைத்தியேல்
வல்லைநின் சிரந்துணிக் குவன்என்றான். …… 23
ஈது வேலையில் – இச்சமயத்தில், நந்தி அத்தக்கனை எரி விழித்து எதிர் நோக்கி – நந்திதேவர் அத்தக்கனை அக்கினி கால விழித்து எதிரே நோக்கி, மாது பாகனை இகழ்ந்தனை – உமைபாகரான சிவபெருமானை இகழ்ந்தாய்; ஈண்டு நின் வாய் துளைத்திடுவேன் – இங்கே இகழ்ந்த வாயைத் துளைத்துவிடுவேன்; ஆதி தன் அருள் அன்று என விடுத்தனன் – அது சிவபெருமானுடைய ஆஞ்சை அன்று என்று விடுத்தேன்; ஆதலின் நீ உய்ந்தாய் – அதனாலே நீ உயிர்பிழைத்தாய்; இனி தீது உரைத்தியேல் – இனிச் சிவதூஷணஞ் செய்வாயானால், வல்லை நின் சிரம் துணிக்குவன் என்றான் – விரைவில் உன் சிரத்தை துணிப்பேன் என்று கூறினார். [பக்கம் 11/14]
இவைய யன்மகன் உள்ளமுந்
துண்ணென இசைத்துமா மகந்தன்னில்
அவிய தெம்பிராற் கிலதென
விலக்கினை அதற்கிறை யவன்அன்றேல்
புவன மீதுமற் றெவருளார்
அரிதனைப் பொருளெனக் கொண்டாய்நீ
சிவனை யன்றியே வேள்விசெய்
கின்றவர் சிரம்அறக் கடிதென்றான். …… 24
இவை அயன் மகன் உள்ளமும் துண்ணென இசைத்து – இவைகளைப் பிரமாவின் புதல்வனாகிய தக்கனின் மனமுந் திடுக்கிடும்படி கூறி, மாமகன் தன்னில் அவியது எம்பிராற்கு இலது என விலக்கினை – பெருமை பொருந்திய யாகத்தில் அவிப்பாகம் சிவபெருமானுக்கு இல்லை என்று விலக்கினாய்; அதற்கு இறையவன் அன்றேல் புவனம் மீதும் மற்றவர் எவர் உளார் – அந்த அவியை ஏற்றுக்கொள்ளுதற்குச் சிவபெருமானன்றி இப்புவனத்தில் வேறுய்யாரொருவர் உளர்; நீ அரி தனைப் பொருள் எனக் கொண்டாய் – நீ விட்டுணுவைப் பரம்பொருள் என்று கொண்டாய்; சிவனை அன்றி வேள்வி செய்கின்றவர் சிரம் கடிது அற என்றான் – சிவபெருமானை முதலெனக் கொள்ளுதலின்றி யாகஞ் செய்பவரின் தலை அறுக என்று சாபமிட்டார்.
அதற்கு இறை அவன் எனப் பிரித்துரைப்பதுமாம். [பக்கம் 11/14]
வேறு
இன்னதொர் சாபம தியம்பி ஆங்கதன்
பின்னரும் இசைத்தனன் பிறைமு டிப்பிரான்
தன்னியல் மதிக்கிலாத் தக்க நிற்கிவண்
மன்னிய திருவெலாம் வல்லை தீர்கவே. …… 25
இன்னதொர் சாபமது இயம்பி – இத்தகைய சாப மொழியைக் கூறி, ஆங்கு அதற் பின்னரும் இசைத்தனன் – அதன்மேலுஞ் சாபொமொழிய இயம்புவாராயினார்; பிறை முடிப் பிரான் தன் இயல் மதிக்கிலாத் தக்க – பிறைதரித்த முடியினையுடைய சிவபெருமானுடைய இயல்புகாளகிய பெருமைகளை மதியாத தக்கனே, நிற்கு இவன் மன்னிய திரு எலாம் வல்லை தீர்க்க – உனக்கு இங்கே உள்ளவாகிய வளங்களெல்லாம் விரைந்தழிந் தொழிவதாக. [பகம் 11,12/14]
ஏறுடை அண்ணலை இறைஞ்சல் இன்றியே
மாறுகொ டிகழ்தரு வாய்கொள் புன்றலை
ஈறுற உன்றனக் கெவருங் காண்டக
வேறொரு சிறுசிரம் விரைவின் மேவவே. …… 26
ஏறு உடை அண்ணலை இறைஞ்சல் இன்றி – இடப வாகனாராகிய சிவபெருமானை வணங்காமல், மாறுகொடு இகழ்தரு வாய் கொள் புன் தலை ஈறு உற – மாறுபட்டு நிந்திக்கின்ற வாயைக்கொண்ட உனது புல்லிய தலை அழிந்துபோக; வேறு ஒரு சிறு சிரம் – உடம்போ டொவ்வாது வேறுபடுகின்றதொரு சிறுமையைத் தருகின்ற புல்லிய தலை, எவரும் காண்தக உன்றனக்கு விரைவின் மேவ – யாவரும் காண உனக்கு விரைவில் வருவதாக. [பக்கம் 12/14]
ஈரமில் புன்மனத் திழுதை மற்றுனைச்
சாருறு கடவுளர் தாமும் ஓர்பகல்
ஆருயிர் மாண்டெழீஇ அளப்பி லாவுகஞ்
சூரெனும் அவுணனால் துயரின் மூழ்கவே. …… 27
ஈரம் இல் புன்மனத்து இழுதை – ஈரமில்லாத புல்லிய மனத்தினையுடைய மடவோனே, உனைச் சார் உறு கடவுளர் தாமும் – உன்னைச் சார்ந்த இந்தக் தேவர்களும், ஓர் பகல் ஆர் உயிர் மாண்டு எழீஇ – ஒருநாள் அரிய உயிரை இழந்து பின் உயிர்பெற் றெழுந்து, அளப்பு இலா உகம் சூர் எனும் அவுணனால் துயரில் மூழ்க – அளவில்லாத உககாலஞ் சூரபன்பன் என்னும் அசுரனாலே துன்பத்தில் மூழ்குவாராக. [பக்கம் 12/14]
என்றுமற் றினையதும் இயம்பி ஏர்புறீஇத்
துன்றிருங் கணநிரை சூழ வெள்ளியங்
குன்றிடை இறைக்கிது கூறிக் கீழ்த்திசை
முன்றிரு வாயிலின் முறையின் மேவினான். …… 28
என்று இனையதும் இயம்பி – என்று இந்தச் சாபங்களையுஞ் சொல்லி, ஏர்பு உறீஇ – அவ்விடத்தை விட்டெழுந்து, துன்று இரும் கணநிரை சூழ – பெரிய பூதகணங்கள் சூழ, வெள்ளியங் குன்றிடை இறைக்கு இது கூறி – அழகிய வெள்ளிமலையை அடைந்து சிவபெருமானுக்கு அங்கே நடந்ததை விண்ணப்பஞ் செய்து, கீழ்த்திசை முன் திரு வாயிலின் – கிழக்குத் திசையிலுள்ள முதற்கடைவாய்தலின்கண், முறையின் மேவினான் – முன்போல முறைப்படி காவல் செய்திருந்தார். [பக்கம் 12/14]
முன்னுற நந்தியம் முளரி மேலவன்
மன்னுறு கடிநகர் மகத்தை நீங்கலும்
அன்னதொ ரவையிடை அமரர் யாவரும்
என்னிது விளைந்ததென் றிரங்கி ஏங்கினார். …… 29
முன்னுற – முதற்கண், நந்தி அம் முளரி மேலவன் மன்னுறு கடிநகர் மகத்தை நீங்கலும் – நந்திதேவர் அழகிய கமலாசனரான பிரமதேவரின் நிலை பெற்ற காவலோடு கூடிய நகரத்தில் நடந்த யாகத்தை விட்டு நீங்குதலும், அன்னதொர் அவையிடை அமரர் யாவரும் – அந்த யாகசபையிலிருந்த தேவர்களெல்லாம், இது என் விளைந்து என்று இரங்கி ஏங்கினார் – இஃதென்னை இவ்வாறு முடிந்ததென்று இரங்கி ஏக்கமுற்றார்கள் [பக்கம் 13/14]
நந்தியெம் மடிகள்முன் நவின்ற மெய்யுரை
சிந்தைசெய் தேங்கினன் சிரம்ப னிப்புற
மைந்தன துரையையும் மறுத்தற் கஞ்சினான்
வெந்துயர் உழந்தனன் விரிஞ்சன் என்பவன். …… 30
எம் நந்தி அடிகள் முன் நவின்ற மெய் உரை – எமது நந்தியடிகள் யாகத்தொடக்கத்தின்கண் மொழிந்த பொய்யானமொழியாகிய சாபத்தை, விரிஞ்சன் என்பவன் சிந்தை செய்து – பிரமதேவர் சிந்தித்து, ஏங்கினன் சிரம் பனிப்பு உற – ஏங்கித் தலை நடுங்க, மைந்தனது உரையையும் மறுத்தற்கு அஞ்சினான் – மகனான தக்கனது சொல்லையும் மறுத்தற்குப் பயந்து, வெம் துயர் உழந்தனன் – கொடிய துன்பத்தில் முழுகினான். [பக்கம் 13/14]
முடித்திட உன்னியே முயலும் வேள்வியை
நடத்திட அஞ்சினன் நவின்று செய்கடன்
விடுத்தனன் அன்னதை விமலற் கின்னவி
தடுத்தவன் கண்டரோ யாதுஞ் சாற்றலன். …… 31
முடித்திட உன்னி முயலும் வேள்வியை – முடிக்குமாறு எண்ணி முயலுகின்ற அந்த யாகத்தை, நடத்திய அஞ்சினன் – மேலும் நடத்துதற்குப் பயந்து, நவின்று – நடத்த முடியாமையைச் சபையோருக்கு எடுத்துக்கூறி, செய்கடன் விடுத்தனன் – அந்த யாகத்திற் செய்யக்கடவனவற்றைச் செய்யாது அவ்வளவில் நிறுத்தினார்; அன்னதை – அவ்வாறு நிறுத்தியதை, விமலற்கு இன் அவி தடுத்தவன் கண்டு – சிவபெருமானுக்கு இனிய அவியைக் கொடுத்தலாகாதெனக் தடுத்தவனாகிய தக்கன் கண்டு, யாதும் சாற்றலன் – ஒன்றும் பேசாதிருந்தான் [31,203,167]
கறுவுகொள் பெற்றியான் கவற்சி கொண்டுளான்
வறியதோர் உவகையான் மனத்தில் அச்சமுஞ்
சிறிதுகொள் பான்மையான் தேவ ரோடெழாக்
குறுகினன் தன்னகர்க் கோயில் மேயினான். …… 32
கறுவுகொள் பெற்றியான் – கோபிக்கின்ற இயல்பினையுடையவனும், கவற்சி கொண்டுளான் – மனக்கவலை யுடையவனும், வறியதோற் உவகையான் – மகிழ்வற்றவனும், மனதில் அச்சமும் சிறிது கொள் பான்மையான் – மனதிலே சிறிதே அச்சங்கொண்ட தன்மையினனும் ஆகிய தக்கன், தேவரோடு எழா – தேவர்களோடு எழுந்து, தன் நகர் குறிகினன் கோயில் மேயினான் – தனது நகரத்திற்குச் சென்று தன் மாளிகையை அடைந்தான் [பக்கம் 14/14]
அலர்ந்திடு பங்கயத் தண்ணல் தன்மகங்
குலைந்திட ஆயிடைக் குழீஇய தேவர்கள்
சலந்தனில் நந்திசெய் சாபஞ் சிந்தியாப்
புலர்ந்தனர் தத்தம புரத்துப் போயினார். …… 33
அலர்ந்திடு பங்கயத்து அண்ணல் தன் மகம் குலைந்திட – விரிந்த தாமரைலராசனரான பிரமதேவர் செய்த யாகம் நிறைவேறா தொழிய, ஆயிடைக் குழீஇ தேவர்கள் – அவ்விடத்துக் கூடியிருந்த தேவர்கள், நந்தி சலந்தனின் செய் சாபம் சிந்தியா – நந்திதேவர் கோபத்தால் இட்ட சாபத்தை நினைத்து, புலர்ந்தனர் – நெஞ்சு உலர்ந்து, தத்தம புருத்துப் போயினார் – தங்கள் தங்கள் நகரங்களுக்குச் சென்றனர்.[பக்கம் 14/14]
பிரம யாகப் படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 403